ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்?: கட்டுரை

பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்?
பசுபதி  



ஏப்ரல் 28, 2018.   கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் வெள்ளி விழாவைச் சிறப்புறக் கொண்டாடியது. இணையத்தின் 10-ஆவது ஆண்டு விழாவின் போது ( 2004 ) , நான் எழுதிய வாழ்த்துப்பா நினைவிற்கு வருகிறது.

புலம்பெயர்ந்த நாட்டின் புருவத்தில் வெற்றித் 
திலகமாய், பத்தாண்டுச் சேயாய் -- இலங்கும் 
கனடாத் தமிழெழுத்துக் காப்போர் இணையம் 
வனப்புடன் வாழ்க வளர்ந்து. 




வெள்ளிவிழா மலரில் ,  எழுத்தாளர் இணையத்தில் 03-06-2017 -இல்  நான் ஆற்றிய உரை வெளியிடப் பட்டுள்ளது. இதோ அந்தக் கட்டுரை!
====

1.அறிமுகம்
இன்றையக் கவிஞனான பாரதி அன்றைய சில இலக்கியங்களைப் பற்றி,
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை  என்று சொன்னது யாவருக்கும் தெரியும்.  ஏன் சொன்னான்?
தமிழர்களின் கவனக் குறைவால் பல நூல்கள் ஆற்றிலும், நெருப்பிலும், செல்லரித்தும் போனது உண்மைதான். அக்காரணங்களை மீறி இன்று நிலைத்திருக்கும் பல நூல்கள் ஒரு முக்கியத்துவத்துடன் விளங்குவது ஏன்? என்பதே நம் கேள்வி. இத்துடன் தொடர்புள்ள மற்ற சில கேள்விகளும் உண்டு. பொதுவாக இந்த நூல்களைப் படிப்பதால் என்ன பயன்?  இன்றைய படைப்பாளிகள் இவற்றைப் படிப்பதால் பயன் உண்டா? இவை யாவும்  பொருத்தமான கேள்விகளே.

2. செவ்விலக்கியங்கள்
பண்டையத் தமிழ் இலக்கியங்கள் இன்று நிலைப்பதற்குக் காரணமே அவை செவ்விலக்கியங்கள் ( classic literature )  என்பது ஒரு எளிதான விளக்கம். ஆனால், நிலத்திருப்பன யாவும் இலக்கியங்கள் என்று சொல்ல முடியாது. அவற்றுள் செவ்விலக்கியங்கள் யாவை? என்ற கேள்விக்குப் பதிலாக  செவ்விலக்கியத்தின் பண்புகள் யாவை என்பது பற்றிச் சிந்திக்கலாம்.. 

எல்லா மொழிகளிலும் செவ்விலக்கியங்கள் உண்டு.  இவை யாவற்றிற்கும் சில பொதுப் பண்புகள் உண்டு. பல  அறிஞர்கள் கூறியவற்றைத் தொகுத்துப் பார்ப்போம். இவற்றுள் ஒவ்வொன்றைப் படிக்கும்போதும்  ஒவ்வொருவருக்கும் ஒரு தமிழ் இலக்கியம் தானாகவே மனத்தில் தோன்றும்!  ஒரு தமிழ் இலக்கியத்திற்கே இத்தொகுப்பில் உள்ள பல பண்புகள் பொருந்தும் என்பதும் வெளிப்படை.

1) அமெரிக்க அறிஞர் மார்க் டுவெய்ன் சொன்னார்: “  எல்லோரும் முன்பே படித்திருக்க வேண்டும் என்று விரும்புவது, ஆனால் ஒருவரும் படிக்க விரும்பாதது. அதுதான் செவ்விலக்கியம். “
2) செவ்விலக்கியம்  அது படைக்கப்பட்ட காலத்தின் குரலாக இருக்கும்; ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மைகள் கொண்டிருக்கும். அதில் அகில உலகத்வமும் ( universality) இருக்கும். படைப்பாளியின் தனிப்பட்ட ஆத்மாவும் தெரியும்.
3)  செவ்விலக்கியத்தின் தாக்கம்  அதைப் படிக்கும் போதும் இருக்கும்; பின்னர் நம் ஆழ்மனத்தில் மறைந்திருந்தும் நம்மைத் தாக்கும்.
4)  மீண்டும் ஒரு செவ்விலக்கியத்தைப் படிக்கும் போதும்,  முதலில் படிக்கும்போது ஏற்படும்கண்டுபிடிப்புஅனுபவம் குறையாமல் இருக்கும்.
5)  எப்போதும் தான் சொல்லவேண்டியதை அது முழுதும் சொல்லி முடிக்காது.
6)  அதைச் சுற்றி ஒரு பேருரைச் ( discourse) சூழ்நிலை  மேகம் போல் எப்போதும்  இருக்கும், ஆனால் அது எப்போதும் அந்த மேகத் துகள்களை உதறி நிற்கும்.
7)  படிக்குமுன் எவ்வளவு தான் அதைப் பற்றி நாம் பலவாறு கேள்விப் பட்டிருந்தாலும், அதை முதன்முறை படிக்கும் போது  அதனுள் இருக்கும் புதுமையும், சுயமான சிந்தனையும் நம்மை ஆச்சரியப் படுத்தும்.
8) ஒருவரின் செவ்விலக்கியம் என்று ஒன்று இருந்தால், அதை  அவர் என்றும் ஒதுக்க முடியாது;  அதனுடன் உள்ள உறவாலோ, அல்லது எதிர்ப்பாலோ அது அவரை முற்றிலும்  வரையறுக்கும்.
9)  இன்று அந்த செவ்விலக்கியத்திற்கு முற்றும் மாறுபட்ட சூழ்நிலை சமூகத்தில் இருந்தாலும், அந்தச் செவ்விலக்கியம் ஒரு பின்புறத்து மெல்லிய சப்தமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
10) பொதுவாக, மக்கள்அந்தச் செவ்விலக்கியத்தைப் படிக்கிறேன்என்று சொல்ல மாட்டார்கள்; “ அதை மீண்டும் படிக்கிறேன்என்றுதான் சொல்வார்கள்.
11) அதை மீண்டும் படிக்கும்போது,   முதலில் படித்ததை விட நூலில் அதிகமாக எதையும் ஒருவர் பார்க்க மாட்டார்; ஆனால்,  முன்பு அவருக்குள் பார்த்ததை விட, இப்போது  அதிகமாய் அவருக்குள்ளே பார்ப்பார்.
12) காலதேச வர்த்தமானங்கட்கேற்ப மாறுபட்டு உதவக்கூடிய தழுவல் இயல்பே ( adaptability ) நிலைபேற்றுக்கு மூலகாரணம்.

