வியாழன், 5 ஜூலை, 2012

’கல்கி’ : பாரதியின் நகைச்சுவை - 2

பாரதியின் நகைச்சுவை - 2

கல்கி

(   பாரதியின் நகைச்சுவை -1  இன்  தொடர்ச்சி )


மறுநாள் காலையில், மீண்டும் கவிஞன் நீலக்குயிலைத் தேடிச் சோலைக்குச் செல்கிறான். இன்று அப்பொல்லாத பெண் குயில் ஒரு மாமரத்தின் கிளையிலமர்ந்த கீழே நின்ற ஒரு கிழக் காளை மாட்டினிடம் பழைய மோகக் கதையைப் படிக்கின்றது.

                                                                                                                                                              ”நந்தியே!
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே மாடாகக் காட்சி தரு மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ?
மானிடருந் தம்மும் வலி மிகுந்த மைந்தர்தமை
மேனியுறுங் காளை யென்று மேம்பா டுறப்புகழ்வார்
காளையர்த முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே!
நீளமுகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும்,
பஞ்சுப் பொதி போற்படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச் சுமையும், வீரத்திருவாலும்,
வானத்திடி போல 'மா'வென் றுருமுவதும்
ஈனப்பறவை முதுகின் மிசை யேறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும் பல்
காலம் நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.''

இவ்வாறே காளைக்குப் புகழ்ச்சி கூறிய குயில், பின்னர் அது எங்கே தன் காதலைப் புறக்கணித்துவிடப் போகிறதோ என்று அஞ்சி உரைக்கும் ஆசை மொழிகளை கவனியுங்கள்.

''மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
கூனர் தமை யூர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்த பின்னர் மேனி விடாய்
எய்தி யிருக்கும் மடையினிலே, பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்.
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்.
வாலிலடி பட்டு மனமகிழ்வேன்; 'மா'வென்றே
ஓலிடுநும் பேரொலியோ டொன்று படக் கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்.
கானிடையே சுற்றிக் கழனியெலா மேய்ந்து நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத்திலிருந்து பல கதைகள் சொல்லிடுவேன்.
காளை யெருதரே காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன்; தையலெனைக் காத்தருள்வீர்.''

என்னும் காதற் குயிலின் பேச்சில் அடங்கியுள்ள நயமிகுந்த நகைச்சுவை ரஸிகர்களுக்குப் பெரு மகிழ்ச்சி தருவதாகும்.

பாரதியாரின் கவிதைகளுக்குள்ளே காவியம் என்று சொல்லக்கூடியது ''பாஞ்சாலி சபதம்'' ஒன்றேயாம். புதிய முறையில், எளிய நடையில் இயற்றப்பட்டுள்ள இவ்வழகிய சிறு காவியத்தில் பாரதியாரின் நகைச்சுவை ஆங்காங்கு குமிழிவிட்டுக் கிளம்புவதைக் காணலாம். திருதராஷ்டிரன் தன் துரியோதனனுக்குத் தர்க்க ரீதியாகக் பல நீதிகளை எடுத்துப் புகட்டுகின்றான்; மகன் பாண்டவர் மீது கூறிய பழிகளையெல்லாம் மிக அழகாகவும், சாதுர்யமாகவும் மறுத்து விடுகின்றான். அவனுடைய வாதங்களுக்கு நேர்முறையில் துரியோதனனால் விடையிறுக்க முடியாமற் போகிறது எனவே அவன் குறுக்கு வழியில் புகுந்து ''ஆஹா; மன்னர் தந்திரம் தேர்ந்தவர்ககுக்குள்ளே என் தந்தையை யொப்பவரில்லை.''

மாதர் தாமின்ப மெனக்கென்றான் - புவி
மண்டலத்தாட்சி யவர்க் கென்றான் - நல்ல
சாதமு நெய்யு மெனக்கென்றான் - எங்கும்
சாற்றிடுங் கீர்த்தி யவர்க்கென்றான்.

''அடடா! பிள்ளையினிடம் இவ்வாறு ஆதரவு காட்டும் தந்தை உலகில் வேறு உண்டா? நீ என் தந்தை, பாண்டவர் என் உயிர்ச்சோதரர். இனிமேல் எனக்கென்ன குறை?'' என்று கூறுகிறான். தந்தைக்கும் மைந்தனுக்கும் நடக்கும் இந்த விவாதத்தில் அமைந்துள்ள சாதுரியமும், நகைச்சுவையும் தெவிட்டாத இன்பந் தருவனவாகும் - இத்தகைய நகைச்சுவையை இக்காவியத்தில் இன்னும் பல இடங்களில் காணலாம், சிறப்பாகத் தருமனைச் சூதுக்கு வருமாறு தூண்டும் சகுனி அவனை நோக்கி.

''மாரத வீரர் முன்னே - நடு
மண்டபத்தே பட்டப் பகலினிலே
சூரசிகா மணியே - நின்றன்
சொத்தினைத் திருடுவ மெனுங் கருத்தோ!''

என்று பரிகசிக்கும் மொழிகளிலும், சபை நடுவில் துரியோதனன் விதுரனைப் பார்த்து,

''ஐவருக்கு நெஞ்சம் - எங்கள்
அரண்மனைக்கு வயிறும்
தெய்வமன் றுனக்கே - விதுரா
செய்து விட்டதேயோ?''

என்று சொல்லும் மொழிகளிலும் நகைச்சுவை ததும்புகின்றது.

இனி, பாரதியாரின் தீஞ்சொற் கவிதைச் சோலையிலிருந்து வெளிக்கிளம்பி, அவருடைய வசன நூல்களில் சிதறிக் கிடக்கும் ஹாஸ்ய ரத்தினங்களில் சிலவற்றைத் திரட்டும் முயற்சியில் இறங்குவோம்.

''ஆறில் ஒரு பங்கு'' என்னும் சிறு கதையில், ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று வருஷத்திற்கொருமுறை ஆபீஸீல் பத்து ரூபாயும், வீட்டில் ஒரு குழந்தையும் பிரமோஷன்'' என்னும், வாக்கியத்தைப் படிக்கம்போது குலுங்கச் சிரிக்காத மனிதர்களை ஏதேனுமொரு கண்காட்சி சாலைக்குத்தான் அனுப்ப வேண்டுமென்று சிபாரிசு செய்வேன், ''சந்திரிகை''யின்  கதையில், கைம் பெண்ணாகிய விசாலாஷியின் கதையில், கைம் பெண்ணாகிய விசாலாஷியின் ரூபலாவண்யங்களையும், குணாதிசயங்களையும் பற்றி வீரேசலிங்கம் பந்தலு, டெபுடி கலெக்டர் கோபாலய்யங்காருக்கு வெகுவாக எடுத்துச் சொல்கிறார். இதனால் அய்யங்காரின் மனம் பக்குவமடைந்திருகிறது. அந்நிலையில் அவர், சோலை மலரொளியில் சுந்தரப் புன்னகை செய்து கொண்டிருந்த குழந்தை சந்திரிகையைப் பணிப்பெண் முத்தமிடும் காட்சியைக் காண்கிறார். அப்பபணிப் பெண்ணையே விசாலாஷி என்று அவர் எண்ணி அவள் மீது காதல் கொள்கிறார். பின்னால் தமது தவறு தெரிய வந்தபோது அவர் அப்பணிப் பெண்ணையே மணம் புரிந்து கொள்ளப்போவதாக வீரேசலிங்கம் பந்தலுவிடம் கூறுகிறார். இந்த நிகழ்ச்சிகளைப் படித்துவரும்போது வாசகர்களின் இதழ்களின் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இறுதியாக வீரேசலிங்கம் பந்தலு டெபுடி கலெக்டரைப் பார்த்து.

''கதையாவது உருளைக் கிழங்காவது! அய்யங்கார் ஸ்வாமிகளே, பணிப்பெண்ணாவது, கதையாவது'' என்று கூறும்போது வாசகர்களின் புன்னகை 'கொல்'லென்று சிரிப்பாக மாறி விடுகிறது.

தமிழ் வசனத்திலேயே ஒப்புயர்வற்ற நூல் என்று கருதப்படும் ''ஞானரதம்'' என்னும் கற்பனைக் களஞ்சியத்தில் ''மண்ணுலகம்'' என்னும் அத்தியாயம் நகைச்சுவை குலுங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும். அடியிலிருந்து கடைசி வரை ஹாஸ்ய ரஸமாயிருக்கும், இவ்வத்தியாயத்திலிருந்து தனித் தனியே சில பகுதிகள் பொறுக்கி எடுத்துக் காட்டுதல் எளிதன்று. எனினும், நேயர்களுக்கு அதை முழுதும் படிக்க வேண்டுமென்னும் ஆர்வம் உண்டாக்கும் பொருட்டு இரண்டொரு பகுதிகளை உதாரணமாக இங்கே தருகிறேன்.“முன் பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார், அவருக்குப் பகல் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம் உடம்பிலே கோபிமண் முத்திரைகள் எத்தனையோ, அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலே ஒரு பசுமாடு. அத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்... ராயருக்குக் காச நோயாதலால் அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி ஒன்று அழுது கொண்டேயிருக்கும் கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ, அல்லது ராயரைத்தானே, கன்னட பாஷையிலே திட்டி விட்டு மறுபடியும் உறங்கி விடுகிறாள்.''

''வரும் வழியிலே ஜட்காவண்டிகள், துரைகள் போகும் கோச்சுகள். புழுதி, இரைச்சல், துர்நாற்றம் இவற்றையெல்லாம் கடந்து முன்பகுதியிலே, பசுமாடு, ராயர் வீட்டம்மாள் குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துக்கெல்லாம் தப்பிப் பின்புறத்திலே மெத்தைக்கு வந்து சேர்ந்தேன்.''

''நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர்களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர். 'காலணா'வின் அடியார்க்கு மடியார். ஆனால், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாயிருக்கும்.''

பாரதியாரின் நகைச்சுவையை உள்ளபடி அனுபவிப்பதற்கு அவருடைய கவிதைகளையும், உரைநடை நூல்களையும் தொடர்ந்து படித்தல் அவசியமாகும். ஆங்காங்கு துண்டாக எடுத்துத் தரும் பகுதிகளை மட்டும் படித்து அவற்றின் சுவை நயத்தை முழுதும் அநுபவித்தல் இயலாத காரியம். இக்கட்டுரையைப் படிக்கும் அன்பர்களின் உள்ளத்தில் நமது மகாகவியின் நூல்களைப் படிக்கும் ஆர்வம் ஒரு சிறிதேனும் உண்டாகியிருக்குமாயின் என் முயற்சி பயன் தந்தது என்று எண்ணிப் பெருமகிழ்ச்சியடைவேன்

( முற்றும் )

[ நன்றி: “ஏட்டிக்குப் போட்டி” கல்கி  ( ஒன்பதாம் பதிப்பு), வானதி, 1985 ]

தொடர்புள்ள பதிவுகள்:


’கல்கி’ கட்டுரைகள்

பாரதி மணிமண்டபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக