புதன், 25 பிப்ரவரி, 2015

சசி -10 ; எதிர்பாராதது!

எதிர்பாராதது !
சசி

அன்புள்ள தங்கவேலு,
பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிடமிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி 




நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸுக்குப் பயந்து, தலைமறைவாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். வந்தது முதல் உன்னைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டு இருக்கிறேன்! (உன்னைத் தவிர வேறு நண்பன் ஏது?) ஆனால், உன் வீட்டுக்கு நேரில் வருவது உசிதமில்லை. ஆகவே, உன்னை மூர்மார்க்கெட்டில் நாளை மாலை 6 மணிக்கு எதிர்பார்க்கிறேன். முன்பு நாம் வழக்கமாகச் சந்தித்துப் பேசும் மரத்தடியில் நீ வந்து காத்திரு. தவறாமல் வா!
                                                      இப்படிக்கு,
                                             உன்னை மறவா நண்பன்,
                                                     நடராஜன்.


தங்கவேலுவும் நடராஜனும் பால்யத்தில் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். அதற்காக, இப்போது ஒரு நல்ல லாபத்தைக் கை நழுவ விடுவதற்குத் தங்கவேலு தயாராக இல்லை!

ஒரு கொள்ளைக் கேஸில் சம்பந்தப்பட்டான் என்று நடராஜனை போலீஸார்கள் தேடிக் கொண்டிருந்த விஷயம் அவனுக்குத் தெரியும். அவனைக் கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்ததும் தெரியும். ஆகவே, தன்னைச் சந்திக்கப் போகும் நடராஜனைப் போலீஸ்காரர்களிடம் பிடித்துக் கொடுத்து விட்டு 500 ரூபாய் பரிசைப் பெறுவதுதான் புத்திசாலித்தனம் என்று தங்கவேலு தீர்மானித்து விட்டான்.

சரியாக 6 மணி. நடராஜன், தங்கவேலு இருந்த இடத்திற்கு வந்தான். வந்தவன் சட்டென்று ஒரு கடிதத்தைத் தங்கவேலுவின் பையில் போட்டுவிட்டு, "என்னைப் போலீஸ்காரர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆகவே, இந்த இடத்தில் பேசுவது ஆபத்து! இந்த லெட்டரில் விஷயங்களை எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பிட்டிருக்கும் இடத்திற்குக் கட்டாயமாக வா!" என்று அவசரமாகக் கூறிவிட்டு, ஒரே பாய்ச்சலில் அங்கிருந்து ஓடினான்.

ஆனால், தங்கவேலு தகவல் தந்திருந்த போலீஸ்காரர்கள் லேசுப்பட்டவர்களா? நடராஜனைப் பின்தொடர்ந்து ஓடி, ஒரே நிமிஷத்தில் அவனை மடக்கிவிட்டார்கள்.

500 ரூபாம் இனாம் கிடைக்கப்போவது பற்றித் தங்கவேலு அப்போது அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால், நடராஜன் தந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தபோது, அவனுக்கு உண்டான துயரத்திற்கும்கூட அளவே இருந்திருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்புள்ள தங்கவேலு,
கொள்ளையில் நானும் சம்பந்தப்பட்டவன் என்று போலீஸார் நினைத்திருக்கிறார்கள். என்றாலும், நான் உண்மையில் நிரபராதி என்பது 

கூடிய சீக்கிரம் ருசுவாகப் போகிறது. வக்கீலை வைத்து கேஸ் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் மணக்கப்போகும் பெண்ணின் தகப்பனார் என் விஷயமாக சிரத்தை கொண்டிருக்கிறார். அவர் பெரிய பணக்காரர். ஆதலால், நான் மறுபடியும் மனிதனாக உலகத்தில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
என் உறவினர் ஒருவரிடம் என் பணம் 16,000 ரூபாய் இருக்கிறது. என் நட்புக்கு அறிகுறியாக அதை அப்படியே உன்னிடம் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். நாளைக் காலையில் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நீ என்னைச் சந்தித்தால், நேரில் விவரங்களைச் சொல்கிறேன். உடனே சென்று அவரிடமிருந்து நீ அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஏழ்மை நிலையில் இருக்கும் உனக்கு இந்த அற்ப உதவியையாவது செய்ய முடிந்திருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி!
                                                       இப்படிக்கு
                                              உன் நன்மையைக் கோரும்,
                                                       நடராஜன்.
[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள் :

சசி: சிறுகதைகள்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

செந்தமிழ்ப் பாட்டன் ; கவிதை

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி


[ ஓவியம்: ஏ.எஸ்.மேனன் ]


19 பிப்ரவரி . டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் பிறந்த தினம்

உ.வே.சா  ‘சிலப்பதிகார’த்தை 1892 -இல் பதிப்பித்தார். அந்நூலில் உள்ள ‘கந்துக வரிப்’ பாடலை நம் இலக்கியத்தில் வந்த முதல் சந்தப் பாடல் என்றே சொல்லலாம்!  பிற்காலத்தில் எழுந்த எழுசீர் சந்த விருத்தத்திற்கு இது ஒரு முன்னோடி. அந்தக் கந்துகவரி யாப்பின் வடிவத்திலேயே உ.வே.சா வின் புகழ் பாடும் ஒரு முயற்சி இதோ!


செல்ல ரித்த பண்டை யோலை சென்ற லைந்து தேடியே
புல்ல ரிக்க வைக்கு மினிய புத்த கங்கள் பொன்னொளிர்
செல்வம் யாவும் சேர்த்த வர்க்கென் சென்னி யென்றுந் தாழுமே
. . . சீலன் சாமி நாத னுக்கென் சென்னி யென்றுந் தாழுமே (1)

தேமி குந்த காப்பி யங்கள் தீச்செ லாமல் காத்தவன்;
தோமி லாத பார்வை கொண்டு தொன்மை நூல்கள் ஆய்ந்தவன்;
சாமி நாத ஐய னுக்கென் சென்னி யென்றுந் தாழுமே
. . . சங்க நூல்கள் மீட்ட வர்க்கென் சென்னி யென்றுந் தாழுமே (2)

இன்று நேற்றி ரண்டு காலங் கூடும் பால மாகியே
கண்ட காட்சி சொந்த வாழ்வு காகி தத்தில் வார்த்தவன்;
தென்னி சைக்கு நண்பர் முன்பு சென்னி யென்றுந் தாழுமே
. . . செந்த மிழ்தன் பாட்ட னுக்கென் சென்னி யென்றுந் தாழுமே. (3) 




( கலைமகள் மார்ச் 2002 இதழில் வந்த கவிதை .) 


~*~o0o~*~

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா


ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

கொத்தமங்கலம் சுப்பு -10

படத்தொழில் செழிக்கப் பாடுபட்டவர்கள்!
கொத்தமங்கலம் சுப்பு

15 பிப்ரவரி.  கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் நினைவு நாள்.

1974-இல் அவர் மறைந்தபோது , 


மக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.

திரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கியவர் அவர்.

என்று எழுதியது ‘விகடன்’. 

அவருக்கு ஓர் அஞ்சலியாக 1957-இல் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கிடுகிறேன்.


1931-இல் தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது . அதைப் பற்றி கல்கி எழுதிய விமரிசனத்தையும் நீங்கள் இங்கே   படித்திருப்பீர்கள். அதனால், 1957-இல் தமிழ் வெள்ளித் திரை தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது! இதையொட்டி, 27-01-57 இதழ் விகடனில் பல சினிமாக் கட்டுரைகள் வெளிவந்தன. அந்த இதழில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு துளிதான் இது! 

==========
க்காலத்தில் 'பிளேபாக்' முறை கிடையாது. நடிகருக்குப் பக்கத்தில் ஒரு பஜனை கோஷ்டி வந்து கொண்டிருக்கும். இடுப்பிலே ஆர் மோனியத்தைக் கட்டியிருப்பார்கள். பிடில்காரர் கையிலே பிடிலை வைத் துக்கொண்டு வாசித்துக்கொண்டே நடந்து வருவார். மிருந்தங்கக்காரர், இடுப்பில் மிருதங்கத்தை வைத்துக் கொண்டு தட்டிக்கொண்டு வருவார். நடிகர் காமிரா எதிரில் பாடிக்கொண்டே நடந்து வருவார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் சற்று விலகி, காமிராவின் எல்லைக்குள் விழுந்து விடாமல் வந்துகொண்டிருப்பார்கள். நடிகரின் தலைக்கு மேல், ஒரு துரட் டிக் கொம்பில் சொருகிய மைக் பிரயாணம் செய்துகொண்டே வரும். பக்க வாத்தியமும் பாட்டும் ஒன்றாக ரிக்கார்ட் செய்யப்பட்டுவிடும்.

இதிலே ஒரு வேடிக்கை... நடு ஷூட்டிங்கில் காற்று திசை மாறி அடிக்க ஆரம்பிக்கும். நடிகர் பாட்டை 'மைக்' ரிக்கார்டு செய்துவிடும். ஆனால், பக்க வாத்தியத்தை யெல்லாம் காற்று அடித்துக்கொண்டு போய்விடும். படத்திலே பாட்டைக் கேட்கும்போது, பாதிப் பாட்டில் பக்க வாத்தியம் கேட்கும்; இன்னொரு பாதியில் பக்க வாத்தியங்கள் கேட்காது. இன்று 'பிளேபாக்' வந்துவிட்டது. இறைவனின் ஒரு குரலுக்குக் கட்டுப்பட்டு உலகம் நடப்பதுபோல இன்று தமிழ் சினிமா 4, 5 குரல்களுக்குக் கட்டுப்பட்டே நடந்து வருகிறது.

திடீர் திடீர் என்று, ஒரு வருஷத்தில் கட்டிய கட்டடங்களுக்கு எல்லாம் 'சரோஜ், சரோஜ்' என்று பெயர் வைத்தார்கள். அப்பொழுது பிறந்த பெண் குழந்தைகளுக்கு எல்லாம் சரோஜா என்று பெயரிட்டார்கள். காரணம், பேபி சரோஜா நடித்த 'பால யோகினி' படம்தான். ஷெர்லி டெம்பிள் நடித்த படங்களையே பார்த்து மகிழ்ந்திருந்த நம் மக்கள், தமிழ்நாட்டில் ஒரு பேபி சரோஜாவைக் கண்டவுடன் சிந்தை மகிழ்ந்தனர். இப்படி ஒரு சின்னக் குழந்தையின் பெயரால் கட்டடங் கள் கிளம்பியதும், குழந்தைகளுக் குப் பெயரிட்டதும் சரித்திரத்தி லேயே காண முடியாத விஷயம்.

இம்மாதிரி சினிமாவை நல்ல தொழிலாக்கி, நிறைய மக்கள் இதிலே ஆனந்தம் அடைய வேண் டுமென்று பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ பேர்! அவர்கள் எல்லோரும் இன்றைய சினிமா அபிவிருத்தியைப் பார்த்து ஆனந்திப்பார்கள். இன்று சினிமா வீறு கொண்டிருக்கிறது. ஆனால், அதற்குப் போட்டியாக, டெலிவிஷன் வரக் காத்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால், கலைகளில் எதையும் போட்டி என்று சொல்ல முடியாது. ரோஜா வந்ததற்காக மல்லிகை மறைந்து விடவில்லை; மருக்கொழுந்து வந்ததற்காக தாமரை மணம் வீசாமல் இல்லை. காலப்போக்கிலேயே மலர்வது கலை! என்றென்றைக்கும் அது வளருமே யொழிய, மறையாது!

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்: 


வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 50

வி.வி.சடகோபன் -4 

காத்தானும் கர்நாடக இசையும் !



சடகோபன் ஒரு படத்தில் நடித்தார் என்றாலே நிச்சயம் அவர் பாடியிருப்பார் என்றுதானே நாம் நினைப்போம் ? அதுதான் இல்லை! ஜெமினியின் “ஜீவன்முக்தி” என்ற தெலுங்கு படத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாத விஷ்ணுவாக நடித்தார் என்கிறார் ராண்டார் கை! (1)

சடகோபன் நடித்த இன்னொரு திரைப்படம் "அதிர்ஷ்டம்”. 1939-இல் அது வெளிவந்தது (2).  அது கவிஞர்  ச.து. சு.யோகியாரின் தயாரிப்பு .  அதைப் பற்றி “ஆனந்த விகடன்” தீபாவளி மலரில் இரு அரிய, முழுப்பக்க  விளம்பரப் படங்கள் வெளிவந்தன! அவை இதோ:





சரி, சடகோபன் அவர்களின்  இன்னொரு கட்டுரையைப் படிப்போமா ?

தலைப்பே வித்தியாசமாய் இல்லை? இந்தத்  ”தியாகபாரதி”க் கட்டுரையில் பாரதியின் வரிகள் தெரிகிறதா என்று பாருங்கள்? “ சோனையும் ...” என்று தொடங்கும் செய்யுளின் பொருள் புரிகிறதா?








[ நன்றி : தினமணி கதிர் ]

பி. கு.

கட்டுரையில் வரும் “ சோனையும் காத்து” என்ற பாடல் ”அந்தகக் கவி’ வீரராகவ முதலியாரால் ( 15-ஆம் நூற்றாண்டு) இயற்றப் பட்டது.  

சோனை = மழை ; நல் ஆனை = நல்ல பசுக்களை ( கோவர்த்தன கிரியைத் தூக்கியதால் மழையைத் தடுத்து பசுக்களைக் காத்து)  தானை= ஆடை; அடைந்தான் = விபீஷணன் ; அகலிமான் = அகலிகை ; மடுவில் விழும் ஆனை= கஜேந்திரன். 

பாரதியின் “காட்டில் விலங்கறியும் ...”  என்ற வரிகள் அவருடைய “ குயில் பாட்டில்’ வருகிறது என்றும், அது “ பசுர் வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கான ரசம் பணீ “ என்ற ஸம்ஸ்கிருத வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு என்பதையும்  பலரும் அறிந்திருப்பர்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:


வி.வி.சடகோபன் 

சங்கீத சங்கதிகள்

வி.வி.எஸ் -ஸின் சில பாடல்கள்

மதனகாமராஜனில் வி.வி.சடகோபன்

Prema prema neeyillaamal(vMv)--MADHANA KAMARAJAN

(1) வேணுகானம் : 1941 திரைப்படம்: ராண்டார் கை (ஆங்கிலம்)

( 2) அதிர்ஷ்டம்: ராண்டார் கை ( ஆங்கிலம் )

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 49

வி,வி.சடகோபன் -3 

நாத வனத்திலோர் ஆண்டி!

’கான கலாதரா’ சடகோபன்  ஒரு கவிஞரும் தான்!

 “ இசை கற்பித்தலை குறித்து தீவிரமாகச் சிந்தித்து, கல்வி முறையில் அதை இணைக்கும் வழிவகைகளை ஆராய்ந்து வந்தார். குழந்தைகள், ஆடிப்பாடி இசை கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல்கள் புனைந்து, இசை அமைத்து, அவற்றை குழந்தைகளுடன் குழந்தையாகப் பாடியும் வந்தார். இந்த லட்சிய உணர்வுடன், அவர் பாரத நாட்டைச் சுற்றி வந்தார்.” என்கிறார் ‘வாமனன்’. 

 “ நந்த வனத்தில் ஓர் ஆண்டி” என்ற ஆனந்தக் களிப்பு மெட்டில் ‘ நாதம், பாவம், தாளம்’ பற்றி அவர் இயற்றிய ஒரு பாடலை இந்தக் கட்டுரையில் படித்துப் பாருங்கள்!  ’ஓடம்’ மெட்டில் இன்னொரு பாடலும் உண்டு!


[ நன்றி: அரசி ]



[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
 

[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள் 

வி.வி.சடகோபன் 


சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சங்கீத சங்கதிகள் - 48

வி.வி.சடகோபன் -2 

பாகவத சம்பிரதாயம் 



[ நன்றி : அனந்த் ] 


[ நன்றி: அரசி ] 
வி.வி. சடகோபனின் மாணவர் ஸ்ரீராமபாரதி சடகோபனின் சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து 1984-இல் தினமணி கதிரில் வெளியிட்டார். அத்தகையக் கட்டுரைகளில் இதோ இன்னொன்று :





[ நன்றி ; தினமணி கதிர் ]

( தொடரும்)

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]