ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

1039. காந்தி - 23

17. அமிருதஸரஸ் காங்கிரஸ்
கல்கி


கல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி -2) என்ற நூலில் வந்த  17-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===


மகாத்மா காந்தி பஞ்சாப்புக்குப் போக ஆர்வம் கொண்டிருந்த போதிலும் தடைச் சட்டத்தை மீறி அங்கே போக விரும்பவில்லை. அப்படி மீறுவதற்கு முயன்றால் பஞ்சாப்பின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும் என்று கருதினார். ஆகையால் இந்திய சர்க்காருக்குத் தந்திகளும் கடிதங்களும் அனுப்பிப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அனுமதி இலேசில் கிடைப்பதாக இல்லை. வைஸ்ராய் செம்ஸ்போர்டு, "பொறுங்கள்" "பொறுங்கள்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

இதற்கிடையில் மகாத்மா ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்போது "பம்பாய் கிராணிகல்" என்னும் பத்திரிகை இந்திய தேசீய இயக்கத்தைத் தீவிரமாக ஆதரித்து வந்தது. அந்தப் பத்திரிக்கைக்கு ஸ்ரீ பி.ஜி. ஹார்னிமான் என்பவர் ஆசிரியராயிருந்தார். ஸ்ரீ ஹார்னிமான் ஆங்கிலேயரான போதிலும் இந்திய தேசீய வாதிகளின் கட்சியைப் பலமாக ஆதரித்தார். அவருடைய எழுத்து, வன்மை பொருந்தியிருந்தது. ரவுலட் சட்டத்தை எதிர்க்க மகாத்மா காந்தி ஆரம்பித்த சத்தியாக்கிரஹ இயக்கத்தையும் ஸ்ரீ ஹார்னிமான் ஆதரித்து எழுதினார். அதனால் கோபங் கொண்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அவரைத் தேசப் பிரஷ்டம் செய்தனர்.

இந்த நிலைமையில் ஸ்ரீ ஹார்னிமானுக்குப் பதிலாக "பம்பாய் கிராணிகல்" பத்திரிகையை நடத்தும்படி அதன் நிர்வாகிகள் மகாத்மாவைக் கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பொறுப்பை மகாத்மா ஏற்றுக்கொண்டு சில நாள் பத்திரிகையை நடத்தினார். அதற்குள் சர்க்கார் அடக்கு முறையின் கொடுமை காரணமாகப் பத்திரிகையை நிறுத்திவிட வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது.

பிறகு அதே ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்டு வந்த "எங் இந்தியா" என்னும் வாரப் பத்திரிகையை மகாத்மா ஒப்புக் கொண்டார். சில காலத்துக்குப் பிறகு "எங் இந்தியா" ஆமதாபாத்துக்கு மாற்றப் பட்டது. அங்கே நடந்து வந்த "நவஜீவன்" என்னும் குஜராத்தி வாரப் பத்திரிகைக்கும் மகாத்மா ஆசிரியர் ஆனார். இந்த இரண்டு பத்திரிகைகளின் மூலமாகக் காந்தியடிகள் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் பிரசாரம் செய்யத் தொடங்கினார். "எங் இந்தியா" "நவ ஜீவன்" இரண்டு பத்திரிகைகளும் மிகவும் பிரபலமடைந்து சக்தி வாய்ந்த பத்திரிகைகள் ஆயின. அவை ஒவ்வொன்றுக்கும் 40,000 சந்தாதார் வரையில் சேர்ந்தனர்.
------ ------ ------

மகாத்மாவுக்குப் பஞ்சாப்புக்குப் போக அனுமதி அந்த வருஷம் அக்டோபர் மாதத்திலேதான் கிடைத்தது. அனுமதி வந்தவுடனே மகாத்மா பஞ்சாப்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பஞ்சாப் சம்பவங்களுக்கெல்லாம் மகாத்மாவே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் குற்றம் சாட்டினார். அதேமாதிரியாக்ப் பஞ்சாப் இளைஞர்கள் சிலர் இராணுவச் சட்டக் கொடுமைகளுக்கெல்லாம் மகாத்மாவையே பொறுப்பாளியாகக் கொண்டார்கள். சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததற்காக ஸர் மைக்கேல் ஓட்வியர் மகாத்மாவின் பேரில் குற்றம் சாட்டியதுபோல் சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியதற்காக இவர்கள் மகாத்மாபேரில் குற்றம் சுமத்தினார்கள். சத்தியாக் கிரஹத்தை மகாத்மா காந்தி நிறுத்தியதனால்தான் ஜாலியன் வாலா படுகொலை நடந்தது என்று சொன்னார்கள். "நீர் பஞ்சாப்புக்கு வந்தால் உம்மைக் கொலை செய்து விடுவோம்" என்று பயமுறுத்தி காந்தி மகானுக்குக் கடிதமும் எழுதினார்கள்.

இப்படிப்பட்ட பயமுறுத்தல்களினால் காந்திஜியைத் தடை செய்யமுடியுமா, என்ன? மகாத்மா காந்தி ரயில் ஏறி லாகூருக்கு வந்து சேர்ந்தார். அவர் எதிர் பார்தததற்கு நேர்மாறான காட்சியை லாகூர் ரயில்வே ஸ்டே ஷனில் பார்த்தார். அந்த ஸ்டே ஷன் பிளாட்பாரத்தில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் ஜனங்கள் எள்ளுப் போட இடமில்லாமல் நெருங்கி நின்றார்கள். காந்திஜியை வரவேற்பதற்காகத்தான். ரயில் நிலையத்துக்கு வெளியிலும் மாபெருங் கூட்டம் கூடியிருந்தது. லாகூர் நகரவாசிகள் அனைவருமே வீடுகளைப் பூட்டிக்கொண்டு மகாத்மாவை வரவேற்பதற்கு வந்து விட்டதுபோல் காணப்பட்டது. காந்திஜியைக் கண்டதும் அத்தனை ஜனங்களும் ஒரே குரலாக "மகாத்மா காந்திக்கு ஜே"! என்று கோஷம் இட்டார்கள். நெடுநாள் பிரிந்திருந்த உற்ற பந்துவை வரவேற்பதுபோல் லாகூர் வாசிகள் மகாத்மாவை வரவேற்றார்கள். அளவு கடந்த உற்சாகத்தினால் ஜனங்களுக்குத் தலைகால் தெரியாமல் போய்விட்டது.

இராணுவச் சட்டம் அமுலின்போது தாங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காந்திஜியே காரணம் என்று அவர்கள் கருதியதாகத் தோன்றவில்லை. அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடித் தரக்கூடிய உற்ற துணைவர் காந்திஜி என்று அவர்கள் நம்பியதாகத் தோன்றியது.

இராணுவக் கோர்ட்டினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட லாகூர் தலைவர்களின் பண்டித ராம்போஜி தத் சௌத்ரி ஒருவர். அவருடைய மனைவியான ஸ்ரீ சாரளா தேவி சௌதராணியும் பிரபல தேசியவாதி. அவருடைய வீட்டில் மகாத்மா தங்கினார். அதன் காரணமாக அந்த வீடு ஒரு பெரிய சத்திரம் ஆயிற்று. ஸ்ரீ சாரளா தேவி சௌதராணி முகமலர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் உணவு அளித்து உபசரித்தார். ஏற்கனவே பஞ்சாப்புக்கு பண்டித மதன் மோகன் மாளவியா, பண்டித மோதிலால் நேரு, சுவாமி சிரத்தானந்தர் ஆகியவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் பஞ்சாப் நிலைமையைப் பற்றி மகாத்மா கலந்து ஆலோசித்தார்.

அதே சமயத்தில், பிரிட்டிஷ் சர்கார், பஞ்சாப் இராணுவச் சட்ட அமுலைப் பற்றி விசாரிப்பதற்காக லார்டு ஹண்டரைத் தலைவராகக் கொண்டு ஒரு கமிஷனை நியமித்திருந்தார்கள். "பஞ்சாப் பயங்கரங்களைப் பற்றி விசாரிக்க வேண்டும்" என்று தேசமெங்கும் ஏற்பட்டிருந்த பெருங் கிளர்ச்சியின் பயனாக சர்க்கார் மேற்படி ஹண்டர் கமிஷனை நியமித்தனர். விசாரணைக் கமிஷன் என்று நியமித்துவிட்டால் பொது மக்களிடையே பொங்கிய உணர்ச்சியும் ஆத்திரமும் ஒருவாறு அடங்கிவிடும் என்று பிரிட்டிஷ் சர்க்கார் கருதினார்கள்.

முதலில் ஹண்டர் கமிஷன் முன்பு சாட்சியம் விட்டு ஒத்துழைப்பது என்ற மகாத்மா முதலிய தலைவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத சில தடைகள் ஹண்டர் கமிஷன் அங்கத்தினரால் ஏற்பட்டன. இராணுவச் சட்ட தண்டனைக்கு உள்ளன லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய தலைவர்களைக் கமிஷன் விசாரணையின் போது கோர்ட்டில் போலீஸ் பாராவுடன் இருக்கச் செய்ய வேண்டுமென்று மகாத்மா, மாளவியா முதலியவர்கள் வற்புறுத்தினார்கள். உண்மை துலங்குவதற்கு அது அவசியம் என்று அவர்கள் சொன்னார்கள். இதற்கு ஹண்டர் கமிஷன் ஒத்துக்கொள்ளவில்லை. இதிலிருந்து ஹண்டர் கமிஷனிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தோன்றிவிட்டது. எனவே, ஹண்டர் கமிஷனைப் பகிஷ்கரித்து, சர்க்கார் சம்பந்தமற்ற விசாரணையொன்று நடத்த ஏற்பாடு செய்வதென்று தீர்மானம் ஆயிற்று. பண்டித மாளவியாவின் யோசனைப்படி மகாத்மா காந்தி, பண்டித மோதிலால் நேரு, ஸ்ரீ.சி.ஆர்.தாஸ், ஜனாப் அப்பாஸ் தயாப்ஜி ஆகியவர்கள் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் பண்டித மோதிலால் நேரு பிற்பாடு அமிருதஸரஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபடியால், அவருக்குப் பதிலாக பாரிஸ்டர் எம். ஆர். ஜெயக்கர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்.

இந்த நாலு பெரும் தனித் தனியே நாலு பக்ககளிலும் சென்று இராணுவ அமுலைப் பற்றிச் சாட்சியம் சேகரிக்கலானார்கள். ஆயினும் அந்த வேலை பெரும்பாலும் காந்திஜியின் தலையிலேயே விழந்தது. விசாரணை செய்யச் செய்ய, சாட்சியங்களைக் கேட்கக் கேட்க, எவ்வளவு பயங்கரமாக கொடுமைகள் இராணுவ அமுலின்போது ஜனங்களுக்கு இழைக்கப்படிருகின்றன என்று காந்திஜிக்குத் தெரிய வந்தது. பஞ்சாப் ஜனங்களோ மகாத்மாவைத் தங்களை ரக்ஷிக்க வந்த தெய்வம் என்று நினைத்து அவரிடம் தாங்கள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டர்காள்.

பஞ்சாப் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே அமிருதசரஸ் நகரில் காங்கிரஸ் மகா சபை கூடியது. அமிருதஸரஸ் காங்கிரஸ் அதற்குமுன் நடந்த எந்தக் காங்கிரஸையும் விடப் பெருமிதமாகவும் கோலாகலமாகவும் நடந்தது. ஆறாயிரம் பிரதிநிதிகளும் முப்பதினாயிரம் பார்வையாளரும் அந்தக் காங்கிரஸுக்கு வந்திருந்தார்கள். சுவாமி சிரத்தானந்தர் வரவேற்பு சபையின் தலைவர். பண்டித மோதிலால் நேரு காங்கிரஸ் மகாசபையின் அக்கிராசனர். காங்கிரஸ் கூடுவதற்கு முதல் நாள் இராணுவச் சட்டத்தின்படி சிறைப் பட்டிருந்த லாலா ஹரிகிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். சென்ற நாலு வருஷமாகப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அலி சகோதரர்களும் விடுதலையானார்கள். விடுதலையான தலைவர்கள் நேரே அமிருதஸரஸுக்கு வந்து சேர்ந்தார்கள். அலி சகோதரர்கள் அமிருதஸரஸ் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட போது அந்த நகர் மக்களின் ஆரவாரத்தைச் சொல்லி முடியாது.

அலி சகோதரர்கள் அத்தனை நாளும் சிந்த்வாரா என்னுமிடத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். மௌலானா முகம்மதலி தமது பிரசங்கத்தில் "சிந்த்வாராவுக்கு ரிடர்ன் டிக்கெட் என் சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்" என்று சொன்னார். அதாவது மறுபடியும் சிறைக்குப் போகத் தாம் தயாரா யிருப்பதை அவ்விதம் தெரிவித்தார். இது மக்களின்ஆவேசத்தை அதிகப்படுத்தியது.

இத்தகைய சூழ்நிலையில் அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடியது. இந்தக் காங்கிரஸின்போது மூன்று புதிய தலைவர்கள் நாட்டிலும் காங்கிரஸிலும் சக்தி பெற்று வருகிறார்கள் என்று வெளியாயிற்று. ஒருவர், அக்கிராசனம் வகித்த பண்டித மோதிலால் நேரு. இரண்டாவது தலைவர் பாரிஸ்டர் சித்தரஞ்சன் தாஸ். மூன்றாவது தலைவர் தான் மகாத்மா காந்தி. இந்த மூன்று பேருக்குள்ளேயும் காந்தி மகாத்மாவே சக்தி வாய்ந்தவர் என்பதும் அமிருதஸரஸில் ஒருவாறு தெரிய வந்தது. அமிருதஸரஸ் காங்கிரஸில் நிறைவேறிய மிகவும் முக்கியமான தீர்மானம் சம்பந்தமாக ஏற்பட்ட விவாதங்களிலிருந்து இது வெளியாயிற்று.

முதலாவது மகா யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் இந்தியாவிலிருந்து மெஸபடோமியாவுக்கு அனுப்பிய துருப்புகள் விபரீதமான முடிவை அடைந்தன. இங்கிலாந்தில் இது பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. மிஸ்டர் மாண்டகு என்பவர் பார்லிமெண்டில் இந்திய அதிகார வர்க்கத்தைப் பலமாகத் தாக்கிப் பேசினார். இந்தியாவின் ஆட்சி முறையைக் காலத்துக் கேற்ப மாற்றி அமைக்கவேண்டும் என்ற எண்ணம் இங்கிலாந்தில் பலருக்கும் ஏற்பட்டது. கொஞ்ச நாளைக்கெல்லாம் மிஸ்டர் மாண்டகுவையே இந்தியா மந்திரியாக நியமித்தார்கள். மிஸ்டர் மாண்டகு இந்தியாவுக்கு நேரில் வந்து இங்குள்ள நிலைமையை நன்கு தெரிந்து கொள்ளப் போவதாகவும் பிறகு அரசியல் சீர்திருத்தங்களைப் பற்றிச் சிபார்சு செய்யப் போவதாகவும் சொன்னார். அதன்படியே அவர் வந்தார். இந்தியாவில் பல பிரமுகர்களைச் சந்தித்தார். பல ஸ்தாபனங்களின் அபிப்பிராயங்களைக் கேட்டார். இங்கிலாந்துக்குத் திரும்பிப் போன பிறகு 'இரட்டை யாட்சி' என்னும் வேடிக்கையான அரசியல் திட்டத்தைச் சிபார்சு செய்தார். இதன்படி இந்தியாவின் மாகாணங்களில் பாதி இலாக்காக்கள் பழையபடி கவர்னருடைய நிர்வாக சபையினாலும் மற்றப் பாதி இலாக்காக்கள் ஜனங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளாலும் நிர்வகிக்கப்படும். போலீஸ்,சட்டம், வருமானம் முதலிய முக்கிய இலாக்காக்கள் கவர்னரிடமே இருக்கும். கல்வி, சுகாதாரம் முதலிய இலாக்காக்கள் மந்திரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்தியா மந்திரி மாண்டகுவும் வைஸ்ராய் லார்டு செம்ஸ்போர்டும் சேர்ந்து தயாரித்த திட்டமாதலால் இதற்கு மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் என்றும், மாண்ட் போர்ட் திட்டம் என்றும் பெயர்கள் வழங்கலாயின.

அமிருதஸரஸ் காங்கிரஸ் கூடுவதற்குச் சில நாளைக்கு முன்னாலேதான் மேற்படி திட்டம் வெளியாகி யிருந்தது. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதா, நிராகரிப்பதா என்பதைப் பற்றிக் காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்கெனவே ஆலோசனைகள் நடந்து வந்தன. காங்கிரஸிலிருந்து மிதவாதிகள் எல்லாரும் அதற்குள்ளே தனியாகப் பிரிந்து போய்த்தனி ஸ்தாபனமும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பழம் பெருந்

தலைவர்களில் லோகமான்ய திலகர், பண்டித மாளவியா, ஸ்ரீ விபினசந்திரபால் முதலியோர் காங்கிரஸில் இருந்தார்கள். 1917-ஆம் ஆண்டில் டாக்டர் பெஸண்டு அம்மையின் செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு வருஷத்துக்குள் காங்கிரஸில் அவருடைய செல்வாக்கு அடியோடு குன்றிவிட்டது.

இரண்டு வருஷமாக ஸ்ரீ சித்தரஞ்சன் தாஸின் நட்சத்திரம் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. மாதம் அரை லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர் அவர். சுதேசி இயக்க நாட்களில் ஸ்ரீ அரவிந்த கோஷின் சார்பாகக் கோர்ட்டில் ஆஜராகிப் பேசிப் புகழ் பெற்றிருந்தவர். 1917-ல் டாக்டர் பெஸண்டு அம்மையைக் காங்கிரஸ் தலைவராக்குவதற்கு பாடுபட்டவரும் அவர்தான். தேசீய வாதிகள் பெரும்பாலோர் அவருடைய யோசனையை எதிர்பார்க்கத் தொடங்கி யிருந்தார்கள்.

மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத் திட்டத்தைப் பற்றி ஸ்ரீ சித்தரஞ்சன்தாஸ் ஒரு தீர்மானம் தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். "மாண்டகு செம்ஸ்போர்டு திட்டம் போதாது. அதிருப்திகரமானது. ஏமாற்றகரமானது; ஆகையால் அதை இந்தக் காங்கிரஸ் நிராகரிக்கிறது" என்பது தீர்மானத்தின் முக்கிய அம்சம்.

"ஏற்கெனவே, லோகமான்ய திலகர் "கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு பாக்கிக்குப் போராட வேண்டும்" என்ற கொள்கையை வெளியிட்டிருந்தார். ஆயினும் அமிருதஸரஸில் ஸ்ரீ சி. ஆர். தாஸைச் சந்தித்துப் பேசிய பிறகு அவருடைய தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக் கொண்டார்.

"மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை அங்கீகரித்து நடத்துவது" என்று டாக்டர் பெஸண்டு கொண்டு வர விரும்பிய தீர்மானத்தை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் நிலைமை இன்னதென்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்பினார்கள். மகாத்மாவினுடைய மனப்பாங்குதான் நமக்குத் தெரியுமல்லவா? எதிராளிகளின் பேச்சில் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது என்பது அவருடைய திடமான கொள்கை. மாண்டகு நல்ல எண்ணத்துடனே இந்த அரசியல் திட்டத்தை வகுத்திருக்கிறார் என்று மகாத்மா பூரணமாக நம்பினார். ஆகையால் அதை அடியோடு நிராகரிக்கும் யோசனை மகாத்மாவுக்குப் பிடிக்க வில்லை. அதே சமயத்தில் காங்கிரஸில் மிகச் செல்வாக்குள்ள ஸ்ரீ திலகர் முதலிய தலைவர்களுக்கு எதிராகப் பேசவும் அவர் விரும்பவில்லை. ஆகையால் காங்கிரஸுக்கு முதல் நாள் மட்டும் வந்து விட்டு அப்புறம் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலிருந்துவிட மகாத்மா எண்ணியிருந்தார். இதைப் பண்டித மாளவியாவிடம் கூறியபோது அவர் அதை ஒப்பவில்லை. லாலா ஹரி கிருஷ்ணலால் முதலிய பஞ்சாப் தலைவர்களூம் அதை விரும்பவில்லை. "நீங்கள் அவ்விதம் செய்வது பஞ்சாபிகளுக்கு மிக்க மன வருத்தத்தை அளிக்கும்" என்று அவர் சொன்னார். "என்னுடைய அபிப்பிராயத்தை நான் வற்புறுத்தினால் வோட் எடுக்க நேரிடலாம். இங்கே வோட் எடுக்க வசதி ஒன்றும் இல்லையே? பிரதிநிதிகளுக்கும் பார்வையாளருக்கும் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் கலந்து போயிருக்கிறார்களே?" என்றார் காந்திஜி. "வோட் எடுக்கும் சமயத்தில் பார்வையாளரை வெளியில் அனுப்பிவிட ஏற்பாடு செய்கிறோம்" என்றார் ஸ்ரீ ஹரி கிருஷ்ணலால்.

எனவே, மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை ஸ்ரீ சி. ஆர். தாஸ் கொண்டு வந்தபோது மகாத்மா அதற்கு ஒரு திருத்தம் பிரேரேபித்தார். "ஏமாற்றமானது" என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, "முழுப் பொறுப் பாட்சியை அடைவதற்கான முறையில் மேற்படி திட்டத்தை நடத்தி வைக்கத் தீர்மானிக்கிறது" என்பதைக் கடைசியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி மகானுடைய திருத்தம் கூறியது. அத்துடன், மிஸ்டர் மாண்டகு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கியம் ஒன்றையும் சேர்க்க வேண்டுமென்று மகாத்மா பிரேரேபித்தார்.

அப்போது தேச மக்களுடைய மனோநிலை கொதிப்படைந்திருந்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் பஞ்சாப் கிலாபத் அநீதிகளைக் குறித்து ஆத்திரம் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் மகாத்மாவின் ஒத்துழைப்புத் திருத்தம் பிரதிநிதிகளுக்கு மிகக் கசப்பாயிருந்தது. ஆனாலும் அவர்கள் காந்தி மகாத்மாவின் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைப்பதாயிருந்தால் அது மகாத்மாவினால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருடைய அந்தரங்கத்தில் அப்போது ஏற்பட்டிருந்தது. காந்திஜி ஒரு பக்கமும் திலகர், தாஸ் முதலிய தலைவர்கள் மற்றொரு பக்கமும் மாறுபட்டு நிற்பதையும் ஜனங்கள் விரும்பவில்லை. ஆகவே தீர்மானமும் திருத்தமும் பிரேரணை செய்யப்பட்டபோது பிரதி நிதிகள் - பார்வையாளர் அனைவரும் சோர்வடைந்து முகம் வாடிப் போனார்கள். இந்த நிலைமையில் ஒரு சிலர் இரு சாராரிடையிலும் சமரசம் உண்டு பண்ண முயன்றார்கள். சமரசம் ஏற்பட வேண்டும் என்பதில் மற்றவர்களைக் காட்டிலும் பண்டித மாளவியாவுக்கு அதிக ஆத்திரம் இருந்தது. அவர் காங்கிரஸ் மேடையில் அமர்ந்தபடி சமரசத்துக்கு வழி காண முயன்று கொண்டிருந்தபோது ஸ்ரீ ஜயராம்தாஸ் தௌலத்ராம் மகாத்மாவின் திருத்தத்தில் ஒரு சிறு திருத்தம் செய்து அதைச் சமரசப் பிரேரணையாகச் சமர்ப்பித்தார். "திட்டத்தை நடத்துவது" என்பதைக் "கூடுமான வரையில் நடத்துவது" என்று அவர் திருத்தினார். இதை மகாத்மா ஒப்புக்கொண்டதும், பண்டித மாளவியா லோகமான்ய திலகரை நோக்கினார். திலகர் "தாஸ் சம்மதித்தால் எனக்குச் சம்மதம்" என்றார். தாஸ், விபின சந்திரபாலரைப் பார்த்தார். விபின சந்திரர் தலையை அசைத்தார். உடனே பண்டித மாளவியா எழுந்து நின்று, "பிரதிநிதிகளே! தலைவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டது!" என்று அறிவித்தார். அப்போது சபையில் எழுந்த சந்தோஷ ஆரவாரம் ஆகாயத்தை அளாவியது. அதிலிருந்து தலைவர்கள் ஒத்துப் போகவேண்டும் என்பதில் பிரதிநிதிகளுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்கு வெளியாயிற்று. அதற்கு பிறகு மேடையில் இருந்த தலைவர்கள் சமரசமாகப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

சமரசத் தீர்மானம் மிகுந்த உற்சாகத்துக்கிடையே நிறைவேறியது. சமரசத் தீர்மானம் என்று சொல்லப்பட்டதாயினும் உண்மையில் அது காந்தி மகாத்மா காங்கிரஸ் மகாசபையின் மேடையில் அடைந்த மகத்தான முதல் வெற்றி என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள்.

இதே விதமாக இன்னும் இரண்டு தீர்மானங்களைக் கசந்து விழுங்கிக் கொண்டு காந்தி மகாத்மாவுக்காகவே காங்கிரஸ் பிரதிநிதிகள் நிறைவேற்றினார்கள். அவற்றில் ஒன்று பஞ்சாப் பிலும் குஜராத்திலும் பொது ஜனங்கள் அத்து மீறிப் பலாத்காரச் செயல்களில் இறங்கியதைப் பலமாகக் கண்டனம் செய்தது. அதிகாரிகளுடைய செயல்களினால் கொதிப்படைந்திருந்த பிரதிநிதிகளுக்குப் பொது ஜனங்களைக் கண்டிக்கும் காரியம் சிறிதும் பிடிக்கவில்லை. ஆயினும் மகாத்மா காந்தி கொண்டு வந்தபடியால் அந்தத் தீர்மானமும் நிறைவேறியது. அதோடு அடுத்த வருஷம் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வதைக் காங்கிரஸ் வரவேற்கிறது என்ற தீர்மானமும் மகாத்மாவுக்காகவே நிறைவேறியது.

அமிருதஸரஸ் காங்கிரஸில் ஒத்துழைப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய அதே மகாத்மா சில மாதங்களுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் துவஜா ரோகணம் செய்தார். மாண்டகு செம்ஸ்போர்டு திட்டத்தின்படி நடக்கும் சட்ட சபைத் தேர்தல்களை அடியோடு பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்றார். சட்டசபை பகிஷ்காரத்தை மற்ற தலைவர்கள் எதிர்த்தார்கள் ஆயினும் மகாத்மாவின் திட்டத்தைத் தேசமும் காங்கிரஸும் ஒப்புக்கொண்டன. இந்த அதிசயங்களைப் பற்றிப் பின்னர் விவரமாகத் தெரிந்து கொள்வோம்.
-----------------------------------------------------------

( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: