திங்கள், 10 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 1

பாரதி பிறந்தார்
கல்கி


பாரதி பிறந்தார்” என்று நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால், முதலில் பாரதி இறந்த தினம்  பற்றி நகைச்சுவையுடன் தொடங்குவீர்களா? அப்படித் தொடங்கத்தான் ஒரு தைரியம்  நமக்கெல்லாம் வருமா?

அப்படி ஒருவர் எழுதினார். 8-10-1944 ‘கல்கி’ இதழில் அக்கட்டுரை வந்தது. பாரதி ‘இறந்ததைப் பற்றி  தொடங்கிய அந்தக் கட்டுரைதான் இன்று எட்டயபுரத்தில் விளங்கும் பாரதி மணிமண்டபம் ‘பிறக்க’க்  காரணமாயிருந்தது.

அந்த மணிமண்டபம் உருவான பின்புலத்தைச் சில தொடர்பதிவுகள் மூலம் சொல்ல நினைக்கிறேன். [ “பொன்னியின் புதல்வர்” என்ற நூலில் ஆசிரியர் “சுந்தா” இதைப் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். முடிந்தவரை, அதில் இல்லாத தகவல்களை ‘கல்கி’ எழுத்துகள் மூலமும், ஒரு ‘விகடன்’ கட்டுரை, சில படங்கள் மூலமும் இங்கே எழுத முயல்கிறேன். ]

’கல்கி’ கிருஷ்ணமூர்த்திதான் அந்தக் கட்டுரையை எழுதிய துணிச்சல்காரர்!  டி.கே.சி என்று அழைக்கப்பட்ட ’ரசிகமணி’ டி.கே.சிதம்பரநாத முதலியாருடன்  1944 செப்டம்பர் மாதம் ஒரு தமிழிசை விழாவிற்காக எட்டயபுரம் போய்வந்தபிறகு  அதை எழுதினார்.

அந்தக் கட்டுரையின் ஆரம்பத்தைப் பார்க்கலாமா?

பாரதி தினக் கொண்டாட்டங்கள் வருஷந்தோறும் செப்டம்பர் 11உ தமிழ்நாட்டில் நடக்கின்றன. ஒரு வருஷம் நடந்த கொண்டாட்டத்தில் ஒரு பிரசங்கி, பாரதியாரின் பெருமையையும் அவருடைய கவியின் மகிமையையும் பற்றிப் பேசிவிட்டுப் பின்வருமாறு பேச்சை முடித்தார்:

“அப்பேர்ப்பட்ட பாரதியார் இன்றைய தினம் இந்த மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார்! அவரை நாம் எல்லோரும் பின்பற்றுவோமாக!”

ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்தவர் ஒருவராவது அன்றைய தினம் பாரதியாரைப் பின் பற்றவில்லை! பிறருக்குப் போதனை செய்த பிரசங்கி கூட அவரைப் பின்பற்றிப் பொன்னுலகம் சேரவில்லை. “

பிறகு, பாரதி தினமாக அவர் இறந்த தினத்தைக் கொண்டாடுவதா சரியா?
அல்லது அவர் பிறந்த தினம் தான் பொருத்தமா? என்று கேட்கும் ‘கல்கி’ ‘இறந்த’ என்பதைக் குறிக்கும்,  தமிழுக்கே உரிய ஓர் அற்புதமான சொல்லை
எப்படி ‘கம்பன் அடிப்பொடி’ சா.கணேசன் பயன்படுத்தி, இந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்தார் என்பதைச் சொல்கிறார்.

“ ..சா.கணேசன் சென்னையில் நடந்த கொண்டாட்டத்தில் பதில் சொன்னார்.

பிறக்கும்போது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிதான் பிறக்கிறார்கள்.வித்தியாசமே கிடையாது.இறந்து, ஒழிந்து, செத்து, மாய்ந்து, மடிந்து போன பிறகுதான் ஒருவருடைய பெருமையும் மகிமையும் நன்கு புலனாகிறது. ஆகையால், பாரதியார் மாண்ட தினத்தை --- மாண்ட அதாவது மகிமை வாய்ந்த தினத்தை -- கொண்டாடுவதுதான் சாலப் பொருத்தமானது!’

ஆனால், பிறக்காவிட்டால் இறக்கவும் முடியாதலால், பாரதியின் பிறந்த தினமும் முக்கியமானதுதான் என்று தொடர்கிற கல்கி பாரதி பிறந்த இடத்திற்குத் தாவி, அங்கே நடந்த இலக்கிய நிகழ்ச்சியை விவரித்து, கடைசியில் பாரதி நினைவில் அங்கே ஒரு சிறு புத்தக நிலையமாவது  ஏற்படுத்த வேண்டும் என்பது எட்டயபுரத்து இளைஞர்களின் விருப்பம், அதை நிறைவேற்றுவது தமிழ் மக்களின் பொறுப்பு என்று  “பாரதி பிறந்தார்” கட்டுரையை முடித்துவிட்டார்.

அவ்வளவுதான்! ‘கல்கி’க்குப் பல கடிதங்கள் வந்து குவிந்தன. முதன் முதலில் வந்த கி.ரகுநாதன் என்பவரின் கடிதத்தில்  ஒரு பிள்ளையார் சுழி இருந்தது; ஓர் ஐந்து ரூபாய் செக்கும் இருந்தது.பின்னர் வந்த இதழ்களில்  பணம் அனுப்பியவர்களின் பெயர்களையும், சில கடிதங்களையும் தொடர்ந்து வெளியிட்டார் 'கல்கி'.  உதாரணத்திற்கு, நாமக்கல் கவிஞர் எழுதிய ஒரு கடிதம் இதோ:அதன்பிறகு என்ன நடந்தது?  ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையின் சொற்களிலிலே பார்க்கலாமா?

( பி.கு. தற்காலத்தில் ‘மரணித்த” என்ற சொல்லை நான் அடிக்கடிப் பார்க்கிறேன். நிச்சயமாய் இந்தச் சொல் நமக்கு வேண்டுமா? )

( தொடரும் )

[ நன்றி :கல்கி,  “பாரதி பிறந்தார்” , பாரதி பதிப்பகம், 4-ஆம் பதிப்பு, 1964]

தொடர்புள்ள பதிவுகள்:

அடுத்த பதிவு (2-ஆம் பகுதி)

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள்

'கல்கி’ கட்டுரைகள்

7 கருத்துகள்:

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

நிறைய விசயங்கள்... சுவராசியமாகவே...

தொடர்கின்றேன்.

சு.பசுபதி சொன்னது…

@ ஜோதிஜி திருப்பூர்

நன்றி, நண்பரே

alvit vincent சொன்னது…

நல்ல விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது.

Sairam Venkatraman சொன்னது…

Dear Pasupathi Sir,

Thanks a lot for sharing. Your sharing of what you have/had read is such a Yeomen service to youngsters.

May Almighty bless you with long peaceful life.

Happy New Year.

Regards,
Sairam Venkatramn

Pas Pasupathy சொன்னது…

Thanks, Sairam. Happy New Year!

Angarai Vadyar சொன்னது…

Thanks again for your dedicated efforts in sharing the vintage Tamil gems. God bless you with a peaceful and very happy longevity.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

'மரணித்த' எனுஞ்சொல் மரணிக்க வேண்டும்.

கருத்துரையிடுக