ஞாயிறு, 29 டிசம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 23

'சிரிகமபதநி’ -1

’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறார். அவர்களில் பலரும் சங்கீதப் பிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். பலர் சங்கீதத்தை அடிப்படியாகக் கொண்ட நகைச்சுவைச் சித்திரங்களை விகடனில் அள்ளி வீசியிருக்கின்றனர். அவ்வகையில், வெவ்வேறு ஓவியர்களின் தூரிகைகள் பாடும் சில ‘சிரிகமபதநி’ படங்கள் இதோ ! ஏழு ஸ்வரங்களும் ‘விகடன்’ இதழ்களிலிருந்து !

1.
ராஜு( இயற்பெயர்: ஸ்ரீ நாராயணசாமி ) ‘மாலி’ கண்டெடுத்து ‘விகடனில் சேர்த்துக் கொண்ட ஒரு மாணிக்கம். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகைச்சுவைச் சைத்திரிகர்களில் இவர் ஒருவர். 1953-இல் மிக இளம் வயதில் காலமாகி விட்டார்.


2.
”கோபுலு ஓவியர் கோ ...”என்பது ஒரு வெண்பாவின் ஈற்றடி. அதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்? எஸ். கோபாலனுக்குக் ‘கோபுலு’ என்று பெயர் சூட்டியவர் ‘மாலி’. 44-இல் கோபுலு விகடனில் சேர்ந்தார்; அங்கே 20- ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். 1972-இல் ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு அங்கிருந்தும் நீங்கி, ’கல்கி’, விகடன். குங்குமம், அமுதசுரபி என்று பல இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். ’ஓவியப் பிதாமகர்’ கோபுலு இன்னும் பல ஆண்டுகள் நம்மிடையே இருந்து, ஓவியக் கலைக்குத் தொண்டாற்ற ஆண்டவனை வேண்டுவோம்!3.


4.
ஓவியர் ‘ரவி’ 40-களில் ’விகடனில்’ பணி ஆற்றிப் பின்னர் ‘குமுத’த்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். ( கல்கியிலும் இருந்திருக்கிறார்.) குமுதத்தின் முதல் இதழின் அட்டைப்படத்தை அவர்தான் வரைந்தார்.
( ‘தேவ’னின் “வாரம்-ஒரு-பக்கம் நாவல்” மாலதி -க்கு அவர் வரைந்த 14 படங்கள் என் முந்தைய பதிவுகளில் உள்ளன. ) கோட்டோவியத்தில் நிபுணர். இயற்பெயர் : லக்ஷ்மிநாராயணன்.

5.
விகடனின் தொடக்க காலத்திலிருந்தே அங்கே பணியாற்றிய ‘சிவ’த்தின் இயற்பெயர் : எம்.எஸ்.சிவராமன். பேராசிரியர் கல்கி விகடனின் ஆசிரியராய் இருந்தபோது சிவம் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தார். பிறகு ஒரு துணை ஆசிரியராய் அவர் 1975-இல் மறையும் வரை விகடனில் பணி புரிந்தார்.


6.

பாகவதர்: காம்போதி ராகம் பாடட்டுமா?
ரஸிகர்: அந்த ராகம் எனக்குப் பிடிக்காது!
பாகவதர்: அப்படீன்னா கல்யாணி ராகம் பாடட்டுமா? 
ரஸிகர்: ஊஹும்! வேண்டாம்! அது எனக்கு ரொம்பப் பிடித்த ராகம்! 7.  ‘ மதன்’ வரைந்தது.


[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சிரிகமபதநி

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 


சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! ..மாலி-சில்பி


சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்


புதன், 25 டிசம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 22

சங்கீத சீசன் : 1954 - 2


முந்தைய பதிவு:

( தொடர்ச்சி) 

‘ஆடல் பாடல்’ என்ற தலைப்பில்  பேராசிரியர் ‘கல்கி’ விகடனில் பல கலை விமர்சனங்களை முன்பே எழுதியிருந்தாலும், ‘கர்நாடகம்’ என்ற புனைபெயருடன் அவர் ‘ஆடல் பாட’லை எழுதத் தொடங்கியது 1933-இல் தான் என்கிறது ‘விகடன்’ நூல் “காலப் பெட்டகம்”. ’கல்கி’ 1940 -இல் விகடனை விட்டுப் போனபிறகும், ‘ஆடல் பாடல்’ கட்டுரைகள் தொடர்ந்து விகடனில் பல வருடங்கள் வெளியாகின. (ஆனால், அவை யாரால்/எவர்களால் எழுதப் பட்டன என்பது எனக்குத்  தெரியவில்லை! )

இதோ 54- சங்கீத சீசன் பற்றிய இரண்டாவது நீண்ட (11 -பக்கங்கள் !)  ‘ஆடல் பாடல்’ கட்டுரை. ‘பொக்கிஷம்’ என்று ஒரு அருந் தொகுப்பை விகடன் அண்மையில் வெளியிட்டது போல், இத்தகைய எல்லாக் கட்டுரைகளையும், படங்களையும் சேர்த்து, ‘விகடன்’ ஓர் ‘ ஆடல் பாடல் பொக்கிஷம்’ என்ற தொகுப்பை வழங்கினால் அது  விகடன் செய்யும் பெரும் தொண்டாகும் என்பது என் கருத்து, வேண்டுகோள். சங்கீதப் பிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள்! 

[ நன்றி: விகடன் ]
( தொடரும் ) 

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 21

சில சங்கீத வித்வான்கள்

‘சங்கீத கலாநிதி’ டி.எல்.வெங்கடராமய்யர்

என்னிடம் இருக்கும் 1938- ‘ஆனந்த விகடன்’ தீபாவளி மலரைப் புரட்டியதில், ’மாலி’யின் சித்திரத்துடன் வெளியாகி உள்ள  இசை பற்றிய ஒரு சுவையான கட்டுரை கண்ணுக்குத் தென்பட்டது.

இதே மாதிரி
அரியக்குடிசெம்மங்குடி , விக்டர் பரஞ்சோதி , மூவரும் விகடன் தீபாவளிமலர்களில் எழுதிய இசை பற்றிய கட்டுரைகளை இவ்வலைப் பூவில் போன ஆண்டில் ஏற்கனவே இட்டுள்ளேன்.

இந்தக் கட்டுரையின் ஆசிரியர்
டி.எல்.வி அவர்களைப் பற்றியும் ஏற்கனவே வலைப்பூவில் ஒரு பதிவு இருக்கிறது. இப்போது அவர் எழுதிய ஒரு கட்டுரை இதோ !  சில வித்வான்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டுள்ள சுவையான கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டி.எல்.வி. அப்போது விகடனில் ஆசிரியராய் இருந்த ‘கல்கி’ அவர்களின் தூண்டுதலில் பிறந்த இன்னொரு கட்டுரை இது என்று தோன்றுகிறது. இசை மேதைகள் எழுதிய அபூர்வமான இயற்றமிழ்க் கட்டுரைகள் இவை ! .
[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

புதன், 18 டிசம்பர், 2013

தேவன் - 16: சில சங்கீத சங்கதிகள்!

சில சங்கீத சங்கதிகள்!சங்கீத சீசனில் ‘தேவனி’ன் ஹாஸ்யம் கலந்த இசை விருந்தைச் சற்று ரசிப்பது பொருத்தம் தானே?

முதலில் ’தேவ’னுடன் 18 ஆண்டுகள் கூட இருந்த அவருடைய சகோதரி மகன், கே.விசுவநாதன் ( ‘அன்னம்’) சொல்வதைப் பார்ப்போம்!

தேவன்’ அவர்களுக்குத் திரைப்படங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் போவதில் அதிக நாட்டம் இருந்ததில்லை. பார்க்க எங்களையும் அனுமதித்ததில்லை. பிரத்தியேக திரைப்படக் காட்சிகளுக்கு வரும் அழைப்பிதழ்களை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது எனக் கிழித்துப் போட்டுவிடுவார். மியூசிக் அகடமியில் ஆயுட்கால உறுப்பினர். பாட்டுக் கச்சேரிகளுக்குப் போக மட்டும் என்னை அனுமதிப்பார். குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா-பத்மினி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு முதல் நாள், ஞாபகமாக டிக்கட்டைத் திரும்ப வாங்கிக் கொண்டுவிடுவார்” 
----- கே.விசுவநாதன் ( ‘அன்னம்’) , “தேவன் வரலாறு’, அல்லயன்ஸ், 2013.

அன்னம்’ அவர்கள் எழுத்திலிருந்து ’தேவன்’ ஓர் இசைப்பிரியர் என்று தெரிகிறது, அல்லவா? இதை நன்கு வெளிக்காட்டுவது ‘தேவ’னின் முதல் நாவலான மைதிலியே! அதிலிருந்து நான்கு இசைத் தொடர்புள்ள காட்சிகளைப் பார்ப்போம். இவற்றிலிருந்து ‘மைதிலி’ ’நாரதர்’ இதழில் தொடராய் வந்த 1939- காலகட்டத்தில் எந்தெந்தப் பாடல்கள் பிரபலமாய் இருந்தன என்றும் அறிந்து கொள்ளலாம்!காட்சி 1:

‘ஆள் மாறாட்டம்’ என்பது பல ஹாஸ்ய நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும் உயிர்நாடியாய் விளங்கியிருக்கிறது. ’மைதிலி’ புதினத்துக்கும் தான்!  ரயில்வே ஸ்டேஷனில் இருந்த கதாநாயகன் செல்லமணியை இசைவித்வான் பட்டணம் பஞ்சுவய்யர் என்று எண்ணிக்கொண்டு கார் டிரைவர் கதாநாயகி மைலிலி இருக்கும் பங்களாவில் கொண்டு சேர்க்கிறான்.  ஆள் மாறாட்டம் என்று தெரிந்தும், பல காரணங்களால் சங்கீத வித்வானைப் போலவே அங்கு நடிக்கிறான் செல்லமணி. அவன் அறைக்குப் பக்கத்தில் யாராவது வந்தால், தான் பாடகர் என்று காட்டிக் கொள்ள , அவனுக்குத் தெரிந்த ஒரு திரைப்படப் பாட்டின் ஒரு அடியை மட்டும் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறான்.

அந்த அடி என்ன  தெரியுமா? ‘தேவன்’ எழுதியிருப்பது :

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்” !

இது திருநீலகண்டர் ( 1939) படத்தின் மூலம் பிரபலமான ஒரு நகைச்சுவைப் பாடல். நடிகர் டி.எஸ்.துரைராஜ்,

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம் 
அறியச் சொல்லும் எந்தன் முன்னே, முன்னே.” 

என்று ஒரு லாவணிக் கேள்வியை முன் வைக்க, முதலில் திணறும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறகு,


“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம், 
கொழுக்கட்டை தின்னதினால் அண்ணே, அண்ணே.” 

என்று பதில் சொல்வார்! 

காட்சி 2:

பங்களாவில் ஒரு கச்சேரிக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மைதிலிக்கு உண்மை தெரிந்தும், சில காரணங்களால் செல்லமணியைத் தொடர்ந்து வித்வான் வேஷம் போடச் சொல்கிறாள். பிடில்காரர் செல்லமணியை அணுகி, கச்சேரிப் பாடல்கள் பட்டியலைச் சொல்லும்படி வற்புறுத்துகிறார். செல்லமணி தத்தளிக்கிறான். பிடில்காரரையே பட்டியல் போடச் சொல்கிறான். அவர், ‘வாதாபி கணபதிம்” , கரகரப்ரியாவில் “நடசி நடசி”, நிஜமர்மமு, மாருபல்க ‘ என்று அடுக்குகிறார்.

’தேவன்’ எழுத்திலேயே இக்காட்சியின் கடைசிப் பகுதியைப் பார்க்கலாமா?

பிடில்காரர்: “அடுத்தபடி , முகாரி ஆலாபனை பண்ணி ‘ஏமாந்துனே’ பாடுங்கள்” 

செல்லமணி “ஏமாந்தானேயே இருக்கட்டும் “

“ஏமாந்துனே’ என்று சொன்னேன்

“ஏமாந்தானே’ என்ற தமிழ்க் கீர்த்தனையைச் சொல்கிறீர்களாக்கும் என்று நினைத்தேன்” என்று செல்லமணி மழுப்பினான்.

“நான் அந்த மாதிரி கேள்விப்பட்டதே இல்லையே” என்று சந்தேகத்துடன் பார்த்தார் பிடில்காரர்.

“நான் கேட்டிருக்கிறேன்...ஏன், நீங்கள் பாடியே கேட்டிருக்கிறேன்” என்று மைதிலி ஒரே அடியாய் அடித்தாள்.

காட்சி 3:
இதுவும் நாவலில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி!

செல்லமணி கோரப் பசியுடன் ஓர் ஓட்டலில் நுழைகிறான். ஓர் உள்ளூர் பிரமுகரிடம் ஏதேனும் காரியம் ஆகலாம் என்று எண்ணித் தன்னைப் பஞ்சு பாகவதர் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் செல்லமணி. அவ்வளவுதான்! வந்தது வினை! அந்தப் பிரமுகர் செல்லமணியைக் குடையத் தொடங்கி விடுகிறார்.

பிரமுகர் : ....எனக்குச் சங்கீதம்னால் உயிர். அங்கேயே படுக்கையைப் போட்டுண்டுவேன். பாடகர்னால் கசக்கிப் பிழிந்திடுவேன்..”

செல்லமணி: “இப்போது நீங்கள் என்ன கசக்கினாலும் ஒரு பாட்டு வராது!”

பாடுவது இருக்கட்டும் ஸார்! ஸங்கீத சாஸ்திரத்தைக் சொல்கிறேன். மத்யமாவதி ராகம் இருக்கிறதல்லவா?”

”ஆமாம், இருக்கிறது! “

அதிலே ஒரு இடத்திலே எனக்கு ஒரு ஸம்சயம் “

“எனக்கு அது பூராவிலுமே இப்போது ஸம்சயமாகத்தான் இருக்கிறது. வயிறு பட்டினியாக இருக்கும் போது -நரம்புகள் வெலவெலத்துப் போயிருக்கும்போது --எல்லாமே  ஸம்சயம்தான் “

வாஸ்தவம்! அப்படியென்றால் , அதைச் சாவகாசமாய் நாளைக் காலையில் வைத்துக் கொள்ளலாம்.”

“ சாப்பாட்டைச் சொல்கிறீர்களா?”

“இல்லை, மத்தியமாவதியை.”

“பிழைத்தேன்! உயிர் வந்தது “

காட்சி 4: 
கடைசியில் “ செல்லமணி - மைதிலி கல்யாணத்தில் பஞ்சு பாகவதர் “ஏமாந்துனே” பாடுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.

‘தேவ’னுக்கே உரித்தான ஹாஸ்யத்துடன், இசையும் கூடச்சேர்ந்து கொண்டு கூத்தாடும் அற்புத நாவல் ‘மைதிலி’.

பி.கு.

1.

‘தேவன்’ நூற்றாண்டு விழாவில், சஞ்சய் சுப்பிரமணியன் இரண்டு மணி நேரம் பாடியபின், நான் பேசும்போது மேற்கண்ட சில தகவல்களைக் குறிப்பிட்டு , சஞ்சய் இந்தத் ‘தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் எங்கேனும் ‘ஏமந்துனே’ பாடினால் நன்றாய் இருக்கும் என்று கேட்டுக் கொண்டேன். 
( இது தர்மபுரி சுப்பராயரின் ஜாவளி.)

இதோ! சஞ்சய் பாடும் ‘ஏமந்துனே’ ( சஞ்சய்க்கு என் மனமார்ந்த நன்றி!)

’தேவனு’க்கு இந்தப் பாடலே சரியான நூற்றாண்டு அஞ்சலி!

2.

 ‘திருநீலகண்டர்’ படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும், டி.எஸ்.துரைராஜும் பாடும் முழுப் பாடலையும்  இங்கே கேட்கலாம்: ( “அந்தக் கணபதி ...” வரிகள் நடுவில் வருகின்றன)
https://www.youtube.com/watch?v=b0oTnHHpieE#t=59
( நன்றி: நண்பர் சப்தகிரீசன் ! ) 

 தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நூற்றாண்டு விழா -1

தேவன் படைப்புகள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 20

சங்கீத சீசன் : 1954 - 1[ நன்றி: திருப்புத்தூர் திருத்தளியான் ]

போன வருஷம்  , இந்தத் தொடரில் 1953-இல் சென்னையில் நடந்த மார்கழி மாத இசைவிழாக்களைப் பற்றிய ’விகடன்’ கட்டுரைகளையும், படங்களையும்  பார்த்தோம். இந்த வருஷம், 1954-ஆண்டுக்குச் செல்வோம்.

முதலில், 1954- ஐப் பற்றிய சில குறிப்புகள்:

இசை விழாக்களின் வரலாற்றிலேயே முதன்முறையாய் ஒரு பெண்மணி ஒரு விழாவிற்குத் தலைமை வகிக்கிறார்.

சங்கீத வித்வத் சபையின் ‘சங்கீத கலாநிதி’ பட்டத்தைத் தன் குரு பெறுவதைக் கண்டு களிக்கிறார் மதுரை சோமு.

53-இல் சென்னை முதல் மந்திரியாய் இருந்து, 54-இல் ( முதல்) பாரத ரத்னா விருது பெற்ற ஒருவர் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் விழாவைத் தொடங்கி  வைக்கிறார்; 54-இல் சென்னை முதலமைச்சராய்ப் பதவி ஏற்றவர் தமிழிசைச் சங்க விழாவை ஆரம்பித்து வைக்கிறார்.

அரியக்குடி முதன் முறையாய்த் தமிழிசை மன்றத்தில் கச்சேரி செய்கிறார். “அரியக்குடியும் தமிழும்” என்று ஒரு கட்டுரையே எழுதிய ‘கல்கி’ அக்கச்சேரியை விண்ணுலகிலிருந்து கேட்டு மகிழ்கிறார்.

பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த துக்கத்தில், 54-இல் ‘பத்மபூஷண்’ விருது பெற்ற ஒரு விதூஷி 54 சீசனில் மூன்று விழாக்களிலும்  பாடவில்லை.

பிற்காலத்தில்  ‘சங்கீத வித்வத் சபையின்’ இசையரங்கம் தன் பெயரைத் தாங்கி நிற்கும் என்பதை அறியாத ஒரு பிரமுகர் சங்கீத வித்வத் சபையின் இசை விழாவைத் துவக்கி வைக்கிறார்.

ஒரு கேள்வி இப்போது என் மனத்தில் எழுகிறது: ஆனால் விடை தான் தெரியவில்லை. நினைவும் இல்லை. டிசம்பர் 5, 54 -இல் தமிழிசைக்குத் தன் பேனாவால் பலம் கொடுத்த  ‘கல்கி’ மறைந்தார். அவருக்கு அஞ்சலியாய் அவருடைய பாடல்கள் அந்த வருஷம் சீசனில் எங்கேனும் யாராலும் பாடப்பட்டனவா?

சரி, அந்த சீசனில் ‘விகட’னில் வந்த “ஆடல் பாடல்” கட்டுரையின் முதல் பகுதியைப் பார்க்கலாமா?

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1

சீஸன் 53: 2

சீஸன் 53 : 3

சீஸன் 54: 2

சீஸன் 54 -3

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்

( தொடரும் ) 

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சொல்லயில் : கவிதை

சொல்லயில் 
பசுபதி

கந்தன் மொழியை வேலன் பேரில் 
. . காக்க வந்த சொல்லயில்;
இந்தி யக்க விஞர் வானில்
. . என்றுங் கூவும் பூங்குயில்.
சிந்து வேந்தர் பார திக்கென்
. . சென்னி என்றும் தாழுமே!
. . . செந்த மிழ்க்க விக்கு முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (1)

சொல்லில் தமிழை ஊற வைத்த
. . சுப்ர மண்ய பாவலன் ;
அல்ல லுற்ற பார தத்தின்
. . ஆன்ம ஞானம் ஆர்த்தவன்.
ஷெல்லி தாசன் முன்னர் என்றன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . செக்கி ழுத்த செம்மல் நண்ப!
. . . சென்னி என்றும் தாழுமே! (2)

மின்னும் கண்கள் வீரம் ஒளிரும்
. . மீசை, பாகை உருவினன் ;
கண்ணன் கழலை நண்ணும் கைகள்
. . கனலில் நீட்டும் காதலன்.
சென்னை செய்த வப்ப யன்முன்
. . சென்னி என்றும் தாழுமே !
. . . சித்தன் சக்தி பித்தன் முன்பென்
. . . சென்னி என்றும் தாழுமே! (3)


~*~o0o~*~

*அயில்=வேல்

[ டிசம்பர் 15, 2002 “திண்ணை” இதழில் வெளியான கவிதை ]

தொடர்புள்ள பதிவுகள் :

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

பதிவுகளின் தொகுப்பு: 176 – 200

பதிவுகளின் தொகுப்பு: 176 – 200
176. பதிவுகளின் தொகுப்பு: 151 – 175
177. தேவன் - 6: ராஜகிரி ரஸ்தா
178. தேவன் - 7: ஆறுதல் வேண்டுமா?
179. தேவன் - 8: ‘கல்கியில் ஒரு தேவன்பக்கம்!
180. தேவன் - 9: தேவன் நூற்றாண்டு விழா -1
181. தேவன் - 10: தேவன் நூற்றாண்டு விழா -2
182. தேவன் - 11 : தேவன் நூற்றாண்டு விழா -3
183. சசி -7 : பொதுஜன சேவை
184. தேவன் - 12: சாப்ளின் தமிழன் தேவன்!
185. லா.ச.ராமாமிருதம் -5: சிந்தா நதி – 5
186. பாடலும் படமும் - 6: அபிராமி அந்தாதி -1
187. லா.ச.ராமாமிருதம் -6: சிந்தா நதி – 6
188. தேவன் - 13 : தேவன் நூற்றாண்டு விழா -4 : ‘கலைமகள்’ ...
189. தென்னாட்டுச் செல்வங்கள் – 10
190. சங்கீத சங்கதிகள் – 19
191. திசைமாற்றிய திருப்பங்கள் : கவிதை
192. ராமன் விளைவு : கவிதை
193. கொத்தமங்கலம் சுப்பு - 5 : ஔவையார்
194. தேவன் - 14 : தேவன் நூற்றாண்டு விழா -5 : ’தினமணியி...
195. தேவன் - 15: ‘அம்பையின் கட்டுரை
196. சாவி - 9: ’சிக்கனம்சின்னசாமி
197. இந்தியப் பெண்களின் படைப்புகளின் காப்பகம்: ஸ்பேரோ
198. இந்த மண் பயனுற வேண்டும் : கவிதை
199. சங்கத் தமிழ் வளர்த்த நங்கை : கவிதை
200. கல்கி -5: தமிழுக்கு ஒருவர்!
http://s-pasupathy.blogspot.com/2013/12/5.html

தொடர்புள்ள பதிவுகள்:

பதிவுகளின் தொகுப்பு

வியாழன், 5 டிசம்பர், 2013

கல்கி -5 : தமிழுக்கு ஒருவர்!

தமிழுக்கு ஒருவர்! 
மீ.ப.சோமுடிசம்பர் 5, 1954. பேராசிரியர் ‘கல்கி’ மறைந்த தினம்.


டிசம்பர் 12, 1954 -ஆம் தேதி வெளிவந்த ‘கல்கி’ இதழ்  பேராசிரியர் ‘கல்கி’ பற்றிய உருக்கமான பல அஞ்சலி மலர்களைத் தாங்கி நின்றது. ராஜாஜி, ம.பொ.சி,  சாவி, ’கல்கி’யின் பல துணை ஆசிரியர்கள், மதுரை மணி ஐயர், காருகுறிச்சி அருணாசலம் என்று பற்பல பிரபலங்களின் கட்டுரைகள், கடிதங்கள் அவ்விதழில் இருந்தன.  பல இரங்கற் கவிதைகளும் அவ்விதழை துயரத்தில் ஆழ்த்தின. அவ்விதழில் வந்த கட்டுரைகளில் பலவும் பின்பு சுப்ர.பாலன் தொகுத்த, “ எழுத்துலகில் அமரதாரா”  என்ற கல்கி நூற்றாண்டு சிறப்பு வெளியீட்டில் வந்தன. ஆனால், அவ்விதழில் வந்த கவிதைகள் ? முக்கியமான தலையங்கம்? எனக்குத் தெரிந்து இவை எந்த நூலிலும் பதிவு செய்யப் பட்டனவாய்த் தோன்றவில்லை. அதனால் அவற்றுள் சிலவற்றை இங்குப் பதிவு செய்கிறேன். மேலும், இன்று கல்கி நினைவு தினம் அல்லவா?

முதலில், கவிதைகளிலிருந்து சில பகுதிகள்:

புத்தனேரி ரா. சுப்பிரமணியனின் “ஹாஸ்ய ஜோதி” என்ற இரங்கற் கவிதை:

மாய்ந்ததே வசன மேதை!
  மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்ப்பூஞ் சோலை!
  கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம் 
  உடைந்ததே, கண்ணீர் வெள்ளம்
பாய்ந்ததே கல்கி வைத்த
  பயிரெலாம் செழிக்கு மாறே! 

( புத்தனேரி சுப்பிரமணியன் ஒரு நீண்ட இரங்கற் கவிதையை அந்த வார “ஆனந்த விகட”னிலும் எழுதினார்.)

54-இல் முதலில் ரசிகமணி டி.கே.சி, பிறகு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மறைந்ததைச் சுட்டிச் சுத்தானந்த பாரதியார் சதாசிவத்திற்கு 7-12-54 என்ற தேதியிட்ட ஒரு கடிதத்தை வடலூரிலிருந்து அனுப்பி இருந்தார்:  ’கதைமணி’ கல்கிக்கு அஞ்சலியாய் அக்கடிதத்தில் இருந்த ஒரு வெண்பா இதோ:

கதைமணி கல்கி !

கம்ப ரசிகமணி கண்ணாங் கவிதைமணி 
இன்பக் கதைமணியும் ஏகினரோ -- உம்பரிலே
மூவர்க்கும் மூச்சான முத்தமிழின் பாநயத்தைத்  
தேவர்க்குஞ் சொல்லத் தெளிந்து! 

“கற்பனைச் சிற்பி” என்ற தலைப்பில் வந்த ஏ.கே.பட்டுசாமியின் கவிதையிலிருந்து ஒரு பகுதி:

சிந்தையைத் தூண்டும் சிறுகதைகள் - முதல்
  சீரிய பற்பல கட்டுரைகள் 
முந்தைத் தமிழக மேன்மையைச் சாற்றிடும்
  முடிமணியாகிய நீள்கதைகள் 

காவியங்கள் எழுத்தோவியங்கள் - நல்ல 
  கருத்துச் செறிந்த விமர்சனங்கள்
ஆவிபிரியும் வரையில் எழுதிய 
  அற்புதக் கற்பனைச் சிற்பியவன் ! 

“பாரதீயன்” என்பவர் எழுதிய ”வாடாத தனி மலர்” என்ற கவிதையின் ஒரு பகுதி:

பாரதியார் கவிப்பெருமை பாரில் உள்ளார்
  பற்பலரும் அறிதற்குப் பணிகள் செய்தார் 
ஊரறியக் கலைஞர்களை ஊக்கி இந்த 
  உலகெல்லாம் அறிவித்த உண்மை யாளர் !

எத்தனையோ பெருங்கதைகள் எழுதி வைத்தும்
  எண்ணரிய சிறுகதைகள் இயற்று வித்தும்
வைத்தபெரு மதிப்புலவர் வரிசை உள்ளே
  வாடாத தனிமலராய் வாழ்வார் கல்கி!  

“கல்கி” மறைந்ததும் ,  ’கல்கி’ பத்திரிகையின் ஆசிரியராய்ப் பணிபுரியும் தகுதி யாருக்கு இருக்கிறது என்ற கேள்வி/கவலை உடனே எழுந்தது. ஒரு கணமும் யோசிக்காமல், ராஜாஜி மீ.ப.சோமுவைத் தேர்ந்தெடுத்தார்.  அகில இந்திய ரேடியோவில் உயர்பதவி வகித்த சோமு, இரு பதவிகளையும் சில காலத்திற்கு ஏற்று நடத்த மத்திய அரசு விசேஷ அனுமதி வழங்கியது. பதினெட்டு மாதங்கள் சோமு ‘கல்கி’யின் ஆசிரியராய் இருந்தார்; அப்போது பல முறை ‘கல்கி’யைப் போற்றிக் கட்டுரைகள் எழுதினார். ஆனால், ’கல்கி’க்கு அஞ்சலி என்ற முறையில் ‘கல்கி’யில் சோமு அவர்கள் முதலில் எழுதியது டிசம்பர் 12-ஆம் தேதி இதழுக்கு வரைந்த  தலையங்கம் தான். கட்டுரையின் சிறப்புக் கருதி,  ’கல்கி’யை நன்கு அறிந்த சோமு அவர்களின் அந்த முழுத் தலையங்கத்தை இங்கிடுகிறேன்.

( அந்த சமயத்தில், “ஆனந்த விகடனி”லும் ஓர் அருமையான தலையங்கமும் , எஸ்.எஸ்.வாசனின் கையெழுத்து உள்ள ஒரு உருக்கமான “உபயகுசலோபரி”யும் வந்தன என்பதை இங்குக் குறிப்பிடத் தான் வேண்டும். அவற்றின் சில பகுதிகளை வேறொரு மடலில் பிறகு இடுகிறேன்.)

இப்போது மீ.ப.சோமு அவர்கள் எழுதிய தலையங்கம்:
[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவு:

கல்கி படைப்புகள்

கல்கியைப் பற்றி