ஆரணி குப்புசாமி முதலியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரணி குப்புசாமி முதலியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஜூலை, 2016

ஆனந்தசிங்: காட்டூர்க் கடுங்கொலை -3

காட்டூர்க் கடுங்கொலை -3 



காட்டூர்க் கடுங் கொலை -1  

காட்டூர்க் கடுங்கொலை -2

மூன்றாம் அத்தியாயம்

நஞ்சப்பனைச் சாவடிக் கழைத்துச் செல்லும் அண்ணு ராவுக்குக் குற்றவாளியைப் பிடித்துவிட்டோம் என்ற  சந்தோஷ மிகுதியால் அகங்கார முளை கிளம்பிவிட்டது. 'பந்தயத்தை ஜெயித்த பின்பே சந்தோஷம் கொண்டாட வேண்டும்,' என்ற பெரியோர் வாக்கை மறந்துவிட்டான். இப்போது நடக்கும் ஐரோப்பா மகா யுத்தத்தில் ஜெர் மானியர் யுத்தத்திற்குப் புறப்படும்போதே பாரிஸ் நகரைப் பிடிக்க நாள் குறித்துக்கொண்டதோடு பிடித்த பிறகு அந்த ஜெயத்தின் அறிகுறியாகத் துருப்புகளுக்கு அளிக்க கெளரவப் பதக்கங்களை முன்னாடியே செய்து வைத்துக் கொண்டார்களோ அல்லது இன்னமாதிரிப் பதக்கங்கள் செய்ய ஏற்பாடு செய்துகொண்டார்களோ, இரண்டி லொன்று செய்தார்கள். அப்படிச் செய்ததன் காரணம் முடியு முன்பே பாரிசைப் பிடித்துவிட்டதாய் நம்பிவிட்டார்கள்.

அதைப் போலவே அண்ணுராவும் குற்றம் விசாரணை யாகிக் குற்றவாளி தண்டிக்கப்படு முன்பே தான் ஜெயமடைந்து விட்டதாய் எண்ணிக் சற்று மமதை அடைந்து ஆனந்தஸிங்கை நோக்கி,

 "நல்லது ஆனந்தஸிங் நீயும் உன் நண்பரும் இவ்வளவு தூரம் வரக் கஷ்ட மெடுத்துக்கொண்டதற்காக வந்தன மளிக்கிறேன். ஆனல் நான் உங்களை அழைத்து வந்ததே அனாவசியம். ஏனெனில் உங்கள் உதவி இல்லாமலேயே இந்த விஷயம் இதே முடிவிற்கு வந்திருக்கும். ஆயினும் உங்களுக்கு வந்தன மளிக்கிறேன். கிராம ஒட்டலில் உங் களுக்கு அறைகள் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆகையால் கிராமம் வரையில் நாம் ஒன்றாய்ப் போகலாம்." என்றான்.

அன்றிரவு ஆனந்தஸிங்கும் விஸ்வநாதரும் ஹோட்டலில் படுத்திருந்து மறுநாட் காலையில் இரயிலேறி நகரத்திற்குப் பிரயாணமானார்கள் வழியில் விஸ்வநாதர் ஆனந்தஸிங்கை நோக்கி,

“ நடந்த சங்கதியால் நீ திருப்தியடையவில்லை என்று தோன்றுகிறது," என்றார்.

ஆனந்த-"ஒ! ஓ! நான் பூரண திருப்தி யடைந்தேன். ஆனல் அந்த வழிகள் என் மனதிற்குச் சற்றேனும் பிடிக்க வில்லை. நான் அண்ணுராவ் பிரக்யாதி யடைவான் என்று நம்பி யிருந்ததெல்லாம் கனவாய்ப் போய்விட்டது. அவன் இதைவிட எவ்வளவோ புத்திசாலித்தனமாய் நடப்பான் என்று நான் நம்பியிருந்தேன். இப்படிப்பட்ட சம்பவங்களில் ஒருவன் எப்போதும் இது வேறு விதமாய் நடந்திருக்கலாகுமாவென்று முன்னே சிந்திக்க வேண்டும். அப்படி நடந்திருக்கலாகுமென்று தெரிந்தால், அப்படி நடக்க முடியாதென்று அத்தாக்ஷி ஏற்படுகிற வரையில் அதை ஆராய்ந்து பார்த்த பிறகே சமயோசித சாட்சியம் காட்டும் குற்றவாளியை உண்மைக் குற்றவாளி யென்று கருதி விவகாரத்தைத் தொடங்கவேண்டும்.

அதுவுமன்றி இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று அவ்வாலிபன் கூறிய விஷயங்கள் நம்பக் கூடியவைகளென்றே தெரிகிறது. அவ்வளவு உண்மையை கூறிவிட்டவன் தான் சத்தியமாய் நிரபராதியென்று கூறி விட்டான். இது இருக்கட்டும். இன்னொன் றெதுவெனில் அவன் கொலை செய்ததாயின், அறைக்குள் வந்தவுடனே, தன் விஷயத்தைப் பேசாமல், அங்கிருந்த ஈட்டியை எடுத்து
அவனைக் குத்திவிட்டாயிருப்பான்? அப்படிப் பேசியிருந்தால் அவன் தந்தையைப்பற்றிய விஷயமாவது பத்திரங்களைப் பற்றியாவது கொஞ்சமாவது அறிந்திருப்பானல்லவா? மேலும், இவனைக் கொன்றவன் எவனாயினும் சரி, அவன் வரும்போது இவனைக் கொல்ல வெண்ணியும் வரவில்லை, கையில் ஆயுதம் கொண்டு வரவுமில்லை யென்பது உண்மை கொலை நடந்தபோது அங்கு ஒரு குழப்பமாவது சந்தடியாவது உண்டாகவில்லை. அப்படியிருக்கக் கொன்ற பின்பு உடனே தனக்கு வேண்டிய பொருள் அங்கிருக் கிறதாவென்று சோதிக்காமல் திரும்பிப்போய் ஒரு வாரங் கழித்து எந்த மூடனாவது வருவானே! அதுவரையில் கொலை கடந்த அறையிலேயே எல்லா வஸ்துக்களும் வைத்தது. வைத்தபடி இருக்குமென்று நம்புவான்?' என்றான்.
.
விஸ்வநாதர் -ஆனல் நீ கூறுவதுபோல் நேரிட்டிருக்கக்கூடிய வேறு சம்பவம் என்ன?

ஆனந்த-' அதைத்தான் நான் ஆராய்ச்சி செய்யப் போகிறேன். முடிவில் யாவும் கூறுகின்றேன்." என்றான்.

அதன் பிறகு இரண்டு மூன்றுநாள் கழித்து ஒருநாள் இருவரும் வெளியிற் சென்றிருந்து திரும்பிவந்தபோது வீட்டில் ஐந்தாறு கடிதங்கள் வந்திருந்தன. யாவும் ஆனந்தஸிங்குக்கே யெனினும், மேல் விலாசத்தில் பெயர் மூன்று நான்கு விதமாயிருந்தது” காப்டென் பசுபதி” என்றிருந்தது. ஆனந்தஸிங் யாவற்றையும் வாசித்துப் பார்த்தபின் “ பேஷ் நமது ஆராய்ச்சி பயனளிக்கும்போலவே யிருக்கிறது. விஸ்வநாதரே தயை செய்து இரண்டு தந்திகள் எழுதும்; ஒன்று சோமு செட்டி, கப்பல் ஏஜென்ட், என்ற விலாசம். மூன்று ஆட்களையும் நாளை காலை 10-மணிக்கு என்னிடம் வரும்படி அனுப்பும். இப்படிக்கு காப்டென் பசுபதி என்று எழுதும். அந்த விடங்களில் எனக்கு காப்டென் பசுபதி யென்றே பெயர். இன்னொன்று நமது இன்ஸ்பெக்டர் அண்ணுராவுக்கு- நாளைக் காலை ஒன்பது மணிக்குச் சரியாய் இங்கு வரவேண்டும். மிக்க முக்கிய சமாசாரம், சந்தர்ப்ப மில்லாவிடின் பதில் தெரிவி' என்றெழுதும். விஸ்வநாதரே! இந்தக் கேஸ் கடந்த ஒருவார மாய் என் நெஞ்சில் உறுத்திக்கொண்டே யிருந்தது. நாளைக் காலை பத்து மணிக்கு ஒரு முடிவிற்கு வந்து விடுவது உண்மை. அதோடு இதைக் கை கழுவவிடுவதே" என்றான்.

மறுநாட் காலை சரியாய் ஒன்பது மணிக்கு இன்ஸ்பெக்டர் அண்ணுராவ் அறைக்குள் வந்தான். அடைந்த ஜெயத்தின் சந்தோஷத்தால் அவன் உள்ளம் பூரித்திருந்தது. முகத்தில் அந்தக் குறி நன்றாய் விளங்கியது. ஆனந்தஸிங் முன்னமே ஏற்பாடு செய்திருந்தபடி மூவரும் போஜனத்திற்கு உட்கார்ந்தார்கள்.

ஆனந்தஸிங் அண்ணுராவை நோக்கி : - நீ செய்த தீர்மானம் உண்மையாகவே சரியானதென்று நினைக்கிறாயா?"
என்று வினவினான்.

அண்ணு:- இதைவிடப் பூரணமான தீர்மானம் வேறொன் றிருக்குமென்று நான் நினைக்கவில்லை."

ஆனந்த-என் மனதிற்கு அது பூரணமானதென்று விளங்கவில்லை.

 அண்ணு- நீ கூறுவது எனக்கும் மிக்க வியப்பா யிருக்கிறது. இன்னம் என்னதான் வேண்டி யிருக்கிறது?"

ஆனந்த-அதிற் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களுக்கும் சமாதானம் பூரணமாயிருக்கிறதா?

அண்ணு:-சந்தேகமின்றி, நஞ்சப்பன் கொலை நடந்த தினம்தான் அந்தப் பிரதேசத்திற்கு வந்திருக்கின்றான். அவன் தங்கியிருந்தது அன்னசாலை யென்ற ஹோட்டலில். அங்கு அவன் கீழ்க்கட்டில் தங்கியிருந்தான். அங்கிருப்பவர்களுக்குத் தெரியாமலே அவன் தன் பிரியப்படி வெளியிற் போகலாம் வரலாம், அன்றிரவே கரியனைக் காணச் சென்று அவனோடு சச்சரவு நேர்ந்ததால் அவனைக் கொன்றுவிட்டுப் பிறகு கலவரத்தால் ஒடிவிட்டான். அப்போதுதான் அந்த நோட் புத்தகம் கீழே விழுந்து விட்டது. அதில் குறிக்கப்பட்டிருந்த பாங்கிப் பத்திரங்களைப் பற்றி அவனைக் கேட்பதற்காகவே அங்கு சென்றான். அறையில் சில குறிப்பிட்டிருக்கின்றனவல்லவா? அவை யாவும் வெளிவந்து விட்டவை. மற்றவை பெரும்பாலும் கரியனிடத்திலேயே யிருந்திருக்கலாகும். அவற்றைப் பெற்றுக்கொண்டால் தன் தகப்பனுடைய கடன்காருக்குத் திருப்தி செய்யலாகும் என்பது அவன் நோக்கம் கொலை நடந்த விடத்திற்கு மறுபடி துரிதமாய் வர அச்சங் கொண்டு இருவாரங் கழித்துப் பத்திரங்களைத் தேடவந்தான். எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு என்பதுபோல் தெளிவாய் விளங்குகிறது. வேறென்னதான் வேண்டும்: என்றான்.

ஆனந்தலிங் புன்னகையோடு தலையை அசைத்து,

 " எல்லாம் சரியே. ஒரே ஒரு முக்கியமான குறைதான் இருக்கிறது.           அதாவது, நஞ்சப்பன் அவனைக் கொன்றானென்பது அசம்பாவிதம். அகாவது நடக்கக் கூடாத காரியம். அண்ணு ராவ்!  அத்தகைய ஈட்டியால் இறந்த மனிதன் தேக அளவுள்ள ஒரு தேகத்தினைக் குத்திப் பார்த்திருக்கிறாயா? இல்லை. சே! சே! நீ இத்தகைய தகவல்களைக்  கவனித்துப் பார்க்கவேண்டும். நான் ஒரு நாள் காலை நேரம் முழுதும் அதைப் பற்றிச் சோதித்துப் பார்த்தேன் என்பதை விஸ்வநாதர் அறிவார். அப்படிக் குத்துவது சுலபமான காரியமல்ல. அதோடு நன்றாய் அதில் பழகிய கையா யிருக்கவேண்டும். அந்தக் குத்தோ மிக்க கோபத்தோடு குத்தப்பட்டிருக்கிறது. ஈட்டியின் முனை தேகத்தில் ஊடுருவிக் கீழிருந்த பலகையில் பாய்ந்திருக்கிறது. அந்த மெலித்த தேகியாகிய. வாலிபன் அத்தகைய பயங்கரமான காரியத்தைத்  செய்யக் கூடியவனென்றா  நீ நினைக்கிறாய்? ஒருகாலுமில்லை. அவனா கரியனோடு சரியாய் அரைபுட்டி ரம் சாராயத்தை நெட்டியிருக்கிறவன்? கொலை நடந்த தினத்திற்கு முன் தினம் சாளரத்தின் திரையில் காணப்பட்ட தாடியுடைய முரட்டு முகம் அவனுடையதா ? இல்லை இல்லை. நீ இவற்றைச் சிந்திக்கவில்லை. அண்ணுராவ்! கரியனைக் கொன்றவன் இராக்ஷசன் போன்ற மிக்க பலாட்டியனான வேறொரு முரட்டு மனிதன். அவனைத்தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும், “ என்றான்.

ஆன்ந்தஸிங் கூறியதைக் கேட்க்க் கேட்கத் துப்பறியும் இன்ஸ்பெக்டர் மனது வரவரக் கலக்கமடைந்து சோர்வுறத் தொடங்கியது. ஆனந்தஸிங் கேலிக்காகவாவது வியர்த்தமாகவாவது இப்படிக் கூறுகிறவ னல்லவென்று அவனுக்கு நன்றாய்த் தெரியும். அவன் கொண்டிருந்த நம்பிக்கையும் சந்தோஷமும் ஜலத்தில் கற்கண்டுபோல் கரையத் தொடங்கின. ஆயினும் அந்தோ மனிதனுடைய அகங்கார சுபாவம் தன் குற்றத்தையாவது தோல்வியை யாவது உடனே ஒப்புக்கொள்ள இடங்கொடுப்பதில்லை. ஆகையால் அண்ணுராவ் இன்னொரு கை பார்ப்போ மெனத் துணிந்து ஆனந்தஸிங்கை நோக்கி,

“ ஆனந்தஸிங்!  கொலை நடந்த இரவு நஞ்சப்பன் .
அங்கு வந்திருக்கிறான் என்பதை நீ மறுக்க முடியா தல்லவா-அங்கு அகப்பட்ட அவன் நோட் புத்தகமே அதை ருசுப்படுத்துகிறது : இதில் ஏதாவது சந்திருக்கிற தென்று காட்டக்கூடுமோ? நான் ஜூரர்களுக்குக் திருப்தியாக இதை ருகப்படுத்திவிடுவேனென்று நினைக்கிறேன். மேலும் ஆனந்தஸிங் ! என் ஆளை நான் பிடித்துக் கொண்டேன். நீ கூறுகிற அந்தப் பயங்கரமான இராசக்ஷசன் எங்கே யிருக்கிறான்?' என்று அலட்சியமாகக் கேட்டான்.

ஆனந்தஸிங் சாந்தமாகவே : --- “ பெரும்பாலும் அவன் இப்போது நமது வீட்டிற்குள் நுழைகிறானென்று நினைக்கிறேன்,' என்றான்.

ஏனெனில் சாதாரணமாய் மற்ற மனிதர்கள் செவிக்குப் புலப்படாத சொல்ப சத்தத்தையும் உணர்வதும் இருட்டில். கூடியவரை பார்த்தறிவதும் தன் தொழிலுக்கு அவசியமான உதவியென்று ஆனந்தஸிங் அப்பியாசத்தால் அவற்றில் தேர்ச்சி யடைந்திருக்கிருன். ஆதலால் அச்சமயம் தெரு வாசற்படியில் இரண்டு மூன்று பேர் உள்ளேறி வரும் சத்தம் அவன் செவிகட்குப் புலப்பட்டது. விஸ்வ
நாதருக்கும், மூவர் வரப்போகிறார்களென்று தான் எழுதிய தந்தியால் தெரியுமாதலால் அவரும் அப்படியே நினைத்தார். ஆனால் அண்ணுராவோ ஆனந்தஸிங் கூறியதைக் கேவலம் கேலியாகவே கருதினான்.

ஆனல் இரண்டொரு நிமிடங்களில் ஆனந்தஸிங்கின் வேலைக்காரி அறைக்குள் வந்து 'அய்யா! யாரோ மூன்று பேர் வந்து காப்டென் பசுபதியைக் காணவேண்டும் என்கிறார்கள்,' என்றாள்.

ஆனந்தஸிங் விஸ்வநாதரை நோக்கி, “சரி உடனே ஆயத்தமாக வேண்டியதே; தாங்கள் அந்த கைத்துப்பாக்கியைச் சட்டென்று கைக்கு எட்டக்கூடிய விடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டுத் தான் எழுந்து தன் மேஜையிலிருந்து கையொப்பமிடாத ஒரு ஒப்பந்தப் பத்திரத்தை எடுத்துப் பக்கத்திலிருந்த ஒரு சாய்ப்பு மேஜை மேல் விரித்து வைத்துவிட்டு, விஸ்வநாதரையும், மிரள மிரள  விழித்துக்கொண்டிருக்கும் அண்ணுராவையும் இது எந்த வினாடியும் சமயோசிதப்படி நடந்துகொள்ள: ஆயத்தமாயிருக்கவேண்டும்,: என்று கூறிவிட்டு, வேலைக்காரியை நோக்கி, இனிச் சென்று அவர்கள் மூவரையும் தனித்தனி, ஒவ்வொருவராய் உள்ளே யனுப்பு. ஒருவன் வெளி வந்த பின் இன்னொருவனை  அனுப்பு' என்றான்.
-
அவ்வாறே முதல் ஒருவன் உள்ளே வந்து வந்தனமளித்து நின்றான். அவன் சுமார் 20-வயதுள்ள் சாதாரண மனிதன். ஆனந்தஸிங் தன் ஜே.பியிலிருந்த கடிதத்தை யெடுத்துப் பார்த்துக்கொண்டு. அம்மனிதன் நோக்கி,

"உன் பெயரென்ன?" என்றான்.

அவன்:-'லட்சுமணன்' என்றான்.

ஆனந்த-இலக்ஷ்மணா!  உனக்குத் தகுதியாயிருந்த வேலைக்கு நேற்றுத்தான் இன்னொருவன் வந்து அமர்ந்து விட்டான். பாபம், இந்தா. நீ ஏமாற்ற மடைந்ததற்காக இந்த 5-ரூபாயைப் பெற்றுக்கொள்,' என்று ரூபாயைக் கொடுத்தனுப்பிவிட்டான்.

இரண்டாவது வந்தவன் சங்கதியும் அவ்வாறே முடிந்தது. அவனும் 5 ரூபாயோடு வெளியில் சென்றான். மூன்றாவது ஒருவன் வந்தான். அவனைக் கண்டதே விஸ்வநாதரும் அண்ணுராவும் திடுக்கிட்டார்கள். அவன் சுமார் ஏழடி உயரமும் பருத்துத் திரண்டு கட்டுவிட்ட புயங்
களும் கறுத்த முட்களைப்போன்ற குட்டையான தாடியும்,
கொள்ளிக் கட்டையைப் போன்ற தீக்ஷண்யமான கண்களும், பயங்கர சொரூபமுமுடையவன். வயது 40-இருக்கலாம். அவன் உள்ளே வந்ததும் கட்டையைப்போல் முறைப்பாய் நின்று வந்தனமளித்தான். அவன் உடைகளால் அவன் ஒரு மாலுமி என்று தெரிந்தது.

ஆனந்த- உன் பெயர்?' என்றான்

அகற்கவன் பட்டூர் கங்காராஜ்' என்றான்.

அதைக் கேட்டதே அண்ணுராவுக்கு இடி விழுந்த மாதிரியாயிற்று. ஏனெனில் கடல் அறையிலிருந்த மேஜை மேலிருந்தகப்பட்ட புகையிலைப் பையின்மேல் 'ப.க” என்ற எழுத்துக்களிருந்ததும், அதைப் பள்ளியூர் கரியன் என்று தான் தவறாய் அர்த்தம் செய்துகொண்ட முட்டாள்தனமே தன் தோல்விக்குக் காரணமென்றும் அவன் புத்தியிற்
பட்டது.

ஆனந்த-உன் தொழில்? என்றான்.
அவன்-திமிங்கில வேட்டைக்காரன்; 26-வருடங்களாக அதில் நல்ல பழக்கமுண்டு.

ஆனந்த-கஷ்டமான வட கடலிலும் அனுபோகமோ?

அவன்:-வட கடலில்தான் நல்ல பழக்கமுண்டு.

ஆனந்த-சம்பளம் எப்படி?

கங்காராஜ்-எல்லாச் செலவும் போக மாதம் நூறு ரூபா.

ஆனந்த-உடனே என் கப்பலில் வேலைக்கு அமர்ந்து விடக்கூடுமா?

கங்காராஜ்-ஆகா தடையின்றி.

ஆனந்த-உன் நற்சாட்சி பத்திரங்களைக்கொண்டு வந்திருக்கிறாயா?" என்றான்.

மாலுமி உடனே தன் ஜேபியிலிருந்து மாசடைந்த ஒரு பெரிய கடிதத்தை யெடுத்தளித்தான். ஆனந்தஸிங். அதை வாங்கிப்பார்த்து “ பேஷ் இத்தகைய ஆளே தேவை. அதோ அந்தச் சாய்ப்பு மேஜைமேல் நீ கொடுக்கவேண்டிய ஒப்பந்தப் பத்திரம் ஆயத்தமா யிருக்கிறது. அதில் கை யொப்பம் வைத்துவிட்டால் விவகாரம் முடிந்த மாதிரியே,: எனறான்.

மாலுமி அவ்வாறே மேஜை அருகிற் சென்று ஒரு கையில் பேனாவைப் பிடித்துக்கொண்டு இரண்டு கரங்களையும் பத்திரத்தின் மேல் வைத்துக்கொண்டு, இங்கே கை யொப்பம் வைக்கட்டுமா என்றான். 




ஆனந்தஸிங் எழுந்து சென்று அவன் பின்னால் நின்று தோளின் பக்கமாய்த் குனிந்து இரு கரங்களையும் முன்னேவிட்டு “இங்கே போட்
டால் போதும்,' என்றான். ஆனல், அதே நிமிடம் கிளிக்” என்று பூட்டிட்டது போன்ற ஒரு சத்தம் கேட்டதும் மறுவினாடி மாலுமியும் ஆனந்தஸிங்கும் கீழே புரண்டார்கள். அந்த மாலுமியோ மிக்க பலசாலி. ஆனந்தஸிங் அவ்வளவு சாமர்த்தியத்தோடு அவன் கையில் விலங்கைப் பூட்டிவிட்டாலும் அந்த விலங்குக் கைகளோடேயே சற்று நேரத்திற்குள் ஆனந்தஸிங்கைத் தரையோடு தரையாய் நசுக்கி விட்டேயிருப்பான். ஆனல், அவர்களிருவரும் கீழே  விழுந்ததே அண்ணுராவும் விஸ்வநாதரும் பாய்ந்து வந்து ஆனந்தஸிங்கை விடுவித்துவிட மூவரும் சேர்ந்து அவன் கரங்களைக் கட்டிவிட்டார்கள். அதற்குள் மூவருக்கும் பெருமூச்சு வாங்கிவிட்டது. 




ஆனந்தஸிங் அண்ணுராவை நோக்கி, அண்ணு ராவ்! இடை பாதியில் விடப்பட்ட ஆகாரம் சூடாறிவிட்டிருக்கு மென்று நினைக்கிறேன். ஆயினும் உன் கேஸ் அனுகூலமாய் முடிந்த சந்தோஷத்தால் திருப்தியாகவே புசிப்பாயென்று நம்புகிறேன்,' என்றான்.

அண்னுராவ் பேசவும் நாவெழாதவனாய்த் தடுமாற்றத்தோடு “ ஆனந்தஸிங்  இன்னது கூறுவதென்று எனக்குப் புலப்படவில்லை. நான்  பெரிய முட்டாள் தனமாய் நடந்து கொண்டதாக எனக்குப் புலப்படுகிறது. நீ குருவென்பதையும், நான் சீடன் என்பதையும் நான் மறந்திருக்கலாகாதென்று இப்போதுதான் என்་ புத்திக்குப் புலப்படுகிறது. இப்போதுகூட நீ செய்தது மட்டும் எனக்குத் தெரிகிறதேயன்றி, எப்படி இதைச் செய்தாயென்றும், இதன் அர்த்தமென்ன வென்பதும், எனக்கு சற்றேனும் புலப்படவேயில்லை  என்றான்.

இதனால் ஒருவன் எப்போது தான் கற்றதைப் பூரணமாய் விட்டதென்றாவது, நாம் குருவிலும் அதிக கெட்டிக் காரனாய்விட்டோ மென்றாவது கருதலாகாது. 'நிறைகுடம் நீர்தளும்பாது,” “ பழுத்த மரம் தலை தாழ்த்தி நிற்கும்," என்ற மூத்தோர் வாக்கேபோல் ஆனந்தஸிங் முன்பு அண்ணுராவ் நடந்துகொண்ட மமதையான நடத்தைக்குச் சற்றேனும் மனத்தாங்க லடையாது சந்தோஷ முகத்தோடேயே,

“ அண்ணு ராவ்! எவ்வளவு ஒருவன் கற்றுக்கொண்டாலும் போகப்போகச் சுய அனுபவத்தால்தான் அவன் கல்வி பூரணமடைந்து பயனளிக்கும். நாமனைவரும் அனுபவத்தால் எதையும் கற்றுக் கொள்கிறோம். இப்போது நீ கற்றுக்கொள்ளவேண்டிய தென்னவெனில் 'சமயோசித அத்தாக்ஷியாலோ வேறெந்தச் சாக்ஷியத்தாலோ ஒரு குற்றம் ஒரு வழியாய் நடைபெற்றிருக்குமென்று நமக்குப் பூரணமாய் புலப்படுகிறது. அப்படியிருந்தாலும் அது வேறொரு வழியாய் நடைபெற்றிருக்கக் கூடும் என்று சொல்ப சந்தேகத்தினால் புலப்படினும், அந்த வேறொரு வழியாய் நடந்திருக்க முடியாதென்று அய்யமறத் தெரியுந்தனிலும், அந்த வழியையும் ஆராய்ச்சி செய்தபின்பே முதலில் தோன்றியதை உண்மையென்று கருதவேண்டும். நீ உன் மனம் முழுமையும் நஞ்சப்பன் மேலேயே காட்டி விட்டாய். அவன்தான் நிரபராதி யென்று கூறியும் நீ அவனே கொன்றவன் என்று ஆரம்பத்திலேயே உன் மனதில் தீர்மானித்துக்கொண்டதால் புகையிலப் பையையும் மற்ற விஷயங்களையும் பற்றிச் சிந்திக்க உன் மனம்
இடந்தரவில்லை. பூரண ஆராய்ச்சிக்கு முன் ஒரு தலையாய் எப்போதும் தீர்மானித்துக் கொள்ளலாகாது," என்றான்.

அதற்குள் சிறைப்பட்ட மாலுமி, “  அய்யா! நீ இம் மாதிரி என்னை விலங்கிட்டதற்கு நான் குறைகூறவில்லை. ஆனல் என்னை அக்ரமக் கொலையாளியென்து மட்டும் கருத வேண்டாம். முழு உண்மையும்  முன்னே தெரிந்து கொள்ளுங்கள். அப்போது என் ஸ்தானத்தில் நீங்கள் இருந்தால் நீங்களும் என்னைப் போலத்தான் நடந்துகொண் டிருப்பீர்களென்று நன்ருய் விளங்கும். நான் பொய்க் கதை யேதாவது கட்டப் போகிறேனென்று நினைக்கிறீர்களாக்கும்,' என்றான்.

ஆனந்த- ஒருகாலுமில்லை. உன் போன்ற ஆள் பொய்கூறத் தன் குற்றத்தை மறைக்கமாட்டானென்று நான் அனுபவத்தால் அறிந்திருக்கிறேன். இனி நடந்த சங்கதியைக் கூறு பார்ப்போம், என்றான்.

கங்கராஜ் என்ற மாலுமி கீழ்க்காணும் விஷயங்களைக் கூறினான்:


'அவ்வாறே கூறுகிறேன். கடவுளறிய நான் கூறுவது யாவும் உண்மை. இப்போது நான் கூறப்போகும் சம்பவம் 1888-வது வருடம் ஆகஸ்ட்மீ வடகடலில் நேர்ந்தது. கடல்யாளி யென்ற திமிங்கில வேட்டையாடும் கப்பலில் இந்தப் பள்ளியூர்க் கரியன் கப்பித்தானா யிருந்தான். நான் எறி ஈட்டியால் திமிங்கிலத்தைத் தாக்கிக் கொல்லும் ஆட்களில் ஒருவனாக இருந்தேன். நாங்கள் அப்போது வட கடலி லடித்த கொடிய புயற் காற்றுகளுக்குத் தப்பித் திரும்பி வந்தபோது கீழ்காற்றில் அடித்துக் கொண்டுவந்து விடப்பட்ட ஒரு சிறு கப்பலைக் கண்டோம். அதில் ஒரே
மனிதன் இருந்தான். அவன் மாலுமியல்ல. ஒரு வர்த்தகன் போலிருந்தான். அதிலிருந்த ஆட்கள் கப்பல் கவிழ்ந்து விடுமென்றஞ்சிப் படகிலேறி வடகடலிலிருந்த ஒரு கரையை நோக்கிப் போய் விட்டார்களாம். அவர்கள் கடலுக்கிரையாகியே யிருப்பார்க ளென்பது திண்ணம். நாங்கள் அவனை எங்கள் கப்பலிலேற்றிக் கொண்டோம். கப்பலிலிருந்து அவன் கொண்டு சாமானெல்லாம் கூடி ஒரு தகரப்பெட்டி மட்டுமே. அவன் எங்கள் கப்பலுக்கு வந்தபின் கப்பித்தானகிய கரியனும் அவனும் கப்பித்தானறையில் நெடுநேரம் இரகசியமாய்ப் பேசினார்கள். எனக்குத் தெரிந்தவரையில் அம்மனிதன் பெயர் இன்னதென்று வெளிப்படவேயில்லை. இரண்டாவது நாள் இரவு அவன் கப்பலிலிருந்து எப்படியோ மாயமாய் மறைந்துவிட்டான் அவன் வேணுமென்றே யாவது அல்லது அப்போது வீசிக்கொண்டிருந்த கடுமை
யான காற்றின் வேகத்தால் கால் சறுக்கியாவது மேல் தட்டிலிருந்து கடலில் விழுந்துவிட்டிருப்பா னென்று கூறப்பட்டது. –

ஆனால் ஒரே யொரு மனிதனுக்கு மட்டும் நடந்த உண்மை இன்னதென்று தெரியும். அந்த மனிதன் நானே. நான் நடந்ததைக் கண்ணால் கண்டேன். அன்றிரவு மிக்க நல்ல நடு இரவு வேளை. எங்களால் காப்பாற்றப்பட்ட அந்த மனிதனும் கப்பித்தானும் கப்பலின் மேல் தட்டில் உலாவிக்கொண்டே இருந்தார்கள். கப்பித்தான் திடீலென்று அம்மனிதனுடைய இரண்டு கால்களையும் பிடித்துத் தாக்கி அவனைக் கடலில் எறிந்து விட்டான்.

நான் பிறகு என்ன நடக்கிறது பார்ப்போமென்று ஒன்று  
மறியா  தவன்போலிருந்தேன். நாங்கள் நமது நாட்டிற்கு வந்த பிறகு அச்சங்கதி சுலபமாய் அடக்கி விடப் பட்டது. அதைப்பற்றி ஒரு கேள்வியும்  உண்டாகவில்லை. யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு அன்னியன் தற்செயலாய்க் கடலில் விழுந்து மடிந்ததால் யாருக்கு அதைப்பற்றி விசாரிக்க அக்கரை ! ஊர் வந்து சேர்ந்தவுடனே கரியன் வேலையினின்றும் நீங்கிவிட்டான். அதன் பிறகு அவன் இப்போது க்ஷேமமான நிலைமையிலிருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். கொஞ்சக் காலத்திற்கு முன்புதான் அவன் இருப்பிடம் எனக்குத் தெரியவந்தது. அவனுக்கு வந்த க்ஷேமம் கடலில் தள்ளப்பட்ட மனிதனுடைய தகரப் பெட்டியிலிருந்த பொருளால்தான் என்று எனக்குத் தெரிந்தது. அதற்காசை வைத்தே அவன் அம் மனிதனைக் கொன்றான். ஆகையால், அவன் இரகசியத்தை மறைத்து வைப்பதற்காக நமக்கு அதில் ஒருபாக மளிக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தத் தீர்மானித்தேன். நகரத்தில் இருந்த ஒரு மாலுமிதான் அவன் வசிக்கு மிடத்தை எனக்குத் தெரிவித்தான். ஒரு நாள் இரவு நான் அங்கு சென்று அவனைச் சந்தித்தேன், அன்றிரவு அவன் சாந்தமாகவே சம்பாஷித்தான். நியாயப்படி என் பாகத்தை யளிப்பதாகவும், மறுநாள் இரவு வந்தால் இருவரும் கலந்து இவ்வளவு தொகை என்று முடிவு செய்து கொள்ளலாமென்றும் தீர்மானித்துக்கொண்டோம். அந்தப்படி இரண்டாவது இரவு நாள் சென்றபோது அதற்கு முன்பே அவன் குடித்து முக்கால்பங்கு வெறித்துக் கோப குணத்தோடிருந்தான். பிறகு இருவரும் குடிக்க ஆரம்பித்துப் பழைய கதைகளைப் பேசிக்கொண்டே யிருந்தோம். குடியேற யேற அவனுடைய பார்வை எனக்குச் சற்றாவது பிடிக்கவில்லை. அப்போது ஏதோ விபரீதம் நடக்குமென்றும், இவன் கெட்ட எண்ணம் கொண்டிருக்கிறானென்றும் என் மனதிற் பட்டதால், ஒரு சமயம் அப்படி நேர்ந்தால் நம்மிடம் ஒரு ஆயுதமுமில்லையே என்ன செய்வதென்று சுற்றுமுற்றும் பார்த்துச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த எறியீட்டியைக் குறிப்பிட்டுக் கொண்டேன். நான் நினைத்தபடியே அவன் என்னைக் காறியுமிழவும் சபிக்கவும் தொடங்கிவிட்டான். அவன் முகத்தில் கோபத் தணல் வீசியது. சட்டென்று ஜே.பியிலிருந்த ஒரு பெரிய உறையிட்ட கத்தியைக் கையிலெடுத்தான். அவன் உயிர் அல்லது என் உயிர் இரண்டிலொன்று போகவேண்டியதே யென்று எனக்குத் தெரிந்துவிட்டது. ஆகையால், அவன் கத்தியை உறையிலிருந்து எடுப்பதற்குள் நான் ஈட்டியை யெடுத்துக் குத்திவிட்டேன். அப்பா! கடவுளே! அவன் என்னமாய்க் கூச்சலிட்டான் தெரியுமா! அவன் தேகத்தி லிருந்து இரத்தம் என்னைச் சுற்றிலும் பீறிட்டுக்கொண்டிருந்தது. சற்று நேரம் நின்றேன். ஒரு சந்தடியுமில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தத் தகரப்பெட்டி யிருந்தது. அதற்கு அவனுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் எனக்கு மிருக்கிறது. ஆகையால், அதை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளிப்பட்டேன். ஆனால் முட்டாள்தனமாய் மேஜைமேல் வைத்த என் புகையிலைப் பையை மறந்து விட்டுவிட்டேன். இன்னொரு அதிசயமான சங்கதி, நான் அறையை விட்டுச் சற்றுதூரம் செல்லும்போது யாரோ மறு பக்க மிருந்து வருவதைக் கண்டு மறைந்துகொண்டேன். ஒரு மெலிந்த வாலிபன் பூனைபோல் பதுங்கிக்கொண்டே வந்து அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். யாரவன், இச் சமயம் என் அங்கு செல்கிறானென்று பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளிப்பட்டு வந்த வழியே ஒட்டமா யோடி ஒரு நொடியில் மறைந்து விட்டேன். நான் பிறகு பத்துமைல் தூரம் நடந்து இரயிலேறி நகரம் வந்து சேர்ந்தேன்.

கடைசியில் நான் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரு காசுகூட இல்லை. ஆனால் பாங்கிப் பத்திரங்க ளிருந்தன. அவற்றை நான் வெளிக்குக் கொண்டுபோனால் ஆபத்தாய் முடியும். ஆதலால், பேசாமல் வைத்திருக்கிறேன். நான் எண்ணிவந்த காரியம் கெட்டுக் கையில் காசில்லாமல் தியங்க நேரிட்டதால் அந்தக் கப்பல் ஏஜென் டின் ஆபீஸில் வேலைக்காகப் பெயர் பதிவு செய்தேன். அவர் உம்மிடம் அனுப்பினார். கடைசியில் நான் செய்த காரியத்திற்காக அதிகாரிகள் எனக்கு வந்தன மளிக்க வேண்டும். ஏனெனில், நான் அவனைக் கொன்றதால் துரைத்தனத்தார் அவன் கழுத்திற்கு மாட்டவேண்டிய தூக்குக் கயிற்றின் விலையையும், கொலையாளியின் கூலியையும் மீத்திவிட்டேன். இவ்வளவே என் சங்கதி,” என்றான்.

ஆனந்தஸிங்- அண்ணுராவ்!  யாவும் உண்மையே! நீ முன்னே நஞ்சப்பனை  விடுதலை செய்வதோடு அவன் தந்தையின் துயரமான முடிவை அவனுக்குக் கூறித் தகரப் பெட்டியை அவனிட மளித்து மன்னிப்புக் கேட்டுக்கொள். கங்காராஜின் தண்டனையை நம்மால் கூடியவரையில் குறைக்கப் பார்க்கவேண்டும். அவசியமாயின் என்னைச் சாட்சியாய் அழை. இனி உன் குற்றவாளியை அழைத்துச் செல்லலாம்,' என்றான்.

அண்ணு:-'ஆனந்தலிங் ! உனக்கு நான் பாராட்டும் நன்றிக்கு அளவேயில்லை. ஆனால் இப்போதும் நீ எப்படி இதைக் கண்டுபிடித்தாயென்று எனக்கு விளங்கவில்லை." என்றான்.

ஆனந்த- எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு வழியில் ஆலோசனை சென்றது. அதாவது அவனைக் கொன்றவன் மிக்க பலாட்டியனா  யிருக்கவேண்டும். அதே எறியிட்டியை உபயோகிக்கப் பழகித் தேர்ந்தவனா யிருக்கவேண்டும். புகையிலைப் பையும் அவன் மாலுமி யென்றும் அவனே கொலை செய்தவனென்றும் தெரிவித்தது. எவ்வாறெனில் அப் புகையிலையும் அப்பையும் மாலுமிகளிடந்தா னிருக்கும். அங்கு சுங்கானில்லாததால் அது கரியனுடைய தல்ல வென்று தெரிகிறது. ப.க. இருந்ததென்கிறாயோ, அதே முதல் எழுத்துக்களுடைய பெயர் வேறு யாருக்கும் இருக்க லாகாதோ? இதுவரையில் தெரிந்தபின் அவன் மாலுமியான வரையில் இறந்தவனோடு முன்னமே சம்பந்தப்பட்டவனுக யிருக்கவேண்டும். கடல் யாளியில் 1883- வருடம் யாரார் மாலுமியா யிருந்ததென்று கப்பல் ஏஜெண்டுகள் ஆபீஸில் போய்ப் பட்டியைப் பார்த்தேன். ப. க. என்ற எழுத்துக்களே முதலாகவுடைய இவன் பெயர் அகப்பட்டது. இனி இவன் எங்கிருக்கிறானென்று பார்த்தேன். போன மாதமே வேலையை விட்டுவிட்டுப் பெயரைப் பதிவுசெய்து வைத்திருக்கிறான் என்று தெரிந்தது. நான் ஒரு கப்பித்தான். திமிங்கில வேட்டையாடப் போகிறேன். அதில் பழக்கமுடைய ஆட்கள் வேண்டும்' என்று கப்பல் ஏஜெண்டுக்குத் தெரிவித்து ஆளை இங்கு வரவழைத்தேன்’ என்றான்
இதைக் கேட்ட அண்ணுராவ் மிக்க வியப்படைந்து குற்றவாளியை அழைத்துக்கொண்டு சென்றான்.

விசாரணையில் கங்காராஜ் கொன்றான் என்பதற்கு அவன் புகையிலைப் பையும் அவன் வாய் மொழியுமன்றி வேறு சாட்சிய மில்லாததாலும், அதிலும் அப் பையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களால் இவன் பெயரென்றும் கறுப்பன் பெயரென்றும் சந்தேகத்திற் கிடமா யிருப்பதாலும், அதோடு கொன்றதாய் ஒப்புக்கொள்ளும் குற்றவாளி தன் தற்காப்பை யுத்தேசித்துத் தன்னுயிரைக் காப்பாற்றிக்கொள்ளச் செய்ததாய்க் கூறுவதாலும், அவன் ஆயுதமின்றி அங்கு சென்றதும், அங்கிருந்த ஆயுதத்தாலேயே அவனைக் கொன்றதும் இறந்தவனருகில் உறையிட்ட கத்தியிருந்ததும் அவன் மொழியை மெய்ப்படுத்துவதாலும் குற்றவாளி விடுதலை யடையும்படித் தீர்ப்பளிக்கப் பட்டான். கரியனால் கொல்லப்பட்ட நஞ்சப்பன் தந்தையின் சொத்தாகிய பத்திரங்கள் நஞ்சப்பனிட மளிக்கப் பட்டன- அதற்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு அவன் தன் தந்தையின் கடனைத் தீர்த்தான். 

( நிறைந்தது ) 

பி.கு.

* இந்தக் கதையைக் கானன் டாயில் 1904 -இல் எழுதினார்.

* ஆரணியாரின் மொழியாக்கம் அவருடைய “ ஆனந்தஸிங் “ என்ற நூலில் வெளிவந்தது. முதல் பதிப்பு 1918-இல் வந்தது! 
நூலைப் பற்றிய விவரங்களை 
http://s-pasupathy.blogspot.com//2012/08/2.html  - இல் படிக்கவும்.




தொடர்புள்ள பதிவுகள்:


ஆரணியாரின் நூல்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2016

ஆனந்த சிங் : காட்டூர்க் கடுங்கொலை -2

காட்டூர்க் கடுங்கொலை -2 


காட்டூர்க் கடுங் கொலை -1  

இரண்டாம் அத்தியாயம்

ஆனந்தஸிங், விஸ்வநாதர், இன்ஸ்பெக்டர் அண்ணு ராவ் மூவரும் புறப்பட்டு இரயிலேறி ஒரு சிறு ஸ்டேஷனில் இறங்கினார்கள். அங்கிருந்து இவர்கள் காடு மேடான வழிகளிற் சென்று கடைசியில் பாதை யோரத்தி லிருந்த அத் தனி வீட்டருகிற் சென்றார்கள். அண்ணுராவ் , “ இதுதான் கொலை நடந்தவிடம்,' என்றான்.

அண்ணுராவ் முதலில் இவர்களை இறந்தவனுடைய வீட்டிற்குள் அழைத்துச் சென்று கறுப்பனுடைய மனைவியைக் காட்டினான். அவள் முகத்தைப் பார்க்கும்போது கோரமாயிருந்தது. நீடித்த காலம் சுகம் சந்தோஷம் என்பதையே காணாது மிக்க மனவருத்தமும் சொல்லொணாத துன்பமும் அனுபவித்துக் கொண்டிருந்தவளென்று நன்றாய்த் தெரிந்தது. அவள் முகம் சவம்போல் வெளுத்துக் கலவரமும் திகிலும் குடிகொண்டிருந்தது. அவள் புத்திரியும் மிகமெலிந்த தேகியாய் வாலிபத்தில் பிரகாசமே யில்லாதவளாய் இருந்தாள். தன் தந்தை இறந்தது அவளுக்குச் சந்தோஷ மென்றால் அக் குடும்பத்தின் நிலைமை எப்படிப்பட்ட தென்பதை வாசிப்போரே அறிந்துகொள்ள லாகும். அவள் மனம் விட்டு, ”அய்யா சட்டப்படி என் தந்தையைக் கொன்றவன் தண்டிக்கப்பட வேண்டியது நீதியே. ஆனால், என் வரையில் அவர் இறந்ததற்கு நான் சந்தோஷப் படுவதோடு, அவரைக் கொன்ற கைக்கு நான் ஆசீர்வாதம் செய்யும்படிக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.” என்றாள்.

ஆனந்தஸிங்கும் மற்ற இருவரும் அங்கிருந்து கப்பலறைக்குச் சென்றார்கள். அண்ணுராவ் தன்னிட மிருக்கும் சாவியை யெடுத்துப் பூட்டைத் திறக்க முயன்றவன் தட்டென்று ஆச்சரியமும் பிரமையும் கொண்டு திடுக்கிட்டு நின்றான்.


”ஆ! யாரோ இதைத் திறக்கப் பார்த்திருக்கிறார்கள், “  என்றான்.

ஆனந்தஸிங் அருகிற்போய்ப் பார்த்து, ”ஆம் தடை யில்லை; இதோ அடையாளங்கள்; வேறு சாவியோ ஆணி போன்ற ஒரு கருவியோ போட்டுத் திறக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பூட்டிலிருக்கும் புதுக் கீறல்களைப் பார்!  நன்றாய்த் தெரிகிறது. என்றான் பிறகு சாளரத்தருகில் சென்று பார்த்து யாரோ இதையும் திறக்க முயன்றிருக் கிருர்கள் என்றான். சற்று சிந்தித்து,” ஆயினும் எதையும் அவன் திறக்க முடியாமலே போய்விட்டான். ஆனல், அவன் கெட்டிக்காரன் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை,” என்றான்.

அண்ணு- இது மிக்க ஆச்சரியமே. ஆனல் இந்த அடையாளங்க ளெல்லாம் நேற்று இங்கு இல்லை யென்று சக்தியம் செய்வேன்.

விஸ்வநாதர்.-யாரோ கிராமத்திலிருக்கும் குறும்புக் காரன் செய்த வேலை யிதுவென நினைக்கிறேன்,' என்றார்.

அண்ணு- ஒருகாலு மிராது. கிராம வாசிகளில் ஒருவன்கூட இந்த இடத்தினருகிலேயே வரமாட்டான். அதில் உள்ளே நுழைய எவன் துணிவான்? நீ என்ன நினைக்கிறாய் ஆனந்தஸிங்?

ஆனந்த-அதிஷ்டம் நமது பக்கத்தி லிருக்கிறது. என்று நான் நினைக்கிறேன்.

அண்ணு:-இரவு வந்தவன் இன்னும் மறுபடி வருவா னென்று நினைக்கிறாயோ?

ஆனந்த-முக்காற்பங்கு அப்படித்தான். நேற்று. கதவு திறந்திருக்கு மென்றெண்ணி வந்தான். பூட்டி இருக்கவே கையிலிருந்த சிறு பேனாக்கத்தியால் திறக்க முயன்றான். முடியவில்லை. பிறகு என்ன செய்வான்?

அண்ணு-மறுநாள் தக்க ஆயுதத்தோடு வரவேண் டியதே!

ஆனந்த-ஆம். சந்தேகமென்ன? நாம் கிட்டவிருந்து அவனைப் பிடிக்காவிடில் அது நமது தப்பிதமேயாகும். அதற்கிடையில் அறைக்குள் பார்ப்போம்.

அவ்வாறே அறைக்குள் பிரவேசித்தார்கள். அங்கிருந்த மரணக்குறிகள் யாவும் எடுத்துவிடப்பட்டிருந்தன. ஆனந்தஸிங் சுமார் இரண்டு மணி நேரம் அங்கிருந்த எல்லா வஸ்துக்களையும் மிக்க உன்னிப்பாய்ப் பார்த்தான். ஆனல் சற்றாவது பயனடைந்ததாய் அவன் நினைக்கவில்லை யென்று அவன் முகத்தால் தெரிந்தது. ஆராய்ச்சி செய்யும்போது ஒருதரம் சற்று நின்று அண்ணுராவை நோக்கி,

'நீ இங்கிருந்து எதையாவது எடுத்திருக்கிறாயோ?" என்றான்.

அண்ணுராவ் தான் ஒன்று மெடுக்கவில்லை யென்று. திடுக்கிட்டுக் கூறினான்.

ஆனந்தலிங் அங்கிருந்த அலமாரியைச் சுட்டிக்காட்டி, :இதோ பார் அலமாரியின் ஒரு பக்கத்தில் தூசு மிகக் கொஞ்சமாய் படிந்திருக்கிறது. இங்கிருந்து ஒரு பெரிய புத்தகமோ அல்லது பெட்டியோ எதுவோ எடுக்கப் பட்டிருக்கிறது. இதற்குமேல் இங்கு நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அண்ணு ராவ், நாங்கள் சற்று நேரம் தோட்டத்தில் உலாவிவிட்டு வருகிறோம். பிறகு இராத்திரிக்கு அவன் அகப்படுகிறானா பார்ப்போம்,' என்றான்.

அன்றிரவு மூவரும் அந்தக் கடலறையின் பக்கத்தி லிருந்த புதர்களின் இடையில் மறைந்துகொண்டு காத்திருந்தார்கள். அண்ணுராவ் அறையின் கதவைத் திறந்து வைக்கலாம் என்றான். ஆனந்தஸிங், “ சே, சே. அது கூடாது. அப்படிச் செய்தால் அவனுக்குச் சந்தேக முண்டாய்விடும். பூட்டு மிக்க சாதாரணமான பூட்டே. கொஞ்சம் பலமான சிறு கத்தியின் அலகினால் கஷ்டமின்றித் திறந்துவிடுவான். மேலும் நாம் அறைக்குள் இருக்கலாகாது; வெளியிலிருந்து மெதுவாய்ச் சாளரத்தின் வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தால், அவன் என்ன செய் வதற்காக இங்கு வந்தான் என்பதை அறியலாகும்" என்றான்.

அவ்வாறே சாளரத்தின் திரையில் ஒர் துவாரம் செய்துவிட்டு சந்தடி செய்யாது எச்சரிக்கையா யிருந்தார்கள். முதல் சற்றுநேரம் வேலையிலிருந்து நேரங் கழித்து கிராமத்திற்குச் செல்லும் ஆட்கள் ஒவ்வொருவரும் பாதை வழியாய்ச் செல்லும் சந்தடி கேட்டது. கிராமத்தில் கொஞ்சம் சந்தடியா யிருந்தது. போகப் போக கிராமத்தில் அங்கிருந்த தீபவொளியும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து எங்கும் இருள் சூழ்ந்தது. சந்தடியும் அடங்கி எங்கும் நிர்ச்சந்தடியாய் விட்டது. இவர்கள் எச்சரிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

தூரத்திலிருந்த கோயில் மணியால் கால அளவுமட்டும் தெரிந்தது. மணி இரண்டடித்தது. அப்போது அங்கு அதிக இருட்டான வேளை. அச்சமயத்தில் வீட்டிலிருக்கும் எல்லையைச் சூழ்ந்துள்ள வேலியிலிருக்கும் தட்டிக் கதவை யாரோ திறப்பதுபோல் களிக் என்று சத்தம் கேட்டது. யாரோ உள்ளே நுழைந்தார்கள் என்று தெரிந்ததே மூவரும் ஜாக்கிரதை யானார்கள். பிறகு பாதைவழியே யாரோ மெதுவாய் கடந்து வருவதுபோல் தெரிந்தது. ஒரு ஆள் அறையை நோக்கி வந்து இவர்களிருக்கும் பக்கத்திற்கு மறுபக்கத்திருந்த கதவண்டை சென்றுகின்றன். கிர் கிர் என்ற சத்தத்தால் அவன் பூட்டைத் திறக்க முயற்சி செய்கிறான் என்று தெரிந்தது. ஆனால் இந்த முறை அவன் சரியான ஆயுதம் கொண்டு வந்திருந்தபடியால் இரண்டு நிமிடங்களில் களிக் என்று பூட்டுத் திறந்துகொண்டதும் கதவைத் திறந்து ஆள் உள்ளே நுழைந்து மறுபடி கதவை மூடிவிட்டான். உடனே அறைக்குள் தீபம் ஏற்றப்பட்டதும் சாளரத்தின் திரையில் வெளிச்சம் தெரிந்தது.

மூவரும் பூனைகள்போல் மெதுவாய்ச் சென்று திரையில் செய்யப்பட்டிருக்கும் துவாரத்தின் வழியாய் உள்ளே நோக்கினர்கள். வந்திருந்தவன் ஒரு வாலிபன்; மிக்க மெலிந்த தேகி. கறுத்த மீசை மட்டும் விட்டுக்கொண் டிருக்கிறான். நாணயமான பெரிய மனிதர்போல் உடை அணிந்திருந்தான். வயது இருபதிற்கு மேலிராது. முகம் மிக்க அலைச்சலும் துயரமும் அடைந்தவனதுபோல் இருந்தது. அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. திகிலும் கலவரமும் அவன் நெஞ்சில் குடிகொண்டிருந்தன. அவனைப் பார்க்கும்போது மிக்க பரிதாபமாயிருந்தது. அவன் கையில் பிடித்திருந்த மெழுகுவத்தியை மேஜைமேல் வைத்து விட்டு அறையின் ஒரு மூலைக்குச் சென்று அங்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்த பெரிய புத்தகங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு விளக்கருகில் வந்தான். அவன் புத்தகத்தை மேஜையின் மேல் வைத்து அதன் மேல் சாய்ந்து கொண்டு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தான்.





 கடைசியில் தான் தேடிய விஷயத்தைக் காணாதவன்போல் கோபத்தோடு புத்தகத்தின் மேல் கையை அறைந்து அதை எடுத்துப்போய் இருந்தவிடத்தில் வைத்து விட்டு விளக்கை யணைத்து விட்டான். அவன் விளக்கை யணைத்து விட்டுத் திரும்புவதற்குள், அண்ணுராவ் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டான். அவ்வாலிபன் பயத்தால் நடுங்கி அலறிவிட்டான். உடனே தீபம் ஏற்றப்பட்டது. வாலிபன் நடுங்கி வியர்த்து எதிரிலிருப்பவர்களே மாறி மாறிப் பார்த்து மிரள மிரள விழித்தான்.


அண்ணுராவ் அவனை நோக்கி- “தம்பி! நீ யார் இந் நேரத்தில் இங்கு என்ன வேலையாக வந்தாய்?" என்றான்.

வாலிபன் சற்று சமாளித்துக்கொண்டு, “ அய்யா! நீங்கள் துப்பறிபவர்கள்போல் காண்கிறது. அப்படியானால் இக்கரியன் கொலையில் நான் சம்பந்தப்பட்டவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலும். அடியோடு தவறு. உண்மையாய்க் கூறுகிறேன் நான் முழுவதும் நிரபராதி," என்றான்.

அண்ணு- அதைப்பற்றிப் பிறகு பார்த்துக்கொள்வேன். உன் பெயர் என்ன?’ என்று வினவினான்.

அதற்கவ் வாலிபன் ஜயபுரம் அஞ்சல் நஞ்சப்பன், ! என்றான்.
இதைக் கேட்டதே அண்ணுராவும் ஆனந்தஸிங்கும் நோட் புத்தகத்தில் கண்ட ஜ. அ. ந. என்ற குறிப்பை நினைத்துக்கொண்டு ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அண்ணுராவ் வாலிபனை நோக்கி “இங்கு என்ன செய்கிறாய்?' என்றான். /
வாலிபன், நான் கூறுவதை இரகசியமாய் வைத்துக் கொள்கிறீர்களா?' என்றான். அண்ணு ஒரு காலும் முடியா தென்றான். வாலிபன் அப்படியாயின் உன்னிடம் கூற மாட்டேன் என்றான். அண்ணுராவ் 'நீ விடை கூறாவிட்டால் அது உனக்குத்தான் விரோதமாய் முடியும்,' என்று கூறியதைக் கேட்ட வாலிபன் சற்று நேரம் சிந்தித்து,
"சரி, சரி கூறுகிறேன். ஏன் கூறலாகாது? ஆயினும் நாட்பட்டு மறைந்துபோன சமாசாரத்தை மறுபடி பறையறைவிப்பது அவமானமாயிருக்கிறதென்று அஞ்சுகிறேன்; வேறொன்றுமில்லை. தங்கப்பிள்ளை நயனப்பன் கம்பெனி என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?’ என்றான்.

இதைக் கேட்டதே ஆனந்தஸிங் தோட்களை அசைத்துக்கொண்டு அக்கரையோடு செவி கொடுத்துக் கேட்க முயன்றான். அண்ணுராவ் அப் பெயரைக் கேள்விப் பட்டதேயில்லை யென்று அவன் முகத்தால் தெரிந்தது. ஆனந்தஸிங் வாலிபனை நோக்கி,

“ மேற்கு மாகாணத்தில் பாங்கி வைத்துக்கொண் டிருந்தபோது பத்து லக்ஷத்துக்கு கஷ்டமடைந்து அனேக குடிகளை அழித்துவிட்டுப் பாங்கியை மூடிவிட்டார்களே: நயனப்பன் என்பவன் எங்கோ ஒடிவிட்டான்,' என்றான்.


வாலிபன்- அவர்களே! அவர்களே! நயனப்பன் என்பவர் என் தந்தை. தங்கப்பிள்ளை அதற்கு முன்பே கூட்டிலிருந்து நீங்கிவிட்டார். இப்போது நான் கூறுவதைத் தயை செய்து கவனமாய்க் கேளுங்கள்.  எனககு
அப்போது பத்துப் பதினோரு வயதேயாயினும் என் தந்தைக்கு நேர்ந்த அவமானம் என் மனதில் நன்றாய்த் தாக்கியது. நெடுநாளாய் அவர் பாங்கியிலிருந்த எல்லாப் பத்திரங்களையும் உண்டிகளையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார் அது உண்மையல்ல. இன்னும் கொஞ்ச நாள் தவணைமட்டும் கொடுத்திருந்தால் அவர் காசுகூடக் குறைவின்றி எல்லாப் பணத்தையும் கொடுத்து விட்டேயிருப்பார். அவர் மேல் வாரன்ட் பிறக்க இரண்டு நாட்களிருக்கையில் அவர் ஒரு சிறிய கப்பலிலேறி வடக்கிலுள்ள ஒரு தேசத்திற்குச் சென்றார் அவர் புறப் படும் தினம் என் தாயாரிடமும் என்னிடமும் பேசியது எனக்கு நன்றாய் நினைவிலிருக்கின்றது. அவர் கையில் எடுத்துக்கொண்டுபோன பாங்கிப் பத்திரங்களின் விவரப் பட்டி யொன்று என் தாயிடம் கொடுத்துவிட்டு, தான் எப்படியேனும் தனக்கு நேர்ந்த அவமானத்தை நீக்கிக் கொண்டு திரும்பி வருவதாகவும், தன்னை நம்பி தன்னிடம் பணம் கட்டியவர்களுடைய காசு முழுமையும் ஒன்றுகூடப் பழுதின்றி திரும்பக் கொடுக்கப்படுமென்றும் கூறிச் சென்றார். அவ்வளவே சங்கதி. அவரைப்பற்றி அதன் பிறகு எங்கும் ஒரு பிரஸ்தாபமுமில்லை. அவர் மட்டுமல்ல, அவர் எறிச் சென்ற கப்பல்கூட அடியோடு அதிலிருந்த ஆட்களோடு மாயமாய்ப் போய்விட்டது. அக் கப்பலும் அதிலிருந்த ஆட்களும் என் தந்தையோடு கடலில் மூழ்கி விட்டார்கள் என்றே தீர்மானித்துவிட்டோம். என் தந்தைக்கு ஆப்த நண்பரொருவரிருக்கிறார். அவர் தான் சில நாட்களுக்கு முன் என் தந்தை யெடுத்துச் சென்ற பாங்கிப் பத்திரங்களில் சில நகரத்தில் செலாவணியா யிருப்பதாய்த் தெரிந்து வந்து கூறினர். எங்களுக்குண்டான சந்தோஷத்திற்கும் ஆச்சரியத்திற்கும் அளவேயில்லை. நான் உடனே அதைப்பற்றி கண்டறியப் புறப்பட்டுப் பல நாட்கள் அலைந்து கஷ்டப்பட்டுக் கடைசியில் அவைகளை முதலில் விற்றவன் “கடல்யாளி”  என்னும் கப்பலின் கப்பித்தானாகிய பள்ளியூர் கரியன் என்னும் இந்த மனிதனே என்று கண்டறிந்தேன். அதன் மேல் இவனைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். இவன் நடத்திய கப்பல் திமிங்கல வேட்டை யாடுங் கப்பலென்றும், என் தந்தை வட கடலிலுள்ள நாட்டிற்குச் சென்ற காலத்தில்தான் அதாவது 1888-வது வருடம். இவன் கப்பல் வட கடலிலிருந்து திரும்பி வந்திருக்கிறதென்றும் கண்டறிந்தேன். மேலும் அந்த மாதங்களில் வட கடலில் புயல் அதிகம். தெற்கிலிருந்து காற்று அடிக்கடி பலமாய் அடித்துக்கொண்டிருந்தது. ஆகையால், என் தந்தையின் கப்பல் வடக்கு நோக்கி அடித்துக்கொண்டு போகப்பட்டிருக்கும். அங்கே தற்செயலாய் இவன் கப்பலைச் சந்தித்திருக்கும். அப்படியாயின் என் தந்தையிடமிருந்த பத்திரங்கள் இவனிடம் சிக்கியிருப்பதால், அவை எப்படி இவனிடம் வந்தன என்பதும், என் தந்தை என்ன கதியானாரென்பதும் இவனுக்குத் தெரிந்திருக்கும். இந்த உண்மையைக் கண்டு பிடித்து என் தந்தை அப் பத்திரங்களை இவனுக்கு விற்கவில்லை என்று ருசுவானால் அவர் ஜனங்களை மோசம் செய்யக் கருதவில்லை என்பது விளங்கிவிடும். அவர்மேலிருக்கும் அவமானம் துடைக்கப்பட்டுப்போம்.

ஆகையால் இவனைக் காண்பதற்காக நான் புறப்பட்டு அருகிலிருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தேன். என் ஈன அதிஷ்டம் அச்சமயத்தில்தான் இக்கொலை நடந்திருக்கிறது. இதைப்பற்றிய மரண விசாரணையைப் பத்திரிகைகளில் வாசித்தபோது இந்த அறையின் விவரத்தை அறிந்தேன். இதிலிருக்கும் அலமாரியில் “ கடல் யாளி' என்ற கப்பலைச் சேர்ந்த புத்தகங்களனைத்தும் வைக்கப்பட்டிருந்ததாய் அதிற் கூறப்பட்டிருந்தது. ஆகவே இந்தப் புத்தகங்களைப் பார்த்தால் என் தந்தையின் சென்ற வருடத்திய பதிவுகளில் இக் கப்பலில் இன்னின்ன சம்பவம் நேர்ந்ததெனக் கண்டறிய லாகும். அதனால் என் தந்தையின் கெதி என்னவாயிற்று என்று கண்டறியலாகுமென்று எண்ணினேன். கடந்த இரவு வந்து கதவைத் திறக்கப்பார்த்தேன். முடியவில்லை. இன்று மறுபடி வந்தேன். என் தந்தையின் சென்ற வருடத்தைச் சேர்ந்த பதிவுகளிருக்கவேண்டிய இதழ்களெல்லாம் கிழித்தெடுக்கப் பட்டிருக்கின்றன. கோபத்தோடு புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். நீங்கள் வந்து பிடித்துக்கொண்டீர்கள்,' என்று முடித்தான்.

அண்ணுராவ்:- இவ்வளவுதானா?' என்றான்.
நஞ்சப்-ஆம். இவ்வளவே.

அண்ணு-கடந்த இரவுக்குமுன் நீ இங்கு வரவில்லையே? “

நஞ்சப்:-இல்லை” என்றான். –

அண்ணுராவ் தன் மடியிலிருந்த நோட் புத்தகத்தை எடுத்து அவனுக்குக் காட்டி அப்படியானால் இந்தப் புத்தகம் இங்கு சவத்தருகிலிருந்து அகப்பட்டதே? இதற்கென்ன கூறுகிருய்?" என்றான்.

அதைக் கண்டதே அவன் இடிவிழுந்தவன் போலாய் விட்டான். எனக்குத் தெரியாது. இது ஒட்டலில் போக்கடித்து விட்டதென்று எண்ணி யிருக்கிறேன்." என்றான்.


அண்ணு:-சரி, போதும், போதும் மற்றப்படி நீ கூறவேண்டிய விஷயங்களிருப்பின் நியாயஸ்தலத்தில் கூறிக்கொள்ளலாம். இப்போது என்னோடு போலீஸ் சாவடிக்கு வரவேண்டியதே,” என்றான்.

( தொடரும் )


தொடர்புள்ள பதிவுகள்:



வியாழன், 7 ஜூலை, 2016

ஆனந்தசிங்: காட்டூர்க் கடுங் கொலை -1

 காட்டூர்க் கடுங் கொலை -1 

ஆரணி குப்புசாமி முதலியார் 

ஜூலை 7.  ஆர்தர் கானன் டாயிலின் நினைவு தினம்.



கானன் டாயிலின் ‘  Adventure of  Black Peter'  என்ற ஷெர்லக் ஹோம்ஸ் கதையை  ஆரணியார் மொழியாக்கத்தில் இதோ  படிக்கலாம் !  :

கதைகளில்  ஆரணியார்  வைக்கும் பெயர்கள் அருமையாய் இருக்கும்!
காட்டு:   Black Peter -க்கு அவர் வைத்த பெயர் பள்ளியூர் கரியன்!

(    இதைப்போலப்  பல ஆண்டுகளுக்கு முன் Harry Black and the Tiger - என்ற  ஆங்கிலத் திரைப்படத்தை “ ஹரிஹரக் கறுப்பனும் பயங்கரப் புலியும்” என்று மொழிபெயர்த்துத் தமிழ்நாட்டுச் சினிமா அரங்குகளில் காட்டியது சிலருக்கு நினைவிருக்கலாம்!  )

==================  

முதல் அத்தியாயம்

ஆனந்தஸிங் பணத்திற் காசைப்பட்டுச் செல்வந்தர்கள் விஷயமாய்த் தொழில் செய்யப்போவதில்லை. நடந்த குற்றத்தின் தன்மை அவன் மனதைத் தூண்டத் தக்கதா யிருக்கவேண்டும். கண்டு பிடிக்கக் கஷ்டமா யிருக்கும் ஒரு குற்றத்தைப் பற்றிப் போலீஸார் உதவி செய்யும்படி வேண்டிக்கொண்டால் அவன் சற்றும் சுய நலமாவது கைமாறாவது கருதாமல் சிரத்தையோடு அவர்களுக் குதவிபுரிவான். ஒரு காலத்தில் அவன் அந்த நகரத்தில் ஐந்திடங்களில் ஐந்து வெவ்வேறு பெயர்களோடும் வெவ் வேறு மாறு வேடங்களோடும் சஞ்சரித்து வந்தான். அச் சமயம் இரண்டு மூன்று அதிசயமான கொலைகள் நடந்திருந்தன. யாராரோ முரட்டு மனிதர்கள் அவன் வாசஸ்தலத்திற்கு வந்து ஆனந்தஸிங்கின் மாறு பெயர்களில் ஒன்றைக் கூறி அவனைக் கேட்பார்கள்.

விஸ்வநாதருக்கு அவன் எந்தவிடத்தில் என்ன வேலை செய்கிறான், எந்தக் குற்றத்தின் சம்பந்தமாய் வேலை செய்கிறான் என்று தெரியாது. எந்த இரகசியமும் தக்க சமயத்தில் தன்னிடம் கூறுவானென்று அவருக்குத் தெரியும் , ஆகையால், அவனே கூறுமுன் அவர் வலிய வந்து எந்த இரகசியத்தைப் பற்றியும் அவனைக் கேட்பதில்லை. இவ்வாறிருக்கையில் ஒருநாள் காலையில் வெளியில் சென்ற ஆனந்தஸிங், விஸ்வநாதர் அவனுக்காக நெடுநேரம்  போஜனத்திற்கு காத்துக் கொண்டிருந்து கடைசியில் உண்ண உட்கார்ந்தபோது அறைககுள் வந்தான். அவன் அக்குளில் பயங்கரமான வேலாயுதம் போன்ற ஒரு நீண்ட ஈட்டியைக் குடைபோல் இடுக்கிக்கொண்டிருந்தான்.




அதைக் கண்ட விஸ்வநாதர் வியப்பும் பயமுமடைந்து, “இதென்ன  ஆனந்தஸிங்!  இதை அக்குளில் வைத்துக் கொண்டு பட்டப்பகலில் இந் நகர் வீதிகளின் வழியாகவா நடந்து வந்தாய்?"

ஆனந்த:-- நான் வண்டிகளில் கசாப்புக் கடைக்குக் சென்று வந்தேன்.
விஸ்வநாதர் வியப்போடு 'கசாப்புக் கடைக்கா? “  என்றார்.

ஆனந்த: - ஆம் மிக்க பசியோடு வருகிறேன். சாப்பாட்டிற்கு முன் தேகாப்பியாசம் செய்வது இணையற்ற பயனை யளிக்கிறதல்லவா? ஆயினும் நான் எவ்விதமான அப்பியாசம் செய்துவிட்டு வந்தேன் என்பதை மட்டும் நீ ஊகித்துக் கூறக்கூடுமா?

விஸ்வ:- முடியாது.

ஆனந்த:-- அரை மணிக்கு முன்பு மட்டும் நீ கசாப்புக் கார சந்தில் 4-வது கடையின் பின் பக்கத்திலுள்ள கூடத்திற்கு வந்து பார்த்திருந்தால், அங்கு மேல் தூலத்திலுள்ள ஒரு கொக்கியில் ஒரு இறந்த பன்றி கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும், ஒருவன் இந்த ஈட்டியால் அதை யூடுருவக் குத்தப் பலமான பிரயத்தனம் செய்துகொண் டிருந்ததையும் பார்த்திருப்பாய். அப்படிக் குத்திக்கொண் டிருந்தவன் நான்றான். ஏன் சொல் பார்ப்போம்?


விஸ்வ:- சற்றேனும் எனக்கு விளங்கவே யில்லை. என் அப்படிச் செய்துகொண்டிருந்தாய்?

ஆனந்த-'ஏனெனில் அதற்கும் காட்டூர்க் கொலைக்கும் ஒருவித சம்பந்தம் இருக்கிறதென்று என் மனதிற் பட்டிருக்கிறது. அந்த நிதானத்தை அறிந்துகொண்டேன்,' என்றான்.

ஆனந்தஸிங் அவ்வாறு கூறி வாய் மூடுமுன் அறையின் கதவு திறக்கப்பட்டதும் போலீஸ் உடை தரித்த ஒருவன் உள்ளே வந்தான். அவனைக் கண்ட ஆனந்தஸிங், 'ஆ இன்ஸ்பெக்டர் அண்ணுராவ் ! வா! வா! உன் தந்தி இரவுதான் வந்தது. நீ வரும் வேளை நெருங்கிவிட்ட தென்றே நான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வா! போஜனம் செய்ய,’ என்றான். அண்ணுராவ் என்பவனுக்குச் சுமார் முப்பது வயதிருக்கும். அவன் மிக்க சுறு சுறுப்பும் சூக்கும அறிவுமுடையவன். ஆனல் குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் இன்னும் பிரக்யாதி பெறவில்லை. தக்க குற்றங்களும் இதுகாறும் சம்பவிக்கவில்லை. இவன் நல்ல பிரக்யாதி பெறுவானென்று ஆனந்தஸிங் நம்பியிருக் தான். அதனாலேயே அவன் மேல் மிக்க விசுவாசம் காட்டி வந்தான். அச்சமயம் அவன் முகம் வாடி இருளடைந்திருந்தது. அவன் ஆனந்தஸிங்கை நோக்கி,

“வந்தனம், நான் வருமுன்பு போஜனம் செய்து கொண்டே வந்தேன். நான் இக்கொலைப்பற்றி ரிபோர்ட் செய்வதற்காக நேற்றே நகரத்திற்கு வந்தேன்." என்றான்.

ஆனந்த:- என்னவென்று ரிபோர்ட் செய்தாய்?

அண்ணுராவ் மனச் சோர்வோடு, “ என்னென்று? ஜெயமடையவில்லை யென்றுதான் ரிபோர்ட் செய்தேன்."

ஆனந்த :- கொஞ்சமேனும் உளவு அகப்படவே இல்லையோ?

அண்ணு: - ஒன்றுமே யில்லை. –

ஆனந்த-அடடா! அப்படியானால் நான் வந்து பார்த்தே தீரவேண்டும்.

அண்ணு-அந்தோ! நீ எப்படியேனும் வரவேண்டுமென்றே கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கோ ஒன்றுமே புலப்படவில்லை. தயவுசெய்து வந்து கொஞ்சம் உதவி செய்தால் பெரிய புண்ணியமாகும்.

ஆனந்த:- சரி, சரி. இதுவரையில் அகப்பட்டிருக்கும் சாக்ஷியங்களை யெல்லாம் முன்னமே பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டேன். கொலை நடந்த விடத்தில் புகையிலைப்பை யொன்றிருந்ததாய்க் கூறப்படுகிறதே அதில் ஒன்றும் உளவில்லையோ?” என்றான்.

இதைக் கேட்ட அண்ணுராவ் ஆச்சரிய மடைந்து, ”அதில் என்ன இருக்கிறது? அது அவனுடையதே. பையின் உட்பக்கம் அவன் பெயரின் முன் எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் பை ஸீல் என்ற ஜல சரத்தின் சர்மத்தால் செய்யப்பட்டது. அவன்றான் அந்த ஜலசரங்களை வேட்டையாடிப் பிடிக்கும் தொழிலிலேயே யிருந்தவன்.” என்றான்.

ஆனந்த-அது சரிதான். புகையிலைப் பை மட்டும் இருந்ததேயன்றி சுங்கான் இல்லையே.

அண்ணு:-இல்லை, தேடிப் பார்த்தோம். சுங்கான் ஒன்றேனும் அங்கில்லே. ஆனல் அவன் அடிக்கடி சுங்கான் பிடிப்பவனல்ல. எப்போதேனும் ஒரு வேளையே பிடிப்பவன். அப்படி யிருந்தும் ஒரு சமயம் யாராவது தன் சினேகிதர்கள் வந்தால் உதவுமென்று கையிருப்பில் கொஞ்சம் புகையிலே வைத்துக்கொண்டிருந்திருப்பான்.

ஆனந்த-அதிற் சந்தேகமில்லை. அப்படியே யிருக்கவுங் கூடும். ஆயினும் நானாக யிருந்தால் அந்தப் பையிலிருந்து தான் என் ஆராய்ச்சியைத் தொடங்கியிருப்பேன். இதோ யிருக்கிற நமது நண்பர் விஸ்வநாதருக்கு இச்சம்பவம் இன்னும் தெரியாது. நானும் பத்திரிகைகளில் பார்த்ததே யன்றி வேறில்லை. ஆகையால் தயவுசெய்து நடந்த சங்கதியை ஆதியோடந்தமாய்ச் சுருங்கக் கூறின் நலமாயிருக்கு மென நினைக்கிறேன்,” என்றான்.

அண்ணுராவ் தன் ஜேபியிலிருந்த ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு 'இதோ சில குறிப்புகளிருக்கின்றன. இறந்தவன் சரிதையைத் தெரிந்த வரையில் சுருக்கமாகக் கூறுகிறேன்,” என்று கூறத் தொடங்கினான்:

” இறந்தவன் பெயர் பள்ளியூர்க் கரியன். அவனுக்கு வயது 60 இருக்கும். ஸீல்கள் திமிங்கிலங்கள் இவற்றை வேட்டையாடிப் பிடிப்பதில் மிக்க துணிகரமான தீரன். அவன் நெடுநாள் திமிங்கில வேட்டையாடும் ”கடல்யாளி” என்ற கப்பலுக்குக் கப்பித்தானா யிருந்தான். சில வருடங் கள் கழித்து அந்த வேலையை விட்டுவிட்டு இரண்டொரு வருடங்கள் யாத்திரை செய்து கடைசியில் காட்டூரில் கொஞ்சம் பூமி வாங்கிக்கொண்டு அக்கிராமத்தின் ஓரத்தில் தனியே ஒரு வீடு கட்டிக்கொண்டான். அங்குபோய்ச் சேர்ந்து இப்போது ஆறு வருடங்களாகின்றன. அங்கேயே அவன் மடிந்து இன்று சரியாய் ஏழு நாட்களாகின்றன.

அவனிடத்தில் சில அசாதாரணமான குணங்களுண்டு. சாதாரணமாய் மெளனமாய் சந்தோஷமில்லாம லிருப்பவன். அவன் குடும்பத்தில் அவன் மனைவியும், சுமார் 20 வயதுடைய ஒரு குமாரத்தியும், இரண்டு வேலைக்காரிகளுமே யிருக்கிறார்கள். வேலைக்காரிகள் அடிக்கடி மாறிக் கொண்டே யிருப்பார்கள். ஏனெனில் அக் குடும்பத்தில் அவனுடைய கொடூர நடவடிக்கைகளால் சற்றேனும் சந்தோஷமென்பதே கிடையாது. சில வேலைகளில் அவனுடைய கொடிய நடக்கைகள் ஒருவராலும் பொறுக்க முடியாமற் போம். அவன் ஓயாத குடியன். வெறி அதிகமாய்விடும் சமயங்களில் மகா கொடிய இராசக்ஷதனிலும் பயங்கரமானவனாய் மாறிவிடுவான். ஒவ்வொரு சமயங்களில் தன் மனைவியையும் புத்திரியையும் வீட்டருகிலுள்ள தோட்டத்தைச் சுற்றிச்சுற்றித் துரத்தியடிப்பான். அவன் போடும் கூச்சலைக் கேட்டு சமீபத்திலுள்ள கிராமத்தார் யாவரும் பயந்து அலறி நித்திரையை விட்டெழுந்து கொள்வார்கள்.

ஒருநாள் அவனுடைய இரக்கமற்ற கொடிய நடக்கைகளைக் கண்டித்து அவனுக்கு நற்புத்தி புகட்ட முயன்ற அக்கிராம குருவை அடித்துவிட்டான். முடிவாய்க் கூறுகிறேன் அவனைப்போன்ற அபாயகரமான துஷ்டன் வேறொருவனைப் பார்ப்பது அரிதினும் அரிதேயாகும். அவன் “கடல்யாளி," என்ற கப்பலுக்குத் கப்பித்தானா  யிருந்தபோதும் அப்படித்தா னிருந்தான். கப்பலிலிருந்தவர்களெல்லாம் அவனைக் கண்டால் துஷ்ட மிருகத்தைக் கண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இவனுக்குக் கரியன் என்பதற்குப் பதில் “கருங்காலன்' (கறுப்பு எமன்) என்று மாறுபெயர் வைத்தார்கள். அவன் கறுப்புத் தாடியும் காண்போரனைவர்க்கும் பயத்தை யுண்டாக்கு மென்பதில் சந்தேகமேயில்லை. யாவருக்கும் அவன்மேல் முழுதும் வெறுப்பே. அவன் இவ்வாறு கொடூரமாய்க் கொலையுண்டதற்காகப் பரிதாபம் காட்டுகிறவர்கள் ஒருவரேனுமில்லை.

மரண விசாரணையைப் பற்றிய ரிபோர்ட்டில் அவனுடைய கப்பலறையைப்பற்றிய விவரத்தை யறிந்து கொண்டிருப்பாய். உன் சினேகர்க்கு அது தெரியாது. அவன் தன் வீட்டிற்குச் சுமார் நூறு நூற்றைம்பது கெஜ துரத்திற் கப்பால் மரப்பலகைகளால் கப்பலிலுள்ள கப்பித்தானுடைய அறையைப்போலவே ஒரு அறை கட்டிக் கொண்டான். அங்குதான் அவன் இரவில் சயனித்துக் கொள்வது. அது 16-அடி நீளம் 10-அடி அகலம் உள்ளது. அதன் பெயர் கடலறை. அதன் சாவியை அவன் ஜேபியிலேயே வைத்திருப்பான். வேறு யாரும் அதற்குள் நுழையலாகாது. அதன் பக்கங்களில் சிறு சாளரங்கள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் திரை யிடப் பட்டிருந்தது. அத்திரைகள் ஒருபோதும் நீக்கப்படுவதே யில்லை. அச்சாளரங்களில் ஒன்று இராஜ பாட்டையைப் பார்த்தாற்போ லிருக்கிறது. இரவில் சாளரத்தில் தீப வெளிச்சம் தெரிகிறபோது வழியில் போகும் ஜனங்கள் 'அடடா இந்தக் கருங்காலன் இந்த இரவில் என்ன செய்கிறான்,' என்று ஒருவர்க்கொருவர் வியப்போடு பேசிக்கொள்வார்கள். அச் சாளரந்தான் மரண விசாரணையில் சொல்ப உளவைக் காட்டிற்று.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கல் தச்சன் இரவு சுமார் ஒரு மணிக்குப் பாதை வழியாய்ச் செல்லும்போது, அச்சாளரத்தின் திரையில் தீபவெளிச்சம் நன்றாய்ப் பிரகாசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான். அத்திரையில் ஒரு மனிதன் தலையின் நிழல் தெரிந்ததாகவும் அது தாடியுடைய தலையென்றும், ஆனால் அது கரியன் முக மல்லவென்று தாடியின் வித்தியாசத்தால் நன்றாய்த் தெரிந்த தென்றும் அவன் பிரமாணிக்கமாய்க் கூறினான். திங்கட் கிழமை யவன் இதைக் கண்டது. கொலை நடந்தது புதன் கிழமை.

கொலை நடந்ததற்கு முன்னாளாகிய செவ்வாய்க்கிழமை கரியன் மிக்க மூர்க்கக் குணத்திலிருந்தான். அன்று. வெறிக்கக் குடித்து மிக்க பயங்கரமான ஒரு கொடூர காட்டு. மிருகம்போ லிருந்தான். அவன் வீட்டை நோக்கி வரும் சத்தத்தைக் கேட்டால் வீட்டில் இருக்கும் யாவரும் நடு நடுங்கிப்போப் பயத்தால் தூர ஒட்டம் பிடிப்பார்கள். அன்றி இரவு வழக்கம்போல் கடலறைக்குள் போப் விட்டான். இரவு சுமார் இரண்டு மணிக்கு அவன் பயங்கரமான ஒரு கூச்சல் போட்டான். அது வீட்டிலிருப்பவர்களுக்குக் கேட்டது. ஆனல், அவன் அதிகமாய்க் குடித்திருக்குங் காலங்களில் அவ்வாறு சத்தங் கேட்டதைப்பற்றி யாரும் கவலையெடுத்துக் கொள்ளவில்லை. காலையில் அவன் அறையின் கதவு சற்று திறந்திருப்பதைக் கண்டு வியப்புற்றார்கள். யாவர்க்கும் அவனிடமிருந்த பயத்தால் பகல் பன்னிரண்டு மணி வரையில் ஒருவராவது அந்த அறைக்குள் நுழையத் துணியவில்லை. கடைசியில் சுமார் பன்னிரண்டு. மணிக்கு பலவித சத்தங்களிட்டுப் பார்த்து, உள்ளிருந்து ஒரு சந்தடியும் கிளம்பாதிருக்கவே ஒருவன் எட்டிப் பார்க்கத் துணிந்தான். எட்டிப் பார்த்தவர்களெல்லாம் அங்கிருக்கும் காட்சியைக் கண்டதே வீறிட்டலறிக் கிராமத்திற்கு ஒட்டம் பிடித்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நான் அங்கு சென்று விசாரணை செய்ய ஆரம்பித்தேன்.

நான் கூடியவரையில் சற்றுக் கலவரமடையாத மனமுடையவனே யென்பது உனக்குத் தெரிந்த விஷயமே. அப்படி யிருந்தும் நான் அவ்வறைக்குள் எட்டிப் பார்த்ததே திடுக்கிட்டு  மனங்கலங்கிவிட்டேன். அறை முழுதும் ஈக்களும் வண்டு முதலியவைகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. தரையும் சுவர்களும் ஆடறுக்கும் தொட்டிபோல் எங்கும் இரத்தமயமாயிருந்தது. அவன் அதற்குக் கப்பலறையென்று பெயர் வைத்தது போல் அது கப்பல்களில் கப்பிக்கானிருக்கும் அறை எப்புடி யிருக்கிறதோ அப்படியேயிருக்கிறது. அதற்குள் சென்றால் கப்பலுக்குள் ஒரு அறையிலிருப்பதுபோலவே தோன்றும். அறையின் ஒரு கோடியில் ஒரு தொட்டி யிருந்தது. ஒரு கப்பற் பெட்டி, பூமிப் படங்கள, கடலில் வழிகாட்டும் படங்கள், கடல்யாளி” என்ற கப்பலின் படம் ஒன்று, ஒரு அலமாரியில் வரிசையாய் புத்தகங்கள், எல்லாம் ஒரு கப்பலில் கப்பித்தான் அறையில் எப்படி யிருக்குமோ
அப்படியே யிருந்தன. அறையின் மத்தியில் கறுப்பன் அவன் முகம் வேதனையோடு மேலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. விசாலமான
மார்பில் ஒரு எறி ஈட்டி குத்தப்பட்டிருந்தது. ( அது ஒரு பலமான பெரிய ஈட்டி. அதன் கைப்பிடி முனையில் நீண்ட ஒரு கயிற்றைக் கட்டிக் கடலில் திமிங்கிலத்தின் மேல் வீசி எறிந்து வேட்டை யாடுவார்கள்.) அந்த ஈட்டி அவன்
முதுகில் ஊடுருவிப் பின் பக்கமிருந்த பலகையில் இறங்கி யிருந்தது. அவன் தேகம் அந்த ஈட்டியால் பலகையில் தைக்கப்பட்டிருந்தது. அவன் கூச்சலிட்ட போதே பிராணன் நீங்கி விட்டிருக்கும். நீர் ஆராய்ச்சி செய்கிற மார்க்கங்களை நானறிந்து கொண்டிருக்கிறேனாதலால் அதன்படி ஜாக்கிரதையாய்ப் பார்த்தேன். சவத்தை அப்புறப்படுத்த அனுமதி யளிக்கு முன் அறையின் கீழ்ப் பக்கமும் வெளிப்புறங்களிலும் கால் அடிகள் ஏதாவதிருக்கின்றனவோ வென்று மிக்க ஜாக்கிரதையோடு பார்த்தேன்.  காலடிகளொன்றும் அகப்படவில்லை."

ஆனந்தஸிங்:-  உனக்கு ஒரு காலடியும் அகப்பட வில்லையோ?” என்றான்.

அண்ணு-"ஆம், உண்மையாகவே ஒரு காலடியு மில்லை,”

ஆனந்த: - என் அன்புள்ள அண்ணு ராவ்! நான் எத்தனையோ குற்றங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித் திருக்கிறேன். ஆனால் பறக்கும் ஐந்துவால் செய்யப்பட்ட குற்றம் நான் ஒன்றுகூடப் பார்த்ததில்லை. குற்றம் செய்பவன் இரண்டு கால்களால் நடக்கிறவரையில் காலடி யாவது ஏதாவது ஒருவிதக் குறியாவது இருந்தே தீரும். சாத்திர யுக்தியோடு அதைக் கண்டு பிடிக்கக் கூடும். இவ்வாறு அறை முழுதும் இரத்தக் கறையாக்கியிருக்கும் இத்தகைய கொலை நடந்த விடத்தில் நமக்கனுகூலமான உளவேனும் அகப்படவில்லையென்பது நம்பத்தக்கதல்ல எப்படி யிருந்தாலும் மரண விசாரணையிலிருந்து சில விஷயங்களை கண்டு பிடிக்காமல் விட்டு விட்டாயென்று தெரிகிறது,' என்றான்.

அண்ணுராவ்:- முகவாட்ட மடைந்து, உம்மை அந்தச் சமயமே
வந்து அழைத்துக்கொண்டு போகாமல் முட்டாள் தனம் செய்த விட்டேன். இப்போததைப்பற்றி விசனிப்பதில் பயனில்லை. ஆம், அந்த அறையில் விசேஷமாய்க் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தனவென்றே இப்போது புலப்படுகிறது. ஒன்று கொலையில் உபயோகப்பட்ட அந்த எறியீட்டி, அது அங்கிருந்த சுவரிலிருக்கும் மரச் சட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அச் சட்டத்தில் இன்னும் இரண்டு ஈட்டிகளிருக்கின்றன. ஒன்று மாட்டியிருந்த இடம் காலியாயிருக்கிறது; அந்த ஈட்டியின் கைப்பிடியில் ”கடல்யாளி' என்று செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றால் கொலை செய்தவன் திடீரென்று வந்த கோபத்தால் அப்படிச் செய்தா னென்றும் அந்த ஆத்திரத்தால் கைக்குச் சட்டென்று எட்டிய ஆயுதத்தை எடுத்துக்கொண்டா னென்றும் தெரிகிறது. கொலை நடந்தது இரவு இரண்டு மணியாயினும் கறுப்பன் அந் நேரத்திலும் சாதாரண உடையணிந்து கொண்டிருந்தபடியால் யாரையோ சந்திக்க அவன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தான் என்று தெரிகிறது மேஜை மேல் ஒரு புட்டியில் ரம்சாராயமும் இரண்டு கிண்ணங்களும் வைத்திருந்த சம்பவங்கூட அதை நிரூபிக்கிறது.

ஆனந்த- ஆம். இதே இரண்டு உத்தேசங்களும் அங்கீகரிக்கத் தக்கனவே. அறையில் ரம்புட்டி தவிர வேறு சாராய வகைகளேதேனு மிருந்தனவோ?

அண்ணு-ஆம். கப்பற்பெட்டியில் பிராந்தி விஸ்கி இவை இரண்டு மிருந்தன. அந்த இரண்டு புட்டிகளும் நிறைந்தே இருந்தபடியால் அவை உபயோகிக்கப்பட வில்லை. ஆதலால் அச்சங்கதியால் நமக்கொரு பயனுமில்லை.

ஆனந்த-அப்படியாயினும் அதில் கொஞ்சம் விசேஷ மிருக்கவே யிருக்கிறது. ஆயினும், இதில் சம்பந்தப்பட்தாய் உனக்குத் தோன்றும் வஸ்துக்கள் இன்னும் என்னென்ன அங்கிருந்தனவோ அவற்றைக் கூறு பார்ப்போம்.

அண்ணு-மேஜைமேலிருந்த அந்தப் புகையிலைப் பை யிருக்கிறது.

ஆனந்த-அது மேஜையின் எந்தப் பக்கத்திலிருந்தது?

அண்ணு-அது மேஜையின் மத்தியிலிருந்தது. அது ஸீல் தோலால் செய்யப்பட்டது. அதன் மேல் மடிப்பின் உட்பக்கம் ”ப" என்று குறிக்கப்பட்டிருக்கிறது. அப்பையில் கப்பலாட்கள் உபயோகிக்கும் காரமான இரண்டு அவுன்ஸ் புகையிலை யிருந்தது. –

ஆனந்த-பேஷ் இன்னுமென்ன?” என்றான்.

அண்ணுராவ் தன் ஜேபியிலிருந்த ஒரு பழைய நோட் புத்தகத்தை எடுத்தான். அதன் மேற்புறம் கரடுமுரடானதாய் அழுக்குப் படிந்திருந்தது. உள் கடிதங்கள் நிறம் மாறி விருந்தன. முதல் பக்கத்தில் "ஐ. அ. ந.” என்று எழுதப் பட்டு 1873-வருடத்தில் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

ஆனந்தஸிங் அதை வாங்கி மிக்க விசனத்தோடு பார்வையிட்டான். அண்ணுராவும் விஸ்வநாதரும் அவன் பின்னால் இரு புறமும் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் பக்கம் ”சி.பி.ர” என்று எழுதப்பட்டிருந்தது-பிறகு சில பக்கங்களில் எண்கள் எழுதப்பட்டிருந்தன. இன்னும் சில ஊர்களின் பெயர்களிருந்தன.




ஆனந்தஸிங் . 'இவற்றால் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்,' என்று கேட்டான்

அண்ணுராவ் இவை பாங்கிப் பத்திரங்களைப்பற்றிய கணக்குக் குறிப்புகள் என்று தெரிகிறது. ஐ. அ. ந.' என்பது ஒரு பாங்கி தரகனுடைய பெயரென்றும் சி. பி. ர. என்பது அவனுடைய ஆசாமியின் பெயரென்றும் நினைத்தேன்,' என்றான்.

ஆனந்தலிங், சி. பி. ர.” என்பது ஒரு ஆசாமி என்று நினைப்பதற்கு பதிலாய் சிங்கப்பூர்-பினங்-ரயில்வே என்று கருதிப்பார்," என்றான்.

இதைக் கேட்ட அண்ணுராவ் ஆகாஹா என்று தன் துடைமேல் தட்டிக்கொண்டு என்ன முட்டாளாய்ப் போய்விட்டேன்! ஆம் ஆம். அப்படித்தான். சந்தேகமில்லை. இனி ஐ. அ. க. என்ற பெயரை மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும். நான் முன்னமே பாங்கிப் பட்டி புத்தகங்களை யெல்லாம் பார்த்தேன். குறித்த வருடத்தில் இப் பெயர்க ளகப்படவில்லை. ஆயினும், இது முக்கியமான உளவென்று. மட்டும் தெரிகிறது. பெரும்பாலும் இந்தப் பெயர் அறைக்குள் வந்த மனிதனுடையதா யிருக்கலாமல்லவா? இகனால் இக் கொலைக்குக் காரணம் பணமென்று தெரிகிறது." என்றான்.

ஆனந்த- இந்த இரண்டு விஷயங்களும் நான் ஒப்புக் கொள்ளத் தக்கனவே. இப் புத்தகம் மரண விசாரணையில் வெளி வராதபடியால் நான் கொண்டிருந்த சித்தாந்தத்தை இது மாற்றத் தக்கதாயிருக்கிறது. இதில் குறிக்கப்பட்ட பத்திரங்களில் எதையேனும் கண்டு பிடிக்க முயன்றாயா?

அண்ணு-ஆபீஸில் அதைப்பற்றி விசாரித்துக்கொண் டிருக்கிறார்கள். ஆனால், வெளி நாடுகளுக்கு எழுதிச் சங்கதிகளை அறியவேண்டி யிருப்பதால் சில வாரங்கள் செல்லுமென்று நினைக்கிறேன்.

ஆனந்தஸிங் பூதக் கண்ணாடியால் அந்த நோட் புத்தகத்தை நன்றாய்ப் பார்த்து, “ ஆ இங்கென்ன நிறம்?" என்றான். அண்ணு ராவ், “ இது இரத்தக் கறை. இப் புத்தகத்தை கீழே இருந்து கண்டெடுத்தேன்,' என்றான்.

ஆனந்தஸிங் 'நீ எடுக்கும்போது இக் கறை புத்தகத்தின் மேற்பக்க மிருந்ததா?”  வென்றான், அண்ணுராவ் கீழ்ப்பக்கம் என்றான்.

ஆனந்தலிங் அப்படியானால் கொலை நடந்த பிறகு இது கீழே விழுந்திருக்கவேண்டும். என்றதற்கு அண்ணுராவ் ஆம் கொலையாளி கலவரத்தோடு ஒடிய போது இது தவறிக் கீழே விழுந்து விட்டது.” என்றான்.

ஆனந்த-இதிற் கண்ட உத்திரவாதப் பத்திரங்களில் ஒன்றேனும் இறந்தவனிடத்தில் இருந்தகப்படவில்லையே.

அண்ணு:-இல்லை.

ஆனந்த-இக்கொலை களவிற்காக நடந்திருக்குமா?

அண்ணு-இல்லை. ஒரு பொருளேனும் எடுக்கப்பட வில்லை!

ஆனந்த-ஆகா! இது மிக்க அபூர்வமான விஷயமே; அங்கு ஒரு கத்தி யிருந்ததல்லவா?

அண்ணு-ஆம். ஒரு உறைபோட்ட கத்தி. அது உறையிலேயே இருந்தது. மரித்தவன் கால்மாட்டில் கிடந்தது. அது அவனுடையதே என்று அவன் மனைவி கூறுகிறாள்.

ஆனந்தஸிங் சற்று நேரம் சிந்தித்த பின், ”சரி. அந்த ஸ்தலத்தை நேரில் பார்க்கவேண்டியதே,” என்றான். அதைக் கேட்ட அண்ணுராவ் சந்தோஷ சத்தமிட்டு, “ தயவுசெய்து வரவேண்டியதே இப்போதுதான் என் மனதிலிருந்த பெரும்பாரம் நீங்கியது," என்றான்.


ஆனந்தஸிங்:  ”ஒரு வாரமாய்விட்டது. நீ மட்டும் அன்றே வந்திருந்தால் எவ்வளவோ சுலபமாயிருந்திருக்கும். ஆயினும் இப்போது நான் வருவது முழுதும் பயனற்றதாய்ப் போய்விடாதென்றே எண்ணுகிறேன். விஸ்வநாதரே! தாங்களும் வரவேண்டியதே வண்டி வருவதுதான் தாமதம். கால் மணி நேரத்தில் புறப்படலாம்: என்றான். 

( தொடரும்) 

தொடர்புள்ள பதிவுகள்: