திங்கள், 27 ஜனவரி, 2014

பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்

’விகட’ அனுபவங்கள்! ஜனவரி 27, 2014 -இல் மறைந்த பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்கு ஓர் அஞ்சலியாய் இந்தத் தொகுப்பை இடுகிறேன். அவருடைய பாரதி எழுத்துகள் சேகரிப்பைப் பற்றிப் பலரும் படித்திருப்பர். ஆனால், அவர் ஒரு மூத்த பத்திரிகையாளரும் கூட; தமிழ் இதழ்களின் வளர்ச்சியை நேரில் பார்த்தும், ஆராய்ந்தும் கட்டுரைகளும், “தமிழ் இதழ்கள்” ( காலச்சுவடு) என்ற நூலும் எழுதியிருக்கிறார். அதனால், அவருடைய சில ’ஆனந்த விகடன்’ அனுபவங்களை  மட்டும் இங்கிடுகிறேன். இவை விகடன் மலர்களில் வெளியான அவர் அளித்த நேர்காணல்களிலிருந்தும் , அவர் நூலிலிருந்தும் தொகுத்தவை.

பத்மநாபன் 1933-இல் விகடனில் சேர்ந்தார். பிறகு, ஜெயபாரதி ( 1936-37), ஹனுமான் ( 1937), ஹிந்துஸ்தான் (1938), தினமணி கதிர் ( 1965-66) முதலான இதழ்களில் பணியாற்றியிருக்கிறார்.இதோ அவரே பேசட்டும்!

“ 1926-இல் பூதூர் வைத்தியநாதையர் என்ற புலவர் ஆரம்பித்த விகடன் 1928-இல் வாசன் கைக்கு வந்தது. அவர் விகடனை ஏற்ற ஆறு மாதத்துக்கெல்லாம் ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் அவரைத் தேடி, நெல்லையப்ப பிள்ளையின் சிபாரிசுடன் வந்தார். நம் நாட்டில் நகைச்சுவை போதவில்லை என்று தலையங்கமே எழுதிய வாசன், கிருஷ்ணமூர்த்தியின் நகைச்சுவைக் கட்டுரைகளை விரும்பி, வரவேற்று, நல்ல சன்மானமளித்து ஊக்கி, ‘கல்கி’ என்ற சிறந்த எழுத்தாளர் உருவாக உதவினார். இதுபோல ‘துமிலன்’ என்ற ந.ராமஸ்வாமியையும் ஊக்கப் படுத்தி, அவரும் விகடனில் தொடர்ந்து எழுத வகை செய்தார். ( 1932 -இல்) விகடன் மாதமிருமுறையானதை முன்னிட்டு ‘தேவன்’ என்ற ஆர்.மகாதேவன் விகடன் உதவியாசிரியராக எடுத்துக் கொள்ளப் பட்டார்.”


“ஆனந்த விகடனில் சேரும்போது எனக்குப் பதினாறு வயது இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் ‘மாணவர் பகுதி’ என்று தனியொரு பகுதி வரும். அதற்கு சில சிரிப்புத் துணுக்குகளை அனுப்பி வைத்தேன். பிரசுரித்திருந்தார்கள். அடுத்ததாக, கல்கியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. “நிறைய படியுங்கள். ஆங்கில இலக்கியங்களைத் தொடர்ந்து வாசியுங்கள்” என்று அதில் எழுதியிருந்தார். சில நாட்கள் கழித்து என் தகப்பனாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதி இருந்தார் ‘கல்கி’. ‘விகடனை வாரப் பத்திரிகையாய் மாற்றப் போகிறோம். உங்கள் மகனை வேலைக்கு அனுப்ப முடியுமா? “ என்று கேட்டிருந்தார். கதர் பிரசாரத்துக்காக கோவை வந்த கல்கி, என் தகப்பனாரிடம் நேரிலும் இதே கோரிக்கையை வைத்தார். இப்படித்தான் விகடனில் நான் சேர்ந்தேன். கல்கி, துமிலன், தேவனுடன் நான்காவது நபராக நான். அதற்கு அடுத்தவாரம் சேர்ந்தவர்தான் ‘றாலி’ ”
[ வாசன், கல்கி ]

” விகடனைத் தவிர ‘ஆனந்த வாஹினி’ என்ற தெலுங்கு மாதப் பத்திரிகையையும், ‘தி மெர்ரி மாகஸின்’ என்ற உயர்தர மாதமிருமுறை பத்திரிகையையும் வாசன் தொடங்கியதற்குக் காரணம், பத்திரிகைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம்தான். வாசனின் நண்பரும் வக்கீலுமான எஸ்.சிங்கம் ஐயங்கார்தான் ‘தி மெர்ரி மாகஸி’னைக் கவனித்துக் கொண்டார். ஆங்கிலத்தில் அளவில்லாத பாண்டித்யம் பெற்றவர் அவர். அலுவலகத்தில் யாரும் பீடி, சிகரெட் பிடித்துவிட முடியாது. ஆனால், பெரிய சைஸ் சுருட்டை சிங்கம் ஐயங்கார் பிடிப்பார். அந்தளவுக்கு அவருக்கு உரிமை கிடைத்ததற்குக் காரணம், அவர் புலமையினால்தான்.”

“வெளிநாடுகளில் பிரபலமான எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் விகடன் அலுவலகத்துக்கு வியாழனன்று வந்துவிடும். அன்று அந்தப் பத்திரிகைகளை யார் முதலில் படிப்பது என்று கல்கிக்கும் சிங்கம் ஐயங்காருக்கும் போட்டியே நடக்கும். அப்போது நான் விகடன் நூலகராகவும் இருந்ததால் இதைக் கவனிக்கும் பொறுப்பு என்னுடையது. மொத்தத்தையும் அள்ளிவிட்டுப் போய் ஒரு திருப்பு திருப்பிவிட்டுத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, மறுபடி கொண்டு வந்து போட்டு விடுவார் சிங்கம் ஐயங்கார். “

“ தலையில் கொம்பு முளைத்த விகடன் தாத்தாவுக்கு முன், குல்லா போட்ட பபூன் படம்தான் விகடனின் லோகோவாக வரும். இந்த லோகோவை மாற்றவேண்டும் என்று பேச்சு வந்தபோது என்னுடைய மூக்கையும் தாடையையும் பார்த்து அதே மாதிரி வரைந்தார் மாலி. ‘உன்னோட மூக்கும் தாடையும் ஒண்ணுக்கொண்ணு ஒட்டும் போல” என்று கிண்டலடிப்பார் மாலி. “

“ மாலியின் பென்ஸில் படங்களில் மாறுதல் செய்தால் நன்றாயிருக்குமே என்று கல்கி சில சமயம் விரும்புவார். ஆனால், அதை நேரில் சொல்லமாட்டார் ! என் மூலமாக, சொல்லும்படி பணிப்பார். நான் ‘மாலி’யிடம் இதைத் தெரிவிப்பேன். ‘அப்படிச் சொன்னாரா?’ என்று சொல்லி, அவருக்காக ஆசிரியர் சொன்ன மாறுதல் ‘சரி’ என்று படுவதை உடனே ஏற்பார். “


“ ( விகடன் அலுவலகத்தில் ஒரு ஹால் உண்டு.) இந்த ஹாலில், ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தமது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”

“ ஆனந்த விகடனில் முதல் தொடர்கதை எழுதிய பெருமை எஸ்.எஸ்.வாசனையே சாரும். பத்திரிகையைத் தாம் மேற்கொண்டதும், ‘இந்திரகுமாரி’ என்ற தொடர்கதையை எழுதினார் வாசன்.  தமிழ் நாட்டில் முதல்முறையாக ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியவரும் அவரே. 1933-இல் நூறு ரூபாய் முதற்பரிசுடன் நடந்த இந்தப் போட்டியில், ‘றாலி’ முதல் பரிசு பெற்றார். இரண்டாவது பரிசு பி.எஸ்.ராமையா. மூன்றாவது பரிசு, ரா.ஸ்ரீ. ஸ்ரீகண்டன் பெற்றார்.  “

“ விகடன் வாரப் பத்திரிகை ஆனதும், அதில் எழுதிவந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் பிரமாதமாக அதிகரித்தது. விகடனில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ராஜாஜி, வ.ரா, மகாகனம் சாஸ்திரிகள், டி.கே.சி., பெ.நா.அப்புஸ்வாமி ஐயர் முதலிய பெரியவர்களும் விகடனில் ஆரம்ப காலத்திலேயே எழுதி அதற்குப் பெருமை கூட்டியிருக்கிறார்கள். ”

” ஆனந்த விகடன் உண்மையில் ஒரு தமிழ் வளர்ப்பு இயக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை “

[ நன்றி ; விகடன் காலப்பெட்டகம் (நூல்) , ‘விகடன்’ பவழ விழா மலர், “தமிழ் இதழ்கள்” ( நூல்: காலச்சுவடு) ; படங்கள் : விகடன் ]

ஒரு பின்னூட்டம்: நண்பர் பேராசிரியர் வே.ச.அனந்தநாராயணன்  எழுதியது :

அண்மையில் நான் சென்னையில் இருந்தபோது, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு, சாஸ்திரி நகரில் சரஸ்வதி வெங்கடராமன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது

விழாவின் தொடக்கத்தில், சங்கீதகலாநிதி டி.கே. கோவிந்த ராவ் குருகுல மாணவியர் பல பாரதியார் பாடல்களை நல்ல குரலும் இசை ஞானமும் சேரப் பாடினார்கள். இந்நிகழ்ச்சி அமைப்புக்குக் காரணமான திரு. குப்புசாமி அவர்களின் அறிமுகத்துடன்திரு.நரசய்யா அவர்களின் தலைமையில் விழா தொடங்கியது. முதலில், கவிஞர் கே.ரவி ஆற்றவிருந்த சிறப்புரையை (அவருக்குத் தொண்டைக்கட்டு இருந்ததன் காரணமாக) விவேகானந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின், இளம் வழக்கறிஞர், அ.க. ராஜாராமன், அழகாக உரையாற்றினார். இதனை அடுத்து, முன்னதாக அறிவித்திராத பேச்சாளர்கள் பலர் ரா.அ.ப.-வின் பாரதி இலக்கியத் தொண்டைப் பற்றிய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மிகவும் அருமையான ‘போனஸ்’ ஆக இருந்தது. பேராசிரியர் அவ்வை நடராசன், ரா.அ.ப-வின் மகன் (பெயர் நினைவில்லை), ஓவியர் மதன், திரு.மண்டையம் பார்த்தசாரதி ஆகிய ஒவ்வொருவர் பேச்சையும் கேட்கையில் மறைந்த பாரதி அறிஞரின் எண்பதுக்கும் மேலான ஆண்டுகளாக ஆற்றிய அரும்பணியின் முழுப்பரிமாணம் தெரியலாயிற்று. 1917-ல் பிறந்த ரா.அ.ப.-வை விட நான்கே மாதம் இளையவரும் அவருடன் 77 ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தவருமான திரு.மண்டையம் பார்த்தசாரதியின் உற்சாகமான, நகைச்சுவை கலந்த பேச்சை நானும் குழுமியிருந்தோரும் மிகவும் ரசித்தோம்.  குழுமி இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமில்லாவிடினும் தமிழ் இலக்கியத்திலும் பாரதியின் படைப்புகளிலும் தேர்ச்சிபெற்ற பலர் வருகை தந்திருந்தனர். நகுபோலியன் பாலு, கே.ரவி, குமரிச்செழியன், கோபால், சுவாமிநாதன் ஆகியோர் அவர்களில் சிலர். ரா.அ.ப.-வின் குடும்பத்தினரும் முன் வரிசைகளில் அமர்ந்திருந்தனர் (இணைப்புப் படங்கள்). 

இந்நிகழ்ச்சி பற்றித் திரு. கோபு எழுதியுள்ள (படங்களுடன் கூடிய ) விரிவான கட்டுரையை இங்கே காணலாம்:

அனந்த் 20-3-2014

 
[ ரா.அ.ப. அஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பகுதி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரா.அ.பத்மநாபன்ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 29

எங்கள் பாரத நாடு! கர்நாடக இசைக்கச்சேரி மேடைகளிலும் மற்ற ஊடகங்களிலும்  நாம் கேட்டுப் பரவசப்படும் பல மெட்டுகளுக்கு யார் இசையமைத்தார் என்ற தகவலைத் துரதிர்ஷ்ட வசமாக யாரும் அறிவிப்பதில்லை. எல்லா ஒலிநாடாக்களும், குறுந்தகடுகளும்  குறிப்பிடுவதும் இல்லை. இசையமைப்பாளர்களுக்குத் திரைப்பட உலகில் இருக்கும் கௌரவம் கர்நாடக இசையுலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ( பல பாடகர்களுக்கே இந்தத் தகவல்கள் தெரியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே!)  இந்தப் பழக்கத்தால் பலருக்கு முறையாகச் சேரவேண்டிய புகழ் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பலரில் ‘மீரா’ பட இசைப்புகழ்  எஸ்.வி. வெங்கடராமன் ஒருவர். இன்று பலராலும் மறக்கப்பட்ட இந்த இசை மேதைதான் எம்.எஸ். அவர்கள் பாடிப் பிரபலமாக்கிய “ வடவரையை மத்தாக்கி” ( சிலப்பதிகாரம்) , “பஜ கோவிந்தம்” (ஆதி சங்கரர்) , “முடியொன்றி “ ( பெரியாழ்வார்) போன்ற பல பாடல்களுக்கு இசை அமைத்தார் என்ற தகவல் எவ்வளவு பேருக்குத் தெரியும்?

ஆனால், ஒரு சமயம் ‘கல்கி’யில் ஓர் இசைத்தட்டு விளம்பரத்தில் இவருடைய பெயர் அழகாக வெளியிடப்பட்டது. எப்போது தெரியுமா? இந்தியக் குடியரசுத் தின விழாவிற்கென்றே பிரத்தியேகமாய் எம்.எஸ். அவர்கள் பாடி ‘எச்.எம்.வி’ வெளியிட்ட ரிகார்டின் விளம்பரத்தில் தான்!
இதோ ‘கல்கி’ யின் 1950 குடியரசுத் தின மலரில் வந்த அந்த விளம்பரம்!


விளம்பரம் மட்டும் போதுமா? ‘கல்கி’ சும்மா இருப்பாரா? பாரதியின் அந்த இரு பாடல்களையும் அந்த 1950 குடியரசு மலரில் அழகான ஓவியங்களுடன் வெளியிட்டார்!

ஓவியர் ‘மணிய’த்தின் படத்துடன் பாரதியின் ‘மன்னும் இமயமலை’ மிளிர்வதைக் கீழே பாருங்கள்! ( பாரதி இதைப் பாடும்போது “எங்கள்’ என்ற இடத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் பெருமையாக என்பர்!)


பாட்டுக்குப் பாட்டு! படத்துக்குப் படம்!

https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/07-mannum-imayamalai


இனிய குடியரசுத் தின வாழ்த்துகள்!
[ நன்றி : ‘கல்கி’ ]

தொடர்புள்ள பதிவு:

வியாழன், 23 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 28

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.

பொதுவாக, ஒரு பிரபல பாடகர் தன் குருவல்லாத இன்னொரு பிரபல வித்வானுக்குப் பின்னால் உட்கார்ந்து தம்பூராவில் ஸ்ருதி போட்டுக் கொண்டே பாடுவது அபூர்வம் தான்! அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார்? மேலே படியுங்கள்!
[ செம்மங்குடி; நன்றி: விகடன் ]

1944-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம். வழக்கம்போல் சென்னையில் இசை விழா நடந்து முடிந்த சமயம். ஜனவரியில் அடுத்து வரும்  தியாகராஜ ஆராதனைக்கு மும்முரமாய் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்குகின்றன. முதலில் ஆராதனை மஹோத்சவ சபைக்கு வேண்டி இருந்தது என்ன ? வேறென்ன ? வைடமின் ‘ப’ , பணம்தான்! “நிதி சால சுகமா” என்று பாடினால் விழா நடத்த முடியுமா?

உத்சவ நிதிக்காகத் தஞ்சாவூரில் 15 கச்சேரிகள் நடக்கின்றன. யாரெல்லாம் பாடினார்கள்? ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ? ) இதோ, அப்போது “விகட”னில் வந்த ஒரு விளம்பரத்தைப் பாருங்கள்!
( அரியக்குடி, செம்மங்குடி, மகாராஜபுரம் பாடினார்கள் என்பதைக் கவனிக்கவும்! )

பிறகு என்ன? 45-இல் நடந்த தியாகராஜ ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த கட்டுரையில் ( செல்கள் ஏப்பமிட்டபின் மிச்சமிருக்கும் !)  ஒரு பக்கம் இதோ!


பி. கு.1 : 

உங்களுக்கு ஒரு ‘போனஸ்’ : மேலேயுள்ள ராஜுவின் அற்புத நகைச்சுவைச் சித்திரம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள, ‘க்ளாஸிக்’ துணுக்கு என்பேன்! ஏன் தெரியுமா? 1945- இல் இரண்டாம் உலகப் போர் காரணத்தால், தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக் குறை ஏற்பட்டு, சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயம் வந்தது. இதைப் பற்றி வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்குத் தான் மேலே உள்ள கார்ட்டூன்!

பி.கு 2.
’ஜோக்’கைப் பார்த்த ஒரு நண்பர் அந்த இதழ் முழுவதிலும் இத்தகைய பல துணுக்குகள் இருந்தன என்று தெரிவிக்கிறார். அவர் சொன்ன இன்னொரு துணுக்கும் இதோ!

பி.கு.3:
அரிசிப் பஞ்சம் நீடித்தது. 1951-இல் “சிங்காரி” படம். தஞ்சை ராமையாதாஸின் பாடல் பிரதிபலிக்கிறது.

ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா -இந்த 
உலகினில் ஏது கலாட்டா
உணவுப் பஞ்சமே வராட்டா
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா

பாட்டை இங்கே கேட்கலாம் :

2:49 / 3:55 ORU JAANN VAYIREY ILLAADAA SSKFILM033 K N REDDI, KR @ SINGHKAARI

தொடர்புள்ள பதிவுகள்:
( 44 , 46 -ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராதனைகள் பற்றி ) 
தியாகராஜ ஆராதனைகள் : 40-களில்

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

சனி, 18 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 27

மதுரை சோமு - 2 

( தொடர்ச்சி ) 1971 -ஆம் ஆண்டு. தமிழிசைச் சங்கத்தின் ‘இசைப் பேரறிஞர்’ என்ற விருதைப் பெறுகிறார் மதுரை சோமு. அவருடைய அகாடமிக் கச்சேரியைக் கேட்டு  “சோ என்று கொட்டும் சோமு” என்று தினமணி கதிரில் எழுதுகிறார் சுப்புடு.  அந்த விமர்சனத்தில் ஒரு பகுதி :

சோமு பாடிய காம்போஜி அப்படியே நேரே, இருதயத்தைத் தொட்டது. அது என்ன மூர்ச்சனை ஐயா? காந்தாரத்தை வல்லின மெல்லினமாய் நாதஸ்வர பாணியில் கொடுக்கும்போது மெய் சிலிர்த்து விட்டது. அதே மாதிரிக் குழைவுகள் கொடுக்கும் பொழுது ஆனந்தமாக ‘மஸாஜ்’ பண்ணிக் கொள்வதுபோல் இருந்தது. சோமு ராகத்தை ஒரு பூரண சொரூபமாய் உருவகப் படுத்திக் கொள்கிறார். அவர் கண்ணோட்டமும், கைவீச்சும் அத்தைகைய பிரமையை நமக்கு உண்டுபண்ணுகின்றன. காம்போஜியில் பல இடங்களில் அவர் அந்த ராகத்துடனே இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவருக்கு சங்கீதம் சத்யப் பிரமாணம். “  

அடுத்து, தனக்குப் பிடித்த ஆறு ராகங்களைப் பற்றிச் சோமு அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!


பிரபல எழுத்தாளர் ‘மணியன்’ சோமுவின் தீவிர ரசிகர். அவருடைய ஒரு கட்டுரை இதோ:[ நன்றி: ”இதயம் பேசுகிறது”, ராஜு அசோகன் ] 
கடைசியாக , சிவாஜி கணேசன் -சோமு அவர்களின் ஒரு சந்திப்பைப்
பற்றிய தகவலுடன் , இம்மடலை முடிக்கிறேன்!

[ நன்றி: சினிமா எக்ஸ்ப்ரஸ், ராஜு அசோகன் ] 
பி.கு. : 

இந்தச்  சிவாஜி -சோமு சந்திப்புப் பற்றிய  தகவலையும், ம்துரை சோமு - ராமாயணம் படத் தொடர்பு பற்றியும் மேலும் விவரமாக ( சரியாக?)  கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து அறியலாம்:

“ ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஸி.எஸ்.ஜெ., நமது இன்றைய பாடல் உட்பட இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார்! அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட மாத இதழில் புகைப்படம் கூட வந்தது.) ஆனால், திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. (இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமுவிடமிருந்தே அறிந்துகொண்டேன்.) ”

http://krishnathreya.blogspot.com/2012/04/blog-post_30.html

என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:


செவ்வாய், 14 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 26

சங்கீத சீசன் : 1954 - 3 

முந்தைய பதிவுகள் :
சங்கீத சீசன் : 54-1
சங்கீத சீசன் : 54-2

( தொடர்ச்சி ) 

1954 -ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வெளிவந்த  “ ஆடல் பாடல்” கட்டுரைகளின் கடைசிப் பகுதி இதோ!  அந்த ஆண்டில் இசைச் சபைகளில் பாடாத எம்.எஸ். அவர்கள், சீனக் கலைஞர் குழுவிற்கு முன்னர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
[ நன்றி : விகடன் ]

( நிறைவுற்றது )

தொடர்புள்ள பதிவுகள்:

சீஸன் 53 : 1   சீஸன் 53: 2  சீஸன் 53 : 3


சீஸன் 55-1 ; சீஸன் 55-2 

சங்கீத சீசன் : 1956 - 1 ; சங்கீத சீசன் : 1956 -2 
சங்கீத சீசன் : 1956 -3  ; சங்கீத சீசன் : 1956 -4  ; சங்கீத சீசன் : 56 -5

மற்ற சங்கீத சங்கதிகள் கட்டுரைகள்


சனி, 11 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 25

மதுரை சோமு - 1 

[ நன்றி: விகடன், 1946. ஓவியம்: சில்பி ? ] 


”சோமுவின் சாரீரத்தில் ஓர் ஆச்சர்யம். ஆரம்பிக்கும்போது புகைச்சலாய் இருக்கும். ஆனால், போகப் போக அதிலிருந்து வெளிவரும் நாத அலைகள் அவர் எவ்வளவு தலை சிறந்த நாதோபாசகர் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் பறை சாற்றும். ஊசிப் பிரயோகங்களைத் தொடர்ந்து உலக்கைப் பிரயோகங்கள் வரும். திடீரென்று கைகளை நாதஸ்வர வித்வான் மாதிரி வைத்துக் கொண்டு ராஜரத்தினத்தை கண்முன் கொண்டுவந்துவிடுவார்.” 
       ---’சுப்புடு’ , 1978. [ நன்றி: ராஜு அசோகன் ]

கர்நாடக இசை மேதை மதுரை சோமு அவர்களைத் தெரியாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது/ இருக்கக் கூடாது!  என்று நினைக்கிறவன் நான். ஆனால், இணையத்தில்  அவரைப் பற்றி அதிகம் தகவல்கள், கட்டுரைகள் இல்லையே என்ற ஓர் ஆதங்கம் திடீரென்று தோன்றியது ; ‘சரி, இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டி விட வேண்டியது தான்’ என்று நண்பர் ராஜு அசோகனைத் தொடர்பு கொண்டேன். தீவிர சோமு ரசிகரான அவர் மனமுவந்து தந்த சில கட்டுரைகளை மெதுவாக, தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி! கூடவே என்னிடமும் இருக்கும் சில குறிப்புகளையும், கட்டுரைகளையும் சேர்க்கிறேன்.

முதலில், மதுரை சோமு அவர்களைப் பற்றி என்னிடம் இருக்கும் பழைய குறிப்பு ஒன்று. 1946-ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ ’ஆடல் பாடல்’ பத்தியில் வந்த விமர்சனமும், படமும். ( ஆம், அப்போதே விகடன் அவரைக் ‘கவனித்திருக்கிறது’! ) ( இதற்கு முன்பே - 44,45 -இல் -- விகடனின் ‘ரேடியோ எப்படி’ என்ற பத்திகளில் சோமு அவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன; அவற்றைப் பின்பு வேறு மடலில் இடுகிறேன். அந்தப் பக்கங்களின் மிகவும் சேதமடைந்த நிலையே காரணம்! )

ஆடல் பாடல்


வித்வத் சபையில் பாடிய இளம் வித்வான்களில் சோமசுந்தரத்தின் பாட்டு எல்லாருடைய விசேஷ கவனத்தையும் கவர்ந்திருக்கும். ஸ்ரீ சோமசுந்தரத்துக்கு வெகு அபூர்வமான சாரீரம் வாய்த்திருக்கிறது. அதில் பேசும் துரித கால பிர்க்காக்கள் அழுத்தமும் அழகும் கொண்டு நம்மை பிரமிக்கச் செய்துவிடுகின்றன. அத்துடன் அவருக்குச் சிறந்த ஞானமும் விசேஷ மனோதர்மமும் இருப்பதும் அன்றைய கச்சேரியில் தெரிந்தது. இந்த வசதிகளையெல்லாம் அவர் பாகுபாடாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அவருடைய ராக ஆலாபனைகளெல்லாம் விசேஷபாவத்தோடும் சிறந்த கல்பனைகளோடும் பிரகாசிக்கின்றன. உதாரணமாக, அவர் ஆலாபனை செய்த கல்யாணியையும் ஷண்முகப்பிரியாவையும் சொல்லலாம். நடநாராயணி கல்யாண வசந்தம், அஸாவேரி போன்ற அபூர்வ ராகங்களையும் அவர் மிக்க திறமையோடு ஆலாபனை செய்ததைப் பாராட்ட வேண்டும். கீர்த்தனைகளையும் அவர் வெகு கச்சிதமாகப் பாடுகிறார். சுருங்கக் கூறினால், ஒரு பெரிய வித்வானுக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சங்களும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம்.
[ நன்றி: விகடன் ]

இரண்டாவதாக,  சோமு அவர்களைப் பற்றிய ஒரு வாழ்க்கைக் குறிப்பு; 1988- இல் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட  மலரில் வந்த கட்டுரை.


[ நன்றி : ராஜு அசோகன் ] 

மூன்றாவதாக, தன் குருவுடன் தான் செய்த கடைசிக் கச்சேரி பற்றிச் சோமு அவர்களின் சில நினைவுகள்;


[ நன்றி : ராஜு அசோகன் ] 

 ( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:


சனி, 4 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 24

கம்பனைப் பாட ஒரு புதிய ராகம்! 
உ.வே.சாமிநாதய்யர் 


[ ஓவியம்: கோபுலு ; நன்றி: தினமணி  இசைச் சிறப்பிதழ், 97 ]

2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷகோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்தது. அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து , வித்வான் சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தார்.
முதற் பாடல் ஒரு வெண்பா.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச் 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும் 
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து. 

இது கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
( கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும். )

இந்த நேரிசை வெண்பாவை, சேஷகோபாலன் ஹம்ஸத்வனி ராகத்தில் பாடினார்.

தற்காலத்தில் இத்தகைய இயற்பாக்களை வேறு எந்த ராகத்திலும் பாடுவதற்கும் ஒரு தடையுமில்லை. ஆனால், பழங்காலத்தில் சில பாக்களைச் சில ராகங்களில்தான் பாடுவது என்ற மரபு இருந்தது. “சம்பூர்ண ராமாயணம்” படத்தில் வரும் ” வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பர். ராவணனுக்குக் குரல் கொடுத்த வித்வான் சி.எஸ்.ஜயராமன் அதில் வெண்பாவிற்குச் சங்கராபரணம், அகவற்பாக்குத் தோடி என்றெல்லாம் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். இப்படிப் பாடுவது பற்றி ஆபிரகாம் பண்டிதர் தன் “ கருணாமிர்த சாகரம் “ என்ற நூலில் விவரமாய் எழுதியுள்ளார். உதாரணமாய், விருத்தங்களைக் கல்யாணி, மத்தியமாவதி, காம்போதி போன்ற ராகங்களில்தான் பாடுவார்கள் என்று எழுதியுள்ளார்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் இத்தகைய மரபுகளைக் கடைபிடித்துத் தான் இயற்பாக்களைப் பாடுவார். அதுவும், இசையறிவு மிக்க சுப்பிரமணிய தேசிகர் போன்றோரின் முன்னிலையில், மிகக் கவனமாக இருப்பார். அவருடைய “என் சரித்திரம்” நூலிலேயே ஓர் இடத்தில், தேசிகர் முன்னர் எப்படிக் கட்டளைக் கலித்துறையைப் பைரவி ராகத்தில் பாடினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட உ.வே.சா. நிச்சயமாய்க் கம்ப ராமாயண விருத்தங்களை மரபின் வழியே, குறிப்பிட்ட பழைய ராகங்களில்தான் பாடியிருப்பார் என்று தானே நாம் நினைப்போம்? அதுதான் இல்லை! ஒருமுறை கம்பனின் விருத்தங்களைத் தேசிகர் முன்னிலையில் உ.வே.சா முற்றிலும் புதிய ஒரு ராகத்தில் பாடினார்!

ஏன்?எப்படி? என்று கேட்கிறீர்களா? இதோ, அவரே சொல்லட்டும்!

   
திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.

வித்வத்ஜன சேகரர்

அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை  வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள்  கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது  கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.

கோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்  பதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.

என் உத்ஸாகம்

மூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும்படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.

திருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறதுஎன்று சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை?” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.

இசையில் வெறுப்பு

நான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா?” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி,
இப்படியல்லவா படிக்க வேண்டும்? உமக்குப் படிக்கத் தெரியவில்லையே!
என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரேஎன்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். இப்படியல்லவா படிக்க வேண்டும்!” என்று அவர் பாராட்டினார்.   தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே!என்று சொல்லி நகைத்தார்.

இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறதுஎன்று சொன்னேன். ராகம்என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

கோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது.

[ நன்றி: “என் சரித்திரம்” நூல் ] 

பி.கு.

நண்பர் இரா.முருகனின் பின்னூட்டம்:

உ.வே.சா பாதம் பணிந்து வணங்குகிறேன். கோபுலு சாருக்கும் அன்பான 

வணக்கம்.

திருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிக சந்நிதானம், 


அந்த ஆதின வழக்கப்படி மழிக்கப்பட்ட தலையுடன் இருந்ததாக உ.வே.சா 

வரலாற்றில் காணலாம். மற்றும் மடத்துக்கு வந்த வித்துவான்திரிசிரபுரம் 

கோவிந்தப் பிள்ளை வைணவர். இவர்களின் ஓவியச் சித்தரிப்பில் இருக்கும் 

மிகச் சிறு குறைகளைப் புறம் தள்ளி அழகும் எளிமையும் கொண்ட உ.வே.சா 

உரைநடையிலும், அற்புதமான கோபுலு சார் ஓவியத்திலும் அமிழலாம்


சன்னிதானத்தின் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்:

http://ksuba.blogspot.ca/2013/06/52.html

தொடர்புள்ள பதிவுகள்: 

உ.வே.சா