செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 2

காந்தி படித்த பாரதி பாட்டு 


முந்தைய பகுதி :

பாரதி மணிமண்டபம் -1    


( தொடர்ச்சி)

ரகுநாதன் ஐந்து ரூபாய் செக்குடன் எழுதிய கடிதத்தை வெளியிட்ட ‘கல்கி’ , எட்டயபுரத்தில் ஒரு வாசகசாலை அமைக்க வேண்டுமானால், அதற்கு “ஒரு பெரிய ஐந்து, அதாவது  ஐயாயிரம் ரூபாயாவது” வேண்டும் என்று ஒரு அடிக்குறிப்பு எழுதினார்.

பாரதி ஞாபகார்த்த நிதி பற்றிய செய்திகளைக் கல்கி தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.   நிதி மேலும் சேரப்  பாரதியைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார்! உதாரணமாய்,  காந்தி தமிழ் படிக்கிறார் என்றும் , பாரதியின் பாப்பா பாட்டைப் படிக்கிறார் என்றும் ஒரு அட்டைப்பட விளக்கத்தில் எழுதுகிறார்!




கல்கி எழுதிய “பாரதி பிறந்தார்” என்ற கட்டுரையின் தாக்கத்தையும்  சின்ன அண்ணாமலை ( “பாரதி பிறந்தார்” என்ற கல்கியின் பாரதி புத்தகாலய நூலின் ( 64) முன்னுரையில்) இப்படி விவரிக்கிறார்.



ஆசிரியர் கல்கியின் ஜாதக விசேஷம் என்னவென்றால், அவர் என்ன எழுதினாலும், அல்லது எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அதை மற்ற எழுத்தாளரும் பத்திரிகைக்காரர்களும் தாக்க வேண்டும் என்பது தான்!

ஆனால் மேற்படி வழக்கத்துக்கு விரோதமாகச் சென்ற 1944-ம் ஆண்டில் ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஆசிரியர் கல்கி ஆரம்பித்த விஷயத்துக்கும் ஆரம்பித்த காரியத்துக்கும் தமிழ் நாட்டில் மகத்தான வரவேற்புக் கிடைத்தது!   
 . . . // . . .

“ஸ்ரீ ரகுநாதன் அவர்கள் சுபகரமாக ஆரம்பித்து வைத்த மேற்படி ஞாபகச் சின்ன நிதியானது நாளடைவில் மிகப் பெரிய நிதியாக மாறிப் “போதும்! போதும்!’ என்று  (கல்கி) ஆசிரியரே அறிவித்துக் கொள்ளும் அளவுக்குப் பெருகிவிட்டது.. . . . ஐயாயிரம் ரூபாயாவது சேருமா என்று ரொம்பவும் சந்தேகத்தோடு ஆரம்பித்த  நிதியானது நாற்பதினாயிரம் ரூபாய்க்குமேல் எட்டிப் போய்விட்டது.


[ 'கல்கி', ஏப்ரல் 45 ]


மேற் கண்டவாறு (சேர்ந்த)  பாரதி ஞாபகார்த்த நிதியைக் கொண்டு கல்கி ஆசிரியர் தமிழ் மக்களின் பூர்ண சம்மதத்துடன் மற்றொரு முக்கியமான காரியத்தையும் செய்து முடித்தார். அதாவது, மேற்படி தொகையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தைத் தனியாக ஒதுக்கிப் பாங்கியில் போட்டு அதிலிருந்து வரும் வட்டித் தொகையை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை ரூபாய் 112-8-0 வீதம் பாரதியாரின் வாழ்க்கைத் துணைவிக்கு அவருடைய ஜீவிய காலம் வரை உதவியாக அளிக்க ஏற்பாடு செய்தார். 

. . . // . . .

ஒரு கட்டுரையின் மூலம் ரூபாய் நாற்பதாயிரம் வசூல் செய்வதென்பது தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயெ புதிய விஷயமாகும். ஒரு பெரிய அதிசயம் என்று கூடச் சொல்லலாம் “

பின் குறிப்பு:

மணிமண்டபத்துக்கு முதல் ‘போணி’யாய்க் காசோலையை அனுப்பிய ரகுநாதன் “ வெள்ளிமணி” பத்திரிகைக்கு 47-இல் எழுதிய ஒரு கடிதத்தை யும், அதற்கு ஆசிரியர் “சாவி” எழுதிய பதிலையும்  படியுங்கள்! இரண்டும் அரிய ஆவணங்கள்! 



“ பாரதி பிறந்தார்”  கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' பல கட்டுரைகள்/செய்தி அறிவிப்புகள்  'கல்கி'யில் எழுதினார். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றைப் பார்க்கலாமா?

(தொடரும்)

அடுத்த பகுதி

 பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்

5 கருத்துகள்:

  1. பாரதிக்கு ஒரு மணிமண்டபம்

    ஒரு 10 வருஷங்களுக்கு முன்னே திசைகள் மாலனின் தலைமையில், நானும் , இன்னும் பத்துவரையிலான பாரதி ஆர்வலர்களும் பாரதிக்கு சைபர்வெளியில் ஒரு மணிமண்டபம் கட்டும் வேலையை ஆரம்பித்தோம். அதாவது ஒரு சொடுக்கில் அவனது எந்தப்படைப்பையும் படிக்கும் வசதியை உண்டுபண்ணுவது அதன் முதல் நோக்கம். நான் பாரதியின் சிறுகதைகள் அனைத்தையும் மென்பிரதியாக்கிக்கொடுத்தேன். குயில்பாட்டை இன்னொரு நண்பர் பிரதியாக்கினார். பாஞ்சாலி சபதத்தை இன்னொரு நண்பர் ஒத்துக்கொண்டார். ஆங்கிலப்படைப்புக்களை வேறொரு நண்பர் டிஜிரலைஸ் பண்ணினார். தொழில்நுட்பத்தில் உதவிசெய்வதாக வாக்களித்தவர்கள் காலை வாரவும் திசைகளும் நின்றுபோனது. மணிமண்டபமும் இன்னும் எழும்பாமலேயே குட்டிச்சுவராக நின்றுகொண்டிருக்கிறது. ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் முன்வந்தால் இன்னும் அழகாக பாரதிக்கு ஒரு மணிமண்டபத்தைக் கட்டிமுடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. யார் வருவீர்………………….????

    பதிலளிநீக்கு
  2. தற்போது வலைப்பலகை மூலம் மிகவும் எளிதாக நீங்கள் நினைத்ததை செயலாக்கலாம்!

    பதிலளிநீக்கு
  3. சின்ன அண்ணாமலையின் உரைகளை பல தடவை கேட்டிருக்கிறேன். நகைச்சுவை ததும்பும். ராஜாஜிக்கு அவர் செல்லம்.

    பதிலளிநீக்கு
  4. @Innamburan S.Soundararajan

    தொடர்ந்து படித்து ரசிப்பதற்கு நன்றி. அவருடைய ‘தமிழ்ப்பண்ணை’ எங்கள் வீட்டிற்கு அருகில் தான் இருந்தது. அவரைப் பற்றி மேலும் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் Garunyan Konfuzius அவர்களுக்கு. நீங்கள் பெர்லினில் இருக்கிறீர்கள். எங்கள் மின் தமிழின் விசையும் ஜெர்மனியில் தான். நானோ மொபைல் விசை. எட்டு வயதிலிருந்து பாரதி பித்து. என்னால் ஆனதை செய்ய தயார்.
    அன்புடன்
    இன்னம்பூரான்
    innamburan@gmail.com

    பதிலளிநீக்கு