திங்கள், 10 அக்டோபர், 2016

கே.பி. சுந்தராம்பாள் -2

நாடகமும் பாடகமும்
‘கல்கி’ அக்டோபர் 10. கே.பி.சுந்தராம்பாளின் பிறந்த தினம்.


'நாடகமும் பாடகமும்' என் னும் தலைப்பில் 'நந்தனார்' நாடகம் பற்றி 'கல்கி' 1932 -இல் விகடனில் எழுதிய விமர்சனக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. ( கிட்டப்பாவையும் கொஞ்சம் ‘கவனிக்கிறார்’ கல்கி! )

நாடகமும் பாடகமும்

ஸ்ரீமதி சுந்தராம்பாளின் பாட்டைப் பெரிதும் அநுபவித்தேன் என்று கூறினேன். அதற்குக் காரணம் அற்புதக் குரலும், பாடுந்திறமையும் மட்டும் அல்ல; பாட்டுக்களும் அவ்வளவு சிறந்தவை. மற்ற நாடகங்களிலே பாடப்பெறும் பொருளற்ற வார்த்தைகளைக் கோத்த பாட்டுக்களைப் போன்றவையல்ல நந்தன் சரித்திரப் பாட்டுக்கள். 

பொருள் செறிவும், கவிதையழகும், தமிழின்பமும் பொருந்திய பாட்டுக்களைத் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டவசமாக கோபாலகிருஷ்ண பாரதியார் பாடி வைத்துவிட்டுப் போனார். இந்த ஒரு சரித்திரத்திலாவது இந்துஸ்தானி மெட்டில் அமைந்த, பொருளற்ற புதிய பாட்டுக்களைச் சேர்க்காமல், பழைய பாட்டுக்களையே பாடிவரும் நடிகர்களுக்கு நாம் நன்றி பாராட்ட வேண்டும்.

ஸ்ரீமதி சுந்தராம்பாளிடம் அரிய சங்கீதத்தைக் கேட்ட நான், ஸ்ரீமான் கிட்டப்பாவிடம் நல்ல சம்பாஷணைத் திறமையைக் கண்டேன். முதலில் அவர் மேடைக்கு வந்ததும், அழகாக வாரிவிடப்பட்டிருந்த 'அமெரிக்கன் கிராப்பு'த் தலையைக் கண்டு பிரமித்துப் போனேன். பெரிய புராண காலத்திலேயே 'கிராப்புத்தலை வேதியர்'கள் ஏற்பட்டு விட்டார்களா என்ற ஐயம் தோன்றியது. இது ஒன்றைத் தவிர, மற்றபடி அவர் 'பண்ணையார்' வேஷத்துக்கு முற்றும் தகுதி வாய்ந்தவராயிருந்தார். பேச்சு, தோற்றம், நடையுடை பாவனை எல்லாம் மிகப் பொருத்தமாயிருந்தன. ஏன், இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர் உடல் பருமனைக் குறைக்கும் தேகாப்பியாசம் ஏதேனும் செய்யாமல் இருக்கும் பட்சத்தில், அப்புறம் இரண்டே இரண்டு வேஷங்களுக்குத்தான் அவர் தகுதியுள்ளவராவார். 

(1) 'பண்ணையார்' வேஷம்;(2)'பிள்ளையார்' வேஷம்.

[ நன்றி : விகடன் பொக்கிஷம் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக