சனி, 30 ஜூன், 2012

கவிதை இயற்றிக் கலக்கு -7

கவிதை இயற்றிக் கலக்கு : ஒரு மதிப்புரை

கவிமாமணி குமரிச்செழியன்

 “கவிதை இயற்றிக் கலக்கு” என்ற யாப்பிலக்கண நூலைப் பற்றிய
சில விவரங்கள்

க.இ.க -5   -இலும்

அதைப் பற்றி “அமுதசுரபி”யில் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது

 க.இ.க -6  -இலும் உள்ளன.

நூல் வெளியீட்டு விழா நடந்ததும், எனக்குப் பாரதி கலைக் கழகத் தலைவர் கவிமாமணி குமரிச் செழியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். என் நூலை மிக ஆழமாகப் படித்து எழுதிய ஒரு மதிப்புரையாக அது விளங்குகிறது என்பதால், அந்தக் கடிதத்தை தட்டச்சுச் செய்து, இங்கு வெளியிடுவதில் மகிழ்கிறேன். குமரிச்செழியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கடிதத்தை எனக்கு அனுப்பின நண்பர் வேதத்திற்கும் என் நன்றி.
==========


கவிமாமணி குமரிச்செழியன்                             
                                                        
தலைவர், பாரதி கலைக் கழகம், சென்னை                            
                               
           
அன்புள்ள நண்பர் கவிஞர் டாக்டர் பசுபதி அவர்கட்கு,
வணக்கம். வாழ்த்துகள்.

தாங்கள் எழுதியுள்ள “ கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் கவிதை இலக்கண நூல் பாரதி கலைக் கழகத்தின் சார்பில் 27.03.2011 அன்று வெளியிடப் பெற்றது. விழா மிகச் சிறப்பாக நடந்தது. டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் நூலின் ஒவ்வொரு எழுத்தையும் படித்து மிகச் சிறந்த ஓர் ஆய்வினை வழங்கி நூலுக்குப் பெருமை சேர்த்தார். நூலுள் மிளிரும் சில நுட்பங்களை அவர் எடுத்துக் காட்டியது அருமை. தொடர்ந்து புலவர் வெற்றியழகன், சந்தக் கவிமாமணி தமிழழகன், கவிமாமணி இலந்தை இராமசாமி ஆகியோர் நூலின் நுட்பங்களை எடுத்துக் காட்டி அரங்கை ஆட்சி செய்தனர்.

கவிஞர் வேதம் அவர்கள் தனது சொந்த நூலைப் போல தனிக்கவனம் செலுத்தி மிகச்சிறப்பாக பெருமுயற்சியில் வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவருடைய உழைப்பு மிகப்பெரிது. கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசிகள் வாயிலாகவும் குறிப்புகளை அனுப்பி, நூலை அனுப்பி உதவி மிகப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். அவருக்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரியன.

L.K.M. பப்ளிகேஷன் அந் நூலை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துத் தெளிவாகவும் அழகாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

நூல் எழுத்தில் தொடங்கி அசை, சீர், தளை, அடி, தொடை என நடந்து கவிதை நலம் தோயப் பாவகைகளில் தொடர்ந்து விரிவது அருமை. கவிதை இலக்கணம் பாடத்தில் தொடங்கி மாடத்தில் நிறைகிறது. ஓடத்தில் மிதந்தாலும் கரைசேர்வதே நோக்கம். அதுபோல பாடத்தில் தொடங்கினாலும் நல்ல மரபுக் கவிஞர்களை உருவாக்க வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது. உணவுக்கு மீனே தேவை எனினும் தூண்டிலிட்டு மீனைப் பிடித்து உணவாக்கிக் கொள்ளக் கற்றுக் கொடுக்கும் நோக்கம் பளிச்சிடுகிறது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலன்றோ சிறப்பு. அஃது இந்நூலில் இழையோடுகிறது.

நேரசை நிரையசை என அலகிடுதலில் தொடங்கி வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என விரிகிறது. ஒவ்வொரு பாவினமும் துறை, தாழிசை, விருத்தம் என மேலும் விரிகிறது. மரபுப் பாவகைகள் இலக்கணக் கடலில் மூழ்கியெடுத்த முத்துப்போல மின்னுகின்றன.

இந்நூலூள் பல நுட்பங்கள் செறிந்து கிடக்கின்றன. எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமெனில், “ சொற்புணர்ச்சிக்குப் பின்னர்தான் வெண்பா இலக்கணம் சரியா என்று பார்க்கவேண்டும். இதை எல்லா மரபுப் பாக்களுக்கும் உரிய பொது விதியாகவே கொள்ளலாம், “ ( ப.79) என்பது மிகச் சிறப்பு.

மருட்பாவும் விளக்கப் பட்டிருப்பது மிக அருமை.

மலர்கள் தோறும் அமர்ந்து மதுவை நுகர்ந்து தன்மயமாக்கிக் கொண்டு மருத்துவக் குணமுள்ள தித்திக்கும் தேனை வழங்கும் தேனீ போலத் தமிழ்க் கவிதைக் கடலில் மூழ்கித் திளைத்துச் சிறந்த பாடல்களைத் தேர்ந்து எடுத்துக் காட்டுகளாக வழங்கியிருக்கும் நுட்பம் தங்களை ஒரு ‘செந்தமிழ்த் தேனீ’ என அடையாளம் காட்டுகிறது.

யாப்பருங்கல விருத்தி கூட எடுத்துக் காட்டுகளுக்குப் பாடல்கள் கிடைக்காத நிலையில் பாடல்கள் ஆசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாக அமைந்துள்ளது. ஆனால் இந்நூலுள் அனைத்து வகைப் பாக்களுக்கும் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுகள் வழங்கி இருப்பது அருமை. அது புலமையின் வெளிப்பாடு.

பரிமேலழகர் திருக்குறளை மாணவர்களுக்குப் பாடம் நடத்தி, மாணவர்களுடைய வினாக்களுக்கு விடையளித்துப் பெற்ற அனுபவத்தில் மலர்ந்த திருக்குறள் உரை இன்று அனைத்துப் பிற்கால உரைகளுக்கும் அடிப்படையாக அமைந்து மிளிர்வது போல, மாணவர்களுக்கு இணையத்தின் வழி நடத்திய பாட அனுபவங்கள் வாயிலாக மலர்ந்துள்ள தங்களுடைய “கவிதை இயற்றிக் கலக்கு” என்னும் நூலும் ஒளிரும் என்பது உறுதி.

முதற்பகுதி பழைமையில் தொடரும் இலக்கணத்தை உணர்த்த இரண்டாம் பகுதி அண்மைக் கால வளர்ச்சியின் அடையாளங்களாக அமைந்திருப்பது அனுபவத்தின் சுவடுகள். சந்தப்பா வகைகள், கும்மி, சிந்து, கண்ணி, ஆனந்தக் களிப்பு, இசைப்பாடல் என அனைத்தையும் அலசியிருப்பது மிகச் சிறப்பு. இன்றைய நிலையில் அமைந்துள்ள முழுமை வடிவம் என்று கூடச் சொல்லலாம். இவை பழைய இலக்கண அடிப்படையில் அமைந்திருந்தாலும், அவற்றின் உயிரோட்டமாகத் திகழும் இசைக் குறிப்புகளுடன் விளக்கியிருப்பது தான் தங்களுடைய இசைப் புலமைக்கு மற்றொரு சான்று.

லிமெரிக் என்னும் அண்மைக் காலப் பாடல் வகையையும் எடுத்துக் காட்டி அதனைக் குறும்பா என எடுத்துக் காட்டி இலக்கணமும் தந்திருப்பது நிகழ்காலக் கட்டுக் கோப்பு. ( பக். 239) .

பரணி இலக்கியங்கள் தாழிசையில் அமைந்திருக்கும். அதனை இனம் காட்டும் வகையில் பரணித் தாழிசை ( பக். 316) எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் “குறள் வெண்செந்துறையே பிற்காலத்தில் சிந்துவாக வளர்ந்தது/இன்னும் வளரும் என்று கூடச் சொல்ல்லாம் “ ( 316) என்று புதிய நுட்பம் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

வெண்பாக்களில் விளங்காய்ச் சீர்களுக்குப் பதிலாக விளாங்காய்ச் சீர்கள் இடம்பெற்றால் செப்பலோசை சிதைந்து சிறப்பிழக்கும் என்பதனால் விளாங்காய்ச் சீர்களைப் பொதுவில் வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் வகையுளியைப் பயன்படுத்தலாம் ( பக்.72) என்பன மிகமிக நுட்பமான செய்திகள். சவலை வெண்பாவையும் சுட்டத் தவறவில்லை. ( பக். 133)

சந்த மாத்திரையை அடிப்படையாக்க் கொண்டு அசைச் சந்த விருத்தங்கள் நடைபோடுவது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது அருமை. ( பக். 326). வண்ணப் பாடல்களில் அவை பயின்று வருதலும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

இப்படி எத்தனையோ புதுமைகளும் விளக்கங்களும் எடுத்துக் காட்டுகளும் அமைந்த அற்புதமான புதிய வரவு “கவிதை இயற்றிக் கலக்கு”. எல்லாரும் படித்துத் தெளியவும், தெளிந்ததை எழுத்தில் பிழியவும் எளிமையாக அமைந்த இலக்கண நூல் என்பது உறுதி.

சிந்து பற்றிய ஆய்வில் ‘மாதமாய்க் குயவனை’ என்றிருப்பதை ‘மாதம் குயவனை’ என்றிருந்தால் சிறப்பு என்னும் ஆய்வு அருமை ( 354 ).

காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, இலாவணி, கீர்த்தனை போன்றவற்றை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அலகிடுதல்: சில நுண்மைகள் என்பதைச் சில நுட்பங்கள் என ( பக். 81) இருந்தால் இனிமை தோன்றும் எனத் தெரிகிறது.

92-ஆம் பக்கத்தில் நேரிசை ஆசிரியப்பாவுக்கான எடுத்துக் காட்டான “ யாயும் ஞாயும் ….தாம் கலந்தனவே” என்னும் குறுந்தொகைப் பாடலில் மூன்றாம் அடியான “ யானும் நீயும் எவ்வழி, அறிதும்” என்னும் ஓரடி முழுமையாக விடுபட்டுள்ளதை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

சவலை வெண்பாவைப் பற்றிச் சொல்லும்போது இருகுறள் வெண்பாக்களைச் சேர்த்தால் 2-ஆம் அடியின் மூன்றாம் சீர் நாள், மலர், காசு, பிறப்பில் அல்லவா அமையும்? அதனை இன்னும் சற்று தெளிவுபடுத்தினால் நலமாக இருக்கும் ( பக். 133).

ஆங்காங்கு சில எழுத்துப் பிழைகள் தலை காட்டுகின்றன. அவை கால நெருக்கடியைக் காட்டுகின்றன எனலாம்.

அற்புதமான அரியதொரு நூலைத் தந்துள்ள நண்பர் பசுபதி அவர்கட்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். அதனை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ள கவியோகி வேதம் அவர்கட்கு மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்
குமரிச்செழியன்
                         
 தொடர்புள்ள பதிவுகள் :

கவிதை இயற்றிக் கலக்கு!

கருத்துகள் இல்லை: