ஞாயிறு, 9 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 3

கதை சொல்லும் பேரூர் சிற்பம் !  


சில்பி’யின் சிற்ப ஓவியங்களைப் பார்த்துப் பார்த்து மயங்கி ,  ‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழியாய்’ப் பள்ளி  விடுமுறைகளில் அவற்றைப் பார்த்துக் கோட்டோவியங்கள் வரைந்து பழகிய பல இளைஞர்களுள் நானும் ஒருவன்.

அப்படிப்பட்ட சில முயற்சிகள் இதோ!சரி! இன்னொரு கட்டுரையைப் பார்ப்போம்! பேரூர்ச் சிற்பங்கள் இடம் பெறும் செல்வம்  இது.


[நன்றி : விகடன்]


தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள் - 1

தென்னாட்டுச் செல்வங்கள் -2

மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

தென்னாட்டுச் செல்வங்கள் : மற்ற பதிவுகள்

~*~o0O0o~*~

கட்டுரையைப் படித்த கவிஞர் சிவசூரியின் பின்னூட்டம்
====================================================

பேரூர்ச் சிற்பம் - குதிரை வீரனும் பாயும் புலியும்

பட்டுக் கதிரொளி மின்னத் தெரியும்
    பஞ்ச கல்யாணிக் குதிரை - அது
பாயும் வேகம் பாரிதன் மேலே
     பற்பல காதம் அதிரும் - அதைத்

தொட்டுத் தழுவித் துலங்கும் மணிகள்
    துள்ளிக் களிக்கும் ஆரம்- மிகத்
துணிவாய் அதன்மேல் மலைபோல் பருத்த
    தோளணி செய்யும் தீரம்


எட்டுத் திசையும் எழுந்து வியந்து
    இமைகள் விரிந்து நோக்க- எழிற்
கட்டியஞ் சொல்ல இளமை கொஞ்சும்
    காவலன் மகன்போல் பார்க்க

இட்டுள மணிமுடி இரத்தின ஒளியால்
    இருள்நிறை காடும் மின்ன - கால்
இருபுறம் இட்டே முதுகின் மேலே
    இருக்கும் மிடுக்கைக் கவிதை

கட்டிச் சொல்லிட முடியா தெனமனம்
    கற்பனை செயுமவன் தோற்றம்
கையில் வேலுடன் கந்தனைப் போலும்
    கண்டன கண்ணவன் ஏற்றம்


கட்டிளங் காளையின் பக்கம் யாரோ
    காவலன் பணியாள் போலும் -ஒளி
பட்டுக் கலங்கிய வனப்புலி மிரண்டு
    பணியாள் மீதுடன் பாயும்


பணிபுரி ஆளைக் காத்திட வேண்டி
    பார்த்திபன் கைவேல் நீளூம் - அது
பயந்தரு புலியின் உடலினில் வேகம்
    பட்டுத் துளைத்து மீளும்


துணிவுடன் பணியாள் தூக்கிய வாளும்
    துளைத்துடல் மறுபுறம் செல்லும் - பேரூர்
தூண்வளர் கதையைச் சில்பியின் துல்லியத்
    தூரிகை நமக்கும் சொல்லும்.


பேரூர்ச் சிற்பம் - ஆறுமுகன்

சிங்கமும் யாளியும் பீடுடன் சுமக்கும்
    சீரார் பீடம் மீது
பொங்கிடும் செருக்குடன் பொன்னகை அணிந்து
    பொலியும் மயூரம் தோன்றும்

அங்கதன் அலகினில் இடுக்கிக் கொண்டதோர்
    அபயம் வேண்டிடும் அரவும்
மங்கை பாகனின் நுதல்விழி எரித்த
    மன்மதன் கோடி உருவும்

அங்கொரு மகனாய் அழகிய குகனாய்
    அறுமுகச் சோதியாய் வரவும்
இங்கெழில் மயில்மேல் இருப்பதும் கண்டே
    இடரெலாம் மறந்து மகிழும்

திங்கட் குடையாய்த் தெரிந்திடச் சிரம்மேல்
    திகழ்கொடி படர்திரு வாசி
எங்கும் திகழும் இன்னருள் அறுமுகம்
    இனிதுடன் அளித்திடும் ஆசி

மங்கல நுதலில் அம்பொன் திலகம்
    வாச மலரெனத் திகழும்
குண்டலம் செவியைப் பற்றிக் கொண்டு
    குதித்துத் தோள்மேல் மகிழும்

கண்டையும் தண்டையும் கழலும் சிலம்பும்
    கனகச் சங்கிலி அணிகளும்
அண்டம் அதிர்ந்திடத் தளர்நடை நடந்த
    அழகனின் அரைஞாண் மணிகளும்

கண்டவர் தம்மேல் கருணை பொழியும்
    கருவிழி ஆறி ரண்டும்
மண்டிட அருளும் சரணும் தருகிற
    மலர்க்கரம் ஓரி ரண்டும்

ஆயுதம் பற்பல ஏந்திய கரமும்
    அனைத்துத் திக்கையும் காக்கும்
மாயுதல் எண்ணி மாயா தேயென
    மருளை விரட்டிப் போக்கும்


எனுமிவை யெல்லாம் இப்புவி மகிழ
    எழிலார் சிலையில் கண்டே
இனிதவை யெல்லாம் இங்கொரு படமாய்
    எழுதிய சில்பியார் வாழ்க


சிவ சூரியநாராயணன்.

10 கருத்துகள்:

M. Shanmugam சொன்னது…

நல்ல பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி.


Tamil News Service

semmalai akash சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துகள்.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

என் ஊர்க்கோயிற் சிற்பங்கள் (பேரூர்) கண்ணீர் மல்க வைத்தன

கலாகுமரன் சொன்னது…

தகலுக்கு மிக்க நன்றி ஐயா. பேரூர் மற்றும் பேரூர் சிற்பங்கள் குறித்த தகவல்களை சுவடுகளை தேடி எனும் தொடர் பதிவாக போட்டிருந்தேன் ஏதோ என்னாலான சிறு முயற்சி.
http://eniyavaikooral.blogspot.com/2012/05/5.html

Pas S. Pasupathy சொன்னது…

யாவருக்கும் நன்றி.
அ. பசுபதி கலாகுமரனின் வலைப்பூவைப் பார்ப்பார் என்று நம்புகிறேன்.
( மிக அருமை, கலாகுமரன்.. )

BalHanuman சொன்னது…

பசுபதி சார்,

இந்தக் கவிதையை எழுதியது யார்? மிகவும் சிறப்பாக, குழந்தைகளும் படிக்கும்படி எளிமையாக இருக்கிறது.

பகவான் ரமணர் உரைகேட்கப்
பக்தர் இருந்தார் அமர்ந்தபடி
அகமும் முகமும் மலர்ந்தபடி
அருளுரை சொன்னார் கனிந்தபடி

அணில்போல் இருங்கள்; தவறில்லை!
ஆனால் எலிபோல் கூடாது!
மணிமொழி இதனை உதிர்த்தபடி
மவுனமானார் நம் ரமணர்!

காரணம் வேண்டிப் பக்தர்கள்
காத்துக் கொண்டே இருந்தார்கள்
பூரண ஞானி விடைசொன்னார்
புன்னகை ஒன்றைத் தந்தபடி!

உண்ணும் அணிலைப் பாருங்கள்;
உண்டது போதும் என உணர்ந்தால்
கொண்ட கனியை அதன்பின்னர்க்
கொறிப்பதில்லை; ஓடிவிடும்;

ஆனால் எலியோ பதுக்குவதில்
ஆசை கொள்ளும்; மறுபடியும்
தானாய் வந்து பொருள்தேடும்
தனக்கு மீறிச் சேர்த்துவிடும்

போதும் என்ற மனம் இன்றிப்
பொருளைச் சேர்க்கக் கூடாது
நீதி இதுதான், எனச்சொல்லி
நிறுத்தி அருளினார் ரமணமுனி!

BalHanuman சொன்னது…

பசுபதி சார்,

தென்னாட்டுச் செல்வங்கள் பற்றி இந்தத் தகவல் உங்களுக்காக...

http://www.vikatan.com/books/?pro_id=9

Pas S. Pasupathy சொன்னது…

>>பசுபதி சார்,

>>தென்னாட்டுச் செல்வங்கள் பற்றி இந்தத் தகவல் >.உங்களுக்காக...

>.http://www.vikatan.com/books/?pro_id=9

நன்றி. முன்பே பார்த்தேன், தேவனின் எழுத்துகளுடன் வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். காத்திருக்கிறேன்.
மேலும், எல்லாச் சித்திரங்களும் இருக்குமா? தெரியவில்லை. “சக்தி” விகடனில் மீண்டும் போன வருடம் பலவற்றை வெளியிட்டார்கள். ஆனால், வேறு விதமாகத் தொகுத்து. என் கருத்தில், மூலத்தில் இருந்ததபடியே இருந்தால் நன்றாய் இருக்கும் என்பது.

பார்க்கலாம்.

Pas S. Pasupathy சொன்னது…

>>பசுபதி சார்,

>>இந்தக் கவிதையை எழுதியது யார்? மிகவும் >>சிறப்பாக, குழந்தைகளும் படிக்கும்படி எளிமையாக >>இருக்கிறது.

:-)) “அணிலும் எலியும்” என்ற இந்தக் கவிதையை எழுதியவர் கவிமாமணி இளையவன். இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். ( இந்தக் கவிதையை நான்தான் “சந்த வசந்தம்” என்ற குழுவில் 2009-இல்
இட்டேன் !.)

குருநாதன் ரமணி சொன்னது…

கோட்டத் துருவமாய்க் கொள்ளை அழகுடன்
கோட்டிலே சித்திரங்கள் கொண்டல் நிறத்திலே!
பாட்டும் பரதமும் பார்த்தே பசுபதியார்
ஓட்டிய கோட்டில் ஒளி.

பேரூர்ச் சிற்பம்: குதிரை வீரனும் புலியும்

துள்ளித் துடித்தே விரையும் பாடல்
. தூரிகை வண்ணம் காட்டும்
அள்ளித் தருமே அழகும் ஒலியும்
. அகமுறும் சூரியின் ஓட்டம்!

--ரமணி, 09/08/2015

*****

கருத்துரையிடுக