செவ்வாய், 15 ஜூன், 2021

1887. பாடலும் படமும் - 138

விரக தாபம்

எஸ்.ராஜம் 

 


 எஸ்.ராஜம்   1938 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வரைந்த ஒரு 'பழைய முறை' ஓவியமும்,  மலரில் வந்த படவிளக்கமும் . ( வலது கோடியில் உள்ள 'பழைய முறை' கையெழுத்தும் தான்! )

 படத்தின் பின்புலமே ஒரு சோகம் நிறைந்த ராமாயணக் கட்டத்தைச் சித்திரிக்கிறது.  ராஜம் பின்னர் கலைமகளிலும், ராமாயண நூலிலும் பல ராமாயணக் காட்சிகளைச் சித்திரித்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றைப் பின்னர்ப் பார்க்கலாம்.

அதே மலரில் ராஜம் வரைந்த இன்னொரு ஓவியத்தை 

இங்கே  பார்க்கலாம்.

இப்போது மலரில் வந்த இந்தப் பட விளக்கம். ( பி.ஸ்ரீ. எழுதியிருக்கலாம்.) 

===

மைத் தகு விழிக் குறு நகைச் சனகன் மான்மேல்

உய்த்த உணர்வத்தினன், நெருப்பிடை உயிர்ப்பான்,

வித்தகன், இலக்குவனை முன்னினன் " - கம்பராமாயணம் 

சீதையைப் பிரிந்த இராமன் அந்தக் கண்ணழகிற்கும் புன்னைகைக்கும் தவித்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தவிப்பு நெருப்பாக வெளிப்பட்டு அருகேயுள்ள லட்சுமணனையும் தகிப்பதுபோலக் காண்கிறது . அது இன்னும் பரவிச் சுற்றிலுமுள்ள மரங்களையும் சூழ்ந்து, மேலும் மேலும் அந்தக் காடெங்கும் வியாபித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

இராமனுள்ளத்திலே காட்டுத் தீயைப்போல் ஜொலித்துக் கொண்டிருக்கும் விரகதாபத்தைச் சித்திரகாரர் விசேஷ மனோபாவத்தோடு எவ்வளவு பொருத்தமாக வெளியிட்டிருக்கிறார், பாருங்கள்! 

பி.கு.

  தமிழ்  இணையக் கல்விக்  கழகத்தில் உள்ள கம்பராமாயணத்தில் காணும் முழுப் பாடல்:

இத் தகைய மாரியிடை,

      துன்னி இருள் எய்த,

மைத் தகு மணிக் குறு

      நகைச் சனகன் மான்மேல்

உய்த்த உணர்வத்தினன்,

      நெருப்பிடை உயிர்ப்பான்,

வித்தகன், இலக்குவனை

      முன்னினன், விளம்பும்:

     இத்தகைய மாரியிடை - இத்தன்மை வாய்ந்த மழைக்காலத்தில்; 

இருள் துன்னி எய்த - இருந்து செறிந்து வந்தடைய; 

வித்தகன் - அறிவில் சிறந்த இராமன்

மைத்தக மணி - மணி என்று சொல்லத்தக்க கண்ணின்

கருமணியையும்; 

குறுநகை - புன்சிரிப்பையும் உடைய;

சனகன் மான்மேல் - சனகன் பெற்ற மகளான மான் போன்ற பார்வையுடைய சீதை மீது; 

உய்த்த உணர்வத்தினன் - செலுத்திய உணர்வுகளை உடையவனாய்; 

நெருப்பிடை உயிர்ப்பான் - நெருப்புப் போன்று இடையிடையே பெருமூச்ச விடுபவனாய்;

இலக்குவனை முன்னினன் - இலக்குவனை நோக்கி;

விளம்பும் - (சில சொற்களைச்) சொல்லலானான். ]

தொடர்புள்ள பதிவுகள்:

எஸ்.ராஜம் 

S Rajam - A Rare Gem Indeed : FB Page devoted to Sr S.Rajam 

பாடலும், படமும்
ஓவிய உலா 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக