வியாழன், 28 பிப்ரவரி, 2019

1239. சுஜாதா- 4

சுஜாதா - குமுதம் - நான்
( நண்பருக்கு நினைவாஞ்சலி )
பாக்கியம் ராமசாமி 

 
ஜ.ரா.சு. அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் செப்டெம்பர் 13, 2017 -இல் எழுதிய ஒரு கட்டுரை.

டியர் சுஜாதா,
தாங்கள் புறப்பட்டுப் போய் ஒன்பது வருடமாகிறது. இலக்கியத்தில் நீங்கள் வசித்த பகுதிக்கு இன்னும் யாரும் குடித்தனம் வரவில்லை.
எனது ஏக்கத்தின் பிரதிபலிப்பாக இந்த அஞ்சலி.
அய்யா சுஜாதா, உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.
பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு.
ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.
திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.
அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.
ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.
அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.
அவர் குமுதத்தில் எழுதிய ‘ சிவப்பு கறுப்பு வெளுப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.
‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.
ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.
‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.
எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பையும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.
மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.
உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.
தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீஸுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.
நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.
அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.
நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.
குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.
குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.
சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப்போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.
ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.
இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..
- பாக்கியம் ராமசாமி
( நன்றி: குமுதம் 12.3.2008 )

======
1. சுஜாதாவின் அந்தத் தொடரின் (1980) முதல் இரண்டு பக்கங்கள்:






[ படங்கள்: நன்றி: கணேஷ் பாலா ] 

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சுஜாதா


பாக்கியம் ராமசாமி

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

1238. பிரேம்சந்த் - 2

உப்பு இன்ஸ்பெக்டர் 
பிரேம்சந்த் [ தமிழாக்கம் : சௌரி ] 

















[ நன்றி:  பிரேம்சந்த் சிறுகதைகள், நேஷனல் புக்டிரஸ்ட் , புது தில்லி ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

பிரேம்சந்த்

1237. சங்கீத சங்கதிகள் - 179

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 4
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 





சுதேசமித்திரனில் 1943-இல்  வந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் ஒரு கட்டுரை.






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி : சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

திங்கள், 25 பிப்ரவரி, 2019

1236. பெரியசாமி தூரன் - 4

சேரி விளையாட்டு
பெ.தூரன்



‘சக்தி’ இதழில் 1944-இல் வந்த ஒரு கவிதை.






[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவு:
பெரியசாமி தூரன்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

1235. சத்தியமூர்த்தி - 6

பிரயாணம், பிரசங்கம்
எஸ்.சத்தியமூர்த்தி 


இந்தக் கடிதங்கள் ” அருமைப் புதல்விக்கு” என்ற தலைப்புடன் ’தமிழ்ப்பண்ணை’ யின்  நூலாய் (45?) வந்தபின், ‘கல்கி’ யின் டிசம்பர் 30, 1945 இதழில் வந்த ஒரு மதிப்புரை கீழே!  ( நடையைப் பார்த்தால் கல்கியே எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது! அவர் ‘தீரர்  சத்தியமூர்த்தி’ என்று ஒரு கட்டுரையும் எழுதியவர்; அதே சொற்றொடரை இந்த மதிப்புரையில் காணலாம்! "  தீரர் சத்தியமூர்த்தி” என்ற கட்டுரையைப் பின்னர் வெளிடுகிறேன்.  )




43/44-இல் ’சுதேசமித்திர’னில் வந்த இரு கடிதங்கள்.






பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சத்தியமூர்த்தி

சனி, 23 பிப்ரவரி, 2019

1234. கோபுலு - 7

அஃறிணை அஹஹா! -1









 [ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

கோபுலு

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

1233. அ.சீநிவாசராகவன் - 7

தினசரி வாழ்க்கை
அ.சீநிவாசராகவன் 


‘சக்தி’ இதழில் 1940-இல் அ.சீ.ரா. எழுதிய முதல் கட்டுரை .
( அவருடைய ஒரு வானொலி உரையின் அச்சு வடிவம்)

அந்த இதழில் அவரைப் பற்றிச் ‘சக்தி’ கொடுத்த ஓர் அறிமுகம் இதோ:






[ நன்றி : ‘சக்தி’ ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:


அ.சீநிவாசராகவன்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

1232. சங்கீத சங்கதிகள் - 178

மதுரை சோமு - 6

மதுரை சோமு 100
ஆர்.சுந்தர்ராமன்

2019. மதுரை சோமு அவர்களின் நூற்றாண்டு வருடம். 

[ நன்றி: ராஜு அசோகன் ]


சோமு நூற்றாண்டு: 2 பிப்ரவரி 1919-2019

 கர்நாடக இசை உலகம் ஏற்கெனவே அவரைக் கொண்டாடி வந்திருந்தாலும் "மருதமலை மாமணியே முருகையா' என்ற ஒரேபாடல் மூலம் உலகம் முழுவதும் அதிகம் அறியப்பட்டவர் மதுரை சோமு. தன்னுடைய கச்சேரிகளில் அதிகமான தமிழ்ப்பாடல்களையும் பாடி உலகெங்கும் உள்ள தமிழர்களது மனங்களில் இடம் பிடித்தவர்.

 சோமுவின் பிறப்பிடம் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை. அவர் படித்தது ஒன்பதாவது வகுப்பு மட்டுமே. பெற்றோர் சச்சிதானந்தம்பிள்ளை - கமலாம்பாள். இசை வேளாளர் மரபில் வந்தவர். அவர் தந்தைக்கு மதுரை நீதிமன்றத்தில் எழுத்தர் பணி கிடைத்ததால், குடும்பம் மதுரைக்கு புலம் பெயர நேர்கிறது. எனவே சோமுவின் இளமைக்காலம் முழுவதும் மதுரையிலேயே கழிந்தது. அவரது பெற்றோருக்கு சோமு கடைக்குட்டி. மூத்தவர்கள் 11 பேர். ஆனால் உயிருடன் இருந்து வாழ்ந்தவர்கள் அறுவர் தான். அவர்களுள் முத்தையா மற்றும் கல்யாணசுந்தரம் சகோதரர்கள் அந்நாளில் கால்பந்து வீரர்களாக டி.வி.எஸ். புட்பால் கிளப்பிற்காக விளையாடியவர்கள். இவர்கள் குத்துச் சண்டை வீரர்களும் கூட. அண்ணன்களோடு சேர்ந்து சோமுவும் குத்துச்சண்டை பயிற்சி எடுத்துக்கொண்டார். இதனால், சரீரம் கட்டுமஸ்தாக மாறியது. சாரீரமோ சறுக்கியது. ஒருவர் பாடிய பாடலைக்கேட்டு சுருதி சுத்தமாக திரும்ப பாடக்கூடியதிறமை பெற்றவரான சோமு, இசை மீது அதீத ஆசைகொண்டவராக இருந்தார். எனவே சாரீரம் சறுக்கியதில் இயல்பாக கவலை கொண்டார். ஆனால், மனம் தளரவில்லை. தன் திறமையைக் கொண்டு இசை உலகில் சாதனை புரிய வேண்டும், அதற்கு இசையின் அடிப்படைப் பாடங்களை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் பட்டராக வேலைபார்த்த இசை வல்லுநர் சேஷ அய்யரிடம் இசை வகுப்புகளுக்குச் செல்கிறார்.



 இதற்கிடையே, சோமு வசித்த வீட்டிற்கு எதிர் வீட்டில்தான் நாதஸ்வர வித்வான் எம்.பி.என். சேதுராமன் மற்றும் பொன்னுசாமியின் வீடு இருந்தது. எனவே எம்.பி.என் சகோதரர்களின் தந்தை வித்வான் நடேச பிள்ளையிடம் நாதஸ்வரமும் பயில்கிறார். நாதஸ்வர வகுப்பில் நாதஸ்வரக் கருவியின் மேல் பகுதியில் உள்ள சீவாளி ஒரு முறை பலமாக சோமுவின் உதட்டை பதம் பார்த்து விடுகிறது. அதிலிருந்து நாதஸ்வரம் வாசிப்பது தடை பட்டுப்போனது. எனவே வாய்ப்பாட்டில் அவர் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் போது இசைக் கச்சேரிகள் ஆடி வீதியில் நடப்பது வழக்கம். அப்படி ஒரு நவராத்திரி விழாவில் சித்தூர் சுப்ரமணிய பிள்ளையின் கச்சேரி நடந்தது. சோமுவும் அவரது சகோதரரும் அங்கு செல்கின்றனர். கச்சேரியை அனுபவித்துக் கேட்ட மாத்திரத்தில், இவரிடம் தான் தாம் இசை பயில வேண்டும் என்று தோன்றி அந்த விருப்பத்தை தன்னுடையை அண்ணனிடமும் தெரிவிக்கிறார்.
 தம்பியின் ஆசையை பூர்த்திசெய்ய மதுரையிலிருந்து தம்பி சோமுவை அழைத்துக்கொண்டு சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில் தெருவில் உள்ள சித்தூர் சுப்ரமணிய பிள்ளை வீட்டில் அவரை சந்தித்து விஷயத்தைக் கூறுகிறார் முத்தையா. சித்தூராரும் சோமுவை சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தக் காலத்தில் திரைப்பட இயக்குநர் சங்கருக்கு பத்து பதினைந்து உதவி இயக்குநர்கள் இருப்பது போல் அந்தக்காலத்தில் சித்தூராருக்கு மதுரை சோமு 26-ஆவது சிஷ்யன். 26 சிஷ்யர்களில் 10 பேர்கள் குருகுலவாசம். அதில் சோமுவும் ஒருவர்.



 வாரத்தில் ஒரு நாள்தான் வகுப்பு, மற்ற நாட்களில் காலையில் எருமை மாட்டை மயிலாப்பூரிலிருந்து எக்மோரில் உள்ள சித்தூராரின் பெற்றோர் வீடு வரை ஓட்டிச் சென்று பால் கறந்து கொடுத்துவிட்டு மீண்டும் மயிலாப்பூருக்கு எருமையை ஓட்டி வரவேண்டும். இதுதான் அவரது பணியாக இரண்டாண்டு காலம் இருந்துள்ளது.

 சித்தூரார் வீட்டில் தெலுங்குதான் பேசுவார்கள். அது சோமுவிற்கு வரப்பிரசாதமாக அமைந்தது. அதைக் கேட்டு கேட்டு அவரும் ஆறு மாதத்தில் தெலுங்கு பேசுவதற்குக் கற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, சோமுதான் நம்ம பெயரைக் காப்பாற்ற வந்த நாயகன் என சித்தூர் சுப்ரமணிய பிள்ளை முடிவு செய்து இசையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் அவருக்குக் கற்றுத் தருகிறார். அவர் பாடும் கச்சேரிகளுக்கு தம்பூரா வாசிப்பதற்கு கூடவே அழைத்துச் செல்கிறார். சிலநேரங்களில் கச்சேரியின் நடுவே 10 அல்லது 15 நிமிடஓய்வு நேரத்தில் சோமுவைப் பாட வைத்து அழகு பார்ப்பார். ஒரு நாள் சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள சபாவில் சித்தூராரின் கச்சேரி, அவருக்கோ காலையிலிருந்து ஒரே காய்ச்சல். மாலை வரை குறைந்தபாடில்லை. சபா செயலருக்கு வரமுடியாத காரணத்தைக் கடிதத்தில் எழுதி, சோமுவை அழைத்து, கடிதத்தையும் தம்பூராவையும் கொடுத்து, "காய்ச்சலாக இருப்பதால் எனக்கு பதிலாக நீ பாடிவிட்டு வா' என்று சொல்லி ஒரு ரிக்ஷாவில் அனுப்புகிறார். சோமுவுக்கோ ஒரு பக்கம் மகிழ்ச்சி. மறுபக்கம் பயம். சபாவில் சுப்ரமணிய பிள்ளை கச்சேரிக்கு பக்கவாத்யம் வாசிப்பதற்காக மிருதங்க ஜாம்பவான் பழநி சுப்ரமணிய பிள்ளையும் வயலின் வித்தகர் மாயவரம் கோவிந்தராஜ பிள்ளையும் காத்திருக்கிறார்கள்.



 சோமுவைக் கண்டவுடன், "என்னப்பா சோமு பிள்ளைவாள் வரவில்லையா?" எனக் கேட்க, அதற்கு, "அவருக்கு உடம்பு சரியில்லை, அதனால் என்னைப் பாடச் சொல்லி அனுப்பியுள்ளார்' என்கிறார் சோமு. பதிலைக் கேட்டதும், பக்கவாத்ய கலைஞர்கள் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். இருவரது மனங்களும் ஒரு சேர நாம் வயதில் சிறிய இந்த சோமுவுக்கா வாசிப்பது என்று நினைக்கிறது. இன்னொருபக்கம் வந்தது வந்துவிட்டோம் யாருக்கு வாசித்தாலென்ன என்றும் அவர்களுக்கு தோன்றுகிறது. "சரி வாசிச்சிருவோம்' என்று அன்றைய தினத்தில் சோமுவின் கச்சேரிக்கு ஜாம்பவான்கள் பக்க வாத்யம் வாசிக்கிறார்கள்.

 சோமுவுக்கு வாசித்தது இதுவே முதலும் கடைசியுமாகும் என்று இருவரும் பேசிக் கொள்வதைத் தன் காதால் கேட்ட சோமு மிகவும் மனம் வருந்தி தன்னுடைய குருநாதர் சித்தூராரிடம் அதைச் சொல்கிறார். சித்தூராரும், "இசை உலகில் இதெல்லாம் சகஜம்ப்பா' என்று ஆறுதல் வார்த்தை சொல்லி, "நீ பாட்டுக்கு உன் வேலையப் பாரு' என்று சோமுவை ஊக்கப்படுத்துகிறார்.
 குருகுல வாசத்தின் 11வது வருட முடிவில், சித்தூரார் சோமுவை அழைத்து, "நீ தனியாக கச்சேரி செய்யும் அளவிற்கு இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டுவிட்டாய். எனவே மதுரைக்கு கிளம்பு' என்கிறார். ஆனால் சோமுவோ, "இன்னும் சில மாதங்கள் உங்களுடனே இருக்கிறேன்" என்கிறார். இப்படியே மேலும் இரண்டு வருடங்கள் சென்றன. 13 வருடங்களுக்கு பிறகு இதேபோல் ஒரு நாள் சோமுவை அழைத்து, கையில் மூன்று வேஷ்டிகள் மூன்று ஜிப்பாக்கள் மற்றும் ஒரு தம்பூராவைக் கொடுத்து, "தனியாக கச்சேரி செய்வதற்கு இதுதான் உனக்குச் சரியான நேரம், உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு' என்று வாழ்த்தி மதுரைக்கு அனுப்புகிறார்.

 மதுரை செம்பியன் கிணற்றுச்சந்தில் உள்ள காளியம்மன் கோவில் விழாவில் அரை மணி அளவிலான ஒரு சிறு கச்சேரியில் முதலில் பாடுகிறார். அதற்குப்பின் சோமுவின் முதல் முழுமையான இசைக் கச்சேரியாகச் சொல்லப்படும் அந்த நிகழ்வு திருசெந்தூர் முருகன் கோவில் சந்நிதியில் நடைபெறுகிறது. அங்கு பாடிய பிறகு சோமுவின் கச்சேரி வரைபடத்தில் ஏறுமுகம்தான்.

 மதுரை சோமு கொஞ்ச காலம் முறையாக நாதஸ்வரம் பயின்றதால், நாதஸ்வரத்தில் வாசிக்கும் ராக ஆலாபனை பாணிகளிலும் பாடுவார். டி.என். ராஜரத்னம் பிள்ளையின் வாசிப்பை இசைத்தட்டில் அடிக்கடி கேட்டதால் அவருடைய வாசிப்பின் தாக்கம் சோமுவின் கச்சேரியில் இருக்கும். பிரபல கர்நாடக சங்கீத வித்வான் ஜி.என். பாலசுப்ரமணியனும், செம்மங்குடி சீனிவாச அய்யரும் சோமுவின் சமகால சங்கீத வித்வான்கள். ஜி.என்.பி, செம்மங்குடி சீனிவாச அய்யர், மதுரை சோமு மூவருக்கும் ஓர் ஒற்றுமை என்னவென்றால், மூவருமே நாதஸ்வரம் வாசிப்பின் பாணியில் பாடக்கூடியவர்கள்.

 1961-ஆம் ஆண்டு சென்னையில் டிசம்பர் சங்கீத சீசன் களை கட்டியது. இந்தியாவின் பிரபல சங்கீத வித்வான்கள் பல்வேறு சபாக்களிலும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மதுரை சோமுவும் தன்னை இணைத்துக் கொண்டு ஓய்வில்லாமல் பாடிக் கொண்டிருக்கிறார். சென்னை பிராட்வே தமிழ் இசைச் சங்கத்தின் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு கச்சேரி. முடியும் தறுவாயில் சோமு ரசிகர்களிடையே பேசுகிறார், "இன்றைக்கு, எட்டுக்கிரகங்கள் மகரத்தில் சந்திப்பதைப் பற்றி மக்கள் கவலையோடு பேசிக் கொள்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம், தெய்வத்தின் அருளால் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் திருப்பாடல்கள் நமக்கு ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாத்து நிற்கும்' என்ற பொருள்பட,
 "எட்டுபேர் மகரத்தில்
 இணைவதாலே ஏதும் கெட்டுவிடுமோ என்று
 ஏங்காதே மனமே
 நட்டுவன் சிதம்பர நாதனிருக்கையில்
 ஞானசம்பந்தன் பாடல் நமக்குத் துணையுண்டு'
 என்ற வரிகளில் பல்லவி அமைத்துக் கொண்டு ராகம், தாளம், பல்லவியை மிக உருக்கமாக பாடி ரசிகர்களின் "மகரக்' கவலையை மறக்கச் செய்து சந்தோஷப்படுத்தினார். ரசிகர்களும் பலத்த கைத்தட்டலைப் பரிசாக அளிக்கின்றனர். இப்படி அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப பாடல்களைப் பாடும் திறமை பெற்றவர் சோமு. கல்யாண கச்சேரி என்றால், திருமணமான தம்பதிகளைப்பற்றி பாடி அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்ப்பார். கோயில் கச்சேரி என்றால் அது தனி விதம். சங்கீதகாரர்களுக்கு மத்தியில் ஒரு விதம்.

 பம்பாய் என்ற மும்பை சண்முகாநந்தா ஹாலில் சோமுவின் கச்சேரி, அதுவரை வட இந்திய ஹிந்துஸ்தானி பாடகரான படே குலாம் அலிகான் பாடல்களை இசைத்தட்டில் கேட்டுத்தான் பழக்கம். ஆனால், பம்பாய் கச்சேரியில் படே குலாம் அலிகான் கலந்து கொள்கிறார் என்பதைக் கேட்டவுடன் சோமுவின் மனத்தில் முகிழ்த்த மகிழ்ச்சி வண்ணத்துப் பூச்சிகளாகச் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டன. இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து குலாம் அலிகான் பாடும் ஹிந்துஸ்தானிப் பாடல்களை அவரது பாணியில் பாடினார். சண்முகாநந்தா அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. குலாம் அலிகான் அதில் நெகிழ்ந்து உடனே மேடையேறி தான் வைத்திருந்த விலையுயர்ந்த சால்வையை சோமுவிற்கு அணிவித்து பெருமைப்படுத்தினார்.

 1978- இல் இசைக் கச்சேரிக்காக இலங்கை செல்கிறார் சோமு. அவருடைய மகனும் மிருதங்க வித்வானுமான சண்முகமும் உடன் செல்கிறார். சோமுவின் கச்சேரிக்கு முன்பாக நாதஸ்வர தவில் கச்சேரி நடை பெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாக மகா சிவராத்திரியன்றுதான் ஆங்காங்கே முன்னிரவில் கச்சேரி ஆரம்பித்து மறுநாள் காலை வரை இசைக் கச்சேரிகள் நடைபெறும். ஆனால், மதுரை சோமு கச்சேரி நடைபெறும் ஒவ்வொரு இரவும் மகாசிவராத்திரிதான். இலங்கையில் நடந்த கச்சேரியும் அப்படித்தான் நடந்தது. கச்சேரியின் நடுவே மதுரை சோமுவிற்கு "கீதாமிர்தவாரிதி' என்ற கெüரவப் பட்டத்தை வழங்கி சிறப்பு செய்கின்றனர் இலங்கைவாழ் இசைக் கலைஞர்கள்.

 ஏறத்தாழ 12 ராகங்களைத் தொகுத்து ராகமாலிகையாக இலங்கைவாழ் இசை ரசிகர்களுக்கு வழங்குகிறார். இறுதியாக "தெய்வம்' படப் பாடலான "கோடி மலைகளிலே கொடுக்கும்மலை எந்த மலை' என்ற விருத்தத்தை தன் காத்திரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார். ரசிகர்களின் கைத்தட்டலும் விசிலும் விண்ணை முட்டுகின்றன. இப்படியாக முதல் நாள் இரவு 10.00 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி மறுநாள் காலை 4.30 வரை நீடித்தது.
 மதுரை சோமுவிற்கு கோவையில் ஸ்ரீராமநவமியன்று நடந்த கச்சேரியும் மறக்க முடியாத ஒரு கச்சேரியாகும். சோமுவின் கச்சேரிக்கு முன்பாக ஜி.என்.பியின் கச்சேரி நடந்தது. அவர் கல்யாணி ராகத்தில் ராக ஆலாபனை செய்கிறார். சோமுவும் மிருதங்க வித்வான் சி.எஸ். முருகபூபதியும் முன் வரிசையில் அமர்ந்து கச்சேரியை ரசிக்கின்றனர். ஜி.என்.பி-யின் கச்சேரி முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக ஜி.என்.பி-யிடம் "கச்சேரிக்கு தயாராகி வருகிறேன்' என்று சொல்லிவிட்டு விடுதிக்கு கிளம்புகிறார்.
 விடுதிக்குச் சென்றவுடன், சோமு முருகபூபதியிடம், "அண்ணே ஜி.என்.பி கல்யாணியில மனுசன் அசத்திபுட்டாரே, எனக்கு பயமா இருக்கு, நான் வேற ராகத்தை எடுத்துப் பாடவா?' என்று கேட்கிறார். முருகபூபதியோ, "சோமு ஜி.என்.பி. பாடிய கல்யாணி ராகத்தையே அவர் பாணியிலயே உன் குரல்ல பாடு. நம்மளும் பட்டய கிளப்பிறலாம்' என்று ஊக்கப்படுத்துகிறார். முருகபூபதி சொன்னபடியே சோமு பாடுகிறார். கச்சேரி முடிந்தவுடன் ஜி.என்.பி சோமுவை கட்டித் தழுவி, "நீ இனிமேல் சித்தூர் சுப்ரமணிய பிள்ளை சிஷ்யன் இல்லடா, என்னுடைய சிஷ்யன்' என்று சொல்லி தன்னிடம் இருந்த சால்வையை அணிவிக்கிறார்.

 சென்னை கிருஷ்ணகான சபாவில் வழக்கமாக நடைபெறும் இசைவிழாவில் மதுரை சோமு கச்சேரி செய்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து செம்மங்குடி சீனிவாச அய்யரின் கச்சேரி, அவருக்கோ கச்சேரியன்று கடுமையான காய்ச்சல். சபாவின் அன்றைய செயலாளர் யக்ஞயராமனை தொலைபேசியில் அழைத்த செம்மங்குடி விஷயத்தைச் சொல்லி, அதற்கு பரிகாரமும் சொன்னார். அதாவது, "எனக்கு பதிலாக மதுரை சோமுவைப் பாட வையுங்கள்' என்றார். இதைக்கேட்ட செயலாளர், "நேற்று முன் தினம்தான் சோமு பாடினார்' என்று சொல்ல, "பரவாயில்ல, அதனாலென்ன, சோமுவை அனுப்புறேன். பாட அனுமதியுங்கள்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து, அடுத்து சோமுவை தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லி, "எனக்கு பதிலாக பாடிவிட்டு வா" என்கிறார். சோமுவும் சபா செயலாளர் சொன்ன விஷயத்தைச் சொல்ல, நான் சொன்னதை செய் என்று சொல்லி தனக்குப் பதிலாக சோமுவைப் பாட அனுப்புகிறார். செம்மங்குடி சீனிவாச அய்யருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் மதுரை சோமுவின் கச்சேரிக்கும் இருந்தது. கச்சேரி முடிந்ததும் செம்மங்குடிக்கு கொடுக்க வைத்திருந்த சன்மானத்தை அப்படியே மதுரை சோமுவிற்கு கொடுத்தார் சபா செயலாளர் மறைந்த யக்ஞராமன். மறுநாள், மதுரை சோமு செம்மங்குடி சீனிவாச அய்யரைச் சந்தித்து நமஸ்காரம் செய்து, "இது உங்களுக்குச் சேர வேண்டியது' என்று தன்னிடம் கொடுத்த சன்மானத்தைக் கொடுக்கிறார். செம்மங்குடியோ அதிலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து சோமுவிற்கு கொடுக்கிறார். சோமுவோ அந்த சிறு தொகையை செலவழிக்காமல் தன்னுடைய டைரியில் நடந்ததை எழுதி அந்தத் தேதியின் பக்கத்தில் அதை வைத்து தான் இறக்கும்வரை தன் முன்னோடி தந்த சன்மானத்தை பாதுகாத்து வந்தார்.

 மதுரை சோமு ஓய்வில்லாமல் கச்சேரி செய்து வருகையில் வீட்டில் சோமுவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து பெண் பார்க்கிறார்கள், சோமுவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட மிருதங்க வித்வான் ராமநாதபுரம் சி.எஸ். முருகபூபதி, சோமுவின் பெற்றோரிடம், தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூரில் தனக்கு தெரிந்த குடும்பத்தில் பெண் இருப்பதாகவும் எனவே திருக்கருகாவூர் சென்று பார்த்துவிட்டு வருவதாக சொல்லி புறப்பட்டார்.
 முருகபூபதி பார்த்துவிட்டு வருவதாக சொன்ன பெண்ணின் பெயர் சரோஜா, பெற்றோருக்கு ஒரே மகள். சரோஜாவிற்கு சொந்த ஊர் திருக்கருகாவூர் என்றாலும் வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில். படித்தது வெலிங்டன் சீமாட்டி கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ். திருமணம் திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாக நடந்தேறியது. திருமணத்தன்று சோமுவின் குருநாதர் சித்தூர் சுப்ரமணியபிள்ளையின் கச்சேரியும் நடந்தது.



 திருமணத்திற்குப் பிறகு கணவர் சோமுவின் அறிவுரைப்படி சரோஜா தான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இசையில் பிரபலமான தன் கணவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பணிவிடை செய்யும் குடும்பத்தலைவியாக மாறினார். சோமு தம்பதியருக்கு நான்கு குழந்தைகள். மூன்று ஆண்கள் ஒரு பெண்.

 சித்தூரார் காலமானதைக் கேள்விப்பட்டு மனதளவில் அதிர்ச்சியடைந்த சோமு, சித்தூராரின் மகனிடம் சென்று, "என் குருவான உன் தந்தைக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கிரியைச் சடங்குகளை உனக்கு பதிலாக நான் செய்வதற்கு நீ அனுமதி தரவேண்டும்' என்ற உருக்கமான வேண்டுகோளை வைக்கிறார். சித்தூரார் மகனும் சம்மதம் தெரிவிக்கிறார். சித்தூராரின் அனைத்து ஈமக்கிரியை மற்றும் பத்து நாள் சடங்குகளையும் மகனின் ஸ்தானத்திலிருந்து செய்து முடிக்கிறார். ஈமக்கிரியை சடங்குகள் முடிகிறவரைக்கும் ஒப்புக்கொண்ட கச்சேரிகளை ரத்து செய்கிறார் சோமு. குருநாதருக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடல்கள் மூலமும் பணிவிடை வாய்லாகவும் கடவுள் பக்தியை விட அதீத குருபக்தியை வெளிப்படுத்தியவர் மதுரை சோமு.

 மதுரை சோமுவிற்கு 1976ஆம் ஆண்டு மத்திய அரசு "பத்மஸ்ரீ' பட்டம் வழங்கி கெüரவிக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடும் வகையில் சோமு பிறந்த ஊரான சுவாமிமலையில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவை நாதஸ்வர வித்வான்கள் சுவாமிநாதன் மற்றும் பி.வி. காளிதாஸ் முன்னின்று நடத்தினர். அன்று யானை ஊர்வலம், பூர்ண கும்ப மரியாதை, இசை முழக்கம் என இசையில் சாதித்து "பத்மஸ்ரீ' பட்ட மண்ணின் மைந்தனை கொண்டாடினர் சுவாமிமலை மக்கள்.
 வெளிநாடு சென்று கச்சேரி செய்திருக்கிறார், இது தவிர வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரி செய்யும் விருப்பம் மனதளவில் கூட எழவில்லை. இறுதிவரை இந்தியாவிலேயே கச்சேரி செய்ய விரும்பினார். குருநாதரையும் தாயையும் துதித்துப் பாடாத கச்சேரிகளே இல்லை. சோமுவின் கருத்தில், சவாலாகவும், ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போடக்கூடிய இசைத்துறையில் தனது வாரிசுகளை முழுநேர இசைக்கலைஞனாக உருவாக்கவில்லை. இது பற்றி தனது வாரிசுகளுக்கு, "முதலில் பட்டப்படிப்பு முடியுங்கள், அடுத்து ஒரு நிரந்தர வேலையைத் தேடிக்கொள்ளுங்கள், பிறகு இசைத்துறையை பகுதி நேரத் தொழிலாக வைத்துக்கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தியவர் மதுரை சோமு. இறுதியாக, தான் பாடும் கச்சேரிகளில் தமிழ் பாடல்களை அதிகமாகப் பாடி தாய்மொழியாம் தமிழை வளர்த்த தங்க மகன். எனவே மதுரை சோமுவின் நூறாவது பிறந்த நாளை தமிழர்களாகிய நாம் அனைவரும் குறிப்பாக இசைத்துறையில் இருப்பவர்கள் வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும். இதுதான் மதுரை சோமுவிற்கு தமிழர்கள் செய்யும் மகத்தான மரியாதை.


[ நன்றி : தினமணி கதிர்,  4 பிப்ரவரி 2019 ]


தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 20 பிப்ரவரி, 2019

1231. மு.அருணாசலம் - 2

சீகாழிப் பள்ளு
மு.அருணாசலம் 


‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை .




[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:


மு.அருணாசலம்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

1230. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 2

ஞானக் குளிகைகள்

மஞ்சேரி எஸ்.ஈச்வரன்



’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை.






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவு:


மஞ்சேரி எஸ். ஈச்வரன்