வியாழன், 10 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 10

சங்கீத சீசன் 1953 : ஆடல் பாடல் -3தொடர்புள்ள, முந்தைய ’ஆடல் பாடல்’ கட்டுரைகள்:

சீசன் 53 -1  ;  சீசன் 53 -2


(தொடர்ச்சி)

விகடனில் 1953 சீஸனைப் பற்றி வந்த கடைசி ‘ஆடல் பாடல்’ கட்டுரை .
54- ஜனவரியில் முதல் வாரம் வந்தது என்று நினைக்கிறேன்.


 சில நிகழ்வுகள். சில குறிப்புகள்:

1) 53- சீஸன் தான் ‘கல்கி’ பங்கேற்ற கடைசி சென்னை சீஸன்.
5 டிசம்பர், 54 -இல் ‘கல்கி’ காலமானார்.

2)  ‘விகடன்’ ஜனவரி 54 இதழ் ஒன்றில் வந்த ”என்ன சேதி” என்ற கட்டுரையில் கல்கத்தாவில் 53, டிசம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களில் நடந்த பாரதி ஜயந்தி விழாப் பற்றி வந்த ஒரு குறிப்பு : 

” அதில் ஸ்ரீ “சுந்தா”வின் “நவீன சுயம்வரம்” என்னும் ஹாஸ்யக் கதாகாலக்ஷேபம் பாராட்டுதல்களைப் பெற்றது.”  
( அடடா! இந்த ஒலிபரப்புக் கிடைக்குமா?) 

இதே “சுந்தா” தான் 20- ஆண்டுகளுக்குப் பின் 
கல்கியின் வரலாற்றைப் “பொன்னியின் புதல்வர்” என்ற தலைப்பில் அற்புதமாகக் “கல்கி” இதழில் தொடராக எழுதினார்.

3) 53-சீஸனில் மதராஸ் முதல் மந்திரியாய் பங்கேற்ற ராஜாஜி மார்ச் 54-இல் மந்திரிப் பதவி, காங்கிரஸ் தலைமை இரண்டையும் ராஜினாமா செய்கிறார். காமராஜர் ஆட்சி 54 தமிழ்ப் புத்தாண்டில் தொடங்குகிறது.

4) ராஜரத்தினம் பிள்ளையின் இசை பற்றிக் கவிதை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு 54- விகடன் பொங்கல் இதழில் 
மண்ணை நம்பி வாழ்கிறோம்  என்ற கவிதையை எழுதுகிறார். 

5) மண்வாசனை எழும்படி பாடும் கொத்தமங்கலம் சுப்புவை “மண்ணாங்கட்டி”க் கவிஞர் என்று புகழ்ந்த ரசிகமணி டி.கே.சி பிப்ரவரி, 54 -இல் காலமாகிறார்.

6) கட்டுரையில் குறிப்பிடப் பட்ட (கே.பி.சுந்தராம்பாள் பாடிய)  “தனித்திருந்து” என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் ஆனையாம்பட்டி C. N. ஆதிசேஷன். பிற்காலத்தில், சாது குகானந்த பாரதி என்ற பெயரில் துறவறம் மேற்கொண்டவர். இன்றும், அவர் நிறுவிய ஒரு திருப்புகழ்ச் சபை சேலத்தில் நன்றாய் இயங்குகிறது. மதுரை சோமு அவர்களும் அவருடைய பாடல்களைப் பாடிப் பிரபலப்படுத்தி இருக்கிறார். “ என்ன கவி பாடினாலும்” என்ற அவருடைய  நீலமணி ராகப் பாடல் தற்காலத்தில் பிரசித்தம்.

[நன்றி: விகடன்]


தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்


3 கருத்துகள்:

Soundar சொன்னது…

சில கருத்துகள்
1.திருவாவடுதுறையாரின் இசைக்கருவியை "நாகஸ்வரம்" என்று சொல்லிப் பின்னர் இசையைக் கேட்ட அவையோர் கட்டுண்ட சர்ப்பம் போல் மெய்மறந்தனர் என்று எழுதியது உரைநடையில் அமைந்த மோனையாக (நாகம்-சர்ப்பம்) இனிக்கிறது.
2."ஹிந்துஸ்தானி" இசை வல்லுநரான படே குலாம் அலிகானை வரிந்துகட்டிக்கொண்டு 'பாகிஸ்தானி" என்று சுட்டியிருப்பது முரண்தொடை.
3.கொ.சுப்புவின் பாட்டில் ஏன் ரேடியோவிலே கேட்பதாக எழுதியிருக்கிறார்? அவர்தான் நேரில் கேட்டதாக கீழே எழுதியிருக்கிறாரே! ஒருவேளை, கட்டுரையில் ஒரு விறுவிறுப்பு வருவதற்காக, சுப்பு எப்போவோ எழுதிய கவிதையை இந்தக் கச்சேரியைக் கேட்டுவிட்டு எழுதியதாக ஆசிரியர் அமைத்திருக்கக் கூடுமோ?
4.இன்றைய புரசைவாக்கம் 1954-ல் புரசைப்பாக்கம் என்று அறியப்பட்டதோ?

சௌந்தர்

Pas Pasupathy சொன்னது…

Soundar சொன்னது…

3.கொ.சுப்புவின் பாட்டில் ஏன் >>ரேடியோவிலே கேட்பதாக >>எழுதியிருக்கிறார்? அவர்தான் நேரில் >>கேட்டதாக கீழே எழுதியிருக்கிறாரே! >>ஒருவேளை, கட்டுரையில் ஒரு >>விறுவிறுப்பு வருவதற்காக, சுப்பு >>எப்போவோ எழுதிய கவிதையை >>இந்தக் கச்சேரியைக் கேட்டுவிட்டு >>எழுதியதாக >>ஆசிரியர் >>அமைத்திருக்கக் கூடுமோ?
=============
இல்லை. “நேரில்” என்ற வார்த்தை கட்டுரையில் இல்லையே? அக்காலத்தில் பல கச்சேரிகளை ரேடியோ நேர்முக ஒலிபரப்பு செய்யும். சுப்பு, தன் கவிதையில் எழுதி உள்ளபடி, ரேடியோவில் தான் கேட்டிருக்கிறார்.

Pas Pasupathy சொன்னது…

>>4.இன்றைய புரசைவாக்கம் 1954-ல் >>புரசைப்பாக்கம் என்று >.அறியப்பட்டதோ?

புரசைப்பாக்கம் தான் சரியான பெயர் என்று தோன்றுகிறது.
==========

“ஊரும் பேரும்” என்ற நூலில் ரா.பி.சேதுப்பிள்ளை சொல்கிறார் :
=====

பாக்கம்

கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை
மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், வில்லி பாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் உழுந்த
குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச்
சென்னையின் அண்மையிலிருந்த சிற்றூர்கள் இப்போது அந்நகரின் அங்கங்களாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய ஊர்கள் சென்னை மாநகரோடு சேர்ந்திருக்கின்றன.
=================

கருத்துரையிடுக