செவ்வாய், 19 மார்ச், 2013

திருப்புகழ் -2

அருணகிரியாரும் சுவேதாச்வதர உபநிடதமும் 
திருப்புகழ் அடிமை சு.நடராஜன் 
யஜுர்வேதத்துடன் தொடர்புள்ள சுவேதாச்வதர உபநிடதம் மிகப் பழமையான உபநிடதங்களுள் ஒன்று; பிரும்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் எழுதும்போது ஆதி சங்கரர் அதை “மந்திர உபநிடதம்” என்று அழைக்கிறார். ”வெண்புரவி” யைக் குறிப்பிடும் “கட்டி முண்டக” என்று தொடங்கும் தில்லைத் திருப்புகழைச் சுவேதாச்வதர உபநிடதத்துடன் ஒப்பிடுகிறார் திருப்புகழடிமை நடராஜன். இந்தக் கட்டுரை ‘திருப்புகழ் அன்பர்களின்’ வெள்ளிவிழா மலரில் 1983-இல் வெளியானது.

இப்படிப் பல கட்டுரைகளையும், பாடல் தொகுப்புகளையும் வழங்கிப் பணி புரிந்த நடராஜன் அவர்களைப் பற்றி வள்ளிமலைச் சுவாமிகளின் சீடரும், நங்கை நல்லூர்ப் பொங்கி மடாலய நிறுவனரும் ஆன அருட்கவி தவத்திரு  ஸாதுராம் சுவாமிகள் எழுதிய சில வரிகளை இங்குக் குறிப்பிடுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

ப்ரம்மஸ்ரீ எஸ்.நடராஜ ஐயர் திருப்புகழில் மிகமிக ஊறியவர். திருப்புகழ் அடியார்கட்கும், பக்தர்களுக்கும், ஸபையினர்களுக்கும், ஸங்கத்தவர்கட்கும், மன்றத்தினர்க்கும், மிக நெருக்கமானவர்; நுணுக்கர்; கந்தரந்தாதிப் பாடல்களுக்கும், திருப்புகழ்ப் பாக்களுக்கும், விருப்புற்றுக் கேட்போர்க்கெல்லாம் எவ்விதக் கைம்மாறும் எதிர்பாராது விருப்பினர் இடம் போய்த் தம் சொந்தச் செலவில் விளக்கவுரை, விரிவுரை, தெளிவுரை எல்லாம் வலியச் சென்று போதிக்கும் அளவில் அருணகிரியான் நூல்களில் தோய்ந்து ஆய்ந்து, பரப்பும் பணியில் ஈடுபட்டுப் பாடுபட்டு வரும் நல்ல தூயநேயர்; ‘திருப்புகழ்’ ஸம்பந்தமாக அரிய கட்டுரைகளை எழுத வல்ல ஆற்றல் பெற்ற நல்லன்பர். ஸ்ருங்ககிரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் குருபரம்பரைக்கே அடிமையான தெய்வீகக் குடும்பத்தினர்; அருணை முனிவரின் கருணைப் பேரைச் சொன்னாலே, கேட்டாலே உருகும் தன்மை உடையவர். .....’மீசை’ நடராஜன் என்றே நாங்களெல்லாம் ஆசையாக அழைக்கும் திருப்புகழ் அன்பர் இந்நூலைத் தொகுத்து வழங்கி யிருக்கின்றமை பெரிதும் போற்றத் தக்கதே 

           வாழ்த்து 
           ( அறுசீரடி ஆசிரிய விருத்தம் ) 

அருண கிரியார் வாக்கில்இரா 
   மாய ணத்தை, அன்பர்கள்மேற்
கருணை செய்து நடராஜன் 
    கடைந்து குடைந்து தேர்ந்தெடுத்துப் 
பொருள்ந யந்து சொலத்தொகுத்தார் 
   ‘புகழே’ முதலாம் நூல்களினின்(று)
அருள்அச் சிட்டார் முருகன்திரு
  அருட்சங் கத்தார் வாழி!பன்னாள். ” 

( முருகன் திருவருட் சங்கம் ( திருவல்லிக்கேணி ) 91, 92 ஆண்டுகளில் வெளியிட்ட ஸ்கந்த ஷஷ்டி விழா மலர்களிலிருந்து தொகுத்தது.) 

சரி, இப்போது நடராஜன் அவர்களின் கட்டுரையைப் பார்ப்போமா?
தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ்

முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக