திங்கள், 17 ஜூலை, 2017

774. சாவி -17

’டவாலி’ * ரங்கசாமி
சாவி
[ ஓவியம்: கோபுலு ]''வா ஸார்! எங்கே சார் ரொம்ப நாளா காணோம்? கலெக்டரையா பார்க்கணும்? தாராளமாய் போய்ப் பாரு ஸார்... இது இன்னா பேஜார் புடிச்ச பொளைப்பு! அந்தக் காலம் போல வராது ஸார்! என் காலத்திலே எத்தினி கலெக்டருங்களை பார்த்திருப்பேன்! நெல்சன்துரை, ஸ்டோன் துரை, எமர்சன் துரை, நார்ட்டன் துரை, ஆலிவ் துரை

''எம்டன் குண்டு போட்டான் பாரு, ஸார்! அப்ப எமர்சன் துரை குதிரை மேலே பரங்கிமலைக்குப் போறான். நான் தொரைசானி அம்மாளை இட்டுக்கினு பங்களூருக்குப் போறேன். ஏன்? நாய்க்குட்டி புடிச்சாற
துரைசானி அம்மாளுக்கு என் மேலே உசிரு, ஸார். 'ரங்ஸாம் ரங்ஸாம்'னு ஓயாமெ கூப்பிட்டுக்கிட்டேயிருக்கும். 

''அது என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசும். 'ஓல்ட்மேன்'னு எங்கிட்டே ஒரு பிரியம் ஸார் அதுக்கு! அவ்வளவுதான். 

''பங்களூரிலே போய் 'ரங்ஸாம்! ஒயின் சாப்பிடறயாடா'ன்னு கேட்டுச்சு. அதுன்னா மாத்ரம் எனக்கு ரொம்ப இஷ்டம் ஸார்! பங்களூர் போனா 'அது' இல்லாம வரமாட்டேன். துரைசானி அம்மாதான் வாங்கிக் குடுக்கும். நான் செலவு பண்ண முடியுமா?

[ ஓவியம்: நடனம் ]

  ''இந்த மாதிரி எத்தினி தொரைங்க பாத்திருப்பேன்! எத்தினி தொரைசானிங்க பாத்திருப்பேன்! ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி, ஸார். இப்பல்லாம் காலம் மாறிப் போச்சு, ஸார்! வெள்ளைக்காரன் இருந்த வரைக்கும்தான் இந்த டவாலிங்களுக்கு ரெஷ்பெக்ட்! இப்ப ஜிப்பா போட்டுக்கினு 'ஈஜி'யா கலெக்டரா வந்துடறாங்க. கலெக்டரும் ஜிப்பா, குமாஸ்தாவும் ஜிப்பா, பாக்க வறவங்களும் ஜிப்பா! - ஆனை குதிரை எல்லாம் ஒண்ணாயிட்டுதே ஸார்? ஒரு மரியாதை வாணாம் ஸார்? இன்னா பேசாமே நிக்கறியே, நீ சொல்லு ஸார்! அதுதான் போவுதுன்னா கண்ட 'சோக்ரா' பசங்களெல்லாம் 'டவாலியா' வந்துறானுவ. இங்கிலீஷ்கூடச் சரியாப் பேசத் தெரியல்லே இவனுங்களுக்கு? இன்னா பசங்க, ஸார், இவன்க? நான் நல்லா இங்கிலீஷ் பேசுவேன்! நான் பேசறது தொரைக்கு புரியும். தொரை பேசறது எனக்குப் புரியும்!

  ''பஞ்சம் வந்தது பார் ஸார், பஞ்சம், அப்ப ஹவ் தொரை தான் கலெக்டர். அவன் ஒரு கெடுபிடி ஆள். பங்கா இழுக்கணும்பான். 'என்னா மேன் பட்டன்சுக்குப் பாலிஷ் போடலே'ம்பான். என் பட்டனுக்கு பாலிஷ் போடலேன்னா இவனுக்கு என்னா ஸார் வந்தது? ஐய, இப்படி எடுத்ததுக்கெல்லாம் ஆட்பூட் இம்பான், ஸார். நான் பயந்துக்க மாட்டேன். 'நீ போடா கொருங்கு மூஞ்சி'ன்னு தமிழ்ல்லே திட்டிப் பூடுவேன் ஸார். அவனுக்கு என்னா புரியப் போவுது?
           
''ஒருநாள் சொல்றான் ஸார், இங்கிலீஷ்லேதான்; 'இந்த லெட்டரைக் கொண்டுபோய் ஜோன்ஸ் தெரு ரோஸ்கிட்டே குடுத்திட்டு வா'ன்னு!' பிரிச்சுப் பாக்கறேன், லவ் லெட்டர்! முடியாதுன்னுட்டேன். என் டூடி இதுவா ஸார்? இவன் இன்னா செய்யமுடியும் என்னை

''ஜோன்ஸ் தெரு ரோஸ் யார் தெரியுமா? ஆங்கிலோ இண்டியன்ஸ் பொண்ணு ஸார். இவனுக்கு வயசு பிப்டி ஆவுது. கடா மாதிரி. பாவம், அது ஒரு ஸ்டூடண்ட்ஸ் பொண்ணு, ஸார்! இவனுக்கு என்ன ஸார் அதுங்கிட்டே லவ்வு, கிளியாட்டமா தொரைசானி இருக்கச்சே

''நான் முடியாதுன்னேன் பாரு, அவ்வளாதான். கரம் வச்சிக்கினான் ஐயா! அண்ணிக்கிலேருந்து எம் மேலே பாஞ்சுக்கிட்டேயிருந்தான்

''போடா, தொரை உன்னை தொலைச்சுடப் போறான்'னான்; யாரு? பெருமாள் பையன். நான்தான் ஸார் அவனை பட்லர் வேளையிலே இட்டாந்து வெச்சேன். இங்கிலீஸும் தெரியாது, எளவும் தெரியாது. 'மட்டன்'னா அது இன்னாடாம்பான். நான் கத்துக்குடுத்தேன் ஸார் அவனுக்கு

''கேளு ஸார்! ஒருநா தொரை லேட்டா ஆபீசுக்கு வந்தான். வரலாமா, ஸார்! யார் கேக்கறது? அவன் கலெக்டரு

''நான் என்னா செஞ்சேன்? அவன் மேஜையிலேருந்து ஒரு சிகரெட்டை எடுத்து, ஊதிக்கினு இருந்தேன். ரொம்ப நாளா சிகரெட் ஊதணும்னு ஆசை ஸார் எனக்கு. இத்தைப் பாத்துக்கினே வந்துட்டான் துரை. அவ்வளவேதான்; டேய்! உன்னை ஒன் மன்த் ஸஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். போடான்னான்' - சரின்னு வூட்டுக்குப் போயிட்டேன். பத்து நாள் கூட ஆவல்லே. ஒரு நா வூட்டு முன்னாலே கயத்து கட்டில்லே குந்திக்கினு இருக்கேன். தொரை கார்லே வந்து நிக்கறான். பைலு ஏதோ ஆப்படல்லே. தேடித் தேடிப் பாத்திருக்கான். இந்த ரங்கசாமி இல்லாமே எந்த தொரை குப்பை கொட்டமுடியும்? ஒழிஞ்சு போறான்னு, போய் எடுத்துக் குடுத்தேன். 'நோ ஸஸ்பெண்ட்! நாளையிலேருந்து வேளைக்கு வரலாம்'னான், ஸார். அப்புறம்தான் போனேன். இது இன்னா உத்தியோகம், ஸார். இது இல்லாட்டி எத்தினியோ இங்கிலீஷ் கம்மெனிலே வேலை 'ரெடி'யா இருக்குது ஸார், எனக்கு. ஸாண்டர்ஸ் துரைகிட்டே எத்தினி பசங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பேன் தெரியுமா?   
           

''அதோ தெரியுது பார் கட்டடம். இன்னா தெரியுமா அது? புளிய மரம்! ஆமாம், ஸார்! நான் வேலைக்கு வரப்போ அங்கே ஒரு புளியமரந்தான் இருந்துது. அதுக்கு அஸ்திவாரம் வெட்டறப்போ நான் வேலைக்கு வந்து சேர்றேன். வுடு ஸார் அதெல்லாம்... நான் பார்க்காத வேலையா?...  

''இப்ப இன்னா ஸார் டவாலி வேலை! அப்ப பார்க்கணும். எடுத்ததுக்கெல்லாம் துட்டுதான், ஸார்! நார்ட்டன் துரை கப்பல் ஏறச்சே எனக்கு மூணு வெள்ளி சாஸரும் கப்பும் குடுத்துட்டுப் போனான். இன்னுங்கூட இருக்குது. 'டேய் ரங்ஸாம். சீமைக்கு வந்துடறயான்'னு கூப்டான். இவன்களுக்குத்தான் வேறே வழியில்லே. நாட்டைவுட்டு நாடு வந்தாங்க. நான் போவனா

''இப்ப தமிழ் பேசறவங்கள்ளாம் கலெக்டராயிட்டப்பறம் ஒண்ணும் சொகம் இல்லே, ஸார்! முன் மாதிரி வரும்படியும் இல்லே. முன்னே துரையைப் பாத்துட்டு வெளியே வரவங்கள்ளாம் அநாவஷ்யமா ஒரு ரூபாயைத் தூக்கி எறிவாங்க, ஸார்! இப்ப எல்லாம் போச்சு, ஸார்! அதான் நயா பைசா கொண்ணாந்துட்டாங்களே. ஒரு நாளைக்கெல்லாம் அம்பது பைசாகூடத் தேறல்லே! நீ உள்ளே போய்வா, ஸார்! இப்பத்தான் கண்டவங்கள்ளாம் நுழையறான்களே... நீ போ ஸார், உன்னைச் சொல்லல்லே...''  

[ நன்றி: விகடன் ]

டவாலி
ṭavāli   n. Persn. dawāli. Peon's belt on which a badge is worn; வில்லையோடுகூடிய சேவகரது தோட்கச்சை. Colloq.  
தொடர்புள்ள பதிவுகள்:

சாவி படைப்புகள்

2 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

அந்தக் காலத்து விகடனைப் படிக்காதவர்கள் யார்? அதுவும் சாவி அவர்களின் இம்மாதிரி "காரக்டர்"கள் குறித்த கட்டுரை! "இவர்கள் சந்தித்தால்" என்ற ஒன்றும் அவர் தான் எழுதினார்னு நினைக்கிறேன்.

Pas Pasupathy சொன்னது…

"இவர்கள் சந்தித்தால்” பற்றிச் சில குறிப்புகள்:
http://s-pasupathy.blogspot.com/2015/04/52.html
( கொ.சுப்புவின் பங்கு அதிகம். )

கருத்துரையிடுக