பட்டுக்கோட்டையாரின் ‘பஞ்ச சீலக் கொள்கைகள்’
பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர், தமிழியற் புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 625 021.
தமிழ்த் திரை உலகில் அழுத்தமான – ஆழமான - முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர்.
ஒருவர் கவியரசர் கண்ணதாசன். இன்னொருவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முன்னவர் ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர் ஆர்மோனியப் பெட்டிக்கு
மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில்
வாழ்ந்த காலம் கொஞ்சமே; இருபத்தொன்பது ஆண்டுகளே.
எனினும் இந்த குறுகத் தறித்த வாழ்வில்
அவர் தாம் ஈடுபட்ட திரைப்படப் பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்துள்ளார். பட்டப்
படிப்புக் கூடப் பயிலாத அவர் வாழ்க்கை என்னும் அனுபவப்
பள்ளியில் கற்றுத் தேர்ந்த மக்கள் கவிஞராகத் திகழ்ந்துள்ளார். ப.ஜீவானந்தம் குறிப்பிடுவது
போல் “பட்டுக்கோட்டையின் பாடல்களில் அனுபவச் சரக்கு நிறைந்து கிடைப்பதை
வரிக்கு வரி காணலாம்”.
பட்டுக்கோட்டையாரின் ‘பஞ்ச சீலக் கொள்கைகள்’
நேரு பெருமகனாரின் பஞ்ச சீலக் கொள்கையை நினைவூட்டுவது போல் பட்டுக்கோட்டையார் தம்
திரைப்படப் பாடல்களில் பெரிதும் வலியுறுத்திப் பாடியிருக்கும் கொள்கைகள் ஐந்து. அவையாவன:
1. ‘அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்!’
2. ‘உழைத்தால் தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும்!’
3. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!’
4. ‘தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்திடல் வேண்டும்!’
5. ‘நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திடல் வேண்டும்!’
I. ‘அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்!’
பட்டுக்கோட்டையார் தம் திரைப்பாடல்களில் அறிவுக்கு முதன்மையான ஓர் இடத்தினைத் தந்துள்ளார்.
‘பாதை தெரியுது பார்’ என்ற படத்திற்காக எழுதிய
பாடல் ஒன்றில் அவர்
“ அறிவுக் கதவைச் சரியாகத் திறந்தால்
பிறவிக் குருடனும் கண்பெறுவான்”
என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்;. அவரைப் பொறுத்த வரையில்
‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான் உண்மையான வளர்ச்சி!’ பாப்பாவுக்குப் பாடினாலும்
சரி! சின்னப் பயலுக்குப் பாடினாலும் சரி! பட்டுக்கோட்டையார் அறிவின் இன்றியமையாமையை வலியுறுத்தத் தவறுவதே
இல்லை. இளைய தலைமுறையினர் துன்பத்தை வெல்லும் கல்வி கற்று, சோம்பலைக் கொல்லும் திறன் பெற்று
“ அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்!”
என வழிகாட்டுகிறார் பட்டுக்கோட்டையார்.
II. ‘உழைத்தால் தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்!’
பட்டுக்கோட்டையார் திரையுலகில் உழைப்பின் பெருமையை - உயர்வை - ஒல்லும் வகையெல்லாம்
ஓயாமல் பேசியவர் ஆவார். அவரது கருத்தில் மக்கள் முன்னேறக் காரணம் இரண்டு. ஒன்று: படிப்பு; இன்னொன்று: உழைப்பு. படிப்பாலே உண்மை தெரியும், உலகம் தெரியும். உழைப்பாலே உடலும் வளரும், தொழிலும் வளரும். உலகில் பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள் பலப்பல
உண்டு; தொழிலாளர்களாகப் பிறந்து கடுமையாக உழைத்துச் சிகரத்தில் ஏறிய
தலைவர்கள், மேதைகள் மிகப் பலர் உண்டு.
எனவே,
“ உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும் - மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
மோசமாக முடியும்”
என்று நாட்டு மக்களுக்கு நல்லதோர் எச்சரிக்கையை விடுக்கின்றார் பட்டுக்கோட்டையார்.
மக்களின் மனம் நலம் பெறுவதற்கு உழைக்க வேண்டும் என்ற நோக்கம் இன்றியமையாதது என்பது
பட்டுக்கோட்டையாரின் அசைக்க முடியாத நம்பிக்கை. ‘திருடாதே’ என்ற படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் அவர் இந்நம்பிக்கையை
அழுத்தம் திருத்தமாக வெளியிட்டுள்ளார்:
“ உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது – மனம்
கீழும் மேலும் புரளாது!”
பட்டுக்கோட்டையார் பாட்டாளி மக்களுக்கு விடுத்துள்ள ஒரு முக்கியமான செய்தி உண்டு.
ஒருவர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளுவதால் எந்தப் பயனும்
ஏற்படாது; விதியை எண்ணி விழுந்து
கிடப்பதாலும் எந்த நன்மையும் விளையாது. வாழ்க்கையில் ஏற்றம் காண்பதற்கு - முன்னேற்றம்
அடைவதற்கு - பட்டுக்கோட்டையார் காட்டும் வழி இதுதான்:
“ எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்…
உடும்பு போல உறுதி வேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்
ஒடஞ்சி போன நமது இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்.”
‘வேலை செய்தால் உயர்வோம்’ என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும் ஒற்றமையாகப் பாடுபட்டால், இந்த உலகம் உறுதியாக இன்பம் விளைவும் தோட்டம் ஆகும் என்பது பட்டுக்கோட்டையாரின்
முடிந்த முடிபு.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தம் நெஞ்சில் கல்வெட்டாய்ப் பொறித்து வைத்துக்கொள்ள
வேண்டிய - வாழ்வில் என்றென்றும் பின்பற்ற வேண்டிய - பட்டுக்கோட்டையாரின் அற்புதமான
வரிகள் இதோ:
“ செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்;
கையும் காலும்தான் உதவி - கொண்ட
கடமை தான் நமக்குப் பதவி!”
III. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!’
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என்னும் பாட்டுக்கொரு புலவர் பாரதியாரின் வாக்கை வேதமாகக் கொண்டவர்
பட்டுக்கோட்டையார். சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலை
- ஓங்கி வளரும் மூங்கில் மரம் - உச்சி மலையிலே ஊறும் அருவி என எதைப் பாடினாலும் அதில்
பட்டுக்கோட்டையார் ஒற்றுமையின் அருமையையும் பெருமையையும் உயர்த்திப் பிடிக்கத் தவறுவதே
இல்லை. அவரது நோக்கில், வாழ்க்கையில் உயர வேண்டும்
என்றால் - வளர வேண்டும் என்றால் - மனித குலத்திற்கு மிகுதியும் தேவைப்படுவது ஒற்றுமையே
ஆகும். உயர்வு, தாழ்வு என்று பேதம் பேசிக்கொண்டு
ஒதுங்கிச் செல்லாமல் - தமக்குள்ளே வம்புகள் பேசிப் பிரிந்து, பிளவுபட்டு நிற்காமல் - மனித குலம் அன்புப் பாலத்தின் வழியே
ஒழுங்காகவும், ஒற்றுமையாகவும் ஒட்டி
உறவாடி வாழ முற்பட்டால் வானுறையும் தெய்வ நிலையை இந்த வையத்திலேயே எய்திவிடலாம்.
“ ஒற்றுமையோடு அத்தனை நூலும்
ஒழுங்கா வந்தால் வளரும் - இதில்
ஒரு நூலறுந்தால் குளரும்.”
“ ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,
ஒழுங்காக் குருத்துவிட்டு
கெளை கெளையா வெடிச்சிருக்கு,
ஒட்டாம ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? – எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?”
“ உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது;
ஒற்றுமையில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது.”
பாட்டாளிகளின் குரலாகப் பாடியிருக்கும் பாடல்களிலும் பட்டுக்கோட்டையார் வாய்ப்புக்
கிடைக்கும் போதெல்லாம் ஒற்றுமையின் உயர்வை வலியுறுத்திச் செல்கின்றார். இந்தத் “திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
- நாம் ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி” என்றும், “ஒடஞ்சி போன நமது இனம், ஒண்ணா வந்து பொருந்தணும்” என்றும் அவர் எழுதியுள்ள வரிகள் இவ்வகையில் நினைவு கூரத்தக்கவை
ஆகும்.
IV. ‘தனியுடைமைக் கொடுமைகள்
தீரத் தொண்டு செய்திடல் வேண்டும்!’
“ தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா - நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!”
என்பது பட்டுக்கோட்டையார் சின்னப் பயலுக்குச் சொல்லும் சேதி ஆகும்.
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்திற்காகப் பட்டுக்கோட்டையார் எழுதி-யிருக்கும் ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ என்னும் பாடல் அவரது பொதுவுடைமைப் பற்றைக் குறிப்பாப் புலப்படுத்தும்
ஓர் அற்புதமான பாடல் ஆகும். அது வானத்து வெண்ணிலவை விளித்துப் பாடும் பாடல் மட்டும்
அன்று; உள்ளங்-கவர்ந்த காதலியைப் பற்றிய பாடல் மட்டும் அன்று. அதனினும்
மேலாக, அந்தப் பாடலின் முடிவு வரிகள் நுண்ணிதின் உணர்த்தும் ஓர் உட்பொருள்
உண்டு.
“ கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே!
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே!”
என அப்பாடலில் முத்தாய்ப்பாக இடம்பெற்றிருக்கும் நான்கு வரிகளை ஒரு முறைக்கு இரு
முறை அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள்; ஆழ்மனத்தில் இவ்வரிகள்
உணர்த்தும் நுண்பொருள் குறித்து அலசிப் பாருங்கள். வாழ்நாள் முழுவதும் கவிஞரின் உயிர்
மூச்சாகத் திகழ்ந்து வந்த பொதுவுடைமைச் சிந்தனையின் வீச்சும் வெளிப்பாடும் இவ்வரிகளின்
ஊடே ஒளி வீசி நிற்பது புலனாகும்.
V. ‘நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திடல்
வேண்டும்!’
பட்டுக்கோட்டையாரின் பாடல்களை ஊன்றி நோக்கினால் அவர் இன்றைய சமுதாயத்திற்கு வழங்கி
இருக்கும் இன்றியமையாத செய்தி ஒன்று புலனாகும். “நல்லோரை எல்லாரும் கொண்டாட
வேண்டும்” என்பதுதான் அது. “நாளை உலகம் நல்லோரின் கையில், நாமும் அதிலே உயர்வோம்
உண்மையில்” என்று ஆழமாக நம்பினார்
அவர். அதே நேரத்தில் அவர், நல்லவர்களை நோக்கியும்
ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். நல்லவர்கள் உலகத்தோடு ஒட்டாமல் ஒதுங்கி நிற்பதால் தம்
வாழ்வில் உயர முடியாது; அதனால் சமுதாயத்திற்கு
எந்தப் பயனும் விளையாது. மாறாக, அவர்கள் ஒன்றாக இணைந்து
செயல்படத் தொடங்கினால் - வல்லவர்களாக மாறினால் - வகையாக இந்த நாட்டில் மாற்றங்கள் உண்டாகும்; வாழ்வில் ஏற்றங்கள் உருவாகும். ‘நாடோடி மன்னன்’ படத்திற்காக எழுதிய பாடல்
ஒன்றில் பட்டுக்கோட்டையார் இக்கருத்தினை அழகாகப் பதிவு செய்துள்ளார்:
“ காதலி: நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால், மீதி
உள்ளவரின் நிலை என்ன மச்சான்?
காதலன்: நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்
நாழிக்கு நாழி தெளிவாராடி!”
‘உயிர்ப்புள்ள ஆளுமை’
தாய்ப் பால் போல் சீக்கிரம் சீரணிக்கத் தகுந்த எத்தனையோ அருமையான கற்பனைகளையும், அற்புதமான சிந்தனைகளையும் ஊட்டச் சத்து மிகுந்த தம் திரைப்பாடல்களின்
வாயிலாகத் தமிழ் கூறு நல்லுலகிற்கு வாரி வாரி வழங்கியவர் பட்டுக்கோட்டையார். ஈழத்து
அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல், “இத்தகைய மனிதர்களுக்கு
‘மறைவு’ தான் உண்டே ஒழிய ‘இறப்பு’ இல்லை. மரணம் இத்தகையோரை
வென்று விடுவதில்லை. அவர்களது ஆளுமைக்கு உயிர்ப்புள்ள ஓர் ஆயுள் உண்டு”.
[ நன்றி : தினமலர் ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக