தந்திரம்
பலித்தது!
சசி

[ நன்றி : விகடன் ]
தொடர்புள்ள சில பதிவுகள்:
’சசி’ யின் சிறுகதைகள்

திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது:
என்னைப்பற்றி
நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு வரப்போகும் கஷ்ட நஷ்டங்களை
அவருடைய ஜாதகத்தைப் பார்த்து விவரமாக என்னால் தெரிவிக்கக் கூடும். அநேக பெரிய மனிதர்களிடமிருந்து
நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றிருக்கிறேன்.
தாங்கள் ஒரு
பெரிய முதலாளி என்று கேள்விப்பட்டு உங்களுக்கு இதை எழுதலானேன். உங்கள் ஜாதகத்தை
உடனே அனுப்பி வையுங்கள். பலன்களைத் தெரிவிக்கிறேன்.
இப்படிக்கு,
வேலுசாமி
ஜோஸ்யர்.
________________________________________
வேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பாவின் காரியதரிசி
பஞ்சநதம் எழுதியது;
உங்கள் கடிதத்தை
என் எசமானரிடம் காண்பித்தேன். தம் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்க அவர்
விரும்பவில்லை.
இப்படிக்கு,
பஞ்சநதம்.
________________________________________
திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி
எழுதிக்கொண்டது:
தங்கள் நண்பர்
ஒருவர் மூலமாகக் கிடைத்த தங்கள் ஜாதகத்தை நான் பரிசோதித்துப் பார்த்தேன். சில
எதிர்பாராத கஷ்டங்கள் தங்களுக்கு நேரிடக் கூடும் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பினால்,
உடனே தங்கள் ஜாதக பலன்களை
விவரமாக எழுதியனுப்புகிறேன்.
கஷ்டங்களை
நிவர்த்தி செய்ய எங்கள் காளியம்மன் தாயத்து உத்தரவாதமளிக்கக்கூடியது. பலன்களுக்காக
ரூ.50-ம், தாயத்துக்காக ரூ.25-ம் உடனே அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
வேலுசாமி
ஜோஸ்யர்.
________________________________________
வேலுசாமிக்கு, திவான் பகதூர் குண்டப்பா அவர்களின் காரியதரிசி
பஞ்சநதம் எழுதியது:
உங்களைப் போன்ற
ஜோஸ்யர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து போகிறவரல்ல எங்கள் முதலாளி. ஆகவே,
உங்கள் ஜோஸ்யத்தையும்,
தாயத்தையும் நீரே
வைத்துக்கொள்ளும்.
பஞ்சநதம்.
________________________________________
திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, வேலுசாமி எழுதியது:
தங்கள்
காரியதரிசியின் கடிதம் பார்த்தேன். தங்களுக்குப் போட்டியாகத் தொழில் நடத்தும் சில
விரோதிகள் உங்களுக்கு வரப் போகும் கஷ்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மிக
ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஜாதக பலன்களுக்கு மட்டுமே ரூ.100 தருவதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கே தங்கள்
ஜாதக பலன்களை அனுப்பி வைக்கிறேன். நிற்க. நான் தங்களுக்குக் கொடுத்த சிரமத்திற்கு
மன்னிக்க வேண்டும்.
வேலுசாமி
ஜோஸ்யர்.
________________________________________
அகில இந்திய ஜோஸ்யப் புகழ் வேலுசாமிக்கு
குண்டப்பா அனுப்பிய அவசரத் தந்தி:
சற்று முன்
தங்களுக்கு ரூ.200 தந்தி
மணியார்டர் செய்திருக்கிறேன். என் ஜாதக பலன்களைத் தயவுசெய்து என் விரோதிகளுக்குத்
தெரிவித்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காளியம்மன் தாயத்தை உடனே
அனுப்பவும்.
குண்டப்பா.
==================== [ நன்றி : விகடன் ]
தொடர்புள்ள சில பதிவுகள்:
’சசி’ யின் சிறுகதைகள்
3 கருத்துகள்:
மக்களின் மனோபாவத்தை மிகச் சரியாக
விளக்கிப்போகும் அருமையான சொற்சித்திரம்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரமணி அவர்களுக்கு, உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி. தொடர்வேன்!
ஜோஸ்யரின் "பலன்கள்" எப்படியிருக்குமோ, அவர் நல்ல பிழைக்கும் வழிதெரிந்த தந்திரசாலிஎன்று தெரிகிறது. அருமையான பாத்திரப் படைப்பு
கருத்துரையிடுக