3) தமிழ்ச் செவ்விலக்கியங்கள் : சில காட்டுகள்

தமிழ் இலக்கியங்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். கால வரிசையில் பிரித்தால், சங்க நூல்கள், நீதிநூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள் என்றெல்லாம் 18-ஆம் நூற்றாண்டு வரை நாம் பயணம் செய்யலாம். இவற்றுள் சில நூல்களைக் காட்டுகளாய்க் கொண்டு, அவை இன்றும் நிலைத்து நிற்கும் காரணங்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாய்க் கவனிப்போம்.

3.1 தொல்காப்பியம்

தொல்காப்பியம் இன்றும் ஓர் கலங்கரை விளக்காய் விளங்க என்ன காரணம்?  மொழிக்கே ஆதாரம் அதன் இலக்கணம், அதுவும் தொல்காப்பியம் ஒரு தொன்மையான தமிழ் இலக்கண நூல்என்ற காரணம் நம் மனத்தில் முதலில் எழும். அதற்கும் மேலாக இருக்கும் பல காரணங்களில், அதன்தனித்துவம்முக்கியமான ஒன்று. மற்ற இலக்கண நூல்களைப் போல் இராமல், “பொருளதிகாரம்என்ற ஒரு பகுதியில் தமிழ் மக்களின் அன்றைய வாழ்வியலை விவரிக்கிறது தொல்காப்பியம். மேலும், நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்கள் தொல்காப்பியத்தை அஸ்திவாரமாய்க் கொண்டு எழுதப் பட்டதாலும் இத்தகைய இலக்கண நூல்களின் தொடர்ச்சியாலும் தொல்காப்பியம் நிலைத்து நின்றது. தொல்காப்பியத்தின் பெரும்பகுதி கலாசாலைகளில் பாடநூலாகவும் விளங்கியது. இன்று பரவலாகப் பல உரையாசிரியர்களின் நூல்களும், ஆங்கில மொழிபெயர்ப்புகளும்,  தொல்காப்பிய மன்றங்கள் தோன்றி ஆர்வமுடன் செயல் படுவதும் நூலை நிலைத்து நிற்கத் துணை செய்கின்றன. நூலை அறிமுகப் படுத்தி, இளைஞர்களும் அணுகக் கூடிய வகையில் 1946-இல் கி.வா.ஜகந்நாதனால் எழுதப் பட்டபயப்படாதீர்கள்! ’ போன்ற நூல்களும் இப்பணிக்கு உதவுகின்றன.   

3.2 சங்க நூல்கள் :

பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தாம் சங்க இலக்கியங்கள். 

தமிழர் பெருமைபடக் கூடிய வகையில் பல ஆழ்ந்த கண்ணோட்டங்களைக் கொண்ட இந்த நூல்கள் நிலைத்து நிற்கப் பல காரணங்களை ஒவ்வொரு தமிழரும் எளிதில் சொல்லக் கூடும். நாம், ..ஞானசம்பந்தனின் ஒரு கருத்தின் வழியே இதைப் பார்ப்போம்.

..ஞா சொல்கிறார்: “உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் தன் நிலைபேற்றிற்கு ஓயாது போரிடலும் அப்போரில் வலிமை மிகுந்தவை எஞ்சுதலும் இயற்கைஎன்பதேநிலைபேற்றுச் சட்டம்என்ற இயற்கையின் மாற்ற முடியாத சட்டம். ( Struggle for existence and survival of the fittest ). இச்சட்டம் உயிர்கட்கு மட்டுமல்லாமல் இலக்கியங்களுக்கும் பொருந்தும்.

. இதுவரை ஒவ்வொரு மொழியிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் தோன்றியுள்ளன. நம் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் எத்துணை இலக்கியங்கள், இன்று நிலைத்துள்ளன? கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றிய பல பாடல்கள் இன்றும் வாழுகின்றன. ஆனால், இவற்றின் பின்னர்ப் பல காலங் கழித்துத் தோன்றிய அநேக நூல்கள் இருந்த சுவடுந் தெரியாமல் மறைந்துவிட்டன. பழம்பாடல்கள் இன்னும் வாழக் காரணம் என்ன? இவை தோன்றிய் நாள்தொட்டு இன்றுவரை எத்தனை வேற்று நாகரிகங்கள், காற்றுக்கள் தமிழ்நாட்டில் புகுந்தன? எத்தனை சமயக் கோட்பாடுகள் புகுந்தன? என்றாலும் என்ன? இவ் இலக்கியங்களின் நிலைபேற்றை அவ் வேற்று நாகரிகங்கள் ஒன்றுஞ் செய்ய இயலவில்லை. முன்னர்த் தோன்றிய இவை வாழப் பின்னர்த் தோன்றிய நூல்கள் அழியக் காரணம் யாது? தமிழரின் கவனக்குறைவால் ஓரளவு அழிந்தமை உண்மை தான். ஆனால், பல இலக்கியங்கள் நிலைபேற்றுக்குரிய பண்பாட்டைப் பெற்றிருக்கவில்லை; அதனாலேயே மறையலாயின

மேலும், சங்க நூல்களைத் தொகுத்தவர்கள் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பாடல்களுக்கிடையே சிறந்தவற்றைத்தான் நமக்கு நூல்களாக வழங்கியிருக்கிறார்கள். அதனால், “நிலைபேற்றுக்குரிய பண்பாடுசங்க நூல்களுக்கு இருந்ததால் இன்றும் வாழ்கின்றன எனலாம்.

பத்துப் பாட்டிலிருந்துபட்டினப்பாலையையும் எட்டுத்தொகையில்பரிபாடலையும் காட்டுகளாய்ப் பார்ப்போம்.

பட்டினப்பாலைஇன்றும் நிலைக்கக் காரணம் என்ன? அறிஞர் அ..ஞானசம்பந்தன் விவரமாய் ஆராய்கிறார்:
 பட்டினப்பாலை என்பதோர் இலக்கியம் உண்டு. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற கலைஞர் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை வருணித்துள்ளார் இந்நூலில். அவர் கூறிய அப்பட்டினம் இன்று இல்லை; கரிகாலன் இல்லை. அதில் குறிக்கப்பெற்ற மக்களும் இல்லை. என்றாலும், பட்டினப்பாலை இருந்து இன்பமூட்டித்தான் வருகிறது. இதன் காரணத்தை ஆயும்பொழுது முன்னர்க் கூறிய உயிர் நூல் தத்துவம் சிறிது மாறுபடுகிறது. அத் தத்துவத்தின்படி உயிர்கள் தழுவல் இயல்பு பெற்றதால் நிலைபெறுகின்றன என்று கூறினோம். பட்டினப்பாலையின் நிலைபேற்றுக்குக் காரணம்' இவ்வியல்பன்று. உருத்திரங்கண்ணனார் கண்ட பட்டினமே.நூலில் கூறப்பெற்றிருப்பினும், கூறும் முறையில் அது என்றும் நிலைபெறத் தக்க சிறப்பை அடைகிறது. உருத்திரங் கண்ணனார் தமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பின்னர் வாழப்போகும் மக்கள் என்ற இரு சாராரையும் பிடித்து ஆட்டும் இயல்பு உணர்ச்சி, பண்பு. போராட்டம், மகிழ்ச்சி, துன்பம் என்ற பொதுத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டும் கவிதையை ஆக்கியிருக்கிறார். ஆகலின், அது இன்றும் நிலைக்கிறது. நாளையும் நிற்கும். மக்களினம் எவ்வளவு வளர்ந்தாலும், மாறினாலும் இவ்வடிப்படைத் தன்மைகள் மாறப்போவதில்லை. மக்கள் மாக்களாக மாறுகிறவரை இவ்விலக்கியம் சுவையுடையதாகவே இருக்கும். காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த கலைஞர்களைப் பற்றியே உருத்திரங் கண்ணனார் பாடினும், மேற்கூறிய பொதுத் தன்மை காரணமாக நாம் இன்றும் அதனை அனுபவிக்க இயலுகிறது. காலதேவன் மக்கள் இனத்தையே அழித்தால் ஒழிய, இப் பொதுத்தன்மையை அழிக்க இயலாது; எனவே இத்தன்மையாகிய அடிவாரத்தில் முகிழ்த்த இலக்கியங்களையும் ஒன்றும் செய்ய முடியாது.

இப்போதுபரிபாடலைப் பார்ப்போம்.

திரைப்படங்களில் வரும் இசைப்பாடல்கள் இரண்டு வகை: பாட்டுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு. பிரபல இசையமைப்பாளரின் அழைப்புக்கு வரும் ஒரு பிரபல கவிஞர்என்ன வேண்டும்? மீட்டருக்கு மேட்டரா? மேட்டருக்கு மீட்டரா? “ என்று கேட்பது வழக்கம் என்று கூறுவர்!  சுருக்கமாய்ச் சொன்னால்பாடலுக்கு மெட்டுப்போட்ட பண்டைய இசைப் பாடலே பரிபாடல்! இந்தப் பெருமையுடன், ஒரு மர்மமும் அதனுள் ஒளிந்திருப்பதால் பரிபாடல் இன்றும் முக்கியத்வம் பெற்று நிலைக்கிறது. 

மேலும் விளக்குவோம். தொல்காப்பியர் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாக்களைச் சொல்லியிருப்பதை நாம் அறிவோம். கூடவே பரிபாடல் என்ற ஒருவகைப் பாடலுக்குரிய இலக்கணம் சில தொல்காப்பியச்  சூத்திரங்களில் வருகின்றன. பரிபாடலில் உள்ள பாடல்கள் இந்தப் பாவகையில் யாக்கப்பட்டவையே. இதற்குப் பின் பரிபாடலில் அமைந்த வேறு நூல்கள் நமக்குக் கிட்டவில்லை, அல்லது தோன்றவே இல்லை. இத்தகைய இலக்கியம் படைக்கப் படாததால், பரிபாடலின் இலக்கணமும் வளரவும் இல்லை, இலக்கணமே  இல்லை என்றும் ஆயிற்று. பரிபாடல் என்ற இசைப்பாட்டின் பின்குறிப்பில் பாடலை இயற்றியவர் யார், இசையமைத்தவர் யார், என்ன பண் போன்ற குறிப்புகள் உள்ளன.

பரிபாடலின்  இலக்கணம் இன்றும் புரியாத முடிச்சாய் இருப்பதாலும், ’பாடலுக்கு மெட்டுப் போடப்பட்ட பண்டைய தமிழ்ப் பாடல் என்பதாலும் பரிபாடல் முக்கியத்வம் அடைகிறது.  சங்க காலத்தில் இருந்த இத்தகைய இசைப்பாடல் நிலை எப்படிச் சிலம்பின் காலத்தில் வளர்ச்சி அடைந்து பரிமளித்தது என்பது ஆய்வுக்குரியது.      

3.3 திருக்குறள்
சங்கம் மருவிய காலத்தில் எழுந்தவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். இவை பெரும்பாலும் நீதி நூல்கள். இவற்றுள் உலகப் பொதுமறையாய் நீதிகளை, கவித்துவத்துடன் வழங்கிய நூல் திருக்குறள். ‘தமிழ்என்ற சொல்லை ஒரு முறை கூடப் பயன்படுத்தாமல், தமிழுக்கோர் பெருமையை அள்ளித்தரும் நூல் திருக்குறள். இன்றும்வாழும் இலக்கியமாய் இருக்கும் திருக்குறளின் சிறப்புகளில் சில :
1) எந்தக் காலமானாலும் அந்தந்தக் காலத்திற்கேற்ற பல கருத்துகள் உள்ள நூல் இது. அதனாலேயே, பழங்காலத்திலேயே பத்துபேர் உரைகள் எழுதினர். பிற்காலத்தில் எழுதினவர் பலர்! அதிகமான உரைகள் பெற்ற தமிழ் நூல் இது ஒன்றாய்த்தான் இருக்கும்.
2) பிறநாட்டவர் பலரும் பாராட்டிய நூல். மொழிபெயர்ப்பு நூல்களிலும் , இதுவே மிகுதியான மொழிபெயர்ப்புகளை உடையது.
3) மேலும் பல அழகான நூல்களுக்கு வழிவகுத்த அஸ்திவார நூல். திருக்குறளை விளக்கும் வகையில் குறட்பாவை பின்னே வைத்து முன்னிரண்டடிகளில் எடுத்துக்காட்டான கதைகளைக் கொண்ட  வெண்பா நூல்கள் பல உள்ளன.  சோமேசர் முதுமொழி வெண்பா, தினகர வென்பா, இரங்கேச வெண்பா, முருகேசர் வெண்பா, சினேந்திர வெண்பா போன்ற 14 நூல்கள் உள்ளன. திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் சுருக்கி ஒரு வெண்பாவாய் எழுதப் பட்டவள்ளுவர் வாசல்என்ற நூலும் உண்டு.
4) .வே.சு ஐயரின் விமரிசனம் திருக்குறளின் பெருமையை விளக்குகிறது . ” மனிதனால் என்றும் வெளியிடப்படாத மிக ஆழமான கருத்துகளைச் சுருக்கி இந்த ஆசிரியர் ஏழே சீர்களில் அமைத்திருக்கிறார். இந்தச் சிறிய இன்னிசைக் கருவியை அவர் சிறந்த இசைவல்லுநனைப் போல எவ்வளவு அழகாக வாசித்திருக்கிறார்! ஒளி விடும் சாதுரியம், நகைச்சுவை, அழுத்தமாய்ச் சொல்லுதல், கற்பனை, முரண்பாட்டு நயம், வினாவுதல், ஓவியம் போன்ற உவமைகளை, இப்படிக் கருவிலே திருவுடைய கலைஞன் ஆளும் ஆயிரம் உத்திகளில் ஒன்றையும் அவர் இந்த முழுமையான கலைப்படைப்பில் ஆளாமல் விட்டுவிடவில்லை! “ என்கிறார்.
5) இன்றைய இயந்திரமயக் காலத்திற்குப் பொருத்தமான சான்றுகள்:  திருக்குறளில் உள்ள பேராண்மை, நிர்வாகம், ஆளுமை போன்ற கருத்துகள் பற்றி எழுதப் பட்டுள்ள பல நூல்கள். 
6) திருக்குறள் ஒரு முத்தமிழ் இலக்கியம் என்றே கூறலாம். காமத்துப் பால் முழுதும் நாடக பாணிதானே! மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி போன்றோர் இயற்றிய திருக்குறள் கீர்த்தனைகளில் திருக்குறள் இசைத்தமிழை ஒலிக்கிறது! ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓர் ஓவியம் என்றும் பல சிறந்த ஓவியர்கள் நூலைச் சிறப்பித்துள்ளனர். கதைகள், நாடகங்கள், ஆய்வுகள், போட்டிகள் என்று பல துறைகளிலும் திருக்குறள் கோலோச்சுகிறது.
7)  வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
     வான்புகழ் கொண்ட தமிழ்நாடுஎன்ற பாரதியின் சொற்களுடன் திருக்குறளின் சிறப்புப் பட்டியலை நிறைவு செய்வோம்.

3.4 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் இன்றும் நம்நெஞ்சை அள்ளும்நூலாய் இருப்பதன் காரணங்கள் என்ன?

1) நமக்குக் கிட்டிய தமிழ்க் காப்பியங்களில் இதுவே பழமை உடையது. எந்த வடமொழி நூலையும் ஆதாரமாக வைத்து எழுதப் படாத மூல நூல்.

2) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
   உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
என்று சிலம்பில் சொல்லப்பட்ட மூன்று கருத்துகளும் இன்றும் முக்கியமாய்க் கருதப்படுகின்றன..
3). மேலும், அரசர்களைக் கதாநாயகர்களாகக் கொள்ளாமல் வணிகர் குலத்தைச் சேர்ந்தவரைப் பற்றி எழுதப் பட்டமக்கள்காப்பியம் இது. இளங்கோ செய்த புதுமைகளில் இது ஒன்று.

4) காப்பியத்தில்  சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் சிந்தனைகள் நிறைந்திருக்கின்றன. மூவேந்தர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசர்,வேளாளர், குறவர், பரத்தையர் என்று பல இனத்தவரும் வருகின்றனர். நகர நாகரிகமும், நாட்டுப்புற வாழ்வியலும் ஒருங்கே பேசப்படுகிறது.

5) சிலம்பு ஒரு முத்தமிழ்க் காப்பியம் . இயல், இசை, கூத்து மட்டுமன்றி கோவில், சிற்பம், ஓவியம் பற்றியும் பல செய்திகளைச் சொல்கிறது.  முக்கியமாக, அரங்கேற்று காதையில் உள்ள இசை பற்றிய தகவல்கள் பல ஆய்வுகளுக்கு வழி வகுத்து வருகின்றன. தமிழிசையின் கூறுகளான பண், திறம் போன்றவையும், குரல், முதலிய ஏழு சுரங்களும், ஏழு பாலைப் பாடல்களும், பாடலாசிரியன், யாழாசிரியன், குழலாசிரியன் தண்ணுமை ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்கள் ஆகியவையும் அரங்கேற்று காதையில் இடம்பெறுகின்றன. சங்கீத கலாநிதி டாக்டர் எஸ்.ராமநாதனின்சிலம்பில் இசைஎன்ற ஆய்வுரைக்கு அமெரிக்காவில் உள்ள வெஸ்லியன் கல்லூரி முனைவர் பட்டம் வழங்கியது குறிப்பிடத் தக்கது. ( சிலம்பில் உள்ள செய்திகள் சிலவற்றைக் கேட்டுப் பிரமித்த அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் ராமநாதனை ஆய்வுரை எழுதச் சொன்னார் என்பர்.)  

மேலும், அல்லியம், கொடுகொட்டி, பாண்டரங்கம், முதலிய பதினொருவகை ஆடல்கள், தேசி, மார்க்கம், வேத்தியல், பொதுவியல் என்ற பல்வேறு ஆடல் மரபுகளையும் நாடக மேடையின் அமைப்பு, அதில் விளக்கமைத்தல், மூன்று வகையான திரைச்சீலைகள் முதலிய  கூத்தைப் பற்றிய பல தகவல்களை ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். பழங்காலக் கூத்து ஒன்றின் இலக்கிய வடிவே சிலம்பு என்ற கருத்தும் உள்ளது.

6) இளங்கோ செய்த பல புதுமைகள் உள்ள நூல் இது. அவர் காலத்தில் வழங்கிய நாட்டுப்புறப் பாடல்களின் சாயலில் பல அற்புத, புதுத் தமிழ்ப் பாடல் வகைகளை அவர் அறிமுகப் படுத்துகிறார். அதனால், “பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை இன்று நாம் உணர்வதற்குச் சிலப்பதிகாரம் ஒன்றே உதவுகிறது “ ( மு.வரதராசனார் ). பிற்காலத்தில், பாவினங்கள் விருத்தம், துறை, தாழிசை என்றெல்லாம் வளர இவையே வழிகாட்டி நின்றன.

 பொதுவில் பழிக்கப்படும் கணிகையை காப்பியத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வைக்கிறார் இளங்கோ. மேலும், “ விலைமகளிர் குடும்பத்தில் பிறந்த ஒருத்தி தன் குலத் தொழிலைப் பழித்து ஒதுக்கிய துணிவைப் பதினெட்டு நூற்றாண்டுக்குமுன் முதன்முதலில் இந்தக் காப்பியத்தில் தான் காண்கிறோம்”. ( மு..).
7) சில அறிஞர்களின் மதிப்பீடுகளைக் காண்போம்:
"சிலப்பதிகாரம் நமக்குக் கிட்டாமல் போயிருந்தால் மற்ற தமிழிலக்கியப் பரப்பின் உதவியாலோ, தொல் காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களாலோகூட நாம் பண்டைத் தமிழிலக்கியத்தின் அரும்பெரும் மாண்பையும் அகல் விரிவையும் அவ்வ ளவாக மதிப்பிட்டு அறிய முடியாதவர்கள் ஆவோம்''  ( கா. அப்பாத்துரையார் )

1. தலையாய முத்தமிழ்க் காப்பியம் 2. சிறப்பான தமிழ் வரலாற்றுக் காப்பியம்
3. புரட்சி மிகுந்த அரசியல் காப்பியம் 4. பெண்மைக்குப் பல்லாண்டு பாடும் காப்பியம். ( .கைலாசபதி )

"இளங்கோ அடிகளின் நோக்கமே தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டுவதுதான்; அதற்கேற்பவே காவியத்தைக் கட்டியுள்ளார் …. சித்திரச் சிலப்பதிகாரம் செந்தமிழ் நாட்டிற்கு விடுக்கும் செய்திகள் பலப்பல. இன்று நாமும் நம் தலை முறையும் பெற்றுள்ள உணர்வூட்டும் செய்திகளுக் கெல்லாம் சிறப்புடையதாய் விளங்குவது மொழிப்பற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பற்றே ஆகும்''   ( ந. சஞ்சீவி. )

8) நூலில் உள்ள ஆய்ச்சியர் குரவையும், வேட்டுவ வரியும், குன்றக் குரவையும்   பிற்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களான தேவார, பாசுரங்களுக்கு வழிகாட்டியாய் அமைகின்றன

3.5 ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள்  ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றில் சில காப்பியங்கள் ஏன் இன்றும் நிலைத்து நிற்பதேன்? என்று கேட்பதற்குப் பதிலாகஏன் சில காப்பியங்கள் அழிந்து விட்டன?” என்று கேட்டாலும் நமக்குத் தகுந்த விடை கிடைக்குமல்லவா? ..ஞா. சொல்வதைக் கேட்போம்:

இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமும் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தாமணியும் வாழ, இவற்றின் பின்னர்த் தோன்றிய வளையாபதி முதலியவை அழிவானேன்? நிலைபேற்றுப் போராட்டத்தில் சிலப்பதிகாரம் போன்றவையே வெற்றிபெற்றன போலும்? வளையாபதி போன்ற நூல்களிலும் விஞ்ஞான மெய்ம்மைகளைப் பேசும் நூல்களிலும் உள்ள தத்துவங்கள் பலராலும் அறியப்பட்டபிறகு அவை நிலைக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. இம்மெய்ம்மைகளை வேறு முறைகளில், வேறு நூல்கள் பேசிவிடுகின்றன. யாக்கை நிலையாமையைப்பற்றி வளையாபதியார் கூறியதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், அவர் அதனைக் கூறிய முறை கொண்டே அந்நூலை இலக்கியமா இல்லையா என்று ஆய்கிறோம். அவர் கூறிய முறையைக் காட்டிலும் சிறந்த முறையில் அதனைப் பிற்காலத்தார் கூறிவிட்டால் அப் பழைய நூல் அழிந்துவிடுகிறது. இதனால் ஓர் அழகிய முடிபு கூறுகிறார். இலக்கியம்பற்றி 'வின்செஸ்டர் : "எந்த ஒரு நூல் கூறியதை அடுத்த நூற்றாண்டில் வரும் நூல் இன்னும் அழகாகக் கூறிவிடுகிறதோ அந்த நூலை இலக்கியம் என்று கூறமுடியாது. மேலும் அவர், -'உணர்ச்சியைத் தூண்டும் அளவைப் பொறுத்தே ஒரு நூல் நிலைபேற்றை அடைகிறது. அதற்கேற்ற அளவில்தான் இலக்கியம் என்ற பெயரையும் பெறுகிறது" என்கிறார். உயிரினங்களில் நிலை பேற்றுக்குரிய பண்பாடுகளாக எவை உள்ளன என்று காண்பது இன்றியமையாததாகிறது. காலதேச வர்த்தமானங்கட்கேற்ப மாறுபட்டு உதவக்கூடிய தழுவல் இயல்பே நிலைபேற்றுக்கு மூலகாரணம். இனி, இலக்கியங்களிலும் இத்தகைய இயல்பு உண்டோ என்று காண்டல் வேண்டும். ஒரு வகையில் நோக்குமிடத்துக், காலத்தை வென்று நிலைத்த நூல்களிடம் இவ்வியல்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், உயிர்களிடம் காணப்பெறும் இவ்வியல்புக்கும், நூல்களில் காணும் இவ் வியல்புக்கும் ஒரு சிறு வேறுபாடு உண்டு. புதிதாக ஓர் இலக்கியம் ஒரு காலத்துத் தோன்றுவதாக வைத்துக்கொள்வோம். எந்தக் காலத்தில் அது தோன்றுகிறதோ அந்தக் காலத்திற்கு ஏற்ற பல கருத்துக்களைக்கொண்டே, அது இருக்கும் என்றுகூறத் தேவையில்லைஎத்தகைய மக்கள் இனத்திற்காக அது தோற்றுவிக்கப்படுகிறதோ அக் கூட்டத்தாரிடை அதன் செல்வாக்கு உயர்ந்து, காணப்படும். சிற்சில சமயங்களில் தோன்றும் சில நூல்கள். எல்லையற்ற செல்வாக்குப் பெற்று மிளிர்தலையுங் காணலாம். அந் நூல் தோன்றும் காலத்தில், மக்கள் சமுதாயத்தை என்ன எண்ணம் பிடித்து ஆட்டுகிறதோ, அவ்வெண்ணத்தை அடிப்படையில் கொண்டு தோன்றும் ஒரு நூல் செல்வாக்குப் பெறுதலில் வியப்பு ஒன்றுமில்லை. இங்ஙனம் அதிகச் செல்வாக்கை, ஒரு நூல் ஒரு காலத்தில் பெற்று விளங்குவதால், அந் நூல் சிறந்தது என்று கூறுவதற்கில்லை. உண்மையில் அது மிகச் சாதாரணமான ஒன்றாகக்கூட இருக்கலாம். புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் தமிழ்நாட்டில் இன்னும் சில ஆயிரம் பிரதிகட்குமேல் செலவாகவில்லை. ஆனால், கதைப் புத்தகங்களும், கதைகளையே கொண்டு வெளிவரும் வார திங்கள் இதழ்களும் பல ஆயிரக்கணக்கில் செலவாகின்றன. இதனால் இவை சிலப்பதிகாரத்தைவிடச் சிறந்தவை என்று. யாருங் கூற முன்வருவதில்லையே? இத் திங்கள், வார இதழ்களைப் போலவே சில நூல்களும் தோன்றுகின்றன. இத்தகைய நூல்கட்கு இன்றைய தமிழ் நாட்டில் பஞ்சமேயில்லை. புற்றீசல்கள் போலத் தோன்றும் இந்நூல்கள், அவ்வீசல்கள் போலவே மறைந்தும் விடும், சில ஆண்டுகள் அல்லது ஒரு தலைமுறை கழிந்தபின்னர். ஒருவரும் இத்தகைய நூல்களைக் கண்ணெடுத்துப் பாரார்: அதோடு மட்டுமன்று. இதனை விரும்பிக் கற்ற தங்கள் முதல் தலைமுறையார்களின் மதியைக் கண்டு வியப்பும் அடைவர்.

3.6 கம்பராமாயணம்
கம்பன் பிறந்த தமிழ்நாடுஎன்ற பாரதியின் வாக்குக்கு மேல் நாம் என்ன கூறமுடியும்? கூற வேண்டும்?

கம்பன் இன்றும் வாழ்கிறான் என்பதற்கு நானே ஒரு சாட்சி. 65 –வருடங்களுக்கு முன் , பி.ஸ்ரீ. என்ற தமிழறிஞர் சுமார் 14 வருடங்கள்ஆனந்த விகடனில்  சித்திர ராமாயணம்என்ற தொடர் மூலம் கம்பனை என்னைப் போன்றவர்க்கு அறிமுகப் படுத்தினார். ( எனக்குத் தெரிந்து இத்தனை ஆண்டுகள் வந்த ஒரு தொடரை நான் பார்த்ததில்லை! – அதுவும் , ஒருஜனரஞ்சகஇதழில்! )   கல்கிஇதழிலும் ரசிகமணி டி.கே.சி. “கம்பர் தரும் காட்சிஎன்ற தொடர் மூலம் அவருக்கே உரிய முறையில் உணர்ச்சி பூர்வமான கம்பனை எங்களுக்குக் காட்டி வந்தார்.  இந்தத் தலைமுறையிலோ, அதேசித்திர ராமாயணத் தொடரைச் சுருக்கி இப்போது வெளியிட்டு வருகிறதுசக்தி விகடன்” ! மேலும், வருடா வருடம் கம்பனைப் பற்றிய பட்டிமன்றங்களும், உரைகளும், ஆய்வு நூல்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், ’ வற்றாத நதியைப் போல்நம் இலக்கிய தாகத்தைத் தொடர்ந்து தணித்து வரும்கம்பன் கவிகள்தாம்!

கம்பனைப் பற்றிச் சில மதிப்பீடுகளைப் பார்ப்போம்.  
கம்பரின் விளக்கங்கள், சிறந்த சொல்லோவியங்களாக ஒளிர்கின்றன. உரையாடல்களும் காட்சிகளை அமைக்கும் திறமும் நாடகச் சுவை நிறைந்தனவாக உள்ளன. உவமைகள் புதுப்புது அழகு வாய்ந்தனவாக அமைந்துள்ளன. திருக்குறள் முதலான பழைய நூல்களின் சொற்களையும் கருத்துகளையும் அவர் கையாளும்போது, அவற்றிற்கு மெருகு ஏற்றி மேலும் விளக்கமுறச் செய்துள்ளார். கம்பருடைய தமிழ்நடை ஒப்பற்ற அழகு உடையது. தமிழ் மொழியின் திறம் முழுதும் புலப்பட அந்த மொழியைக் கையாண்ட புலவர் கம்பர் “ ( மு. வரதராசன் )

சில புலவர்கள் தம் காலத்து உணர்ச்சிகளுக்கு உட்பட்டு அக்காலத்தின் மணம் நெடுக வீசும்படி பாடுவார்கள். சிறந்த புலவர்களே தம்முடைய கற்பனையின் உயர்வாலும் கவியாற்றலாலும் தாம் வாழும் காலத்தையும் இடத்தையும் அடியோடு மறந்து, புழுதி படாத நெடு வெளியிலே மிக உயரத்தில் பறக்கும் கருடனைப் போல உலாவுவார்கள். முன்னவர்கள் காலத்திற்கு அடிமையாகிறவர்கள்.  பின்னவர்கள் காலத்தை அடிமையாக்குகிறார்கள். கம்பர் காலத்தை விஞ்சி நின்றவர். காலம் அவரிடம் தோல்வியுற்றது” ( கி.வா.ஜகந்நாதன் )

சங்க இலக்கியத்தின் தனிக் கவிதைகளின் தழைவும், வள்ளுவர் வகுத்த வரன்முறை வளமையும், சிலப்பதிகாரத்தின் தொடர்நிலைச் செய்யுளின் சிறப்பும், சிந்தாமணியின் கதைக் கோவைக் கவிதைகளின் கனிவும், வேதக் கவிதைகளின் வியப்பும், வான்மீகனது வனக்கவிதையின் வனப்பும், வ்யாஸனது கட்டுக்கோப்பின் கணிப்பும், காளிதாஸனது காதற்கவிதைகளின் நளினமும், நயப்பும் கலந்து கனிந்த காவியக் களிப்பு கம்பனது கவிதையில் பளிச்சிட்டு மின்னிப் பரவசம் செய்கின்றது, ஒரு புத்தழகும் புத்தொளியும் பெற்று” ( .து.சு.யோகியார் )

 தமிழின் வனப்பு, உவமை நலன்கள், இயற்கை வளன், அலங்காரங்கள், அணிகள், அங்கதம், நாடகம், கருணை, போர், வீரம், காதல், விரகம், நட்பு, சகோதரத்துவம் என சகல உச்சங்களையும் தொட்டவன் கம்பன்.” ( நாஞ்சில் நாடன் )

3.7 சமய, ஆன்மிக இலக்கியம்

தேவாரம், பாசுரங்கள், திருப்புகழ், சித்தர் பாடல்கள் போன்றவை இன்றும் பேசப் படுவதைப் பார்க்கிறோம். இதற்கு இவை தமிழையும் வளர்த்தது முக்கிய காரணம். உதாரணங்கள்: காரைக்கால் அம்மையாரும், ஞானசம்பந்தரும் அறிமுகப் படுத்திய தமிழ்ப் பா வடிவங்கள், தமிழின் மூன்று இனங்களுக்கு முக்கியத்வம் கொடுக்கும் வண்ணப் பாடல்களைக் கொடுத்த திருப்புகழ், “சிந்துக்குத் தந்தைஎன்று போற்றப்பட்ட பாரதிக்கு முன்னோடியாய்ச் சிந்துப்பாக்களை இயற்றிய சித்தர்கள்.

3.8 மேலும் சில முக்கிய காரணங்கள்

தமிழ் நூல்கள் அச்சில் வெளிவரத் தொடங்குமுன், கல்வியில் ஆர்வமுள்ளவர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும், அங்கங்கே உள்ள மடங்களின் தலைவர்களாலும், கோவில் அதிகாரிகளாலும், அரசியல் அதிகாரிகளாலும், நூல்கள் ஏட்டுச் சுவடி வடிவில் போற்றி வரப்பட்டன.  .வே.சாமிநாதய்யரின்என் சரித்திரம்இவற்றைப் பற்றி விவரமாய்க் கூறுகிறது. உதாரணமாய், தருமபுரம் ஆதீனத்தின் உதவியால்தான்  .வே.சா.வுக்குத்தக்கயாகப் பரணிகிட்டியது. மேலும், பல நூல்கள் இன்று பேசப் படுவதற்குக் காரணம் அவற்றிற்கு அருமையான உரைகள் எழுதிய பல உரையாசிரியர்களே. இவர்களின் உரைகள் இல்லையென்றால் படைப்பாளிகள் பலர் இந்த அளவில் பேசப் படுவார்களா என்பது ஐயமே.

