புதன், 25 நவம்பர், 2015

அரியும் அரனென் றறி : கவிதை

அரியும் அரனென் றறி

பசுபதி 


[ சங்கர நாராயணன்; சில்பி : நன்றி: விகடன் ] 
25 நவம்பர், 2015. கார்த்திகை தீபத் திருநாள்.

மும்மூர்த்திகளும் பங்குபெறும் அருணாசல புராணக் கதையை எல்லோரும் கேட்டிருப்பர்.


சங்கீத வித்வான் எம்.டி. ராமநாதன் இயற்றிய ‘ஹரியும் ஹரனும் ஒன்றே’ என்ற பாடலை அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தேன்.
https://youtu.be/VV8FTEjbjfI 
அப்போது நான் எழுதின இந்த வெண்பாக்கள் நினைவுக்கு வந்தன.

1. அரியும் அரனென் றறி;
 சிலேடை வெண்பா  ( இரட்டுற மொழிதல் ) 

நாகம்மேல் வாழ்வதால் நாரி உறைவதால்
கோகுல நாமத்தால் கோயிலால் -- ஆகம்
அரவிந்தம் அக்கத்தால் அஞ்சக் கரத்தால்
அரியும் அரனென் றறி .

நாகம்- பாம்பு/மலை ; கோயில் - சிதம்பரம்/சீரங்கம் ;
அரவிந்தம் - தாமரை: அரவு இந்து அம் ( பாம்பு, சந்திரன், நீர்) ;
அக்கம் - கண்/ருத்திராக்ஷம் ; அஞ்சக்கரத்தால் - அம் சக்கரத்தால் (அழகிய
சக்கரத்தால்) ; அஞ்சு அக்கரத்தால் (பஞ்சாக்ஷரத்தால்.)

அரன்: (கயிலை)மலைமேல் வாழ்வதால், ( உமை என்ற) நாரி உடலில்
உறைவதால், பசுக்கூட்டம் இருக்கும் 'பசுபதி' என்ற பெயரால், சிதம்பரத்தால்
, உடலில் பாம்பு, சந்திரன், (கங்கை) நீர் ருத்திராக்ஷம் இருப்பதால்,
பஞ்சாக்ஷரத்தால்

அரி: (அனந்தன்/ஆதிசேஷன் என்ற) பாம்பின்மேல் வாழ்வதால்,
(அல்லது சேஷாசலம்/திருவேங்கடம் என்ற மலைமேல் வாழ்வதால்)
(திருமகள் என்ற) நாரி உடலில் உறைவதால், கோகுலம் உள்ள  'கோபாலன்'
என்ற பெயரால், சீரங்கத்தால், உடலில் இருக்கும் தாமரைக் கண்களால்,
அழகிய சக்கரத்தால் :

அரியும் அரனும் ஒன்றென அறிவாயாக.

பசுபதி
26-02-06


2. அரனும் அயனும் அரி.
இன்னொரு சிலேடை ( முவ்வுற மொழிதல்)

===========
முருகனில் சேர்ந்ததால் முத்தொழிலில் ஒன்றால்
அருணா சலக்கதை ஆனதால் வேதப்
பிரணவம் போற்றலால் பெண்ணுடற் பங்கால்
அரனும் அயனும் அரி.

முருகன் = மு(குந்தன்)+ரு(த்ரன்)+க(மலன்)

பிரணவம் =ஒம் = அ( அயன்) +உ(அரி) +ம்(அரன்)

பி.கு. 

சிலேடை உள்ள மரபுக் கவிதைகளில் வெண்பா வடிவமே அதிகம்.
சிலேடை வெண்பா இயற்ற விரும்பும் அன்பர்கள் காளமேகத்தின் பல சிலேடை வெண்பாக்களைப் படித்தால், அவற்றின் அமைப்புப் பற்றித் தெரியும்.

ஒரு காட்டு:

பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும்

நஞ்சிருக்குந் தோலுரிக்கு நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது – விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம். 

மிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண்டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே , வாழைப்பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும்.

பாம்பிடம் நஞ்சு இருக்கும். பாம்பு தன் தோலை உரிக்கும். சிவபெருமான் முடிமேல் இருக்கும். கொடிய சினத்தில் அதன் பல்லால் கடிக்கப்பட்டால் உயிர் மீளாது.

வாழைப்பழம் நன்கு கனிந்ததால் நைந்து போயிருக்கும். வாழைப்பழத்தின் தோல் உரிக்கப்படும். சிவபெருமான் படையலில் மேலான பொருளாக இருக்கும். துணையுணவாகக் கொள்ளுங்காலத்தே ஒருவர் பல்லில் பட்டால் அப் பழம் மீண்டுவராது.  ( வெஞ்சினம் /வியஞ்சனம் - தொடுகறி; துணை உணவு )

மேலும், அழகான எதுகைகளும், ஒவ்வொரு அடியிலும் 1,3 சீர்களில் மோனைகளும்  ஓசைச் சிறப்பைக் கொடுப்பதைக் கவனிக்கவேண்டும்.
( நாதர்முடி - இங்கே ‘ர்’ அலகு பெறாது , சீர் கூவிளங்காய்தான் , கனிச் சீர் அல்ல.)

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

வெள்ளி, 20 நவம்பர், 2015

தினமணிக் கவிதைகள் -1

மழை(1) முதல் சினிமா(5) வரை! 

தினமணி நாளிதழ் இந்த வருட காந்தி ஜெயந்தி ( 02/10/15) அன்று   கவிதைமணி என்ற ஒரு பகுதியை தங்கள் இணைய தளத்தில் தொடங்கியது. 


வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதப்படும் கவிதைகளில் சில  தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு திங்களன்றும் அப்பகுதியில் வெளியாகின்றன.

அப்படி அண்மையில் வெளியான என் சில கவிதைகள்.
  
1. மழை

யாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை?
பாரதமே நாறுதே பாதிப்பால்! -- கோரிக்கை
வாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி?
ஓய்ந்திடுமோ ஊழல் மழை?

                                                                                        12-10-15
2.மது ஒழிப்பு

குட்டிச் சுவராய்ப் போகும் அய்யா
  குடியில் மூழ்கும் நாடு!
சட்ட திட்டம் போதா துங்க
  சாரா யத்தை ஒழிக்க!
வெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்
  வெற்றி வந்தி டாது! 
திட்ட வட்ட மாகச் சொல்றேன்
  திருந்தும் வழியும் ஒன்றே!
பட்ட துன்பம் சொல்லும் ஜனங்க
  பள்ளி எல்லாம் சென்று
சுட்டிப் பசங்க மனத்தில் உண்மை
  சுட்டுப் போட வேணும்
குட்டிப் பசங்க வீடு போயி
  குடியின் கேடு சொன்னால் 
புட்டி போடும் வீடும் மாறும்
  புள்ளை கெஞ்சல் கேட்டே!

                                                 19-10-15

 3. தண்ணீரின் கண்ணீர்

கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க
வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.
வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.
விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: மானுடனே! 
பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?
அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?
ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;
நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 
பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!
மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “
                 
                    26 /10/15 


4. பெற்ற மனம்

பெண்ணின் மணமென்னும் போதினிலே அந்தப்
  பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ தாலி
  கட்டி யவனுடன் செல்வதனால்.

மைந்தன் திருமணம் ஆனபின்பும் தாய்
  தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே பிள்ளை
  வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.

உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் இந்த
  உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ ஒரு
  தாபத் தனிமை இருட்டினிலே
                        
                           02/11/15

5.சினிமாவில் வெற்றி

சினிமாவில் வெல்லுவழி ஒன்றே
  சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே
அஞ்சாமல் திரைகடல் ஓடு
  அங்குள்ள திரவியத்தைத் தேடு
என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!
  இவ்வழியில் உறுதியாய் நில்லு!
சுயமாக யோசித்தல் எதற்கு?
  துட்டொன்றே போதும் நமக்கு!
பிறமொழிகள்திரைக்கடலில் தேடு!
  பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!
கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!
  காசுவந்து குவியும்கண் கூடு!
                09-11-15 

=============
நன்றி: http://www.dinamani.com/kavithaimani/  ]


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதைகள்

திங்கள், 16 நவம்பர், 2015

தமிழ்வாணன் -1

கிழக்காசியப் பேரெழுத்தாளர்

விக்கிரமன் 


சாவி ‘தினமணி கதிர்’ ஆசிரியராக இருந்தபோது, ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தமிழ்வாணன் சொன்னது:
“ தமிழகத்தில் எழுத்தாளர்களிடையே உள்ளத்தில் மிகுந்து இருப்பது
பொறாமை தான். தான் எழுதி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைப்பதை விட அவனை அமுக்குவது எப்படி என்பது தான் அதிகமான எண்ணமாக இருக்கிறது. 
என் படத்தை என் பத்திரிகையில் தவிர வேறு யாரும் போடுவது கிடையாது. சாவி அவர்கள்தான் முதன் முதலாக என்னுடைய படத்தை ‘தினமணி கதிர்’ அட்டையில் போட்டார்.
அவர் ஒருவரால் தான் அப்படிச் செய்ய முடியும்.”

கலைமாமணி விக்கிரமன் 'இலக்கியப் பீட'த்தில் ( டிசம்பர் 99)
இதழில்)  தமிழ்வாணனின் படத்தை அட்டையில் வெளியிட்டு,  அவரைப் பற்றி ஓர் அருமையான  கட்டுரையும் எழுதினார். இதோ அது! 

[ நன்றி : இலக்கியப்பீடம் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
விக்கிரமன்
தமிழ்வாணன்திங்கள், 9 நவம்பர், 2015

சங்கீத சங்கதிகள் - 58

மங்கள தீபாவளி 

பாபநாசம் சிவன் 


சுதேசமித்திரன் பத்திரிகையின்  தீபாவளி மலர்களில்   60 -களில்  தவறாமல் பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். நான்கு பாடல்களை இங்கே முன்பே இட்டிருக்கிறேன். ( கீழிணைப்புகளைப் பார்க்கவும்.) 

மேலும் இரு பாடல்கள்  இன்று எனக்குக் கிட்டின. 1962, 1966-இல் வெளியான பாடல்கள்.  இதோ!
[ நன்றி: சுதேசமித்திரன் ] 


தொடர்புள்ள பதிவுகள்:வெள்ளி, 6 நவம்பர், 2015

கல்கி -11

கல்கியின் நகைச்சுவை -4 

( தொடர்ச்சி )


முந்தைய  பகுதிகள்:

நகைச்சுவை -1

நகைச்சுவை -2

நகைச்சுவை-3( நிறைவு )

[ நன்றி : கல்கி; ஸ்ரீநிவாசன் ராமமூர்த்தி ]

தொடர்புள்ள பதிவுகள் :

'கல்கி’ கட்டுரைகள்

கல்கியைப் பற்றி . . .