புதன், 25 மே, 2016

வி.கனகசபைப் பிள்ளை

"தமிழிலக்கியத் தேனீ " வி.கனகசபைப் பிள்ளை
 முனைவர் பா.இறையரன்

மே 25. தமிழறிஞர் வி.கனகசபைப் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.
அவரைப் பற்றித் தினமணியில்  2012-இல் வந்த ஒரு கட்டுரை இதோ !;

====



சங்க காலத்திலிருந்தே இலங்கையில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து, வின்சுலோ, பெர்சிவல் ஆகிய இருவரும் தாம் செய்த தமிழ் ஆங்கில அகராதி, கிறிஸ்துவமறை மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் பதிப்பிக்க ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், விசுவநாதன் ஆகியோரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். வின்சுலோ செய்த "தமிழ்-ஆங்கில அகராதி' அச்சிடும் பணியில் உதவிவந்த விசுவநாதன் மகன்தான் கனகசபை. இவர் 25.5.1855-இல் பிறந்தவர்.

கனகசபை, சென்னை அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபின், அஞ்சல் துறையில் அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார். விடுப்பில் சென்று ஓராண்டில் சட்டவியலில் இளநிலைப் பட்டம் (பி.எல்.) பெற்றார். பின்னர் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பொன்னையாப் பிள்ளையின் மகள் செல்லம்மாளை மணந்தார். அதனால், மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். முதல் வழக்கிலேயே வெற்றி பெற்றார். ஆனால், இவர் வெளியில் செல்லும்போது வழக்கில் தோற்றவர் இவரைப் பற்றி அவதூறாகப் பேசியதால், மனம் நொந்த கனகசபை வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டு, சென்னையில் அஞ்சல்துறை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநில அஞ்சலகங்களில் உயர்நிலைக் கண்காணிப்பாளரானார்.

கனகசபையின் தந்தையும் தாயும் அடுத்தடுத்த ஆண்டில் (1884, 1885) இறந்தனர். தந்தையையும் தாயையும் இழந்த துன்பம் போதாதென்று கனகசபையின் குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். வாழ்வில் ஏற்பட்ட துன்பம் கண்டு துவண்டுபோன தம் உள்ளத்தைத் தமிழ்ப் பற்றால் தேற்றி, அலுவலகப் பணிபோக மீதி நேரமெல்லாம் தமிழ் இலக்கியங்களில் மூழ்கினார்.

அக்காலச் சென்னை மாநிலத்தின் அனைத்து ஊர்களுக்கும் அஞ்சலகங்களை மேற்பார்வையிடும் பொருட்டுச் சென்றுவந்தார். அவ்வாறு செல்லும் ஊர்களில் கிடைக்கும் ஏட்டுச்சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார்.

தமிழ் இலக்கண-இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், படியெடுக்கவும், குறிப்புகள் எழுதவும் அப்பாவுப்பிள்ளை என்பவர் 20 ஆண்டுகள் கனகசபையின் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். 20 ஆண்டு கடும் உழைப்பில் தொகுக்கப்பெற்ற அவ்வளவு ஏடுகளையும் உ.வே.சாமிநாதையருக்கு அவ்வப்போது வழங்கினார் கனகசபை.

பனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்த கனகசபை, இலக்கியங்களை வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்யத் தொடங்கினார். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டி, சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை "மெட்ராஸ் ரெவியூ' இதழில் ஆங்கிலத்தில் எழுதிவந்தார். இக்கட்டுரைகளை "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள்' ( Tamils Eighteen Hundred Years ago ) என்ற ஆங்கில நூலாக வெளியிட்டு, அந்நூலை சுப்பிரமணிய ஐயருக்குக் காணிக்கை ஆக்கினார்.

சீன நாட்டினருக்கும் தமிழ் நாட்டினருக்கும் இருக்கக்கூடிய பண்பாட்டு, நாகரிக இன ஒற்றுமைகளைத் தம் நூலில் கனகசபை நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் அதற்கு முந்தைய சங்க இலக்கியங்களிலும் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு தமிழக நிலப்பிரிவு நில அமைப்பு, அயல் நாட்டு நிலப்பிரிவு நில அமைப்பு, அயல்நாட்டு உள்நாட்டு வணிகம், பழங்குடியினர் வாழ்வு, மூவேந்தர் ஆட்சி, இலக்கியம், சமயம் ஆகியன பற்றி எழுதியுள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரிகளின் செம்மாந்த வாழ்வியலை கனசபையின் இந்நூல் வரலாற்று அடிப்படையில் ஆங்கிலத்தில் உலகுக்கு உணர்த்தியது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் தோன்றிய களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழன் உலா ஆகிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவை, தமிழரின் தொன்மை பற்றிய ஆங்கில இதழில் ( The Tamilian Antiquary ) தமிழ் வரலாற்று இலக்கியங்கள் ( Tamil Historical Texts ) என்ற தலைப்பில் வெளிவந்தன. சீன நாட்டுத் தொடர்பை நிறுவிய கனகசபை, தமிழர்கள் வங்காளம், பர்மா முதலிய நாடுகளை வென்ற வரலாற்றுப் பெருமையையும் ( The conquest of Bengal and Burma by the Tamils: Rajaraja chola ) ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வுக் குழுக்களில் கனகசபை தேர்வாளராக இருந்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் 1905-இல் தலைமை தாங்கித் தமிழரின் வரலாற்றுப் பெருமை பற்றிச் சொற்பொழிவாற்றினார். எட்வர்ட் இளவரசர் சென்னை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை நல்கினார்.

வலங்கைமான் கணியர் (ஜோதிடர்) இருவரின் வழி காட்டுதலில் "ஓகம்' (யோகப் பயிற்சி) கற்றிருந்த கனகசபை, உடற்பயிற்சியும் செய்து நல்ல உடற்கட்டுடன் வாழ்ந்தவர். அஞ்சலக மேற்பார்வைப் பணி தொடர்பாகக் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது உடல் நலங்குன்றி 21.2.1906-இல் காலமானார்.

எங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் உள்ளதோ அங்கெல்லாம் சென்று தேனீபோல் உழைத்து, இலக்கண-இலக்கியம் என்னும் தேனை சேகரித்துத் தந்த கனகசபைக்கு தமிழ்கூறுநல்லுலகம் மிகுந்த கடமைபட்டுள்ளது.

[ நன்றி: தினமணி ]

தொடர்புள்ள பதிவு:
வி. கனகசபை - தமிழ் விக்கிப்பீடியா

2 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

உங்கள் கருவூலம்த்திலிருந்து நாட்தோறும் நன்முத்து பொறுக்கும் நான் அடிக்கடி கருத்து உரைப்பதில்லை. "தமிழிலக்கியத் தேனீ " வி.கனகசபைப் பிள்ளை அவர்களை பற்றி படித்து மகுழ்ந்தேன்.

UK Sharma சொன்னது…

ஒரு தடவை இலங்கை நண்பர் ஒருவர் என்னிடம் 'தமிழகத்தில் தாமோதரம்பிள்ளை பெயரை தாமோதரனார் என எழுதுகிறார்கள். ஆனால் அவரது முழுப்பெயரே தாமோதரம்பிள்ளை தான்' என்று கூறினார்.
இலங்கை தமிழர்களில் பிள்ளை என்பது ஜாதிப் பெயர் அல்ல. வெவ்வேறு ஜாதியாரிடையே பிள்ளை என வரும் பெயர்கள் உள்ளன. சென்னை பல்கலைக்கழக முதலாவது பட்டதாரி தாமோதரம்பிள்ளை அவர்களின் பெயரும் அவ்வாறே. அவர்கள் (இலங்கையில்) பிள்ளை என்பதை தனியாகப் பிரித்து எழுதுவதில்லை. நடராஜபிள்ளை, பத்மநாதபிள்ளை என எனக்குத் தெரிந்தவர்களின் பெயர்கள் உள்ளன. தமிழகத்திலும் முன்னர் பல நாதஸ்வர தவில் வித்வான்கள் பிள்ளை என்ற பெயருடன் இருந்திருக்கின்றனர்.