சனி, 1 அக்டோபர், 2016

சங்கீத சங்கதிகள் - 93

சிவனார் மனங்குளிர 
சுப்புடு 

அக்டோபர் 1. பாபநாசம் சிவனின் நினைவு தினம்.

31-12-1971 ‘தினமணி கதிரில்’ சுப்புடு சிவன்  சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற இசை விழாவைப்  பற்றி எழுதுகிறார்.


புறப்பாடு

வெள்ளிக்கிழமை.
அமாவாசை,
நிறைந்த நாள்.
இந்தியாவெங்கணும் யுத்தபீதி, குறிப்பாக வடக்கே டில்லியில் டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்தே அமாவாசை. இதற்கிடையில் சென்னையிலே சங்கீத விழாக்கள் ஒத்திப் போடப்படலாம் என்ற செய்தி வதந்தி ரூபமாகப் பரவலாக இருந்தது. ஒத்திப்போட்டு விட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது, சாதாரணமாக, ஆனால் இந்த வருடம் விழாவில் ஒரு தனிச்சிறப்பு.

சிவனார் மனம் குளிர

தமிழ் மக்களும் எல்லா சங்கீத மேதைகளும் ஒரு முகமாக சிலாகித்து வரும் சிவனுக்கு எவ்வளவோ இன்னல்களுக்கிடையே கைவந்திருக்கும் கவுரவம் இந்த ஒத்திப் போடலினால் கைக்கு வந்தது வாய்க்கு எட்டா விஷயமாகப் போய்விடும் என்ற ஆதங்கம் எனக்கு.

ஆனால் கடவுள் கைவிடவில்லை. கடைசியில் வாய்மை வென்றது. போதாக்குறைக்கு டில்லியிலே எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருந்தது. பாகிஸ்தானை முறியடிக்காமல் தலை நகரை விட்டு வெளியேறுவதில்லை என்ற 'மங்கம்மா சபதம்பூண்டிருந்தேன். இந்த ஏழையின் அகவல் வீண் போக வில்லை. இறைவன் சிரித்தான்.

சரணாகதி

 வெள்ளிக் கிழமை.
 அமாவாசை.
. நல்ல நிறைவான நாள்.
மாலை 4 மணிக்கு யாகியாகான் என் விருப்பத்திற்கிணங்க, என் செளகரியத்தை முன்னிட்டு சிவனார் மனம் குளிரச் சரண் அடைந்தான். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும், பேரானந்தத்துக்கும் எல்லையே கிடையாது.

சிவனுக்கு இந்த கவுரவம் கிட்டியது ஈசன் செயல் எனலாம். குறிப்பாக தியாகேசன் செயல். ஆரூரில் ஆனந்தத் தாண்டவமாடும் தியாகராஜன், தன் பரம பக்தனான சிவன் அதிமேதாவிலாசம் பெற்றிருந்தும் அகாடமியின் சங்கப்பலகையின் அங்கீகாரம் கிட்டாமல் அஞ்ஞாத வாசம் புரிகிறாரே என்று மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் உலக ரீதியாக ஆண்டவனே நேரே கீழே இறங்கி வந்து எதையும் செய்ய இயலாது. அப்படியே அவன் இறங்கி வந்தாலும் இது ஏதோ கோடம்பாக்கம் கேஸ் என்று ஸ்டுடியோவிற்கு வழி காட்டி விடுவார்கள்.

கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம்.

சென்ற வருடம் பேச்சுவாக்கில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பொது மேலாளர் திரு. டி.கே. தியாகராஜன், திரு. பாபனாசம் சிவனுக்கு இதுவரை 'சங்கீத கலாநிதி பட்டம் அளிக்கப்பட வில்லை என்ற தகவலைத் தெரிவித்த போது நான் துணுக்குற்றேன். அகாடமியின் அரசியலை அதிகம் அறியாத அடியேன், அதிமேதையான சிவனுக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே பட்டம் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆகவே இந்தச் செய்தி மெத்த வேதனைக் குள்ளாக்கியது. வேதனை மட்டும் பட்டுப் பயனில்லை அல்லவா? எப்படிச் செயலில் இறங்குவது என்பதல்லவா பிரச்சனை? பத்திரிகை நிர்வாகிகள் அமோகமான ஆதரவு அளித் தால் தான் நியாயக் கூக்குரல் எழுப்ப முடியும். திரு. தியாகராஜனின் தகவலும், சிவன் பால் அவருக்குள்ள பெருமதிப்பும் எனக்குத் துணிச்சலைத் தந்தது.

ஆண்டவன் நேரே வந்து எதையும் செய்ய முடியாதென்று சொன்னேனல்லவா? தியாகேசனும், திரு. தியாகராஜனின் உள்ளத்தில் ஊடுருவி என்னை ஊக்குவித்தார் என்றால் அது மிகையாகாது.