4. ஏன் இலக்கியங்களைப் படிக்கவேண்டும் ?

 .. ஞா சொல்வதைப் பார்ப்போம்:

இன்று தமிழுலகில் வாழும் எழுத்தாளருள் எத்துணைப் பேர் இலக்கியங் கற்ற எழுத்தாளர்? சராசரியாக இன்றையத் தமிழ் நாட்டில் நூறு எழுத்தாளரையும் மேலை நாடுகளில் ஏதாவதொன்றில் நூறு எழுத்தாளரையும் எடுத்துக்கொண்டு ஒப்புநோக்குவோம். அந் நாட்டில் காணப்பெறும் நூறு எழுத்தாளில் குறைந்த அளவு எழுபத்தைந்து பேராவது அவர்களுடைய பண்டை இலக்கியங்களைக் கற்றிருப்பர். ஏனைய இருபத்தைந்து பேர் தத்தம் நாட்டில் இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை மட்டுமேனும் கற்றிருப்பர். அதிலும், தாம் எந்தத் துறையில் ஈடுபடு கின்றனரோ அத்துறை நூல்களை மிகுதியும் விரும்பிக் கற்றிருப்பர். -


நம்முடைய நாட்டின் இன்றைய எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் முன்னர்க் கூறிய விகிதாசாரம் மாறி இருக்கும். பண்டைய இலக்கியங்களைப் பயிலாதவர்கள் எழுதவே முடியாது என்று யான் கூற வரவில்லை. ஆனால், பழைய இலக்கியங்களில் தோயாது எழுதுபவர்களின் எழுத்தில் ஆழம் இருத்தல் கடினம். நடைமுறையில் ஏற்படும் அனுபவம் ஒன்றை மட்டுமே கொண்டு எழுதும்பொழுது, அந்த எழுத்து, அந்த நேரத்தில் படிப்பவர் மனத்தைக் கவரலாம். காரணம், அந்த எழுத்தின் அடிப்படையிலுள்ள அனுபவத்தின் ஒரு பகுதி படிப்பவரிடமும் உண்டன்றோ? அதனாலேயே அவ்வெழுத்துக் கவர்கிறது. ஆனால் இன்று கிடைக்கின்ற இந்த அனுபவம், ழைமை எய்தி அழிந்துவிட்ட பிற்காலத்தில் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பிறந்த எழுத்தும் வலி இழந்துவிடும். சுருங்கக் கூறினால் காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இந்த எழுத்துக்கு இருக்க முடியாது.

சிலப்பதிகாரம், இராமாயணம் போன்ற நூல்கள் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டன. அவற்றில் காணப்பெறும் ஊர்களும், இடங்களும் இன்று இல்லை. அவை இருப்பினும் நூல்களிற் கூறப்பெற்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்டே காணப் பெறுகின்றன. என்றாலும் மனித சமுதாயம் இன்னும் அவற்றில் இன்பங்காண முடிகிறது. பழைமையாகிய இலக்கிய அனுபவத்தில் தோய்ந்து தம் புதிய அனுபவத்தை அதனுடன் குழைத்து ஆக்கப்பெறும் இலக்கியங்கள் காலத்தை வெல்லும் ஆற்றல் படைத்தவை.

5. நிறைவுரை

பண்டைய இலக்கியங்கள் சிலவற்றின் சிறப்புகளை நாம் பார்த்தோம். இவையே இவ்விலக்கியங்கள் இன்றும் நிலைத்து நின்று நமக்கு இன்பம் ஊட்டுபவனாய் உள்ளன என்பதைப் பார்த்தோம். சிறந்தவை நிலைப்பது உண்மைதான். அதே சமயம், நிலைத்தவை யாவும் சிறந்தவை என்றும் நாம் சொல்லமுடியாது. காலம்தான் கடைசியில் ஓர் இலக்கியம் செவ்விலக்கியமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.
=====

தொடர்புள்ள பதிவுகள்:

3 கருத்துகள்:

Angarai Vadyar சொன்னது…

A brilliant, well-researched essay which will also last for a along time. Thanks for sharing.

Melasevel group சொன்னது…

Best analysis and well researched article only proves your deep love for the Tamil language and the excellent knowledge that you have acquired in it. I for a moment thought whether this has been authored by you for obtaining any doctorate recognition for the knowledge that you possess in Tamil. I really appreciate your article and pray almighty to give you long life in order to continue your service to our mother tongue. Ramakrishna Mission High School (North Branch) should feel very proud of its student having such an excellent talent in him which might have been nourished in his school days. Congrats and feel proud of you. Regards

அவனிவன் சொன்னது…

மிகவும் சிந்திக்கவைக்கும் கட்டுரை.. "பரிபாடலின் இலக்கணம் இன்றும் புரியாத முடிச்சாய் இருப்பதாலும், ’பாடலுக்கு மெட்டு’ ப் போடப்பட்ட பண்டைய தமிழ்ப் பாடல் என்பதாலும் பரிபாடல் முக்கியத்வம் அடைகிறது. சங்க காலத்தில் இருந்த இத்தகைய இசைப்பாடல் நிலை எப்படிச் சிலம்பின் காலத்தில் வளர்ச்சி அடைந்து பரிமளித்தது என்பது ஆய்வுக்குரியது. "- ஆய்வுக்குத் தூண்டும் பேராசிரியர் வாக்கு!