புதன், 30 மார்ச், 2016

ஆனந்தரங்கம் பிள்ளை

ஆனந்தரங்கம் பிள்ளை

 மார்ச் 30. ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம். 


அவரைப் பற்றியும், அவருடைய நாட்குறிப்பைப் பற்றியும் வந்த இரண்டு கட்டுரைகள் இதோ ! 


முதலில் வெங்கடேசன் என்பவர் தினமணியில் எழுதிய கட்டுரை:
===== 

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்குப் பெரிய செல்வந்தர். தென்னிந்திய அரசியலில் சாணக்கியராகத் திகழ்ந்த அவர் "ஆனந்த புரவி" எனும் கப்பலுக்குச் சொந்தக்காரர். வெளிநாட்டு வணிகங்களுக்கு இக்கப்பலை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான்.

பிறப்பு: சென்னையில் உள்ள பெரம்பூரில் 30.03.1709 அன்று பிறந்தார். மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.

இயற்பெயர்: ஆனந்தரங்கப் பிள்ளை

பெற்றோர்: திருவேங்கடம்

தொழில்: வணிகம், அரசியல், மொழிபெயர்ப்பாளர்

மொழிப்புலமை: தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், போர்ச்சுகீசியம் எனப் பல மொழிகளை அறிந்தவர்.

பணி: டியுப்லெக்ஸ் பிரபு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747 இல் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

1736 செப்டம்பர் 6ம் தேதி தொடங்கப்பட்ட நாள்குறிப்பு 1760 செப்டம்பர் 6ம் தேதியுடன் முடிகிறது.

இந்த நாள்குறிப்பு முழுவதும் ஒரே நடையில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

1846 ஆம் ஆண்டு கலுவா மோம்பிரன் என்ற தமிழ் அறிந்த பிரெஞ்சுக்காரர் ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகையில் நுழையும் போதுதான் அவரது நாள்குறிப்பேடுகள் மானிடக் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

இவர் அரசியலிலும், வணிகத்திலும் தீவிரமாக ஈடுபட்ட காலங்களில் எழுதப்பட்ட நாள்குறிப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டு கால தமிழக, இந்திய, உலக அரசியல், பண்பாட்டு, சமயச் செய்திகளை வெளிப்படுத்தி உள்ளன.

மோம்பிரன் தான் கண்டுபிடித்த நாள்குறிப்பை தன் சொந்த உபயோகத்துக்காக ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார். பின்பு தமிழில் இருந்தவற்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னால், பிரெஞ்சு அரசின் கீழ் புதுவையில் செயல்பட்ட எதுவாத் ஆரியேல் என்பவர், மூல நாள்குறிப்பை பிரதி எடுத்து பாரீஸ் தேசிய நூலகத்தில் சேர்த்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் சென்னை ஆவணக் காப்பகத்தின் காப்பாளராக இருந்த ஹெச். டாட்வெல்லின் உதவியோடு நாள்குறிப்பு முழுதும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அது 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த வேலை 1917ல் தொடங்கப்பட்டு 1928ல் முடிக்கப்பட்டது.

ஆனந்தரங்கப் பிள்ளை பல மொழிகள் அறிந்திருந்தும், தனது நாள்குறிப்பை தாய்மொழியான தமிழில்தான் எழுதினார் என்பதில் தமிழ்த்தாய்க்குப் பெருமையே. இருந்தும் அவரது நாள்குறிப்பு பிரெஞ்சு மொழியில்தான் முதன்முதலில் மக்களுக்குப் படிக்கக் கிடைத்தது. பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது.

நாள்குறிப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழில் கிடைத்தது. அதுவும் முழுமையாக இல்லை.

அன்று வரை நாள்குறிப்பு தமிழில் கிடைக்காதது குறித்து வருத்தப்பட்ட புதுவையில் உள்ள பிரெஞ்சுத் துணைத் தூதரகம் முழு முயற்சி எடுத்து 1948 ஆம் ஆண்டு வேலையைத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதன்பின் அந்த அச்சுவேலை கிடப்பில் போடப்பட்டிருக்க வேண்டும்.

தமிழில் படிக்க ஆனந்தரங்கப் பிள்ளை நாள்குறிப்பு கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புண்ணியம் கட்டிக் கொண்டது.

1998ம் ஆண்டு நாள்குறிப்பின் முதல் எட்டு தொகுதிகளை ஒன்பது நூல்களாகப் பதிப்பித்தது. கடைசி நான்கு தொகுதிகளை 2005ல் பதிப்பித்து 2006ல் வெளியிட்டது. ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள்குறிப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் அது விலை மதிப்பில்லா அரிய பொக்கிஷம் என்று அறிவர்.

கலுவா மோம்பிரன் மட்டும் ஆனந்தரங்கரின் மாளிகை அழகை மேம்போக்காக இரசித்துக் கொண்டு சென்றிருப்பாரேயானால், இந்த நாள்குறிப்பு மக்கி மண்ணாய்ப் போயிருக்கும். தமிழ்த்தாயின் மகுடத்தில் ஒரு வைரக்கல் குறைந்து போயிருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டுப் புதுச்சேரியின் வரலாறு இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடந்திருக்கும்.

புதுவை மாநில ஆளுநர்களில் சக்கரவர்த்தி என்று குறிப்பிடப்படும் டூப்ளேயின் வாழ்க்கை வரலாற்றில் நமக்குப் பல அத்தியாயங்கள் கிடைக்காமலே போயிருக்கும். 1741 மார்ச்சில்,

    மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது

    இலஞ்சம் கொடுத்துப் பணி பெறுவது

    கண்ட இடங்களில் மலம் கழிப்பவர்க்குத் தண்டனை தருவது

    கிறிஸ்தவ கோயிலில் தாழ்த்தப்பட்டவருக்கும் ஏனையவர்க்கும் தனித்தனி இடம் ஒதுக்கியதால் பிரச்னை ஏற்பட்டது

    பிரமாண்டமாக நடந்த திருமண நிகழ்ச்சிகள், சிறப்பு நிகழ்ச்சிகள்

    சாதிச் சண்டைகள் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட விசித்திரமான தண்டனைகள்

    வணிகம் பற்றிய ஏராளமான செய்திகள்

அரசியல் சதுரங்கத்தில் ஆனந்தரங்கர் நகர்த்திய காய்கள் எவ்வாறு வெற்றியைத் தந்தன முதலிய பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் துவிபாசி பதவி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆளுநர் கூடவேயிருந்து அரசாங்க நடப்புகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடையவர் அவர். அரசாங்கம் என்று ஒன்றிருந்தால், அதன் இரகசியம் என்று பல இருக்கும். இவற்றை வேறு யார் காதிலும் போடக்கூடாது என்ற எண்ணத்தோடு, தன் குறிப்பேடுகளுக்கு மட்டும் கூறியிருக்கிறார் ஆனந்தரங்கர்.

ஆனந்தரங்கரின் காதோ எலிக்காது. கண்ணோ கருடனின் கண். இந்த நாள்குறிப்பின் உயிர்நாடியே இவைகள்தான். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு அது "டூப்ளே கால" இந்தியாவையும் படம்பிடித்துக் காட்டுகிறது.

தம் நாட்குறிப்புகளுக்கு தினப்படிச் செய்திக்குறிப்பு. சொஸ்த லிகிதம் என்றே பெயரிட்டார்.

அரசியல் சூழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள், கலகங்கள், முற்றுகைகள், கப்பல் போக்குவரவு, வாணிபநிலை, முகல் மன்னர் நடத்தை, நவாப் தர்பார், ஆங்கிலேயரின் போக்கு, பிரெஞ்சுக்காரரின் அரசாளும் முயற்சி, அக்கால மக்கள் பட்டபாடு, அந்நியர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆர்க்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ஐதராபாத், தில்லி முதலிய இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், டூப்ளே, டூப்ளே மனைவி, இலபூர்தோனே, பராதி, இலாலி தொல்லாந்தால் போன்றவர்களின் வீரப் பராக்கிரமங்கள், அவர்களின் உரையாடல்கள் ட்யுப்லெக்ஸ் பிரபு, இல்பூர்தோனே, பாரதி, தாமஸ் ஆர்தர்(பேரோன்-டி-தொல்லென்டால்), முதலிய பிரெஞ்சுத் தலைவர்களின் தன்மை, அக்காலப் பிரமுகர் வரலாறுகள், நீதியுரைகள், ஜோதிட குறிப்புகள், புலமையளவு முதலிய பலவற்றையும் தன் நாள்குறிப்பில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் புரியும் வண்ணம் தமிழிலே எழுதப்பட்டிருக்கிறது.

ஆனந்தரங்கத்தின் நாட்குறிப்பு அக்காலப் பேச்சுத்தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகளை எடுத்துரைக்கிறது.

பிறமொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்கள், அன்று வழங்கி, இன்று வழக்கிழந்த சொற்கள் முதலியவற்றையும் அவ ரது நாட்குறிப்புகள் வாயிலாக அறியலாம்.

அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றிய பிறகு, மீண்டும் ஒரு முறை ஆனந்தரங்கம் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று குறிப்பிடுவர்.

பல மொழிகளில் ஆனந்தரங்கர் புலமையுடையவர் என்பதை நாள்குறிப்பை நாம் புரட்டும்போதே தெரிந்து கொள்ளலாம். புலமைப்பற்று கொண்டு பல புலவர்களுக்கு உதவிய புரவலராயிருந்த ஆனந்தரங்கர், தன் நாள்குறிப்பை பண்டிதத்தமிழில் எழுதாமல் மக்கள் தமிழிலேயே எழுதினார் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

ஆனந்தரங்கரின் ஜூன் இருபத்தொன்றாம் நாள் சேதிக் குறிப்பு தேவனாம்பட்டினம் போர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் முன்வைக்கிறது. ஆளுநரைப் பார்க்கச் செல்லும் ஆனந்தரங்கரிடம், "நம்முடையவர்கள் நேற்று இராத்திரி போனவர்கள் கூடலூர் பிடிச்சுக் கொண்டார்களாம். செவுரோடு விழுந்தார்கள். தன் பேரிலே உள்ள சிறுது இராணுவுகள் கறனட்டகஸ்தானிருந்தார்கள். அவர்களையெல்லாம் வெட்டினார்களாம். கொஞ்சநஞ்சம் பேரிருந்தவர்கள் கதவைத் திறந்து ஓடச்சே வெளியிலே நம்முடையவர்கள் பிடித்துக்கொண்டு சரி கட்டிப் போட்டதாகவும் சிறிதுபேர் தப்பி ஓடிப்போனதாகவும் இப்படியாக ஒருத்தன் வந்து இப்போதான் மதாமுடனே சொன்னான். ஆனால் வெகுபேர்கள் செத்துப்போயிருப்பார்கள். வெகு சாக்குகளிருக்குமென்று" கடலூர் பிடிபட்ட தகவலைக் கூறுகிறார் ஆளுநர்.

ஆளுநரின் இந்த வெற்றி எக்களிப்பிற்குப் பின் அவர் மனத்திலோடும் எண்ணங்களை அறிந்தவர்போல் "துரையவர்களுக்கு பெண்சாதியித்தனை நிர்வாகம் பண்ணிக்கொண்டு தமக்கு அலுவலில்லாமல் பண்ணி நடப்பித்துக் கொண்டு போரானே யென்கிற உச்சாகம் ஒரு பாரிசம் தோற்ற, மற்றொரு பாரிசம், தன் பெண்சாதியைத் தொட்டு கூடலூர் தேவனும் பட்டணம் பிடச்சோமென்கிறது, சீர்மையிலே பிராஞ்சு இராசா முதலான இராசாக்கள் யெல்லாம் கொண்டாடலும், இந்தியாவிலே இருக்கப்பட்ட துலுக்கர் முதலான நபாபுகள், அமீர்கள், இராசா முதலாகிய பேர்கள், முன் சென்னப்பட்டணம் முசியே இலபுர்தொன்னே பிடித்துப் போட்டுபோக, யிவரைக் கொண்டாட கிடைச்சாப்போலே, இப்போதான் பெண்சாதியைக் கொண்டாடுவார்கள் என்கிற உச்சாகம் சரீரம் பூரிக்கப்பண்ண, யிந்தமட்டிலே இவள் யோசனையின் பேரிலே யல்லோ கூடலூர் சுறாயசமாய் கைவச மாச்சுதென்று சந்தோஷம்'' என்று எழுதுகிறார் அரங்கர்.

ஆனந்தரங்கத்தினுடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி என கே.கே.பிள்ளை பாராட்டியுள்ளார்.

ஆனந்தரங்கம் குறித்து வெளிவந்துள்ள இலக்கியங்கள்:

ஆனந்தரங்கம் இந்து மதத்தையும் கலைகளையும் தமிழ், தெலுங்குப் புலவர்களையும் போற்றி வந்துள்ளார். நமசிவாயர், கஸ்தூரி ரங்கையார், தியாகராச தேசிகர் போன்ற தமிழ்ப் புலவர்களை இவர் ஆதரித்துள்ளதாகத் தெரிகிறது. இவரின் நாட்குறிப்பில் வேதபுரீசுவரர் கோவிலுக்கு செய்த தொண்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனந்தரங்கம் பிள்ளை குறித்து வெளிவந்த நூல்கள்:

ஆனந்தரங்க கோவை

ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்

கள்வன் நொண்டிச் சிந்து

ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ் எழுதியவர் - அரிமதி தென்னகன்

ஆனந்தரங்கம் புதினங்கள்

ஆனந்தரங்கம் விஜயசம்பு எழுதியவர் - சீனிவாசர் (வடமொழி நூல்)

சரித்திரம் படைத்த இந்தியர்களின் சரித்திரத்தை வெள்ளைக்காரன்தான் எழுதினான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியர்களுக்கு சரித்திரக் கருத்தில்லை என்பதை ஏற்பதற்கில்லை. 1761 ஜனவரி திங்கள் 10 ஆம் தேதி இன்னுயிர் நீத்த ஆனந்தரங்கப் பிள்ளைகூட பொக்கிஷம் போன்ற நாள்குறிப்பினை விட்டுத்தானே சென்றிருக்கிறார்.

===========

அடுத்து, விகடனில் பூ.கோ. சரவணன் எழுதிய இன்னொரு கட்டுரை:
===============
·         


ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் நாட்குறிப்புகள் என்பவை கூட சுவையான ஒரு ஆவணமாக, வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான ஆவணமாக ஆகக்கூடும் என்பதை உறுதி செய்பவை. பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை ஆண்ட காலத்தில் இவரின் மாமா நைனியாப்பிள்ளை அவர்களிடம் துபாஷாக இருந்தார். பெரம்பலூரில் இவர் பிறந்தார். இவரின் அப்பாவை மாமா புதுச்சேரிக்கு அழைக்கவே குடும்பம் அங்கே பெயர்ந்தது. அங்கே சிறிய அளவில் ஆனந்தரங்கம் பிள்ளையின் அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
நைனியாப்பிள்ளை அப்பொழுதைய கவர்னர் எபேருக்கு லஞ்சம் தர மறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய காரணமானார். கவர்னரின் மகன் இளைய எபேர் கவர்னரானதும் நைனியாப்பிள்ளை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளாகி சவுக்கடி வழங்கப்பட்ட பொழுது அந்த அடி தாங்காமல் அங்கேயே இறந்து போனார். அவருக்கு நியாயம் தேடி அவரின் மகன் குருவப்பா பிரான்ஸ் தேசத்தில் அலைந்து நீதி பெற்றார்
இந்தக்காலத்தில் ஆனந்தரங்கம் பிள்ளை பாக்கு வியாபாரத்தில் இருந்து தன்னுடைய தொழிலை விஸ்தரித்து கொண்டு போனார். சாராய ஆலை, நீலத்துணி ஏற்றுமதி என்று அவரின் தொழில்கள் நீண்டன. ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பெரிய கப்பலை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்கிற அளவுக்கு அவர் வளம் மிக்கவராக இருந்தார். இவருக்கு முன்னரே இவரின் மாமா குருவப்பா குறிப்புகள் எழுதி வைத்திருந்தாலும் அவை கிடைக்காமல் போனதால் இவரின் குறிப்புகளே பிரெஞ்சு ஆட்சியை அறிந்து கொள்ள பயன்படும் மிக முக்கிய குறிப்புகளாக திகழ்கின்றன. இருபத்தி ஐந்து ஆண்டுகள் எழுதப்பட்ட அந்த குறிப்புகளில் பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
1743 ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை தன்னுடைய டைரியில் பதிவு செய்கிறார் பிள்ளை. இருண்ட அறைக்குள், திடகாத்திரமான இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட அடிமை வேலை செய்வதற்காக மொரிஷியஸ், பிரெஞ்சு கயானா முதலிய பகுதிகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டார்கள் என்று நேர்மையாக பதிகிறார்.
கடலோரம் போய் காலைக்கடன் போகக்கூடாது என்று கவர்னர் போட்ட உத்தரவு, எப்பொழுதும் மதுவுக்கு தடை என்பதையே அறியாத மிதத்தல் மாநிலமான புதுவையில் மராத்தியர் தாக்குதலின் பொழுது ஆறு மாதம் மட்டும் விதிக்கப்பட்ட மதுவிலக்கு, சாந்தா சாகிபுக்கு அடைக்கலம் தந்திருந்த கவர்னர் துய்மாவை மிரட்டி தூதுவரை அனுப்பி ஆறு கோடி கப்பம் கேட்ட மராத்திய தளபதி ரகுஜி நாற்பது பாட்டில் பிரெஞ்சு மதுவோடு காதலியின் மது மோகத்தால் சமாதானம் ஆகிக்கொண்ட கதை நம்ப முடியாததாக இருக்கலாம். துப்ளேக்ஸ் புதுவையை ஆண்ட காலத்தில் பிள்ளை தலைமை துபாஷ் ஆக இவரிடமே லஞ்சம் கேட்ட அவரின் மனைவி ழானின் ஊழல் முகம் என்று பலவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே ழான் இடங்கை எனப்படும் இழிவாக நடத்தப்பட்ட மக்களுக்கு வலங்கை பிரிவினரின் பகுதிகளுக்குள் நுழைய வசதி ஏற்படுத்தி தந்ததும் பிள்ளையால் குறிக்கப்படுகிறது.
துப்ளே இவரையே தலைமை துபாஷாக நியமிக்கிறார். ஒரு துபாஷ் மக்கள் ஒழுங்காக வரி செலுத்துவதை கண்காணிப்பது,கவர்னருடன் அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளுதல், கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்குதல் என்பன மாதிரியான முக்கியமான பணிகளை செய்து வந்தார். அப்பொழுது கூடலூர் எனப்படும் கடலூரை வெள்ளையருடன் ஏற்பட்ட போரில் உடனே கைப்பற்ற வேண்டும் என்று துப்ளே துடிக்க ,"காபி சாப்பிடுகிற இடைவெளியில் கைப்பற்றக்கூடிய அளவுக்கு எளிய இலக்கில்லை அது ! என்றாலும் அங்கே இருக்கும் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றினால் ஆங்கிலேயரின் கப்பல்கள் நிற்க துறைமுகம் இல்லாமல் செய்து விடலாம் ! " என்று ஆலோசனை தருகிற அளவுக்கு அவர் அதிகாரத்தின் முக்கிய புள்ளியாக இருந்தார்.
பிரான்கோயிஸ் மார்ட்டின் எனும் கவர்னரின் காலத்தில் இருந்து வேதபுரீஸ்வரர் ஆலயத்தை சம்பக்கோயில் எனும் தேவாலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லை தரும் வகையில் பூஜைகளின் மூலம் சப்தம் எழுப்புகிறது என்று இடிக்க சொல்லி தொடர்ந்து பாதிரியார்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதை துப்ளே தன்னுடைய மனைவியின் மீதான ஈர்ப்பால் செய்து முடித்தார். இதுவும் இவரின் டைரிக்குறிப்புகளிலேயே காணக்கிடைக்கிறது.
1742-43 இல் சென்னையை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படைகள் கைப்பற்றிய பொழுது துப்ளே மகிழ்ச்சிப்பெருக்கில் துபாஷ் ஆன ஆனந்தரங்கம் பிள்ளையிடம் "என்ன வேண்டும் ?" என்று கேட்ட பொழுது "ஒரு காசுக்கு பன்னிரெண்டு வெற்றிலை கிடைத்தது. இப்பொழுது போர்க்காலம் என்பதால் ஆறு காசு,எட்டு காசு என்று வெற்றிலையின் விலை ஏறி மக்கள் துன்பப்படுகிறார்கள் ! குறைக்க முயலுங்கள் " என்று கேட்கிறார். மீண்டும் இவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும் ,"இருவரை தவறாக கைது செய்திருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யலாம் கவர்னர் !" என்றே சொல்கிறார். அடுத்த முறை அழுத்தி கேட்டதும் ,"எல்லாம் வல்ல இறைவன் மற்றும் நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை ?" என்று எந்த பரிசும் பெறாமல் விலகிக்கொண்டார் பிள்ளை.
இவரின் டைரி வெகுகாலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்து எண்பது வருட காலத்துக்கு பின்னர் பிரான்சில் பிரதி எடுத்தனர். அதன் பின்னர் ஆங்கிலேயரும் அதை மொழிபெயர்த்து வெளியிட்டனர். வ.வே.சு ஐயர் அவரின் டைரியின் சில பகுதிகளை சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்என்று குறிப்பிட்டு வெளியிட்டார். தமிழ் மொழியில் பற்றுடையவராக திகழ்ந்து தமிழிலேயே கையெழுத்திட்ட பிள்ளை தன்னுடைய நாட்குறிப்புகளை பிரெஞ்சு,உருது மொழிகளை கலந்தே எழுதினார். அவரை இந்தியாவின் சாமுவேல் பெப்பீஸ் என்று அவரின் அற்புதமான நாட்குறிப்பு பதிவுகளுக்காக அழைக்கிறோம். அவரின் பிறந்தநாள் இன்று
(இந்தக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் பிரபஞ்சன் அவர்களின் நாவல்களான மானுடம் வெல்லும்,வானம் வசப்படும் மற்றும் அவரின் பல்வேறு கட்டுரைகளை படித்ததன் தாக்கத்தில் எழுதப்பட்டது. அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் )


[ நன்றி: தினமணி, விகடன் ] 

திங்கள், 28 மார்ச், 2016

டி.கே.பட்டம்மாள் - 6

பாட்டம்மாள் 
வீயெஸ்வி 

ஆனந்த விகடனில் பிரபல இசை விமர்சகர், எழுத்தாளர்  வீயெஸ்வி  2007-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ! 
==============

கர்னாடக இசை உலகில் முப்பெரும் தேவியருள் ஒருவராக இருந்து பட்டொளி வீசிப் பிரகாசித்தவர் டி.கே.பட்டம்மாள். வீட்டில் செல்லமாக பட்டா!
குழந்தைப் பருவத்திலேயே பகவான் ரமணராலும், காஞ்சிப் பெரியவராலும் ஆசீர்வதிக்கப்பட்டு, குருமார்கள் பலரிடம் இசை பயின்று படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கூரை வேயப்பட்ட வீட்டில் விடியற்காலை மூன்றரை மணிக்கு எல்லாம் எழுந்து, சுலோகங்களையும் பக்திப் பாடல்களையும் பாடிப் பயிற்சி செய்யும்போது பட்டாவுக்கு வயது நான்கு!

வருடம் 1931. பட்டம்மாள் படித்த காஞ்சிபுரம் பெண்கள் பள்ளியில் 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தை மேடை ஏற்றிய சமயம். 12 வயது பட்டம்மாளுக்கு சாவித்திரி வேடம். 'தாயார் இருந்தென்ன... தந்தையார் இருந்தென்ன?' பாடலை உணர்ச்சிப்பெருக்குடன் டி.கே.பி. பாட, குழுமி இருந்தவர்கள் கண் கலங்கி இருக்கிறார்கள். இந்த நாடகத்துக்கு அனுமதிக் கட்டணம் நாலணா. அன்று வசூலான தொகை 900 ரூபாய்!

டி.கே.பி-க்குப் பதக்கம் கிடைத்தது. மறுநாள் சுதேசமித்திரன் நாளேட்டில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியது. திகைத்துப் போனார் தந்தை. ''இதென்ன அநியாயம்? பேப்பர்ல இப்படி போட்டோ எல்லாம் வந்தா உன் பொண்ணுக்கு யாரும் மாப்பிள்ளை கொடுக்கப் போறது இல்லை. பட்டாவோட எதிர்காலம் அவ்வளவுதான்...'' என்று கிருஷ்ணஸ்வாமியின் சகோதரி கள் எட்டுப் பேரும் கூச்சல் போட்டார்கள். இன்னொரு பக்கம், பேப்பரில் செய்தியைப் பார்த்துவிட்டு கொலம் பியா கிராமபோன் கம்பெனியினர் இவரை அணுகி, பட்டம்மாளின் குரலைப் பதிவுசெய்ய அனுமதி கேட்டு இருக்கிறார்கள். தந்தைக்கு விருப்பம் இல்லை. ''கவலைப்படாதே... வெளியே மாப்பிள்ளை கிடைக்கலேன்னா என் மருமானையே பட்டம்மாளுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறேன்...'' என்று உறுதி கொடுத்து அவரைச் சம்மதிக்கவைத்திருக்கிறார் டாக்டர் சீனிவாசன் என்ற அவரது குடும்ப நண்பர்.

திருநெல்வேலி சபாவில் டி.கே.பி. கச்சேரி. பாரதியாரின் பாடல் ஒன்றை மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தவர், முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த பெண்களில் ஒருவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருந்ததைக் கவனித்தார். அந்தப் பெண்மணி மகா கவியின் மனைவி செல்லம்மாள். கச்சேரி முடிந்ததும், ''என் கணவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் பாடியதைக் கேட்டுக் குளிர்ந்திருப்பார்...'' என்று தொண்டை அடைக்கச் சொன்னாராம் செல்லம்மாள்.

1940-ல் கீழ்த் திருப்பதியில் உள்ள திருச்சானூரில் பட்டமாவுக்குக் கல்யாணம். மணமகன் ஈஸ்வரன், முன்பே உறுதியளித்த குடும்ப நண்பர் டாக்டர் சீனிவாசனின் மருமகன். திருமண நாள் அன்று வைர அட்டிகையுடன் ஜொலித்தார் பட்டம்மாள். ''விலை மதிப்பற்ற இசை உன்னிடம் இருக்கும்போது இந்த வைர அட்டிகை உனக்கு எதற்கு?'' என்று திருமணத்துக்கு வந்திருந்த ராஜாஜி கேட்க, அதற்குப் பிறகு அந்த அட்டிகையை அணியவே இல்லையாம் டி.கே.பி!

திருமணமான புதிதில் தங்களுடன் திருநெல்வேலிக்கு வரும்படி ஈஸ்வர ஐயரை வற்புறுத்தினார்கள் இவருடைய நண்பர்கள். பட்டமாளுக்குக் கணவர் தன்னை விட்டு விட்டுத் தனியாகச் செல்வதில் விருப்பம் இல்லை. இருப்பினும், 'மனைவிதாசன்' என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்பதால் சம்மதித்தார் ஈஸ்வர ஐயர். ஆனால், சில மணி நேரத்துக்குள்ளாகவே வீடு திரும்பிவிட்ட அவர் சொன்னார்...
''நீ இல்லாம என்னால இருக்க முடியாது பட்டா!''

நன்றி: "Gana Saraswathi D.K.Pattammal:
Dimensions of a divine songster"  by Nithya Raj, Bharatiya Vidya Bhavan, 2007.

[ நன்றி: விகடன் ] 

*  பின் குறிப்பு:

டி.கே.பட்டம்மாள் பேசுகிறார் : 



==== 

ஞாயிறு, 27 மார்ச், 2016

விபுலானந்தர் - 1

இசைத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்

தேசிகன்


மார்ச் 27. விபுலானந்த அடிகளாரின் பிறந்த தினம்.

தேவாரங்களின் சந்தக் குழிப்புகளைப் பற்றி ஐயங்கள் எழும்போதெல்லாம், அவருடைய “யாழ் நூல்” தான் எனக்கு உற்ற துணை!

2009-இல் தமிழ்மணியில் அவரைப் பற்றி வந்த ஒரு கட்டுரை இதோ!
=======
 ஈழத் தமிழ் அறிஞர்கள் தமிழுக்குச் சேர்த்த வளம் குறித்துத் தனியாக பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழுக்கு, குறிப்பாக இசைத் தமிழுக்கு தனது "யாழ் நூல்' என்ற இணையற்ற படைப்பை அளித்து சேவை செய்த சுவாமி விபுலானந்தர் ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர். யாழ் நூல் தவிர மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களை எழுதி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த உன்னதமான துறவிகளில் ஒருவர். ஆன்மிகத்தையும் தமிழையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமகன்.

அவர் இலங்கை மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி-கண்ணம்மை தம்பதிக்கு 1892-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிறந்தார். அவருக்கு தமிழ்க் கடவுள் முருகனின் திருநாமங்களில் ஒன்றான மயில்வாகனன் என்ற பெயரிட்டு வளர்த்தனர்.அவர் தொடக்கக் கல்வியை குஞ்சுத்தம்பி என்ற ஆசிரியரிடமும், தமிழையும் வடமொழியையும் புலோலி வைத்தியலிங்கத் தேசிகரிடமும் கற்றார். குறிப்பாக நன்னூல், சூளாமணி நிகண்டு உள்ளிட்டவற்றையும் குறளையும் ஆழ்ந்து கற்றார்.

அவரது ஆழ்ந்த ஆன்மிக உணர்வுக்கான அடித்தளம் அவர் மாமன்களான சிவகுருநாதப் பிள்ளை மற்றும் வரதராசப் பிள்ளை ஆகியோரால் இடப்பட்டது. இவர்களிடம் கந்தபுராணம் மற்றும் பாகவதம் போன்றவற்றை மிக இளம் வயதிலேயே மயில்வாகனன் கற்றார்.

கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டயப்படிப்பு ஒன்றையும் முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28-வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது.

கொழும்புக்கு அவர் படிக்க வந்த காலகட்டத்திலேயே கைலாச பிள்ளை, கந்தையா பிள்ளை உள்ளிட்ட சில முக்கியத் தமிழ் அறிஞர்களிடம் நேரடியாகத் தமிழ் கற்றார். அதனால் அவர் ஆழமான தமிழறிவைப் பெற்றார். மதுரையின் புகழ் பெற்ற தமிழ்ச் சங்கத்தின் வித்துவான் தேர்விலும் வென்றார்.

தமிழோடு ஆன்மிகமும் அவரை ஆட்கொண்டகாலம் இதுதான். அதற்கு மூல காரணம் கொழும்பிலிருந்த ராமகிருஷ்ண மடமும் இவரிடம் இயல்பாகவே இருந்த பாமரர்க்குத் தொண்டு செய்யும் மனப்பான்மையும்தான்.

1922-ம் ஆண்டு அவர் சென்னைக்கு வந்து ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். மடத்தின் தமிழ் பத்திரிகையான ராமகிருஷ்ண விஜயம் மற்றும் ஆங்கிலப் பத்திரிகையான வேதாந்தகேசரி ஆகியவற்றின் ஆசிரியரானார்.

1924-ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார்.

1925-ம் ஆண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பிய விபுலானந்தர் தன் தொண்டு வாழ்வைத் தொடர்ந்தார். 1931-ல் மீண்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் அன்று புகழ் பெற்றுவிளங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். பல்கலைக்கழகத்துக்கு வந்த புதிதில் அவரை ஒரு கூட்டத்தில் பேச வைத்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவிப்புப் பலகையில் விபுலானந்தஜி பேசுவார் என்று போட்டிருப்பதைப் பார்த்து யாரோ வடநாட்டு சன்யாசி உரை நிகழ்த்துகிறார் என்று நினைத்தவர்கள் கம்பீரமான தீந்தமிழில் விபுலானந்தரின் முழக்கத்தைக் கேட்டு வியந்தனர்.

இமயமலை யாத்திரை, பிரபுத்த பாரதம் என்ற வேதாந்த இதழின் ஆசிரியர் என இவரது ஆன்மிகப் பணிகளும் ஓசையின்றி நடந்தது வந்தன. விவேகானந்த ஞானதீபம் உள்ளிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் இவரது ஆன்மிகப் பணியில் அடங்கும்.

இந்தியாவின் பாரம்பரியத்திலும் சிறப்புகளிலும் மனத்தைப் பறிகொடுத்த விபுலானந்தர், மகாகவி பாரதியிடத்திலும் மனத்தைப் பறி கொடுத்தார். மூத்த தமிழ் அறிஞர்கள் பாரதியைக் கண்டு கொள்ளாமலிருந்த அந்தக் காலத்தில் பாரதியின் படைப்புகளில் ஈடுபட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதி ஆய்வு வட்டம் ஒன்றை உருவாக்கியவர் அடிகளார்.

தமிழில் அறிவியல் இல்லை என்ற அவச் சொல்லைத் தீர்க்கும் முயற்சியில் 1934-ல் உருவான "சொல்லாக்கக் கழக'த்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர் அடிகள்.

இசைத் தமிழ் குறித்து கிட்டத்தட்ட தனது 14 ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக மிக முக்கிய இசைத் தமிழ் நூலான யாழ்நூலை விபுலானந்தர் படைத்தார்.

சிலப்பதிகாரத்தில் உள்ள ஏராளமான அரிய இசைச் செய்திகள் குறித்து போதிய அளவுக்கு விரிவான ஆழமான விளக்கங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் சிலம்பின் இசை நுட்பங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய பெருமை விபுலானந்தரின் யாழ்நூலுக்கு உண்டு. இதன் மூலம் தமிழ் இசையின் தொன்மையையும் ஆழத்தையும் அவர் நிறுவினார். சிலம்பிலுள்ள இசைத் தகவல்களின் ஆழத்தில் முக்குளிக்கப் போதிய இசைப் புலமை வேண்டும். அதன் பொருட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அன்று பணிபுரிந்த இசை மேதை பொன்னையாப் பிள்ளை உள்ளிட்ட சிலரிடம் இசை இலக்கண நுட்பங்களையெல்லாம் அறிந்தார் விபுலானந்தர்.

பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என 7 இயல்களால் ஆனது இந்த நூல். நாடக இலக்கணங்களை வகுத்துக் கூறும் மதங்க சூளாமணி, விபுலானந்தரின் மற்றோர் அரியபடைப்பு. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 23-வது ஆண்டு விழாவின் போது "ஷேக்ஸ்பியரும் தமிழ் நாடகங்களும்' என்ற தலைப்பில் அங்கு விபுலானந்தர் உரை நிகழ்த்தினார். இந்த உரை விழாவுக்கு வந்திருந்த உ.வே.சாமிநாதய்யரால் மிகவும் பாராட்டப்பட்டது. பின்னாளில் இந்த உரையையே மதங்க சூளாமணி என 3 இயல்களால் ஆன நூலாக விபுலானந்தர் படைத்தார்.

இவரது புகழ் பெற்ற "யாழ் நூல்' கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் நாட்டின் திருக்கொள்ளாம்புதூர் கோவிலில் 1947-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அரங்கேறியது. இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்தபின் ஜூலை மாதமே விபுலானந்தர் காலமானார். வெறும் 55 ஆண்டுகளே வாழ்ந்து தமிழுக்கு இணையற்ற நூலை உருவாக்கிய அவர் பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

[ நன்றி: தமிழ்மணி ( தினமணி ) ]

தொடர்புள்ள பதிவுகள்:

விபுலானந்தர்

வெள்ளி, 25 மார்ச், 2016

பதிவுகளின் தொகுப்பு: 351 - 375

பதிவுகளின் தொகுப்பு: 351 - 375 





351. பதிவுகளின் தொகுப்பு: 326 – 350

352. சங்கீத சங்கதிகள் - 67
அய்யங்காரின் பிளேட்
கல்கி   

353. முதல் குடியரசு தினம் -1
கட்டுரை, கவிதை, சித்திரம் ...

354. சங்கீத சங்கதிகள் - 68
வி.வி.சடகோபன் -5
காத்தானும் கிரேக்க சங்கீதமும் !

355. சத்தியம் செத்ததோ
கல்கி

356. முகநூல் : கவிதை
பிப்ரவரி 4. முகநூலின் 12-ஆம் பிறந்தநாள்.

357. உ.வே.சா. -3
மஹாமஹோபாத்தியாயரை நான் முதன்முதல் சந்தித்தது
பம்மல் சம்பந்த முதலியார்

358. கொத்தமங்கலம் சுப்பு -12
கொத்தமங்கலம் சுப்பு
359. ரசிகமணி டி.கே.சி. -1
ரசிகமணி மறைந்தார்

360. ராஜாஜி -3
பரம்பொருள்
ராஜாஜி
பிப்ரவரி 18. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தினம்.

361. உ.வே.சா. - 4
தில்லையில் ஐயரவர்கள்
ச.தண்டபாணி தேசிகர்

362. மகாமகம் - 1945,1956

363. உ.வே.சா - 5
மூன்று மகாமகங்களும், கும்பகோண புராணமும்
உ.வே.சாமிநாதய்யர்

364. திருப்புகழ் -10
திருப்புகழ் ; ஒரு எழுத்தாளர் பார்வையில்
சுஜாதா

365. தி.ஜானகிராமன் -1
பூட்டுகள்
தி.ஜானகிராமன்

366. எம்.கே.தியாகராஜ பாகவதர் -1
ஏழிசை மன்னர் எம்.கே.டி

367. ரா.பி.சேதுப்பிள்ளை -1
மூவர் தமிழும் முருகனும்
மார்ச் 2. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.

368. தென்னாட்டுச் செல்வங்கள் - 17
ஊர்த்துவ தாண்டவர்

369. சுத்தானந்த பாரதியார் -1
எப்படிப் பாடினேன்
கவியோகி சுத்தானந்த பாரதியார்

370. எஸ். எஸ். வாசன் - 3
வாசனைப் பற்றி
தமிழ் அறிஞர் வ.ரா. , பெரியார் ஈ.வே.ரா

371. காந்தி - 2
தண்டி யாத்திரை
 குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா

372. பைங்கணித எண் பை : கவிதை

373. அழ. வள்ளியப்பா -1
"குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா
 கலைமாமணி விக்கிரமன்

374. சித்திர விகடன் - 1
ஓவியத் துறையில் விகடன் ! : சில மைல்கற்கள்

375. விக்கிரமன் -1
விக்கிரமன்  –  நேர்காணல்


தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 24 மார்ச், 2016

சங்கீத சங்கதிகள் - 69

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்

உ.வே.சாமிநாதய்யர் 

மார்ச் 24. முத்துசாமி தீக்ஷிதரின் பிறந்த நாள்.  


 8-12-35ல் சென்னை பச்சையப்பர் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரவர்கள் நூற்றாண்டு விழா வின்போது  உ.வே.சாமிநாதய்யர் செய்த முன்னுரைப் பிரசங்கம் இது.

வித்துவான்களின் உபகாரம்

நாம் ஜபம் செய்யும் மந்திரங்களுக்கு உரிய ரிஷிகள் இருக்கிறார்கள். எந்த மந்திரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்தாலும் அதை வெளிப்படுத்திய ரிஷியை முதலில் வணங்கிவிட்டு ஆரம்பிகிறோம். ஞானத்தையும் வித்தையையும் உலகத்துக்கு அளித்த பெரியோர்களை வந்தனம் செய்யவேண்டிய அவசியத்தையும் அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றியறிவையும் இது புலப்படுத்தும். இப்படியே பலவகையான கலைகளைப் பயில்பவர்கள் அவற்றை உலகத்தில் வழங்கச் செய்த பெரியோர்களை வணங்குவது கடைமையாகும்.

வித்தைகள் அழிந்துபோகாமல் வித்துவான்கள் காப்பாற்றி அவற்றை உலகத்தில் பிரகாசிக்கச் செய்கிறார்கள். பிரமதேவருடைய சிருஷ்டி அழிந்தாலும், அவர்களுடைய சிருஷ்டி அழியாமல் நிலைபெற்று விளங் குகின்றது. வித்தைகள் உலகத்திலே அழியாமல் இருக்க வேண்டுமென்று மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் அவர்கள் பலவகையாக உழைத்து ஒன்றையும் எதிர்பாராமல் பேருதவி புரிகின்றார்கள். அவர்கள் செய்த நன்றியை நாம் எந்தக் காலத்திலும் மறவாமல் இருக்கவேண்டும்.

சங்கீதமும் தெய்வங்களும்

பழையகாலம் முதல் சங்கீத வித்தையை உலகத்தில் பரவச் செய்தவர் பலர். நமது நாட்டில் சங்கீதம் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. தேவர்களே சங்கீதத்துக்கு முதற்குருவாக விளங்குகிறார்கள். அதற்கு உரிய ஆசாரியர்கள் சிவபெருமான், நந்திதேவர், முருகக்கடவுள், மாதங்கி, பதஞ்சலி, நாரதர் முதலியோர். இசையைப்பற்றி மகா வைத்தியநாதையரவர்கள் செய்த ஓர் உபந்நியாசத்தில், "பசுர் வேத்தி, சிசுர்வேத்தி வேத்தி கான ரஸம்பணி:" என்பதை எடுத்துக்காட்டி 'இதில் பசு வென்றது நந்தி தேவரையும், சிசு வென்றது முருகக் கடவுளையும், பணியென்றது பதஞ்சலியையும் குறிக்கும்' என்றார்கள். இதற்கு வேறு வகையாகப் பொருள் சொல்வதும் உண்டு.

பரமசிவன் இரண்டு வித்தியாதரர்களைத் தம் காதிலே இரண்டு குழைகளாக அணிந்துகொண்டிருக்கிறார். தாமே வீணையை வாசித்து மகிழ்ந்து வருகிறார். "எம் இறை நல் வீணை வாசிக்குமே" என்றார் ஒரு பெரியார். திருமாலோ எப்பொழுதும் தும்புரு நாரதர் களுடைய கானலஹரியில் ஈடுபட்டு இன்புறுவதோடு தாமும் புல்லாங்குழலை வாசித்து உயிர்களை இன்புறுத்து கிறார். பிரமதேவரோ கலைமகளின் யாழிசை யமுதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறார். இந்திராதி தேவர்கள் ரம்பை முதலிய மங்கையரின் சங்கீதத்தில் உருகி மகிழ்கிறார்கள். கந்தர்வர், வித்தியாதரர், கின்னரர் என்னும் தேவகணங்களுக்குச் சங்கீதமே காலப்போக்கு.

சங்கீதமும் ஆலயங்களும்

இவ்வாறு தெய்வங்களையும் தேவகணங்களையும் கவர்ந்துகொண்ட சங்கீதத்திற்குத் தெய்வஸ்தானங்களாகிய கோயில்களின் தனிச்சிறப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. இசையை ஈசுவரார்ப்பணம் செய்வதுதான் தக்கது. இதனையறிந்தே பழைய காலத் தில் சங்கீத நிகழ்ச்சிகள் ஆலயங்களிலே நிகழ்ந்து வந்தன. கோயில்தோறும் சங்கீத வித்துவான் ஒருவர் நியமிக்கப்பெற்று ஒவ்வொரு காலத்துக்கும் உரிய கானங் களைச் செய்து வந்தனர்; ஒவ்வொரு ஸந்நிதிக்கும் தனித் தனியே அமைக்கப்பட்டவர்களும் உண்டு.

சிவாலயங்களிலும் விஷ்ணு வாலயங்களிலும் முறையே தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தத்தையும் பண்ணோடு ஓதிவரும்படி முற்காலத்தில் அரசர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

திருஆமாத்தூர் என்னும் ஸ்தலத்தில்தேவாரங்களைப் பண்ணோடு கற்றுச் சந்நிதியில் பாடும் பொருட்டுப் பல குருடர்களுக்கு ஆகாரம் முதலியன அளித்து வரும்படி ஒரு சோழன் ஏற்பாடு செய்திருந்தானென்று சிலாசாஸ னங்களால் அறிகிறோம். தஞ்சை முதலிய இடங்களி லுள்ள சிவாலயங்களில் தேவாரம் ஓதுவதற்கு உரிய வர்கள் பழைய அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் *'பிடாரர்கள்' என்று சாஸனங்களில் வழங்கப்படுகிறார்கள். கோயில்கள் நிறைந்து விளங்கும் தமிழ் நாட்டில் கோயிலில்லாத ஊர் எப்படி அருமையோ அப் படியே சங்கீதமில்லாத கோயிலும் அருமையாகும்.
--------
* இது 'பட்டாரகர்கள்' என்பதன் மருஉ.

இசைத்தமிழ்

பழைய காலத்தில் சங்கீதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு இருந்ததென்று தமிழ் நாட்டின் பழைய சரித்திரம் தெரிவிக்கின்றது. தமிழின் பெரும் பிரிவுகள் மூன்று. அவற் றுள் ஒன்று சங்கீதமாகிய இசைத்தமிழ். இசைத்தமிழ் தான் தனியே ஒன்றாக நிற்பதோடு மற்ற இரண்டு பிரிவுகளாகிய இயலிலும் நாடகத்திலும் கலந்திருக்கிறது. இயற்றமிழ்ச் செய்யுட்களை இசையோடு சொல்லாவிட் டால் அவற்றிற்குரிய நயம் புலப்படாது. தமிழில் வழங்கும் செய்யுட்களுள்ளே இன்ன இன்ன செய்யுளை, இன்ன இன்ன ராகத்திலேதான் படிக்கவேண்டுமென்ற வரையறை யுண்டு. நாடகத் தமிழுக்கோ இசையானது இன்றியமையாததென்பது வெளிப்படை. அதனாலேதான் இசையை நடுநாயகமாக வைத்து இயலிசை நாடக மென்று வழங்கினார்கள் போலும்.

சங்கீத வித்துவான்களுக்கு இருந்த மதிப்பு

சங்கீத வித்துவான்களுக்கு முற்காலத்தில் இருந்த கௌரவத்திற்கு எல்லையில்லை. எந்தக்குலத்திற் பிறந்தவர்களாயிருப்பினும் அவர்களுக்கு முடியுடைவேந்தர்களும் பிறரும் மிக்க மதிப்பையளித்து மற்ற வித்துவான் களைக் காட்டிலும் அதிகமான சம்மானம் செய்துவந்தார்கள். அரசர்கள் காலையில் விழித்து எழும்பொழுதே சங்கீதத்தைக் கேட்டு எழுவார்கள். அவர்களுடைய முன்னோர்களின் குண விசேடங்களைத் தெரிவிக்கும் பாட்டுக்களைப் பாடி அம்மன்னர்களை எழுப்புவதற்கென்று தனியே நியமிக்கப்பட்ட சில சங்கீத வித்துவான்கள் இருந்தார்கள்; இவர்களைச் சூதரென்றும் இங்ஙனம் பாடுதலைத் துயிலெடை நிலையென்றும் சொல்லுவார்கள். அரசன் போர்க்களத்தில் புண்பட்டு விழுந்துகிடந்தால் அந்தப் புண்ணாலுண்டான துன்பத்தை இசையால் போக்குவது அக்கால வழக்கம்.

ஒரு சங்கீத வித்துவானுடைய கவலையைப் போக்குவதற்கு விறகு சுமந்து சென்று பாடி அவருடைய பகைவனை மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் ஓடச் செய்ததோடு சேற்றில் நின்று பாடிய அந்த வித்துவானுக்குத் தம் சந்நிதியில் நின்று பாடும்படி ஒரு பலகையையும் அளித்தாரென்று திருவிளையாடல் தெரிவிக்கின்றது.

நாயன்மார்களுள் ஆனாயநாயனா ரென்பவர் புல்லாங் குழல் ஊதியும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞான சம்பந்தமூர்த்தியின் தேவாரப் பதிகங்களை யாழில் அமைத்து வாசித்தும், ஆழ்வார்களுள் திருப்பாணாழ்வா ரென்பவர் வீணையை வாசித்தும் பேறு பெற்றார்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி யென்ற மூவரும் தாம் இயற்றிய சிவஸ்தோத்திரங் களைச் செய்திருக்கிறார்கள். "அருச்சனை பாட்டே யாகும்" என்றார் ஒரு பெரியார். இதனால் சிவபெருமானுக்குச் சங்கீதத்திலுள்ள பிரியம் வெளிப்படும். கோபத்தைத் தணிப்பது சங்கீதத்தின் பெருமைகளுள் ஒன்று; முருகக் கடவுள் சூரனையழித்த கோபம் தணியுமாறு கந்தர்வர்கள் பாடிக்கொண்டு சென்றார்களென்றும், கைலாச மலையை எடுத்த இராவணன் மீது ஈசுவரனுக்கு இருந்த கோபம் சாமகானத்தால் நீங்கிற்றென்றும் நூல்கள் கூறுகின்றன. "இழுக்குடைய பாட்டிற் கிசை நன்று" என்பதனால் சில பாட்டுக்களிலுள்ள சொற் குற்றம் இசைநயத்தால் புலப்படாதென்று தெரிகிறது.

சங்கீத வித்துவான்களின் வகை

சங்கீதத்தை வளர்த்துவரும் பெரியோர்கள் பலர். அவர்களுள் சங்கீதத்தை மட்டும் அப்பியாசம் செய்து வந்து தம்முடைய வாய்ப்பாட்டினால் யாவரையும் இன்புறுத்தியவர்கள் ஒரு சாரார்; சங்கீதத்தை ஓரளவு பயின்று அதற்கேற்ற சாகித்தியங்களைச் செய்து உதவியவர்கள் ஒரு சாரார்; சங்கீதத்திலே சிறந்த ஆற்றல் படைத்துச் சாகித்தியத்திலும் வன்மையடைந்து பொன் மலர் மணம் பெற்றதுபோல விளங்கியவர்கள் ஒரு சாரார். இம் மூவகையினராலும் சங்கீதம் விரிவடைந்தது. இவர்களை யன்றி இசையைக் கருவிகளில் அமைத் துப் பாடி இன்புறுத்தியவர்களும் உண்டு. சங்கீதப் பயிற்சி மட்டும் உடையவர்களாகப் பாடிவந்த பெரியோர்களுடைய ஆற்றல் அவர்கள் காலத்தோடு போய்விடும்; அவர்களால் அக்காலத்திலிருந்தவர்கள் மட்டும் பய னடைகின்றனர். சாகித்தியம் செய்யும் வகையினருடைய உழைப்போ அவர்கள் காலத்தோடல்லாமல் பிற்காலத் திலும் பயனைத் தருகின்றது. சாகித்தியம் மட்டும் இயற்று பவர்கள் சங்கீத ரசத்திற்கேற்ற சாகித்தியங்களை செய்வதற்குத் தடையுறுவார்கள். ஸ்வானுபவத்தில் சங்கீதப் பயிற்சியும் இடைவிடாது பாடும் முயற்சியும் உடையவர்களுடைய சாகித்தியத்தில் தனியாக ஒரு ஜீவன் இருக்கும். அங்ஙனம் அமைந்த சாகித்தியங்களே சங்கீத மாளிகைகளை அழகுபடுத்தும் பிரதிமைகளாகும். அவற்றை அமைப்பவர்களே சங்கீத தெய்வத்திற்கு மிகவும் சிறந்த பணிவிடை செய்தவர்களாவார்கள். அத் தகைய பெரியோர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்து வந்தார்கள். வேங்கடமகி, பச்சை மிரியன் ஆதிப்பையர், பாபநாச முதலியார், அனந்தபாரதி, பெரிய திருக் குன்றம் சுப்பராமையர், கனம் கிருஷ்ணையர், மதுரகவி, கவி குஞ்சரமையர், ஆனை ஐயா, கோபாலகிருஷ்ண பாரதிகள், வையை ராமசாமி ஐயர், பட்டணம் சுப்பிர மணிய ஐயர் முதலிய வித்துவான்கள் சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் ஒருங்கே ஆற்றல் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். மெட்டுக்களைப் பிறரைப் பாடச் செய்து அவற்றிற்கேற்பச் சாகித்யங்களை இயற்றி அவற்றைப் பிறரைக்கொண்டு பாடச்செய்தவர் சிலர். அவர்களுள் மாயூரம் முன்ஸீபாக இருந்த வேதநாயகம் பிள்ளை ஒருவர்.

