வியாழன், 28 பிப்ரவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 16

மாமாங்க மாறுதல்கள் ! -1

மாலி-சில்பி

’விகடன்’ 1945-இல்  வாரந்தோறும் வரும் ஒரு புதிய ஓவியப் பகுதியைத் தொடங்கியது. “மாமாங்கத்துக்கு மாமாங்கம்’ என்ற தலைப்பில். ( மாமாங்கம் என்றால் பன்னிரண்டு ஆண்டுகள்.)

சங்கீத வித்வான்களின் தோற்றங்கள் ஒரு மாமாங்கத்தில் எவ்வளவு மாறிவிட்டன என்பதை ஓவியங்கள் மூலம் பதிவு செய்வதே இதன் நோக்கம். 1933-இல் மாலி வரைந்த  வித்வான்களின் படங்களையும், 1945-இல் வரையப்பட்ட சில்பியின் படங்களையும் ஒருங்கே காட்டியது அந்தத் தொடர்!

ஒரு புதிய பகுதி  தொடங்கினால், விகடனில் அதைப்பற்றி ‘உபயகுசலோபரி’ என்ற கட்டுரையில் சிலசமயம் விளக்குவது உண்டு.

அது இருக்கட்டும், அந்தக் கட்டுரைத் தலைப்புக்கு என்ன பொருள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இதற்கு, 1933 மார்ச்சில் வந்த முதல் ‘உபயகுசலோபரி’யே பதில் சொல்கிறது!

“  இந்தத் தலைப்பு எப்படி ஏற்பட்டது என்ற வரலாற்றை நேயர்கள் அறிந்துகொள்ள விரும்பலாம். ஒரு பெண்மணி எனக்கு எழுதிய கடிதத்தில் ‘உபயகுசலோபரி’ (இதற்குப் பொருள் எனக்குத் தெளிவாய் விளங்காவிட்டாலும், தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எழுதியிருக்கிறேன்.)’ என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில், ‘உபயகுசலோபரி’யின் பொருள் அதுவரை எனக்கும் நன்கு விளங்காமலிருந்தது. பிறகு விசாரித்ததில் , ‘இவ்விடமும் அவ்விடமும் க்ஷேமம். மேலே’ என்பதுதான் பொருள் என்று தெரியவந்தது. ஆகவே, நேயர்களுடன் சொந்த சமாசாரம் பேச ஆரம்பிக்கும்போது உபய குசலம் சொல்லிவிட்டு மேலே பேச்சைத் தொடங்குவது நல்லதல்லவா?”


மாமாங்கத்துக்கு மாமாங்கம்” என்ற புதிய பகுதியை  விளக்கும் ‘உபயகுசலோபரி’ப் பக்கமும்,  ‘ மாலி-சில்பி’ இருவரின் ஒரு கைவண்ண எடுத்துக் காட்டும் இதோ!


( மேலிருக்கும் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட படங்கள் என்னிடம் இல்லை! அதற்குப் பதிலாக இன்னொன்று இதோ!)1933-இல் மாலி வரைந்த பாலக்காடு மணி ஐயரின் படத்தைப் பார்த்ததும், அதே வருடம்  சிறுவன் மணியை முதன்முதலில் பார்த்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி  ‘விகட’னில் எழுதியது நினைவுக்கு வருகிறது! 1933-இல் முசிரி சுப்பிரமண்ய அய்யரின் பாட்டுக் கச்சேரி கேட்கச் சென்ற ‘கர்நாடகம்’ ‘ஆடல் பாடல்’ பகுதியில் இப்படி எழுதினார்:

“ கச்சேரி தொடங்க வேண்டிய நேரத்திற்கு ஐந்து நிமிஷத்திற்கு முன், நீண்ட மூஞ்சியும், கிராப்புத் தலையும் உடைய ஒரு பையன் ஸில்க் ஷர்ட்டு அணிந்து வந்து மேடைக் கருகில் நின்றபோதே “இது பெரிய கை, ஸ்வாமி! இலேசல்ல” என்று அருகிலிருந்த நண்பரிடம் சொல்லிவிட்டேன்”

எப்படி? மாலி, சில்பி, ‘கல்கி’யின் கைகளும் இலேசல்ல, இல்லையா?


5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பொக்கிஷம்...

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, தனபாலன்.

இத்தகைய இசைத் தொடர்புள்ள ‘பொக்கிஷங்களை’ச் சேகரித்து, விகடன் தனியாக ஓர் ‘இசைப் பொக்கிஷம்’ என்ற நூலை வெளியிட வேண்டும் என்பது என் அவா.

Thangamani சொன்னது…

அரிய விஷயங்கள்.பாதுகாத்து சமயத்தில் எடுத்து
எல்லோரும் அறியத் தருவதற்கு மெத்தநன்றி.
முதல் படம் ஜி.என்.பி.தானே?

அன்புடன்,
தங்கமணி.

Pas S. Pasupathy சொன்னது…

ஆம்,ஜி.என்.பி தான்!

Angarai Vadyar சொன்னது…

பொக்கிஷம். Thank you for sharing.

கருத்துரையிடுக