ஞாயிறு, 2 ஜூலை, 2017

757. விந்தன் - 1

"மக்கள் எழுத்தாளர்" விந்தன்
கலைமாமணி விக்கிரமன்



ஜூன் 30. விந்தனின் நினைவு தினம்.
===
எழுத்துலகில் "விந்தன்" என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி வேதாசலம் - ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது.

இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம்.

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.

"தமிழரசு"க்குப் பிறகு "ஆனந்த விகடன்" அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது.

அச்சகத்தின் நுணுக்கம் அறிந்த டி.எம்.இராஜா பாதர் என்பவர் கோவிந்தனுக்கு நண்பரானார். கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்த "விந்தன்" என்ற கோவிந்தன் வாழ்க்கையோடு போரிடும் சமூகப் போராளிகளைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கவலைப்படுவதில் வியப்பில்லை.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

"கல்கி"யால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "கல்கி" இதழ், விந்தன் வாழ்க்கையில் புது வெளிச்சமும் திருப்பமும் ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர், விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். தன் கையெழுத்தைப் பற்றி "எனக்கும், கடவுளுக்கும்தான் புரியும்" என்று அடிக்கடி "கல்கி" சொல்வார். கல்கியின் கையெழுத்தைப் புரிந்து கொண்ட விந்தன், பிழையே இல்லாமல் அச்சுக் கோத்தார். "காலி" புரூப்பில் பிழைகளைத் திருத்துவதுடன் புதிதாகவே கதை எழுதும் அளவுக்கு வாக்கியங்களைச் சேர்க்கும் விந்தனின் திறமையைக் கண்டு கல்கிக்கு வியப்புத் தாங்கவில்லை. "வீணை பவானி"யை அச்சுக் கோப்பவர் யார் என்று இராஜா பாதரை கேட்க, இராஜா பாதர் நிஜமாகவே அச்சம் கொண்டார். கதையில் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று பயந்து விந்தனை "கல்கி"யின் முன் கொண்டு நிறுத்தினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, விந்தன் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்திதான்.


1946இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. சிறுகதை நூலுக்கு முதன் முதலாக வழங்கிய பரிசு அதுதான். விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு  ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.


ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த "வாழப் பிறந்தவள" படத்துக்கு வசனமும், "அன்பு"  படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், "கூண்டுக்கிளி" என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.

"குழந்தைகள் கண்ட குடியரசு", "பார்த்திபன் கனவு" திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

அவர் ஒருமுறை தன் வாழ்க்கையைப் பற்றி அமைதியாக சிந்தித்துக் கூறினார்.

"என் வாழ்க்கையில் 1946ஆம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசு முதன் முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான "பாலும் பாவையும்" என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று, அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது.


இந்த நிலையில், "பாலும் பாவையும்" நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், சிறுகதைகள், பல கட்டுரைத் திரட்டுகள் வெளி வந்திருக்க வேண்டும். வரவில்லை ஏன்? காரணம் வேறு யாருமல்ல; நானே! “

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "பாலும் பாவையும்" போன்ற புதுமைக் கருத்துடன் கூடிய நாவலையும் "வேலை நிறுத்தம் ஏன்?" என்ற கட்டுரையும் மற்ற கட்டுரைகளும் எழுதிய விந்தன், "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதியதால், பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானேன்'', என்று ஒரு சமயம் எழுதியது சுயமரியாதையை விரும்புபவர் அனைவரையும் கலங்க வைக்கிறது.

விந்தனின் இறுதிக் காலத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

தமிழில் ஏழை எளியவர்களை, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரைப் பற்றிச் சிந்தித்துச் சிறுகதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர். தனது எட்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

பிரபல எழுத்தாளர் "சாவி" ஆசிரியராக இருந்த "தினமணி கதிர்" இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் விந்தனை உதவி ஆசிரியராக நியமித்து கதிர் பத்திரிகைக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தார்.

"எதை எழுதினாலும் அதை நாலு பேர் பாராட்டவாவது வேண்டும் அல்லது திட்டவாவது வேண்டும். இரண்டும் இல்லையென்றால் எழுதுவதை விட எழுதாமல் இருப்பது நன்று'' - அமரர் கல்கி, விந்தனுக்கு வழங்கிய அறிவுரை இது.

விந்தன் எழுதி எழுதியே பாராட்டுகளை, திட்டுகளை அதிகம் பெற்றவர்.

மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவரின் 60வது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நண்பர்கள் குழுவினர் திட்டமிட்டது நிறைவேறவில்லை.

அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

அவர் வாழ்ந்த தெருவான ஹாரிங்டன் சாலையின் ஒரு பகுதிக்கு "மக்கள் எழுத்தாளர் விந்தன் சாலை" எனப் பெயரிட வேண்டும் என்று எழுத்தாளர்கள் குரல் கொடுத்து ஓய்ந்து விட்டார்கள். கட்சித் தியாகிகள் பலரின் பெயரை இடும் அரசு, இந்த நற்பணியைச் செய்து உழைப்பால், ஊக்கத்தால் உயர்ந்த ஓர் எழுத்தாளனின் பெயரை என்றும் நினைவிருக்கச் செய்யுமா?

[ நன்றி:- தினமணி ]

தொடர்புள்ள பதிவுகள்:
விந்தன்

கருத்துகள் இல்லை: