சனி, 9 மார்ச், 2013

பாடலும் படமும் - 4 : கவிமணி

மூன்று மலர் கவிதைகள்

விகடன், கல்கி இதழ்களின் ஆரம்ப காலத்தில் பல நல்ல மரபுக் கவிதைகள் அவ்விதழ்களிலும், அவை வெளியிட்ட சிறப்பு மலர்களிலும் வந்தன. 30, 40 -களில் அப்படி வெளியான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் சில கவிதைகளை இப்போது பார்க்கலாம்.

பாடல்களுக்கேற்ற ஓவியங்களை வரைவதிலும், ஓவியத் தொழில் நுட்பத்திலும், இதழ்களை அச்சிடுவதிலும்  காலப் போக்கில்  பல நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டாலும், பழைய பாடல்-படப் பக்கங்களைப் பதிவு செய்வது நம் கடமை அல்லவா?

இதோ விகடன்  38 , 40 ஆண்டு விகடன் தீபாவளி மலர்களில் வந்த மூன்று பாடல்-படங்கள். மூன்றும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் கவிதைகள் .

பாடல்களில் கவிமணி என்ற பட்டம் இல்லை என்பதைக் கவனிக்கவும்.
ஆம், 1940-இல் சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடந்த சென்னை மாகாண ஏழாம் தமிழ் மாநாட்டில் தான்  தேசிகவிநாயகம் பிள்ளை ‘கவிமணி’ என்ற பட்டம் பெற்றார்.   ஆனால், இந்தப் பட்டப் பெயர் பிரசித்தி ஆவதற்கு முன்பே இவருடைய பல பாடல்கள் விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம்  பிரபலமாகிவிட்டன. கீழ்க்கண்ட பாடல்களே அதற்குச் சாட்சி.
( பொதுவாக தீபாவளி மலர்களில் ஒரு கவிஞரின் ஒரு பாடல்தான் இடம் பெற்றிருக்கும்; மேலே உள்ள  இரண்டு பாடல்களும் ஒரே தீபாவளி மலரில் இடம் பெற்றிருந்தது ( 1938 விகடன் மலர்) குறிப்பிடத்தக்கது! )


1940- விகடன் தீபாவளி மலரில் வந்த “கோவில்  வழிபாடு” கவிதைக்குப் படம் வரைந்த “சேகர்” பற்றிக் கோபுலு சொல்கிறார்.

ஏ.கே.சேகர்: இயற்பெயர் ஏ.குலசேகர். சினிமாவில் ஆர்ட் டைரக்டராகச் சிறந்து விளங்கியவர். புராணம், இலக்கியம் சம்பந்தமான படங்களை வரைவதில் மிகுந்த திறமைசாலி. 1933 முதல் 38 வரையில் விகடனில் அழகழகான அட்டைப் படங்களை வரைந்து அற்புதப்படுத்தியவர்” "

( நண்பர் ஒருவரின் பின்னூட்டம்: இந்தக் கவிதையை எம்.எல்.வசந்தகுமாரி “தாய் உள்ளம்” என்ற படத்தில் கீரவாணி ராகத்தில் பாடியிருக்கிறார்.
http://www.dhingana.com/kovil-muluthum-kanden-song-thai-ullam-tamil-2ea3a31
)

இந்த மலர்கள் வெளியானபோது, ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி விகடன் ஆசிரியராய் இருந்தார். பிறகு , ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 40- இறுதியில் விகடனை விட்டுப் பிரிந்து , பிறகு 41-இல் சொந்தப் பத்திரிகையாய்க் ‘கல்கி’யைத் தொடங்கியபோது, கவிமணியின் வாழ்த்து ‘கல்கி’க்கும் கிடைத்தது.

1941, ஆகஸ்ட் 1 ‘கல்கி’ இதழில் வந்த கவிமணியின் வாழ்த்து வெண்பா:

புத்தம் புதுமலர்கள் பூக்குமே வண்டினங்கள்
சித்தம் மகிழ்ந்துண்ணச் சேருமே -- நித்தமும்
பல்கி வளரும் பசுந்தமிழ்ச் சோலையாம்
‘கல்கி’ படர்ந்துவருங் கால்.

1947 -இல் பாரதி மணி மண்டபம்  திறக்கப் பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள். ‘கல்கி’ ஆசிரியரின் பெரு முயற்சியால் இது கட்டப் பட்டதால், 12-10-47 ‘கல்கி’ இதழைக்  கவிமணியின் ஒரு வெண்பா அலங்கரித்தது.

தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய 
பாவலராய் வாழமனம் பற்றுவரே -- பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன் 
மாநகரில் கண்டு மகிழ்ந்து.  

இந்த வெண்பாக்களுடன் ஏதேனும் ஓவியங்கள் இடப்பட்டனவா என்று தெரியவில்லை! ஒருநாள் தெரிய வரலாம்!

[ நன்றி ; விகடன் ; கவிமணியின் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.]

தொடர்புள்ள பதிவுகள்:
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பாடலும், படமும்

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பொக்கிசங்கள் ஐயா...

பதிவு செய்தமைக்கு நன்றி...

giridharan mahadevan சொன்னது…

தேவ அமிர்த கான ரசம்

jamillah சொன்னது…

சொல்ல வார்த்தை இழந்து போனேன்...

Innamburan S.Soundararajan சொன்னது…

பசுபதி சார்,
உங்களை என்ன செய்யலாம். தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடலாம், புகழாரம் சூட்டி, சூட்டிக்கொண்டு! அற்புதம். சேகர் சமாச்சாரத்தையும் சேகரித்துக்கொண்டேன்.
அன்புடன், இன்னம்பூரான்

Pas Pasupathy சொன்னது…

@இன்னம்பூரான் நன்றி. ஏ.கே.சேகர் பற்றி ஒரு கூடுதல் தகவல் : 44-இல் விகடனில் தொடங்கிய ‘சித்திர ராமாயணம்’ தொடரில் முதலில் சேகர் தான் வரைந்தார்! பிறகுதான் ‘சித்திரலேகா’ ! சேகர் +பி.ஸ்ரீ கட்டுரைகள்.... ஒரு நாள் இடுவேன்!

KAVIYOGI VEDHAM சொன்னது…

rombaரொம்ப அற்புதமான பணி பசுபதி..
கவிமணி பாடல்கள்தாம் எனக்கு ஆரம்பத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே இன்ஸ்பிரேஷன்.. கவியோகி

கருத்துரையிடுக