திங்கள், 9 செப்டம்பர், 2013

தேவன் - 10 : தேவன் நூற்றாண்டு விழா -2

தேவன் 100 (8/9/2013) : ஒரு தொகுப்புரை
சந்தர் சுப்ரமணியன், ஆசிரியர் ‘ இலக்கியவேல்’ 
செப்டெம்பர் மாதம் 8 ஆம் தேதி, சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் தேவன் நூற்றாண்டு விழாவை, தேவன்  அறக்கட்டளை  நடத்தியது. அது குறித்த சில குறிப்புகள்.1. சஞ்சய் சுப்ரமணியம்

திரு சஞ்சய் சுப்ரமணியம் அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரியுடன் விழா தொடங்கியது. சஞ்சய் அவர்கள், தேவனிடம் தங்கள் குடும்பம் கொண்ட தொடர்பைக் குறித்த சில தகவல்களைக் கச்சேரியின் முன்னர் சபையோர்க்குத் தெரிவித்தார். தன் பாட்டனார் தேவனின் நண்பர் என்று நினைவு கூர்ந்ததுடன், தன் பாட்டனார் பற்றிய குறிப்பை, தேவனின் படைப்பிலிருந்தே எடுத்தளித்தார். சஞ்சய் அவர்களின் தந்தையார் துப்பறியும் சாம்பு வேடமேற்று நடித்தவர் என்ற குறிப்பையும் தெரிவித்தார். தேவனின் நூல்களே தன்னுள் தமிழ் இலக்கியம் குறித்த ஆவலைத் தூண்டியதாகத் தெரிவித்தார்.

Sanjay Subramanyam

தேவன் குறித்த நிகழ்ச்சி என்பதால், "தேவ தேவ ஜகதீஸ்வர" என்ற பாடலுடன் தன் நிகழ்ச்சியை அவர் தொடங்கினார். தொடர்ச்சியாக "வேலையா தயவில்லையா எனக்கருள", "ஸ்ரீ மாதா", "யார் போய் சொல்லுவார் எனக்காக", "வா சாம கோசருன்னதி", "தாயே ஏழை பால் தயை செய்வையே", "சொல்லச் சொல்ல  வர்மம் ஏனையா", " ஒருமையுடன் நினது திருமலரடி " என்ற பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்தினார். "தாயே ஏழை பால்" என்னும் பாடலை விஸ்தாரமாக பாடிப் பிரமிப்பூட்டினார். "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற" விருத்தமும் அழகுற அமைந்திருந்தது. வந்தோரின் செவிகளுக்கினிப்பாக எல்லாப் பாடல்களும் அமைந்தது மிகச் சிறப்பாகும்.

2. ஓவியர் கோபுலு அவர்களுக்கு மரியாதையும் கௌரவமும்

தேவனின் நண்பரும் அவர் கதைகளுக்குத் தன் சித்திரங்களின் மூலம் உயிரூட்டியவருமான கோபுலு அவர்களை மன்றம் கௌரவம் செய்தது. திரு ஆர் சேஷசாயி அவர்கள் வரவியலாத காரணத்தால், திரு R T சாரி அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

Gopulu being honoured
Gopulu, 'Nagupoliyan' Balu, Pasupathy


3. "தேவனின் வாழ்க்கை வரலாறு" நூல் வெளியீடு

"தேவனின் வரலாறு - பலரின் பார்வையில் ஒரு வாழ்க்கைச் சரிதம்" என்னும் நூலை திரு சாருகேசி தொகுத்துள்ளார். இந்தத் தொகுப்பு நூலில், தேவன் குறித்து பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பாக அளித்துள்ளார். அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூல் பார்வையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.
இந்த நூலை வெளியிட்ட திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய உரையில் பல வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்தளித்தார். பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்ந்த அவர், அண்ணாவுக்கும் தேவனுக்கும் இடையேயான உறவு குறித்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விளக்கினார். பின்னர் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வை தேவனின் ஒரு வாழ்கை நிகழ்வோடு இணைத்துப் பேசினார். தேவரைக் கைது செய்ய வந்த போது தேவர் தன் கரத்தில் ஏந்திருந்த வேலுக்குப் பூசை செய்து முடித்துவிட்டு வருகிறேன் அதுவரை காத்திருங்கள் என்று கூறியது போலவே தேவனும் பெரியவர் அளித்த வேலைப் பூசை செய்து வந்தார் என்றும் பின்னர் அவ்வேலைக் கோவிலுக்கு அளித்த குறிப்பையும் கூறிச் சென்றார்.

Charukesi, RT Chari, Thiruppur Krishnan, Kizambur , Alliance Srinivasan

நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக தன்னுரையை ஆற்றினார். தேவனும், அவர்களின் படைப்புகளுக்கு சித்திரங்கள் வரைந்தளித்த கோபுலுவும் 'இரட்டை நாயனங்களாகவே' தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளார்கள் என்னும் கருத்தை நினைவுறுத்தினார். ஸ்ரீராம் குருப்பின் முதல் லோகோவை படைத்தவர் கோபுலு என்னும் குறிப்பில், கோபுலுவை 'லோகோபோகரி' என்று கூறிய விதம் அவருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியது. மேலும் சிட்டி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது தானும் சிட்டி அவர்களுக்கு மகன் போல என்பதால் தன்னை ஐந்தாவது "citison" என்று கூறிக்கொண்டார். பொருளடக்கம் இல்லாததை நூலின் ஒரு குறையாகக் குறிப்பிட்ட அவர், அதில் அமைந்துள்ள கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், தேவனின் சகோதரியின் மகன் அன்னம் எழுதிய கட்டுரையின் நடை மிகச் சிறப்பாக உள்ளது என்றார். அது அன்னத்தின் நடை என்பதால் சிறப்பாகவே அமையமுடியும் என்று முடித்தார்.

4. தேவன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல்

அ) பசுபதி அவர்களின் உரை

Gangadhar, NGS Krishnaswamy, Pasupathy
Gangadhar, Pasupathy

தொடக்கத்தில் சஞ்சய் அவர்களின் இசைகுறித்துச் சிலாகித்த பசுபதி அவர்கள், தேவனின் சங்கீத தொடர்புகளைப் பற்றிய குறிப்புகளுடன் தன்னுரையைத் தொடங்கினார். தேவனின் முதல் நாவலான மைதிலியில், நாவலின் நாயகன் செல்லமணி, பஞ்சு பாகவதராக மற்றவர்களால் தவறாக அறியப்படுவதையும் அந்தக் கதையின் ஓட்டத்தில் தேவன் அளித்த பல நகைச்சுவைத் துணுக்குகளையும் விவரித்தார். தர்மபுரி சுப்பராயர் அவர்களின் கீர்த்தனையை 'ஏமாந்தேனே' என்று மாற்றிக் கதையில் ஹாஸ்யத்தை புகுத்திய தேவனின் சாதுர்யத்தை நினைவு கூர்ந்தார்.
தேவனின் பல நாவல்கள் பிரபலமானாலும், அவர் எழுதிய பல்வேறு குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள், தொடர்கள் குறித்துத் தான் உரையாற்ற இருப்பதாகக் கூறினார். தேவன் கோபுலு அவர்களின் கதைச்சித்திர உறவு தமிழ்க் கலாச்சாரத்தின் பொற்காலம் என்று கூறிய பசுபதி, தேவனின் நூல்கள் அனைத்தும் கோபுலு அவர்களின் மூல ஓவியங்களுடன் மட்டுமே பதிப்பிக்கப் படவேண்டும் என்ற தனது கோரிக்கையை முன்வைத்தார். 'கோபுலு அவர்களின் மூலப்படத்துடன் இல்லாது அந்நூல்களை வாசிப்பது பாதி அநுபவமே' என்று குறிப்பிட்டார். பின்னர் கோபுலு குறித்து 'கோபுலு ஓவியர் கோ' என்ற ஈற்றடி கொண்ட தன் வெண்பா ஒன்றை படித்தார்.
பின்னர் தேவனின் குறுந்தொடர்கள் குறித்துப் பேசிய பசுபதி, பல அரிய தகவல்களை பார்வையாளர்களுக்கு வழங்கினார்.

- 'போடாத தபால்' என்னும் குறுந்தொடர் இன்னும் அச்சில் வரவில்லை
- 'அப்பளக்கச்சேரி' பல்வேறு நாட்டுநடப்புக்களையும் செய்திகளையும் கொண்டது. 
1/ஆகஸ்ட்டு/1937 இல் ராஜாஜியை வட இந்தியாவில் ராஜாஜி என்று அழைக்கும் வழக்கம் தொடங்கியது என்ற குறிப்பு இந்த குறுந்தொடரில் உள்ளது 
- 'பிரபுவே உத்தரவு' என்னும் நாடகத்துக்காக எழுதப்பட்ட குறுந்தொடர் இன்னும் அச்சில் வரவில்லை
- 'கண்ணன் கட்டுரைகள்' என்னும் தொடரும் இன்னும் அச்சில் வரவில்லை. இதுவே தேவனின் படைப்புகளில் மிகச்சிறந்ததாகத் தான் கருதுவதாகப் பசுபதி குறிப்பிட்டார்
- 'ராஜாமணி', 'ராஜியின் பிள்ளை' மற்றும் 'அதிசய தம்பதிகள்' போன்ற தொடர்களையும் குறிப்பிட்டார்.
கடித இலக்கியத்தில் தேவனின் பங்கு மிகச் சிறந்தது என்பதை சான்றுகளால் விளக்கினார். 'விச்சுவுக்குக் கடிதங்கள்', 'கமலாவுக்குக் கடிதங்கள்' போன்ற தொடர்கள் மிகச் சிறந்த படைப்புகள் என்று குறிப்பிட்டார். ராசிகள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்வது போன்ற கற்பனை தேவனின் படைப்புகளில் மிக அரிய பொக்கிஷமெனக் கூறினார். அத்தகைய யுக்தி இதுவரை எந்த மொழியிலும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தேவன் வரலாற்று நாவல்கள் எழுதியதில்லை என்பது தவறு என்று குறிப்பிட்ட பசுபதி, 'மல்லாரி ராவ் கதைகள்' வரலாற்று கதைகளே என்று குறிப்பிட்டார். பேஷ்வாக்கள் காலத்தில் நடைபெற்ற கதைகள் அவை என்ற குறிப்பையும் வழங்கினார்.
'துப்பறியும் சாம்பு' தேவனின் துப்பறியும் தொடரென்றாலும், அவர் அதற்கு முன்பே துப்பறியும் கதைகளை எழுதியுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட பசுபதி, 'கோபாலன் கவனிக்கிறார்' என்னும் துப்பறியும் தொடர் தான் அவரது முதல் துப்பறியும் தொடர் என்பதையும் குறிப்பிட்டார். 
'சாகாவரம் பெற்ற சாம்பு' என்றோர் கவிதையை ஆனந்தக் களிப்பு மெட்டில் பசுபதி அரங்கத்துக்கு அளித்தார். அதைத் தொடர்ந்து சி ஐ டீ சந்துரு குறித்தோர் விருத்தத்தையும் படித்தார்.

NGS Krishnaswamy, Pasupathy

இறுதியாக தேவனின் சாயலில் இன்றைய எழுத்தாளர்களை எழுத வைக்கும் வகையில் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

