திங்கள், 17 அக்டோபர், 2016

கண்ணதாசன் - 2

மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன்!
முனைவர் நிர்மலா மோகன்


அக்டோபர் 17. கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம்.
===

எனக்கு எப்போதாவது மனக்கலக்கம் வரும் போது,- நான் நமது அரசவைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலைப் போட்டுக் கேட்பதுண்டு. அதைக் கேட்கும் போது எனக்குத் தெம்பு வரும்,” என 
1980-ல் கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள் விழாவின் போது ஆற்றிய உரையில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.மன நெகிழ்வோடு பேசினார். அன்று அவர் அங்ஙனம் உளமாரப் பாராட்டியது 'மன்னாதி மன்னன்' திரைப்படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய 'அச்சம் என்பது
மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா!' எனத் தொடங்கும் பாடல். 'அறம் செய விரும்பு' எனத் தமிழ் மூதாட்டி ஒளவையார் தம் ஆத்திசூடியைத் தொடங்கி இருக்க, பாட்டுக்கொரு புலவர் பாரதியாரோ 'அச்சம் தவிர்!' எனத் தமது 'புதிய ஆத்திசூடி'யைத் தொடங்கி இருப்பார். பாரதியாரின் வழியிலேயே கண்ணதாசனும் அஞ்சாமையை முன்னிறுத்தித் பாடலைத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலையாய கடமை :
'அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியில்' என்ற அவல நிலை நிலவிய கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் அஞ்சாமை உணர்வை ஊட்டக் கருதிய கண்ணதாசன், 'அஞ்சாமை திராவிடர் உடைமையடா!' என வலியுறுத்திப் பாடினார். 'சாவு ஆறிலும் வரலாம், அறுபதிலும் வரலாம், அது வரும் போது வரட்டும். அதற்கு அஞ்சி அஞ்சிச் சாகாமல் - நடைப்பிணமாக வாழ்ந்து மடியாமல் - தாயகத்தைக் காத்து நிற்பது நம் தலையாய கடமை!' என்பதை எடுத்துக் காட்டினார்.

கண்ணதாசன் தாக்கம்
'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனத்தில் நின்றவர் யார்?' எனப் பாடலின் இறுதிச் சரணத்தில் கண்ணதாசன் கேட்கும் வினா பொருள் பொதிந்தது. மனிதனாகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒன்று. தடம் பார்த்து நடப்பவர்கள் அல்ல, தடம் பதித்துச் செல்வோரே வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள். கவிஞர் ஆனந்த் குறிப்பிடுவது போல, “ வரலாறு என்பது வந்து போனவர்களின் கணக்கல்ல தந்து போனவர்களின் கணக்கு கண்ணதாசன் இக் கருத்தினையே 'மாபெரும் வீரர், மானம் காப்போர்சரித்திரம் தனிலே நிற்கின்றார்' என மொழிந்துள்ளார்.

தெம்பு தந்த பாடல் :
 காவியக் கவிஞர் வாலியின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்பாடல் உண்டு. அது குறித்து அவரே 'நானும் இந்த நுாற்றாண்டும்' என்னும் தலைப்பில் எழுதிய அனுபவத் தொடரில் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்து, விரக்தியின் விளிம்பில் நின்ற வேளையில் அவர் கேட்ட 'மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா?' என்ற பாடல்,அவரது மயக்கத்தையும் கலக்கத்தையும் மனக்-குழப்பத்தையும் நடுக்கத்தையும் அறவே போக்கி, அவரது உள்ளத்தில் தெம்பும் தெளிவும் ஊற்றெடுக்கச் செய்தது.'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும்.' சரி, அதற்காக வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடி விடுமா? 'துன்பமே போ, போ, போ!' என்று மூன்று முறை உரக்கச் சொன்னால் அகன்று விடுமா? அப்படி ஆனால், என்ன தான் செய்வது? எப்படித் தான் துன்பத்தை விரட்டி அடிப்பது?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!என்பதே வாழ்வில் வந்த துன்பத்தை ஓட ஓடத் துரத்துவதற்குக் கண்ணதாசன் காட்டும் வழிமுறை.

நிம்மதி நாடு :
'ஏழை மனதை மாளிகை ஆக்கி, இரவும் பகலும் காவியம் பாடி, நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!' என அறிவுறுத்தும் கண்ணதாசன், பாடலின் முடிவில் முத்தாய்ப்பாகக் கூறும் அனுபவ உண்மை இதுதான்: 
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
வாழ்வில் நாம் எப்போதும் செய்வது, நமக்கும் மேலே உள்ள - வசதிகளோடும் வாய்ப்புகளோடும் வாழ்கின்ற - சிலரைப் பார்த்து, பொறாமை கொண்டு, ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே இருப்பதுதான்! அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, 'நமக்கும் கீழே உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் போதும், நிம்மதி தன்னாலே நம்மைத் தேடி வந்து சரண் அடையும்' என்கிறார் கண்ணதாசன்.

ஒரு முறை மனம் கலந்து, பொருள் உணர்ந்து, படிக்கும் அல்லது கேட்கும் எவரது மனத்திலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊற்றெடுக்கச் செய்யும் அற்புதமான 'வைட்டமின் பாடல்' இது!

இளையராஜாவின் மலரும் நினைவு
இசைஞானி இளையராஜாவுக்கு மிகவும் விருப்பமான கண்ணதாசனின் பாடல் 'பாக்யலட்சுமி' படத்தில் இடம்பெறும் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நான் கனவு கண்டேன் தோழி' என்ற பாடல் ஆகும். அவர் வறுமையோடு போராடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்,
இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?...
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்...
என்னும் கண்ணதாசனின் பாடல் வரிகள், மிகப் பெரிய ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தனவாம்! வாழ்வில் சிங்க நடை போட்டு, சிகரத்தில் ஏறிபுகழேணியின் உச்சிக்குச் சென்ற பொன்னான கால கட்டத்தில்,
இசைஞானி இளையராஜா நேர்காணல் ஒன்றில் இம் மலரும் நினைவினை
நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

வைரமுத்து புகழாரம்
கவியரசர் கண்ணதாசனின் பாடல்களிலே வைரமுத்துவின் உள்ளத்தைப் பெரிதும் பாதித்த பாடல் 'கால மகள் கண் திறப்பாள் கன்னையா' என்பது. மாணவப் பருவத்தில் அவரது நோட்டுப் புத்தகத்தில் வீட்டுப் பாடத்தை விட, கண்ணதாசனின் பாட்டு வரிகள் தான் மிகுதியாக இடம்பெற்றிருந்தனவாம்! 'கண்ணதாசா! உன் எழுத்து ஒவ்வொன்றும் உனக்கு நீயே கட்டிக் கொண்ட தாஜ்மகால்!' என்பது கண்ணதாசனின் எழுத்துக்கு வைரமுத்து சூட்டியுள்ள புகழாரம்!
'காலமகள் கண் திறப்பாள் சின்னையா
கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா?
நாலு பக்கம் வாசல் உண்டு சின்னையா
நமக்கு அதிலே ஒரு வழி இல்லையா,
சொல்லையா?'
என்னும் கண்ணதாசனின் பாடல் வரிகள், வாழ்வில் வாய்ப்பை எதிர்நோக்கிக் கனவுகளோடு காத்திருக்கும் இளைய நெஞ்சங்களுக்கு மயிலிறகால் ஒத்தடம் தருவது போன்ற இதத்தினைத் தரும் வைர வரிகள் ஆகும்.

பெருந்தகையோரின் வாழ்வில் மட்டும் அல்ல, சாதனை-யாளர்களின் வாழ்வில் மட்டும் அல்ல, நம் எல்லோரது வாழ்விலும் -கவியரசர் கண்ணதாசனின் தாக்கம் என்பது இருக்கத்தான் செய்யும்! கண்ணதாசன் தமது மந்திர மொழிகளால், அனுபவ உண்மைகளால், சத்திய வார்த்தைகளால் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சுக்கும் அமைதியும் ஆறுதலும் நிம்மதியும் மன நிறைவும் தந்து கொண்டே இருப்பார்!
'ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடல் ஒன்று எதிரொலிக்கும்' என்று பறைசாற்றியவர் அல்லவா அவர்?

[ நன்றி: தினமலர் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கண்ணதாசன்

கருத்துகள் இல்லை: