செவ்வாய், 10 மார்ச், 2015

எஸ். எஸ். வாசன் - 2

விகடனின் மழலைப் பருவம்! 


மார்ச், 10, 1903எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 

அவர் நினைவில் ஆனந்த விகடனின் தொடக்க கால இதழ்களிலிருந்து சில துளிகளை இங்கிடுகிறேன்.  
1926- பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழ்ப் புல்வர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையைத் துவக்குகிறார்.    மாதம் ஒரு முறை வருகிறது விகடன். ஆண்டுச் சந்தா இரண்டு ரூபாய். 
விகடனின் முதல் இதழின் முதல் பக்கம் இதோ:

( விகட விநாயகர் துதி கந்தபுராணத்தின்  காப்புச் செய்யுள் ) 

அந்த வருடம் விகடனில் வந்த ஒரு “விகட சம்பாஷணை”:
=================

முத்தண்ணா: அப்பா சுப்பண்ணா, ஊரில் என்ன விசேஷம்?

சுப்பண்ணா: ஓர் ஆச்சரியம் உண்டு. அதாவது, இறந்துபோனவர்கள் மறுபடி திரும்பி வருகிறார்கள்.

முத்தண்ணா: எப்போ! எப்போ!! எங்கே?

சுப்பண்ணா: ஓட் போடும் போலிங் ஸ்டேஷனில்தான் 
==================
.  அந்தக் காலத்தில் பலரும் வி.பி.பி. முறையில் பத்திரிகையை அனுப்பச் சொல்வர். ஆனால், வி.பி.பி. வந்ததும், பலர் மனம் மாறி, இரண்டு ரூபாய் தராமல் விகடனைத் திரும்பி அனுப்பி விடுவார்கள். அப்படிச் செய்பவர்களை ஏசி, ‘விகடகவி’ வைத்தியநாதய்யர் ஏதாவது எழுதுவார். காட்டாக, 1926- நவம்பர் இதழில் ஓர் ஔவையார் பாட்டின் பகடி:
கொடியது கேட்கின் கூறுவேன் கேளீர்
கொடிது கொடிது கூத்தி கொடிது
அதனிலுங் கொடிது அற்பர்கள் நேயம்
அதனிலும் கொடிது அருந்துதல் மதுவை
அதனிலும் கொடிது அன்பிலார் நேயம்
அதனிலும் கொடிது ஆனந்த விகடனை
அனுப்பச் சொல்லி அன்றே திருப்புதல்! 

நிதிப் பிரச்சினையால் 1927- டிசம்பர் விகடன் இதழ் வெளிவரவில்லை!
1928-ஜனவரியில் விகடனைத் தனக்கு விற்றுவிடும்படி கேட்டுக்கொள்கிறார் வாசன் ( டி.எஸ்.சீனிவாசன்) . அப்போது வாசன் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தரும் வேலையில் இருந்தார். பத்திரிகையின் வியாபார விஷயங்களை ‘ஆனந்த போதினி’ அதிபர் முனுசாமி முதலியாரிடமும், எழுத்துத் தொடர்புள்ள விஷயங்களைப் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பரிடமும் வாசன் அறிந்து வைத்திருந்தார்.

