ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஆர்.கே.நாராயணன் - 2

பத்மவிபூஷண்     ஆர்.கே.நாராயண்
’பரணீதரன்’ 


அக்டோபர் 10. ஆர்.கே.நாராயணின் பிறந்த தினம்.

ஆர்.கே.நாராயணின் ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ மொழிபெயர்க்கப் பட்டு விகடனில் 1937-இல் வந்தது. மாலியின் ஓவியங்கள் அருமையாய் இருக்கும்!

இதோ ஒரு படம் : 

அவருக்கு 2000-இல் பத்மவிபூஷண் விருது கிடைத்தபோது, ‘பரணீதரன்’ ( ஸ்ரீதர், மெரினா) விகடனில் எழுதிய கட்டுரை இதோ! 
==========

அண்மையில் இலக்கிய சாதனைகளுக்காக பத்மவிபூஷண் விருது பெற்ற ஆங்கில நாவல் - சிறுகதை ஆசிரியர் ஆர்.கே.நாராயண் எனக்கு அறிமுகமானது 63 வருடங்களுக்கு முன். அதற்கு முன் 12 ஆண்டுகள் 'குஞ்சப்பாவாக மட்டுமே அவரை நான் அறிந்திருந்தேன்!

மைசூர் அத்தை மகனான அவர், நான் பிறப்பதற்கு முன்னரே, புரசைவாக்கத்தில் இருந்த  எங்கள் வீட்டில் பாட்டி, மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து, லூதரன் மிஷன் பள்ளியில் படித்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர், மைசூரிலிருந்து அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் பள்ளி அனுபவங்களையும், ஆசிரியர்களின் குணாதிசயங்களைப் பற்றியும் கதை சொல்வதுபோல், எங்களிடம் நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பார்.
குஞ்சப்பா ஆங்கிலத்தில் எழுதும் கதைகள் 'சன்டே இண்டுவில் வெளிவருவதாக வீட்டில் பேசிக் கொள்வார்கள். முத்தையா செட்டியார் பள்ளியில் மூன்றாம் பாரம் படித்துக்கொண்டிருந்த நான், ஆங்கிலக் கதைகளைப் படித்து புரிந்துகொண்டுவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கையில், மாணிக்க முதலியார் பார்க்கிலிருந்த 'மினிநூல் நிலையத்துக்குச் சென்று, வாரம் தவறாமல் அந்தக் கதைகளைப் படிப்பேன். அப்போது தான் முதன்முறையாக அவருடைய பெயர் ஆர்.கே.நாராயண் (நாராயணசாமியின் சுருக்கம்) என்று தெரிந்துகொண்டேன். எனவே, அதுதான் எனக்கு முதல் அறிமுகம்! அவருடைய இளைய சகோதரரான 'டூடூ’, ஆர்.கே.லக்ஷ்மண் என்ற பெயரில் அந்தக் கதைகளுக்குச் சித்திரம் வரைவார். அவற்றைப் பிரமிப்புடன் வெகு நேரம் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பேன்.

ஆர்.கே.நாராயணின் இங்கிலீஷ் சிம்பிளாக இருக்கும். சில வார்த்தைகள் புரியாவிட்டாலும், கதையை ஒரு மாதிரி புரிந்து கொண்டுவிடுவேன். பின்னர் ஒரு சமயம் சின்ன அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் 'Swami and Friends’யை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அதில் வந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போய், உண்மை நிகழ்ச்சிகளைக் கண்முன் பார்ப்பது போல் உணர்ந்தேன். பின்னர் ஆனந்த விகடனில் அந்த நாவல் 'சுவாமியும் சிநேகிதர்களும்என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாராவாரம், கலர் காகிதத்தில் வெளிவந்தபோதும் படித்தேன். அதன் பிறகு 'Dark Room’ என்ற அவரது நாவல், 'இருட்டறைஎன்ற தலைப்பில் விகடனில் வெளியானபோதும் படித்தேன்.

ஆர்.கே.நாராயணின் புகழ் பெற்ற 'The Guide’ என்ற நாவலை, 1966-ம் ஆண்டு 'சாகித்திய அகாடமிக்காக 'வழிகாட்டிஎன்ற தலைப்பில் மொழிபெயர்க்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதைத் தவிர, தமது அமெரிக்க அனுபவங்களைப் பற்றி அவர் எழுதிய 'Dateless Diary’ என்ற நூலின் பெரும்பகுதிகளை 'அமெரிக்காவில் நான்என்ற தலைப் பில் விகடனில் எழுதினேன்.

ஆர்.கே.நாராயண் மிக எளிமையானவர். நாளும் அவரைத் தேடி வரும் புகழும் செல்வமும் அவர் மீது ஒட்டிக்கொள்வதில்லை. அவருக்காகப் பாராட்டு விழா நடத்துவதோ, அவரை நேரில் புகழ்ந்து பேசுவதோ, அவரை மேடையில் பேசச் சொல்லுவதோ, பத்திரிகையாளர்களும் டி.வி-காரர்களும் காமிராவோடு பேட்டி காண வருவதோ அவருக்குப் பிடிக்காதவற்றில் சில.

பரணீதரன்

[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக