சனி, 6 ஏப்ரல், 2013

திருப்புகழ் -4

ஒருத்தன் அருளிய பெருத்த வசனம் 
திருப்புகழ் அடிமை சு. நடராஜன் 



அருணகிரிநாதர் அருளிய நவமணிகளில் ’திருவகுப்பு’ ஒன்று. திருப்புகழ் நூல்களில் மொத்தம் 25 திருவகுப்புப் பாடல்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவற்றுள் 18 பாடல்களே அருணகிரியார் அருளியவை என்பது ஸ்ரீ ஆறுமுக நாவலரின் கொள்கை. அந்தப் பதினெட்டுப் பாடல்களில் முக்கியமான ஒன்று : பெருத்த வசன வகுப்பு. முருகன் அருணகிரிக்குச் செய்த ‘மஹா வாக்கிய’ உபதேச மொழி “ “சும்மா இரு! சொல்லற!”. அதன் பெருமையை விளக்குவதே இந்தத் திருவகுப்பு. இந்த வகுப்பை ஆராய்கிறார் திருப்புகழ் அடிமை நடராஜன். அவருடைய கட்டுரை திருப்புகழ் அன்பர்கள் 1998-இல் வெளியிட்ட ‘திருப்புகழ்த் திருப்பணி மலரில்’ வெளியானது.
 ( கட்டுரையை எனக்குக் கொடுத்துதவிய நண்பர் வே.ச. அனந்தநாராயணனுக்கு என் நன்றி.)








கட்டுரையின் கடைசியில் இருப்பது ஓர் அழகிய நேரிசை வெண்பா. சரியான வெண்பா அமைப்பில் இல்லாதலால் மீண்டும் , சரியான வடிவில் இடுகிறேன். 

சும்மா இருவெனநீ சொல்லப் பொருளொன்றும்
அம்மா அறிந்திலமென்(று) அன்றுரைத்த -- எம்மான் 
அருணகிரி நாதன் அநுபவம்நா யேற்குக்
கருணைமொழி போரூரா! காட்டு.   

( இது ’கற்பனைக் களஞ்சியம்’ ஸ்ரீ சிதம்பர சுவாமிகளின் வாக்கு.
அவருடைய ‘திருப்போரூர் சந்நிதி முறை’ நூலில் இருக்கும். ‘கருணைபொழி’ என்றும் ஒரு பாடம் உண்டு )

பின் குறிப்பு: 

1. பெருத்த வசன வகுப்பு 
================
டாக்டர் தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளையவர்களின் பொழிப்புரை 
======
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை
யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் (1)
=======
சூரியன் உலவுகின்ற மூவுலகங்களும், சொல்லப்படுகின்ற அவ்வுலகங்களில் உள்ளதான இன்பங்களும் இதுவே என்னும்படி எல்லாப் பொருள்களும் நிறைந்துள்ளதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=========
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும்
அவிழ்ச்சி பெறவஇனி திருக்கு மவுனமும் (2)
================
வேதனை பலவற்றையும் அடக்கி ஒழித்து, எல்லாம் ('உரை அவிழ, உணர்வழிய, உளமழிய, உயிரவிழ' என்று சீர்பாத வகுப்பில் கூறியபடி சகலமும் )அற்று நீங்க, இன்பநிலையில் இருக்கும் 'சும்மா இருத்தல்' என்ற நிலைப்பேறும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=================

அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும் (3)
========
அறிவிலாததும், சத்து அற்றதுமான வழியில் வழக்கிடுவோரான புறச்
சமயவாதிகள் அறுவரும் கூச்சலிடுவதுமான பொருள் மாறுபாடுகளை எடுத்து விளக்குவதும் (அல்லது ஒழிவதும்-ஒழிப்பதும்) (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
==================
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை
யடக்கி யவநெறி கடக்க விடுவதும்; (4)
=====
அழுக்கு மயமான ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மல இருட்டிலே முழுகி அலைவதை ஒழித்து, பாவ நெறியைத் தாண்ட உதவுவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
==========
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும் (5)
===============
எருக்க மலரையும், கொன்றை மலரையும் முடியிற் சூடும் பெருமானாகிய
சிவபிரான், 'எமக்குக் குருமூர்த்தி எமக்கும் தலைவன் இந்த அறுமுக
ஒருத்தனாகிய இவனே' , என்று மதிக்கவைக்கத்தக்க உபதேச மொழியாய்
விளங்குவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
========================
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும் (6)
======
நல்வினை-தீவினை என்னும் இரண்டு வகை வினைகளால் திரட்டுப்பட்ட
-யாக்கப்பட்ட --மலங்களுக்கு இடமாம் இவ்வுடலின் சம்பந்தம் ஒழியும் ஒரு சூழ்ச்சி நிலையை --பிறப்பு அறும் வழியை -- அருளுவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
============
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும்
இதற்கி தெதிரென இணைக்க அரியதும் (7)
==============
ரிக்வேதம் முதலிய சகல கலைகளும் அறுமுகன் அருளிய இந்தப் பெருவசனத்துக்கு ஒப்பாகும் என்று இணை சொல்ல முடியாததும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=================
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும்; (8)
=========
நான் இறக்கும்பொழுது, என்முன்பே வந்து நிற்கும் யமதூதர்களை வென்று விலக்க வல்லதான ஒரு நிலைமையை (மனோதிட வலிமையை) அருள்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=============
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினி லிருப்பை யுடையதும் (9)
=======
நிரம்பப் பொருள்களை எடுத்துச் சொல்வதான (உபநிஷத்துக்களின்) வேதத்தின் ஞான காண்டங்களில் முடிவான பொருள்கள் முடிவு கட்டும் முடிவில், இருப்பிடத்தைக் கொண்டு விளங்குவதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=========
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் (10)
=======
தீ, மண், வான், காற்று, நீர், என்று - பஞ்ச பூதங்கள் என்று -- நிறைவு
பெறுவதான ஒரு தத்துவ முறையில் அகப்ப்படாது ஒளித்துக்கொள்ள வல்ல ஓர் உருவப்பொருளும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=========
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு
நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும் (11)
======
நினைவும், நினைக்கப்படும் பொருளும், நினைப்பவனும் - என்னும் மூவகையும் அற்ற இடத்தில் நிலைபெற்று நிற்கும்படி நிறுத்தவல்ல ஆற்றலை உடையதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
=====
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும்; (12)
======
பத்தி வழியில் மனம் நிலைத்து நிற்கும் அடியவர்கள் பிரபஞ்ச விஷயங்களில் பிரமித்தல் என்பது கெட்டொழியவும், அவைகளின் சிக்கினின்றும் விடுதலை பெறவும், உதவுகின்ற அனுபவ நிலையைத்
தரும் செல்வப் பொருளும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
==========
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் (13)
====
உள்ளத்தை உருக்கும் திருவருளில் அனுபவித்து களிப்பு நிலையில் இருக்க மனம், வாக்கு, காயம் ..இம் மூன்றின் தொழிலையும் மறைந்து போம்படி செய்வதும் (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
============
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் (14)
====
ஜோதிக்கும் ஜோதி (ஜோதிகளுக்குள்ளும் தலைமையான ஜோதி ) எனவும்,
வெட்டவெளிக்குள்ளும் வெட்டவெளி என்னும்படியும், உயிர்க்கும் உயிர்
என்னும்படியும், செயல் புரிந்து விளக்கம் தருவதும், (அறுமுகன் அருளிய பெருத்த வசனமே.)
===========
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை (15)
==========
வலிய, ஒப்பற்ற மயிலை செலுத்தி, அசுரர்கள் ஒளிந்து ஓடப் போர் புரிந்த
சாமர்த்யம் வாய்ந்தவனும் அழகிய (அல்லது அலங்காரமாகத்) தழைகளை
================
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்த னருளிய பெருத்த வசனமே. (16)
===========
ஆடையாகக் கொண்ட குறமகள் வள்ளியை மணந்த (அல்லது வள்ளி மணந்த) ஆறுமுகப் பெருமானாகிய ஒப்பற்ற பிரான் எனக்கு) அருளிய பெருமை வாய்ந்த உபதேச மொழியே.


[ நன்றி: முருகவேள் பன்னிரு திருமுறை ]


2. இன்னொரு தகவல்: ஆங்கில மொழிபெயர்ப்பு

பெருத்த வசன வகுப்பை சுவாமி அண்வானந்தா ( சாது பார்த்தசாரதி) ஓர் ஆங்கிலக் கவிதையாக மொழிபெயர்த்து அவருடைய ‘அருணகிரிநாதர்” ( Saint Arunagirinathar ) என்ற ஆங்கில நூலில் வெளியிட்டிருக்கிறார் சுவாமி அண்வானந்தாவின் இயற்பெயர் பார்த்தசாரதிகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ ஐயங்காரின் புதல்வர்அம்புஜம் அம்மாளின் சோதரர். வாழ்வின் பிற்பகுதியை ஆவடிதிருமுல்லைவாயிலில் ஸ்ரீவைஷ்ணவி தேவியின் கோவிலில் கழித்தார். அவர் ஸ்ரீவைஷ்ணவி தேவிக்கு ஆசாரத்துடன்அன்புடன் பூஜை செய்வதைப் பார்க்கவே அழகாய் இருக்கும்! அவரைப் பற்றி மேலே அறிய இங்கே சொடுக்கவும். ) 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள சில பதிவுகள் :

திருப்புகழ்

முருகன்

2 கருத்துகள்:

murthyvs25 சொன்னது…

அருணகிரிநாதர் அருள் பெற்ற திரு. நடராஜனின் பணி
மகத்தானது.

Angarai Vadyar சொன்னது…

Wow! Thanks a million for sharing this treasure.