சங்கீத மும்மணிகள்

சிலர் வடமொழியிலும் தெலுங்கு முதலிய பிற பாஷைகளிலும் கீர்த்தனங்களை இயற்றி விளங்கினாரகள். அவர்களுள் மிகச் சிறந்த மூவர்களைச் சங்கீத மும்மணிக ளென்று சங்கீத உலகம் பாராட்டுகின்றது. அவர்கள் திருவாரூர் முத்துசாமி தீக்ஷிதர், தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், ஸ்ரீ தியாகையர் என்பவர்களே. இவர்கள் மூவரும் ஒரே காலத்தவர்கள். தீக்ஷிதரென்றால் முத்துசாமி தீக்ஷிதரையும், சாஸ்திரிகளென்றால் சாமா சாஸ்திரிகளையும், ஐயரவர்களென்றால் தியாகையரவர் களையும் சங்கீத உலகம் குறிக்கும். இதுவும் அவர்களுடைய பெருமையைத் தெரிவிப்பதாகும்.

ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்

முத்துசாமி தீக்ஷிதரவர்கள் காலஞ் சென்று நூறு வருஷங்களாகின்றன. இவர்களுடைய சரித்திரத்தைப் பலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றாலும் கேள்வியாலும் எனக்குத் தெரிந்த சில முக்கியமான விஷயங்களை மட்டும் கூறுகிறேன்.

திருவாரூரின் பெருமை

திருவாரூர் என்னும் ஸ்தலத்தில் அவர் பிறந்தவர். பெரியவர்கள் பிறந்ததனால் ஓரிடத்திற்கு மகிமையுண்டாகும். இயல்பாகவே மகிமையுள்ள இடத்தில் அவர்கள் பிறப்பதுமுண்டு. திருவாரூரோ இயல்பாகவே சிறப் புடையது. அந்தப் பூமியே தெய்விகம் பொருந்தியது. அந்த ஸ்தலத்தில் உண்டான புற்றில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றாரென்றால் அந்த மண் விசேஷத் தைப் பற்றி வேறு என்ன சொல்லவேண்டும்!அதனால் இது பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருதிவி ஸ்தலமாகும். திருவாரூரென்பதில் ஆரென்பது பிருதிவியைக் குறிக்கும். இது பூமாதேவியின் ஹிருதய கமலமென்று கூறப்படு மாதலால் இங்கேயுள்ள கோயில் பூங்கோயில் என்று தமிழில் வழங்கும். இது பராசக்தி க்ஷேத்திரமென்றும் பிரணவஸ்தலமென்றும் கூறப்படும். அத்தலத்தில் பிறத்தல் முக்திக்குக் காரணமென்பர். இங்கே எழுந்தருளி யிருக்கும் மூர்த்திக்கு வன்மீக நாதரென்றும் புற்றிடங் கொண்டாரென்றும் திருநாமங்களுண்டு. இங்குள்ள தியாகராஜமூர்த்தி அஜபா நடனம் செய்தருள்பவர். இந்த மூர்த்தி தந்தையை இழந்த சோழ வமிசத்துக் குழந்தையொன்று ஆளுதற்கு உரிய பிராயத்தை அடையும் வரையில் பெருங் கருணையால் சோழ அரசராக இருந்து அரசாண்டனர்; அப்போது தருமம் நான்கு கால்களோடு நின்று விளங்கியதால் இத்தலத்தில் தர்ம விருஷபதேவர் நான்கு கால்களோடும் நின்ற கோலமாக ஸ்ரீ தியாகேசர் ஸந்நிதியில் உள்ளார். ஸ்ரீ தியாகேசர் அரசராக இருந்தமைபற்றி அவருக்கு ராஜோபசாரம் நடைபெற்று வந்தது. இப்பொழுதும் அவ்வாறே நடந்து வருகிறது. தேவாரத்தைக் கண்டுபிடித்துப் பண்வகுப் பித்த சோழமன்னன் இந்த ஸ்தலத்தில் தியாகேசருக்கு உரிய திருப்பணிகளைச் செய்தான். ஒரு பசுவின் கன்று இறந்ததற்காகத் தன் மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழன் அரசாண்ட நகரம் இதுவே. சோழர்களுக்கு முடி கவிக்கும் நகரங்கள் ஐந்தனுள் ஒன்று இது. சமீபத்தில் சட்டஞானத்தில் ஒப்புயரவற்ற பெரும் புகழ் பெற்ற ஜட்ஜ் முத்துசாமி ஐயரவர்கள் தோன்றிய பெருமை வாய்ந்த ஸ்தலமும் இதுவே.

பிறப்பு

திருவாரூரில் சங்கீத வித்துவான்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தீக்ஷிதர் பிறந்தது சங்கீத பரம்பரை. " குலவிச்சை கல்லாமற் பாகம் படும்" என்பது ஒரு தமிழ்நூற் செய்யுள்; குலவித்தை யானது கல்லாமலே பாதி வந்துவிடுமன்பது இதன் பொருள்.

தீக்ஷிதருடைய முன்னோர்கள் அக்கினிஹோத்ரம் செய்துவந்தமையால் இவர் பரம்பரையினருக்குத் தீக்ஷித ரென்னும் பெயர் அமைந்தது. இவருடைய தந்தையாராகிய ராமசாமி தீக்ஷிதரென்பவர் பெரிய சங்கீத வித்துவான். அவர் வைத்தீசுவரன் கோயிலில் இருந்தபொழுது ஸ்ரீ பாலாம்பிகை கனவில் தோன்றி முத்துமாலை ஒன்றை யளித்தாகக் கூறுவர். அது புத்திரப்பேற்றைக் குறிப் பிக்குமென்பர். இதுபோலவே வெள்ளிய மாலை முதலியன கனவிற் காணப்பட்டதாகவும் அவற்றின் பயன் புத்திரப்பேறென்று முனிவர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் சீவகசிந்தாமணி, பெருங்கதை, முதலிய ஜைன நூல்கள் கூறுகின்றன. இவர் பிதாவினுடைய கிருபையையும் குருவினுடைய கிருபையையும் பெற்றவர்; பஞ்சாயதன பூஜையைச் செய்து வந்தார். அதற்கேற்றவாறு இவர் கீர்த்தனங்களை அமைத்திருக் கின்றார்.

கல்விப் பயிற்சியும் இயற்கையும்

இளமை தொடங்கியே தீக்ஷிதருக்கு வேதத்திலும் வடமொழியிலும் முறையான பயிற்சி உண்டாயிற்று. சில காலம் காசியில் வசித்து வந்தமையால் வடநாட்டுச் சங்கீத்திலும் பழக்கம் ஏற்பட்டது. இவர் நல்ல ஒழுக்கமுடையவர். இவருடைய பெருமைக்கு அதுவும் ஒரு காரணமாகும். பிற வித்துவான்களுடைய திறமையை அறிந்து சந்தோஷிக்கும் நற்குணமுடையவர்; அவர்களுடன் அன்புடன் பழகுபவர்.

ஒரு முறை இவர் திருவையாற்றிற்குச் சென்றிருந் தார். அப்பொழுது உத்ஸவகாலமாதலால் திருவீதியில் எழுந்தருளும் சுவாமிக்குப் பின்னே சிஷ்யர்களோடு பஜனை பண்ணிக்கொண்டு சென்ற ஸ்ரீ தியாகையரவர்கள் நாயகி ராகத்தில் அமைந்த "நீ பஜனகான" என்னும கீர்த்தனத்தைப் பாடிக்கொண்டே சென்ற போது இவர் உடன் சென்று கேட்டுவிட்டு அவரை நோக்கி, " நாய கிக்கும் தர்பாருக்கும் வேறுபாடு இல்லாமல் பலர் பாடுவார்கள். தர்பார் சம்பந்தமில்லாமலே நாயகி ராகத்தை நீங்கள் கீர்த்தனத்தில் அமைத்திருக்கிறீர்கள்; பாடினீர்கள். உங்களைப்போல ராகங்களுடைய நுட்பங்களை அறிந்து பாடுபவர்கள் மிக அருமை" என்று பாராட்டினாராம்.

மனிதர்களையே பாடிக் காலங்கழித்த சில சங்கீத வித்துவான்கள் பிற்காலத்தில் பச்சாதாப முற்றுத் தெய்வங்களின் மீது பாடியதுண்டு. மதுரகவி, 'எப்படியாட் கொள்வையோ?' என்று ஸ்ரீ மீனாட்சி விஷயமாகவும், கனம் கிருஷ்ணையர், 'தில்லையப்பா' என்று ஸ்ரீ நட ராஜப் பெருமான் விஷயமாகவும் பாடிக் கண்ணீர் விட்டார்களாம். வித்தையை ஈசுவரார்ப்பணம் செய்ய வேண்டு மென்பதே முத்துசாமி தீக்ஷிதருடைய கொள்கை யாதலால் இவருக்கு அந்த விதமான வருத்தம் இல்லை. இவர் சமரச புத்தியை யுடையவர். இன்முகமும் இன்சொல்லுமுள்ளவர். பாடும்போது இவர்பால் அங்க சேஷ்டை இராது. இவருடைய வாழ்க்கை இளமையிலேயே நற்குலப் பிறப்பாலும் சிவஸ்தல யாத்திரையாலும் பெரியோர் அனுக்கிரகத்ததாலும் குறைபாடில்லாத உயர்ந்த வழியிற் சென்றது.

காசியாத்திறையினால் தேசாடன விருப்பம் இவர் மனத்திற் குடிகொண்டது. உபதேச ஸ்தலமாகிய காசியில் சிதம்பரநாத ஸ்வாமி யென்பவரிடம் ஸ்ரீ வித்தையைக் கற்றுக்கொண்ட இவர் பராசக்தி க்ஷேத்திரமாகிய திருவாரூரிலிருந்து அந்த மகா மந்திரத்தை உருவேற்றிப் பலனைப்பெற்றது பொருத்தமாகவே உள்ளது.

கீர்த்தனைகளை இயற்றல்

காசியிலிருந்த பின்பு திருத்தணிகைக்கு வந்து தவம் புரிந்து முருகக்கடவுளுடைய திருவருளை இவர் பெற்றார். அதுமுதல் இவர் கீர்த்தனங்களை இயற்றத் தொடங்கினார். ஸ்ரீ குகப்பெருமான் திருவருள் பெற்ற மையை நினைந்து, "குருகுக" என்ற முத்திரையைத் தம்முடைய கீர்த்தனங்களில் அமைப்பது இவர் வழக்கம்.

வடமொழியில் கீர்த்தனம் மிகவும் அரிய செயல். திருவருட்பேறு நிரம்ப உடையவர்களுக்கல்லாமல் அது கைகூடாது. திருத்தணிகைப் பெருமான் பால் அருள் பெற்றது தொடங்கி ஸ்தலங்கள்தோறும் தீக்ஷிதர் சென்று ஸ்வாமி தரிசனம்செய்து அவ்வக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகள் விஷயமாக இனிய கீர்த்தனங்களை இயற்றித் துதித்து வந்தார்.

கீர்த்தனங்களின் இயல்பு

தீக்ஷிதருடைய கீர்த்தனங்களில் அவ்வத்தல வரலாறுகள் இயன்ற வரையில் அமைந்திருக்கும். உரிய ராகப்பெயர் பெரும்பாலும் தொனியில் காணப்படும். சங்கீத அம்சம் அவற்றில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்குமென்று சொல்வது மிகை. சங்கீத இன்பத்தை நினையாமற் படித்து போதிலும் பக்தி மார்க்கத்தை அவற்றால் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இவருடைய கிருதிகள் உயர்வடைந்தன.

தேவாரம் முதலிய திருமுறைகளும் திருப்புகழும் ஸ்தலங்கள் தோறுமுள்ள மூர்த்திகளைப் பாடியனவே; திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பகுதிகளும் இத்தகையனவே.

பிற்காலத்தில் மனிதர்களைப் பாடிய பாட்டுக்கள் மலிந்தன. ஆனாலும் அத்தகைய பாட்டுக்களுக்கு அந்த அந்தக் காலத்திலேதான் மதிப்பு இருக்கும். தெய்வ ஸ்துதியாக உள்ள பாட்டுக்களோ என்றும் குன்றாத இளமையோடு இலங்குகின்றன. மனமொழி மெய்களால் தெய்வத்துக்குத் தொண்டு புரிந்த தீக்ஷிதரவர்களுடைய கீர்த்தனங்கள் சங்கீத நூலாதலோடு பக்தி வாசகமும் ஞான சாஸ்திரமும் ஆகும்; ஸ்தலங்களின் பெருமைகளைக் கூறும் புராணச் சுருக்கமும் சிவாகம நுட்பங்களை விளக்குவனவும் யோகவழியைக் காட்டுவனவும் அவையே.

இப்படியே பல ஸ்தலங்களுக்கும் சென்று ஸ்தல விஷயங்களை விரிவாக அமைத்துத் தமிழில் கீர்த்தனங் கள் பாடியவர்களுள் எனக்குத் தெரிந்தவர்கள்:-பாபநாச முதலியார், கனம் கிருஷ்ணையருடய தமையனாராகிய பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் முதலியவர் கள். இவர்கள் இயற்றியவற்றிற் பல மெட்டுக்கள் விளங்காமையால் ஒளி மழுங்கி மறைந்து கிடக்கின்றன. பாடு வோரும் மிகச் சிலரே.

தேவாரப் பண்கள் ரக்தி ராகத்தில் அமைந்துள்ளன. ஆதலால் அந்த ராக பாவங்களை அறிவதற்குத் தீக்ஷிதருடைய கீர்த்தனங்களைக் கீழ்வேளூர்வாசியான சொக்கலிங்க தேசிகரென்பவர் கற்றனர்; பிறகு ராக பாவங்கள் புலப்படும்படி தேவாரங்களைப் பாடிப் பல பாடசாலைகளை அமைப்பித்துக் கற்பித்து வந்தனர். தேவார கோஷ்டிகள் இப்பொழுது பாடி வரும் சம்பிரதாயங்கள் எல்லாம் அவர் கற்பித்தனவே. அவருடைய சிறிய தகப்பனார் தீக்ஷிதரிடம் கற்றுக் கொண்டவர். அவர் பெயர் ஞாபகத்தில் இல்லை.

தீக்ஷிதருடைய கீர்த்தனங்களின் மேம்பாட்டிற்குக் காரணம் அவற்றிற் பெரும்பாலன ரக்தி ராகங்களிலே அமைந்திருந்தலும் த்ஸௌகத்தில் (முதற் காலத்தில்) அமைந்திருத்தலும் ஆகும். இவர் எல்லாத் தெய்வங்களின்மீதும் பாடியிருக்கிறார். இதனாலும் இவருடைய கிருதிகள் பல இடங்களிற் பரவின.

நமது கடமை

சில வருஷங்களாக இந்நாட்டில் சுத்தமான சங்கீ தத்துக்குப் பலவகையான இடையூறுகள் ஏற்பட்டுள் ளன. பாஷைக்குரிய அழகையும் சங்கீத அமைப்பையும் குலைத்து நிற்கும் பாட்டுக்கள் இப்போது மூலை முடுக்கு களிலெல்லாம் பரவிவிட்டன. பழைய சங்கீத வித்துவான்களையும் பழைய சாகித்தியங்களையும் மறந்து விட்டோம்.

இனி, ஸபைகளில் பழைய ஸாகித்தியங்களைப் பாடும் முயற்சி அதிகரிக்க வேண்டும். தெரிந்தவர்களிடத்தில் முறையாக கற்றுப் பாடச் செய்வது உத்தமம். ஸ்வரப்படுத்தி அச்சிற் பதிப்பித்தல் மட்டும் போதாது. அதில் கீர்த்தனங்களின் முழுத் தோற்றமும் அமையாது. ஸினிமா முதலியவற்றிற்குப் புதிய பாட்டுக்களை அமைப்போர்கள் பழைய பாட்டுக்களை இணைக்கக் கூடிய இடங்களில் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய செயல்களாலேதான் தீக்ஷிதரைப் போன்ற பெரியோர்களுடைய அருமை பெருமைகளை உலகம் உணர்தல் கூடும். இறைவன் திருவருளால் நம் முயற்சிகள் நற்பயனை அளித்து உதவுவனவாக.

---------------------

[ நன்றி : நல்லுரைக் கோவை -2 , மதுரைத் திட்டம் ] 

தொடர்புள்ள பதிவுகள் :