1928-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில். பூதூர் வைத்தியநாதய்யரிடமிருந்து ஆசிரியர் வாசன்  கைக்கு ஆனந்த விகடன் பத்திரிகை மாறுகிறது,  அப்போது முக்கியமாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனந்த விகடன் தலைப்பு கீழே உள்ளது போல் அலங்கார எழுத்துக்களோடு, இடையில் பாரத மாதாவின் உருவம் தாங்கி வரத் தொடங்கியது. முன்பு தலைப்பில் இருந்த 'குலை - காய்' என்பவை  'மாலை - மணி' என்று மாற்றப்பட்டன. 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே' என்னும் தாயுமானவரின் ’பராபரக் கண்ணி’ வரிகள் விகடனின் குறிக்கோளாகியது. ( 1980-இல் நடந்த விகடனின் பொன்விழாவில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி இப்பாடலின் சில கண்ணிகளைப் பாடினார் என்பது என் நினைவு.) 
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்ட முதல் வணிக விளம்பரம் ஆசிரியர் வாசனுடையதுதான்! ” இல்வாழ்க்கையின் ரகசியங்கள்” என்ற புத்தகத்தின் விளம்பரம் தான் அது! 
விகடனுக்கென ஓர் அச்சகமும் தொடங்குகிறார் வாசன். 48-இலிருந்து 64-பக்கங்களாகிறது விகடன். ஆண்டு சந்தா ரூபாய் இரண்டை ஒன்றாய்க்   குறைக்கிறார் வாசன்.
‘விகடன் சம்பாஷணைகள்’ என்ற தலைப்பில் அதுவரை வந்துகொண்டிருந்த துணுக்குகள் ‘ விகடன் பேச்சு’ என்ற தலைப்பில் வரத் தொடங்கின. இதோ ஒரு காட்டு:
==========
ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட வந்தவர்:| என்ன ஐயா, இந்தப் பாயசத்தில் ஈ விழுந்திருக்கிறதே!
ஹோட்டல்காரன்:| அதனால் என்ன குறைந்து போய்விட்டது? இந்த சிறிய ஈ எவ்வளவு பாயசத்தைக் குடித்திருக்க முடியும்?
=====

 'இந்திர குமாரி' என்னும் தொடர்கதை 1930 பிப்ரவரி இதழில் தொடங்குகிறது. இதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். ஆனால், அப்போது பெயர் குறிப்பிடப்படவில்லை. கதைகளுக்குப் படங்களும் இல்லை.
________________________________________
 இந்திரகுமாரி
1-வது அத்தியாயம்
 மாய மனிதன்
அந்த மின்சார மாயவன் சிவாஜியைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்னும் விஷயம் தென்னாடெங்கும் ஆச்சரியம், அச்சம், அவமானம், ஆர்ப்பாட்டம் முதலியனவை யுண்டாக்கித் திரள்திரளாகக்கூடும் ஜனங்களுக்குப் பிரமையைக் கொடுத்தது. மகாத் தந்திரமும், அதிகூரிய புத்தியுடைய அந்த தைரியசாலி சிவாஜியின் செயல்களைக் கண்டும் கேட்டும் ஜனங்கள் மயிர்க்கூச்சலெறிந்தனர். சிலர் அவனது ஆழ்ந்த புத்திக்காகப் பெருமை பேசினர்; சிலர் அவன் மனிதனோ அல்லது தெய்வலோகத்திலிருந்து குதித்திறங்கிய இந்திர ஜாலனோவென்று சந்தேகப்பட்டுக் கிசுகிசுவென்று பேசிக் கொண்டனர்; இன்னுஞ்சிலர் அவன் சுயநலங் கருதியே தனது அதி சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறானென்று 'சூ' கொட்டிப்பேசினர்; பலர் இதை ஆமோதித்தனர்; ஆனால் பெரியோரும் புத்திசாலிகளும் அல்லவென்றார்ப்பரித்தனர்  ...
[ நன்றி : விகடன் ’காலப்பெட்டகம்’, விகடன் பவழவிழா மலர், “பொன்னியின் புதல்வர்” (சுந்தா) ] 
தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

Unknown சொன்னது…

அருமையான பதிவு.

கள்ள ஓட்டு,ஈ ஜோக்குகள் ரொம்ப காலமாய்ப் பறந்து வருகின்றன.

"லட்சத்து இருவாதாயிரம் ஓட்ல ஜெயிச்சது
அதிசயம் இல்லியா"

"ஆமாம். தொகுதி ஜனத்தொகையே எழுவதாயிரம்தான்"
==============

"பாசயத்தில ஈ கிடக்குய்யா"
"சார் அது ஈ இல்ல, சின்னக் குளவி"
====================================
"அய்யோ பாயசத்தில ஈ கிடக்கே"
"பயப்படாதீங்க சார். பாயசத்துக்குள்ள கீழ‌
இருக்கிற தவளை வெளியே வந்து
டப்குனு ஈயை முழுங்கிடும்"