ஆ) எழுத்தாளர் அம்பை

"காரியம் யாவிலும் கைகொடுக்கும் பெண்களும் தேவனின் படைப்பு மாந்தர்களும்' என்ற தலைப்பில் எழுத்தாளர் அம்பை அவர்கள் தன்னுரையை ஆற்றினார். பெண் குறித்து தேவனின் பார்வையை அவர் கதைகளிலிருந்தே அவர் எடுத்துக் கூறிய விதம் சிறப்பாகவும் உருக்கமாகவும் அமைந்திருந்தது. பெண்ணுரிமை குறித்த பல கருத்துகளைத் தேவன் தன் படைப்புகளில் தந்திருந்தாலும், அன்றைய சூழலில் பெண் எப்படியெல்லாம் இருந்தாள் என்பதை உணர்த்தும் காலக்கண்ணாடியாக தேவனின் படைப்புகள் அமைந்திருந்தன என்பதை அழகிய காட்டுகளுடன் விளக்கினார்.
அதைத்தொடர்ந்து, கோபுலு அவர்களின் ஓவியங்கள் தேவனின் படைப்புகளுக்கு எவ்வாறு மெருகேற்றின என்பதைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க, ஒலி-ஒளி (ppt show) காட்சியின் மூலம் கோபுலுவின் சித்திரங்களைத் தொடுத்துக் காட்டினார். லக்ஷ்மி கடாக்ஷம் என்னும் தேவனின் படைப்புக்காக கோபுலுவின் சித்திரங்களைக் காட்டி அவைகுறித்த பின்புலத்தையும் விளக்கினார்.

'Ambai' getting a momento


இ) திரு கங்காதர்

தேவன் படைப்புகளில் P G Wodehouse-இன் தாக்கம் மிகுந்து காணப்படுவதாக கங்காதர் விவரித்தார். 'துப்பறியும் சாம்பு' என்னும் தொடர் pickwick papers என்னும் படைப்பைச் சார்ந்தது என்று குறிப்பிட்டார். மற்றும் தேவனின் பல கதாபாத்திரங்கள் Wodehouse-இன் பாத்திரங்களை ஒட்டி அமைந்துள்ளது என்பதைச் சில சான்றுகளுடன் தெரிவித்தார். நடராஜன் என்னும் பாத்திரம் 'Code of Housters" என்னும் படைப்பிலிருந்து வந்தது என்றும், கான்ஸ்டபுள் கண்ணாயிரம் என்பது கான்ஸ்டபுள் ஹூட்ஸ் என்றும் விளக்கினார்.
ஜஸ்டீஸ் ஜகந்நாதனின் வரும் கோர்ட் காட்சிகள் யாவும் அகதா கிறிஸ்டியின் நடையைப் பின்பற்றுவன என்பதையும் குறிப்பிட்டார்.
தேவனைப் போல எழுத இயலுமா என்று வினவிய கங்காதர், அப்படியே எவரேனும் முயன்றாலும், கால வித்தியாசத்தையும் மீறி தேவனின் நடையின் படைப்புகளைத் தர இயலுமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தேவனின் படைப்புகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருந்தாலும் இன்றளவும் அவரது படைப்புகள் கல்லூரிகளில் பாடநூலாக வரவில்லை என்ற தன் ஆதங்கத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

Gangadhar getting a momento


[ படங்கள் : சந்தர் ]

( தொடரும் )

4 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

தேவன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு மிக அருமையாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி . மல்லாரி ராவ் கதையில் வரும் ராணி கதை மிக நன்றாக இருக்கும் தன் தோழியை திருமணம் செய்து வைத்து விட்டு அரண்மனையிலேயே மறைந்து வாழ்வார்களே! அது தானே சரித்திர கதை. மிக நன்றாக இருக்கும்.கம்பீரமாய் நடந்து வெல்வது போல் முடித்து இருப்பார். படித்து வெகு நாட்கள் ஆகி விட்டது.

S.P. Rajamanickam சொன்னது…

I donot know howmany books by devan translated into
english. were they are available spr

Pas S. Pasupathy சொன்னது…

Only one book ..Justice Jagannathan...has been translated. If you Google , yu can find out who the publisher is. ( If I get some more time, I will do it later and input here.)

Pas S. Pasupathy சொன்னது…

For details about the English translation of 'Justice Jagannathan' see http://www.hindu.com/lr/2004/06/06/stories/2004060600280500.htm

கருத்துரையிடுக