ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

1023. திருலோக சீதாராம் -1

"கந்தர்வ கானம்" படைத்த திருலோக சீதாராம்!
கலைமாமணி விக்கிரமன்ஏப்ரல் 1. திருலோக சீதாராமின் பிறந்த தினம்.
=====

1944ஆம் ஆண்டில் ஓர் அதிகாலையில் நான் கோயம்புத்தூரில், அவிநாசி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். புகழ்பெற்ற பெரிய மனிதர் ஒருவரின் மாளிகை வாசலுக்கு வந்ததும், உள்ளே நுழைந்து அவரைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்ற எண்ணம் எழுந்தது. அந்த மாளிகையில் நுழைவது அவ்வளவு எளிதன்று. முதியவரான வாயிற்காவலர் வழி மறித்து ஒரு நீண்ட காகிதத்தை நீட்டினார். அதைப் பூர்த்தி செய்து மாளிகைக்குள் அனுப்பி, எஜமானர் அனுமதி கிடைத்த பிறகுதான் உள்ளே நுழைய அனுமதி என்பது அங்கிருந்த விதி.

வந்திருப்பவர் யார்?, என்ன தொழில்?, மாளிகை எஜமானரைக் காண விரும்பும் காரணம் என்ன?, முன்னறிவிப்பு அல்லது அழைப்பு உண்டா? என்பன போன்ற பற்பல வினாக்களுக்கு அதில் விடையளிக்க வேண்டும் என்று கவிஞர் திருலோக சீதாராம் தாம் முதலில் அந்தப் புகழ்பெற்ற மனிதரைக் காணச்சென்ற அனுபவத்தைத் தம் "இலக்கியப் படகு" என்னும் கட்டுரைத் தொகுப்பில் எழுதியுள்ளார்.


"இலக்கியப் படகு" - கவிஞரின் எண்ண அலைகளில் அசையாது நின்ற சிந்தனைப் படகின், சுவையான விவரங்கள் அடங்கியத் தொகுப்பு. 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பாரதி புகழ்ப் பரப்பிய எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர் திருலோக சீதாராம். சொற்பொழிவிலே கம்பீரம், எழுத்திலே ஆவலை எழுப்பும் சுவையுடன் கூடிய ஆற்றல் படைத்த திருலோக சீதாராம், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி - தொழிலதிபர் ஜி.டி. நாயுடுவைப் பற்றிய அறிமுகக் கட்டுரையில் வரிக்கு வரி ஆவலைத் தூண்டும் வகையில் எழுதிய சொற்சித்திரம் அனைவரையும் கவர்ந்தது.

கவிஞர் அந்தப் படிவத்தை வாங்கிப் படித்தார். "பார்க்க விரும்பும் காரணம்?" என்ற கேள்விக்கு "சும்மா" என்று எழுதியிருந்தார்.

தொழில் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அந்தப் படிவத்தைப் பார்த்தார். "சும்மா" என்று துணிவுடன் எழுதியவரைச் சந்திக்க அனுமதி அளித்தார்.

அந்தக் கணம் - அந்த விஞ்ஞானியுடன் கவிஞருக்கு ஏற்பட்ட அறிமுகமும், பிறகு பலமுறை சந்திக்கும் வாய்ப்பையும், ஆழ்ந்த நட்பையும் ஏற்படுத்தின. ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைப் பலர் எழுதியிருக்கலாம். ஆனால் கவிஞர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர் என்று பல தகுதிகள் படைத்த திருலோக சீதாராம் எழுதிய நூல்தான் முதன்மையானது.

1917ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தார் திருலோக சீதாராம். "திருலோக" என்று இதுவரையில் பெயர் புனைந்தவர்கள் யாருமிலர். திருவையாறு லோகநாத சாஸ்திரியின் மகனாகப் பிறந்த சீதாராம், திருவையாறு ஊரின் முதல் எழுத்து "திரு"வையும், தந்தையின் பெயரில் உள்ள "லோக"த்தையும் சேர்த்துக்கொண்டார். தாயார் பெயர் மீனாட்சிசுந்தரம் அம்மையார்.

ஒருமுறை கோயம்புத்தூரில் சன்மார்க்க சங்க விழாவில், சுத்தானந்த பாரதியார், "இவர் சாமான்யப்பட்டவரல்லர், திரிலோக மின்சாரப் புயல், திரிலோக சஞ்சாரி'' என்று கூறிப் பாராட்டினார். திரிலோக சஞ்சாரியாக அவர் பல ஊர்களுக்குப் பலரைக் காணச் செல்வார். ஓரிடத்திலேயே இருக்கமாட்டார்.

தன் கருத்தைச் சுவையாக வெளிப்படுத்த "தேவசபை" என்னும் அமைப்பை நிறுவினார். இருபது, முப்பது பேர்தான் கூடுவர். இதையே அவர் "அமரர் சங்கம்" என்றார். திருப்பராய்த்துறை காவிரிக் கரையில் தொடங்கப்பட்ட அந்தத் திருக்கூட்டங்களில் அவர் பேசக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்.

மகாகவி பாரதியாரின் புதல்விகள் சகுந்தலா பாரதியையும், தங்கம்மாள் பாரதியையும், நான் நடத்திய மாத இதழ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, இரண்டு சிறந்த வரலாற்றுப் பதிவு பெறத்தக்க கட்டுரைகளை எழுதுமாறு செய்த, (குறிப்பாக முற்றுப்பெறாத "சந்திரிகையின் கதை"யைப் பற்றி தங்கம்மாள் பாரதி எழுதிய கட்டுரை) மறக்க முடியாத நிகழ்ச்சி.


திருலோகம், மகாகவியைப் பரப்புவதை மட்டும் தம் இலட்சியமாகக் கொள்ளவில்லை. மகாகவி பாரதியின் மறைவுக்குப் பிறகு செல்லம்மாள் பாரதி, திருச்சி - தில்லை நகரில் வசித்து வந்தார். அங்கு பாரதி குடும்பத்தாரின் நலன்களையும் கவனித்துக்கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டார். அவருடைய எண்ணங்களின் தொகுப்பு, "இலக்கியப் படகு" என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. அவை, "சிவாஜி" இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அது ஒன்றுதான் ஓரளவுக்கு அவர் வாழ்க்கை இலட்சியத்தை இந்தத் தலைமுறைக்கு விவரிக்கிறது.

எட்டாம் வகுப்பு வரையில்தான் படித்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். இளம் பருவத்தில் புரோகிதராகவும் இருந்திருக்கிறார். அதில் பிடிமானமில்லாமல், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். எத்தகைய பொருளானாலும் அவர் குறிப்பு ஏதுமில்லாமல் பேசத் தொடங்கிவிடுவார். திருச்சி தமிழ்ச் சங்கமானாலும் சரி; கொல்கத்தா தமிழ்ச் சங்கமானாலும் சரி, அவர் பேசும் தலைப்புக்குக் குறிப்பு ஏதும் தயாரிக்க மாட்டார். மடைதிறந்த வெள்ளம், சொல்மாரி என்பார்களே அதைப்போன்றே பேச்சமையும்.


ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட சித்தார்த்தாவைக் கவிஞர், தமிழில் மொழிபெயர்த்தார். மூலம் எது, மொழியாக்கம் எது என்று பாகுபாடு சொல்ல முடியாத அளவுக்கு மொழிபெயர்ப்பு ஆற்றல் அவருக்குள் இருந்தது.திருச்சியிலிருந்து எழுத்தாளர் ஏ.எஸ்.இராகவனுடன் எஸ்.எஸ்.வாசனைச் சந்திக்கச் சென்று, தன் சொல்லாற்றலால் சம்மதிக்க வைத்ததோடு, வாசன் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நடத்த வைத்த திறமை, ஆற்றலை அன்றிருந்த எழுத்தாளர்கள் சொல்வர். இன்று திருச்சியில் சங்கம் வைத்து நடத்துபவர்கள் அறியமாட்டார்கள்.

அவருடைய சொல்லாற்றலை - பாரதியைப் பற்றிய புலமையை அறிந்த எஸ்.எஸ்.வாசன், ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதச்சொன்னார். 100 கட்டுரைகள் எழுதவேண்டும் என்ற இலட்சியத்துடன் தொடங்கி, 23 கட்டுரைகளுக்கு மேல் எழுதமுடியவில்லை. அக்கட்டுரைகள், "புதுயுகக் கவிஞர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.

36 ஆண்டுகள் "சிவாஜி" இதழை இடைவிடாமல் நடத்தினார். இறுதியாக "கவிஞர் அச்சகம்" என்னும் அச்சகத்தை ஏற்படுத்தி நூல்களை அதில் அச்சிட்டு வெளியிட்டார்.

திருலோக சீதாராமின் உயிர் நண்பர் அறிஞர் டி.எஸ்.இராமச்சந்திரன் ஆங்கிலக் கவிதையில் மிக்க புலமை பெற்றவர். பாரதியை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர். திருலோக சீதாராமைப் பற்றி உள்ளும், புறமும் சொல்லக்கூடியவர் அவர். கவிஞர் திருலோக சீதாராம் எழுதிய "கந்தர்வ கானம்" என்னும் ஒப்பற்ற காவியத்துக்கு முன்னுரையும் விரிவான அணிந்துரையும் எழுதியுள்ளார். அணிந்துரையில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:-

"எல்லாம் மேல்நாட்டுக் கவிதையின் தாக்கம்" என்று இந்நாளில் எளிதில் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், திருலோகம் எழுதியுள்ள கந்தர்வ கானத்தில் கருத்தும் சொற்றொடரும் அப்படி அப்படியே ஆங்கிலக் கவி மேதைகளின் கவிதைகளில் இருக்கின்றன என்ற வியப்பான செய்தியைப் படிக்கும்போது, ஆங்கில அறிவு போதுமானதாக இல்லாத திருலோகத்தின் கவிதை கருத்துகள் பிரான்ஸின் தாம்ஸனோ, டி.எஸ்.எலியட்டோ கூறியவற்றை நம் கவிஞர் எவ்வாறு கூறினார்? (1967).

கவிஞர் திருலோகம் சொல்வதுபோல் நேரில் பாடிக் காட்டுவதிலும் கேட்பதிலும்தான் கவி இன்பம் முழுமை பெறுகிறது. கந்தர்வ கானத்தைக் கவிஞர் பாடியதைக் கேட்ட பிரமிப்பு எவ்வளவு முறை படித்தாலும் வராது என்பது உண்மையே''.

திருலோக சீதாராமை 20ஆம் நூற்றாண்டின் புரட்சிக் கவிஞர் - புதுமைக் கவிஞர் - புதிரான கவிஞர் - பாரதி புகழ்ப் பரப்பிய கவிஞர் - பிறவி மேதை என்று எதைச் சொல்லிப் பாராட்டுவது?

திருலோக சீதாராம், 1973ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி தம் புகழுடம்பை நீத்தார். பாரதி புகழ் பரப்பிய அவர், நம்மிடையே என்றும் வாழ, நாம்தான் அவரது புகழைப் பரப்ப வேண்டும்.

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
திருலோக சீதாராம்: விக்கிப்பீடியா

4 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த நாளில் பிறந்த ஒரு மேதையைப் பற்றி உங்களுடைய இந்தப் பகிர்வு மூலம் தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

Angarai Vadyar சொன்னது…

Thanks again for sharing interesting information on literary yesteryear-giants . God bless you.

கோமதி அரசு சொன்னது…

திருலோக சீதாராம் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

திருலோக சீதாராம் அவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். மறுபடியும் படிக்கும் வாய்ப்பு. நன்றி.

கருத்துரையிடுக