23. கராச்சி விசாரணை
கல்கி
கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி 2 ) என்ற நூலில் வந்த 23-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்த நூல் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே உள்ளன ]
===
மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி மகாத்மா எழுதிய கட்டுரையில், "அலி சகோதரர்கள் இணை பிரியாத இரட்டையர்கள். அவர்களைப் பிரித்து வைக்க முடியாது. ஆகையால் முகம்மதலியைக் கைது செய்தவர்கள் ஷவுகத் அலியையும் கைது செய்தே தீர்வார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை என்பது இரண்டு நாளைக்குள் தெரிய வந்தது.
மௌலானா முகம்மதலியை விசாகப்பட்டினம் மாஜிஸ்ட்ரேட் கைது செய்தது ஒரு காரணார்த்தமாகத்தான். 17-ம் தேதியன்று மேற்படி 107,108 பிரிவு ஜாமீன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. அந்த க்ஷணமே கராச்சியிலிருந்து வந்திருந்த வாரண்டின்படி மௌலானா முகம்மதலியை மீண்டும் கைது செய்து கராச்சிக்குக் கொண்டு போனார்கள்.
அதே தேதிகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்த மௌலானா ஷவுகத் அலி, டாக்டர் ஸைபுடீன் கிச்லூ, பீர்குலாம் முஜாதீக், மௌலானா நிஸார் ஆமத், மௌலானா ஹுசேன் ஆமத். ஜகத்குரு சாரதாபீட சங்கராச்சாரியார் ஆகியவர்களையும் கைது செய்தார்கள். எல்லாரையும் கராச்சிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
இப்படி அவர்களை யெல்லாம் கராச்சிக்குக் கொண்டு போனதின் காரணம் என்னவென்றால், ஜூலை மாதம் 8ம் தேதி கராச்சியில் அகில இந்திய கிலாபத் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். இந்த மகாநாட்டில், அதுவரை காங்கிரஸில் செய்திருந்த தீர்மானங்களையெல்லாம் விடக் கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேறியது.
"கிலாபத் விஷயமாக பிரிட்டிஷ் சர்க்கார் நீதி வழங்காதபடியால் இனிமேல் மதப் பற்றுள்ள எந்த முஸ்லிமும் சைன் யத்தில் சேவை செய்வதும், சைன்யத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு உதவி செய்வதும் மார்க்க விரோதமாகும்" என்பது அந்தத் தீர்மானத்தின் கருத்து.
கல்கத்தாவிலும் நாகபுரியிலும் நிறைவேறிய ஒத்துழையாமைத் தீர்மானத்தில் சைன்ய சேவையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சைன்யத்தில் உள்ளவர்களை வேலையை விடும்படி செய்வதற்குக் காலம் வரவில்லை என்று கருதப்பட்டது. அது மட்டுமல்ல. மற்ற ஒத்துழையாமைத் திட்டங்களையெல்லாம் பிரிட்டிஷ் சர்க்கார் ஒருவேளை அலட்சியமாகக் கருதி விட்டு வைக்கலாம். ஆனால் சைன்ய சேவையை விட வேண்டும் என்று சொன்னால் உடனே மிகக் கடுமையான அடக்குமுறை தொடங்குவார்கள். அதனுடைய பலாபலன்கள் இப்படியிருக்கு மென்று ஊகிப்பது கடினம். ஆகையால் அதைக் கடைசித் திட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மாவும் மற்றத் தலைவர்களும் கருதினார்கள்.
ஆனால் முஸ்லிம் தலைவர்கள் அவ்வளவு தூரம் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. "முஸ்லிம்கள் இனிமேல் பிரிட்டிஷ் சைன்யத்தில் சேர்ந்து சேவை செய்வது பாவம்" என்று கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அத்துடன் நின்றுவிட வில்லை. அச்சமயத்தில் அங்கோராவில் முஸ்தபா கமால் பாட்சாவின் தலைமையில் புதிய துருக்கி அரசாங்கம் ஏற்பட்டிருந்தது. அந்த அங்கோரா அரசாங்கத்துடன் பிரிட்டிஷ் போர் தொடுத்தால், "இந்திய முஸ்லிம்கள் உடனே சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கி இந்தியாவில் பூரண சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்" என்றும் ஒரு தீர்மானம் நிறைவேறியது.
இந்தத் தீர்மானங்கள் நிறைவேறிய கராச்சி மகாநாட்டுக்கு மௌலானா முகம்மதலி தலைமை வகித்தார். தமது தலைமை யுரையில் மேலே கூறிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். மௌலானா ஷவுகத் அலி முதலியவர்கள் மேற்படி தீர்மானங்களை ஆதரித்துப் பேசினார்கள்.
இவ்விதம் இராஜத் துவேஷப் பிரசாரம் செய்த காரணத்துக்காகவே மேற் கூறிய ஏழு தலைவர்களும் பல இடங்களில் கைது செய்யப்பட்டுக் கராச்சியில் விசாரணைக்காகக் கொண்டு போகப்பட்டனர்.
காந்திஜி வால்ட்டேரில் மௌலானா முகம்மதலியைப் பிரிந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். மௌலானாவின் மனைவியான பீகம் முகம்மதலியும் மகாத்மாவுடன் சென்னைக்கு வந்தார். அலி சகோதரர்கள் மிக்க மத வைராக்கியம் உள்ளவர்கள். ஆகவே பீகம் முகம்மதலி இஸ்லாமிய வழக்கப்படி கோஷா முறையை அனுஷ்டித்தார். முகமூடி இல்லாமல் வெளியில் புறப்படுவதில்லை. அப்படிப்பட்ட கோஷாப் பெண்மணி தமது கணவர் தொடங்கிய வேலையைத் தாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கருதிய மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யலானார்.
சென்னை வந்து சேர்ந்ததும் காந்திஜிக்கு மௌலானா முகம்மதலி கராச்சித் தீர்மானம் காரணமாகக் கைதியானார் என்னும் செய்தி கிடைத்தது. அன்று மாலையில் சென்னைக் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டம். ஜல சமுத்திரத்தின் கரையில் ஜன சமுத்திரம் திரண்டிருந்தது. மகாத்மாவும் பீகம் முகம்மதலியும் கூட்டத்துக்கு வந்தார்கள். மக்களின் ஆவேசத்தையும் பரபரப்பையும் சொல்லி முடியாது. ஆரவாரம் கொஞ்சம் அடங்கிய பிறகு மகாத்மா காந்தி பேசினார். பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பொறியைப் போல் சுடர் விட்டது.
"மௌலானா முகம்மதலியை எந்தக் குற்றத்துக்காகக் கைது செய்தார்களோ அதே குற்றத்தை நான் இப்பொது செய்யப் போகிறேன்!" என்று காந்தி மகாத்மா கூறியதும் அங்கே திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்களுக்கும் ரோமாஞ்சலி உண்டாயிற்று.
கராச்சியில் மௌலானா முகம்மது அலி என்ன பிரசங்கம் செய்தாரோ, அதையே மகாத்மா காந்தி வார்த்தைக்கு வார்த்தை சரியாக அந்த மாபெருங் கூட்டத்தில் சொன்னார். கராச்சி தீர்மானங்களின் வாசகத்தையும் எடுத்துக் கூறினார். "மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நானும் செய்து விட்டேன். என்னையும் சர்க்கார் கைது செய்யட்டும்!" என்றார் காந்தி மகான்.
பொது மக்கள், "இதுவல்லவோ சிநேகம்? இதுவல்லவா சகோதர பாவம்!" என்று எண்ணி வியந்தார்கள். தம்முடைய அருமைச் சகோதரரும் சகாவுமான முகம்மது அலியை மகாத்மா காந்தி ஆதரித்து நின்ற மேன்மைக் குணம் மக்களைப் பரவசப் படுத்தியது.
பிறகு சென்னைக் கடற்கரையில் தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருந்த மலை போன்ற விதேசித் துணிகளுக்கு மகாத்மா தீ மூட்டினார். கூட்டத்திலிருந்த ஆயிரக் கணக்கான ஜனங்கள் தங்கள் மேலிருந்த விதேசித் துணிகளைக் கொண்டு வந்து தீயிலே போட்டார்கள். அத்தனை பெரிய துணிக்குவியலும் அரை மணி நேரத்தில் எரிந்து சாம்பராயிற்று.
சென்னைக் கடற்கரையில் மகாத்மா மேற்கண்டவாறு பேசிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்த தேசத் தலைவர்கள் "மௌலானா முகம்மதலி செய்த குற்றத்தை நாங்களும் செய்தே தீருவோம்!" என்று சொன்னார்கள்.
ஆகவே காந்திஜியும் மற்றும் ஐம்பது பிரபல காங்கிரஸ் தலைவர்களும் கூட்டுக் கையெழுத்துப் போட்டு அக்டோபர் மாதம் 4 - ஆம் தேதி ஒரு விக்ஞாபனத்தை வெளியிட்டார்கள். அக்டோபர் மாதம் 6 - ஆம் தேதி "யங் இந்தியா" வில் மேற்படி விக்ஞாபனமும் கையெழுத்துக்களும் பிரசுரிக்கப்பட்டன.
"அலி சகோதரர்களூம் மற்றவர்களும் எதற்காகக் கைது செய்யப் பட்டார்கள் என்பதைப் பம்பாய் சர்க்கார் 1921 - ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 15 - ஆம் தேதி வெளியிட்டுள்ளா அறிக்கையில் விளக்கியிருக்கிறார்கள்; மேற்படியார்கள் கைது செய்யப்பட்டதை உத்தேசித்து, கீழே கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்புவதாவது:-
ராணுவத்திலோ, சிவில் நிர்வாகத்திலோ கலந்து ஜனங்கள் சர்க்காருக்குத் தொண்டு செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தாராளமாக அபிப்பிராயம் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
அரசியலிலும், பொருளாதாரத் துறையிலும், தார்மீகத் துறையிலும் இந்தியா சீர்குலைந்திருப்பதற்குத் தற்போதுள்ள இந்தியா சர்க்காரே காரணமாகும். மக்களுடைய தேசீய அபிலாஷைகளை அடக்கி ஒடுக்குவதற்குப் போலீஸையும் ராணுவத்தையும் சர்க்கார் உபயோகித்திருக்கிறது. இதற்கு உதாரணமாக ரௌலட் சட்டக் கிளர்ச்சியைச் சொல்லலாம். இந்தியாவுக்கு ஒரு தீமையும் செய்தறியாத அராபியர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள் முதலியோருடைய சுதந்திரத்தை நசுக்குவதற்காக இந்திய ராணுவத்தையும் இந்திய சர்க்கார் உபயோகித்திருக்கிறது.
இத்தகைய சர்க்காரில் சிவில் உத்தியோகஸ்தராகவும் சேனையில் சிப்பாயாகவும் தொண்டு செய்வது தேசீய கௌரவத்திற்கே பங்கம் விளைவிப்பதாகும். ஆகையால், சர்க்காருடனுள்ள தொடர்பை அறவே ஒழித்து விட்டு, ஜீவனத்திற்கு வேறு ஏதாவது வழியைத் தேடிக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்திய சிப்பாயினுடையவும் சிவில் உத்தியோகஸ்தருடையவும் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.
(ஒப்பம்) எம்.கே.காந்தி அபுல்கலாம் ஆஸாத்; அஜ்மல்கான் (டில்லி; லஜபதிராய் (லாகூர்); மோதிலால் நேரு (அலஹாபாத்); சரோஜினி நாயுடு (பம்பாய்): அப்பாஸ் தயாப்ஜி, என்.ஸி. கேல்கர், வி.ஜே.படேல், வல்லபாய் படேல் (அஹமதாபாத்); எம்.ஆர்.ஜயகர் (பம்பாய்); டி.வி.கோகலே(பூனா); எஸ்.ஜீ.பேங்கர், ஜவாஹர்லால் நேரு (அலஹாபாத்); கங்காதர தேஷ்பாண்டே (பெல்காம்); லக்ஷ்மி தாஸ் தேர்ஸி, உமர் சோபானி, ஜம்னாலால் பஜாஜ், எம்.எஸ். ஆனே (அம்ரோதி); எஸ்.இ.ஸ்டோக்ஸ், கோட்கார் (சிம்லா); எம்.ஏ. அன்ஸாரி (டில்லி); கலிக்குஸ்ஸமான் (டில்லி); கே.எம். அப்துல் கபூர் (டில்லி); அப்துல் பாரி (லக்ஷ்மண்புரி); கிருஷ்ணாஜி நீல்கண்ட் (பெல்காம்); கி. இராஜகோபாலாச்சாரி (சென்னை); கொண்டா வெங்கடப்பையா (குண்டூர்); ஜி.ஹந்ஸர்வோத்தமராவ் (குண்டூர்); அகஸுயா ஸாராபாய், ஜீதேந்திரலால் பானர்ஜி, எம். ஹெச். கித்வாய் (டில்லி); சியாம் சுந்தர சக்கரவர்த்தி (கல்கத்தா); ராஜேந்திர பிரசாத் (பாட்னா); ஆஸாத் சோபானி, ஹஸரத் மோஹானி (கான்பூர்); மஹாதேவ் தேஸாய், பி.எப்.பரூச்சா, யாகூப் ஹஸன், பி.எஸ். முஞ்ஜே, ஜெயராம்தாஸ் தௌலத்ராம், எம்.ஆர். சோல்கர் (நாகபுரி); வி.வி. தர்தானே, எ.ஹெச், சித்திக் காத்ரி (பம்பாய்); கூடார் ராமச்சந்திர ராவ் (ஆந்திரா) மியா முகம்மது ஹாஜிஜான் முகம்மது சோட்டானி.
மேற்படி விக்ஞாபனத்தில் ஸ்ரீ. சி. ஆர். தாஸின் கையெழுத்து காணப்படாதது பலருக்கும் வியப்பை அளித்தது. தந்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதந்தான் அதற்குக் காரணம் என்று தெரியவந்தது. எனவே, ஸ்ரீ சித்தரஞ்சன தாஸின் கையெழுத்தும் பிற்பாடும் அந்த விக்ஞாபனத்தில் சேர்ந்தது.
அந்தப் புகழ்பெற்ற 1921 - ஆம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் முக்கிய துணைவர்களாக விளங்கிய தலைவர்கள் யார் யார் என்பதை மேற்படி விக்ஞாபனத்தின் கீழே வெளியாகியுள்ள கையெழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
டில்லியில் ஹக்கீம் அஜ்மல்கான் தலைமையில் கிலாபத் கமிட்டி கூடி சைன்யத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேறச் சொல்வது முஸ்லிம்களின் மதக் கடமை என்று தீர்மானம் செய்தது.
தேசமெங்கும் ஆயிரக் கணக்கான கூட்டங்களில் பிரசங்கிகள் மௌலானா முகம்மதலியின் கராச்சி பேச்சையொட்டிப் பேசினார்கள். மேடையிலிருந்து ஒரு பிரமுகர் அந்தப் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாகப் படிப்பதும் திரளான மக்கள் திரும்பிச் சொல்வதும் சர்வசாதாரணமாக நடக்கலாயிற்று.
இவ்வளவு கிளர்ச்சி தேசத்தில் நடந்து கொண்டிருக்கையில் கராச்சியில் மௌலானா முகம்மதலி மீதும் மற்ற அறுவர்மீதும் விசாரணை நடந்துகொண்டிருந்தது. அலி சகோதரர்களும் மற்ற முஸ்லிம் தலைவர்களும்"எங்கள் மதக் கடமையைச் செய்தோம். சர்க்கார் சட்டம் எப்படியிருந்தாலும் எங்களுக்கு அக்கரையில்லை" என்ற முறையில் கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
"கவலை வேண்டாம், அலி சகோதரர்கள் சின்னச் சிறையிலும் நாம் பெரிய சிறையிலும் இருக்கிறோம். இரண்டு சிறைக் கதவுகளையும் உடைத்து விடுதலை செய்யும் சக்தி நம் கையில் இருக்கிறது!" என்று காந்தி மகான் கூறினார்.
-----------------------------------------------------------
[ நன்றி: : http://www.projectmadurai.org/ ]

2 கருத்துகள்:
ஐயா தங்களிடம் ஆசிரியர் கல்கியைப் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.... உங்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது?
'சுந்தா' எழுதிய 'பொன்னியின் புதல்வர்' என்ற நூலைப் படியுங்கள். ஐயங்கள் விலகும்.உங்கள் மின்னஞ்சலை இங்கே எழுதினால் , தொடர்பு கொள்கிறேன்.
கருத்துரையிடுக