சனி, 15 அக்டோபர், 2016

சுந்தர ராமசாமி - 2

கலைகள்கதைகள்சிறுகதைகள் -2
சுந்தர ராமசாமி


( தொடர்ச்சி )

இன்றுவரையிலும் வந்துள்ள சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். வாழ்வின் சாரத்தை நேர்முகமாகப் பெறும்போது மங்கிப் போய்விடும் வசீகரம் இது. அபூர்வமான அழகுணர்ச்சி கொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மேடைக்குரிய ஒளிகளும் விதானங்களும் அரிதாரமும் இவர் உலகத்துக்கு ஒரு ஜிலுஜிலுப்பை அளிக்கின்றன. வாழ்க்கையோ நாடக நடிகர்களை நாடகத்துக்கு மறுநாள் காலையில் பார்ப்பது போல் இருக்கிறது. மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர் ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் வற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.


அழகிரிசாமி, புதுழைப்பித்தனின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று கருத ஏதுக்கள் இருப்பினும், உண்மையில் அவர் கு.ப.ரா.வின் குடும்பத்தைச் சார்ந்தவர். கு.ப.ரா.வின் வலிமையான வாரிசு. மனித இயல்பைப்  புதுமைப்பித்தனைப் போல் ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின் மீது அதிகக் குறைகளைக் கண்டவர் ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. கு.ப.ரா.வைப்போல் எளிமையான சாயல்களும் மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்.

சுதந்திரத்திற்குப் பின் தோன்றிய எழுத்தாளர்களில் மிகமுக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதைச் சரித்திரத்தில் வாசக சமுத்திரத்தை நீச்சல் அடித்துத் தாண்டுவதில் வெற்றி கண்டவர்கள் ருவர். ஒருவர் கல்கி, மற்றொருவர் ஜெயகாந்தன். இருவரும் வெவ்வேறான ஜனரஞ்சகத் தன்மை கொண்டவர்கள். வாசகர் எதிர்பார்ப்பில் கல்கி தன்னைக் கரைத்துக்கொண்டபோது, ஜெயகாந்தன் தன்னில் வாசக எதிர்பார்ப்பைக் கரைத்துக்கொள்கிறார். ஊஞ்சலில் அமர்ந்து வாசனைப் பாக்குத் தூள் போட்டுக்கொண்டிருந்த சிறுகதையைத் தெருவில் இறக்கினார் புதுமைப்பித்தன். ஜெயகாந்தன் அதை வாழ்வின் அடிமட்டம் வரை விரட்டினார். ஜெயகாந்தனின் கதைகள் முன் முடிவுகள் கொண்டவை. எனினும் அனுபவச் செழுமையும் வர்ணங்களும் கற்பனை ஆற்றலும் மனித இயல்புகளை ஒரு எல்லை வரையிலும் அனுசரித்துச் செல்வதும் கதைகளாக இவரது எழுத்துகள் வெற்றி பெறக் காரணங்களாக அமைகின்றன. கதை மரபைச் சார்ந்த இவரிடம் தொனி, சிக்கனம், சிறுகதைக்குரிய தனித் தன்மைகள் எவையும் இல்லை. எழுத்துப் பாங்கின் கூறுகளைவிட, மேடையில் குரலெடுத்துத் தம் கதைகளைக் கூறும் தன்மையையே இவரது கதைகள் கொண்டிருக்கின்றன.

தான் மீண்டும் குழந்தையாகிவிட வேண்டும் என்ற கனவு கிருஷ்ணன் நம்பியின் சிறுகதையில் அடிநாதமாக ஒலிக்கிறது. அன்பின் நெகிழ்ச்சியில் உருகும் உலகம் இவருடையது அழகுகளில் பரவசம் கொண்டு குழந்தைகளின் இருப்பில் குதூகலம் கொள்ளும் உலகம். அன்பின் நெகிழ்ச்சியும் குதூகலமும் அழகுகளும் வாழ்வின் தளத்தில் கேவலப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்தையும் கிருஷ்ணன் நம்பியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஜி. நாகராஜனைப் புதுழைப்பித்தன் வழியில் வந்த மூர்க்கமான யதார்த்தவாதி என்று சொல்ல வேண்டும். இவருடைய உலகம் வெளி உலகத்தின் இருள் உலகம். மதிப்பீடுகளுக்கும் ஒழுக்கங்களுக்கும் அப்பால் தள்ளப்பட்டுவிட்ட ஜீவன்களோடு தன்னை இணைத்துக்கொண்டவர் இவர். இயற்கையின் அகலமான வீச்சை விட்டுவிட்டுப் பிறழ்வுகளையும் விதிவிலக்குகளையும் சரிவுகளையும் கண்டு சொன்னவர். இதே உலகத்தைச் சேர்ந்தவர்கள், ஜெயகாந்தன் கதைகளில் தங்கள் தாழ்வுகளுக்குச் சமூக நிலைகளைக் குறைகளாகத் காண்கிறார்கள். நாகராஜனின் கதாபாத்திரங்களுக்கு விமர்சனம் இல்லை. சீரழிவும் தத்தளிப்புமே உள்ளன. அதற்கான காரணங்களும் அவர்களுக்குத் தெரிவதில்லை. விமோசனமும் தெரிவதில்லை.

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் வர் கலை வன்மை. இதே உலகத்தைச் சேர்ந்த அழகிரிசாமியின் கதைகளிலிருந்து வித்தியாசமாக, தன்னைச் சார்ந்த உலகத்தை அன்னியரின் பார்வையில் பார்க்க முற்படும் தருணங்களில், இவருடைய சகஜங்களே இவருக்கு சகஜமற்றுப் போகின்றன. நினைவில் நீங்காது நிற்கும் பல அருமையான கதைகளை உருவாக்கியவர்.

அசோகமித்திரன் சிறுகதை பற்றிய பிரக்ஞை மிகுந்தவர். மத்திய தர வர்க்கத்தின் குரலெடுத்து அழ முடியாத இக்கட்டுகளை மிகுந்த கலை வெற்றியுடன் இவர் உருவாக்கியிருக்கிறார். வாழ்வின் பொறியில் மாட்டிக்கொண்ட விதம் பற்றியோ விடுதலை பற்றியோ ஏதும் யோசனைகள் அற்றவர்கள் இவர்கள். இக்கட்டுகள் அழுத்தும்போது வாழ்க்கையைச் சமத்காரம் குறையாமல் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் கொண்ட இவர்களின் அவஸ்தைகளைக் கலை உருவங்களாக மாற்றியிருக்கிறார் அசோகமித்திரன்.

சா. கந்தசாமியின் கதைகளை ஒவியங்களுடன் ஒப்பிடலாம். அவற்றிலிருந்து நாம் பெறும் அனுபவங்களையும் உணர்வுகளையும் கருத்து ரீதியாக வகைப்படுத்த முடியாமல் போவதால் அவை எவ்விதத்திலும் குறைந்துபோனவை அல்ல. கிராமம், குழந்தைகள், மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பு இவற்றைச் சார்ந்த சித்திரங்கள் இவை. கடந்த கால வாழ்க்கையை ஏக்கமின்றி, மீண்டும் அவை உருப்பெற வேண்டுமென்ற விவேக மற்ற பிடிவாதமின்றி, மறுபரிசீலனை செய்து பார்க்கிறார் இவர் உருவப் பிரக்ஞை கொண்டவர்.

புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம். மனிதனின் அந்தரங்கங்களைக் கண்டு சொல்வதில் மிகுந்த ஆசை கொண்டவர் இவர். சுய அனுபவங்கள் சார்ந்து நிற்புதாலும் கோட்பாடுகளுக்காக மனித இயல்புகளை விட்டுக் கொடுக்க மறுப்பதாலும் எப்போதும் நம்பகத்தன்மை கொண்டுவிடுகின்றன இவரது கதைக்ள். பொருளாதார ஏற்றத்தாழ்வு போல - ஒருக்கால் அதற்கும் மேலாக - பாலுணர்ச்சி உந்தல்கள் மனிதனை ஆட்டிக் குலைக்கும் உண்மைக்கு அழுத்தம் தந்தவர். எவ்வாறு மனிதன் இருக்க வேண்டும் என்பது அல்ல - அவ்வாறு இல்லாமல் போனதற்கான விமர்சனமும் அல்ல நமது சுலபக் கணிப்புகளுக்கு அப்பால் மனிதன் எவ்வாறு இருந்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்வதே இவர் அடிப்படை.

ந. முத்துசாமி சிறுகதை இயல்புகளை ஏற்க மறுத்கும் விவரணங்களைத் துழாவிக்கொண்டு போகிறவர். இந்த விவரணங்களில் ஊடுருவுகின்றன இவரது விமர்சனம். சூழ்நிலை மனிதனைப் பாதிக்கும் தன்மை இவருக்கு முக்கியம் என்பதால் புற உலக வர்ணனைகள் விஸ்தரிப்புப் பெறுகின்றன. சில சமயம் சிறுகதையின் உருவத்தைக் குலைத்துக்கொண்டு கூட கைநழுவிச் செல்லும் காலத்தின் முகச் சாயல்களை மீண்டும் வரைந்து கலையில் பிணைத்துப் போட்டு வைக்கும் காரியம் இவருடையது.
வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள். மனிதனை மனிதனாகக் காண்பதற்கு இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான். கதை மரபிலிருந்து விடுபட்டுச் சிறுகதைக்குரிய சிக்கனம், குறிப்புணர்த்தல், குறைவாகக் கூறி அனுபவ அதிர்வுகளுக்கு இடம் தரும் பாங்கு ஆகிய சிறுகதைக்குரிய சிறப்பம்சங்களை இவரது வெற்றி பெற்ற கதைகளில் காணலாம்.

வண்ணதாசனின் கவனிப்புகளும் மொழியும் புற உலக விவரணங்களும் முக்கியமானவை. அசோகமித்திரனைப் போல் நுட்பத்தில் கவனம் கொண்டவர் என்றாலும் அசோகமித்திரன் இலக்கை நோக்கி துல்லியமாகச் சிறகடித்துச் செல்லும்போது சிறகுகளைக் கோதிக் கொண்டிருப்பதிலேயே வண்ணதாசனின் சிறுகதைப் பொழுது முடிந்துவிடுகிறது. நுட்பங்களில் வண்ணநிலவனுக்கு நிகரானவர். ஆனால் வண்ணநிலவன் போல் யதார்த்தத்தில் நிற்காமல் கற்பனையின் ஆகர்ஷணத்தில் சபலம் கொண்டுவிடுகிறார்.

சிக்கனமாகச் சிறுகதை சொல்லத் தெரிந்தவர் பூமணி. இந்தச் சிக்கனம் கடுமையாகி உடல் மெலிந்து போகிறது பல கதைகளில். வாழ்வின் கொடுமையில் யந்திர நிலைக்குத் தாழ்ந்துவிட்ட இவரது கதாபாத்திரங்கள் வறண்ட பூமியில் கொடுமையான வெயிலுக்கு ஈடுகொடுப்பதில் காய்ந்து போன புதர்களையே நமக்கு நினைவுபடுத்துகின்றனர். சமூக நிலை பற்றிக் கோபமும் மனித நேயமும் கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர்.

நாஞ்சில் நாடனின் கதாபாத்திரங்கள் மரபு, பண்பாடு, குடும்பம் சார்ந்த பழம் பெருமைகளுக்கு ஆளான உயர் ஜாதி விவசாயிகள், காலத்தின் புதிய கோலங்களில் மருண்டு தாங்கள் பிடிக்கும் ஏருக்கு அடியில் நிர்த்தாட்சண்யமாக நழுவி ஒடும் பூமியைக் கண்டு இவர்கள் சங்கடப்படுகிறார்கள். இவர்களுடைய சங்கடத்தைச் சொற் சிக்கனமின்றிப் பதிவு செய்கிறார் நாஞ்சில் நாடன்.

அம்பையின் சிறுகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம். வாழ்வின் மீது கவியும் துன்பங்களையும் தன் மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம். நுட்பமும் கலை அழகும் கொண்டவர் என்றாலும் வாழ்வு பற்றிய இவரது அறிவுப்பூர்வமான புரிதல்கள் அனுபவங்களை வழிநடத்துவதில் கதைகளின் உணர்வு நிலைகள் பாதிக்கப்படுகின்றன.

பிரபஞ்சன் சுவையான, தரமான, கலை வெற்றியை உறுதிப்படுத்தும் சிறுகதைகளை எழுதியிருப்பவர். மன ஆரோக்கியம் கொண்ட வரது தாபாத்திரங்கள் புஷ்டியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். இந்த சைக்கும் வாழ்வின் ஸ்திதிக்குமான முரண்பாடுகளில் தங்கள் நம்பிக்கைகளை இழக்க மறுக்கிறார்கள் அவர்கள். மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன், சிறுகதைக்கே உரித்தான தனித் தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது சிறுகதைகளின் மையம். சுரேஷ்குமாஇந்திரஜித் சிறுகதைகளில், ஒதுக்கப்பட்ட மனிதன், சுழலும் வாழ்க்கை யந்திரத்தின் சக்கரங்களில் தொற்றி ஏற வழிவகை தெரியாமல் வியாகூலம் கொள்கிறான். ஆர். இராஜேந்திர சோழன் தத்துவக்கோட்பாடுகளுக்குள் சுருங்க மறுத்து, தன் அனுபவச் செழுமையில் நின்று வாழ்வின் அவலங்களைக் காட்டும் துணிச்சலான பல கதைகள் எழுதியிருக்கிறார். திலீப்குமார் மத்திய தர வாழ்க்கையின் தத்தளிப்பை அனுபவ சாரத்தில் நின்று, முன் முடிவுகளின்றிச் சொல்கிறார். தங்களுடைய துன்பங்களைத் தாங்களே விலகி நின்று கிண்டலும் கேலியுமாகப் பார்த்துக்கொள்கிறார்கள் இவருடைய பாத்திரங்கள். சிறுகதைப் பண்புகளைக் காப்பாற்றுவதில் கவனம் மிகுந்தவர். சார்வாகன், நகுலன், தருமு சிவராமு ஆகியோரின் கதைகள் தொகுக்கப்படாததால் நான் இங்கு அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

கடல் கடந்த தமிழ்ப் பிராந்தியங்களைச் சார்ந்த படைப்புகளைப் பற்றி உதாசீன மனோபாவம் கொள்வதே இன்று வரையிலுமான நமது விமர்சன மரபு. இக்குறையை முற்றாக அகற்றும் வகையிலான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். எனது எளிய முயற்சியில், இப்போது என் கவனத்துக்கு வந்துள்ள சிறு எல்லையில் தளையசிங்கத்தின் சிறுகதைகள் முக்கியமானவை. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், பாலுணர்ச்சி போன்ற பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மனித உறவில் ஒரு விவேகமான சமநிலையை இவர் உருவாக்க முயல்கிறார். இவ்வாறு விஞ்ஞானரீதியான சோதனைகளுக்கு ஆட்படும் அனுபவங்கள், வாழ்வின் உணர்வுப்பூர்வமான தளங்களில் இறங்க றுத்துக் கலைத் தன்மை மங்கிய சிந்தனை வடிவங்களாகச் சுருங்கிப்போகும் அபாயம் கொண்டவை. அனுபவ உண்மைகளை முன்னிலைப் படுத்தும் பார்வை கொண்ட இவரது சிறுகதைகள் புஷ்டியும் ஜீவனும் கொண்ட கலை வெற்றிகளாக நம்மைப் பாதிக்கின்றன.

ம்பது வருடங்களாக  வெளிவந்துகொண்டிருக்கும் தமிழ்ச் சிறுகதைகளின் குவியலிலிருந்து சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்வதற்காக நான் மேற்கொள்ளும் பயிற்சியின் ஆரம்பக் குறிப்புகளாக இந்தக் கட்டுரையைக் கொள்ள வேண்டும். பார்வை, சிறுகதைப் பிரக்ஞை, கதை மரபு ஆகிய மூன்று கூறுகளை நான் வகுத்துக்கொண்டிருக்கிறேன். பார்வையும் சிறுகதைப் பிரக்ஞையும் கொண்ட கலைஞர்கள் முதல் தொகுப்பிலும் சிறுகதை அமைதி முற்றாகக் கூடவில்லை என்றாலும் பார்வையின் வலுக்கொண்டவர்களை இரண்டாவது தொகுப்பிலும் உத்தி உருவத் தளங்களில் நின்று தமிழ் சிறுகதையின் தரத்தைப் பேணிக்கொண்டு வந்தவர்களை மூன்றாவது தொகுப்பிலும் சேர்த்துச் சிறுகதைத் துறையில் நம் சாதனையை முழுமையாகக் காட்டிவிடலாம் என்பது என் எண்ணம். பார்வையும் சிறுகதைப் பிரக்ஞையும் கொண்ட கலைஞர்களைவிடவும் சமூக விமர்சனத்தை முன்வைக்கும் கதை சொல்லிகளையே நம் தமிழ் வாசகர்கள் இறுகத் தழுவிக் கொள்கிறார்கள்.

எனது பரிசீலனையில் விடுதல்கள் இருப்பின், அந்தப் படைப்பாளிகளின் பெயரை என் கவனத்திற்குக் கொண்டுவரும்படி என் சக  எழுததாளர்களையும் வாசகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

[ ஜாலான் தம்பி அப்துல்லா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் - லக்கியச் சிந்தனையின் சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கக் கூட்டத்தில் 25.08.1985 அன்று படிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.]

[ நன்றி :கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட மாதவன் கதைகள்சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை, 1985 ]

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை: