வியாழன், 6 செப்டம்பர், 2012

ஆரணியாரின் நூல்கள்

ஆரணி குப்புசாமி முதலியார் : நாவல் முன்னோடி



2010 இல்   சென்னையில்    ‘தேவன் நினைவு தினம்’     நிகழ்ச்சியில் நான் படித்த ஒரு கவிதையில்

வடுமாங்காய் உணவிற்கு வழங்கிடுமோர் காரம்
வடுவூரார் எழுத்துகளோ வாசிப்பின் சாரம்
ஆரணியார் நாவல்கள் அனைத்தும்அ பாரம்
ஆங்கிலக் கதைகள்தாம் அடியஸ்தி வாரம் !:-))
அன்றைக்கென் வாழ்க்கைக்கு அவசியங்கள் எனத்துடித்தேன்
இன்றைக்கு நினைத்தாலும் எனக்கது நகையூட்டும்!


என்றிருந்தது.

நிகழ்ச்சி முடிவில் ஒரு பிரபல எழுத்தாளர் வந்து என்னிடம், “நீங்கள் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்களைப் பற்றிச் சொன்னது சரி: ஆனால் ஆரணி குப்புசாமி முதலியாரின் தழுவல் நாவல்களைப் பற்றிச் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை. ” என்றார்.

”லோகோ பின்ன ருசி:” ( உலகத்தில் பலவித  ரசனைகள்)  என்ற காளிதாசனின் சொற்றொடர் நினைவுக்கு வந்தது. பேசாமல் இருந்து விட்டேன்.

ஆனால், என் மனதில் “அடடா! நமக்கு எத்தனையோ ஆங்கில எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தவரைப் பற்றி “நாலு நல்ல வார்த்தைகள்” சொல்ல இன்று யாருமில்லையே!” என்ற ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது.



திடீரென்று ஒரு மின்னல் அடித்தது. ஆரணி குப்புசாமி முதலியாரைப் பற்றிப் பிரபல எழுத்தாளர் ‘பாக்கியம் ராமசாமி’ அண்மையில் ' அப்புசாமி டாட் காம்” தளத்தில் எழுதியதைப் பார்த்தேன்:


" ரத்தினபுரி ரகசியம், கற்கோட்​டை போன்ற தலையணை சைஸ் துப்பறியும் நாவல்களை (கிழிந்தது போக மீதியுள்ள பாகங்களைப்) படிப்பது ஒரு சுவாரசியமென்றால் சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதிலும் ஒரு த்ரில். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் ஆகிய இரண்டு துடிப்பான எழுத்தாளப் பெரியவர்கள் அக்காலத்தில் ஏராளமான துப்பறியும் நாவல்கள் எழுதினார்கள்.




'நாவல் ஒன்று கட்டாயம் வேண்டும்' என்று பதிப்பகத்தார்கள், ஆரணி குப்புசாமி முதலியாரை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி விடுவார்களாம் - ஜமக்காளமும் ஒரு தலையணையும் கொடுத்து.

சாப்பாடு கீப்பாடு எல்லாம் இரண்டு நாளைக்கு ஜன்னல் வழியாகத்தான்.
மூன்றாவது நாள் முதலியார் ரிலீஸாகி வெளியே வருவாராம்.
ஒரு தலையணையுடன் போனவர் இரண்டு தலையணைகளுடன் வெளி வருவாராம். "அந்த இரண்டாவது தலையணை அவர் எழுதி முடித்த நாவல்!" என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள். எவ்வளவு பருமனாக இருந்தால் என்ன? மகா விறுவிறுப்பாக இருக்கும். படிக்க படிக்கத் திகட்டாதவை "


ஆகா! இன்று நகைச்சுவை எழுத்தின் முடிசூடா மன்னராக விளங்கும் ஜ.ரா.சு -வே  “விறுவிறுப்பானவை; படிக்கத் திகட்டாதவை” என்று சொன்னபிறகு, எனக்கு வேறென்ன வேண்டும்! சிறுவயதில் ஆரணியாரின் ‘இரத்னபுரி இரகசிய”த்தின் ஒன்பது பாகங்களையும் மீண்டும் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது!



”பரவாயில்லை! நான் ஒருவன் தான் ஆரணியாரை நினைவு வைத்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்னும் ஒருவர் இருக்கிறார்! “ என்று மகிழ்ந்தேன். 

வலையில் மட்டுமல்ல, அச்செழுத்துலகிலும் ஆரணியாரைப் பற்றி அதிகம் கண்டுபிடிக்க முடியாது.

ஆரணி குப்புசாமி முதலியாரின் மறைவுக்குப் பின் நாரண துரைக்கண்ணன்
‘ஆனந்த போதினி’யின் ஆசிரியராகச் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.  பிறகு ஆரணியாரைப் பற்றி நாரண துரைக்கண்ணன் ‘கலைமகளி’ல் 1970-இல் ஒரு கட்டுரை எழுதினார்.  எனக்குத் தெரிந்தவரை, ஆரணியாரைப் பற்றி அதிக தகவல்கள் தரும் கட்டுரை இது ஒன்றே. அதிலிருந்து ஒரு பகுதி:

ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தரவிரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும் கதை மாந்தர்களின் பெயர்களையும் நடை, உடை, பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார். அத்துடன், கதைகளுக்கு இடையிடையே, நீதிபோதனைகளையும், வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்”

( லண்டன் இரத்னபுரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன் ஆவார்: ஆர்ஸீன் லூபின்  அரசூர் லக்ஷ்மணனாவார்!)

ஆனால், இவருடைய நாவல்கள் இன்று கிடைப்பதில்லை (1); ஒருநாள் அவை மீண்டும் நம்மிடையே நடமாடும். அவற்றையெல்லாம் யாரேனும் படித்து, ஒவ்வொரு நாவலும் எந்த ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு என்று ஆராய்ந்து சொல்வார் என்று நம்பி, அவர்களுக்கு உதவ ஒரு நாவல் பட்டியலை இங்கு முன்வைக்கிறேன்.



ஆரணி குப்புசாமி முதலியாரின் நூல்களின் பட்டியல்:

( ஆதாரம் : தமிழ் நாவல்கள் ( அகர வரிசை ) , டாக்டர் வே.சீதாலட்சுமி ,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1985)  ( முழுமையானது என்று சொல்லமுடியாது)

அபூர்வ சிந்தாமணி
அர்ஜுன் சிங்
அரசூர் லெட்சுமணன்
ஆயாஷா( இரு பகுதிகள் )
ஆனந்தசிங்
ஆனந்தசிங்கின் அஷ்டஜயங்கள்
இந்திரஜித்தன் அல்லது கள்ளர் தலைவன்
இந்திராபாய் அல்லது இந்திர ஜாலக் கள்ளன்
இரத்தினபுரி இரகசியம் ( 9 பாகங்கள் )
இரத்தினாபாய்
இராஜாமணி அல்லது ஓர் அபூர்வ மர்மம்,
கடற்கொள்ளைக்காரன்,  ( 2 பாகம் )
கமலசேகரன் அல்லது ஓர் சுத்தவீரனின் அதிசய சரித்திரம்
கமலநாதன் அல்லது களவு போன ரத்னமாலை
கருணாகரன்
கற்கோட்டை
கற்பகச் சோலையின் அற்புதக் கொலை
கற்பகசுந்தரி அல்லது மூன்று அறைகளின் மர்மம்
கனக பூஷணம்
கனகரத்தினம்
கிருஷ்ணவேணி அல்லது அதிசய மர்மச் சுரங்கம்
கிருஷ்ணா சிங் அல்லது துப்பறியும்  சீடன்
குணசுந்தரன் அல்லது மித்ருத் துரோகம்
கோஹர்ஜான்
சங்கநிதி அல்லது செல்வராஜன்
சந்திராபாய் அல்லது சங்கரதாஸின் வெற்றி
சுவர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம்
ஞான செல்வாம்பாள் அல்லது இரண்டு சகோதரிகள் ( 5 பாகம் )
தபால் கொள்ளைகாரர்
தாக்ஷாயணி அல்லது காதலன் வெற்றி
தினகர சுந்தரி அல்லது செல்வச் சீமாட்டியின் அற்புத சரித்திரம்
தேவசுந்தரி அல்லது ஓர் கற்புக்கரசியின் சரிதை
தேவராஜு.
நாகபுரியின் நாகரீகம் ( 2 பாகம் )
நித்தியானந்தன்
பத்மலோசனி
பத்மாசனி
பதுமநிதி
பவளத் தீவு அல்லது குடும்ப சாபம்( 2 பாகம் )
பூங்கோதை
பூலோக லக்ஷ்மி
மங்கைக்கரசி
மஞ்சள் அறையின் மர்மம்
மதன காந்தி
மதன பூஷணம் அல்லது இறந்தவன் பிழைத்தது
மதனாம்பாள் ( 2 பாகம் )
மாண்டி கிருஸ்டோ, (2 பாகம் )
மின்சார மாயவன்
ரங்கநாயகி அல்லது துப்பறியும் மூன்று நிபுணர்கள்
லண்டன் சாமர்த்தியத் திருடர்கள்
லீலா அல்லது மங்கைபுர மாணிக்கம்
லோகநாயகி அல்லது அதிசயப் புதையல்
வரத சுந்தரம் அல்லது நவநீதம்
விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக் கொலை
வீரநாதன் அல்லது மலைநாட்டுத் துப்பறிபவன்
ஸ்ரீநிவாசன்

பின் குறிப்பு:

(1) அண்மையில் அல்லயன்ஸ் பதிப்பகம் சில நூல்களை வெளியிட்டிருப்பதாய்த் தெரிகிறது! பாராட்டுகள்!





தொடர்புள்ள பதிவு:

ஆனந்தசிங் கதைகள்

9 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

சிறு வயதில் ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்களை படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டுத்தான் தூங்குவேன். ஒரு மணிக்கு 130 பக்கங்கள் என் படிப்பின் வேகம். ஒரு வரியையும் விடாமல் படிப்பேன்.

அது ஒரு காலம். இப்போது படிக்கும் வேகம் ஒரு மணிக்கு 2 பக்கம். அதற்குள் தூக்கம் வந்து விடுகிறது.

Pas S. Pasupathy சொன்னது…

சாப்பிடும்போதே, படிப்பது என் வழக்கம் !

karan சொன்னது…

Sir,
Kindly tell me where this book available in Chennai. I am very interesting read this book Arani Kuppsamy sir novels,

karan சொன்னது…

Dear Sir,
Kindly inform to me where is these books available in chennai.

Pas S. Pasupathy சொன்னது…

Dear Karan,
Thanks, Karan. Since I do not reside in Chennai, I'm unable to answer your question. As far as I know, they are not in any book catalogues I've seen in the last 40 yrs or so during my visits to Chennai. The only possibility is some 'old' libraries or second-hand bookshops. In fact, if an enthusiast like you can do a little bit of hunting and let us know the results ( in this thread), I'm sure fans of Araniyaar would thank you.

I will try to post more 'Anandasingh( Sherlock Holmes)' stories when I get some time.
Thanks again for your interest.

செல்வா சொன்னது…

அரிய செய்திகள்!!

EDAIMARUTHOUR K MANJULA சொன்னது…

உங்கள் (பசு)பதிவுகள் அனைத்தும் அருமை... அற்புதம்... எங்கிருந்தான் இவ்வளவு செய்களைத் திரட்டுகிறீர்கள் என்று வியப்பாக உள்ளது

Pas S. Pasupathy சொன்னது…

@இடைமருதூர் மஞ்சுளா . வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

Inmy teen age, I have read many novel s
Arni Kuppumyl Mudaliar, And Vadavut Duraisamy
Iyenkar novels.. Super novel s