வியாழன், 10 மார்ச், 2016

எஸ். எஸ். வாசன் - 3


வாசனைப் பற்றி 
தமிழ் அறிஞர் வ.ரா. , பெரியார் ஈ.வே.ரா 

மார்ச் 10. எஸ். எஸ். வாசன் அவர்களின் பிறந்த தினம்.

1) முதலில், அவரைப் பற்றி வ.ரா. எழுதியது:

============================
றைந்த தமிழ் அறிஞர் வ.ரா.  'தமிழ்ப் பெரியார்கள்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். அதில் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் இங்கே இடம் பெறுகின்றன.
''எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கிடையாது. எதைச் செய்ய நினைத்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாக யோசித்து முடிவு கண்ட பிறகுதான் அதில் இறங்குவேன். ஒன்றைத் துவக்கி, அதைப் பாதி வழியில் நிறுத்துவது என்பது என் இயற்கைக்குப் பொருந்தியது அல்ல.''
- இவ்வாறு சொல்பவர் எஸ்.எஸ்.வாசன். வெற்றியின் ரகசியங்கள் என்பதை விளக்கிக் காட்டும் நூலைப் போல, வாசன் தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்று சொன்னால், அது மிகையாகாது. வாழ்க்கை என்ற போர்க்களத்தில் அங்குலம் அங்குலமாகப் போராடி, முன்னேறி வந்தவர் வாசன்.
'என் அன்னையால்தான் நான் இந்தப் பெரும் பதவிக்கு வந்தேன்' என்று சத்ரபதி சிவாஜியும், நெப்போலியன் சக்கரவர்த்தியும் சொன்னதில் உண்மை இருக்குமோ இருக்காதோ, எனக்குத் தெரியாது. வாசனின் தற்போதைய சிறந்த நிலைக்குக் காரணம் 'தாயும் தகப்பனும்' ஆன அவருடைய தாயார்தான்.
வாசன் உயரமுமல்ல; ரொம்பக் குள்ளமுமல்ல.  உடல் கனம் கொண்டவருமல்ல; மெலிந்தவ  ருமல்ல. சிவந்த மேனி உடையவர். புன்னகை பூக்கும் முக விலாசம் படைத்தவர். கணீர் என்று பேசும் குரல், அவரது தனிப் பொக்கிஷமாகும். பதற்றமில்லாத நாக்கு; அவசரப்படாத மனது. அலட்சியம் செய்து அவதூறு பேசும் தன்மைக்கும் அவருக்கும் வெகு தூரம்.
தாம் தேச பக்தன் என்றாவது, சமூகத் தொண்டன் என்றாவது, கலா ரசிகன் என்றாவது, இலக்கியப் பிரியன் என்றாவது வாசன் பறைசாற்றியதே இல்லை. படாடோபம் என்பதே அவருக்கு இனிப்பில்லாத ஒன்று. பலாத்காரத்திலும் இனிப்பு இல்லை. கட்டாயப்படுத்திக் காரியத்தைச் சாதித்துக் கொள் வது அவருக்குப் பிடித்தமே இருப்பதில்லை.
காக்காய் பிடிக்கிறவனைக் கண்டால் அவருக்கு எல்லை யில்லாத அவமதிப்பு. ரசிகர்களுடனும், புத்திசாலிகளுடனும், காரியவாதிகளுடனும் கபடமில் லாத மனத்தர்களுடனும் பழகு வதில் வாசனுக்கு அளவு கடந்த பிரியம். சங்கீதத்திலும் சித்திரத்திலும் நகைச்சுவையிலும் ஆழ்ந்து கிடக்கும் இவருடைய உள்ளம், சுருதி பேதத்தைக் காணப் பொறுப்ப தில்லை.

வாழ்க்கை என்ற போர்க்களத்தில் அங்குலம் அங்குலமாகப் போராடி முன்னேறி வந்தவர் வாசன். அவரைத் தட்டிக் கொடுக்க அன்று யாரும் முன் வரவில்லை. ஆனால், அவரை மட்டப்படுத்த முன் வந்தவர்கள் எத்தனை பேர்களோ? அவரைப் பற்றி ஆரம்பத்தில் நாலு நல்ல வார்த்தை சொல்ல ஈ, காக்கை கூடக் கிடையாது. யாரும் வாசனைத் தூக்கிவிடவில்லை. தன் கையே தனக்குதவி என்ற கொள்கையில் ஊறிப்போனவர் வாசன்.


வாசனுடைய உயர்வுக்குக் காரணம், அவருடைய தாயார்தான்! ''அம்மா வீட்டில் இல்லாமல் போனால் எனக்கு என் வீட்டிற்குப் போக மனமில்லை'' என்று வாசன் பச்சைக் குழந்தையைப்போல அபரிமிதமான வாஞ்சையோடு சொல்லும்போது, அவரைப் படம் பிடிக்க நீங்கள் எல்லோரும் ஆசைப்படுவீர்கள். தாயாரிடம் அவருக்கு இருக்கும் வாஞ்சை உணர்ச்சி அவ்வளவையும் அவருடைய (குழந்தை) முகத் தில் அப்படியே காணலாம்.
'''தாய்என்று சினிமாப் படம் பிடிப்பதற்கு நல்ல கதையாகச் சொல்லுங்கள். அந்தப் படம் பிடித்ததும், நான் சினிமாத் தொழிலிலிருந்து விலகிக் கொள்கி றேன்'' என்று வாசன் என்னிடம் ஒரு சமயம் சொன்னபோது, எனது உள்ளம் கலங்கிக் கலகலத்துப் போனது.

அந்தக் காலத்தில் அவருக்கு நண்பரும் துணையாகவும் இருந்தவர் 'தேச பந்துஎன்ற பத்திரிகையை நடத்தி வந்த, காலம் சென்ற கிருஷ்ணசாமிப் பாவலர். வாசனை பாவலரோடுதான் பல காலும் பார்க்க முடியும். சம்பாஷணை காலத்தில், தான் கொண்டிருந்த கொள்கைக்கும் கட்சிக்கும் எதிரிடையாக இருந் தாலும் பிறர் சொல்வது அனுபவத்துக்குப் பொருந்தின உண்மையாயின், அதை ஒப்புக்கொள்ள வாசன் தயங்கினதே இல்லை. அது மட்டுமல்ல, அந்த உண்மையை எடுத்துக் காண்பித்தவரை அப்பொழுதே கருமித்தனமில்லாமல் பாராட்டுவார். தமக்குத் தெரியாததை மற்றவர் கண்டு பிடித்துவிட்டாரே என்று சிறிதும் பொறாமைப்படமாட்டார்.

ஆனந்த விகடனுக்கு சொந்த அச்சுக்கூடம் வாங்க வாசனிடம் போதிய பணமில்லாமல் இருந்தது. உடைந்த அச்சுயந்திரம் விலைக்கு வந்தது. சரியானபடி 'ரீபில்ட்செய்தால், அது நன்றாக உழைக்கும் என்று நிபுணர்கள் சொன்னார்கள். பத்திரிகைத் தொழிலை அப்போதுதான் ஆரம்பித்திருந்த வாசன், அச்சுத் தொழிலில் அனுபவமில்லாத வாசன், நிபுணர்களின் வார்த்தையை நம்பி அந்த மிஷினை விலைக்கு வாங்கினார். அது உழைத்த உழைப்பு பூரணமாகச் சொல்லலாம். உடைந்த யந்திரத்தை வாங்கலாம் என்ற வாசனின் துணிச்சலையும் நம்பிக்கையையும் பாருங்கள். அந்தத் துணிவுக்கும் தன்னம்பிக்கைக்கும்தான் வாசன் என்று பெயர். 


2) பெரியார் ஈ.வே.ரா. எழுதியது:

ந்தக் காலத்திலே 'கேடிலாக் வியாபாரம்னு ஒண்ணு உண்டு. அதாவது, எல்லா ஷாப்பிலே இருக்கிற சாமான்களோட பெயர்களையும் பட்டியல் எடுத்து, புஸ்தகமாப் போட்டு, தபால்லே அனுப்பி வைக்கிறது. அந்தப் புத்தகத்திலே சில பொருள்களோட பொம்மையும் இருக்கும். புஸ்தகத்தைப் பார்த்துவிட்டு ஆர்டர் வரும். கடையிலே போய் அந்தந்த சாமான்களை வாங்கி அனுப்பி வைக்கிறது. இதிலே கிடைக்கிற கமிஷன்தான் லாபம். இதுக்குத்தான் 'கேடிலாக் வியாபாரம்னு பேரு.


அந்தக் காலத்திலே எஸ்.எஸ்.வாசன் இந்த வியாபாரம் பண் ணிக்கிட்டிருந்தாரு. ஒரு நாளைக்கு என்கிட்டே வந்து, உங்க 'குடியரசுபத்திரிகையிலே என் வியாபாரத்தை விளம்பரம் பண்ணணும்னாரு. அப்போ 'குடியரசிலே ஓர் அங்குலத்திற்கு இரண்டணா விளம்பர சார்ஜ். நான் இதைச் சொன்னதும், 'இரண்டணாதானா?’ன்னு கேட்டார் வாசன். 'ஆமாம்னேன். 'எவ்வளவு விளம்பரம் கொடுத்தாலும் எடுத்துப்பீங்களா?’னு கேட் டார். எனக்கு அந்தக் கேள்வியே புதுசா இருந்தது. யாராவது விளம்பரம் வேண்டாம்பாங்களா? 'சரின்னேன். இந்தப் பிள்ளை என்ன பண்ணிச்சு... எங்கெங்கேயோ போய் விளம்பரம் சேகரிச்சிட்டு வந்து, 'குடியரசுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுது. எனக்கு அங்குலத்துக்கு இரண்டணாதான் கொடுக் கும். ஆனா, மத்தவங்க கிட்டேருந்து நிறைய வாங்கிப்பாரு. இப்படிக் கொஞ்ச காலம் என் கிட்டே விளம்பர ஏஜென்ட்டா இருந்தார் வாசன்.

ஒரு பத்திரிகை நடத்தினா, விளம்பரம் மூலம் பணம் வருது, நமக்குத் தோண்ற விஷயத்தையும் மக்களுக்குச் சொல்ல முடியுதுங்கறதைப் பார்த்தபோது, நாமே ஒரு பத்திரிகை நடத்தினா என்னன்னு வாசனுக்குத் தோணியிருக்கு. அதனால்தான் ஆனந்த விகடன் ஆரம்பிச்சாரு. ஆரம்ப காலத்திலே என் சங்கதிங்களுக்கு நிறைய இடம் கொடுத்தாரு. அப்ப அடிக்கடி பார்க்கிறதும் உண்டு.  எப்போதும் எங்கிட்டே ஒரு மரியாதை!

அவர் ஒரு ராஷனலிஸ்ட்; பகுத் தறிவுவாதி! சோஷியலாஜிகலி என் கருத்துக்கு ஒத்து வருவாரு. அவர் எடுக்கிற எல்லா சினிமா படத்துக்கும் 'விடுதலைபத்திரிகைக்கு விளம்பரம் உண்டு. கேட்காமலே விளம்பரமும் வரும்; பணமும் வரும். புராணப்படம் தவிரத் தான்!

பத்திரிகைத் துறையிலும் சரி, பொது வாழ்விலும் சரி, ஒரு குற்றம்கூட சொல்ல முடியாதபடி பெரிய மனுஷனா வாழ்ந்தார் அவர். மூணு நாலு வருஷத்துக்கு முந்தி, என் பிறந்த நாளுக்கு மீரான் சாகிப் தெரு வீட்டுக்கு வந்தார். வழக்கப்படி மரியாதையா நின்னுகிட்டேயிருந்து, பேசிட்டுப் போயிட்டாரு. போனப்புறம் பார்த்தா, ஒரு கவர் இருக்குது. அதிலே இரண்டாயிரம் ரூபாய் பணம்! எனக்கு ஆச்சரியமாப் போச்சு! கொடுக்கிறதை யாருக்கும் தெரியாம கொடுக்கணும்கிற பெரிய குணம் அது. ரொம்பப் பெரிய மனுஷன் அவர்.

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக