சனி, 30 மார்ச், 2013

சங்கீத சங்கதிகள் - 17

விருத்தம் பாடுவது எப்படி? 
கல்கி

விருத்தம் பாடுவது ஒரு கலை. தேர்ந்தெடுத்த ராகத்திற்கேற்ப ஒரு விருத்தத்தை அந்த ராகத்தின் அழகு முழுதும் வெளிப்படப் பாடுவோர் இன்றைய இசையுலகில் மிகக் குறைவே. விருத்தம் பாடுவதில் ஓதுவார்கள் நிபுணர்கள். பாடலில் உள்ள நெடில், குறில், மெய்யெழுத்து இவற்றைச் சரியாகப் பயன்படுத்தி , ராகத்தின் சங்கதிகளை இசைப்பது கேட்போர் மனத்தை உருக்கும். ( தமிழிலக்கணத்தில் உள்ள இன்னிசை அளபெடைக்கும் சங்கதிகளுக்கும் உள்ள தொடர்பு சிந்திக்கத் தகுந்தது.) வார்த்தைகளை அவசரமாய் அள்ளித் தெளித்துவிட்டு, ‘தரன்னா’ என்று நெடிய ராக ஆலாபனை செய்வது 'விருத்தம்' அன்று; வெறும் 'வருத்தம்' தான்!

அண்மையில் ‘கல்கி’ அவர்கள் ‘ எஸ்.ஜி.கிட்டப்பாவின் ஓர் இசைத்தட்டு  பற்றிய விமர்சனத்தில் விருத்தம் பாடுவதைப் பற்றி எழுதியதைப் படித்து வியந்து போனேன். அவர் எழுதியது ’ஆனந்தவிகட’னில். 30-களில் என்று நினைக்கிறேன்.


இதோ ‘கல்கி’ !

“ .... முக்கியமாக, ஸ்ரீமான் கிட்டப்பா சங்கீதத்தின் ஜீவன் எது என்பதை இயற்கையறிவால் உணர்ந்தவர் என்பதைக் குறிப்பிட வேண்டும். அவர் பாட்டிலெல்லாம், ஸாஹித்யத்தின் வார்த்தைகளுடன் இசை கலந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, 

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே!” 

என்ற அருட்பாவை அவர் இசைத்தட்டில் பாடியிருப்பதைக் கேளுங்கள். பாவின் சொற்களும் இசையும் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து வருகின்றன? சொற்களை அப்படியே அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு, ராக விஸ்தாரத்தில் புகுந்து விடுகிறாரா, பாருங்கள்! கிடையாது. அங்கங்கே முக்கியமான சொற்களில் நின்று இசையமுதத்தைக் கலந்து பொழிகிறார். ‘கனியே” ‘பூங்காற்றே” “மணவாளா!” முதலிய சொற்களில் சொல்லின்பமும், பொருளின்பமும், இசையின்பமும் ரஸபாவத்துடன் கலந்து பெருகுகின்றன. 


[ சங்கீதத்தின் இந்த முக்கியாம்சத்தை நன்கு தெரிந்து கொள்வதற்கு, இந்த அம்சம் சிறிதேனும் இல்லாத இன்னொரு இசைத் தட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெரிய வித்வான் --சாரீர சம்பத்தில் இணையற்றவர் -- கொடுத்திருக்கும் “ஒருமையொடு” என்ற பிளேட்டைக் கேளுங்கள். ஒரே மூச்சில் வார்த்தைகளைக் கொட்டி ‘டும்’ என்று நிறுத்திவிட்டு, ராக விஸ்தாரத்தில் புகுந்து விடுகிறார். “பொய்மை பேசாதிருக்க வேண்டும்” என்பதில், “பொய்....” என்று நிறுத்தி ஒரு பிர்கா அடிக்கிறார். இன்னும் “பொய்மை பேசாதிருக்க வேண்டும்” “ மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்” என்ற வாக்கியங்களில் , இசையின் பாவம், “ஐயோ! பொய் பேசாமல் இருக்க வேண்டியிருக்கிறதே!” “அடடா! மருவு பெண்ணாசையை அநியாயமாய் மறக்க வேண்டியிருக்கிறதே!” என்று துயரப் படுவது போலிருக்கிறது! ]

விருத்தங்கள் பாடும்போது, சொற்களையும் ராகத்தையும் இசைத்துப் பாடினால், பாலில் சர்க்கரையைக் கலந்து சாப்பிடும் ருசி ஏற்படுகிறது. வார்த்தைகளை மடமடவென்று ஒப்பித்து விட்டு, ராக விஸ்தாரத்திற்குப் போதல், சர்க்கரையை முதலில் தின்றுவிட்டு அப்புறம் பால் குடிப்பது போல்தான். இன்னும் பார்க்கப் போனால், முதலில் சர்க்கரையைத் தின்றுவிட்டு அப்புறம் சர்க்கரை போடாத காப்பி குடிப்பது போல் என்றும் சொல்லலாம்! ”
[ நன்றி: கல்கி களஞ்சியம் ]

’கல்கி’ கல்கிதான், இல்லையா?

இப்போது 70 ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ கேட்ட கிட்டப்பாவின் அந்த விருத்தத்தைக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதா? இதோ:
கோடையிலே ....பாடல்

கிட்டப்பாவைப் பற்றி நிறைய எழுதலாம். இதோ ஒரே ஒரு துணுக்கு.

நாடகமேடையில் நுழையும்போது கம்பீரமாய்ப் பாடிக் கொண்டே நுழைவது கிட்டப்பாவின் வழக்கம். அதற்காக  கம்பீரம் நிறைந்த ஒரு  தமிழ்ப் பாடல் இயற்றும்படி கிட்டப்பா ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைக் கேட்டுக் கொள்ள, பாகவதர் ஒரு பாடலை ‘ஜோன்புரியில்’ இயற்றித் தந்தார். கிட்டப்பாவிற்காக என்றே விசேஷமாகத் தன் ’ஹரிகேச’ முத்திரையைப் பாடலில் வைக்காமல் அந்த சங்கீத மேதை இயற்றித் தந்த அந்த அழகான பாடல் இதோ! கிட்டப்பாவின் குரலில்!

ஆண்டவன் தரிசனமே --பாடல்

தொடர்புள்ள பதிவுகள்:

கிட்டப்பா ஞாபகம்


'கல்கி’ கட்டுரைகள்

சங்கீத சங்கதிகள்

செவ்வாய், 26 மார்ச், 2013

திருப்புகழ் -3

நித்தத்வம் பெறப் பகர்ந்த உபதேசம்
திருப்புகழ் அடிமை சு. நடராஜன் 
அருணகிரியாரின் எல்லாப் படைப்புகளையும் பொதுவாகத்  ‘திருப்புகழ்’ என்னும் சிமிழுக்குள் அடைக்கும் பழக்கம் பரவலாக இருந்தாலும், ஆய்வாளர்கள் அவருடைய பாடல்களை ஒன்பது வகைகளில் , நவரத்தினங்களாகப் பிரிப்பர் : திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை என்று. இவற்றுள், தனக்கு மிகவும் பிடித்த ‘கந்தர் அந்தாதி’யைப் பற்றி ஆராய்கிறார் நடராஜன். இந்தக் கட்டுரை ‘திருப்புகழ் அன்பர்களின்’ ’திருப்புகழ்க் கருவூலம்’ என்ற (1988) மலரில் வெளிவந்தது.தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

வெள்ளி, 22 மார்ச், 2013

பி.ஸ்ரீ -3 : சித்திர ராமாயணம் -3

362. வானரர் கற்ற வைத்திய பாடம்
பி.ஸ்ரீ.


பி.ஸ்ரீ. ஆசார்யா அவர்களின் நூல்களின் பட்டியலை இட்டால் அதுவே ஒரு கட்டுரையாகும்! மேலும், பல்வேறு  துறைகளிலும் அவர் எழுதியுள்ள படைப்புகளைப் படித்தால் நமக்குப் பிரமிப்பு இன்னும் அதிகரிக்கும்! உதாரணமாக, அவர் தன் பெயரை வெளியிடாமல் ‘விகட’னில் எழுதிய கட்டுரைத்தொடர்கள் பலவற்றில் இரண்டு காட்டுகள்: 

1) “துள்ளித் திரிகின்ற காலத்திலே”  என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு முறை , மாண்டிசோரி கல்வி முறை  பற்றி அழகாக எழுதி இருக்கிறார். ( இதை அல்லயன்ஸ் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது.)

2) ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை ‘ என்ற சரித்திர வரலாறு இன்னொன்று. கிளைவ், ராஜாஜி இருவரின் கையெழுத்துகளுடன் கம்பீரமாய் விகடனில் 1948 -இல் வெளியான தொடர் இது. ( இதை அசோகா பப்ளிகேஷன்ஸ் ஹவுஸ், ( மதுரை) 1954 -இல் நூலாக வெளியிட்டது என்ற ஒரு தகவல் கிட்டுகிறது. நூல் இப்போது அச்சில் இருக்கிறதாய்த் தெரியவில்லை.)

இப்படிப்பட்ட தொடர்களை நாங்கள் சிறுவயதில் ( 40/50-களில்) படிக்கும் போது, இவற்றின் ஆசிரியர் யார் என்று யூகிக்க முயன்றதுண்டு. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இவற்றை எழுதியவர் பி.ஸ்ரீ. என்று அறிந்தோம். (இப்போதும் சிலர் அறியாமலிருக்கலாம்! ‘விகடன்’ வெளியிட்ட ‘காலப்பெட்டகம்’ என்ற நூலில் இரண்டாம் தொடரைப் பற்றித் தகவல் இருக்கிறது.ஆனால், அதன் ஆசிரியர் யார் என்று ஏனோ குறிப்பிடப் படவில்லை! )

எழுத்தாளராக இவர் ஆவதற்கு முந்தைய இவருடைய  வாழ்க்கையைப்  பற்றிச் “சுந்தா” ( பொன்னியின் புதல்வர் நூலில்) எழுதியதைப் படித்தால், உங்களுக்கே ஆச்சரியமாய் இருக்கும்!  ‘சுந்தா’ எழுதுகிறார்:

டி.கே.சியைப் போலவே பி.ஸ்ரீயும் பொருனை தந்த செல்வர்களிலே ஒருவர். விட்டலபுரம் கிராமத்தில் இலக்கியச் செல்வம் படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்து, அந்தச் செல்வத்தை அனுபவித்துக் கொண்டே வளர்ந்தவர். அவர் முதலில் வகித்தது உளவறியும் போலீஸ் உத்தியோகம். அரவிந்தரின் நடவடிக்கைகளை உளவறியும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் அவருடைய உள்ளத்தில் மாறுதல் உண்டான காரணத்தால் உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, தேசிய உணர்ச்சியையும் , இலக்கிய ஆர்வத்தையும் ஊட்டும் எழுத்தாளராய்ப் பரிணமித்தார்


சரி, நாம் ராமாயணத்தில் ’வானரர் கற்ற வைத்திய பாடம் ‘ என்னவென்று பார்க்கலாமா?

[ நன்றி: விகடன் ]
(தொடரும்)

தொடர்புள்ள  பதிவுகள்:

சித்திர ராமாயணம் -1

சித்திர ராமாயணம் -2


பி. ஸ்ரீ படைப்புகள்

செவ்வாய், 19 மார்ச், 2013

திருப்புகழ் -2

அருணகிரியாரும் சுவேதாச்வதர உபநிடதமும் 
திருப்புகழ் அடிமை சு.நடராஜன் 

யஜுர்வேதத்துடன் தொடர்புள்ள சுவேதாச்வதர உபநிடதம் மிகப் பழமையான உபநிடதங்களுள் ஒன்று; பிரும்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் எழுதும்போது ஆதி சங்கரர் அதை “மந்திர உபநிடதம்” என்று அழைக்கிறார். ”வெண்புரவி” யைக் குறிப்பிடும் “கட்டி முண்டக” என்று தொடங்கும் தில்லைத் திருப்புகழைச் சுவேதாச்வதர உபநிடதத்துடன் ஒப்பிடுகிறார் திருப்புகழடிமை நடராஜன். இந்தக் கட்டுரை ‘திருப்புகழ் அன்பர்களின்’ வெள்ளிவிழா மலரில் 1983-இல் வெளியானது.

இப்படிப் பல கட்டுரைகளையும், பாடல் தொகுப்புகளையும் வழங்கிப் பணி புரிந்த நடராஜன் அவர்களைப் பற்றி வள்ளிமலைச் சுவாமிகளின் சீடரும், நங்கை நல்லூர்ப் பொங்கி மடாலய நிறுவனரும் ஆன அருட்கவி தவத்திரு  ஸாதுராம் சுவாமிகள் எழுதிய சில வரிகளை இங்குக் குறிப்பிடுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

ப்ரம்மஸ்ரீ எஸ்.நடராஜ ஐயர் திருப்புகழில் மிகமிக ஊறியவர். திருப்புகழ் அடியார்கட்கும், பக்தர்களுக்கும், ஸபையினர்களுக்கும், ஸங்கத்தவர்கட்கும், மன்றத்தினர்க்கும், மிக நெருக்கமானவர்; நுணுக்கர்; கந்தரந்தாதிப் பாடல்களுக்கும், திருப்புகழ்ப் பாக்களுக்கும், விருப்புற்றுக் கேட்போர்க்கெல்லாம் எவ்விதக் கைம்மாறும் எதிர்பாராது விருப்பினர் இடம் போய்த் தம் சொந்தச் செலவில் விளக்கவுரை, விரிவுரை, தெளிவுரை எல்லாம் வலியச் சென்று போதிக்கும் அளவில் அருணகிரியான் நூல்களில் தோய்ந்து ஆய்ந்து, பரப்பும் பணியில் ஈடுபட்டுப் பாடுபட்டு வரும் நல்ல தூயநேயர்; ‘திருப்புகழ்’ ஸம்பந்தமாக அரிய கட்டுரைகளை எழுத வல்ல ஆற்றல் பெற்ற நல்லன்பர். ஸ்ருங்ககிரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் குருபரம்பரைக்கே அடிமையான தெய்வீகக் குடும்பத்தினர்; அருணை முனிவரின் கருணைப் பேரைச் சொன்னாலே, கேட்டாலே உருகும் தன்மை உடையவர். .....’மீசை’ நடராஜன் என்றே நாங்களெல்லாம் ஆசையாக அழைக்கும் திருப்புகழ் அன்பர் இந்நூலைத் தொகுத்து வழங்கி யிருக்கின்றமை பெரிதும் போற்றத் தக்கதே 

           வாழ்த்து 
           ( அறுசீரடி ஆசிரிய விருத்தம் ) 

அருண கிரியார் வாக்கில்இரா 
   மாய ணத்தை, அன்பர்கள்மேற்
கருணை செய்து நடராஜன் 
    கடைந்து குடைந்து தேர்ந்தெடுத்துப் 
பொருள்ந யந்து சொலத்தொகுத்தார் 
   ‘புகழே’ முதலாம் நூல்களினின்(று)
அருள்அச் சிட்டார் முருகன்திரு
  அருட்சங் கத்தார் வாழி!பன்னாள். ” 

( முருகன் திருவருட் சங்கம் ( திருவல்லிக்கேணி ) 91, 92 ஆண்டுகளில் வெளியிட்ட ஸ்கந்த ஷஷ்டி விழா மலர்களிலிருந்து தொகுத்தது.) 

சரி, இப்போது நடராஜன் அவர்களின் கட்டுரையைப் பார்ப்போமா?


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

வெள்ளி, 15 மார்ச், 2013

திருப்புகழ் -1

ஆதியோடும் அந்தம் ஆகிய நலங்கள்

’திருப்புகழ் அடிமை’ சு. நடராஜன் 

[நன்றி: kaumaram.com ]

மார்ச் 12, 2013 -இல் மறைந்த ’திருப்புகழடிமை’ சு.நடராஜன் அவர்களின் நினைவாஞ்சலியாக, அவர் “வடபழனி திருப்புகழ் சபை” யின் வெள்ளி விழா மலரில் எழுதிய கட்டுரையை இங்கிடுகிறேன். கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, வேல்,மயில்,சேவல் விருத்தங்கள் போன்ற அருணகிரிநாதரின் படைப்புகளுக்கு அவர் எழுதிய விளக்கவுரைகளை
http://kaumaram.com/contents_u.php?kdc=kdcconten  என்ற தளத்தில் படிக்கலாம்.

”வாதினை அடர்ந்த வேல்விழியர் ‘ என்ற திருப்புகழில்,
ஆதியொடும் அந்தமாகிய நலங்கள் ஆறுமுகமென்று தெரியேனே” என்கிறார் அருணகிரிநாதர்.  இச்சொற்றொடரின் பொருளை ஆராய்கிறார் நடராஜன்.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

சனி, 9 மார்ச், 2013

பாடலும் படமும் - 4 : கவிமணி

மூன்று மலர் கவிதைகள்விகடன், கல்கி இதழ்களின் ஆரம்ப காலத்தில் பல நல்ல மரபுக் கவிதைகள் அவ்விதழ்களிலும், அவை வெளியிட்ட சிறப்பு மலர்களிலும் வந்தன. 30, 40 -களில் அப்படி வெளியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் சில கவிதைகளை இப்போது பார்க்கலாம்.

பாடல்களுக்கேற்ற ஓவியங்களை வரைவதிலும், ஓவியத் தொழில் நுட்பத்திலும், இதழ்களை அச்சிடுவதிலும்  காலப் போக்கில்  பல நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டாலும், பழைய பாடல்-படப் பக்கங்களைப் பதிவு செய்வது நம் கடமை அல்லவா?

இதோ விகடன்  38 , 40 ஆண்டு விகடன் தீபாவளி மலர்களில் வந்த மூன்று பாடல்-படங்கள். மூன்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் கவிதைகள் .

பாடல்களில் கவிமணி என்ற பட்டம் இல்லை என்பதைக் கவனிக்கவும்.
ஆம், 1940-இல் சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடந்த சென்னை மாகாண ஏழாம் தமிழ் மாநாட்டில் தான்  தேசிகவிநாயகம் பிள்ளை ‘கவிமணி’ என்ற பட்டம் பெற்றார்.   ஆனால், இந்தப் பட்டப் பெயர் பிரசித்தி ஆவதற்கு முன்பே இவருடைய பல பாடல்கள் விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம்  பிரபலமாகிவிட்டன. கீழ்க்கண்ட பாடல்களே அதற்குச் சாட்சி.


( பொதுவாக தீபாவளி மலர்களில் ஒரு கவிஞரின் ஒரு பாடல்தான் இடம் பெற்றிருக்கும்; மேலே உள்ள  இரண்டு பாடல்களும் ஒரே தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்தது ( 1938 விகடன் மலர்) குறிப்பிடத்தக்கது! )( மேலே உள்ள படத்தின் வலது கீழ்க் கோடியில் கவனமாய்ப் பார்த்தால்,
A V R  என்ற கையொப்பம் தெரியும். இவர்தான் ‘ ஏ.வெங்கடராகவன்’. கல்கியில் ‘ராகவன்’ என்ற கையெழுத்துடன் நிறைய வரைந்திருக்கிறார். ஹனுமான், கலைமகள் இவற்றிலும் வரைந்திருக்கிறார். மேலும் அதிகமாய் இவரைப் பற்றி என்னால் அறியமுடியவில்லை.  இவருடைய படத்தையும், மேலும் சில ஓவியங்களையும் சேர்த்து  ‘ஓவிய உலா’ இழையில் இட எண்ணுகிறேன். )


1940- விகடன் தீபாவளி மலரில் வந்த “கோவில்  வழிபாடு” கவிதைக்குப் படம் வரைந்த “சேகர்” பற்றிக் கோபுலு சொல்கிறார்.

ஏ.கே.சேகர்: இயற்பெயர் ஏ.குலசேகர். சினிமாவில் ஆர்ட் டைரக்டராகச் சிறந்து விளங்கியவர். புராணம், இலக்கியம் சம்பந்தமான படங்களை வரைவதில் மிகுந்த திறமைசாலி. 1933 முதல் 38 வரையில் விகடனில் அழகழகான அட்டைப் படங்களை வரைந்து அற்புதப்படுத்தியவர்” "

( நண்பர் ஒருவரின் பின்னூட்டம்: இந்தக் கவிதையை எம்.எல்.வசந்தகுமாரி “தாய் உள்ளம்” என்ற படத்தில் கீரவாணி ராகத்தில் பாடியிருக்கிறார்.
http://www.dhingana.com/kovil-muluthum-kanden-song-thai-ullam-tamil-2ea3a31
)

இந்த மலர்கள் வெளியானபோது, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி விகடன் ஆசிரியராய் இருந்தார். பிறகு , ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 40- இறுதியில் விகடனை விட்டுப் பிரிந்து , பிறகு 41-இல் சொந்தப் பத்திரிகையாய்க் ‘கல்கி’யைத் தொடங்கியபோது, கவிமணியின் வாழ்த்து ‘கல்கி’க்கும் கிடைத்தது.

1941, ஆகஸ்ட் 1 ‘கல்கி’ இதழில் வந்த கவிமணியின் வாழ்த்து வெண்பா:

புத்தம் புதுமலர்கள் பூக்குமே வண்டினங்கள்
சித்தம் மகிழ்ந்துண்ணச் சேருமே -- நித்தமும்
பல்கி வளரும் பசுந்தமிழ்ச் சோலையாம்
‘கல்கி’ படர்ந்துவருங் கால்.

1947 -இல் பாரதி மணி மண்டபம்  திறக்கப் பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள். ‘கல்கி’ ஆசிரியரின் பெரு முயற்சியால் இது கட்டப் பட்டதால், 12-10-47 ‘கல்கி’ இதழைக்  கவிமணியின் ஒரு வெண்பா அலங்கரித்தது.

தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய 
பாவலராய் வாழமனம் பற்றுவரே -- பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன் 
மாநகரில் கண்டு மகிழ்ந்து.  

இந்த வெண்பாக்களுடன் ஏதேனும் ஓவியங்கள் இடப்பட்டனவா என்று தெரியவில்லை! ஒருநாள் தெரிய வரலாம்!

[ நன்றி ; விகடன் ; கவிமணியின் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.]

தொடர்புள்ள பதிவுகள்:
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பாடலும், படமும்

செவ்வாய், 5 மார்ச், 2013

தென்னாட்டுச் செல்வங்கள் - 8

’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம்
நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்கி , விகடன் அண்மையில்
வெளியிட்ட “ தென்னாட்டுச் செல்வங்கள்” நூல்களைப் பற்றிய என் கருத்துகளை வெளியிடுகிறேன்.

’சில்பி-தேவன்’ இருவருக்கும் காணிக்கையாகத் “ தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற தொடரை நான் நவம்பர் 30-இல் தொடங்கியபோது , இப்படி எழுதினேன்.

 “எப்படித் தொடர்கதைகள் மூல ஓவியங்களுடன் அச்சில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அது போலவே ‘சில்பியின்’ அமர ஓவியங்களும் ‘தேவ’னின் எழுத்துகளுடன் வருவது தான் சிறப்பு என்பது என் கருத்து. ’’

என் ஆசையை விகடன் நிறைவேற்றி விட்டது! “தென்னாட்டுச் செல்வங்கள்” என்ற நூல் இரண்டு பகுதிகளில் இப்போது வெளியாகிவிட்டது. வாழ்த்துகள்! பாராட்டுகள்! என் கையில் நூல்கள் இப்போதுதான் கிடைத்தன. அவற்றைப் பற்றி ஒரு சிறு விமர்சனம் இதோ.

கோவில் சிற்பங்கள் என்ற நம் செல்வங்களில் ஆர்வம் உள்ள யாவரும் கட்டாயம் வாங்கவேண்டிய நூல்கள் இவை. ‘சில்பி’யின் ரசிகர்கள் யாவரும் போற்றிப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷங்கள் இவை.  மிகுந்த அக்கறையுடன் ‘விகடன்’ வெளியிட்டிருக்கிறது. மீண்டும் , என் பாராட்டுகள்! பல ஆண்டுகளாக என்னைப் போன்ற பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நூல்கள் இவை!

முதல் பாகத்தில் : மதுரை முதல் சிதம்பரம் வரை 30 இடங்கள்; இரண்டாம் பாகத்தில் ஸ்ரீரங்கம் முதல் ஹளேபீடு வரை 9 இடங்கள். இரண்டு பாகங்களிலும் மொத்தம் பக்கங்கள் 896. கோபுலு, பத்மவாசன், டாக்டர் எம்.வி.ஆச்சால் மூவரின் விசேஷக் கட்டுரைகள் ‘சில்பி’யைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தருகின்றன. ( கோபுலுவின் திருமணத்தில் ‘சில்பி’ குடை பிடிக்கும் காட்சி, காஞ்சி பெரியவருடன் சில்பி போன்ற படங்கள் அருமை!)

என்னிடம் உள்ள இவற்றின் மூலங்கள் சிலவற்றையும்,  நூலில் உள்ளவற்றையும் விரைவாக  ஒப்பிட்டுப் பார்த்தபோது , என் கண்ணில் பட்ட , நூலில் செய்யப்பட்ட சில மாறுதல்களைப் பதிவிட விரும்புகிறேன்; பிற்காலத்தில் ஆய்வாளர்க்கு உதவலாம்.

சில கட்டுரைகளுக்குத் தலைப்புகள் புதிதாய்க் கொடுக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக,   தெ.செ. 2 கட்டுரைக்குக் “கர்ணார்ஜுனர் போர்!” என்ற பொருத்தமான தலைப்பு ( பக்கம் 34) காணப் படுகிறது.  சில சொற்கள் அங்கங்கே ( தற்கால வழக்கிற்கேற்ப ?) சிறிது மாற்றப் பட்டிருப்பதாய்த் தெரிகின்றன. ( ஒரு காட்டு: “ தெ.செ. -2 கட்டுரையில் “ இந்த ஸகோதரர்கள் “  இந்த சகோதரர்கள்” என்று மாற்றப் பட்டுள்ளது. கூடவே “இந்தச் சகோதரர்கள் “ என்று ஓர் ஒற்றைச் சேர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும்! )  நூலுக்காகச் செய்யப்பட்ட மாறுதல்களைப் பதிப்புரையில் குறிப்பிட்டிருக்கலாம். கூடவே, ஒவ்வொரு கட்டுரையின் அடியிலும் கட்டுரை வந்த தேதியையும் குறிப்பிடலாம். ஆய்வாளருக்கு இவை உதவும். ( சில தலைப்புகளில் உள்ள ஒற்றுப் பிழைகளை அடுத்த பதிப்பில் களையலாம்: உதாரணம், “உலகளந்தக் கதை” பக்கம் 823) .  மூலக் கட்டுரைகளின் எண் வரிசைப்படியே முழுதும் தொகுக்காமல் , அங்கங்கே சிலவற்றை மாற்றி , இடங்களுக்குப் பொருந்தும்படி அழகாகத் தொகுக்கப்பட்டிருப்பதாய்த் தெரிகிறது.

கட்டுரை எழுதப்பட்ட காலத்தைக் குறிக்கும் பகுதிகள் மூலத்திலிருந்து நீக்கப் பட்டனவோ என்ற ஐயம் தோன்றுகிறது. உதாரணமாக, குடுமியா மலைச் சிற்பத்தைப் பற்றி என்னிடம் உள்ள  மூலக் கட்டுரையில் ( நூலில் பக்கம் 638) ரா.பி.சேதுப்பிள்ளை ராஜாஜி மண்டபத்தில் நடந்த ஒரு    கூட்டத்தில் பேசியதைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகிறது. ஆனால், நூலில் இந்தக் குறிப்பு நீக்கப் பட்டுவிட்டது.

‘சில்பி’யின் முப்பத்திரண்டு முழு வண்ணப் படங்களைச் சேர்த்தது ஒரு சிறப்பு. இவை விகடன் மலர்களில் வந்தவை என்று நினைக்கிறேன். அந்தச் சிற்பங்கள் உள்ள கோவில்களைப் பற்றிய விளக்கக் கட்டுரைகளையும் சேர்த்திருந்தால் நூல்கள் மேலும் சிறப்புற்றிருக்கும். ( ‘சில்பி’யின் வண்ண ஓவியங்கள் வந்த தீபாவளி மலர்க் கட்டுரைகள் யாவும் இன்னும் தொகுக்கப் படவில்லை என்று தோன்றுகிறது.)

’சில்பி’யின் மூலப் படங்கள் பலவும் வண்ணப் படங்கள் தாம்; முழுதும் வண்ணமாக இல்லாமலிருந்தாலும், பின்புலத்தில் வண்ணம் இருக்கும். (நான் இட்ட சில படங்களைப் பார்த்தால் புரியும்). நூலில் இவை யாவும் வெறும் ‘கறுப்பு-வெள்ளை’ப் படங்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நூலின் விலையைக் கட்டுப்படுத்த இவ்வாறு செய்திருக்கலாம்.

பதிப்புரையில் , “ பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கும், தொல்பொருள் தொடர்பான நூல் வடிவங்களுக்கும் துணை புரியும் அற்புதத் தொகுப்பு இது”. என்று சொல்கிறார் ஆசிரியர். முக்காலும் உண்மை. கூடவே, தமிழ் எழுத்து நடை ஆராய்ச்சிக்கும் இந்நூல்கள் உதவும்.

காட்டாக, ‘கோபுலு’ நூலில் உள்ள ஒரு கட்டுரையில் சொல்கிறார்:

“ (சில்பி) தான் வரைந்த சிலைகளைப் பற்றிய குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் கொண்டுவந்து , அந்தப் படங்களைப் பற்றி தேவனிடம் விளக்கிச் சொல்வார். தேவன்தான் அதை நயமாக எழுதுவார்”

கோபுலு இப்படிச் சொல்லியிருப்பதால், பதிப்புரையிலும் இந்தக் கட்டுரைகளை எழுதியவர்(கள்) யா(வ)ர் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கலாம். 1948- முதல் 1961-வரை “தெ.செ” தொடர் வந்தது என்று பதிப்புரை சொல்கிறது.
  கிட்டத்தட்ட 300-315 கட்டுரைகள் வந்தன என்று எண்ணுகிறேன். அப்படியானால், ‘தேவன்’ 1957-இல் காலமான பிறகு, ‘சில்பி’யின் குறிப்புகளைக் கட்டுரைகளாக வடித்தவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? எனக்குத் தெரிந்தவரை: 1957-க்குப் பிறகு , பி.ஸ்ரீ. ஆசார்யா தான் இக்கட்டுரைகளை எழுதினார் என்று நினைக்கிறேன்.  இப்படிப்பட்ட தகவல்களையும் பதிப்புரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கலாம்.
 ‘சில்பி’யின் அற்புதக் குறிப்புகளை ஆதாரமாக வைத்து அழகான கட்டுரைகளை எழுதிய தேவன், பி.ஸ்ரீ இருவருக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம். ( எந்தத் தெ.செ. கட்டுரையை ‘தேவன்’ கடைசியாய் எழுதினார் என்று கேட்கத் தோன்றுகிறது ... பதில் கிடைக்குமா?)

‘நிறைகள்’ பல இருக்கும் இந்நூல்களில் ஒரே ஒரு குறை மட்டும் என்னை மிகவும் உறுத்துகிறது. இது ‘விகடனின்’ ‘காலப் பெட்டகம்’ ‘பொக்கிஷம்’ என்ற அரிய நூல்களிலும் (மேலும் பல தமிழ் நூல்களிலும்)  இருக்கும் அதே குறை தான். நூல் இறுதியில் “குறிப்பகராதிப் பட்டியல்” இல்லாத குறைதான் அது. கணினி வசதிகள் இருக்கும் இக்காலத்தில், இவற்றைத் தயாரித்து , சில பக்கங்கள் சேர்த்தால், இந்நூல்களின் பயன்பாடுகள்  பல மடங்குகள் அதிகரிக்கும். அடுத்த பதிப்பில், இப்படி ஒரு “குறிப்பகராதி” யைச் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். (  இத்தகைய ஆங்கில நூல் ஒன்றுகூட குறிப்பகராதி இல்லாமல் பதிப்பிக்கப் படாது. தமிழ் நூல்களும் இந்த நல்ல அம்சத்தைக் கையாள வேண்டுகிறேன். )

ஆனால், மகிழ்ச்சியான ஒரு விஷயம்: ‘தேவன்’ விகடனின் பொறுப்பாசிரியராக இருந்தபோது , அவருடைய ஒரு நூலும் வெளிவரவில்லை என்பது யாவரும் அறிந்ததே. இப்போது, ‘தேவ’னின் எழுத்து மிளிரும் ஒரு நூலை ‘விகடன்’ முதன்முறையாக வெளியிட்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே? இதைத் தொடர்ந்து, ‘தேவ’னின் நூற்றாண்டு வருஷமான இந்த ஆண்டில் ‘தேவ’னின் மற்ற படைப்புகளையும், மூல ஓவியங்களுடன் ‘விகடன்’ வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

இன்னொரு விஷயம்: நான் இப்போது, பி.ஸ்ரீ. அவர்களுக்குக் காணிக்கையாக, அவர் எழுதிய  “சித்திர ராமாயணம்” என்ற தொடரிலிருந்து சில கட்டுரைகளை இந்த வலைப்பூவில்  இட்டு வருகிறேன். உடனே, விகடன் ’சித்திர ராமாயணம்’ நூலைச் ‘சித்திரலேகா’வின்  ஓவியங்களுடன்  வெளிக்கொணர்ந்தால், என்னைவிட மகிழ்பவர்கள் இருக்க முடியாது! :-))

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியர்’ சில்பி’. விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்து ‘தேவன்’  செய்த பணிகளில்  மிகச் சிறந்தது இந்தக் கலை, இலக்கியத் தொடரை எழுதியது. பி.ஸ்ரீயின் தொண்டும் மறக்க முடியாது. இவை யாவும் ஒளிரும் இந்நூல்களை வெளியிட்ட ‘விகடன்’ நிறுவனத்திற்கு என் நன்றி.

கடைசியாக, ஒரு தென்னாட்டுச் செல்வங்கள் கட்டுரையில் தேவன் எழுதியதை ( ஆனால் நூலில் இல்லாத ) ஓர் அபிப்ராயத்தை இங்கிட்டு  இந்த விமர்சனத்தை நிறைவு செய்கிறேன்.


காவியங்களையும், தென்னாட்டுத் திருக்கோயில்களிலுள்ள சிற்பங்களையும் ஓரளவாவது கற்று ஓவியப் புலவர்கள் தங்கள் கலையை வளர்ப்பது நலமாகும் என்பது நமது அபிப்ராயம்”.

நூல்கள்; தென்னாட்டுச் செல்வங்கள் ( பாகங்கள் 1, 2)
விலை: ரூபாய். 650 ( இரண்டு பாகங்கள் சேர்த்து)
பதிப்பகம்: விகடன்
விகடன் பிரசுரம்: 674.

=====

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்