புதன், 18 டிசம்பர், 2013

தேவன் - 16: சில சங்கீத சங்கதிகள்!

சில சங்கீத சங்கதிகள்!



சங்கீத சீசனில் ‘தேவனி’ன் ஹாஸ்யம் கலந்த இசை விருந்தைச் சற்று ரசிப்பது பொருத்தம் தானே?

முதலில் ’தேவ’னுடன் 18 ஆண்டுகள் கூட இருந்த அவருடைய சகோதரி மகன், கே.விசுவநாதன் ( ‘அன்னம்’) சொல்வதைப் பார்ப்போம்!

தேவன்’ அவர்களுக்குத் திரைப்படங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் போவதில் அதிக நாட்டம் இருந்ததில்லை. பார்க்க எங்களையும் அனுமதித்ததில்லை. பிரத்தியேக திரைப்படக் காட்சிகளுக்கு வரும் அழைப்பிதழ்களை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது எனக் கிழித்துப் போட்டுவிடுவார். மியூசிக் அகடமியில் ஆயுட்கால உறுப்பினர். பாட்டுக் கச்சேரிகளுக்குப் போக மட்டும் என்னை அனுமதிப்பார். குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா-பத்மினி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு முதல் நாள், ஞாபகமாக டிக்கட்டைத் திரும்ப வாங்கிக் கொண்டுவிடுவார்” 
----- கே.விசுவநாதன் ( ‘அன்னம்’) , “தேவன் வரலாறு’, அல்லயன்ஸ், 2013.

அன்னம்’ அவர்கள் எழுத்திலிருந்து ’தேவன்’ ஓர் இசைப்பிரியர் என்று தெரிகிறது, அல்லவா? இதை நன்கு வெளிக்காட்டுவது ‘தேவ’னின் முதல் நாவலான மைதிலியே! அதிலிருந்து நான்கு இசைத் தொடர்புள்ள காட்சிகளைப் பார்ப்போம். இவற்றிலிருந்து ‘மைதிலி’ ’நாரதர்’ இதழில் தொடராய் வந்த 1939- காலகட்டத்தில் எந்தெந்தப் பாடல்கள் பிரபலமாய் இருந்தன என்றும் அறிந்து கொள்ளலாம்!



காட்சி 1:

‘ஆள் மாறாட்டம்’ என்பது பல ஹாஸ்ய நாவல்களுக்கும், திரைப்படங்களுக்கும் உயிர்நாடியாய் விளங்கியிருக்கிறது. ’மைதிலி’ புதினத்துக்கும் தான்!  ரயில்வே ஸ்டேஷனில் இருந்த கதாநாயகன் செல்லமணியை இசைவித்வான் பட்டணம் பஞ்சுவய்யர் என்று எண்ணிக்கொண்டு கார் டிரைவர் கதாநாயகி மைலிலி இருக்கும் பங்களாவில் கொண்டு சேர்க்கிறான்.  ஆள் மாறாட்டம் என்று தெரிந்தும், பல காரணங்களால் சங்கீத வித்வானைப் போலவே அங்கு நடிக்கிறான் செல்லமணி. அவன் அறைக்குப் பக்கத்தில் யாராவது வந்தால், தான் பாடகர் என்று காட்டிக் கொள்ள , அவனுக்குத் தெரிந்த ஒரு திரைப்படப் பாட்டின் ஒரு அடியை மட்டும் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறான்.

அந்த அடி என்ன  தெரியுமா? ‘தேவன்’ எழுதியிருப்பது :

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்” !

இது திருநீலகண்டர் ( 1939) படத்தின் மூலம் பிரபலமான ஒரு நகைச்சுவைப் பாடல். நடிகர் டி.எஸ்.துரைராஜ்,

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம் 
அறியச் சொல்லும் எந்தன் முன்னே, முன்னே.” 

என்று ஒரு லாவணிக் கேள்வியை முன் வைக்க, முதலில் திணறும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறகு,


“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம், 
கொழுக்கட்டை தின்னதினால் அண்ணே, அண்ணே.” 

என்று பதில் சொல்வார்! 

காட்சி 2:

பங்களாவில் ஒரு கச்சேரிக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மைதிலிக்கு உண்மை தெரிந்தும், சில காரணங்களால் செல்லமணியைத் தொடர்ந்து வித்வான் வேஷம் போடச் சொல்கிறாள். பிடில்காரர் செல்லமணியை அணுகி, கச்சேரிப் பாடல்கள் பட்டியலைச் சொல்லும்படி வற்புறுத்துகிறார். செல்லமணி தத்தளிக்கிறான். பிடில்காரரையே பட்டியல் போடச் சொல்கிறான். அவர், ‘வாதாபி கணபதிம்” , கரகரப்ரியாவில் “நடசி நடசி”, நிஜமர்மமு, மாருபல்க ‘ என்று அடுக்குகிறார்.

’தேவன்’ எழுத்திலேயே இக்காட்சியின் கடைசிப் பகுதியைப் பார்க்கலாமா?

பிடில்காரர்: “அடுத்தபடி , முகாரி ஆலாபனை பண்ணி ‘ஏமாந்துனே’ பாடுங்கள்” 

செல்லமணி “ஏமாந்தானேயே இருக்கட்டும் “

“ஏமாந்துனே’ என்று சொன்னேன்

“ஏமாந்தானே’ என்ற தமிழ்க் கீர்த்தனையைச் சொல்கிறீர்களாக்கும் என்று நினைத்தேன்” என்று செல்லமணி மழுப்பினான்.

“நான் அந்த மாதிரி கேள்விப்பட்டதே இல்லையே” என்று சந்தேகத்துடன் பார்த்தார் பிடில்காரர்.

“நான் கேட்டிருக்கிறேன்...ஏன், நீங்கள் பாடியே கேட்டிருக்கிறேன்” என்று மைதிலி ஒரே அடியாய் அடித்தாள்.

காட்சி 3:
இதுவும் நாவலில் எனக்குப் பிடித்த ஒரு பகுதி!

செல்லமணி கோரப் பசியுடன் ஓர் ஓட்டலில் நுழைகிறான். ஓர் உள்ளூர் பிரமுகரிடம் ஏதேனும் காரியம் ஆகலாம் என்று எண்ணித் தன்னைப் பஞ்சு பாகவதர் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான் செல்லமணி. அவ்வளவுதான்! வந்தது வினை! அந்தப் பிரமுகர் செல்லமணியைக் குடையத் தொடங்கி விடுகிறார்.

பிரமுகர் : ....எனக்குச் சங்கீதம்னால் உயிர். அங்கேயே படுக்கையைப் போட்டுண்டுவேன். பாடகர்னால் கசக்கிப் பிழிந்திடுவேன்..”

செல்லமணி: “இப்போது நீங்கள் என்ன கசக்கினாலும் ஒரு பாட்டு வராது!”

பாடுவது இருக்கட்டும் ஸார்! ஸங்கீத சாஸ்திரத்தைக் சொல்கிறேன். மத்யமாவதி ராகம் இருக்கிறதல்லவா?”

”ஆமாம், இருக்கிறது! “

அதிலே ஒரு இடத்திலே எனக்கு ஒரு ஸம்சயம் “

“எனக்கு அது பூராவிலுமே இப்போது ஸம்சயமாகத்தான் இருக்கிறது. வயிறு பட்டினியாக இருக்கும் போது -நரம்புகள் வெலவெலத்துப் போயிருக்கும்போது --எல்லாமே  ஸம்சயம்தான் “

வாஸ்தவம்! அப்படியென்றால் , அதைச் சாவகாசமாய் நாளைக் காலையில் வைத்துக் கொள்ளலாம்.”

“ சாப்பாட்டைச் சொல்கிறீர்களா?”

“இல்லை, மத்தியமாவதியை.”

“பிழைத்தேன்! உயிர் வந்தது “

காட்சி 4: 
கடைசியில் “ செல்லமணி - மைதிலி கல்யாணத்தில் பஞ்சு பாகவதர் “ஏமாந்துனே” பாடுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.

‘தேவ’னுக்கே உரித்தான ஹாஸ்யத்துடன், இசையும் கூடச்சேர்ந்து கொண்டு கூத்தாடும் அற்புத நாவல் ‘மைதிலி’.

பி.கு.

1.

‘தேவன்’ நூற்றாண்டு விழாவில், சஞ்சய் சுப்பிரமணியன் இரண்டு மணி நேரம் பாடியபின், நான் பேசும்போது மேற்கண்ட சில தகவல்களைக் குறிப்பிட்டு , சஞ்சய் இந்தத் ‘தேவன்’ நூற்றாண்டு வருடத்தில் எங்கேனும் ‘ஏமந்துனே’ பாடினால் நன்றாய் இருக்கும் என்று கேட்டுக் கொண்டேன். 
( இது தர்மபுரி சுப்பராயரின் ஜாவளி.)

இதோ! சஞ்சய் பாடும் ‘ஏமந்துனே’ ( சஞ்சய்க்கு என் மனமார்ந்த நன்றி!)

’தேவனு’க்கு இந்தப் பாடலே சரியான நூற்றாண்டு அஞ்சலி!

2.

 ‘திருநீலகண்டர்’ படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும், டி.எஸ்.துரைராஜும் பாடும் முழுப் பாடலையும்  இங்கே கேட்கலாம்: ( “அந்தக் கணபதி ...” வரிகள் நடுவில் வருகின்றன)
https://www.youtube.com/watch?v=b0oTnHHpieE#t=59
( நன்றி: நண்பர் சப்தகிரீசன் ! ) 

 தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நூற்றாண்டு விழா -1

தேவன் படைப்புகள்