விழாமல் நடந்த விழா

ஞாயிறன்று அகாடமியின் மகால் சோபையுடன் விளங்கிற்று. விழா தொடங்க ஒரு மணி நேரம் முன்னதாகவே அரங்கு நிரம்பி வழிந்தது. சங்கீத ரசிகர்களின் லட்சிய புருஷர் சிவனைக் கவுரவிக்கும்போது அடியார்கள் கூட்டத்துக்குப் பஞ்சமா? குறிப்பிட்ட நேரத்தில் மேன்மை தாங்கிய கவர்னர் கே.கே. ஷா அவர்கள் ஆஜரானார்கள்.


அகாடமியில் பாகப் பிரிவினைகள் உண்டு. நிர்வாகிகளுக்குத் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட வேலை உண்டு. ராஷ்டிரபதி பவனத்தைப் போல எல்லா வைபவங்களிலும் இங்கே ஒர் ஒழுங்கு முறை உண்டு. கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை மாதிரி காரியங்கள் நடைபெறும்.


பேசியவர்களில் இருவரின் உரையாடல் என்னை மிகவும் ஈர்த்தது. ஒருவர் ஜஸ்டிஸ் கே.எஸ்.வெங்கட்ராமன், ஐ.ஸி. எஸ்; மற்றொருவர் திரு. டி.எஸ்.ராஜம் அவர்கள். திரு. வெங்கட்ராமன் பாபநாசம் சிவனின் பக்தி மனப்பான்மையைச் சிலாகித்துக் கூறினார். அவரது அமர கானங்கள், கேவலம் மனிதயத்தனத்தால் உருவானவை அல்ல என்பதை வலியுறுத்தினார். ஏதோ ஒரு வேகம், கடவுளின் கட்டளை இப்படிப் பாட்டாகப் பரிமளிக்கிறது என்றார்.

ஒளிமயமான கண்கள்:

சிவனைக் காஞ்சிப் பெரியவர்களுக்கு ஒப்பிட்டு, உருவத்தில் சிறியவராயினும் ஒளிமயமான கண்கள் படைத்தவர் என்று கூறினார். திரு. ராஜத்தின் பேச்சு ரத்தினச்சுருக்கமாயும் கருத்துச் செறிவுடனும் விளங்கியது. தலைசிறந்த தொழில் வல்லுனராகையால் சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்துக்கு வந்து விடும் ஆற்றல் இவரிடம் பொதிந்துள்ளது. "தியாகராஜ சுவாமிகளுக்குப் பாபநாசம் சிவன் எவ்வகையிலும் ஒரு மாற்றுக்கூடக் குறைந்தவரல்லர். ஏன் சங்கீத மும்மணிகளுடன் இவரை நான்காவது மணியாகச் சேர்த்துக் கொள்ளலாம். அவரை கெளரவித்து நாம் நம்மையே கெளரவித்துக் கொண்டோம். அவர் சங்கீதத்தின் பீஷ்மப் பிதாமகர்' என்றார்.

நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.


சடங்குகள் தொடங்கின

அகாடமியில் ஒரு நல்ல சம்பிரதாயம் இருக்கிறது. வருடா வருடம் விழாத் தலைவர் பிரேரணையை நன்றாகப் பழுத்து முதிர்ந்த சங்கீத வித்வான்களைக் கொண்டு செய்யச் சொல்லுகிறார்கள். இது சாலச் சிறந்த முறை. அதற்குப் பிறகு ஆபீசர்களின் ஆக்ரமிப்பு இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும்.

இந்த வருடம் முடிகொண்டான் வெங்கட்ராமய்யர் அவர்கள் எல்லோரையும் ஏமாற்றி விட்டார்.

சீராகப் பேசிச் சிரிப்புக்கு இடமில்லாமல் செய்து விட்டார். தான் சொல்ல வேண்டியதை ரொம்பக் கோர்வையாகவும் சொல்லி விட்டார். சிவன் மேதாவிலாசத்தைத் தான் கடந்த நாற்பது ஆண்டுகளாக அறிந்திருப்பதையும், சங்கீத லட்சணங்களை நன்றாக ஆராய்ந்து அறிந்தவர் என்றும்,  சிவனைக் கெளரவிப்பதில் தான் மட்டுமல்ல, சங்கீத பரம்பரையே எல்லையில்லா மகிழ்ச்சியுறும் என்றும் கூறினார். வீணை தேவகோட்டை நாராயண அய்யங்காரும், ஒரு வார்த்தையில் ஆமோதிக்கிறேன்' என்று கூறிவிட்டு, வந்த சுவடு தெரியாமல் ஆசனத்துக்குத் திரும்பி விட்டார்.

மெரினா காற்று

"இந்த பாரத தேசம் இதுவரை சரித்திரம் கண்டிராத சாதனைகளைப் புரிந்துள்ளது. நமது மாபெருந்தலைவர், பாரதப் பிரதமர், பாரத ரத்னா, திருமதி இந்திரா காந்தி உலகம் கண்டறியாச் சாதனை புரிந்துள்ளார். பாகிஸ்தானை முறியடித்து, உப கண்டத்தில் சமாதானத்தை நிலை நிறுத்தி, இந்தியாவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு 'பாரத ரத்னாவழங்கியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏன் உலகெங்கும் மகிழ்ச்சி. என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தென்னாட்டின் சார்பிலும், அன்னாருக்கு என் வாழ்த்துக்களை வழங்குகிறேன். நான் ஒரு சாதாரணத் தொண்டன். விடுதலைப் போரில் ஒரு சாதாரண வீரனாகப் பணி புரிந்தேன். . . "

'ஐந்தின் கீழே பதினொன்று. அதை இரண்டால் பெருக்கினால் பத்தின் கீழே இருபத்திரண்டு.'

நேயர்கள் விழிப்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. நான் ஏதோ மறந்து போய் மெரினாவில் நடந்த ஒர் அரசியல் கூட்டத்தை விமர்சிக்கிறேன் என்று எண்ணுகிறீர்கள் போலும்! அல்லவே அல்ல! இது கவர்னர் கே. கே. ஷா அவர்களின் பிரதம பீடிகை. அவர் ஒரு சங்கீத மேடையை அரசியல் மேடை ஆக்கினார் என்று குற்றம் சாட்டவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசம் இருந்த நிலையில் இந்த விழாவே நடந்திருக்காது. பிரதமர் இந்திரா காந்தியின் தன்னம்பிக்கையும் அசுர சாதனையும் தான் இந்த விழா நடத்த வழி செய்தது. இது சற்றும் மிகையில்லை. இப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டின் ஆளுநர் இதை பிரகடனப் படுத்துவது சாலப் பொருத்தம் அல்லவா?
\
திரு. ஷா, சங்கீதத்தைப் பற்றி நிறைய விஷயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். ஏழு சுரங்கள்; வாரத்தில் ஏழு நாட்கள்; வாரத்தில் ஏழு நட்சத்திரங்கள்; தேகத்தில் ஏழு நரம்புகள் என்பவை போன்ற அரிய ஆராய்ச்சிப் பயன்களைப் பற்றி அவர் ஏழு தலைமுறைகள் வேண்டுமானால் பேசத் தயாராயிருந்தார். ஆனால் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்த அவர், யாருக்காக இந்த விழா நடந்ததோ, அந்த பாபநாசம் சிவனைப் பற்றியும் கொஞ்சம் தகவல்கள் சேகரித்து அளித்திருக்கலாம்.

கிடைத்தற்கரிய பேறு


'உணர்ச்சி வசப்படுவது என்று மேலெழுந்தவாரியாகச் சொல்லுகிறோம். ஆனால் அந்தக் கூற்றின் உண்மைச் சொரூபத்தை பாபநாசம் சிவனின் நன்றி உரையில் காண முடிந்தது. அநேக சங்கீத மகான்களால் உருவாக்கப்பட்டு, சங்கீத தேவதைக்காக அரும்பெரும் தொண்டாற்றி வரும் ஸ்தாபனம் என்று சங்கீத வித்வத் சபையை அவர் வர்ணித்தார். தமக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கெளரவம் ஒரு கிடைத்தற்கரிய பேறு என்று பணிவுடன் கூறினார். 

[ நன்றி : தினமணி கதிர் ]

தொடர்புள்ள பதிவுகள்:
சுப்புடு
பாபநாசம் சிவன்
சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

Innamburan S.Soundararajan சொன்னது…

இந்த அருமை, பெருமைகளை இன்று படிக்கத் தருகிறீர்களே. அதற்கு வந்தனம்.

UK Sharma சொன்னது…

பாபநாசம் சிவன் அவர்களின் நினைவு நாளில் (இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர்) இன்று படிக்கக் கிடைத்தது. இத்தகைய போகிஷன்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி எல்லோருக்கும் அறியத் தரும் தங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கவர்னர் ஷா பற்றி அப்போது எல்லோருக்கும் தெரியும். அவர் யாரைப் பாராட்ட விரும்பினாரோ அவரைப் பாராட்டினார். ஆனால், சுப்புடு சொல்வது போல பாபநாசம் சிவன் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். அது தான் முறையும் கூட.
கட்டுரையைத் தந்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக