திங்கள், 24 அக்டோபர், 2016

மு.கதிரேசன் செட்டியார் - 1

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
பா.சு. ரமணன்


அக்டோபர் 24. பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நினைவு தினம்.
===========

தன்னலம் கருதாது சிவத்தொண்டும் தமிழ்த் தொண்டும் புரிந்தவர்களுள் தலையாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள் நகரத்தார்கள். ஆலயப் பணியோடு அறிவுக் கண் திறக்கும் தமிழ்ப் பணியும் ஆற்றிய அப்பெருமக்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்.

"பண்டிதர்கள் உலகிற் பலர் இருப்பினும் அவருள் நம் கதிரேசனார் மணி போலத் திகழ்கின்றார். ஆதலின் அறிஞர்களாகிய உங்கள் முன்னிலையில் இக்கதிரேசனார்க்கு யாம் பண்டிதமணி என்னும் i சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்" என்று மொழிந்து கதிரேசன் செட்டியாருக்கு அச்சிறப்புப் பெயரைச் சூட்டியவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

"என்னைப் பாராட்டிய முதற்புலவர் பண்டிதமணியே. அதன் பயனாகவே, அவர் தந்த ஊக்கத்தினாலேயே என்னால் "தசரதன் குறையும் கைகேயி நிறையும்' என்ற நூலை எழுத முடிந்தது" என்கிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார். இவ்வாறு தம் காலத்தே வாழ்ந்த தமிழறிஞர்கள் பலராலும் போற்றப்பட்ட கதிரேசன் செட்டியார், செட்டிநாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டி என்னும் சிற்றூரில் முத்துக்கருப்ப செட்டியாருக்கும், சிகப்பி ஆச்சிக்கும், அக்டோபர் 18, 1881ம் ஆண்டில் மகவாகத் தோன்றியவர். (இவ்வூர் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிறந்து வாழ்ந்த ஊர்) இவரது மூன்றாம் வயதில் இளம் பிள்ளை வாதம் தாக்கிற்று. அதனால் பிற சிறுவர்கள் போல் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை. ஏழாம் வயதில் அவரை அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஆனால் அதுவும் சுமார் ஏழு மாதங்களே நீடித்தது. திரைகடல் ஒடித் திரவியம் தேடுவதில்தான் அக்கால நகரத்தாரில் பலருக்கு ஆர்வம் இருந்ததே தவிர, படிப்பில் நாட்டமில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. அதனால் பண்டிதமணியின் திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு பாதியிலே நின்று போனது

இதைப் பற்றி பண்டிதமணி, "யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக
இருக்கும்பொழுது தான் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. '' இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன' என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே  புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடு ஒரு சில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. அவ்வாறு அரிதிற் கிடைத்த திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது" என்கிறார்.

இதிலிருந்தே பண்டிதமணியின் அறிவாற்றலையும், கற்றலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் அறியலாம். குடும்பச் சூழலால் அவர் பதினோராவது வயதில் வியாபார நிமித்தமாக இலங்கைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு மூன்று ஆண்டுகள் தங்கிப் பணியாற்றியவர், தந்தை இறந்துவிடவே தாய்நாட்டுக்குத் திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். ஆனால் மீண்டும் இளம்பிள்ளை வாதத்தால் அவரது உடல் மேலும் நலிவுற்றது. ஊன்றுகோலின் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உள்ளம் தளராது தாமே இலக்கிய நூல்களைப் பயில ஆரம்பித்தார்.

ஆனால் இலக்கண நூல்களைப் பயில்வது மிகக் கடினமாக இருந்தது. அந்நிலையில் முதுபெரும் புலவர் மதுரை அரசன் சண்முகனாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பண்டிதமணியின் மீது பேரன்பு பூண்ட அரசன் சண்முகனார், பண்டிதமணியின் இல்லத்திலேயே தங்கி அவருக்கு இலக்கணத்தில் இருந்த ஐயங்களைப் போக்கியருளினார். "இப்புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின" என்று குறிப்பிட்டிருக்கிறார் பண்டிதமணி.

தொடர்ந்து பல இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்றுத்தேர்ந்து சிறந்த புலவரானார் பண்டிதமணியார். சண்முகனாரின் மூலம் அக்காலத்தில் முதுபெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட மு. ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், உ.வே.சாமிநாதையர் போன்ற அறிஞர்களின் நட்புக் கிடைத்தது. அறிஞர்களது தொடர்பால் பண்டிதமணியின் இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. சைவ சமய சாத்திரங்களைப் பயில வேண்டும் என்ற பெரு விருப்பமும் அவருக்கு உண்டானது. அவற்றை தாமே பயில்வதை விட, சமயத்துறையில் வல்ல பெரியார் ஒருவர் மூலம் பயிலுதல் சிறப்புத் தரும் என்று கருதினார். அப்போது காரைக்குடியில் வாழ்ந்த சிறந்த சிவபக்தரும், சைவ அறிஞருமான சொக்கலிங்கையா என்பவரை நாடி, அவரிடம் இரண்டு ஆண்டுகள் சைவ சாத்திரங்களைப் பயின்றார்.

இதே சமயத்தில் பண்டிதமணிக்கு வடமொழியும், வடநூல் சாத்திரங்களும் பயிலும் எண்ணம் தோன்றியது. ஆகவே அக்காலத்தில் சிறந்த வடமொழி வல்லுநராக விளங்கிய தருவை நாராயண சாஸ்திரியாரை அணுகித் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். சுமார் ஐந்து ஆண்டுகள் அர்த்தசாஸ்திரம், விதுர நீதி, சுக்ரநீதி போன்ற சாத்திர நூல்களையும், பாணினி போன்ற இலக்கணங்களையும், சாகுந்தலம், மேகதூதம் போன்ற காவியங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

பண்டிதமணியின் அறிவும் திறனும் கண்டு தமிழறிஞர்கள் பலரும் அவரிடம் நட்பு கொண்டனர். மகாவித்வான் ரா. ராகவையங்கார் அவரை நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கி நடத்திவந்த வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் அறிமுகப்படுத்தினார். தேவர், மதுரை தமிழ்ச் சங்கத்தை நடத்தும் புலவர்களுள் ஒருவராகப் பண்டிதமணியையும் ஏற்றுக் கொண்டார். பண்டிதமணியும் தம் உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். அதேசமயம் அறிவார்ந்த சான்றோர்கள் நிரம்பிய தமது செட்டிநாட்டுப் பகுதியிலும் இதே போன்றதொரு சங்கம் இருந்தால், அது மேலும் அறிவைப் பெருக்க்கவும், தமிழையும், சமயத்தையும் வளர்க்கவும் உதவுமே என்று நினைத்தார்.

ஊருக்குச் செல்லும் போதெல்லாம் மேலைச்சிவபுரி வள்ளல் வ. பழ.சா. பழநியப்பச் செட்டியாரைக் கண்டு இலக்கியம், சமயம், சாத்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது பண்டிதமணியின் வழக்கம். அவ்வாறு பேசும்போதெல்லாம் நம் பகுதியிலும் ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதன் மூலம் தமிழையும், சைவத்தையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார். இருவரது முயற்சியால் 1909ம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபை நிறுவப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசன் சண்முகனார் தலைமை தாங்கினார். மு. ரா. கந்தசாமிக் கவிராயர், சொ. வேற்சாமிக் கவிராயர் உட்படப் பல பெரும்புலவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். சபையின் கிளை நிலையமாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை' நிறுவப்பட்டது.

"ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக  நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸ்ம்ஸ்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும், கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப் பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும், லெளகீக இலக்கண, இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்" - என்பது மேலைச்சிவபுரி. சன்மார்க்க சபையின் நோக்கமாக வரையறை செய்யப்பட்டது. திங்கள்  தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. கணேசர் செந்தமிழ்க் கலாசாலையே பிற்காலத்தில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்று பெயர் பெற்றதுடன், தமிழகத்தின் தென்பகுதியில், வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி என்ற சிறப்பையும் பெற்றது.

இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றிய பண்டிதமணியார், தமது முப்பத்தியிரண்டாம் அகவையில் தனது அத்தை மகள் மீனாட்சியை மணந்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்களும், மூன்று பெண்களும் பிறந்தனர். குடும்பப் பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தமது இலக்கிய ஆர்வத்திற்குத் தடையேற்படுத்தா வண்ணம் தமது வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டார். 

சொற்பொழிவு, நூல் பதிப்பித்தல், புதுநூல் உருவாக்கம், மொழிபெயர்ப்பு எனத் தமிழ் இலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆர்வம் காட்டினார். வடமொழியிலிருந்து சிறந்த நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்த முன்னோடி பண்டிதமணியார் என்பது குறிப்பிடத்தக்கது. மிருச்சகடிகத்தை மண்ணியல் சிறுதேராகவும், கெளடிலீயம் என்னும் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்தை பொருணூலாகவும், சுக்கிர நீதி, சுலோசனை, உதயண சரிதம், மாலதி மாதவம், பிரதாப ருத்ரீயம் போன்ற நூல்களையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். தவிர இலக்கியக் கட்டுரைகள், சமயக்கட்டுரைகள், திருவாசக உரைக் கட்டுரையான கதிர்மணி விளக்கம் போன்ற உரைநடைக் கோவை நூல்களைப் படைத்திருப்பதுடன், தன் பொறுப்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழிசைப் பாடல் வரிசை போன்ற நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.

இவரது பெருமையையும் அறிவுத்திறனையும் கண்ட செட்டிநாட்டு அரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், தனது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவரைத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்குமாறு வேண்டினார். முதலில் மறுத்தாலும் பின்னர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பண்டிதமணியார் சுமார் 12 ஆண்டுகாலம் அக்கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும் பணியாற்றினா "ஏழு மாதங்கூடப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருந்து, தமிழ்ப்பணி ஆற்றிய தனிச்சிறப்பு இவர்க்கு உரியது. முயற்சியும் உறுதியும் இருக்குமானால் உடல் ஊனமுற்றவர்களும் உயர்நிலையை அடைய இயலும் என்பதற்குக் கதிரேசனாரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும்" என்கிறார் தமிழறிஞர் சோமலெ தனது பண்டிதமணி என்னும் நூலில்,

அ. சிதம்பரநாதன் செட்டியார், டாக்டர் வ.சுப. மாணிக்கம் போன்ற பல தமிழறிஞர்கள் பண்டிதமணியாரின் மாணவர்கள் என்பது நினைவுகூரத் தக்கது. "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பண்டிதமணிக்கு சிறப்பான ஓர் இடம் உண்டு" என்கிறார் டாக்டர் வ.சுப. மாணிக்கம்.

சைவ சமயத்தின் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசகக் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி. கலியான சுந்தர முதலியார், சொ. முருகப்பச் செட்டியார் போன்ற தமிழறிஞர்கள் பண்டிதமணியின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்ததுடன் அவரது சங்கப் பணிகளிலும் ஆர்வம் காட்டினர்.  'மகாமகோபாத்தியாயர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் என்றால் தமிழ்நாட்டில் அழுதபிள்ளை வாய் மூடாது. அது பாட்டுக்கு அழுது கொண்டிருக்கும். ஆனால் தமிழ்ப் புலவர்கள் கூட்டங்களில் இப்பெயரைச் சொன்ன மாத்திரத்தில் மரியாதைக்கு அறிகுறியாக அமைதி நிலவும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் கல்கி. பண்டிதமணியின் தமிழ்ச்சேவையையும், சமயப் பணியையும் பாராட்டி ஆங்கிலேயே அரசு அவருக்கு மகாமகோபாத்தியாய என்ற பட்டத்தை வழங்கியது. இது தவிர சைவ சித்தாந்த வித்தகர், முதுபெரும் புலவர், தமிழ் ஞாயிறு என பல்வேறு பட்டங்கள் பெற்று தமிழுக்காகவும், தமிழ்ச் சமய வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த பண்டிதமணியார் அக்டோபர் 24, 1953 அன்று 73ம் வயதில் காலமானார்.

கடந்த ஆண்டு அவர் தோற்றுவித்த சன்மார்க்க சபையின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன், பண்டிதமணியின் எழுத்துக்களையும் நாட்டுடைமையாக்கி தமிழக அரசு அவருக்கு கெளரவம் சேர்த்தது. தமிழ், வடமொழி, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் கொண்டு, அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த முன்னோடிகளுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை.

(நன்றி. இந்திய இலக்கியச் சிற்பிகள் - பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு)


[ நன்றி: தென்றல், http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6203

தொடர்புள்ள பதிவுகள்:

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

பாடலும், படமும் - 14

அரவத்திற்கு அபயமளித்த அரி
பதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மதித்தவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லாதொன் றேத்தாதென் நா.
              ( நான்முகன் திருவந்தாதி – திருமழிசை ஆழ்வார் )

பொழிப்புரை:  தன் இயல்பான எதிரியான கருடனுக்கு அஞ்சி, பாயும் அலைகளோடு கூடிய நீருடைய கடல்போலே குளிர்ந்த திருப்படுக்கையைப் புகலிடமாக நம்பி வந்து பற்றின ஒளிபொருந்திய பாம்பாகிய சுமுகனை  ஆதரித்து, அந்த ( எதிரியான) கருடனுடைய வலிமை பொருந்திய உடலிலே ஏறவிட்டவனும், சிறந்த திவ்ய மேனியுடையவனான சர்வேஸ்வரனை அன்றி வேறொருவரை என் நா துதி செய்யாது.

கருடனுக்கு அஞ்சிவந்து அடிபணிந்த சுமுகன் என்ற பாம்பிற்கு விஷ்ணு அபயமளித்த வரலாறு இப்பாடலில் சொல்லப் படுகிறது .

திருமால் இந்திரனின் தம்பி, உபேந்திரனாய் அவதரித்தபோது நடந்த சம்பவம் இது. கருடன் அவருக்கு வாகனமாய் இருந்தான். இந்திரனின் தேர்ச்சாரதி, மாதலி, தன் மகளைச் சுமுகன் என்ற நாகலோக இளவரசனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். பாம்பினத்திற்கு எதிரியான கருடனுக்குச் சுமுகன் இரையாவானோ என்று பயந்து, மாதலி இந்திரனின் உதவியை நாடினான். இந்திரன் சுமுகனுக்கு நீண்ட ஆயுள் கிட்ட ஆசீர்வதித்தான். கருடன், திருமாலின் வாகனம் என்ற பெருமையில் சிறிது கர்வம் அடைந்திருந்த தருணம் அது. தன் இயல்பான இரையான ஒரு பாம்பைத் தன்னுணவாகக் கொள்ளவிடாமல் தடுப்பதை ஆட்சேபித்தான். மேலும் திருமாலுக்கே சவாலாய், திருமால் வல்லவரா? அல்லது திருமாலையே தாங்கும் தான் வல்லவனா? என்று வினவினான் கருடன். விஷ்ணு அப்போது தன் வலது கையைக் கருடன் மேல் வைத்து, அந்த பாரத்தைத் தூக்கச் சொன்னார். அந்த எடையைத் தாங்கமுடியாமல் தவித்த கருடன் விஷ்ணுவின் மன்னிப்பைக் கோரினான். இச்சமயத்தில், கருடனுக்கு அஞ்சின சுமுகன் பாம்பின் வடிவத்தில் விஷ்ணுவின் அடியில் சரணடைந்திருந்தான். விஷ்ணு சுமுகனைக் கருடனின் உடலில் ஏற்றிவிட்டு, கருடனைச் சுமுகனுடன் நட்புடன் இருக்கப் பணித்தார். கருடனும் அப்படியே நடந்து கொண்டான்.   

இந்தச் சம்பவத்தை அழகாக ஓவியத்தில் வடித்துள்ளார் வினு.


[ நன்றி: கல்கி தீபாவளி மலர், 1970 ; http://www.indian-heritage.org/  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 22 அக்டோபர், 2016

ரா.பி.சேதுப்பிள்ளை -3

மிதிலைக் காட்சி
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை

ரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடைக்கு இதோ ஒரு காட்டு!
=====================

மாலைப் பொழுதில் மெல்லிய தென்றல் மிதிலை மாநகரில் வீசுகின்றது. மாடங்களில் அமைந்த மணிப் பூங்கொடிகள் அசைந்தாடுகின்றன. அரச வீதியின் இருமருங்கும் வரிசையின் விளங்கிய வீடுகளினின்றும் எழுந்த வீணையொலி வானின் வழியே தவழ்ந்து வருகின்றது.முத்துப்போற்பூத்து, மரகதம்போற் காய்த்து, பவளம்போற் பழுத்து இலங்கும் கமுகு மரத்திற் கட்டிய ஊஞ்சலில் பருவ மங்கையர் பாடி ஆடுகின்றார். பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்துப் பாவையர் விளையாடுகின்றார். அரங்குகளில் நடனமாதர் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்லக் களிநடம் புரிகின்றார். இத்தகைய இன்பம் நிறைந்த அணிவீதியில் கோமுனிவர் முன்னே செல்கின்றார்.மஞ்செனத் திரண்ட மேனியும் கஞ்சமொத் தலர்ந்த கண்களும் வாய்ந்த இராமன் அவர் பின்னே செல்கின்றான். பொன் மேனி வாய்ந்த இலக்குவன் அவன் பின்னே போகின்றான்.
                                                                      1
அப்பெரு வீதியில் அமைந்த கன்னிமாடத்தின் மேடையிலே மிதிலை மன்னன் மகளாய சீதை மெல்லிய பூங்காற்றின் இனிமையை நுகர்ந்து இன்புறுகின்றாள். அருகே அமைந்த அழகிய துறையில் அன்னம் பெடையோடு ஆடக் கண்டு களிக்கின்றாள். அந்நிலையில் கன்னிமாடத்தின் மருங்கே செல்லும் கமலக்கண்ணன் மேடையிலே இலங்கும் மின்னொளியை நோக்குகின்றான். பருவமங்கையும் எதிர் நோக்குகின்றாள். இருவர் கண்நோக்கும் இசைகின்றன; காமனும் ஒரு சரம் கருத்துற எய்கின்றான். பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணிப்புற்ற இராமன், காதலை மனத்திற் கரந்து, வீதியின் வழியே சென்று மறைகின்றான்.

சீதையின் கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறுபிரை யெனப் பரவுகின்றது. வீதிவாய்க் கண்ட வீரனது கோலத்தைத் தன் உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கின்றாள்.

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மையல் நோயால் நையலுறுகின்றாள். அகத்தில் நிறைந்து நின்ற அஞ்சன வண்ணத்தை அந்திமாலையிற் கண்டு நெஞ்சம் தளர்கின்றாள். இராப் பொழுதில் எங்கும் அமைதி நிலவுகின்றது. உறக்கமின்றி வாடி வருந்துகின்றாள். அருகிருந்த சோலையில் ஓர் அன்றிற் பறவை அரற்றுகின்றது. துணையின் பிரிவாற்றாது அரற்றிய பறவையின் குரல் சீதையின் காதலைக் கிளருகின்றது. அப்போது மங்கை அக் குரலெழுந்த திசையை நோக்கி,

வெளிநின் றவரோ போய்மறைந்தார் 
  விலக்க ஒருவர் தமைக்காணேன் 
எளியள் பெண்என் றிரங்காதே 
  எல்லி யாமத் திருளூடே 
ஒளியம் பெய்யும் மன்மதனார் 
  உனக்கிம் மாய முரைத்தாரோ 
அளியன் செய்த தீவினையே 
  அன்றி லாகி வந்தாயோ' 

என்று பழிக்கின்றாள். அந்நிலையில் வெண்திங்கள் வானத்திற் கதிர் வீசி எழுகின்றது. சீதையின் காதல் மேன்மேலும் பொங்குகின்றது. கரு நெருப்பாய்த் தோன்றிய இருளின் இடையே எழுந்த வெண்ணெருப்பே என்று வெம்மை விளைத்த விண்மதியை வெறுக்கின்றாள். அடியுண்ட மயில் போல் அமளியிற் குழைந்து விழுகின்றாள். இராப் பொழுது இவ்வாறு கழித்தொழிகின்றது. காலையில் எழுந்த கதிரவன் ஒளியால் கன்னிமாடத்தினருகே அமைந்த பொய்கையில் செங்கமலங்கள் இதழ் விரிந்து மலர்கின்றன. இரவு முழுவதும் கண்ணுறங்காது வருந்திய சீதை சிறிது களைப்பாறுமாறு அக் கமலப் பொய்கையின் அருகே செல்கின்றாள்.

 ஆண்டு மலர்ந்து நின்ற செந்தாமரை மலர்களில் தன் காதலனது கண்ணின் நிறத்தைக் காண்கின்றாள். அம்மலர்களைச் சூழ்ந்து படர்ந்திருந்த தாமரை யிலைகளில் தன் அன்பனது மேனியின் நிறத்தைக் காண்கின்றாள். கண்ணுளே நின்ற காதலனது கண்ணின் நிறமும் மேனியின் வண்ணமும் காட்டி ஒருவாறு மனவாட்டம் தீர்த்த கமலப் பொய்கையை நோக்கி,

பெண்இவண் உற்ற தென்னும் 
  பெருமையால் அருமை யான 
வண்ணமும் இலைக ளாலே 
  காட்டலால் வாட்டத் திர்ந்தேன் 
தண்ணறுங் கமலங் காள்! என் 
  தளிர்நிற முண்ட கண்ணின் 
உண்ணிறம் காட்டி நீர் என் 
  உயிர்தர உலாவினீரே!’ 

என்று முறையிடுகின்றாள்.
                                                                       2
மிதிலை மாநகர் வீதியில் நடந்து சென்ற மூவரும் மன்னன் மாளிகையை அடைந்து தனித்தனியே கண்ணுறங்கச் செல்கின்றார்கள். கன்னிமாடத்திற் கண்ட மயிலுடைச் சாயலாளை மனத்திடை வைத்த நம்பியின் கண்ணிலும் கருத்திலும் அக் கன்னியே இலங்குகின்றாள். யாரும் யாவையும் இனி துறங்கும் இராப்பொழுது முழுவதும் நெடுந் துயரால் நலிகின்றான். அவன் காணும் பொருளெலாம் அவள் பொன்னுருவாகின்றன. அந்நிலையில் நம்பியின் உள்ளத்தில் ஒர் ஐயம் பிறக்கின்றது. மாடத்திற் கண்ட மங்கை தான் காதலித்தற்குரிய கன்னியோ அல்லளோ என்று திகைக்கின்றான். அல்லளாயின் எல்லையற்றதன் காதல் என்னாகும் என் றேங்குகின்றான். சிறிது சிந்தனையில் ஆழ்கின்றான்.' என் உள்ளம் நல்வழியிற் செல்லுமே யல்லாது அல்வழியிற் செல்லாது. ஆதலால் என் மனம் பற்றிய மங்கை யான் காதலித்தற்குரிய கன்னியேயாதல் வேண்டும் என்று தடுமாறும் உள்ளத்தைக் தேற்றுகின்றான். பொழுது புலர்ந்ததும் முனிவரும் மைந்தரும் நீராடி நியமம் முடித்து மிதிலை மன்னனது வேள்விச் சாலையை அடைகின்றார்கள்.

தன் வேள்வியைச் சிறப்பிக்க வந்த தவமுனிவனை மிதிலை மன்னன் உரிய முறையில் வரவேற்கின்றான். மூவரும் முறையாக அமர்ந்த பின்னர் மைந்தர் இருவரையும் மன்னன் மனமகிழ்ந்து பார்க்கின்றான். அவர் முகத்தின் அழகினைக் கண்ணால் முகந்து பருகுகின்றான். அவர் யாரென்று முனிவரிடம் வினயமாக வினவுகின்றான். ”அரசே இவர் விருந்தினர்; உன் வேள்வி காண வந்தார்; வில்லும் காண்பார்; பெருந்தகைமைத் தசரதன் தன் புதல்வர்”  என முனிவர் மாற்ற முரைக்கின்றார். அவர் கருத்தறிந்த மன்னன் அகமகிழ்ந்து சீதையின் மணவில்லை எடுத்துவரப் பணிக்கின்றான். மலைபோன்ற வில் மைந்தர் முன்னே வருகின்றது. அவ்வில்லின் தன்மையையும் அதனை வளைக்கும் திறலோன் அடையும் பரிசின் .பெருமையையும் சதானந்த முனிவன் விரித்துரைத்து,

அன்றுமுதல் இன்றளவும் ஆரும்.அந்தச் சிலையருகு
சென்றுமிலர் போயொளித்தார் தேர்வேந்தர் திரிந்துமிலர்
என்றுமினி மணமுமிலை என்றிருந்தேம் இவனேற்றின்
நன்றுமலர்க் குழற்சிதை நலம்பழுதா காது'

என்கின்றான். எல்லாமறிந்து கோமுனிவர் சடைமுடி துளக்கி இராமன் திருமுகத்தை நோக்குகின்றார். குறிப்பிற் குறிப்புணரும் வீரன், முனிவர் நினைந்தவெல்லாம் நினைந்து, நெடுஞ்சிலையை அனைவரும் அசைவற்றுக் கண்ணிமையாது நோக்குகின்றார். மலையெனக் கிடந்த சிலையை வீரன் மாலை போல் எடுக்கக் காண்கின்றார். இற்ற பேரோசை கேட்கின்றார். மாநிலம் நடுங்க முறிந்து விழுந்த சிலை கண்டு மண்ணவர் கண்மாரி பொழிகின்றார். விண்ணவர் பூமாரி சொரிகின்றார்.


                                                      3.
மணவில்லை வீரன் இறுத்தான் என்னும் செய்தியைச் சீதையிடம் அறிவிக்குமாறு நீலமாலை யென்னும் தோழி விரைந்தோடிச் செல்கின்றாள். ஆடையும் அணிகளும் அலைந்து குலையக் கன்னிமாடத்தை யடைந்த நீலமாலை, வழக்கம் போல் அடிபணிந்து அடங்கி நில்லாது, அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடுகின்றாள். பாடுகின்றாள். மதுவுண்டவள் போல் களித்தாடும் மாலையை நோக்கி, 'கந்தரி, என்ன நிகழ்ந்தது, சொல்' எனச் சீதை வினவுகின்றாள். வில்லொடிந்த செய்தியை நேராகக் கூறாது, நீலமாலை நெடுங்கதை நிகழ்த்துகின்றாள். 'மாதரசி, தசரதன் என்னும் பெயர் வாய்ந்த மன்னன் ஒருவன் உள்ளான்; அவன் கரி, பரி, தேர், காலாள் என்னும் நால்வகைச் சேனையுடையான்; சிறந்த கல்வி கேள்வியுடையான் நீதிவழுவாத நிருபன். மாரி போல் வழங்கும் வள்ளல். அன்னவன் மைந்தன் அனங்கனையும் வெல்லும் அழகுடையான்; மரா மரம் போல் வலிய தோளுடையான்; திருமாலின் குறியுடையான். இராமன் என்னும் பெயருடையான். அவன் தம்பியோடும் முனிவரோடும் நம் பதி வந்தெய்தினான். திரிபுரமெரித்த புனிதன் எடுத்த வரிசிலையைக் காண விரும்பினான். வில்லை எடுத்து வருமாறு நம் மன்னன் பணித்தான். அது வந்தடைந்தது. முன் பழகியவன் போல் நொடிப் பொழுதில் அதனை எடுத்தான். வளைத்தான். கண்டோர் நடுங்குற வரிசிலை முறிந்து வீழ்ந்தது” என்று சொல்லி முடிக்கின்றாள்.இவ்வாறு நீலமாலை நெடுங்கதை நிகழ்த்தும் பொழுது சீதையின் மனம் ஊசலாடுகின்றது. முனிவனோடும் தம்பியோடும் போந்த தசரத ராமன் மணவில்லை இறுத்தான் என்று நீலமாலை கூறுகின்றாள். ” வில்லை வளைக்கும் திறல் வாய்ந்த வீரனுக்கு என்னை மணஞ்செய்து கொடுப்பதாக வாய்மை தவறாத மன்னன் வாக்களித்துள்ளான். இன்று வில்லை யிறுத்த வீரன் நான் வீதிவாய்க் கண்டு காதலித்த தலைமகனோ? அன்றி வேறொருவனோ? முனிவனோடு வந்த மேக வண்ணன், தாமரைக் கண்ணன், சிலையை ஒடித்தான் என்று தோழி கூறினாள். ஆம், நான் கண்ட காதலனே அவன்!” என்று உள்ளம் தேறி உடல் பூரிக்கின்றாள். ” ஒரு கால் இவ் அடையாளம் எல்லாம் அமைந்த வேறொரு வீரன் வில்லை ஒடித்திருப்பானோ? அவன் வேறு, இவன் வேறு என்றால் என் செய்வேன்? நான் வீதியிற் கண்ட காதலனும் வில்லை யொடித்த வீரனும் ஒருவனே யெனில் அவனை மணம் புரிவேன்; இன்றேல் ஆவி துறப்பேன்! “ என்று உறுதி கொள்கின்றாள்.
                                                                  4
வில்லை யொடித்தமையால் மிதிலை மன்னன் மங்கையை மணத்தற்குரியனாய இராமன் மாளிகையில் விருந்தின னாயிருக்கின்றான். மண மகனாக அனைவராலும் மதிக்கப்படுகின்றான். எனினும் அவன் உள்ளம் அமைதியுறவில்லை; வில்லிறுத்ததன் பயனாகப் பெற்ற மங்கை, மேடையிலே கண்ட மாதோ, அல்லளோ என்னும் ஐயத்தால் அலமருகின்றது. அம் மங்கையை நேராகக் கண்டாலன்றி ஐயம் தீருமாறில்லை எனக் கருதி அவ்வேளையை எதிர்பார்க்கின்றான். திருமணத்தைச் சிறப்பித்தற்குரிய அரசரும் பிறரும் மிதிலையில் வந்து நிறைகின்றார்கள். தசரத மன்னன், மிதிலையர்கோன் அழைப்பிற்கிணங்க, நால்வகைச் சேனையோடும் உற்றார் உறவினரோடும் எழுந்து வருகின்றான். கோசலநாட்டு வேந்தனை மிதிலை வேந்தன் அன்புடன் வரவேற்கின்றான். இருபெரு வேந்தரும், குறுநில மன்னரும், அருந்தவ முனிவரும் அரச சபையில் நிறைத்திருக்கிறார்கள்.

சீதையை அலங்கரித்துச் சபைக்கு அழைத்துவருமாறு மிதிலை மன்னன் பணிக்கின்றான். இயற்கை யழகு வாய்ந்த சீதையை நல்லணிகளால் அழகு செய்து தோழியர் அழைத்து வருகின்றார்கள். அன்னமும் அரம்பையரும் நாண அழகுற நடந்து சீதை மணி மன்றத்தினுள்ளே வருகின்றாள். அங்கு நிறைந்திருந்த மாந்தர் விழித்த கண்ணிமையாது நோக்குகின்றார். வில்லை யிறுத்த வீரன் மங்கையைக் காண்கின்றான். தான் முன்னமே கண்டு காதலித்த கன்னியே அவள் என்றறிந்து உளங் குளிர்ந்து விம்முகின்றான். திருமகளுக்குரிய திருமாலே தலைமகனாக வந்தான் என்று வசிட்டமா முனிவர் வாயார வாழ்த்துகின்றார். ”நலமெலாம் ஒருங்கேயமைந்த இந்நங்கை பரிசென்றால் இராமன் இச்சிலையை மட்டுமோ ஒடிப்பான்? ஏழு மலையையும் தகர்ப்பானே”  என்று கோசிக முனிவர் இறுமாந்திருக்கின்றார். அங்கிருந்த குறுநில மன்னர் முதலாயினோர் கைகூப்பித் தொழுகின்றார்கள். சீதை அழகுற நடந்து தாதையருகில் இட்ட தனியாசனத்தில் அமர்கின்றாள்.

மன்றத்தின் நடுவே யமர்ந்தும் சீதையின் மனத்தில் நிகழ்ந்த ஐயம் தீரவில்லை. வில்லிறுத்த வீரனை நேராகக் கண்டு ஐயத்தை அகற்ற ஆசைப்படுகின்றாள். அவ் வாசையை நாணம் இடைநின்று தடைசெய்கின்றது. கண்ணெடுத்துப் பார்க்குமாறு உந்தும் காதலைப் பெண்மைக்குரிய நாணம் எதிர்த்து அடக்குகின்றது. ஆசையும் அழிவுறாது பெண்மையும் வசையுறாது கடைக்கண்ணால் நோக்குதல் சாலும் என்றெண்ணுகின்றாள். நடந்து வருகையில் நிலை குலைந்திருந்த கை வளைகளைத் திருத்தத் தலைப்படுகின்றாள். சீதையின் திருமுகச் செவ்வியை நோக்கியிருந்த கண்களெல்லாம் அவள் கை வளை வரிசையில் ஈடுபடுகின்றன. அந்நிலையில் எதிரே இருந்த இராமனைக் கடைக்கண்ணால் கண்டு இன்புறுகின்றாள். கன்னிமாடத்தின் மேடையிலே நின்று கண்ட காதலனே வில்லை யொடித்த வீரன் என்று தெளிகின்றாள். கண் வழிப்புகுந்த தன் கருத்தில் உறைந்த காதலன் வடிவத்தைத் தன்னெதிரே அமர்ந்திருந்த இராமனிடம் கண்டு களிக்கின்றாள். இத்தகைய காதலர் இருவருக்கும் மறுநாட் காலையில் திருமணம் நிகழ்கின்றது.

மிதிலைக் காட்சியென்னும் காதலர் காட்சியில் கம்பர் அமைத்துள்ள நாடகக் கூறுகள் யாவருக்கும் நன்கு விளங்கும். உருவிலும் திருவிலும் ஒத்த தலைமகனும் தலைமகளும் ஊழ்வினைப் பயனால் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதலுறுதலும், அம் மையலை மனத்திலடக்கி நையலுறுதலும், பின்பு அதனை யறிந்த பெற்றோர் காதலர் இருவருக்கும் திருமணம் முடித்தலும் தமிழ்நாட்டுப் பழைய மணமுறையாகும். இன்னும் ஓர் ஆடவனைக் காட்சியாற் காதலுற்ற பின்னர் மற்றொருவனை மனத்திலும் தீண்டாத மாட்சி நிறையமைந்த மங்கையர்க்குரியதாகும். அறநெறி திறம்பாத அருங்காதலை மங்கையர் உயிரினும் உயர்வாகப் போற்றுவர். இத்தகைய அறநெறிக்குச் சான்றாக நின்ற சீதையின் காதலை ஒர் களவியல் நாடகமாக அமைத்தருளிய கம்பர் கவித்திறம் அறிந்து போற்றத் தக்கதாகும்.

[ நன்றி. கம்பன் கவிதை- நவயுகப்பிரசுராலயம் ;  கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995; ஓவியங்கள்: சக்தி விகடன்]

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சங்கீத சங்கதிகள் - 96

முத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -1

டி.எல்.வெங்கடராமய்யர் பாடாந்தரப்படி 
பி.ராஜமய்யர் ஸ்வரப்படுத்தியது.


அக்டோபர் 21. முத்துசாமி தீக்ஷிதரின் நினைவு தினம்.

’சுதேசமித்திரனில்’  1956 -இல் வந்த இரு கட்டுரைகள்:

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 20 அக்டோபர், 2016

ராஜம் கிருஷ்ணன் - 1

கள ஆய்வுத் துறையில் ஒரு நட்சத்திரம்! 
திருப்பூர் கிருஷ்ணன்


அக்டோபர் 20. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நினைவு தினம்.

====

வீட்டில் அமர்ந்தே குடும்பக் கதைகளைப் பலர் எழுதிவந்த கால கட்டத்தில், கள ஆய்வு இலக்கியம் என்ற புதிய மரபைத் தோற்றுவித்தவர் ராஜம் கிருஷ்ணன். தமிழ்ச் சமூகத்தில் ஆண்களுக்குள்ள பல வசதி வாய்ப்புகள் பெண்களுக்கில்லை. தனி நபராகப் பற்பல இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்துக் கள ஆய்வு இலக்கியத்தைப் படைக்க வேண்டியிருந்தது. ஆனால் அயராமல் அந்தப் பணியில் ஈடுபட்டார் அவர்.

பொறியியலாளரான கணவர் கிருஷ்ணன் பணிநிமித்தம் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் உடன்சென்ற அவர், அந்தந்தப் பிரதேச மக்களின் வாழ்வை நேரில் ஆராய்ந்தார். ஏராளமான ஏழை மக்களைப் பேட்டி கண்டார். கிடைத்த தகவல்களை உள்ளடக்கி, ஒரு கதையைப் புதிதாக சிருஷ்டித்தார். ஊடும் பாவும்போல கதையும் அதில் வரும் மாந்தர்களும் அவர் சேகரித்த தகவல்களும் பின்னிப் பிணைந்தன. அற்புதமான கள ஆய்வு இலக்கியம் தமிழில் ஒரு தனித்துறையாக வளரத் தொடங்கியது.

ஊட்டி மலைவாழ் படுகர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் குறிஞ்சித்தேன், கோவா விடுதலைப் போரை மையமாகக் கொண்ட வளைக்கரம், உப்பளத் தொழிலாளர்களின் பிரச்னைகளைப் பேசும் கரிப்பு மணிகள்”, தஞ்சை விவசாயிகளைப் பற்றிப் பேசும் சேற்றில் மனிதர்கள் என்றிப்படி அவரது ஒவ்வொரு நாவலும் தடம் பதித்தவை தான். வாழ்க்கை வரலாற்று வரிசையில் அவர் எழுதிய டாக்டர் ரங்காச்சாரியும் குறிப்பிடத்தக்கது. எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களால் தற்கால இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவர் அவர்.

தினமணி கதிரில், தினமணி முன்னாள் ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கன் கேட்டுக் கொண்டதன் பேரில் இரண்டு நாவல்களைத் தொடராக எழுதினார். ஒன்று பாதையில் பதிந்த அடிகள். இன்னொன்று  மண்ணகத்துப் பூந்துளிகள். ஒவியர் கோபுலு தம் எழுத்துகளுக்குச்  சித்திரம் வரைந்ததே இல்லை என  ஆதங்கப்பட்ட ராஜம் கிருஷ்ணன், கோபுலுவின் சித்திரங்களுடன் தம் எழுத்து தினமணிகதிரில் பிரசுரமானால் சிறப்பாயிருக்கும் எனக் கேட்டுக் கொண்டார். தாம் அவர் எழுத்துக்குச் சித்திரம் வரையாமல் போனது தற்செயலாக நேர்ந்ததுதான் என்று சொன்ன கோபுலு, அவர் எழுத்துக்கு ஓவியம் தீட்டுவது தனக்குக் கிடைத்த பாக்கியம் எனச் சொல்லி மகிழ்ச்சியுடன் ஓவியம் வரைந்தார். ராஜம் கிருஷ்ணனின் எண்ண ஓவியமும் கோபுலுவின் வண்ண ஓவியமும் தினமணிகதிரைப் பெருமைப்படுத்தின. இவ்விரு நாவல்களையும் பின்னர் புத்தகமாக வெளியிட்ட தமிழ்ப் புத்தகாலயம் அகிலன் கண்ணன், இயன்றவரை கோபுலுவின் ஒவியங்களையும் நாவலில் இடம்பெறச் செய்தார்.

பாதையில் பதிந்த அடிகள்எவ்விதம் மணலூர் மணியம்மை என்ற பெண்மணி ஆண்களைப் போல் வேட்டி சட்டை அணிந்து விவசாயிகளின் நலனுக்குப் பாடுபட்டு இறுதியில் ஒரு மானால் கொம்பின்மூலம் தாக்கப்பட்டு மரணமடைந்தார் என்பதையும், அந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அரசியலையும் விளக்கி எழுதப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி உள்ளிட்டோர் இந்நாவல் எழுதுவதற்கு ராஜம் கிருஷ்ணனுக்குத் தகவலுதவி செய்தார்கள்.

மண்ணகத்துப் பூந்துளிகள் பெண்சிசுக் கொலையை எதிர்த்து எழுதப்பட்ட நாவல். (தினமணி முன்னாள் துணையாசிரியர் சிகாமணி போன்றோர் இந்நாவல் பொருட்டான அவரது கள ஆய்வுப் பணிகளுக்கு உசிலம்பட்டி போன்ற இடங்களுக்கு உடன் சென்று உதவினார்கள்.) பின்னாளில் டாக்டர் ஷ்யாமா பெண் சிசுக்கொலை தொடர்பாக ஆய்வு செய்யவும் அவரே ஹொசூரில் அநாதரவான பெண்சிசுக்களைப் பராமரித்து வளர்க்க கெளதமன் என்ற அன்பர் மூலம் மையம் அமைக்கவும் இந் நாவலே முன்னோடியாக இருந்தது. ராஜம் கிருஷ்ணனின் சமூகப் பார்வையுடன் கூடிய கள ஆய்வு இலக்கியம் நேரடியாக சமூகத்தில் பல நல்ல விளைவுகளை  ஏற்படுத்தியது.

1950 இல், அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூன் என்ற இதழின் பாரிஸ் பதிப்பகத்தின் பொறுப்பாளராயிருந்த பாட்ரிக் தாம்சன் என்பவர் ஏற்பாடு செய்து, உலக அளவில் ஒரு சிறுகதைப் போட்டி நடைபெற்றது. போட்டியில் 23 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவில் அந்தப் போட்டியின் நிர்வாகத்தை ஏற்றது டில்லி ஹிந்துஸ்தான் டைம்ஸ். அது பல்வேறு பிராந்திய மொழிப் பத்திரிகைகளுக்கு தன் பணியைப் பங்கிட்டுக் கொடுத்தது. அவ்வகையில் தமிழ் மொழிக்கு கல்கி வார இதழ் பொறுப்பேற்றது. உலக அளவில் பிரெஞ்ச் சிறுகதை முதல் பரிசுபெற்றது. தமிழில் ராஜம்கிருஷ்ணனின் ஊசியும் உணர்வும் என்ற சிறுகதைக்குப் பரிசு கிட்டியது. தமிழ்ச் சிறுகதைப் போட்டி நடுவர் குழுவில் பிரபல காந்தியவாதி கே. சுவாமிநாதன், பெரியசாமித்தூரன், நாணல் சீனிவாசராகவன் ஆகியோர் செயல்பட்டார்கள். இந்தப் பரிசுதான் ராஜம் கிருஷ்ணனுக்குத் தொடக்கத்தில் பெரிய அங்கீகாரம் பெற்றுத் தந்தது.

பிறகு பற்பல பரிசுகளை வாங்கிக் குவித்தார். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற அவரது வேருக்கு நீர், காந்தியவாதியான கதாநாயகி, பொதுவுடைமைவாதியான கதாநாயகனைக் காதல் மணம் செய்துகொண்டு வாழும் வாழ்வில் நேரும் சம்பவங்களை விவரிப்பது. ஆனந்த விகடன் பரிசு, கலைமகள் பரிசு, சோவியத் லாண்ட் விருது, திரு.வி.க. விருது, சரஸ்வதி சம்மான் விருது, பாஷா பரிஷத் விருது, போன்ற பல பெருமைகளைத் தொடர்ந்து பெற்றார் அவர். மூன்று முறை இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்றார்.

குழந்தைப் பேறில்லாத அவரின் இறுதிக் காலம் கணவர் இறந்த பிறகு, அவ்வளவு நிம்மதி தருவதாக அமையவில்லை. அவரது பொருளாதாரம் முற்றிலும் எதிர்பாராத சில கசப்பான நிகழ்வுகளால் நிலைகுலைந்தது. இருக்க இடமில்லாதிருந்த அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனை பராமரித்தது. மனித நேயம் நிறைந்த மருத்துவர் மல்லிகேசனின் பாசத்தால் அவரின் இறுதிக் காலம் சற்று நிம்மதி கண்டது. தவிர அவரின் நிராதரவான நிலை குறித்துக் கனிவுகொண்ட தமிழக அரசு, அவர் உயிரோடிருக்கும்போதே அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கியது. சிறிதுகாலம் முன்பு எழுத்தாளர் கே. பாரதி முயற்சியால், ராஜம் கிருஷ்ணனுக்கு அவர் முன்னிலையிலேயே பெரிய அளவில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. தொண்ணுறு வயதில் அண்மையில் காலமான ராஜம் கிருஷ்ணன் மறையவில்லை. தமது சமூக உணர்வு நிறைந்த உன்னத எழுத்துகளில் வாழ்கிறார்.

[ நன்றி: அமுதசுரபி, டிசம்பர் 2014 ]


புதன், 19 அக்டோபர், 2016

தி.ஜ.ரங்கநாதன் - 1

"படிக்காத மேதை' -  "மஞ்சரி' தி.ஜ.ர.!
 வளவ.துரையன்
 

அக்டோபர் 19. தி. ஜ. ரங்கநாதனின் நினைவு தினம்.

தமிழில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போன்று ஓர் இதழை வெற்றிகரமாக சுமார் 25 ஆண்டுகாலம் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் "தி.ஜ.ர.' என்றழைக்கப்படும் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். அவர் நடத்திய "மஞ்சரி' எனும் இதழின் பெயராலேயே "மஞ்சரி தி.ஜ.ர.' என்றழைப்பதும் சாலப்பொருத்தம்.

1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்தவர். ஒரத்தநாடு சத்திரத்தில் இருந்த பள்ளியில் நான்காம் வகுப்பு வரையே படித்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தாலும் தந்தை அவரைப் படிக்க வைக்கவில்லை.

தி.ஜ.ர.வின் தந்தை "கர்ணம்' வேலை பார்த்து வந்ததால், தந்தையாருடன் ஊர் ஊராய்ச் சுற்றினார். இதனால் தமது படிப்பைத் தொடர முடியாத தி.ஜ.ர., தனக்குத் தானே ஆசிரியராக இருந்து படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படித்தார். விஞ்ஞானத்தில் குறிப்பாக, கணிதத்தில் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே ஆங்கிலம் படித்துப் பின்னாளில் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார்.

தொடக்கத்தில் சில காலம் நில அளவைக்கான பயிற்சி பெற்று கர்ணம் வேலை பார்த்தார். பின் தன் 14-ஆவது வயதில் சுந்தரவல்லி என்பவரைத் திருமணம் புரிந்தார். பிறகு மாமனார் ஊரில் சில மாதங்கள் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், தஞ்சாவூரில் வக்கீல் குமாஸ்தாவாக, கும்பகோணத்தில் ஒரு மளிகைக் கடையில் சிற்றாளாக - இப்படிப் பல பணிகள் செய்துள்ளார்.

1916-ஆம் ஆண்டு தம் 15-ஆவது வயதில் திருவாரூர் அருகில் இருக்கும் "திருக்காராயல்' எனும் சிற்றூரில் இருந்த தம் சின்னம்மா இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஐந்து பாகங்கள் கொண்ட "ஐரோப்பிய யுத்த சரித்திரம்' என்னும் தமிழ் நூலைப் படித்தார். ""அந்த நூல்தான் எனக்குத் தலைமை ஆசான்'' என்று தி.ஜ.ர. குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்ததைத் தொடர்ந்து அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

தி.ஜ.ர., எழுதிய முதல் கட்டுரை 1916-இல் "ஆனந்தபோதினி' என்னும் இதழில் வெளிவந்தது. அப்போது "ஸ்வராஜ்யா' இதழில் அவர் எழுதிய கவிதையும் வெளிவந்தது. தஞ்சாவூரிலிருந்து வெளிவந்த "சமரசபோதினி' என்னும் இதழில் தி.ஜ.ர., துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஊழியன், சுதந்திரச்சங்கு,  ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணிபுரிந்துள்ளார்.

அவரது முதல் சிறுகதைத் தொகுதி "சந்தனக் காவடி' என்னும் பெயரில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நொண்டிக்கிளி, காளி தரிசனம் போன்றவை வெளிவந்தன. தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் தி.ஜ.ர., முக்கியமானவர். அவருடைய கட்டுரைகளை பொழுதுபோக்கு, சமகாலச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என்று மூன்று வகைகளில் உள்ளடக்கலாம். தி.ஜ.ர., தமது கட்டுரைகளைப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் விதத்தில் அமைத்தார். சொல் அலங்கார நடையை அவர் வலிந்து மேற்கொள்ளாதவர்.

1923-இல் சமரசபோதினியில் தொடங்கிய அவரின் இதழ்ப்பணி 1972-இல் மஞ்சரியிலிருந்து விலகும்வரை நீடித்தது. ஆசிரியர், துணை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், உதவி ஆசிரியர், கூட்டாசிரியர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்துள்ளார்.

தி.ஜ.ர., சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வங்க எழுத்தாளர் ஹரீந்திரபாத் சட்டோபாத்யாயாவின் நாடகங்கள், இராஜாஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகள், வெண்டல் வில்கி என்ற அமெரிக்க எழுத்தாளரின் "ஒரே உலகம்' என்னும் நூல், லெனின் சரித்திரக் கதைகள், ருஷ்ய எழுத்தாளர் ஷென்கோவின் நாவல், நேருவின் உரைகள், லூயி ஃபிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை, போன்ற பல மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார்.

1940 முதல் 1946 வரை "சக்தி' இதழில் பணிசெய்தபோது தி.ஜ.ர., பாலன், நீலா எனும் புனைபெயர்களில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதினார். சிறுவர்களுக்காக அவர் எழுதிய சித்திர ராமாயணம் குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக அறிவியல் நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கதைகள், பாடல்கள் போன்று பல படைத்து தி.ஜ.ர., குழந்தை இலக்கியத்துக்கும் அணி சேர்த்துள்ளார்.

தி.ஜ.ர.வின் சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. தமிழக அரசு குழந்தை இலக்கியம் வளர்த்தமைக்காக அவருக்குப் பரிசளித்தது. தி.ஜ.ர., இறுதி நாள்களில் பேசமுடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மறதி நோய்க்கும் ஆளானார். பின்னர், 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார்.


"தி.ஜ.ர.வின் வாழ்க்கை, பலவிதமான குறைகள், அவதிகள், கஷ்டங்கள் நடுவில் சுறுசுறுப்பு, உற்சாகம், நம்பிக்கை, அறிவுத்தேடல் ஆகியவற்றைக் கொண்டது' என்று தன் இரங்கல் குறிப்பில் "கணையாழி' (நவம்பர் 1974) குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். "படிக்காத மேதை'யான தி.ஜ.ர., நம்மைப் படிக்கவைத்த படைப்புகள் ஏராளம்... ஏராளம்...!

[ நன்றி : தினமணி ]நாமக்கல் கவிஞர் -3

நாமக்கல் கவிஞர்: ஒரு பேட்டி 
பூவை எஸ். ஆறுமுகம்


அக்டோபர் 19. நாமக்கல் கவிஞரின் பிறந்த தினம்.

‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை.

[ நன்றி : உமா ] 

தொடர்புள்ள பதிவுகள்:

நாமக்கல் கவிஞர்