சனி, 12 மார்ச், 2016

காந்தி - 2

தண்டி யாத்திரை

 குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா



மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் ஆங்கிலேயர் விதித்த தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத்  துவங்கினார் காந்தி.  உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை என்று அறியப்பட்ட நிகழ்ச்சி இது. 

அதைப் பற்றிப் பாடுகிறார் அழ.வள்ளியப்பா .


கடலில் நீரை எடுத்தே உப்புக்
     காய்ச்சு தற்கும் வெள்ளையர்
தடை விதித்தார். அதனை மீறச்
     சாந்த மூர்த்தி எண்ணினார்

இரண்டு நூறு மைல்கள் தாண்டி
     இருக்கும் கடலை நோக்கியே
அருமைத் தொண்டர் பலரும் சூழ
     ஐயன் நடந்து சென்றனர்.

தளர்ந்த வயதில் காந்தி யடிகள்
     தண்டிக் கிராமம் நோக்கியே
தளர்வு சிறிதும் இன்றி நடந்தார்,
     தடியை ஊன்றி ஊன்றியே.

அறுபத் தோரு வயதில் கூட
     அண்ணல் விரைந்து நடந்திடும்
அரிய காட்சி கண்டு மக்கள்
     அவரைத் தொடர்ந்து சென்றனர்.

தண்டி தன்னில் உப்புக் காய்ச்சித்
     தடையை காந்தி மீறவே,
எண்ணில் லாத தேசத் தொண்டர்
     இதுபோல் உப்புக் காய்ச்சினர்.

தடியால் அடித்துத் தொண்டர் தம்மைத்
     தாக்கி னார்கள் சேவகர்.
பிடித்துச் சிறையில் அடைத்து வைத்தும்
     பெரிதும் தொல்லை கொடுத்தனர்.

காந்தி யோடு தலைவர் பலரும்
     கைது செய்யப் பட்டதால்,
சேர்ந்து நின்று கிளர்ச்சி செய்தார்
     தேச மக்கள் யாவரும்.

நாட்டில் எங்கும் சட்ட மறுப்பு
     நாளும் நடந்து வந்ததால்,
ஆட்சி யாளர் பணிந்து விட்டார்.
     அறமே வெற்றி பெற்றது!

உரிமை தந்தார் உப்புக் காய்ச்ச
     உடனே வெள்ளைக் காரர்கள்.
சிறையி லிருந்து வெளியே விட்டார்.
     தேச பக்தர் தம்மையும்.

 [ நன்றி : பாட்டிலே காந்திகதை , www.tamilvu.org


தொடர்புள்ள பதிவுகள்:


அழ. வள்ளியப்பா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக