வெள்ளி, 14 டிசம்பர், 2012

தென்னாட்டுச் செல்வங்கள் - 4

கிருஷ்ணாபுரம், நெல்லை, ஆவுடையார் கோவில்’சில்பி’ என்றாலே பலருக்கும் அவர் ‘விகடனில்’ வரைந்த ஓவியங்கள் தாம் நினைவுக்கு வரும். இது நியாயம்தான். ஏனென்றால் சில்பி விகடனில் 22 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.   இருப்பினும், சில்பியின் ஓவியங்கள் மற்ற பல இதழ்களிலும் பவனி வந்திருக்கின்றன.

 1945-இலிருந்து விகடனில் முழுநேர ஓவியராய் இருந்த ‘சில்பி’, 1960-இல் விகடனை விட்டு நீங்கியபின், பவன்ஸ் ஜர்னல், அமுதசுரபி, கலைமகள், தினமணி கதிர், இதயம் பேசுகிறது என்று பல இதழ்களில் ஓவியங்கள் வரைந்துள்ளார்.   ( விகடனைத் தவிர, மற்ற இதழ்களில் ‘சில்பி’ வரைந்த ஓவியங்களும் தொகுக்கப்பட்டு நூல்களாக வரவேண்டும்! )

சில நூல்களைச்  ‘சில்பி’யின் ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன . உதாரணமாக, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட கண்ணதாசனின் “ அர்த்தமுள்ள இந்துமதம்” என்ற 10 நூல்களின் ஒரு தொகுப்பு முழுதும் ‘சில்பி’யின் அற்புத சித்திரங்கள் இருக்கும் . தினமணி கதிரில் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற ஒரு தொடரில் சில்பியின் ஓவியங்கள்
வந்ததென்று படித்திருக்கிறேன். இந்தத் தொடர் நூலாக வெளிவந்ததா என்று தெரியவில்லை. ( வேறு நூல்களில் சில்பியின் ஓவியங்கள் இருப்பது தெரிந்த  ரசிகர்கள் இப்பதிவின் பின்னூட்டத்தில் அவற்றின் பெயர்களைத் தெரிவிக்கலாம்.)

இப்போது , மேலும் சில ‘தென்னாட்டுச் செல்வங்களை’க் கண்குளிரப் பார்க்கலாமா? ‘தேவன்’ மூலமாகக் கற்கள் சொல்லும் கதைகளையும் படிக்கலாமா?  ( இவை யாவும் 1948-இல் விகடனில் வந்தவை. ஆம், 60-ஆண்டுகளுக்கு முன்பு!)
[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:


தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி


பின்னூட்டம்:

“கற்கள் சொல்லும் கவிதைகளை”  அனுப்புகிறார் சிவசூரி.

அரச குமாரியும் அருந்தவப் புதல்வனும் 


தன்னந் தனிமையை விரும்பி - பெரும் 
   தவம்செய் முனியை நினைந்து 
மின்னற் கொடியென வளர்ந்து - ஒளி 
   வீசும் மதியென நடந்து 
கன்னற் கதுப்புகள் சிவந்து -எழிற் 
   கனியாய்க் காதற் படர்ந்து 
இன்னும் வேறென வேண்டும் - என
   ஏசும் எழிலென வந்தாள்.காலை எழிலெலாம் கலந்து -இரு 
    கைகால் கொண்டிவண் மலர்ந்து 
மாலை மதியெனக் குளிர்ந்து - ஒரு 
    மங்கை உருவினில் மிளிர்ந்து 
சோலை மலரென மணந்து- சுகம்
    தோற்றிடத் தன்னுள் இணைந்து 
வேலை நிகர்விழி விரிந்து -  இள
    வேனிலின் சுகமெனச் சரிந்து  ரதியெனக் கண்முன் படர்ந்திட - புது 
   ரசமது பெருகி அடர்ந்திட
கதியிவன் எனவே தொடர்ந்திட - அவன்
   கணமதில் தவமெலாம் துறந்திட 
மதிமனம் மற்றவை மறந்திட - சுக
  மழையினில் உடலெலாம் நனைந்திட
நிதநிதம் அவளுரு அருந்திட- ஒரு 
  நிருமல வடிவினில் மறைந்தனன்.நரைதிரை தோன்றிய வடிவில் - செந்
  நாவும் நடுங்கிட வந்தும் 
அரையதன் அழகவன் நோக்க - அவன்
  அகமதை அவளும் பார்க்க 
கரையதை உடைத்துக் காதல் - ஒரு 
   கடலெனக் கணமதில் மோத
வரைநிகர் தோளினை மறைத்த- புது 
   வடிவதன் மெய்யதைக் கண்டாள்.ஒருவிரல் தனையுடன் அசைத்து -அவன் 
    உளமதில் குழலென இசைத்துத் 
திருமகன் முனமிடை ஒசித்து - எழிற் 
    சிலையென அவனுளம் வசித்துப்  
பெருநிதி எனஅவன் நினைக்க - அந்தப் 
    பெருமையில் மகிழ்ச்சியில் மிதக்க 
திருமகள் எனஅவள் உதித்தாள்- அந்தத் 
    திருமுனி தாள்விழி பதித்தாள்.


வான்மதியைப் பெண்ணாக்கி வளர்கதிரை உடலாக்கி 
மீன்கொடியை விழியாக்கி மின்னலதை இடையாக்கி 
வான்சிலையை நுதலாக்கி வடிவழகுப் புருவமெனத் 
தேன்கரும்பை விடுத்துவிட்டுத் தென்றலெனும் சுகமளிக்கும் 


தானமரும் ஊர்தியினைத் தண்ணளியால் உடனனுப்பிக் 
கான்மயிலைக் குழலாக்கிக் காதலெனும் பயிர்வளர்க்க 
ஞானமுனி அவனெதிரே நளினமிகு நங்கையென 
ஊனுருக்க மதனனவன் உலவேனவே விடுத்தனனோ!


காலிருக்கும் சிலம்புடனே கைவளையும் சிரித்துவர
நூலிடையால் மனத்துள்ளே நுழைந்துவிட்ட வேதனையால் 
வேல்விழியைப் பார்த்திடவும் வெங்கனலைப் பொழிந்திடவே 
சீலமிகு முனிகுமரன் சித்தமெல்லாம் இழந்தனனே!


காலமெல்லாம் தவமிருந்தும் காதலினால் முனிகுமரன் 
ஞாலமதில் நிலையழிய நங்கையென வந்ததுவும் 
சாலமிகு மதனனவன் தந்திரத்தால் செய்துவிட்ட 
கோலமதன் கொடுமையினைக் கொண்டனனோ தவப்பயனாய்!

======
வீரபத்திரன் 


1)

நெற்றிக் கண்ணனைப் பற்றிய சினத்தில் 
நின்றிடும் ரோமம் நிறைந்தவனாய் - கரும் 
நிழலெனத் தோன்றும் உடலுடனே- அந்த
நீசர் அச்சம் அடைந்திடவே 

கேடயம் தூக்கிய கோலனென- வரும் 
கேட்டினை நீக்கிடும் காலனெனக்


2)

குத்திட் டிருக்கும் கேசத்தைப் பின்னிக் 
கொண்டை போட்டுப் பிறந்தவனை - விழி
கோபக் கனலில் வெடித்தவனை - இரு
கோரைப் பல்லைக் கடித்தவனைக் 
குன்றென நிற்கும் தோளுடனே - வெகு
கூரிய முனையுடை வாளுடனே


3)

சிற்பியின் கையுளி செதுக்கிய கல்லில் -கடும்
சீற்றம் பொங்கிடச் செய்துவிட்டான் -சில்பி
சித்திரம் தனிலதை வடித்துவிட்டான் - நம்
சிந்தையில் தனியிடம் பிடித்துவிட்டான்
சீறும் பத்திரன் நிழலதுவும் - பகை 
செத்திடத் தீய்க்கும் தழலெனவே.

4)

வற்றா நதியென வளங்கள் பெருக இவன்
நற்றாள் பற்றுவர் நானிலந் தன்னில்- அடி 
பற்றிய பத்தரைப் பாரினில் காக்கும் -அவர் 
பாவமும் பயமும் பொடிபடப் போக்கும் - வீர
பத்திரன் சீரினைப் பகரவந்தேன்- என்
பாடலை உம்முடன் பகிரவந்தேன்


(வேறு)

1)

கண்ணிரண்டில் பொங்குதீயைக் காட்டு வீர பத்திரனைக்
கல்லொன்றில் காட்டிவைத்தான் சிற்பி -அதைக்
காகிதத்தில் தீட்டிவைத்தான் சில்பி-வீரன்


காலடிகள் பட்டவிடம் தொட்டவிடம் எங்கும் பெரும்
பூகம்பம் வந்ததுபோல் ஆட்டம் -அந்தப் 
பொன்னுலகில் எல்லோரும் ஓட்டம் - ஒரு2)

பெண்ணைமணம் செய்தவனின் சீரொன்றும் அறியாத தக்கன் 
பேதைமையால் முறைதன்னை மறந்தான் - அந்த 
வேதநெறி தன்னைஅவன் துறந்தான் 

பூதகணம் பின்தொடர நாதனவன் முன்நடக்கப்
பொங்கியெழும் ஈசன்முகச் சீற்றம் - அந்தப்
போதுவீர பத்திரனின் தோற்றம்.-இரு

3)

கண்ணிமைகள் விண்ணிருக்கப் பார்க்குவிழி மண்ணிருக்க 
ஆலகாலம் உண்டவன்போல் வந்தான் - பெரும் 
காலகாலன் போலெனவே நின்றான்

பெண்மயில்கள் அஞ்சிடவே போகும்வேளை வந்ததென 
மண்மீது தக்கனவன் கிடந்தான் - அவன் 
மேனிவீரன் கொக்கரித்து நடந்தான்.-எழிற்

4)

பின்னிவைத்த சடைமுடி பீடுடனே தாங்கியவன்
பெம்மானின் அம்சமென உதித்தான் - தக்கன்
சீரழிய செருக்கழிய மிதித்தான்.

தூக்கிவைத்த மான்மழு தொங்குகின்ற பாம்புடனும்
தோன்றுமதி கொண்டவனே விதித்தான் - இவனந்தத்
துட்டன்மேல் தன்வாளைப் பதித்தான்.

5)

ஆவுடையார் கோவிலிலே அற்புதமாய்க் காணும்படி
ஆக்கிவைத்த கற்சிலையைக் கண்டோம் - அதன்
அம்சமதைப் பேறெனவே கொண்டோம்.


சூரதீரன் வாளெடுத்துத் தக்கனுடல் தன்னில்படு வேகம்
கோரமுடன் குத்துவதைக் காட்டும் - சிலை
வீரபத்ரன் சீரதனை நாட்டும்.============

வீரபத்ரரின் தளபதி

1)

வீர பத்ர சாமி சொல்லை வேதம் போல எண்ணியே
   வேக வேகம் படைகள் போக வீறு கொண்டு முன்னரே
தாரை தட்டை மேளம் கொம்பு தம்மை எல்லாம் முழங்கியே
   தானை போடும் தாள மோடு வானை அதிர வைத்திடும்
சூர தீரர் சூழ நேரில் தோன்றும் வீர தளபதி
   தூணில் இங்கு சிற்ப மாகத் துணிவை ஊட்டக் காணுறான்
ஆர வாரம் செய்த வண்ணம் ஆடிப் பாடி வருகிறான்
   ஆல காலம் உண்ட தேவர் ஆணை எங்கும் நாட்டவே.

2)

வில்லைப் போல வளைந்த மேனி விளையும் வலிமை காட்டவே
   வீர வாளும் கையு மாக விண்ணைத் தீண்டும் கோலமாய்
மல்லர் போலும் உருண்ட தோளும் மலையைப் போலும் மார்புடன்
   வந்து நிற்கக் கண்ட வையம் வணங்கி நெஞ்சம் மகிழவே
எல்லை யின்றி அழகை யெல்லாம் ஏந்தி நிற்கும் சிலையிதை
   இங்கு வந்து போன பேர்கள் இதயம் ஏங்கும் நிலையதைச்
சொல்ல வேண்டி மார்க்கம் தேடி சுற்றிச் சுற்றி அலையவே
   சொக்கிப் போன புலவர் பாடல் சூட்டிப் பார்க்கத் துணிவரே.
3)

தண்டை யாட சிலம்பு மாட சலங்கை கூட ஒலிக்கவே
   தங்க மாலை வைர மாலை தாவி மார்பில் குதிக்கவே
கொண்டை கொண்ட கோல மோடு கொம்பும் ஊதி வருகிறான்
   கொஞ்சம் கூட அச்ச மின்றிக் குழந்தை கூடப் பார்க்குதே
கெண்டை போல விழியி ரண்டும் கிளுகி ளுப்பை ஊட்டுதே
   கீர்த்தி மிக்க மூர்த்தி கண்டு கிறுகி றுத்துப் போகவே
வண்டின் கூட்டம் வந்து தேனை மாந்தி மாந்தி மகிழவே
   வாசம் வீசும் பூவை ஏந்தும் வடிவைக் கண்டு களிக்குதே.

4)
இங்கு மங்கும் தோலின் மேலே எழிலை ஊட்டும் மடிப்புடன்
   என்பும் கூடத் தெரியும் வண்ணம் இந்தச் சிலையைச் செய்துளார்
தொங்கு மீசை தோன்றும் போதும் துளியும் கோப மின்றியே
   துண்டு கூட ஆடும் அந்தத் தோளும் இன்ப மூட்டுதே
சிங்கம் போல நடைந டந்தும் சிரிப்பைச் சிந்தக் காண்பதால்
   தென்றல் வந்து தீண்டு தென்று சிந்தை மகிழ்ந்து போகுதே
அங்க மெங்கும் அணிகள் சூடி ஆடிப் பாடும் அழகினை
   ஆசை கொண்டு பாடும் போது அவனி மறைந்து போகுதே.


சிவ சூரியநாராயணன்.

==============
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக