புதன், 4 ஜூலை, 2012

கல்கி : பாரதியின் நகைச்சுவை -1

பாரதியின் நகைச்சுவை - 1

கல்கி


"எனக்கு நகைச்சுவை மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பேன்'' என்று ஒருமுறை காந்தியடிகள் கூறினார். தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் சரி, தேசிய வாழ்க்கையிலும் சரி, நகைச்  சுவையானது முன்னேற்றத்துக்கு இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாகும். உலகில் முன்னனியில் நிற்கும் தேசத்தார் எல்லாரும், பெரிதும் நகைச்சுவை கொண்டவர் களாயிருப்பதைக் காணலாம். இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய தேசங்களில் ஹாஸ்ய ரசத்திற்கென்றே எத்தனையோ பத்திரிகைகளும் புத்தகங்களும் வெளியாகின்றன.  பிரபல ஆசிரியர்கள் பலர் ''கழுதையின் குரல்'' என்றும் ''நாயின் வால்'' என்றும் ஹாஸ்யக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். லட்சக்கணக்கான ஜனங்கள் அவற்றைப் படித்துச் சிரித்து மகிழ்கிறார்கள். ''அந்தக்  கட்டுரைகளினால் விளையும் பயன் என்ன? அவை போதிக்கும், நீதி என்ன? என்று யாரும் கேட்பதில்லை, ஒரு கணநேரம் புன்னகைக்காகவும், ஒரு நிமிஷ சிரிப்புக்காகவும் அவர்கள் 'ஷில்லிங் கணக்கிலும்', 'டாலர்' கணக்கிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளும் புத்தகங்களும் வாங்குகிறார்கள். 

பாரத நாடு சிறப்புடன் விளங்கிய காலத்தில் நமது முன்னோர் நகைச்சுவை உணர்வு அதிகமுள்ளவர் களாயிருந்தனரென்பதற்குப் போதிய சான்றுகள் இருக்கின்றன. ராஜ சபைகளில் நகையூட்டு வதற்கென்றே விகடகவிகள் விதூஷகர்கள் முதலியோர் இருந்தார்கள். ஒவ்வொரு நாடகத்திலும் விதூஷகன் ஒரு முக்கிய பாத்திரமாக விளங்கினான். கம்பராமாயணம் முதலிய காவியங்களிலும் ஹாஸ்ய ரசம் பெரிதும் காணப்படுகிறது. ஆனால், பிற்காலத்தில் தேசம் பராதீனமடைந்து தாழ்வுற்றபோது மக்களின்  நகைச்சுவையும் வீழ்த்தப்பட்டதாகத் தோன்றுகிறது. (ஒருக்கால் நகைச்சுவையைழந்ததே தேசத்தின்  வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்கலாமோ?) 

தமிழ்நாட்டின் வாரப் பத்திரிகை ஒன்றில் உலக மகான்களைக் குறித்து நகைச்சுவையுடன் குறிப்புகள்  வாரந்தோறும் வெளியாகி வந்தன. அதன் பொருட்டு, மேற்கூறிய இனத்தைச் சேர்ந்த ஒரு மகான்  அப்பத்திரிகையின் ஆசிரியரிடம் சென்று, ''ஐயா! இப்படி ஏன் பத்திரிகையின் இடத்தை எல்லாம்  வீணாக்குகிறீர்கள்?'' என்று பரிதாபத்துடன் கூறியதாகக் கேள்விப்பட்டேன். பழைய தலைமுறையைச் சேர்ந்த இத்தகைய பத்தாம்பசலிகளை எவராலும் திருத்த முடியாது. இளைஞர்களும், இளம் பெண்மணிகளும்தான் நாட்டில் நகைச்சுவையை வளர்க்க வேண்டும். 

 தமிழ் நாட்டில் நகைச்சுவை குன்றியிருக்கிறதாயினும் அதிர்ஷ்டவசமாக அது அடியோடு அழிந்து விடவில்லை. இந்தத் துர்ப்பாக்கிய நாட்டில் பிறந்த தமிழ்ப் பிரமுகர்களிலும் சிலர் நகைச்சுவை பெற்றிருந்தனர். தமிழுக்குப் புத்துயிர் தந்த காலஞ் சென்ற ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி இத்தகையோரில் ஒருவராவார். பாரதியார் தமது வாணாளில் பெரும்பகுதி துன்ப வாழ்க்கையே நடத்தினார். தமது சொந்தத் தொல்லைகளை விடத் தாய் நாட்டில் துயரங்களை நினைந்து நினைந்து, அவர் உள்ளம் நைந்து உருகினார். எனினும் அவர் தம் நகைச்சுவையை மட்டும் இறுதி வரையில் இழக்கவில்லை. அவருடைய கவிதைகள் சிலவற்றிலும் வசன நூல்களிலும் நகைச்சுவை ஆங்காங்கே பீறிக் கொண்டு எழுவதைக் காணலாம். 

தேசம் சுதந்திரம் பெற்றுச் சுபிட்சமாயுள்ள காலத்தில் பாரதியார் பிறந்திருந்தால், இப்போது ஆங்காங்கே குமிழி விட்டுக் கிளம்புவதுடன் நிற்கும் அவருடைய நகைச்சுவையான பெரு வெள்ளம் போல் பெருகி ஓடியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பாரதியாரின் கவிதைகளுள் குயில் பாட்டு என்னும் அற்புதக் கற்பனைச் சித்திரத்தில்தான் அவருடைய நகைச்சுவை ஒளிவிட்டு ஓங்குகிறது என்று கூறலாம். கவிஞன் காட்டகத்தில் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காதற் குயிலைத் தேடிச் சுற்றும் முற்றும் பார்த்து துடித்துக் கொண்ட வருகிறான். அப்போது அவன் கண்ட காட்சி அவன் நெஞ்சைத் திடுக்குறச் செய்கிறது. ஆனால், அக்காட்சி என்னவென்பது முதலிலேயே கூறப்படுவதில்லை. 

''வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே !
நெஞ்சகமே! தொல்விதியி னீதியே பாழுலகே!
கண்ணாலே நான் கண்ட காட்சிதனை யென்னுரைப்பேன் !
பெண்ணா லறிவிழக்கும் பித்தரெல்லாங் கேண்மினோ;
காதலினைப் போற்றும் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினா! வல்விதியே கேளாய் நீ!'' 

என்று கவிஞன் ஆத்திரம் பொங்கப் புலம்புவது பின்னால் வரப்போகும் நகைச்சுவை ததும்பும் நிகழ்ச்சிக்கு  ஏற்ற தோற்றுவாயாக அமைந்திருக்கிறது. மேற்கூறிய வரிகளைப் படித்ததும் வாசகர்கள் ஏதோ பயங்கரமான நிகழ்ச்சி வரப் போகிறதென்றும் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு மாறாக, ஹாஸ்ய ரசம் பொருந்திய ஒரு நிகழ்ச்சி கூறப்படும்போது, அதன் சுவை வாசகர்களுக்குப் பன்மடங்கு மிகைப்பட்டுக் காண்கிறது. கவிஞன் காணும் அத்தகைய பயங்கரக் காட்சிதான் என்ன?

கவிஞன் தேடிச் செல்லும் மாயக் குயில் ஒரு மரக் கிளையில் வீற்றிருக்கிறது, அதனருகில் ஓர் ஆண் குரங்கு காணப்படுகின்றது. குயில் விழி நீர் பாய சிறிய உடல் பதைக்க, விம்பிப் பரிந்து துயரக் குரலில் அக்குரங்கினிடம் ஏதேதோ கூறியிரங்குகிறது. கவிஞனுடன் நாமும் மரத்தடியில் ஒளிந்து நின்று அப்பெட்டைக் குயில் குரங்கினிடம் கூறும் மொழிகளை ஒட்டுக் கேட்போம்;

                                                                                            ” வானரரே ,
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே, பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணி லுயிர்க்கெல்லாந் தலைவரென மானிடரே!
எண்ணி நின்றார் தம்மை; எனிலொரு கால், ஊர்வகுத்தல்,
கோயில் அரசு, குடி வகுப்புப் போன்ற சில
வாயிலிலே யந்த மனித ருயர்வெனலாம்.
மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
 கூனியிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே,
வானரர் தஞ் சாதிக்கு மாந்தர் நிகரா வாரோ?
ஆனவரையு மவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்,
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத்
தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெதைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ?
பாகெயிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்
வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ
சைவசுத்த போஜனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
 வானரர் தம்முள்ளே மணிபோ  லுமையடைந்தேன்.' 

மாயக் குயிலின் இக்காதல் மொழிகளை - இந்த வானர ஸ்துதித்யத்தை - நான் முதன் முதலில் படித்தபோது ''வாலுக்குப் போவதெங்கே?'' என்னும் இடத்துக்கு வந்ததும், கொல்லென்று சிரித்து விட்டேன். நான் அறிந்த அளவில் தமிழ் மொழியின் நவீன இலக்கியத்திலே நகைச்சுவையில் இதை மிஞ்சக்கூடிய பகுதி ஒன்றிருப்பதாகத் தோன்றவில்லை. 

குயிலின் காதல் மொழிகளைக் கேட்டதும், 

''வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறி கொண்டாங்ஙனே,
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
'ஆவி யுருகுதடீ' ஆஹாஹா!'' என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டி யெங்கும் வாரி யிறைப்பதுவும்
 ''ஆசைக்குயிலே! அரும் பொருளே? தெய்வதமே
பேசமுடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்''

என்று கூறுவதுமாகிய காட்சியும், நமக்குப் பேருவகையளித்து நகைப் பூட்டுவ தொன்றாகும்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதியின் நகைச்சுவை – 2

’கல்கி’ கட்டுரைகள்

பாரதி மணிமண்டபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக