வெள்ளி, 29 ஜூன், 2018

1105. விபுலானந்தர் - 5

விபுலானந்த அடிகளார் ஆவணப் படம் : ஒரு மதிப்பீடு
சு.பசுபதி 

டொராண்டோவில் 24-06-2018 -இல் இந்த ஆவணப்படம் வெளியீட்டு விழா நடை பெற்ற போது நான் பேசியதின் எழுத்து வடிவம் இதோ. கூடவே சில புகைப்படங்களும்!
===


சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு நல்கிய சுவாமி விபுலானந்தர் கலை மன்றத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

தமிழை இயல், இசை, கூத்து என்று மூன்று வகைப் படுத்துவதை நாம் அறிவோம். இது உலகில் எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு.  தமிழறிஞர்கள் என்று நாம் இன்று பலரைக் கொண்டாடினாலும், ’முத்தமிழை’ நன்கு ஆழமாய்ப் பயின்று, மூன்றிலும் புதிய படைப்புகள் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் அடிகளார் ஒருவர். அப்படிப்பட்ட ‘முத்தமிழ் வித்தக’ரைப் பற்றி ஒரு மணிக்குள் அடங்கும் ஆவணப் படம் எடுப்பது மிகக் கடினமான விஷயம். அதை மிகப் பொறுப்புடன், பணிவுடன் , அதே சமயத்தில் தரமாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்துள்ளார் முனைவர் மு.இளங்கோவன். இது போற்றப்பட வேண்டிய விஷயம்.


இளங்கோவன் ஏற்கனவே ’பண்ணாராய்ச்சி வித்தகர்’ குடந்தை ப.சுந்தரேசனரைப் பற்றி ஓர் ஆவணப் படத்தை எடுத்து, பலருடைய பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். அந்த முந்தைய அனுபவம் அவருக்கு இந்த ஆவணப் படத்தை இயக்குவதில் மிகவும் உதவியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.


அடிகளாரின் சிலையை வடிப்பதில் தொடங்கும் படம், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் பயணத்தில் நம் கண்களையும், செவிகளையும் சிறிதும் சோர்வில்லாத வழியில் கூடக் கூட்டிச் செல்கிறது. விபுலானந்தரைப் பற்றி நிறைய படித்தவர்கள் , அதிகம் தெரியாத பலர் என்ற இரு வகையினரையும் கவரக் கூடிய வகையில் படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது.

மட்டக்களப்பு, காரை தீவு, கொழும்பு போன்ற இடங்களில்  தொடங்கும் அடிகளாரின் பயணம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், இமயமலை அடிவாரத்தில் உள்ள மாயாவதி வரை போவதை, “ தெற்கே இலங்கை முதல் செல்லும் இமயம்வரை” என்று பாரதிதாசன் சொன்னதை -- ஆவணப்படுத்துகிறது படம். முனைவர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் சி.மௌனகுரு, எழுத்தாளர் பெ.சு.மணி, ஆய்வறிஞர் கு.சிவமணி, முனைவர் த.ஜெயசிங்கம், முனைவர் சண்முக. செல்வ கணபதி போன்ற பல தமிழறிஞர்களும், சுவாமி ஆத்மகணானந்தா, காந்தி மாஸ்டர், பேராசிரியர் வெள்ளைவாரணரின் மகள் , இராமநாதபுரம் இராணியார், இலங்கை அரசின் கல்வி அமைச்சர், திருமதி திலகவதி ஹரிதாஸ்,  அடிகளாரின்  தங்கை மகன், மகள் போன்றோரும் தங்கள் கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர். பலருடைய பேச்சுகள் நம்மை மேலும் அடிகளாரின் கட்டுரைகளைத் தேடிப் படிக்கத் தூண்டுகின்றன. சான்றாக, சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றித் திறனாய்வு செய்த முதல் தமிழறிஞர் அடிகளார் , ‘ப்ரபுத்த பாரதம்’ என்ற ஆங்கில,  சமய இதழில் சங்கத் தமிழைப் பற்றித் தானும் எழுதி, மற்றோரையும் எழுதவைத்தவர் அடிகளார் போன்ற கருத்துகளைப் பெ.சு.மணி சொல்லும்போது நம் ஆர்வம் மேலும் தூண்டப் படுகிறது. 


படத்திலேயே நடுநாயகமாய்த் திகழ்வது  நடன நிகழ்வாய் அமைந்த “  வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ “ என்று தொடங்கும்,   அடிகளாரின் பிரபல பாடல். ”மும்மைத் தமிழை முழங்கிய “ அடிகளுக்குக் கவர்ச்சி மிகுந்த மூன்று ராகங்களில் ஒலித்த இந்த நடனத்தை விட மேலான அஞ்சலி இருக்கமுடியாது. அங்கங்கே பொருத்தமாகச் சேர்க்கப்பட்ட அடிகளாரின் கடிதங்கள், அவர் இயற்றிய நூல்களின் அட்டைகள், ஆங்கில இதழ் ‘ஹிந்து’வில் அடிகளாரின்  சிறப்புரைகளைப் பற்றிய பத்திகள், பல புகைப்படங்கள்   போன்றவை  ஆவணப்படத்திற்குச் சுவையும், கனமும் சேர்க்கின்றன.

இந்தப் படத்தின் இன்னொரு பதிப்பு ஆங்கில அடிக்குறிப்புகளுடன் ( captions) வந்தால் மேலும் பலர்— முக்கியமாய்ச் சிறுவர்கள் -- பார்த்துப் பயனடைவர். மேலும், விபுலானந்தரின் ஆக்கங்களோ, அவரைப் பற்றிய புது நூல்களோ வெளிவரும்போது, அந்நூல்களில் இப்படம் ஓர் இணைப்பாய் கொடுக்கப் படவேண்டும். இலக்கியப் பணி, இசைப்பணி, சமயப்பணி, சமூகப்பணி என்று பலதளங்களில் ஆழமாய் தன் முத்திரையைப் பதித்துள்ள பேராசிரியர் விபுலானந்தரைப் பற்றி மேலும் பல கோணங்களில் ஆவணப் படங்கள் எடுக்க முன்வருவோருக்கு இந்தப் படம் ஒரு முன்னோடியாய் நிச்சயம் அமைந்து, வழிகாட்டும். 


படத்தின் இறுதியில் பாரதிதாசன் அடிகளைப் பற்றிப் பாடிய வெண்பாக்கள் மோகனம், ஹம்ஸாநந்தி ராகங்களில் இசைக்கப் படும்போது நம் உள்ளமும்,மெய்யும் புல்லரிக்கின்றன.
அவ்விரு வெண்பாக்களின் ஒன்றான,

ஆங்கிலமும் ஆரியமும்
   நன்கே அறிந்திருந்தும்
பாங்கிருக்கும் பைந்தமிழ்க்கே
   தன்வாழ்வை ஓங்கிருக்கச்
செய்விபு லானந்த
   செம்மைத் துறவியினைக்
கைகுவித்து வாழ்த்தும்என் வாய்



என்ற பாரதிதாசனின் வாழ்த்தைப் பின்பற்றி, நானும் இந்த ஆவணப் படத்தைத் தயாரித்த அனைவரையும்,  கைகுவித்து வாழ்த்துகிறேன்.
24-06-2018           
===
 தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி!

மு.இளங்கோவன் சொன்னது…

தங்கள் அன்புக்கு நன்றியன்