திங்கள், 5 மார்ச், 2018

1001. சித்திரக் கவிகள் - 1

சந்த வசந்தக் கவியரங்கம் 


‘சந்த வசந்த’க் குழுவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரக் கவியரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் நான் இட்ட சில சித்திரக் கவிகளை இங்கே காணலாம்.  நான் முன்பு பயன்படுத்திய சில மாலைமாற்றுச் சொற்றொடர்களை எப்படிச் சித்திரக் கவிகளில் உள்ளிடலாம் என்று நான் சிந்தித்ததின் விளைவுகள் இவை. மிக எளிய முயற்சிகளே. நான்கு வகையான பந்தங்கள். 1.  இறை வணக்கம்

உருத்திராட்ச பந்தம்
======
வஞ்சித் துறை
-------------------
சந்தவ சந்தத்திலே
அந்தமிகு பாவெழுதச்
செந்தமிழ் யாப்பறிவைக்
கந்தாநீ வழங்கு

 வாசிக்கும் முறை: மாலையின் வலப்புற மேல்பக்க மணியில் தொடங்கி இடவலமாகச் சுற்றி மேல்பக்கம் செல்லச் செய்யுள் நிறைவடையும். 


2.  அஷ்டநாக பந்தம்

வா!வேக மாகவே வா!
வனமாதை அணைவோனே!


வாசிக்கும் முறை: பலவிதமாய் இருக்கும் அட்ட நாக பந்தங்களில் இது மிக எளிய ஒன்று.  எந்தப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரை வாசித்தாலும் , இந்த இரு வரிகள் - “ அரை வஞ்சித் துறை” -  அடங்கும். 

3.  இரட்டை நாக பந்தம்

குறள் வெண்பாக்கள்:

சேவேறும் தெய்வத்தின் சீர்பரவக் கோயிலுக்கு
வா!வேக மாகவே வா!

தேவாரச் சந்தத்தில் செந்தமிழைக் கேட்டிடநீ
போ!வேக மாகவே போ!

சே - எருது


வாசிக்கும் முறை: பின்னியிருக்கும் இரு பாம்புகளில் வலது பக்கம் இருக்கும் பாம்பின் தலையிலிருந்து வால்வரை படித்தால் முதல் குறளும், இடதுபக்கப் பாம்பில் இரண்டாவது குறளும்  அடங்கி உள்ளன.

4.  இரத பந்தம்

நேரிசை வெண்பா

நோகாமே காந்திபோல் காருண்யம் கூடுமா?
ஆகா! குணமதை நல்குமே! – சாகாத
வேதமா கச்சொல நேருமநு பூதியே!
கா!திருமால் மாருதி கா!

பொருள்: நோகாமல் காந்தியைப்போல் கருணைகுணம் சேருமா?
ஆகா! அந்தக் குணத்தை நல்குமே! – “ கா! திருமால் மாருதி கா! “ ( என்ற  மாலைமாற்றை) சாகாத வேதம்போல் ( மந்திரமாகச்) சொல்ல, அநுபூதி நேருமே

வாசிக்கும் முறை: தேரின் இடப்புறச் சக்கரத்தின் எழுத்தை வாசித்து அடுத்து வலப்புறச் சக்கரத்தின் எழுத்தை வாசித்து வலம் இடம் , இடம் வலம் என மாறி மாறித் தட்டுகளில் வாசித்தவாறே மேலேறிச் சென்று அங்கிருந்து நேரே கீழிறங்கினால் நேரிசை வெண்பா நிறைவடையும். 

தொடர்புள்ள பதிவுகள் :
போ! வேகமாகவே போ! : மாலை மாற்று

“ திருமால் மாருதி” : மாலை மாற்று

1 கருத்து:

Angarai Vadyar சொன்னது…

Well-done. But too deep for me who knows only "kochchai" Tamil.

கருத்துரையிடுக