வெள்ளி, 14 அக்டோபர், 2016

சுந்தர ராமசாமி - 1

கலைகள், கதைகள், சிறுகதைகள் -1
சுந்தர ராமசாமி



அக்டோபர் 14. பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நினைவு தினம்.

சுந்தர ராமசாமி  2001-இல் டொராண்டோவில்  இயல் விருது பெற்றபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது நான் எழுதி, “திண்ணை” இதழில் வெளியான ஒரு வெண்பா:

சொல்லேர் உழவர்
பசுபதி
மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய்
பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்!
தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர்
சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு.

============

இதோ , அவருடைய ஒரு கட்டுரை: இது ஜாலான் தம்பி அப்துல்லாபிரிக்பீல்ட்ஸ்கோலாலம்பூர் - லக்கியச் சிந்தனையின் சிறுகதைத் திறனாய்வுக் கருத்தரங்கக் கூட்டத்தில் 25.08.1985 அன்று படிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.
===

சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச் சக்தி அதற்குப் பின் இன்றுவரையிலும் கருத்தரிக்கவில்லை.

காவியங்களும் புராணங்களும் புனைகதைகளும் வாழ்வின் சோதனைகளை விரித்து, தர்மத்தின் வெற்றிக்கு அழுத்தம் தருகின்றன. யதார்த்தத்தைக் கண் திறந்து பார்த்து நம்மைத் திடுக்கிடச் செய்தது நாவல். சூட்சும இயக்கம் கொண்டதாக நம்பப்பட்டு வந்த தர்மம் காணாமல் போய்விட்டதை உணர்ந்து வருத்தம் கொண்டது சிறுகதை, வாழ்வின் கோலத்தில் வெடித்த முரண்பாடுகள், ஒழுங்கும் ஒத்திசைவும் கொண்டதாக உலகைக் கற்பனை செய்துகொண்டிருப்பது சாத்திம் இல்லை என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது. யதார்த்தத்தின் கோலத்தை உணர்ந்து உடைந்தன உணர்ச்சியும் மென்மையும் கொண்ட கலை உள்ளங்கள். அச்சிதறல்களின் கலை வடிவங்களே சிறுகதைகள்.

கதையில் தன் உயிரை வைத்துக்கொண்டிருக்கும் உன்னதச் சிறுகதை எதுவும் இல்லை. மேலான கலைகள்போல் சிறுகதைகளும் கலைஞனின் பார்வையில் தன் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றன. கதைக்கு அடிப்படை ஒத்திசைவு என்றால், சிறுகதைக்கு அடிப்படை முரண். கதை ஸ்வரம் என்றால் சிறுகதை அபஸ்வரம்.

சிறுகதையும் கவிதைபோல தொனிகள் நிறைந்தது. கவிதை போல் சொற் சிக்கனமும் இறுக்கமும் தொண்டது. மனத் தடாகத்தை நோக்கி வசப்படுகிறது ஒரு கல். சாய்ந்தோடிச் சென்று ஒரு அலையை எழுப்புகிறது அது. அந்த அலை மற்றொன்றை, வாசகனின் அனுபவ விகாசத்திற்கு ஏற்ப, அலைகள் விரிகின்றன. இங்கு முடிவு என்று ஒன்றில்லை. முத்தாய்ப்பு என்று ஒன்றில்லை.

தமிழ்ச் சிறுகதையின் முதல் வெற்றியாக வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தைக் கூறுவது நவீன விமர்சன மரபு. க்கதையின் முதல் பகுதி ஐயரின் சிறுகதைப் பிரக்ஞைக்கு ஒரு வெற்றி. மறுபகுதி ஒரு சரிவு. அந்தத் தொகுதியில் பிற யாவும் கதைகள். மாதவையாவும் பாரதியும் எழுதியிருப்பவை கதைகள். சிறுகதைப் பிரக்ஞை இவர்களுக்கு இல்லை.

'மணிக்கொடியில்தான் தமிழில் சிறுகதை என்னும் கலை முதலில் தோன்றிற்று. இதை உருவாக்கியவர்கள் நால்வர். புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன். பார்வை, தனித்தன்மைகள், நடை ஆகியவற்றில் மிகுந்த கலைச் செழுமை கொண்ட இக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் மற்ற மூவரிலிருந்து முற்றாக வேறுபட்டிருக்கும் தன்மை ஒரு பொற்காலத்தின் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவது போலவே இருக்கிறது. இப்பொற்காலம் நீட்சி பெறாமல் வணிக நலன்களைப் பேணும் சக்தி வாய்ந்த கேளிக்கையாளரான கல்கியால் திசை திருப்பப்பட்டது.கல்கியையே நாம் பின்னர் ஒரு குறியீடாகக் கருதும் வண்ணம் இந்த வணிக நலன்களே தமிழ்க் கலாச்சாரத்தின் மதிப்பீடுகளை இன்றுவரையிலும் ஆக்கிரமித்து அழித்துக்கொண்டிருக்கின்றன.

மணிக்கொடி காந்திய யுகத்தின் குழந்தை. காந்திய யுகம் வாழ்க்கையை மிகத் தீவிரமான மறுபரிசீலனைக்கு உட்படுத்திற்று. சரித்திரத்தில் இதற்கு (முன்னால் நடைபெற்ற மறுபரிசீலனைகளிலிருந்து வித்தியாசமாக, தத்துவத்தின் தளத்திலிருந்து பெருவாரியான மக்களின் தளத்திற்கு இறங்கிற்று காந்திய மறுபரிசீலனை. இந்த மறுபரிசீலனையில் தங்களைப் பிணைத்துக்கொண்ட கலைஞர்கள் மணிக்கொடிக்காரர்கள். பாசிபிடித்த மூளைகளில் காந்தியம் புல மரபுகளை உடைத்தது. சிந்தனையில் தோன்றிய இந்தப் புரட்சி படைப்பில் எண்ணற்ற புதுமைகளை வெளிப்படுத்திற்று.

மிழில் சிறுகதையின் சிகரத்தை அடைந்தவர் புதுமைப்பித்தன், லட்சியவாதத்திற்கு முதுகைக் காட்டியபடி தலைகீழாக நின்றவர் அவர். ஒழுங்கில் அவநம்பிக்கையும் மீறல்களில் ஆவேசமும் கொண்ட கலைஞர் எந்த அர்த்தத்தில் மணிக்கொடியின் உத்தமப் பிரதிநிதியாக நாம் கு..ரரவைக் காண்கிறோமோ அந்த அர்த்தத்தில் புதுமைப்பித்தன் மணிக்கொடிக்காரர் அல்லர். லட்சியவாதம், வாழ்வைப் புனரமைத்தல், மதிப்பீடுகளின் சரிவுகளில் கவலை, மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து பேதங்களின் வேலிகளைச் சாய்த்தல் போன்ற காந்திய யுகத்தின் முக்கியக்கூறுகள் கு.ப.ரா.விடம் பூரணமாகப் பிரதிபலிக்கின்றன. புதுமைப்பித்தனோ மிகுந்த அவநம்பிக்கை கொண்டு தன் காலத்திய மதிப்பீடுகளை முற்றாக நிராகரிக்கிறார். இருவருக்கும் பின், இன்றுவரையிலும் வந்துகொண்டிருக்கும் காலம், புதுமைப்பித்தனின் கணிப்புகளையே ஆமோதிக்கிறது.

புதுமைப்பித்தனும் கு.ப.ரா.வும் எதிர்எதிர்த் திசைகளில் இயங்கினார்கள் என்று கூறுவது தவறல்ல. புதுமைப்பித்தனின் கட்டுரைகள் சிலவற்றிலும் முக்கியமாகத் தன் சிறுகதைத் தொகுப்புகளுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரைகளிலும் விஷயத்தை விளக்கும் பாங்குக்கு மேல் பதில் சொல்லும் குரல் ஒன்று வேகமாக ஒலிப்பதைக் கேட்கலாம். மணிக்கொடியின் குறியீடாகக் கு.ப.ரா.வைக் கண்டு, தனக்கு மேலாகக் கு.ப.ரா.வைத் தூக்கி வைத்துக்கொண்டு குதிக்கும் மணிக்கொடி மனோபாவத்திற்கே அவர் பதில் சொல்கிறார் என்று கூற வேண்டும். தன் நம்பிக்கைகளைத் தக்கவைத்துக்கொண்டு கு.ப.ரா. வாழ்வை விமர்சிக்கும்போது முழு வாழ்வைப் பற்றிய புதுமைப்பித்தனின் பிரக்ஞையும் ஈவிரக்கமற்ற அவரது உண்மைத் தேடலும் அவரது நம்பிக்கைகளையே நொறுக்கிவிடுகின்றன. மதிப்பீடுகளின் சரிவுகள் லட்சியவாதத்தை அரிப்பதையும் தத்துவத்தின் புனிதம் மனித மனங்களின் கோணல்களால் சீரழிந்துவிடுவதையும் காந்திய யுகத்தின் உச்சகட்டத்திலேயே அவரால் உணர முடிந்திருக்கிறது. இந்தச் சமூகம் அதன் சாஸ்திரங்களிலும் வைதீகங்களிலும் நதிகளிலும் போலிப் பெருமைகளைக் கொட்டிக் கோஷித்துக் கொண்டிருக்கும்போது வாழ்வின் அடித்தளத்தில் நிர்மூலப்பட்டுப்போன மனிதனோடு அவர் தன்னை இணைத்துக்கொண்டார். நீக்கமற அவர் எங்கும் கண்டது பொய்கள், முகமூடிகள், இரவல் விசிறி மடிப்புகள். அவருடைய கலைப் பார்வை அவற்றைக் கிழித்தது. இதில் பிறந்தவை அவரது உன்னதச் சிறுகதைகள்.

மெளனி இந்திய வேதாந்த விசாரத்தின் தளத்தில் நின்று செயல்படுகிறார். நமது பரிச்சய உலகத்தின் சாயல்கள், காட்சிகள் இவற்றை மெளனியின் கலை உதறிவிடுகிறது. ஆணும் பெண்ணும் இரு ஆகர்ஷண கோளங்களாக இவர் கதைகளில் வெளிப்படுகின்றனர்.

இனக் கவர்ச்சியை உடல் தளத்திலிருந்து மேலே எடுத்துச் சென்ற பின்னரும் வேதாந்த, இசைத் தளங்களோடு அவை இணைக்கப்பட்ட பின்னரும் ஆகர்ஷண சக்திகள் கூடி முயங்க முடியாமல் போவதில் கொள்ளும் துக்கம் இவரது சிறுகதைக்ள் நெடுகிலும் வியாபித்துக் கிடிக்கிறது. இது லௌகிகத் தளத்திற்குரிய துக்கம். இந்தத் துக்கத்தை இவர் விவரிக்கும் பாங்கில், கூடாத காதல் குறியீடாக விரிந்து, வாழ்வின் சகல துக்கங்களையும் நெருடும் முகாந்திரமாகிவிடுகிறது. மெஞானியின் சிறுகதைகள் சிருஷ்டியின் னத்தைக் கவிதைகளாக்கி இருக்கின்றன.

பிச்சமூர்த்தியின் உலகம் மத உணர்வுக்கும் ஆசார அனுஷ்டானங்களுக்கும் அப்பாற்பட்ட உலகம். மனிதர்களுக்கு அப்பால் பிற ஜீவுராசிகளும் அழுத்தம் பெறும் பார்வை இவருடையது. மரபின் தொடர்ச்சியாக ஆத்மீக ஞானத்தைப் பெற்றார் என்பதைவிடவும் இந்திய ஆத்மத ஞானம் மேற்கில் தோற்றுவித்த அலைகளிலிருந்து மறுபாதிப்புப் பெற்றார் என்று கூறலாம். மேற்கில் பாதிப்பை நிகழ்த்தியது ஆசாரப் பாசிகள் அல்ல. ஆத்மீகப் பண்பின் அடிப்படைகள். இந்த அடிப்படையில் இணைந்த பிச்சமூர்த்தி, ஜீவராசிகளின் அடிப்படை ஒற்றுமைகள் பற்றி சுயபோதம் பெற்று, அன்பில் கரையும் வாழ்வைக் கனவு காண்கிறார். இந்தக் கனவு அவர் கதைகளில் இறங்கும்போது மனித மனத்தின் மேல் நிலைகள் பதிவாகின்றன. அறிவு, வசதி, செல்வம் ஆகியவற்றின் பெருக்கம் வாழ்வின் எளிமையைக் குலைத்துப் பின்னப்படுத்தும் என்றும் மனிதநேய மற்ற விஞ்ஞானம் வாழ்வை நிர்மூலப்படுத்திவிடும் என்றும் பதைத்தவுர் உண்மைத் தேடலை நோக்கமாகக் கொண்டிருந்த விஞ்ஞானம், இன்று ஹிம்சையின் பேருருவுமாக மாறி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பிச்சமூர்த்தியின் கவலையின் நியாயத்தை உணர முடிகிறது. லோகாயத தத்துவத்தின் ஏதேனும் ஒரு வகையை வீசி இவரை நிராகரிப்பது சுலபம். வாழ்வின் தளத்தில் இவரைப் பொருத்தி வருடைய கனவுகளையும் கவலைகளையும் நமக்குப் பகிர்ந்துகொள்ளத் தெரிய வேண்டும். சமூகம், கலைகள், கலாச்சாரம் ஆகிய தளங்களில் மிகுந்த பிரக்ஞை கொண்டவர் கு.ப.ரா. தனது குறிக்கோள் பற்றி இவர் கொண்டிருந்த தெளிவு காரணமாக இவரது உழைப்பு சிறிதும் வீணாகவில்லை. படைப்பில், பார்வையையும் வடிவத்தையும் நிறைவு செய்வதில் மிகுந்த கவனம் கொண்டவர். இவரது ஆரம்பகாலச் சிறுகதைகள் சமூகத் தளத்திலும் பிற்காலச் சிறுகதைகள் ஆண் பெண் உறவுத் தளத்திலும் யங்கின என்று பொதுவாகச் சொல்லலாம். இலக்கியம், அது தோன்றும் காலத்தின் கண்ணாடியாக நின்று, அக்காலத்திற்குரிய மேன்மைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பிச் செயல்பட்டவர். மென்மை, தாழ்ந்த சுருதி, தொனி, சிக்கனம் ஆகிய சிறுகதைப் பண்புகளை முதலில் உறுதிப்படுத்திய கலைஞர்.

க.நா.சு.வின் சிறுகதைகள் கலை வெற்றி கூடாமல் அறிவுப் பூர்வமாக முடிந்துவிடுபவை. பக்குவமும் விவேகமும் கூடிநிற்கும் இக்கதைகளை வெகு சுகமாக நாம் படிக்கிறோம் என்றாலும் இவை நம்மிடம் எவ்விதப் பாதிப்பையோ சலனத்தையோ ஏற்படுத்துவதில்லை. நம் நினைவில் அவை தங்கி நிற்பதுமில்லை. சீர்திருத்தத்தில் ஆரம்பித்து மரபில் முற்றாகத் தேய்ந்துபோன சி.சு. செல்லப்பா சிறுகதை உத்தியில் மிகுந்த கவனமும் நுட்பமும் கொண்டவர். உத்தியின் அமைதி கூடிய இவரது சிறுகதைகள் நம் நினைவில் அசைகின்றன.

சிறுகதைப் பிரக்ஞை அற்ற பி.எஸ். ராமையா வெற்றிகரமான ஒரு கதை சொல்லி. சம்பவங்களைப் பின்னுவதிலேயே கவனம் கொண்ட வருக்கு வாழ்க்கை பற்றிய பார்வையும் இல்லை; விமர்சனமும் இல்லை. ந. சிதம்பர சுப்பிரமணியன் சிறுகதைப் பிரக்ஞை மிகுந்தவர் என்றாலும் பழமையை முற்றாகத் தழுவிக்கொண்டிருக்கும் இவருக்கு, இந்த வடிவப் பிரக்ஞைக்குள் வைக்க நாம் பொருட்படுத்தும் விஷயம் எதுவுமில்லை. மணிக்கொடி மரபின் நீட்சியில் இணைந்தும் வணிக நோக்கங்களுக்குப் பலியாக மறுத்தும் தமிழ்ச் சிறுகதையின் தரத்தைக் காப்பாற்றிக்கொண்டு போகும் பரம்பரை இன்றுவரையிலும் தொடர்கிறது. தி.ஜ.ரா, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, த.நா. குமார ஸ்வாமி, கி.ரா, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, நீல. பத்மநாபன் போன்ற பலர் இதில் பங்குபெறுகின்றனர்.

கல்கி கதை சொல்லும் மரபின் வாரிசு. அதிகபட்சமான வாசகர்களை எட்டச் செய்ய அவசியமான தந்திரங்களே இவரது கதைக் கூறுகள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. காந்தி யுகத்திற்குரிய முற்போக்கான சமூக விமர்சனங்களில் ஆரம்பித்து, ஜனரஞ்சக சுவாரஸ்யத்திற்குத் தீனி போடுவதில் தன்னை முற்றாகக் கரைத்துக் கொண்டவர். வாசகனுக்கு எவ்விதப் பங்கும் அளிக்காமல் விளக்கங்களை விரித்துக் காதல் இனிப்புகளை வாசகர்களின் வாயில் பாலாடையால் ஊற்றியவர். இவரது கதைகளில் எதுவும் சிறுகதைப் பிரக்ஞையைக் காட்டவில்லை. கல்கியின் வாரிசுகளான வணிக வெற்றிகளின் பட்டியல் மிக மிக நீளமானது. கலைரீதியான பரிசீலனைக்குத் தகுதியற்றவர்கள் என்பதால் இவர்கள் இங்கு முற்றாக நிராகரிக்கப்படுகிறார்கள்.

ராஜாஜி ஆத்மார்த்தமான சிறுகதை எழுத்தாளர். தனது முற்போக்கான சிந்தனைகளுக்குச் சிறுகதையை ஒரு வாகனம் ஆக்கியதில் இவரைத்தான் முதல் முற்போக்குச் சிறுகதை எழுத்தாளர் என்று சொல்ல வேண்டும். சிறுகதைக்குரிய சிக்கனம் இவரிடம் உண்டு. சிறுகதைப் பிரக்ஞையும் இவருக்கு இருக்கிறது. ஆனால் இவர் கதைகளில் கலைப் பெறுமானம் கூடுவதில்லை.

லா.ச. ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக்கொண்டு வந்தவர். இவருடைய கதைகளில் மரபு, பிச்சமூர்த்தியைப் போல் விடுதலை பெற்று மனிதத் தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தரவல்லவர் என்றாலும் இவ்வனுபவங்களின் அர்த்தம் நக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள் கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்சஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்.

ரகுநாதனின் ஆரம்பகாலக் கதைகள் புதுமைப்பித்தனின் கதைத் தன்மையால் பாதிக்கப்பட்டு, பார்வையால் பாதிக்கப்படாதவை. பிற்காலக் கதைகள் முற்போக்கு விஷயங்களைக் கூறிய விதத்தில் கலை அமைதி கூடாதவை. இவைதான் முற்போக்கு இலக்கியம் என்று பின்னால் பெயர் பெற்ற, அளவில் பெருத்து விட்ட, கலைப் பெறுமானம் அற்ற, ஒரு வஸ்துவின் முன்னுதாரணம். இங்குக் கதைப் பொருள்கள் எழுத்தாளனின் வாழ்க்கையைச் சார்ந்து அமையாமல், கதைப் பொருளில் வலியுறுத்தப் பட வேண்டிய தரப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன் தீர்மானத்துக்கு ஆளாகி, அந்தத் தரப்பை அழுத்தும் வகையில் ஜோடனை செய்யப்படுகின்றன. முன் முடிவு, ஜோடனை, நிர்ணயிக்கப்பட்ட இடத்தைச் சென்றடைவதில் குறியாக ருத்தல் ஆகிய குணங்கள் கொண்ட இக்கதைகளைக் காலம், வணிகக் கதைகளோடு சேர்த்து ஆயாசமின்றிப் பெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது.

விந்தனுடைய ஒரு முகம் பத்திரிகை முகம். மற்றொன்று அவருடைய முகம். பிழைப்பின் கோலமான பத்திரிகை முகத்தை விட்டுவிட்டு அவருடைய முகத்தை மட்டுமே ஏடுத்துக்கொள்வோம் என்றால் தன்னிறைவு கூடாத மக்களின் துன்பங்களை மனித நேயத்துடன் வெளிப்படுத்தியவர் இவர் என்று கூற வேண்டும். பொருளாதார நிலையையே மனிதனின் துன்பங்களுக்கு முதலும் முடிவுமான காரணமாகக் காண்கிறார். ஆத்மார்த்தமான எழுத்து என்றாலும் கலை வெற்றி பெறாமல் சரிந்துவிடுகின்றன இவரது கதைகள்.

( தொடரும் ) 

தொடர்புள்ள பதிவுகள்:
சுந்தர ராமசாமி : விக்கிப்பீடியாக் கட்டுரை
சுந்தர ராமசாமி

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

அருமை. உஙகளின் பதிவுகள் ஒரு பொக்கிசம்!!