வெள்ளி, 20 நவம்பர், 2015

தினமணிக் கவிதைகள் -1

மழை(1) முதல் சினிமா(5) வரை! 

தினமணி நாளிதழ் இந்த வருட காந்தி ஜெயந்தி ( 02/10/15) அன்று   கவிதைமணி என்ற ஒரு பகுதியை தங்கள் இணைய தளத்தில் தொடங்கியது. 


வாராவாரம் கொடுக்கப்படும் தலைப்புக்கேற்ப எழுதப்படும் கவிதைகளில் சில  தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு திங்களன்றும் அப்பகுதியில் வெளியாகின்றன.

அப்படி அண்மையில் வெளியான என் சில கவிதைகள்.
  
1. மழை

யாருக்கு வேண்டுமய்யா இந்த அடைமழை?
பாரதமே நாறுதே பாதிப்பால்! -- கோரிக்கை
வாய்த்துநம் நாட்டினில் வந்திடா தோவறட்சி?
ஓய்ந்திடுமோ ஊழல் மழை?

                                                                                        12-10-15
2.மது ஒழிப்பு

குட்டிச் சுவராய்ப் போகும் அய்யா
  குடியில் மூழ்கும் நாடு!
சட்ட திட்டம் போதா துங்க
  சாரா யத்தை ஒழிக்க!
வெட்டிப் பேச்சு மேடைப் பேச்சால்
  வெற்றி வந்தி டாது! 
திட்ட வட்ட மாகச் சொல்றேன்
  திருந்தும் வழியும் ஒன்றே!
பட்ட துன்பம் சொல்லும் ஜனங்க
  பள்ளி எல்லாம் சென்று
சுட்டிப் பசங்க மனத்தில் உண்மை
  சுட்டுப் போட வேணும்
குட்டிப் பசங்க வீடு போயி
  குடியின் கேடு சொன்னால் 
புட்டி போடும் வீடும் மாறும்
  புள்ளை கெஞ்சல் கேட்டே!

                                                 19-10-15

 3. தண்ணீரின் கண்ணீர்

கலசத்தில் நீர்நிரப்பிக் கடவுளை உள்ளழைக்க
வலிமைமிகு மந்திரங்கள் மனமொன்றிச் சொல்லிநின்றேன்.
வழிபாடு முடியுமுன்னே வந்துநின்றாள் நீர்த்தேவி.
விழிகளிலே நீர்பொங்க விளித்தனள்: மானுடனே! 
பரிசுத்தம் வேண்டாமா பரிபூர்ண பலன்கிட்ட?
அருகதையும் எனக்குளதோ ஆண்டவனை உள்ளிறக்க?
ஆறுகளில் சேர்த்துவிட்டாய் ஆலைகளின் கழிவுகளை ;
நாறுதே மாசுகளால் ஞாலத்துச் சூழலெல்லாம்! 
பூதமென்னுள் நஞ்சிட்டுப் பூதனையாய் மாற்றிவிட்டாய்!
மாதவனும் எனையுறிஞ்சி மறுபிறவி தருவானோ? “
                 
                    26 /10/15 


4. பெற்ற மனம்

பெண்ணின் மணமென்னும் போதினிலே அந்தப்
  பெற்றோரின் உள்ளம் கலங்குவதேன்?
கண்ணின் மணியாய் வளர்ந்தவளோ தாலி
  கட்டி யவனுடன் செல்வதனால்.

மைந்தன் திருமணம் ஆனபின்பும் தாய்
  தந்தையர் நெஞ்சம் கலங்குவதேன்?
மந்திரம் போட்டவள் சொற்படியே பிள்ளை
  வாழ்ந்திடச் செல்லும் தனிக்குடியால்.

உள்ளம் இரண்டையும் ஒன்றிணைக்கும் இந்த
  உன்னதக் கல்யாண தீபவொளி
தள்ளாடும் பெற்றோரை ஆழ்த்திடுமோ ஒரு
  தாபத் தனிமை இருட்டினிலே
                        
                           02/11/15

5.சினிமாவில் வெற்றி

சினிமாவில் வெல்லுவழி ஒன்றே
  சிந்தித்துக் கடைப்பிடிப்பாய் இன்றே
அஞ்சாமல் திரைகடல் ஓடு
  அங்குள்ள திரவியத்தைத் தேடு
என்றவ்வை பொன்மொழியைச் சொல்லு!
  இவ்வழியில் உறுதியாய் நில்லு!
சுயமாக யோசித்தல் எதற்கு?
  துட்டொன்றே போதும் நமக்கு!
பிறமொழிகள்திரைக்கடலில் தேடு!
  பிடித்ததற்குத் தமிழ்வேடம் போடு!
கலகலப்பாய்ப் பாடல்கள் போடு!
  காசுவந்து குவியும்கண் கூடு!
                09-11-15 

=============
நன்றி: http://www.dinamani.com/kavithaimani/  ]


தொடர்புள்ள பதிவுகள் :

கவிதைகள்

7 கருத்துகள்:

usharaja சொன்னது…

Very nice poems

Los Angeles Swaminathan சொன்னது…

கவிதை மணியும் உரக்க ஒலிக்க
கவிதை எழுதிக் கலக்கு (;-)

Unknown சொன்னது…

வாழ்வியல் சிந்தனைகள்
வரிகளில் வடிவங்கள்
தினமணியில் காணும்
திங்கள் கவிதைமணி
எங்கள் பாவலர்மணி
திங்கள் திருத்தொண்டு

S.V.V. சொன்னது…

கவிதை என்றால் பிடி ஓட்டம் என்கிற வர்க்கத்தைச் சார்ந்தவன் நான்...

ஒன்று முதல் ஐந்து வரையிலான கவிதைகளை ஏதோ ஓர் இனம்புரியா உணர்வுடனே வாசித்தேன்... எனக்குப் பிடித்திருக்கிறது....

கவிதைகளை ரசிக்கவியலா மனங்கொண்ட என்னையும் ஈர்த்திருக்கின்றன உங்கள் வரிகள்....

இத்தளத்திற்கு என்னைத் தற்செயலாகவாவது கொண்டுவந்து சேர்த்த எனது அபிமான எழுத்தாளர் தேவன் அவர்களின் புகழ் மென்மேலும் ஓங்கட்டும்!

Pas S. Pasupathy சொன்னது…

@S.V.Venkateshh நன்றி. தேவன் வந்துகொண்டே இருப்பார்!

KAVIYOGI VEDHAM சொன்னது…

மிக மிக அட்டகாசம் நண்பரே உம் கவி அனைத்தும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். வாழ்க உம் உண்ர்ச்சி, வேதம் கவியோகி

பெயரில்லா சொன்னது…

தெள்ளிய​ நடையிலுள்ளக் கருத் தினை
அள்ளித் தருவார் கவிதையாகவே
பள்ளம் பாய்ந்த​ பழம் பண்பு வேரில்
கிளர்ந்த​ பசுமையெனவே, பசுபதி!