சனி, 21 ஜூலை, 2018

1123. காந்தி -36

30. சிறைகள் நிரம்பின
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய  30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===

பம்பாய்க் கலகங்கள் மகாத்மாவுக்கு ஆத்ம வேதனையை உண்டு பண்ணியிருந்தன. ஆனால் அந்தக் கலகங்கள் நிறுத்தப் பட்ட விதம் அவருக்குத் திருப்தியை அளித்தது. போலீஸ் முயற்சியினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் கலகம் அடக்கப்பட்டிருந்தால் அதில் மகாத்மாவுக்குச் சிறிதும் திருப்தி ஏற்பட்டிராது. ஆனால் சமூகத் தலைவர்களின் முயற்சிகளினாலேயே கலகங்கள் நின்று அமைதி ஏற்பட்ட படியால் மகாத்மாவுக்கு மீண்டும் சாத்வீகச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் அதற்கு முன்னால் சில முன் ஜாக்கிரதையான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம் என்பதைக் கண்டார். நவம்பர் 23-ஆம் தேதி பம்பாயிலே கூடிய காரியக் கமிட்டியாரிடம் அந்த ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்.

முந்தைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மாகாணங்களுக்குப் பொதுஜனச் சட்ட மறுப்புத் தொடங்கும் உரிமை கொடுத்திருந்தது அல்லவா? அந்த உரிமையை எந்த மாகாணமும் உபயோகிக்க வேண்டாம் என்று காரியக் கமிட்டி தீர்மானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பர்தோலியில் தாம் இயக்கம் தொடங்கும்போது தேசத்தில் மற்ற இடங்களில் எல்லாம் அமைதியைப் பாதுகாத்து வந்தால் அதுவே தமக்குப் பெரிய உதவியாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்னொரு முக்கியமான திட்டத்தையும் காரியக் கமிட்டியின் முன்பு மகாத்மா பிரேரேபித்தார். அதாவது தேசமெங்கும் பல தொண்டர்படை ஸ்தாபனங்கள் அப்போது இருந்தன. அந்த ஸ்தாபனங்களை யெல்லாம் ஒரே அமைப்பின்கீழ் கொண்டு வரவேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள், கிலாபத் தொண்டர்கள், கால்ஸா (சீக்கியத்) தொண்டர்கள் என்று தனித்தனி அமைப்பாயிராமல் ஒரே அகில இந்தியத் தேசீய தொண்டர் படை ஸ்தாபனம் ஆக்க வேண்டும். இதில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு தொண்டரிடமும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளில் முக்கியமானவை :

1. "தொண்டர் படைத் தலைவர்களின் கட்டளைக்குத் தயங்காமல் கீழ்ப்படிந்து நடப்பேன்.
2. சொல்லிலும் செயலிலும் அஹிம்சா தர்மத்தைப் பாது காப்பேன்.
3. அமைதியைப் பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் ஏற்படும் அபாயங்களுக்குத் தயங்காமல் உட்படுவேன்."

இந்தமாதிரி வாக்குறுதி கொடுத்த தொண்டர்களைக் கொண்ட படைகளை நாடெங்கும் அமைத்து விட்டால், பம்பாயில் நடந்தது போன்ற கலவரம் வேறெங்கும் உண்டாகாமல் தடுக்கலாம் என்றும், அப்படி ஏற்பட்டாலும் உயிர்ச் சேதமில்லாமல் உடனே அமைதியை நிலை நாட்டி விடலாம் என்றும் மகாத்மா தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் அவ்விதமே தீர்மானம் செய்தார்கள்.

இந்தக் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் சிலருக்குப் பொது ஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடுவதில் அதிருப்தி இருந்தது. முக்கியமாக, தேசபந்து தாஸும், ஸ்ரீ வி ஜே. படேலும் பொதுஜனச் சட்ட மறுப்பைத் தள்ளிப் போடுவதை ஆட்சேபித்தார்கள். லாலா லஜபதிராயும் பண்டித மோதிலால் நேருவுங் கூடத் தங்கள் கட்சியை எடுத்துச் சொன்னதின் பேரில் ஸ்ரீ வி. ஜே. படேலைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள்.

பம்பாயில் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்த பிறகு மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆசிரமத்திலும் அதிருப்தி கொண்ட ஒரு கூட்டத்தார் மகாத்மாவின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் சூரத் ஜில்லாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களுந்தான். அந்த ஜில்லாவில் பர்தோலி ஆனந்த் தாலூகாக்களில் நவம்பர் 23-ஆம் தேதியன்று பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. பம்பாய்க் கலவரம் காரணமாக மகாத்மா அதை ஒத்திப் போட்டுவிட்டார். "பம்பாயின் குற்றம் காரணமாக எங்களைத் தண்டிப்பானேன்?" என்று சூரத் ஜில்லாக்காரர்கள் கேட்டார்கள். மகாத்மா பழையபடி அவர்களுக்குத் தம் கொள்கைகளை விளக்கிச் சொன்னார்.

"சுயராஜ்யம் சூரத் ஜில்லாவுக்கு மட்டும் நாம் கோர வில்லையே? இந்தியா தேசத்துக்கே கேட்கிறோமல்லவா? ஆகையால் இந்தியா தேசமெங்கும் அஹிம்சை பாதுகாக்கப் பட்டால்தான் பர்தோலியில் நான் இயக்கம் நடத்த முடியும்" என்றார். அவ்விதம் இந்தியா தேச மெங்கும் அமைதியை நிலை நாட்டுவதற்காகத் தேசீயத் தொண்டர் படை திரட்டும் திட்டம் போட்டிருப்பதைப் பற்றியும் கூறினார். "அந்த வேலை நடக்கிறபடி நடக்கட்டும். அதற்கிடையில் பர்தோலி தாலூக்காவுக்கு நான் வந்து சுற்றிப் பார்க்கிறேன். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக் கிறார்களா என்று தெரிந்து கொள்கிறேன்" என்றார்.

மகாத்மா வருவதாகச் சொன்னதே சூரத் ஜில்லாக்காரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. மகாத்மாவும் பர்தோலிக்குச் சென்று சில தினங்கள் சுற்றுப் பிரயாணம் செய்தார். கிராமம் கிராமமாகப் போய்ப் பார்த்தார். அங்கங்கே பார்த்ததும் கேட்டதும் மகாத்மாவுக்குத் திருப்தி அளித்தது. சட்ட மறுப்புப் போருக்கு அவர் கூறிய நிபந்தனைகள் பெரும்பாலும் நிறைவேறி யிருந்தன.

பர்தோலி தாலூகாவில் சகல ஜனங்களும் கதர் உடுத்தியிருப்பதை மகாத்மா கண்டு மகிழ்ந்தார். ஒரு கிராமத்திலாவது சர்க்கார் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை யென்றும், தேசீய பாடசாலைகளுக்கே எல்லாப் பிள்ளைகளும் போகிறார்கள் என்றும் அறிந்தார். தாலூகாவில் ஒரு கள்ளுக்கடை கூடக் கிடையாது. எல்லாவற்றையும் அடியோடு மூடியாகி விட்டது. சர்க்கார் கோர்ட்டுகளுக்கு யாருமே போவதில்லை. தகராறுகளைப் பஞ்சாயத்துக்களின் மூலமாகவே தீர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் காந்திஜிக்கு மிக்க உற்சாகத்தை அளித்தது. பிரயாணத்தின் போது அங்கங்கே கண்ட சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்பாடி மகாத்மா எச்சரித்தார்.

உதாரணமாக ஒரு கிராமத்தில் சாதி ஹிந்துக்கள் ஒரு பக்கமாகவும் தீண்டாதார் இன்னொரு பக்கமாகவும் நின்றிருந்தார்கள். மகாத்மா இதைக்குறிப்பிட்டுக் காட்டியதும் எல்லாரும் ஒரே இடத்தில் கலந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

பர்தோலி சுற்றுப் பிராயணத்தினால் மொத்தத்தில் மிகவும் உற்சாகத்தை அடைந்து மகாத்மா சபர்மதி ஆசிரமத்துக்கு திரும்பி வந்தார். தேசமெங்கும் அமைதி காக்கத் தகுந்த தேசீயத் தொண்டர் படைகள் அமைக்கப் பட்டவுடனே பர்தோலியில் இயக்கம் ஆரம்பித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருடைய உள்ளத்தில் ஏற்பட்டது.


ஆனால் சபர்மதி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி திரும்பி வந்தாரோ இல்லையோ, தேசமெங்கும் சிறிதும் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்த நிலைமையும் மகிழ்ச்சி தரத்தக்க நிலைமைதான். தேசமெங்கும் தொண்டர் படை அமைப்பதற்குச் செய்த ஏற்பாட்டின் காரணமாக அந்த விசே ஷ நிலைமை உண்டாயிற்று. லார்ட் ரெடிங் சர்காரின் ஆத்திர புத்தியினாலும் அந்தப் புதிய நிலைமை ஏற்பட்டது. பம்பாயில் வேல்ஸ் இளவரசர் வந்து இறங்கிய அன்றைக்கு ஆரம்பித்த கலவரம் மகாத்மாவின் மனதைப் புண்பாடுத்தியதல்லவா? அதைக் காட்டிலும் அதிகமாக அந்தக் கலவரத்தின் பூர்வாங்கமான பாரிபூரண ஹர்த்தால் லார்ட் ரெடிங்கின் மனதைப் புண்பாடுத்தியது. பம்பாயில் மட்டுமல்ல; அதற்குப் பிறகு வேல்ஸ் இளவரசர் சென்ற பெரிய நகரங்களில் எல்லாம் பரிபூரண ஹர்த்தால் நடைபெற்றது. நல்ல வேளையாக அங்கெல்லாம் கலவரங்கள் ஒன்றும் விளயவில்லை. மகாத்மாவின் உண்ணாவிரதமே எச்சரிக்கையா யிருந்து மற்ற இடங்களில் கலவரம் நடைபெறாமல் காப்பாற்றியது.

ஆனால் பம்பாய்க் கலவரத்தைப் பற்றி லார்ட் ரெடிங் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. பம்பாயில் ஹர்த்தால் பரிபூரணமாக நடந்ததையும் இன்னும் மற்ற இடங்களில் நடந்து வருவதைப் பற்றியுந்தான் அவருக்கு ஆத்திரம் உண்டாயிற்று. "வேல்ஸ் இளவரசரை இப்போது வரவழைக்க வேண்டாம்!" என்று சிலர் யோசனை கூறியதற்கு மாறாக, லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசரைப் பிடிவாதமாக வரச் செய்திருந்தார். வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்யும்போது இந்தியப் பொதுமக்களிடையே அமுங்கியுள்ள இராஜ பக்தி பொங்கி எழுந்து ததும்பும் என்றும், அதன் பயனாக மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கம் பறந்து போய்விடும் என்றும் அப்பாவி லார்ட் ரெடிங் நம்பியிருந்தார்! அந்த நம்பிக்கை அடியோடு பொய்த்துப் போகும்படி தேசத்தில் காரியங்கள் நடந்து வந்தபடியால் லார்ட் ரெடிங்கின் ஆத்திரம் பொங்கிற்று. அந்த ஆத்திரத்தை எப்படிக் காட்டுவது, மகாத்மாவின் வளர்ந்து வரும் சக்தியை எந்த இடத்திலே தாக்குவது என்று லார்ட் ரெடிங் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

பம்பாயில் நடந்தது போல் நடந்து விடாமல் தேசமெங்கும் அமைதியைப் பாதுகாப்பதற்காகத் தேசீயத் தொண்டர் படைகளை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்த தல்லவா? அதன்படி தேசத்தின் பல பாகங்களிலும் தொண்டர் படைகள் அமைக்கத் தொடங்கினார்கள்.

"தொண்டர் படைகளை அமைப்பது சட்ட விரோதமான காரியம்" என்று லார்ட் ரெடிங்கின் சர்க்கார் ஒரு பெரிய வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அமைதியைக் காப்பதற்காகத் தொண்டர் படைகள் ஏற்படுகின்றன என்பதை அதிகார வர்க்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை. சர்க்காரை எதிர்க்கவும் சட்ட மறுப்பு இயக்கத்தைப் பலப் படுத்தவுமே தொண்டர் படைகள் அமைக்கப்படுவதாக அதிகார வர்க்கத்தார் சொல்லி, தொண்டர் படைகளைச் சட்ட விரோத ஸ்தாபனங்கள் ஆக்கினர்.

அதே சமயத்தில் வேறு சில அடக்குமுறை பாணங்களும் அதிகார வர்க்கத்தின் தூணியிலே யிருந்து வெளிவந்தன. 'இராஜத்வே ஷக் கூட்டச் சட்டம்' என்று ஒரு சட்டம் இருந்தது. அதன்படி இராஜாங்கத்துக்கு விரோதமான பொதுக் கூட்டங்களைக் கூட்டக் கூடாதென்று தடுக்கலாம்.. மீறிக் கூட்டம் போட்டால் பலாத்தாரமாய்க் கலைக்கலாம். அல்லது கைது செய்யலாம். இதைத் தவிர, பழைய 144-வது பிரிவும் இருந்தது. தனிப்பட்ட தலைவர்கள் மீது வாய்ப்பூட்டு உத்திரவு போட இது உதவிற்று. இவ்விதமாக அந்தப் பிரசித்தி பெற்ற 1921-ஆம் வருஷத்து டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியா தேசமெங்கும் எல்லாவித அடக்குமுறைச் சட்டங்களையும் அதிகார வர்க்கம் பிரயோகித்தது. இவ்விதம் ஏற்பட்டுள்ள புதிய நிலைமையில் என்ன செய்வது என்று நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் யோசனை கோரி மகாத்மாவுக்குத் தந்திகள் வந்தன.

அதிகார வர்க்கத்தாரின் அடக்குமுறையை எதிர்க்க வேண்டியதுதான் என்று காந்திஜி யோசனை கூறினார். பொது ஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிக்கும் விஷயம் வேறு; அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் விஷயம் வேறு. முன்னது இந்தியா தேசத்தின் சுதந்திரத்துக்காக; இரண்டாவது ஜீவாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக. அங்கங்கே அமைதிக்குப் பங்கம் நேரும் என்ற பயம் இல்லாவிட்டால் தனிப் பட்ட தலைவர்களும் தொண்டர்களும் அநியாய உத்தரவுகளை மீறலாம் என்று மகாத்மா தெரிவித்தார். அவ்வளவுதான். தேசமெங்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. சில நாளைக்குள் அந்தப் புத்துணர்ச்சி பொங்கிப் பெருகி அலைமோதிப் பரவியது.

பம்பாய்க் கலவரம் காரணமாகப் பர்தோலி இயக்கத்தை மகாத்மா நிறுத்தி வைத்ததால் தேசத்தில் உண்டான மனத் தளர்ச்சி பறந்து போய்விட்டது.

டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி காந்தி மகாத்மா பர்தோலியிலிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் லாகூரில் டிசம்பர் 4-ஆம் தேதி லாலா லஜபதி ராய் கைது செய்யப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. லாலாஜியுடன் பண்டித சந்தானம், டாக்டர் கோபிசந்த் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிந்தது. லாலாஜிக்குப் பதிலாக ஜனாப் ஆகா ஸப்தார் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் லாகூரிலிருந்து வந்த செய்தி கூறியது. எல்லாவற்றிலும் முக்கியமாக லாகூரில் ஒருவித கலவரமோ, குழப்பமோ ஏற்படவில்லை.

இதைப்பற்றி மகாத்மா தமது சகாக்களிடம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, லக்ஷ்மணபுரியிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கே பண்டித ஹரகர்நாத மிஸ்ரா, மௌலானா ஸலாமதுல்லா, சௌதரி கலிகுஸூமான் ஆகியவர்கள் கைதியானார்கள். லக்ஷ்மணபுரியிலும் அமைதி நிலவியது.

மறுநாள் 7-ஆம் தேதியன்று கல்கத்தாவில் ஸ்ரீ ஜிஜேந்திர லால் பானர்ஜியும், அஸ்ஸாமில் ஸ்ரீ பூக்கர்ன, ஸ்ரீ பர்தொலாய் ஆகியவர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி கிடைத்தது. 7-ஆம் தேதி இரவு மகாத்மா ஆசிரமவாசிகளுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். பர்தோலியில் பிரயாணம் செய்தது போல் ஆனந்த் தாலுகாவில் 12-ஆம் தேதி பிரயாணம் தொடங்கப் போவதாகத் தெரிவித்தார். பிறகு எல்லாரும் தூங்கப் போனார்கள்.

இரவு 11 மணிக்கு "தந்தி!" "தந்தி!" என்ற கூக்குரல் எல்லாரையும் எழுப்பிவிட்டது. காந்தி மகானும் விழித்துக் கொண்டார். இரண்டு தந்திகள் அலகாபாத்திலிருந்து வந்திருந்தன. பண்டித மோதிலால் நேரு, பண்டித ஜவாஹர்லால் நேரு, பண்டித சாமலால் நேரு, ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உடனே மகாத்மாவின் குமாரர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அனுப்பவேண்டுமென்றும் ஸ்ரீ மகா தேவதேஸாய் தந்தி அடித்திருந்தார்.

இந்த முக்கியமான செய்திக்குப் பிறகு தூக்கம் ஏது? பண்டித மோதிலால் ஐக்கிய மாகாணத்தில் இணையில்லாத செல்வாக்கு வாய்த்திருந்தவர். அதிகார வர்க்கத்தாரும் அவரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். ஆகவே பண்டித மோதிலால் நேருவைக் கைது செய்தது சாதாரண விஷயம் அல்ல.பண்டித மோதிலாலைக் கைது செய்தார்கள் என்றால் பிரிட்டிஷ் சர்க்கார் தீவிர அடக்குமுறையைக் கையாளத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆகையால், அடுத்தாற்போல் தேசபந்து தாஸையும் கைது செய்யலாம். ஏன்? மகாத்மா காந்தியைக் கைது செய்வதும் சாத்தியமேயாகும்.

இந்த எண்ணங்கள் எல்லாம் மகாத்மாவின் மனதில் மின்னல்போலத் தோன்றின. உடனே காந்திஜி என்ன செய்தார் தெரியுமா? ஸ்ரீ தேவதாஸ் காந்தியை அழைத்து உடனே அலகாபாத்துக்குப் புறப்படச் சொன்னார். பிறகு "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத உட்கார்ந்தார். அந்த கட்டுரையின் தலைப்பு "அன்பு-பகைமை அல்ல" என்பது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதத்துக்கு நம்முடைய பதில் ஆயுதம் அன்புதானே தவிர, பகைமை அல்ல என்ற கருத்துடன் மகாத்மா "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுதினார். ஒருவேளை, தம்மைக் கைது செய்துவிட்டாலும் இந்தியப் பொது மக்கள் அன்பு நெறியையே கடைப்பிடிக்கவேண்டும் என்று அதில் குறிப்பாகத் தெரிவித்தார்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வெள்ளி, 20 ஜூலை, 2018

1122. எலிப் பந்தயம் : கவிதை

எலிப் பந்தயம் 
பசுபதி


வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! — உன்றன்
. . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் !
சூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி — உன்னைச்
. . . சுற்றிவந்து ஏங்குவதைப் பாரு துரையே! (1)

எரிச்சலுடன் எழுந்திருந்து காபி குடித்து — மனையை
. . . ஏறெடுத்தும் பார்த்திடாது போகும் மனிதா!
கரிசனத்தைக் காபியுடன் சேர்த்துக் கொடுக்கும் — வண்ணக்
. . . கைவளைகள் கொஞ்சுவதைப் பாரு கணவா ! (2)

காலையிதழ் வாரவிதழ் தேடிப் பிடித்தே — அதில்
. . . கண்புதைத்துக் காலமதைப் போக்கும் மனிதா!
காலருகே சுற்றிவரும் சின்னக் குழந்தை — அந்தக்
. . . கண்சிரிப்பில் கொஞ்சநேரம் மூழ்கி எழய்யா! (3)


சந்தையிலே பங்குகளின் புள்ளி விவரம் — போன்ற
. . . சங்கதிகள் நாளுமுருப் போடும் மனிதா!
சந்ததமுன் துக்கசுகம் பங்கு பெறுவாள் — அவள்
. . . சந்தையில்காய் வாங்கப்பை தூக்கு தலைவா! (4)

நள்ளிரவில் கண்விழித்துக் கணினி வழியாய்த் — தொலை
. . . நாட்டிலுள்ள நண்பனுடன் பேசும் மனிதா!
பள்ளிதந்த வேலையதில் மூச்சுத் திணறும் — உன்றன்
. . . பையனுக்கும் கொஞ்சம்வழி காட்டி விடய்யா! (5)


சாலையோரம் தள்ளிநின்று வாழ்வைச் சுவைப்பாய் ! — உன்றன்
. . . சம்பளமே சாரமென்று நம்பி விடாதே !
காலைமுதல் மாலைவரை ஓடும் மனிதா! — இங்கே
. . . காலத்தேர் கருணையின்றிச் சுற்றும் விரைவாய்! (6)

[ ‘திண்ணை’ இதழில் 2001-இல் வெளியானது ]

தொடர்புள்ள பதிவுகள் :

புதன், 18 ஜூலை, 2018

1121. வ.ரா. - 5

வ.ரா.
ப.ராமஸ்வாமி‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.ரா.

செவ்வாய், 17 ஜூலை, 2018

1120. வேங்கடசாமி நாட்டார் -2

தொல்காப்பியம்
மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை.

தொடர்புள்ள பதிவுகள்:
வேங்கடசாமி நாட்டார்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

1119. பாடலும் படமும் - 38

இராமாயணம் - 10
சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.
பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து
                             பொங்கி,
மெய்யுறவெதும்பி, உள்ளம் மெலிவுறு நிலையை
                            விட்டான்;
ஐயனுக்கு, அங்கி,முன்னர், அங்கையால் பற்றும்
                            நங்கை
கை எனல் ஆயிற்றுஅன்றே-கை புக்க மணியின்
                            காட்சி !

     [ கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச்
சூடாமணியின் தோற்றம்; ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த
இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்;
அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால்
பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்) பயந்த
காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - (அதனால்) உண்டான
ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; மெய் உற
வெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; உள்ளம் மெலிவுறும் நிலையை
விட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான் ]


தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

சனி, 14 ஜூலை, 2018

1118. காந்தி -35

29. "என் மதம்"
கல்கி

கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய  29-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
மகாத்மா காந்தி "எங் இந்தியா"வுக்குக் கட்டுரை எழுதி முடித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் மௌலானா ஆஸாத் ஸோபானி திரும்பி வந்து சேர்ந்தார். தாம் காந்தி குல்லா அணியாததால் விபத்து ஒன்றுமில்லாமல் தப்பிப் பிழைத்து வந்ததாக அவர் சொன்னார். பார்ஸிகளும் கிறிஸ்துவர்களும் காந்தி குல்லா அணிந்தவர்களைக் குறிப்பிட்டுத் தாக்கி அடிப்பதாகத் தெரிவித்தார்.

மற்றொரு பக்கத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு பார்ஸிகளையும் கிறிஸ்துவர்களையும் தாக்குவதாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் சர்க்காருடைய அநுமதி பெற்றுத் துப்பாக்கிகளும் ரிவால்வர்களும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். ஹிந்துக்கள்-முஸ்லிம்களிடம் தடிகள்தான் ஆயுதங்களாக இருந்தன. ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக யிருந்தனர். இவ்விதமாக இருதரப்பிலும் பலாத்காரச் செயல்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிகமாகி வந்தன.

சில பார்ஸி இளைஞர்கள் துப்பாக்கி சகிதமாக ஸ்ரீ கோவிந்த வஸந்த் என்னும் மிட்டாய்க் கடைக்காரரின் வீட்டுக்குள் பலாத்காரமாகப் புகுந்து அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் செய்தி மகாத்மாவின் ஜாகையை எட்டியபோது அந்த ஜாகையில் வசித்த மகாத்மாவின் சகாக்கள் பெருங் கவலையில் ஆழ்ந்தார்கள். அந்த மாதிரி முரட்டுப் பார்ஸி இளைஞர்கள் சிலர் மகாத்மாவின் ஜாகைக்குள்ளும் புகுந்து அவரைத் துன்புறுத்த முற்பட்டால் என்ன செய்கிறது? மகாத்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு பம்பாயில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் சந்தேகமில்லை. ஹிந்து-முஸ்லிம்கள் அப்போது பார்ஸிகளின்மீது பழிவாங்கத் தொடங்குவதை யாராலும் நிறுத்த முடியாது.

இப்படிக் காந்தியின் சகாக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ தன்னைப் பற்றிச் சிந்திக்கவே யில்லை. இந்தப் பலாத்காரப் பிசாசின் தாண்டவத்தை நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியே சிந்தனை செய்தார். அவர் வெளியேறிச் சென்று ஜனங்களுக்கு நற்போதனை செய்வதால் பலன் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றவில்லை. முதல் நாள் அவ்விதம் செய்து பார்த்ததில் பலன் ஏற்படவில்லையல்லவா?

மகாத்மாவின் அநுதாபமெல்லாம் பார்ஸிகள் பக்கத்திலேயே இருந்தது. ஏனெனில் முதலில் அவர்களைப் பலாத்காரமாகத் தாக்கத் தொடங்கியவர்கள் ஹிந்து-முஸ்லிம்கள்தான். முதலில் தாக்கியது மட்டும் அல்ல; செய்யத் தகாத மதத் துவேஷக் காரியம் ஒன்றையும் செய்து விட்டார்கள். பார்ஸிகள் தங்களுடைய மதத்தைத் தொந்தரவின்றிக் கடைப்பிடிப்பதற்காக ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் இந்தியாவைத் தேடி வந்தவர்கள். அராபிய முஸ்லிம்கள் பாரஸீகத்தை வென்றபோது, முஸ்லிம் ஆட்சியில் மத சுதந்திரம் இராது என்று இந்தியாவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தியாவில் அவர்கள் கோரிய மத சுதந்திரம் கிடைத்தது. பார்ஸிகள் அக்னி தேவனைக் கடவுள்என்று பூஜிப்பவர்கள். ஆகையால் என்றும் அணையாத தீயை அவர்கள் தங்கள் கோயிலில் வைத்து வளர்த்துப் பூஜித்து வந்தார்கள். வேல்ஸ் இளவரசர் விஜயத்தன்று நடந்த களேபரத்தில் ஹிந்து முஸ்லிம்கள் அந்தப் பார்ஸிக் கோயிலில் புகுந்து அணையா நெருப்பை அணைத்து விட்டார்கள். இதுதான் பார்ஸி சமூகத்தினருக்கு என்றுமில்லாத ஆத்திரத்தை மூட்டிவிட்டது. தங்கள் மத சுதந்திரத்துக்குப் பங்கம் நேரிடுவதைப் பொறுப்பதைக் காட்டிலும், பம்பாயிலுள்ள பார்ஸிகள் அனைவரும் உயிரை இழக்கத் தயாராகக் கிளம்பி விட்டார்கள். இந்த விவரங்களை அறிந்த காந்திஜி பார்ஸிகள்மீது குற்றம் இருப்பதாக எண்ணவில்லை. இந்த நிலைமைக்குக் காரணம் ஹிந்து-முஸ்லிம்கள் என்றே கருதினார்.

அன்று இரவு வெகு நேரம் வரையில் பம்பாய்ப் பிரமுகர் அடிக்கடி வந்து மகாத்மாவிடம் கலவர நிலைமையைப் பற்றிச் சொல்லி வந்தார்கள். இரவு வந்த பிறகும் கலவரங்கள் அடங்கின வென்று தெரியவில்லை. பார்ஸி-கிறிஸ்துவ சமூகத்தினரிடமிருந்து மகாத்மாவுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அவரால் தங்கள் சமூகத்துக்கு நேர்ந்த இன்னல்களைப் பற்றி அக்கடிதங்களில் எழுதியிருந்ததுடன் மகாத்மாவை வெகுவாக நொந்திருந்தார்கள். சிலர் வசைமாரியும் பொழிந்திருந்தார்கள். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களும் அடிபட்டவர்களும் உறவினர்களை இழந்தவர்களும் வேதனைப்பட்டு எழுதியிருந்தார்கள். இதெல்லாம் மகாத்மாவின் மனவேதனையை அதிகமாக்கி விட்டன.

அன்றிரவு கடைசியாக வந்த ஸ்ரீ ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் காந்திஜியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். இரவு பத்தரை மணிக்கு மகாத்மா படுத்தார். ஆனால் அவர் தூங்கவில்லை. தூக்கம் எப்படி வரும்? அதே அறையில் மகாத்மாவின் காரியதரிசியான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரும் படுத்திருந்தார். அவர் சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.


இரவு மணி 3-30 இருக்கும். மகாத்மா எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸும் விழித்துக் கொண்டார். "பென்ஸிலும் காகிதமும் கொண்டு வாரும்!" என்றார் மகாத்மா. உடனே ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கொண்டு வந்தார். மகாத்மா விரைவாக ஏதோ எழுதினார். பிறகு ஸ்ரீ கிருஷ்ணதாஸிடம் கொடுத்து அதன் பிரதிகள் மூன்று எடுக்கச் சொன்னார். மகாத்மா எழுதியது பம்பாய் வாசிகளுக்கு ஒரு விண்ணப்பம். அதில் மிகக் கடுமையான ஒரு விரதத்தைத் தாம் எடுத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். பம்பாயில் கலவரம் நிற்கும் வரையில் தாம் உணவருந்தா விரதம் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். விண்ணப்பத்தின் முழு விவரம் பின்வருமாறு:-

"பம்பாய் நகரின் ஆடவர்களே! பெண்மணிகளே! சென்ற இரண்டு தினங்களாக என் மனம் படும் வேதனையை நான் வார்த்தைகளால் உங்களுக்கு விவரிக்க முடியாது. இரவு 3-30-க்கு அமைதியான மன நிலையில் நான் இதை எழுதுகிறேன். இரண்டு மணி நேரம் தியானமும் பிரார்த்தனையும் செய்த பிறகு நான் ஒரு முக்கியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். அதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

பம்பாயில் உள்ள ஹிந்து-முஸ்லிம்கள் பார்ஸிகளுடனும் கிறிஸ்துவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுகிற வரையில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் உட்கொள்ளப் போவதில்லை.

சென்ற இரண்டு தினங்களில் பம்பாயில் நான் பார்த்த சுயராஜ்யம் நாற்றம் எடுத்து என் மூக்கைத் துளைக்கிறது. பம்பாயில் கிறிஸ்தவர்கள், பார்ஸிகள்-யூதர்கள் சிறு தொகையினர். பெரும்பாலானோரான ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமை மேற் கண்டவர்களுக்குப் பெரும் அபாயமாய் முடிந்திருக்கிறது. ஒத்துழையாதாரின் அஹிம்சையைவிட மோசமாகிவிட்டது. அஹிம்சை என்று வாயால் சொல்லிக்கொண்டு நம்முடன் மாறுபட்டவர்களை நாம் துன்புறுத்தி யிருக்கிறோம். இது கடவுளுக்குத் துரோகமாகும். கடவுள் ஒருவரே. சிலர் வேதத்தின் வாயிலாகவும் சிலர் குர்-ஆன் மூலமாகவும் வேறு சிலர் (பார்ஸிகள்) ஸெண்டவஸ்தா மூலமாகவும் கடவுளை அறியப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாரும் அறியப் பார்க்கும் கடவுள் ஒருவரேதான். அவர் சத்தியத்தின் வடிவம்; அன்பின் உருவம். இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கவே நான் உயிர் வாழ்கிறேன். இல்லாவிட்டால் உயிர் வாழ்வதிலேயே எனக்கு விருப்பமில்லை. நான் எந்த இங்கிலீஷ்காரனையும் வெறுக்க முடியாது; வேறு எந்த மனிதனையும் வெறுக்க முடியாது. இங்கிலீஷ்காரன் இந்தியாவில் அமைத்திருக்கும் ஸ்தாபனங்களை எதிர்த்து நான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் அமைப்பை நான் கண்டிக்கும்போது அந்த அமைப்பை நடத்தும் மனிதர்களை வெறுக்கிறேனென்று தப்பாக நீங்கள் உணரக்கூடாது. நான் என்னை நேசிப்பது போலவே இங்கிலீஷ்காரனையும் நேசிக்கிறேன். இதுதான் என் மதம். இதை நான் இந்தச் சமயத்தில் நிரூபிக்கா விட்டால் கடவுளுக்குத் துரோகம் செய்தவனாவேன்.

பார்ஸிகளைப் பற்றி நான் என்ன சொல்ல? பார்ஸிகளின் கௌரவத்தையும் உயிர்களையும் ஹிந்து-முஸ்லிம்கள் பாதுகாக்கா விடில், சுதந்திரத்துக்குச் சிறிதும் தகுதியற்றவர்களாவோம். சமீபத்திலேதான் அவர்கள் தங்களுடைய தாராள குணத்தையும் சிநேகப் பான்மையையும் நிரூபித்தார்கள். பார்ஸிகளுக்கு முஸ்லிம்கள் முக்கியமாகக் கடமைப் பட்டிருக்கிறார்கள். கிலாபத் நிதிக்குப் பார்ஸிகள் ஏராளமாய்ப் பணம் உதவியிருக்கிறார்கள். ஆகையால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பூரண பச்சாதாபம் காட்டினாலன்றி பார்ஸிகளின் முகத்தில் என்னால் விழிக்க முடியாது. இந்தியக் கிறிஸ்துவர்கள் அடைந்த கஷ்டங்களுக்குப் பரிகாரம் செய்தாலன்றி கிழக்காப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் முகத்தை என்னால் பார்க்க முடியாது. கிறிஸ்தவர்களும் பார்ஸிகளும் தற்காப்புக்காகவோ, பழிவாங்குவதற்காகவோ செய்திருக்கும் காரியங்களை நாம் பொருட்படுத்தக் கூடாது.

என் நிமித்தமாகவே பம்பாயிலுள்ள இந்தச் சிறுபான்மைச் சகோதர சகோதரிகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. அவர்களுக்குப் பூரண பரிகாரம் செய்து கொடுப்பது என் கடமை. ஒவ்வொரு ஹிந்து முஸ்லிமின் கடமையும் ஆகும். ஆனால் என்னைப் பின்பற்றி வேறு யாரும் பட்டினி விரதம் தொடங்க வேண்டாம். இதய பூர்வமான பிரார்த்தனையின் காரணமாக உபவாசம் இருக்கத் தோன்றினால்தான் உபவாசம் இருக்கலாம். அதற்கு அந்தராத்மாவின் தூண்டுதல் அவசியம். ஆகையால் ஹிந்து முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டாம். அவரவர்கள் வீட்டிலிருந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்கட்டும்.

என்னுடைய சகாக்கள் என்பேரில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை. அது வீண்வேலை. அதற்குப் பதிலாக நகரெங்கும் சென்று கலகம் செய்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயலவேண்டும். நம்முடைய போராட்டத்தில் நாம் முன்னேறி வெற்றி பெற வேண்டுமானால் முதலில் நம்முடைய இருதயங்களைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

என் முஸ்லிம் சகோதரர்களுக்கு விசே ஷமாக ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். நான் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பரிபூரணமாகப் பாடுபட்டு வருகிறேன். கிலாபத் இயக்கத்தை ஒரு பரிசுத்த இயக்கமாகக் கருதி அதில் ஈடுபட்டிருக்கிறேன். அலி சகோதரர்களிடம் என்னைப் பூரணமாக ஒப்புவித்திருக்கிறேன். பம்பாயில் நடந்த இந்த நாள் இரத்தக்களரியில் முஸ்லிம்கள் அதிகப் பங்கு எடுத்திருப்பதாக அறிந்து என் மனம் வருந்துகிறது. ஒவ்வொரு முஸ்லிமையும் நான் மன்றாடி வேண்டிக்கொள்கிறேன். இந்த இரத்தக் களரியைத் தடுத்து நிறுத்த அவர்கள் முழு முயற்சியும் செய்யவேண்டும்.

கடவுள் நமக்கு நல்லறிவையும் நல்ல காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய தைரியத்தையும் அளிப்பாராக.
இங்ஙனம், உங்கள் ஊழியன், 'எம். கே. காந்தி'
மேற்கண்ட விண்ணப்பத்தை மகாத்மா காந்தி எழுதிக்கொடுத்தார். அதை இங்கிலீஷ், குஜராத்தி, மராத்தி. உருது ஆகிய நாலு பாஷைகளிலும் அச்சிட்டுப் பம்பாய் நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விநியோகித்தார்கள். இந்த முயற்சிக்கு ஒரு நாள் முழுதும் ஆகி விட்டது. பலன் இன்னும் தெரிந்தபாடில்லை. மகாத்மாவோ தண்ணீரைத் தவிர வேறொன்றும் அருந்த வில்லை. ஒரு நிமிடங்கூடச் சும்மா இருக்கவும் இல்லை. ஊழியர்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். தாங்கள் செய்த காரியங்களைச் சொல்லி விட்டு, செய்ய வேண்டியதற்கு யோசனை கேட்டுக் கொண்டு போனார்கள். "உண்ணா விரதம் இருக்க ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அமைதி யடைந்திருக்கிறது. களைப்பே தெரியயவில்லை!" என்று மகாத்மா அடிக்கடி தம் சகாக்களிடம் உண்ணாவிரதம் ஆரம்பித்ததோடு மகாத்மா நிற்கவில்லை. ஸ்ரீ தேவதாஸ் காந்திக்குத் தந்தி கொடுத்து வரவழைத்தார். தம்முடைய உண்ணாவிரதத்தினாலும் பம்பாய்க் கலகம் நிற்காமற் போனால் அஹிம்சையை நிலை நாட்டுவதற்காகத் தமது குமாரனைப் பலியாக அனுப்பப் போவதாகச் சொன்னார்.

இதைக் கேட்ட மகாத்மாவின் சகாக்கள் பெரிதும் வருத்த மடைந்தார்கள். அமைதியை நிலை நாட்டுவதற்காகப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள். ஸ்ரீமதி சரோஜினி நாயுடு, மௌலானா ஆஸாத் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ பரூச்சா ஆகியவர்கள் பம்பாய் நகரமெல்லாம் பம்பரம் போலச் சுழன்றார்கள். ஜனங்களின் பலாத்காரம் காரணமாக மகாத்மா பட்டினி கிடப்பதை எடுத்துரைத்தார்கள். எங்கேயாவது கலகம் நடக்கும் போலிருப்பதாகச் செய்தி வந்தால் அந்த இடத்துக்குப் பறந்து ஓடினார்கள். ஜனங்களிடம் பேசிக் கலகம் நேராமல் தடுத்து அமைதியை நிலை நாட்டினார்கள்.

மறுநாள் 20-ஆம் தேதி மகாத்மாவின் ஜாகையில் பம்பாய்ப் பிரமுகர்களின் கூட்டம் ஒன்று நடந்தது. ஹிந்து, முஸ்லிம், பார்ஸி பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அமைதி நிலைநாட்டும் வழிகளைப் பற்றி விவாதங்கள் நடந்தன. பார்ஸிகள் சிறு பான்மையாரானபடியாலும், முதலில் தாக்கப்பட்டவர்களான படியாலும், சமாதானத்துக்குப் பார்ஸிகள் சொல்லும் நிபந்தனை களை மற்ற வகுப்பார் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி சொன்னார். அதை முதலில் மற்றவர்கள் மறுத்தார்கள். மகாத்மா வற்புறுத்தியதால் இணங்கினார்கள். பார்ஸிகளிடம் சமாதானம் ஏற்படுத்தும் பொறுப்பை ஒப்புவித்ததும் அவர்களும் நியாயமான நிபந்தனைகளையே சொன்னார்கள். மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

அன்று சாயங்காலம் மோட்டார் லாரிகளில் ஹிந்து- முஸ்லிம்-பார்ஸி பிரமுகர்கள் கோஷ்டி கோஷ்டியாக ஏறிக்கொண்டு நகரெங்கும் சுற்றினார்கள். சமூகங்களுக்குள் நல்லபடியான சமாதானம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்துக் கொண்டே போனார்கள். இவ்விதம் எல்லாப் பிரமுகர்களும் தீவிர முயற்சி செய்ததின் பயனாக, இரண்டு நாளில் பம்பாய் நகரமெங்கும் பூரண அமைதி ஏற்பட்டு விட்டது.

21-ஆம் தேதி இரவு பம்பாயில் பலாத்கார நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. 22-ஆம் தேதி காலையில் மகாத்மாவின் ஜாகையில் மறுபடியும் எல்லா சமூகப் பிரதிநிதிகளும்கூடி மகாத்மாவை உணவு அருந்தும்படி கேட்டுக் கொண்டார்கள்.

"இந்த அமைதி நீடித்திருப்பதற்குப் பிரயத்தனம் செய்வதாக நீங்கள் அனைவரும் சேர்ந்து வாக்குறுதி கொடுத்தால் என் விரதத்தை முடிவு செய்கிறேன்" என்று மகாத்மா கூறினார். அவ்வாறே பிரமுகர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதன் பேரில் சில திராட்சைப் பழங்களையும் ஒரு ஆரஞ்சுப் பழத்தையும் அருந்தி மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை முடிவுசெய்தார்! பம்பாய் மக்கள் அனைவரும் அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்டுப் பெருமூச்சு விட்டு மகிழ்ந்தார்கள்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வெள்ளி, 13 ஜூலை, 2018

1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11

தேடி வருகிறது கௌரவம்!
தேவன் + கோபுலு
ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 4-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 12 ஜூலை, 2018

1116. தெ.சி.தீத்தாரப்பன் -1

இன்பக் காதலி
‘பூ’ 

‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ‘தீபன்’ அவர்களின் ஒரு கவிதை.


புதன், 11 ஜூலை, 2018

1115. சங்கீத சங்கதிகள் - 157

பல்லடம் ஸ்ரீ ஸஞ்சீவ ராவ்
ஆர். நாகராஜ ராவ் ஜூலை 11. பல்லடம் சஞ்சீவ ராவ் அவர்களின் நினைவு தினம்.

‘சுதேசமித்திரனில்’ 1943-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]


தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

செவ்வாய், 10 ஜூலை, 2018

1114. சி.சு.செல்லப்பா - 3

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 2
வல்லிக்கண்ணன்"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1

( தொடர்ச்சி )

4

சி.சு. செல்லப்பாவை நான் முதன் முதலாகப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1945ஆம் வருடம். அப்போது திருச்சியில் இருந்து 28 மைல்கள் தள்ளி உள்ள துறையூர் என்கிற சிற்றுரரில், கிராம ஊழியன்' என்னும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை இதழ்நடந்து கொண்டிருந்தது. அதில் நான் பணியாற்றி வந்தேன். அதே சமயம் என்னுடைய இதயஒலி எனும் கையெழுத்துப் பத்திரிகையும் வளர்த்து வந்தேன். திருச்சி மாவட்ட கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்த 'முதலாவது மாநாடு ' நடத்தினார்கள். அதற்கு வரவேற்புக்குழுத்தலைவராக எனக்குபொறுப்பளித்தார்கள்.

ஸ்ரீரங்கம் ஊரில் நடைபெற்ற அம் மாநாட்டுக்கு 'ஆனந்தவிகடன் உதவிஆசிரியர் நாடோடி, 'பாரததேவி நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலம், மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் முதலியவர்கள் வந்திருந்தார்கள். சிட்டியுடன் அவர் நண்பர் செல்லப்பாவும் வந்தார். அப்போதுதான் முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன். சிட்டி அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தான். செல்லப்பா அம்முறை என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகவில்லை.

அக்காலக்கட்டத்தில் சி.சு.செல்லப்பா வத்தலக்குண்டு ஊரில் வசித்து வந்தார். கையால்காகிதம்செய்து, தக்ளி'யில் நூல் நூற்பது போன்ற காந்தி வழிக்குடிசைத் தொழில் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயல்புகளில் இதுவும் சேரும். படிப்பு, எழுதுவது, இலக்கியம் பற்றிப் பேசுவது, பத்திரிகைகளில் வேலை பார்ப்பது என்பனவற்றில் அவர்காட்டி வந்த உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் கைத்தொழில் போன்ற இதர முயற்சிகளிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.

பஞ்சினால் அழகு அழகான சிறுபொம்மைகள், பறவைகள், முயல்குட்டி, நாய் போன்றவை செய்வதில் கைதேர்ந்தவர் அவர். நவராத்திரி சமயத்தில் பொம்மைக் கொலு வைத்து, வயர் மாட்டி சின்னச் சின்ன பல்புகள் கொண்டு அலங்காரம் செய்து ஒளியேற்றுவதில் அவர் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவது உண்டு.

வத்தலக்குண்டில் அவர் வீட்டின் பின்பக்கம் காலிஇடம் அதிகம் இருந்தது. அதைப் பண்படுத்தி காய்கறிப் பயிர்கள் வளர்ப்பதிலும், முருங்கை தென்னை கொய்யா வாழை முதலிய மரங்கள் வளர்ப்பதிலும், அவற்றிலிருந்து பலன்கள் பெறுவதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி உழைத்திருக்கிறார்.

'வாடிவாசல் என்ற அவருடைய சிறப்பான நெடுங்கதையை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதில் மாட்டுச் சண்டை சம்பந்தமான படங்கள்சேர்க்க ஆசைப்பட்டார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சி விரட்டு (ஜல்லிக்கட்டு) - மாடுகளுக்கும் மனிதருக்கும் நிகழும் சண்டை- காட்சிகளை படம் பிடிக்கத் தீர்மானித்தார். அவரேகாமிராவை கையாண்டு, விரும்பிய கோணங்களில் எல்லாம் போட்டோ எடுத்தார். அவற்றை அவரே தன் வீட்டில் இருட்டறை அமைத்து, கழுவி, பிரிண்ட் போட்டு, படங்களாக்கினார். அதற்குத் தேவையான பயிற்சிகள் பெறுவதில் அவர் சலிப்பில்லாமல் காலம் செலவிட்டிருந்தார்.

இப்படி புதுமைகள் பண்ணுவதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் செல்லப்பா தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

சிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த செல்லப்பா இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட நாட்டம் கொண்டார். அதற்காக அமெரிக்க, ஐரோப்பிய இலக்கிய விமர்சன நூல்களைப் படிப்பதில் தீவிரமாக முனைந்தார். அமெரிக்கன் லைபிரரி, பிரிட்டிஷ் லைபிரரிகளிலிருந்து பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து, வீட்டில் உட்கார்ந்து விடாமுயற்சியோடு படித்தார். ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற்போல வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாமல் விமர்சன நூல்களைப் படிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவர் இந்தச் சமயத்தில் திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெரு வீட்டில் மாடியில் வசித்தார். மாடியை விட்டுக் கீழே இறங்காமல் இப்படி அநேக நாட்கள் படிப்பில் கழித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.

ஒரு கால கட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒரு ஆய்வு மாணவனின் ஊக்கத் தோடு படித்தறிவதில் உற்சாகம் காட்டினார் செல்லப்பா.

 செல்லப்பாவின் மனஉறுதி, வைராக்கியத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் குணம், எண்ணியதைச்செய்து தீர்க்கும் விடாப்படியான தன்மை, கொள்கைப் பிடிப்பு, நட்பு உணர்வு முதலிய பண்புகள் வியந்து போற்றப்பட வேண்டியன ஆகும்.
5
செல்லப்பா தானே சொந்தமாக இலக்கிய விமர்சனத்துக்கு என்று ஒரு பத்திரிகை நடத்தத் துணிந்தார். அதற்கு வித்தியாசமாக - அதுவரை எவரும் எண்ணாத விதத்தில் - எழுத்து என்று பெயர் வைத்தார். இதற்காகப் பலரும் அவரைக் கேலி செய்தார்கள்.

இதில் என்ன தவறு.இருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பெயர்வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும் என்று செல்லப்பா பதிலளித்தார்.

அவர் காட்டிய வழியில் பின்னர் பலரும் பத்திரிகைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கத்துணிந்தார்கள். நடை, கசடதபற, ங், ஐ, அஃ என்றெல்லாம்.

உண்மையான சிறுபத்திரிகை (லிட்டில் மேகசின்) நடத்துவதிலும் செல்லப்பாதான் முன்னோடியாய், வழிகாட்டியாய் செயல்பட்டிருக்கிறார். "எழுத்து பத்திரிகை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் தான் பிரதிகள் அச்சிடப்படும் என்று அறிவித்துக் கொண்டு, அவ்விதமே செயலாற்றினார். பன்னிரண்டு வருட காலம் அப்படி, தனித்தன்மை உடைய ஒரு பத்திரிகையை நடத்தியது மாபெரும் சாதனையாகும்.

அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும் நஷ்டங் களும் அதிகமாகும். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக அவர் ஊர்ஊராக அலைந்து திரிந்தார். ரயிலிலும், பஸ்ஸிலும், நண்பர்களின் சைக்கிள் பின்னால் அமர்ந்தும், நடந்தும் போய், படிப்பில் ஈடுபாடு உடைய அன்பர்களை அணுகி, எழுத்து பத்திரிகை பற்றி எடுத்துச் சொல்லி செல்லப்பா இதழை வளர்க்கப் பாடுபட்டார். அது இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதாகும். அந்தப்பத்திரிகையே தனி இலக்கிய வரலாறு ஆகத் திகழ்வதும் ஒரு விசேஷம் ஆகும்.

அதே போல் தான் அவர் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டதும். வணிகப் பிரசுரகர்கள் தனது எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன்வரவில்லை என்றதும், தானே தன்னுடைய எழுத்துக்களை நூல்களாக்குவது என்று செல்லப்பாதீர்மானித்தார். அதற்காக எழுத்து பிரசுரம் ஆரம்பித்தார். குறிப்பிடத் தகுந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.

அவர் தன்னுடைய நூல்களை வெளியிட்டதுடன் நில்லாது, தான்மதிப்பும் மரியாதையும், அன்பும்நட்பும் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களையும் புத்தகமாக்க முன்வந்தார். வ.ரா. ந. பிச்சமூர்த்தி, சிட்டி எழுத்துக்களை புத்தகங்களாக்கினார். எனது சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டது அவருடைய விசால மனப்பண்பை வெளிப்படுத்தியது.

பின்னர், 'தீபம்’ இதழில் நான் தொடர்ந்து எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைகளை நானே தான் புத்தகமாக வெளியிடுவேன் என்று அவராகவே கூறி, 1977ல் எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்தார்.

அதனால் அது 1978ல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

 'அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டின. பணத்தை நான் வேறு வகைகளில் செலவிட்டு விட்டேன். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது என் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது” என்று செல்லப்பா சொன்னார்.

'நீங்கள் எனக்கு பணம் தரவேண்டாம் என்றேன்.

”அது முறையாகாது. நான் எப்படியும் தந்து விடுவேன்' என்று அவர் தெரிவித்தார்.

 சில வருடங்களுக்குப் பிறகு செல்லப்பாஎன்னைத் தேடிவந்து ஆயிரம் ரூபாய் தந்தார். இது ஒரு பகுதி தான். பாக்கியை பிறகு தருவேன்’ என்றார்.

 'இதுவே போதும்” என்று சொன்னேன்.

”அது நியாயமில்லை”  என்று கூறிச் சென்றார். அநேக வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா ஒருநாள் எதிர்பாராத விதமாக, தன் மனவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். ”அதை இவரிடம் கொடு’ என்றார்.

அம்மா ஆயிரம் ரூபாய் கட்டை அளித்தார்.

”இப்பதான் என்மனச்சுமை தீர்ந்தது. புத்தகம் முழுதும் விற்று, வந்த பணத்தை நானே செலவுபண்ணிவிட்டேன். உங்களுக்கு பணம் தரவில்லையே என்று உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. முன்பு ஒரு பகுதி கொடுத்தேன். மேலும் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை. நீங்கள் ஒரு தடவை கூட பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதனாலேயே என் மன உறுத்தல் அதிகமாயிற்று. இப்பதான் என்மனசுக்கு சமாதானமாயிற்று, “ என்று செல்லப்பா சொன்னார்.

அவரது அன்பும் நட்பு உணர்வும் என் உள்ளத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தின.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

திங்கள், 9 ஜூலை, 2018

1113. பாடலும் படமும் - 37

இராமாயணம் - 9
சுந்தர காண்டம், காட்சிப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு 
                                  அறியாள்;
தூவி அன்னம்மென் புனலிடைத் தோய்கிலா
                                  மெய்யாள்;
தேவுதெண் கடல்அமிழ்து கொண்டு அனங்கவேள்
                                  செய்த
ஓவியம்புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்.

  [   புனைவது ஒன்றுஅன்றி - உடுத்துக் கொண்டிருக்கும் ஓராடையைத்
தவிர; வேறு - வேறு ஒரு; அம் ஆவி துகில் அறியாள் - அழகிய பால்
ஆவி ஒத்த ஆடையை அறியாது; தூவி அன்ன - மயிலின் தோகை போன்ற
(நீலநிறமுடைய); மென் புனலிடை - தெளிந்த நீரில்; தோய்கிலா மெய்யாள்
- குளிக்காத மேனியை உடையவளாய்; தேவு - தெய்வத் தன்மை பெற்ற; 
தெண்கடல் அமிழ்து கொண்டு - தெளிந்த பாற்கடலில் தோன்றிய
அமுதத்தை மூலப் பொருளாகக் கொண்டு; அனங்கவேள் செய்த -
மன்மதனால் செய்யப்பெற்ற; ஓவியம் - விக்கிரகம்; புகை உண்டதே
ஒக்கின்ற - புகையால் விழுங்கப் பெற்றதை ஒத்திருக்கின்ற; உருவாள் -
வடிவத்தை உடையாள். ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

ஞாயிறு, 8 ஜூலை, 2018

1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2

கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்பம்
மயிலை சீனி வேங்கடசாமி ஜூலை 8. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நினைவு தினம்

Journal of Tamil Studies -இல் 1974-இல் வந்த ஒரு கட்டுரை.


[ நன்றி: http://www.ulakaththamizh.org ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
மயிலை சீனி.வேங்கடசாமி

சனி, 7 ஜூலை, 2018

1111. காந்தி - 34

28. கோட்டை தகர்ந்தது!
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய  28-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
நவம்பர் மாதம் 17-ஆம் தேதி காலையில் வேல்ஸ் இளவரசர் 'இந்தியாவின் வாசல்' என்று சொல்லப்படும் பம்பாய்க் கடற் கரை மண்டபத்தில் வந்து இறங்கினார். அதிகார வர்க்கத்தார் பிரமாத வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஏற்பாடுகள் குறிப்பிட்ட திட்டத்தின்படி நடைபெற்றன. பம்பாய்ப் பொதுமக்களில் மிகப் பெரும்பாலோர் அந்த வைபவங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு சாரார் கலந்துகொண்டனர். பம்பாய் மிகப்பெரிய நகரம். பார்ஸிகளும், ஆங்கிலோ இந்தியர்களும், கிறிஸ்துவர்களும் லட்சக்கணக்காக அந் நகரில் வசித்தனர். பம்பாயில் இருந்த சாராயக் கடைகள் பெரும்பாலும் பார்ஸிகளால் நடத்தப் பட்டன. மேலும் பார்ஸி வகுப்பினர் ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியவர்கள். ஆகையால் சில மகத்தான தேசீயத் தலைவர்கள் பார்ஸி வகுப்பினராயிருந்த போதிலும், அவர்களில் பெரும்பாலோர் மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற இரு வகுப்பாரிலும் எப்போதும் அரசாங்க பக்தர்கள் அதிகம்.

எனவே, இளவரசர் விஜயத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இட்டிருந்த கட்டளையை மீறிப் பம்பாயிலிருந்த பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கிறிஸ்துவர்களும் வரவேற்பு வைபவங்களில் கலந்துகொண்டார்கள். வேல்ஸ் இளவரசரை வரவேற்று விட்டுத் திரும்பி வந்தவர்களும் அதே சமயத்தில் பம்பாய் நகரின் மற்றொரு மூலையில் நடந்த மகாத்மாவின் பொதுக்கூட்டத்திலிருந்து திரும்பியவர்களும் சாலைகளில் பல விடங்களில் எதிரிட்டுக்கொள்ள நேர்ந்தது. அவர்களுக்குள் கைகலப்பும் ஏற்பட்டது.

இளவரசரை வரவேற்றுவிட்டு வந்த பார்ஸிகளின் தலைகளிலிருந்த விதேசிக் குல்லாய்களையும் அவர்களுடைய உடம்பின் மீதிருந்த விதேசித் துணிகளையும் சிலர் பலவந்தமாக நீக்கித் தீயிலே போட்டார்கள். அதற்கு எதிர்ப்புச் செய்தவர்களை மக்கள் அடிக்கவும் செய்தார்கள். சாலைகளில் போன மோட்டார் வண்டிகளின்மீது கற்கள் எறியப்பட்டன. பொதுவாக, மோட்டாரில் வருகிறவர்கள் எல்லாரும் இளவரசர் வரவேற்பிலிருந்து திரும்புகிறார்கள் என்ற எண்ணத்தின் பேரில் மக்கள் மோட்டார்களைத் தாக்கினார்கள். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இத்தகைய சம்பவங்கள் வரவரக் கடுமையாகின. ஆத்திரங்கொண்டிருந்த ஜனங்களைச் சில விஷமிகள் தூண்டிவிடவும் ஆரம்பித்தார்கள். சாராயக் கடைகளுக்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தீ வைத்தார்கள். மோட்டார்களும் டிராம்களும் எரிக்கப்பட்டன. சில பார்ஸி பெண்மணிகளும் தாக்கப் பட்டனர்.

இம்மாதிரி செய்திகளைக் கேள்விப்பட்டதும் மகாத்மாவின் மனம் துடிதுடித்தது. தாம் எடுத்துக்கொண்ட ஜாக்கிரதை யெல்லாம் வீணாகி விட்டதே. செய்த எச்சரிக்கையெல்லாம் பயனின்றிப் போய்விட்டதே என்று அவர் உள்ளம் பதைத்தது. உடனே மோட்டாரில் வெளிக்கிளம்பினார். பலாத்காரச் செயல்கள் நடப்பதாகத் தெரிந்த இடங்களுக்கெல்லாம் பறந்து சென்றார். அங்கங்கே ஜனக்கூட்டத்தைக் கலைந்து போகும்படி சொன்னார். இப்படி நகரைச் சுற்றிக்கொண்டு வருகையில் ஓரிடத்தில் ஆறு போலீஸ்காரர்கள் தடியால் அடிபட்டுத் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டார். உடனே காரை நிறுத்திவிட்டு அருகில் போய்ப் பார்த்தார். நாலுபேர் செத்துக் கிடந்தார்கள். இரண்டு பேர் குற்றுயிராய்க் கிடந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டதும் மகாத்மாவின் இருதயம் பிளந்து விடும்போலாகி விட்டது. அந்தச் சமயத்தில் சுற்றிலும் நின்ற ஜனங்கள் வந்திருப்பவர் மகாத்மா என்று அறிந்ததும் "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று கோஷமிட்டார்கள். மகாத்மாவுக்கு அந்தக் கோஷம் கர்ணகடூரமாயிருந்தது! அஹிம்சையைப் பற்றித் தாம் மக்களுக்குச் செய்த உபதேசமெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகி விட்டதே என்று எண்ணி வேதனைப் பட்டார். கோஷம் செய்தவர்களைக் கடும் சொற்களால் கண்டித்தார். குற்றுயிராயிருந்த இரண்டு போலீஸ் காரர்களையும் எடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.

இவ்விதம் பல இடங்களிலும் சுற்றி ஜனங்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு இரவு வீடு திரும்பினார். ஆனால் பம்பாய் நகரமெங்கும் கலகமும் கொலையும் தீ வைத்தலும் நடப்பதாக மேலும் மேலும் செய்திகள் வந்துகொண்டே யிருந்தன. காந்தி மகான் பக்கத்திலிருந்த துணைவர்களிடம் "நான் கட்டிய ஆக்யக் கோட்டை யெல்லாம் தகர்ந்துவிட்டதே!" என்று வாய்விட்டுப் புலம்பினார். மேலும், மகாத்மா கூறியதாவது:--
"நான் பம்பாய்க்கு இச்சமயம் வந்து சேர்ந்ததும் கடவுளுடைய ஏற்பாடுதான். பம்பாய்க்கு வருவதற்கு எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை. பர்தோலிக்கு நேரே போக விரும்பினேன். பம்பாய் நண்பர்கள் வற்புறுத்தியபடியால் வந்தேன். அப்படி வந்து இதையெல்லாம் நேரில் பார்த்திராவிட்டால் ஜனங்கள் இவ்வளவு பயங்கரமாக நடந்துகொள்வார்கள் என்று நம்பியிருக்கமாட்டேன். எல்லாம் போலீஸாரின் பொய் அறிக்கைகள் என்று எண்ணியிருப்பேன். அந்த மட்டும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நல்ல சமயத்தில் எனக்கு எச்சரிக்கை செய்தார். பொது மக்கள் இன்னும் அஹிம்சையை நன்றாக உணரவில்லையென்பதையும் ஆகையால் பொது ஜனச் சட்ட மறுப்புக்கு அவர்கள் தயாராகவில்லையென்பதையும் எனக்குக் கண்முன்னே கடவுள் காட்டிவிட்டார்!"

இவ்வாறு சொல்லி மகாத்மா காந்தி தமது புதல்வர் ஸ்ரீ தேவதாஸ் காந்தியை உடனே சூரத்துக்குப் புறப்பட்டுப்போகச் சொன்னார். பம்பாயில் இப்படிப்பட்ட விபத்து நேர்ந்து விட்டபடியால் தமது பர்தோலி பிரயாணத்தை ஒத்திப்போட்டிருப்ப தாகவும், பொதுஜனச் சட்ட மறுப்பு ஆரம்பிப்பதற்குரிய ஆயத்தங்களை யெல்லாம் நிறுத்தி வைக்கும்படியும் ஸ்ரீ தேவதாஸிடம் சொல்லி அனுப்பினார். அன்றிரவெல்லாம் மகாத்மா காந்தியும் அவருடைய துணைவர்களும் ஒரு கண நேரங்கூடக் கண்ணயரவில்லை.
-- --
- மறுநாள் 18ம் பொழுது விடிந்தது. முதல் நாள் இரவு 11 மணிக்குப் பிறகு பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லையென்று செய்தி வந்தது. அன்று காலை 10 மணி வரைக்குங்கூட பம்பாய் நகரமெங்கும் அமைதி நிலவி வருவதாகப் பல இடங்களிலிருந்தும் செய்தி வந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி, முதல் நாள் சம்பவங்களைபப்பற்றி "எங் இந்தியா" வுக்குக் கட்டுரை எழுத ஆரம்பித்தார். "ஒரு பெருங் கறை" என்பதாக அக்கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்தார். பம்பாய்ச் சம்பவங்கள் தமது மனதைப் புண்படுத்திவிட்டது பற்றியும் அவை காரணமாகப் பொதஜனச் சட்ட மறுப்பை ஒத்திப் போடவேண்டி நேர்ந்தது பற்றியும் எழுதினார். இந்தக் கட்டுரையைப் பாதி எழுதிக்கொண்டிருக்கையில் பரேல் என்னுமிடத்திலிருந்து அவசர டெலிபோன் செய்தி ஒன்று வந்தது. அங்கேயுள்ள ஆலைத் தொழிலாளர்கள் அக்கம் பக்கத்திலுள்ள பார்ஸி சமூகத்தாரைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து வருவதாகவும் மகாத்மா உடனே வந்து அவர்களைத் தடுக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். மகாத்மா தாம் எழுத ஆதம்பித்த கட்டுரையை முடித்து விட்டுக் கிளம்ப எண்ணி, முதலில் மௌலானா ஆஸாத் ஸோபானியையும், மௌலானா முகம்மது அலியின் மைத்துனரான ஜனாப் மோஸம் அலியையும் பரேலுக்குப் போகும்படி சொன்னார்.

பரேல் தொழிலாளர்கள் அன்றைக்குப் பார்ஸிகளைத் தாக்கயத்தனித்ததற்குக் காரணம் ஒன்று இருந்தது. அன்று காலையில் பம்பாயில் அமைதி குடிகொண்டிருந்ததல்லவா? அது புயலுக்கு முந்தைய அமைதியைப் போன்றதேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் ஆங்காங்கு கலகங்கள் ஆரம்பித்தன. இந்தத் தடவை ஆரம்பித்தவர்கள் பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களுமாவர். முதல் நாள் அவர்களைத் திடீரென்று ஹிந்து-முஸ்லிம்கள் தாக்கினார்கள். ஆனால் இராத்திரிக்கு இராத்திரியே அவர்கள் மறுநாள் பழி வாங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டார்கள். துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் உபயோகிக்கவும் சர்க்காரிடம் அநுமதி பெற்றுக் கொண்டார்கள். அவ்வளவுதான்; காலை ஒன்பது மணிக்கு மேலே பார்ஸிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் கும்பல் கும்பலாகக் கிளம்பி ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதற்கு ஆரம்பித்தார்கள். ஹிந்து முஸ்லிம்களில் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன.


இதை யறிந்ததும் ஹிந்து முஸ்லிம்கள் பழையபடி தடிகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். கண்ட இடங்களிலெல்லாம் பார்ஸிகளைத் தாக்க ஆரம்பித்தார்கள். பார்ஸிகள் வசிக்கும் இடங்களைத் தேடிப் போகவும் தொடங்கினார்கள். "அடியைப் பிடியடா பாரத பட்டா!" என்று நேற்று நடந்த பயங்கரமான சம்பவங்கள் இன்றும் ஆரம்பமாயின.

மௌலானா ஆஸாத் ஸோபானியும் ஜனாப் மோஸம் அலியும் காந்திஜியின் விருப்பத்தின்படி பரேல் பகுதிக்கு மக்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சென்றார்கள் அல்லவா? அவர்களில் ஜனாப் மோஸம் அலியும் அவருடன் சென்றவர்களில் இருவரும் அரைமணி நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்தார்கள். அவர்கள் உடம்பெல்லாம் காயமாகி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றி அவர்கள் மகாத்மாவிடம் சொன்னார்கள். பார்ஸிகளும் ஆங்கிலோ-இந்தியர்களும் யூதர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தார் அவர்களை வழியில் வளைத்துக் கொண்டு தாக்கினார்களாம். அவர்கள் ஏறிச் சென்ற மோட்டார் வண்டி சுக்கு நூறாகி விட்டதாம்! உயிரோடு திரும்பி வருவதே பெரிய காரியம் ஆகிவிட்டதாம்! மௌலானா ஆஸாத் ஸோபானி வேறொரு வண்டியில் போனபடியால் அவருடைய கதி என்ன ஆயிற்று என்று தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். அடுத்தாற்போல் இன்னும் சில கிலாபத் இயக்கத் தொண்டர்கள் அதேமாதிரி அடிபட்டு மேலெல்லாம் இரத்தம் ஒழுகத் திரும்பி வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு மண்டையில் பட்ட அடியினால் மூளை கலங்கிப் போயிருந்தது. "நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்!" "நாங்களும் எங்கள் இரத்தத்தைக் கொடுத்தோம்" என்று அவர் இடைவிடாமல் கூச்சல் போட்டார்.

மகாத்மா அச்சமயம் "ஒரு பெருங்கறை" என்ற கட்டுரையை "எங் இந்தியா" வுக்கு எழுதிக் கொண்டிருந்தார். பின்வருமாறு அவர் எழுதினார்:-

”இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே ஆறு ஹிந்து முஸ்லிம் தொண்டர்கள் மண்டைஉடைபட்டு இரத்தக் காயங்களுடன் திரும்பி வந்திருக்கிறார்கள். ஒருவர் மூக்கு எலும்பு உடைந்து உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் வந்திருக்கிறார். இவர்கள் பரேலில் தொழிலாளிகளின் டிராம் வண்டிகளைத் தடை செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைச் சாந்தப்படுத்துவதற்காகச் சென்றார்கள். ஆனால் பரேலுக்கு அவர்களால் போய்ச்சேர முடியவில்லை; அவர்களுக்கு நேர்ந்தது என்ன வென்பதை அவர்களுடைய காயங்களே சொல்லுகின்றன.

“ஆகவே, பொதுஜனச்சட்டமறுப்பை ஆரம்பிக்கலாம் என்னும் என் நம்மிக்கை மண்ணோடு மண்ணாகி விட்டது. சட்டமறுப்புக்கு வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை, அத்தகைய நிலைமை பர்தோலியில் குடிகொண்டிருப்பது மட்டும் போதாது. பம்பாயில் பலாத்காரம் தலை விரித்தாடும்போது பர்தோலியையும் பம்பாயையும் தனித் தனிப் பிரிவுகளாகக் கருதமுடியாது.

“ஒத்துழையாமைத் தலைவர்கள் பம்பாய்ச் சம்பவங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அவர்கள் நகரத்தில் பல பகுதிகளிலும் சென்று ஜனங்களைச் சாந்தப்படுத்த முயற்சி செய்தது உண்மைதான்; பல உயிர்களைக் காப்பாற்றி யிருப்பதும் உண்மைதான். ஆனால் இதைக்கொண்டு நாம் திருப்தியடைவதற் கில்லை. இதைக் காரணமாய்ச் சொல்லி வேறிடத்தில் சட்ட மறுப்பை நடத்தவும் முடியாது. நேற்று நமக்கு ஒரு சோதனை நாள். அந்த சோதனையில் நாம் தவறி விட்டோம். வேல்ஸ் இளவரசருக்கு எந்த விதமான தீங்கும் நேராமல் பாதுகாப்பதாக நாம் சபதம் செய்தோம். இளவரசரை வரவேற்பதற்காகப் போயிருந்த ஒரு தனி மனிதருக்கு அவமானமோ, பலாத்காரமோ நேர்ந்தாலும், நம்முடைய சபததில் நாம் தவறியதேயாகும். இளவரசரின் வரவேற்புக்கு போகாமலிருக்க நமக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை வரவேற்புக்குப் போக மற்றவர்களுக்கு உண்டு.மற்றவர்களின் உரிமைக்குப் பங்கம் செய்தது நம்முடைய விரத பங்கமே யாகும். என்னுடைய சொந்தப் பொறுப்பையும் நான் தட்டிக் கழிக்க முடியாது. புரட்சி ஆவேசத்தை உண்டாக்கியதில் மற்றவர்களைக் காட்டிலும் நான் அதிகமாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அந்த ஆவேசத்தை நான் கட்டுக்குள் நிலை நிறுத்திவைக்க இயலாதவனாகி விட்டேன். அதற்கு நான் பிராயச் சித்தம் செய்தாக வேண்டும். இந்தப் போராட்டத்தைத் தார்மீக அடிப்படையிலேயே நான் தொடங்கி யிருக்கிறேன். உபவாச விரத்திலும் பிரார்த்தனையிலும் நான் பூரண நம்பிக்கை உள்ளவன். ஆகவே, இனிமேல் சுயராஜ்யம் சித்தியாகும் வரையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இருபத்திநாலு மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது என்று சங்கல்பம் செய்து கொள்கிறேன்.

"பம்பாய்ச் சம்பவங்களினால் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் சீர்தூக்கிப் பார்த்து பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கலாமா என்று முடிவு செய்யவேண்டும். பொது மக்களிடையில் பரிபூரண அஹிம்சை நிலவினாலன்றி என்னால் சட்ட மறுப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்னும் முடிவு எனக்கு மிக்க வருத்தமளிக்கிறது. இது என்னுடைய சக்தியின்மைக்கு அத்தாட்சிதான். ஆனால் நாளைக்கு என்னை ஆளும் இறைவன் முன்னால் நிற்கும்போது, என்னுடைய உண்மையான யோக்யதையுடன் நிற்க விரும்புகிறேனே யல்லாமல் உள்ளதைக் காட்டிலும் அதிக சக்திமானாக வேஷம் போட்டுக்கொண்டு நிற்க விரும்பவில்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாடான பலாத்காரத்தை நான் எதிர்ப்பது போலவேபொது மக்களின் கட்டுப்பாடற்ற பலாத்காரத்தையும் எதிர்க்கிறேன். இந்த இருவகை பலாத்காரங்களுக்கு மிடையில் நசுக்கப்பட்டு உயிர் துறக்க நேர்ந்தால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை!"

மேற்கண்டவாறு மகாத்மா காந்தி எழுதிய கட்டுரையில் வாரா வாரம் அவர் திங்கட்கிழமை உபவாசம் இருக்க நேர்ந்த காரணம் இன்னதென்பதைக் காணலாம். ஆனால் இவ்விதம் வாரத்துக்கு ஒரு நாள் உபவாச விரதம் மகாத்மாவின் ஆத்ம சோதனைக்கு மட்டுமே பயன்படுவதாயிற்று. மக்களைத் தூய்மைப் படுத்துவதற்காக அவர் இன்னும் நீண்டகால உபவாச விரதங்கள் இருக்கும்படி நேர்ந்தது. ஏன்? பம்பாய் நிலைமை காரணமாகவே அவர் நீடித்த உண்ணாவிரதம் இருக்கும்படி ஆயிற்று. அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

வியாழன், 5 ஜூலை, 2018

1110. சங்கீத சங்கதிகள் - 156

தியாகராஜர் கீர்த்தனைகள் - 9
ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது.மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1932-இல் சுதேசமித்திரனில்  வெளியானவை.


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்