திங்கள், 19 டிசம்பர், 2016

சி.சு.செல்லப்பா -2

"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1
வல்லிக்கண்ணன்


டிசம்பர் 18. சி.சு. செல்லப்பாவின் நினைவு தினம்.

1
தமிழ் எழுத்துலகில் மணிக்கொடி எழுத்தாளர்கள்' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு.செல்லப்பாவும் ஒருவர் ஆவார்.

- 1930களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தரம் சேர்க்கவும், தமிழ் சிறுகதையை உலக இலக்கியத்தரத்துக்கு உயர்த்தவும் இலட்சிய வேகத்தோடு எழுத்துப்பணியில் ஈடுபட்டார்கள். இளைஞர்கள் சிலர். அவர்களுக்கு 'மணிக்கொடி என்ற பத்திரிகை களம் அமைத்துக் கொடுத்தது.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ். ராமையா, பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), ந. சிதம்பரசுப்பிரமணியன், சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோர் 'மணிக்கொடியில், அவரவர் ஆற்றலையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்படலாயினர்.

பின்னர் தோன்றிய மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகைகளுக்கு 'மணிக்கொடி ஒரு முன்னோடியாக விளங்கியது. குறைவான காலமே அது பிரசுரம் பெற்றிருந்தாலும், எழுத்துலகத்தில் அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மணிக்கொடி எழுத்தாளர்கள் சிலரது எழுத்துக்கள் பின்னர் கதை எழுத முற்பட்ட இளைஞர்களை வெகுவாக பாதித்தன.

மணிக் கொடி எழுத்தாளர்கள் வாழ்க்கை பற்றி ஆழ்ந்த நோக்குடன் புதுமையும் கனமும் சேர்ந்த, உணர்ச்சிகரமான சிறுகதைகளைப் படைத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரது நோக்கும், எழுத்துப் பாணியும், கதைகள் எழுதுவதற்கு எடுத்துக்கொண்டவிஷயங்களும் வித்தியாசமானவையாக இருந்தன.

இலக்கிய உணர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டி ருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வையே இலக்கியத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் பலவிதமான சிரமங்களுக்கும் சோதனைகளுக்கும் அவர்கள் உள்ளானார்கள். எனினும், சாதனைகள் படைப்பதில் அவர்கள் ஊக்கமும், உற்சாகமும் காட்டினார்கள். –

அவர்களில் சி.சு. செல்லப்பா விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தவர். தனித்தன்மை உடைய சிறுகதைகள் படைத்துக் கவனிப்புப் பெற்ற செல்லப்பா நாவல், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை, பதிப்புத்துறை என்று பலவகைகளில் தனது ஆற்றலையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி பாராட்டுதற்குரிய சாதனைகள் புரிந்திருக்கிறார். சதாகாலமும் அவருடைய சிந்தனையும் பேச்சும் தமிழ் இலக்கியம் குறித்ததாகவே இருந்தன. தீவிர வேகத்துடன் முனைந்து செயலாற்றி இலட்சிய வாதியாகவும் அவர் விளங்கினார்.

இப்படிப் பலதுறைகளில் அவரது பங்களிப்பும் சாதனைகளும் பெரும் அளவில் இருப்பினும், சி.சு. செல்லப்பா என்றதும் ஒரு இலக்கிய வாசகனுக்கு நினைவுக்கு வருவது எழுத்து பத்திரிகை தான். அவ்வளவுக்கு அவருடைய எழுத்து இதழ் தனிச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டது ஆகும்.

2
'என் அப்பா வழியில் எனது ஊர் சின்னமனூர். என் தாய் வழியில் என் சொந்த ஊர் வத்தலக்குண்டு. இரண்டு வகையில் பார்த்தாலும் நான்மதுரைஜில்லாக்காரன். ஆனாலும் திருநெல்வேலி ஜில்லா மீது எனக்கு தனி அபிமானம் உண்டு. என் தகப்பனார் பொதுப்பணித்துறை (பப்ளிக் ஒர்க்ஸ் டிப்பார்ட்மெண்ட்) ஓவர்சீயர் ஆக வேலைபார்த்தது அங்கே தான். தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் அமைத்து துத்துக்குடிக்குத்தண்ணிர் கொண்டு செல்லும் பணியை என்.அப்பாதான்செய்துமுடித்தார். பல வருடங்கள் நாங்கள் திருநெல்வேலி ஜில்லாவின் பல ஊர்களில் வசித்தோம். என் ஆரம்பப்படிப்பு பாளையங்கோட்டையில் தான் நடந்தது. பிறகு துரத்துக்குடியில் தொடர்ந்தது. தாமிரபரணியை ஒட்டி அமைந்துள்ள முறப்பநாடு, அகரம் கிராமங்களில், நாங்கள் வசித்தோம். காலையில் அப்பாவும் நானும் ஆற்றில் குளித்ததும், அநேக நாட்கள் அப்பா ஆற்றைக்கடக்க என்னை தோளில் தூக்கிக்கொண்டு அக்கரையில் பணிகள் நடக்கும் இடத்துக்கு இட்டுச்சென்றதும் என்னால் மறக்க முடியாத அனுபவங்கள்.

இதற்கெல்லாம் மேலாக, நான் சிறுகதை எழுத்தாளன் ஆக மலர்ச்சி பெற்றதும், என் கதைகள் சுதந்திரச்சங்கு, மணிக்கொடி இதழ்களில் வரத் தொடங்கியதும் நான் பூரீ வைகுண்டம் ஊரில் வசித்த நாட்களில்தான். அதனாலே நானும் திருநெல்வேலி எழுத்தாளர்களோடு சேர்ந்தவன்தான்; தாமிரபரணித்தண்ணிர்தான் என்னுள் இலக்கிய உணர்வையும் எழுத்தாற்றலையும் ஊட்டி வளர்த்தது என்று நானும் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும்.

இப்படி சி.சு. செல்லப்பா என்னிடம் அடிக்கடி சொல்லி யிருக்கிறார்.

 ஆயினும், அவருக்கு தந்தை வழியில் சொந்தமான சின்னமனூரை விட, தாய் வழிப்பாட்டி ஊரான வத்தலக்குண்டு பேரில்தான் அதிகமான பற்றுதலும், பிரியமும் இருந்தது. அதனால் வத்தலக்குண்டு ஊரில் தோன்றிப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான வல்லிக்கண்ணன் பி.எஸ். ராஜமய்யர், பி.எஸ். ராமையா ஆகியோரிடம் விசேஷமான அபிமானமும் அவருக்கு இருந்தது.

இலக்கியத் தகுதி பெற்ற நாவலான கமலாம்பாள் சரித்திரம்: எழுதிய பி.எஸ். ராஜமையரின் பெருமையை வத்தலக்குண்டு ஊர்வாசிகள் சரிவர அறிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் செல்லப்பாவுக்கு உண்டு. எனவே, நாவலாசிரியரின் பெருமையை சொந்தஊர்க்காரர்களுக்கு உணர்த்துவதற்காக, ஒருவருடம் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்தார் செல்லப்பா. பெயர் பெற்ற எழுத்தாளர்கள் பலரை சென்னையிலிருந்து வத்தலக்குண்டுக்கு வரவழைத்து, ராஜமய்யர் பெருமைகளையும் சிறப்புகளையும் பேசும்படி செய்தார். நா. பார்த்தசாரதி, வ.க, , தி.க. சிவசங்கரன், கோமல் சுவாமிநாதன், நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் கலந்து கொண்ட அவ்விழா முக்கியத்துவம் பெற்றதாயிற்று. ராஜமய்யர் வாழ்ந்த இல்லம்' என்ற கல்வெட்டும் ஒரு வீட்டில் பதிக்கப்பட்டது.

3
செல்லப்பாவுக்கு அவருடைய தகப்பனார் மீது மிகுந்த பற்றுதலும் பாசமும் பெருமையும்இருந்தன. அவருள் தேசபக்தியை, காந்தி ஈடுபாட்டை, சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்கிற உணர்வை தகப்பனார் எப்படியெல்லாம் தன்னுடைய சின்ன வயசிலிருந்தே வளர்த்து வந்தார் என்பதை செல்லப்பா அடிக்கடி சொல்வது உண்டு. ஒவ்வொரு சந்திப்பின் போதும் குறிப்பிட்டு மகிழ்வார். அவருடைய இறுதிக்காலத்திலும் உள நெகிழ்ச்சியோடு என்னிடம் நினைவுகூர்ந்தார். அவரது மகத்தான நாவலான சுதந்திர தாகம் மிலும், 'என் சிறுகதைப்பாணி நூலிலும் இவ் உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

1974ல் எழுத்து பிரசுரம் களை கல்லூரிகளிலும் மேல் நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்வதற்காக செல்லப்பாவும் நானும், இரண்டு மாதகாலம், திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றினோம். துத்துக்குடியில் நாங்கள்.அப்படி அலைந்த போது, அங்கே சிறுவயதில் அவர் கல்வி கற்ற பள்ளிக்கூடத்தை மகிழ்ச்சிப் பெருக்கோடு எனக்குக்காட்டினார். அவர்காலத்திய ஆசிரியர்களைப் பற்றியும் சொன்னார்.

பின்னர், தாமிரபரணி ஆற்றங்கரை ஊர்களான முறப்ப நாடு, அகரம் என்ற இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்றார். துத்துக்குடி குடிநீர் குழாய்திட்ட வேலைக்காக அவருடைய அப்பா அக்கிராமங்களில் தங்கிப் பணிபுரிய நேர்ந்தது. தாமிரவர்ணி ஆற்றில் கிணறு வெட்டி, இருபத்து நாலு மைல் தூரத்துக்குக் குழாய் போடும் வேலை அவர் தந்தையின் மேல்பார்வையில் தான் நடைபெற்றது. அந்தக்காலத்தில் அவர்கள் வசித்த வீடு, சுற்றிய இடங்கள், பொதுப் பணித் துறையில் அப்பா நிறைவேற்றிய பணிகள், வெட்டப்பட்ட கிணறு, அங்கு குடிநீர்த்திட்டத்துக்காக அமைக்கப்பட்டபெரிய இரும்புக்குழாய்களை எல்லாம் செல்லப்பா உற்சாகத்துடன் எனக்குக் காட்டினார். தனது சிறுபிராய நினைவுகளில் வாழ்ந்து அவர் சந்தோஷம் கண்டார். அந்நாட்களில் குடியிருந்த வீட்டின் முன் நெடுநேரம் நின்று தனது நினைவுகளை உணர்ச்சி பரவசத்துடன் பேசினார்.

 ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்த போதுதான் சி.சு. செல்லப்பா எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற உந்துதல் பெற்று கதை எழுதத்தொடங்கினார். அவர் எழுதிய முதல் கதையை சுதந்திரச் சங்கு வாரப் பத்திரிகைக்கு அனுப்பினார். அதன் ஆசிரியர் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு பெயர் பெற்றிருந்த சங்கு சுப்பிரமணியன். அவர் அந்தக் கதையை வரவேற்று ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கதையைத் திருத்தி சங்கு இதழில் வெளியிட்டார். அவருடைய கடிதமும், புதிய எழுத்தாளனுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டிய செயலும் தன்னுள் எத்தகைய கிளர்ச்சி ஏற்படுத்தியது, மேலும் மேலும்எழுத எப்படி உற்சாகம் தந்தது என்பதை செல்லப்பா பலமுறை சொல்லியிருக்கிறார். இதை என் சிறுகதை பாணி நூலில் விரிவாகவே பதிவு செய்துள்ளார்.

 என்னை சிறுகதையாளனாக ஆக்கி வெளிப்படுத்தியவர் சங்கு சுப்பிரமணியன். அவரை நான் இன்னும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:



2 கருத்துகள்:

RSR சொன்னது…

https://sites.google.com/site/rsrshares/home/charunivedhitha-on-ci-su-chellappaa
Great article on si.su.chellappa by Charu Niveditha

Unknown சொன்னது…

சி.சு.செல்லப்பா அவர்களின் படைப்புகளுக்கு புனருத்தாரணம் என்ற முறையில், சில காரியங்கள் நடக்கின்றன, அவரது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சியினால். திரு.பென்னேஸ்வரன் எடுத்த குறும்படமும் வேளிவறும். - குங்குமம் இதழ். 12 11 202