திங்கள், 30 செப்டம்பர், 2013

தேவன் - 12 : சாப்ளின் தமிழன் தேவன்!

சாப்ளின் தமிழன் தேவன்!
ரவிபிரகாஷ்


தேவன் நூற்றாண்டு விழாவைப் பற்றி ‘ஆனந்த விகட’னில் வந்த கட்டுரை இதோ! 

ரவி பிரகாஷ் மிக அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என் நன்றி. கூடவே, ‘தேவனின் பழைய பல படைப்புகளை விகடன் ‘பொக்கிஷ’ப் பகுதியில் வெளியிட்டால் மேலும் சிறக்கும்! 



அச்சில் வராத பல தேவனின்  படைப்புகளை வெளியிட விகடனின் உதவி தேவை !
======

ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனே 'சார்லி சாப்ளின்தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில் 'நகைச்சுவைஎன்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம் 'துப்பறியும் சாம்பு’.

தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, 'தேவன்என்கிற மகாதேவன்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியபோது பேராசிரியர் கல்கி கண்டெடுத்த முத்து, இந்த தேவன். விகடனில் சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிரஞ்சீவிப் படைப்புகள் பல எழுதியும், சுமார் 15 ஆண்டுகாலம் பொறுப்பாசிரியராகப் பணியேற்று பத்திரிகையை நடத்தியும், விகடனின் புகழை உச்சத்துக்குக் கொண்டுசென்றவர் தேவன்.
துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். 'ராஜத்தின் மனோரதம்’ 'மல்லாரி ராவ் கதைகள்போன்ற நகைச்சுவைக் கதைகளையும், 'மிஸ்டர் வேதாந்தம்’, 'ஸ்ரீமான் சுதர்சனம்’, 'லக்ஷ்மி கடாக்ஷம்போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் எழுதி, தனது பெயரை எழுத்துலகில் நீங்கா இடம்பெறச் செய்தவர் தேவன்.

இந்த வருடம், தேவனின் நூற்றாண்டு. 1913-ம் ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி திருவிடைமருதூரில் பிறந்த இவர், ஊர்ப் பாசம் காரணமாக தமது சொந்த ஊரை இயன்றபோதெல்லாம் தம் கதைகளில் எப்படியாவது நுழைத்துவிடுவார். இவரது கதைகளில் உவமைநயம் மிளிரும். உதாரணத்துக்குச் சில...

'எதைக் கேட்டாலும் இல்லைதான்; யார் கேட்டாலும் கிடையாதுதான். பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப்போகும்!

'பல்வரிசை காட்டிக் கைக்கொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன.

'பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிரஹம் இரவில் துஷ்டமிருகத்தின் குகைபோலக் காணப்பட்டது.

பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. 'ஸ்ரீமான் சுதர்சனம்நாவல் ஓர் உதாரணம்.

எழுத்தாளர் சுஜாதா, தேவன் எழுத்துக்குப் பரமரசிகர். இவர் விகடனில் எழுதிய 'கற்றதும் பெற்றதும்தொடரில், 'பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக்கொண்டால்கூட, இன்றுவரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஓர் உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் 'ஸ்ரீமான் சுதர்சனம்அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்!என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில் 'மாலதிஎனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன்.
தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர். தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர்.

இன்றைக்கு இலங்கைப் பிரச்னை பற்றிப் பேசுகிறோம்... படிக்கிறோம். இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிக் கண்ணீர் வடிக்கிறோம். 1930-களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு, தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி, தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன்.

ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்பு 'தென்னாட்டுச் செல்வங்கள்’. 1948-ம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் 'சில்பியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வாசகர்களின் பார்வைக்கு வழங்கினால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தியவர் தேவன்தான். தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமே 'தென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது இந்தத் தொடர் மூலமாகத்தான். படங்களை சில்பி வரைய, அவற்றுக்கான விளக்கங்களை தமது பெயர் போட்டுக் கொள்ளாமலே எழுதினார் தேவன்.

1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார். மகாகவி பாரதி போல குறைந்த வயதே வாழ்ந்தாலும், தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொடையாகப் பல பங்களிப்புகளைச் செய்துவிட்டு அமரத்துவம் பெற்றவர் அவர்.

விகடனின் மகத்தான நஷ்டம் என்னும் தலைப்பில் மனம் பதைபதைக்க ஒரு தலையங்கம் தீட்டி, அவரது மறைவுக்குத் தமது இதய அஞ்சலியைச் செலுத்தினார் எஸ்.எஸ்.வாசன்.


கடந்த எட்டாம் தேதியன்று, தேவன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் எழுத்தாளர் தேவனின் நூற்றாண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு, 'ஓவியப் பிதாமகன்கோபுலு வந்திருந்து சிறப்பித்தார்.  'தேவன் வரலாறுஎன்னும் தலைப்பில், தேவனின் படைப்புகளையும் அவரது அருங்குணங்களையும் வெளிக்காட்டும் விதத்தில் எழுத்தாளர் சாருகேசி தொகுத்திருந்த தேவனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.

[ நன்றி : ஆனந்த விகடன், 18 செப்டம்பர் 2013 ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
தேவன் நூற்றாண்டு விழா -1 
தேவன் நூற்றாண்டு விழா -2 
தேவன் நூற்றாண்டு விழா -3 
தேவன் படைப்புகள் 

தென்னாட்டுச் செல்வங்கள் இப்போது விகடன் நூல்களாய்க் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு விமர்சனத்தை இங்கே படிக்கலாம். 

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

'தென்னாட்டுச் செல்வங்கள்’. 1948-ம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும் 'சில்பி’யைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வாசகர்களின் பார்வைக்கு வழங்கினால் என்ன என்று யோசித்து, அதைச் செயல்படுத்தியவர் தேவன்தான். //

திருவெண்காடு கோவிலை வரைந்த போது சில்பி அவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. 1974 என நினைக்கிறேன்.
தேவன் அவர்களைப் பற்றிய பகிர்வுக்கு மிகவும் நன்றி.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, கோமதி அரசு. ‘தென்னாட்டுச் செல்வங்கள்” பற்றிய என் பதிவுகளில் சில்பி, தேவன் பற்றிப் பல தகவல்களையும், சித்திரங்களையும் பார்க்கலாம். ( சில்பியின் திருவெண்காடு கோவில் சித்திரங்கள் என்னிடம் இருக்கின்றனவா என்பது நினைவில்லை... இருந்தால் பிறகு இடுவேன்)