சனி, 12 ஜனவரி, 2013

பாடலும் படமும் - 3 : சூரியன்

சூரியன்

பொங்கலைக் கொண்டாடிக் கொத்தமங்கலம் சுப்பு 1954-இல் விகடனில் எழுதிய
கவிதை யைக் கோபுலுவின் ஓவியங்களுடன் ஏற்கனவே பார்த்தோம்.

பொங்கலைப் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் யாவை? ஆய்வுக்குரிய விஷயம் தான். ஆனால் சூரியனைப் பற்றிய பல பழம் பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.

என்ற சிலப்பதிகாரத்திலிருக்கும் மூவடி வெண்பா மிகவும் பிரபலமானதே.

வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் சூரியனைப் போற்றி  நம்காலத்தில் எழுதிய நான்கடி வெண்பா ஒன்றும் உள்ளது.

வாழி பகல்செய்வோன் வாழி ஒளிஉருவன்
வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர் -- வாழியரோ
ஞாலம் விழிநிறப்ப நல்லோர் புகழுரைப்பக்
காலம் விளக்கும் கதிர்.

” நவக்கிரக ஆராதனம்” என்ற வடமொழி நூலில் உள்ள வர்ணனையை ஆதாரமாகக் கொண்டு கதிரவனை வரைந்த எஸ்.ராஜம் அவர்களின் ஓவியம் இந்தப் பாடல்களுக்கு நல்ல ஒளிதரும் தானே!  ஏழு பரிகள், இடது பக்கத்தில் உடுக்கையும், சூலமும் கொண்ட ருத்திரன், வலது பக்கத்தில் ஆட்டின் மேல் அக்கினி என்று அந்த வர்ணனை கூறும் பல நுண்மையான விஷயங்களை அற்புதமாகக் காட்டும் ஓவியம் இதோ!


2003 பொங்கலன்று தொடங்கிய ஒரு இணையக் கவியரங்கில் நான் தலைமை தாங்க நேர்ந்தது. அப்போது  நான்  இயற்றிய இரு பாடல்கள்:

பங்கமிலா ஔவைமுதல் பாரதியார் ஈறாகத்
தங்கக் கரத்தால் தழுவினையே ! -- மங்காப்
புகழ்க்கவிதை பொங்கிவரப் புத்தொளியைப் பாய்ச்சு,
பகலவனே! என்மேல் பரிந்து.


~*~o0o~*~

நன்றி
==== =====
பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி
. . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி
வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி
. . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி
பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி
. . படுக்கையறைக் கிசுகிசுப்புக் காதலுக்கோர் நன்றி
மண்ணிலெழு வாசனையோ பெய்மழைக்கோர் நன்றி
. . மன்பதையில் அன்புவழி சான்றோர்க்கு நன்றி (1)

வசந்தத்தில் விரிதோகை மயில்காட்டும் நன்றி
. . வானோக்கி நீளலைகள் வாரிதிசொல் நன்றி
புசித்தார்பின் விடுமேப்பம் பசித்தவனின் நன்றி
. . பூங்காற்றில் பொழிகானம் குயில்நவிலும் நன்றி
விசையோங்கும் சீழ்க்கையொலி ரசிகர்சொல் நன்றி
. . வேர்ப்புநிறை நெற்றிநல்ல விருந்துக்கோர் நன்றி
எசமான்முன் வாலாட்டல் நாய்காட்டும் நன்றி
. . இனியதமிழ்க் கவிபுனைதல் தாய்மொழிக்கோர் நன்றி (2)
பொங்கலோ பொங்கல்!

 

1 கருத்து:

Koothanainar Srs சொன்னது…

Really great - Bringing the works of scholars of yester years for the benefit of this generation at the click of a butten!

கருத்துரையிடுக